Saturday, February 27, 2010

வெள்ளைத் தோலும், செங்குருதியும்



எந்த நட்சத்திரமும் தெரியாத கான்க்ரீட் வானத்தில்
எதையோ தேடியவனாக
வீட்டுப் படுக்கையில் சயனித்திருந்த போது
ஒரு மூலையில் இருந்து அது வெளியேற ஆரம்பித்து
சின்னதாய்.. வெறும் தோலாய்..
கணிணி மானிட்டரின் மெல்லிய வெளிச்சத்தில்
ராக்கெட் எஞ்சினின் பாதையைக் கணக்கிடும்
விஞ்ஞானி போல அதைப் பின் தொடர்ந்தேன்.

எரிச்சலாக இருந்தது.. வழக்கம் போல்
தமிழ் மணத்தில் F5 தட்டி பார்த்த போது
இன்னும் எரிச்சல் கூடி இருந்தது..
இப்போது மீண்டும் மோட்டு வளையில் பார்வை
எருமையை விட பெரும் பொறுமை தேவைப்பட்டது
மெல்ல மெல்ல அது நகர்ந்தது
என் படுக்கையை ஒட்டி சுவரில் ஊறியது.

ஆங்காங்கே ஒட்டி இருந்த
மாஸ்க்கிங் டேப் தடைகளைக் கடந்து
200 அடித்த சச்சின் போல பொறுமையாக
என் படுக்கைக்கு அருகில் வந்து இருந்தது
ஏனோ சுவாரஸ்யம்.. அதிகமாகி இருந்தது

அதை ஈர்க்க ஏனோ மனம் துடித்தது.
கையை மெதுவாக நகர்த்தி
அழுக்காகி இருந்த சுவற்றின் அருகே வைத்தேன்.
மிக மெதுவாக இறங்கி என் கையை முகர்ந்தது
வெள்ளையாய் இருந்த தோள்களில் சிவப்பு நிறம்
எந்த சிக்கலும் இல்லாமல் இரத்தம் உறிஞ்சுதல்
மகிழ்வில் உடம்பு புடைத்த அந்த அறைவாசி
தன் பாதை வழியே திரும்பிப் போனது.


டிஸ்கி: ஒரு முட்டைப்பூச்சி கடித்ததை கவிதையா எழுத நினைத்தேன்... ஹிஹிஹி இப்படி தான் வருது.. நான் என்னசெய்யட்டும். நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்கன்னா திரும்ப இது மாதிரி நடக்காது.. நல்லா இல்லைன்னு சொன்னா அப்புறம் கரப்பான் பூச்சி, பல்லி, பாச்சான், தேள், பூரான் எல்லாத்தையும் கவிதையில் வர வைக்க வேண்டி இருக்கும். பூனை மட்டும் பி.ந.வாதிகளுக்கானது என்பதால் விட்டு வைப்போம்.

Friday, February 26, 2010

கிரிக்கெட் - இரண்டு உலகச் சாதனைகள் அனுபவம்

உலக சாதனையை அந்த வினாடிகளில் அனுபவித்த சுவாரஸ்யம் இருக்கா? பரபரப்பான அந்த கணங்களில் டிவி முன்னால் அமர்ந்து கொண்டு முழு மேட்சையும் ரசிக்கும் பாக்கியம் அல்லது கொடுப்பினை.. அல்லது சமூக அறிஞர்களின் கூற்றுப்படி தெண்டமாப் பொழுதைப் போக்கும் முட்டாள்த்தனம் இப்படி ஏதாவது சொல்லிக்கலாம்... ஆனா பாருங்க அப்படி மறக்க இயலாத கணங்கள் ரெண்டு இருக்கு... ரெண்டுமே ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த சாதனை தான்.. முதலாவது சயீத் அனவ்ரின் 194 , ரெண்டாவது சச்சினின் 200.

1997 மே மாதம் 21 ந்தேதி.. சென்னையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் ஆட்டம்.. எப்படியாவது அதை நேராக பார்க்க வேண்டும் என்று ஒரு ஆவல்.. அப்போது கடையில் இருந்ததால் 2 டிக்கெட்டுக்கு காசு சேர்த்து சென்னையில் இருந்த என் நண்பன் ஒருவனிடம் (நண்பனா அவன்.. துரோகி.. ;-)) ) கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்லி இருந்தேன். பஸ்ஸூக்கு போக வர கூட பணம் ரெடி செய்தாகி விட்டது. ஆனால் அவன் டிக்கெட் எடுத்து அனுப்பவில்லை. ஏமாற்றி விட்டான்.

ஏமாற்றத்தை மறைக்க அந்த நாளைக் கொண்டாடுவது என்று முடிவு செய்து, வீட்டிற்கு வெளியே டிவி வைத்து கிரிக்கெட் பார்ப்பது என்று முடிவு. எங்கள் வீடு ஒரு சந்திற்குள் இருக்கும் என்பதால் டிவி வைத்துப் பார்ப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. பகல்\இரவு ஆட்டம் என்பதால் கொஞ்சம் வெயில் குறைந்ததும் வீட்டிற்கு வெளியே டிவியை வைத்து பார்த்தோம். சயீத் அனவர் பவுண்டரிகளை அடித்துத் தள்ளினார். உலக சாதனையான 189 இந்திய அணி அந்த ஆட்டத்தில் தோற்றும் போனது. என்னோட ஆல்டைம் பேவரைட் டிராவிட் செஞ்சுரி அடித்ததும் வீணானது.





சில தினங்கள் மாதிரி இருக்கு.. இதோ கடந்து விட்டது.. 12 வருடம்.. பிப்ரவரி 24 .. குவாலியரில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே இரண்டாவது ஆட்டம். ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த அணியான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கின்றது இந்தியா. மொக்கையான வேகப்பந்து வீச்சாளர்கள், புரொபஷனல் சுழல்பந்து வீச்சாளர்கள் இல்லாத, சொதப்பும் பீல்டர்களைக் கொண்ட இந்திய அணி. பேட்டிங்கை மட்டுமே நம்பி இருக்கும் இந்திய அணி.

அன்றைக்கு வேலைக்கு போகவில்லை... அதைப் பற்றி விரைவில் ஒரு பதிவு வரும்.. வெயிட் அண்ட் சீ.. ;-)))) சோம்பலான அந்த நாளில் இணைய வழியில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சாச்சு... ஆரம்பமே சறுக்கல்.. வழக்கம் போல் தேவையில்லாத ஷாட் அடித்து சேவாக் அவுட். அடுத்த கார்த்திக்கும், சச்சினும் ஜோடி சேர்ந்தனர்.

இந்த தினேஷ் கார்த்திக்கைப் பார்க்கும் போது சரியான மாங்காடா இவன் என்று தோனும். நல்ல ஆட்டக்காரர்.. ஆனால் தவறான ஷாட் அடித்து அவுட் ஆவதில் வல்லவர். சமீபத்தில் செம ஃபார்மில் இருக்கிறார். துலிப் டிராபி பைனலில் இரண்டு இன்னிங்ஸிலும் செஞ்சுரி போட்டார்.. (அதே ஆட்டத்தில் யூசுப் பதானும் இரண்டு இன்னிங்ஸிலும் செஞ்சுரி போட்டு தனது அணியை வெற்றி பெற வைத்தார்). சச்சினுடன், இணைந்து நல்ல ஆட்டம்.. ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொண்டே இருந்ததில் நல்ல பலன் கிடைத்தது. ரன் வேகமாக வந்தது. நல்ல பிட்ச்.. நல்ல மைதானக் களம். பந்து வேகமாக எல்லையைத் தொட்டுக் கொண்டு இருந்தது.

சச்சின் செஞ்சுரியை எட்டிய வேகத்தில் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்து இருந்தது. யூசுப் பதான், அவரை அடுத்து வந்த தோனியும் ரன் மழையை பொழிய வைக்க ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. சச்சின் 150 யைக் கடக்க எனக்குள் உலக சாதனை ஆசை துளிர் விட்டது.. அதிரடியைத் தொடர்ந்த சச்சின் கடைசி கட்டத்தில் அமைதியானது கொஞ்சம் சோகம் என்றாலும் 50 ஓவர்கள் வரை நின்று ஓடி ரன் சேர்த்தது அவரை சோர்வாக்கி இருக்கும் என்பதை உணர முடிந்தது.. அற்புதமாக ஆடி சயீத் அன்வரிம் உலக சாதனையை முறியடித்தார். அதனை அடுத்து 200 ஐ அடைவதற்கு பொறுமை போய் விட்டது. தோனியை திட்டவும் செய்தாகி விட்டது... :-)




* 45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.
* 46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்.
* 46.3ல் ரன் எதுவும் இல்லை * 46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.
* 47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை

* 47.4 ஓவரில் ஒரு ரன் எடுத்த சச்சின் 199ஐ எட்டினார்.

* கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.




அன்றையப் பொழுதை மகிழ்வுடன் கழித்த மகிழ்ச்சியில் தூங்கச் சென்று இருந்திருக்கலாம் தான்... மறுநாள் இருந்த டிரைவிங் டெஸ்ட்டை நினைவில் வர வைக்காமல் இருந்திருந்தால்.. :(

Thursday, February 25, 2010

இயற்கையான அழகி.. என் வீட்டிற்கு எதிரே

அவளை எப்ப முதன் முதலா பார்த்தேன்னு நினைவில் இல்லை.. ஆனா பார்த்த நாள் முதலாய் மனசுக்குள் நெருப்பு பத்திக்கிச்சு.. எப்ப பார்த்தாலும் மனசுக்குள் மத்தாப்பு தான்.. அழகா இருப்பான்னு சொன்னால் அது தப்பா போய்டும்... ஏன்னா எழுத்தாளர்கள் எல்லாம் அழகான என்ற அர்த்தத்தில் சொன்ன மொக்கை பிகர்களோடு இவளையும் சேர்த்து ஒப்பீடு செய்ய வேண்டி வந்து விடும்.. இவ அதுக்கு எல்லாம் மேலே..

அதுக்காக எண் கணிதத்தின் துணையோடு பெருமிதமா அங்கங்களை வர்ணிக்கவும் முடியாது.. நார்மல் தான்.. ஆனா அழகு... கொஞ்சம் மாநிறத்தில், சிரித்துக் கொண்டே இருக்கும் ஒரு அழகி.. எவன் பார்த்தாலும் கொத்திக் கொண்டு போய் விடுவான் என்று சொல்லவும் முடியாத அழகு... மத்தவர்களுக்கு எப்படியோ எனக்கு அவள் அழகியாத் தெரிந்தாள்.

எப்படி அவளை அறிந்தேன்... என்ன பெரிய அறிதல், புரிதல் எல்லாம்.. முன் வீட்டில் புதிதாக குடி வந்து இருந்தாள். அவங்க அப்பாவுக்கு இங்க இருக்கும் ஏதோ ஒரு பன்னாட்டு பண்ணாடைக் கம்பெனியில் வேலையாம்.. மாற்றலாகி இங்க வந்து இருக்காங்க போல.. ஒரு குட்டி தம்பியும் இருக்கான் அவளுக்கு.. கதாநாயகின்னா ஒரு குட்டி தம்பியும், தங்கையும் இருக்கனும் என்பது எழுதப்படாத விதி போல..

அரசல் புரசலாக அவளை பல முறை பார்த்து இருந்தாலும் வீட்டிற்கு முன்னாடி கோலம் போடும் போது தான் அவளைப் பார்த்தேன்.. எங்க தெருவில் இருக்கும் எந்த பொண்ணும் இப்பவெல்லாம் கோலம் போடுவதே இல்லை... நான் சின்ன வயசில் இருக்கும் போது, எனது சீனியர்கள் எல்லாம் கோலம் போடும் நேரங்களில் சைக்கிளில் வலம் வருவார்கள்.... இதனால் சில நேரங்களில் பொண்ணுகளின் கடைக்கண் பார்வையும், பல நேரங்களில் நைட்டி ஆன்ட்டிகளின் திட்டுக்களையும் மானாவாரியாக அள்ளிச் செல்வார்கள்.

இப்ப இருக்கும் பொண்ணுகள் எல்லாம் பாவம் போல.. எல்லாம் காலையில் வேகவேகமா பஸ் பிடிச்சி காலேஜ், ஸ்கூல் எல்லாம் போய்ட்டு நைட் தான் வீட்டுக்கு திரும்புதுங்க.. இதில் வீட்டை பெருக்குவதாவது.. கோலமாவது...ஆங் எங்க விட்டேன்.. கோலம் போடும் போது... அப்ப தான் வீட்டு வாசலில் பேப்பர்க்காரன் விட்டு விட்டுப் போன தி ஹிந்து பேப்பரை எடுக்க வெளியே போனேன் என்று எழுதத் தான் ஆசை... ஆனா என்ன செய்ய வீட்டில் இருக்கும் பசு மாட்டை அருகில் இருக்கும் தோட்டத்திற்குள் இரை மேய பத்திக் கொண்டு போகும் போது தான் அவளைப் பார்த்தேன்.

அவளை ஏற்கனவே முன்னாடியே வர்ணிச்சாச்சு.. அதனால் நேரா மேட்டருக்கு போகலாம்... என்னன்னா அவளுக்கு என் மீது எப்படி காதல் வந்துச்சு என்பது தான்... நானே எருமை மாட்டுக்கு கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருப்பேன்.. அவளுக்கு என் மீது எப்படிக் காதல் வந்தது? ஏன் எங்க ஊரு பாட்டுக்காரனில் ராமராஜனைப் பார்த்து அந்த ஒல்லியா சிகுசிகுன்னு வளர்ந்து இருக்குமே அந்த அம்மாவுக்கு காதல் வரலையா? அது மாதிரின்னு நினைச்சுக்கங்க...



அவளோட தம்பி தான் எங்க காதலுக்கு தூதவனோ என்று நினைச்சுக்காதீங்க.. அந்த படுபாவி தான் வில்லன்... இவ சிரிச்சாலே அவன் என்னை முறைப்பான்... அவகிட்ட நான் வாங்கிய முத்தத்தையோ, அவளுக்கு நான் கொடுத்த ஆங்கிலப் பட கிஸ்ஸையோ பார்த்து இருந்தான் அம்புட்டுத் தேன்... ஊரில் எனக்கு பெரிய ஆப்பா சீவி வச்சு இருப்பான்.. நல்லவேளை மாட்டலை..

அவளை நான் லவ் பண்ண ஆரம்பிச்சதில் இருந்தே ஊர்க்காரப் பயலுவலுக்கு ஒரே பொறாமை.. எல்லாம் காதிலும் புகை... எப்படித் தான் இந்த மேட்டர் ஊர்க்குள்ள பரவுதோ.. எல்லா திருவாத்தானுகளும் இதே வேலையா அலையுதானுக... கடைசியா ரெண்டு வீட்டுலயும் தெரிஞ்சு போச்சு... அவங்கப்பன் குய்யோ முறையோன்னு வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறான்.. பின்னே பக்கத்து டவுன் டாஸ்மாக் பாரில் அவன் வாங்கின குவாட்டரில் ஓசியில் முக்கால்வாசியை குடித்தவன் தான் மாப்பிள்ளைன்னா எந்த அப்பன் தான் ஒத்துக்குவான்.. ஆனா நம்ம ஆளு படு ஸ்ட்ராங்.. காதல் பட கதாநாயகி மாதிரி எல்லாம் ஓவரா போகலை,,, நீ வேணா செத்துப் போ.. நான் அவனைத் தான் கல்யாணம் கட்டுக்குவேன்னு சொல்லிடுச்சு...

அவங்கப்பனுக்கு விக்கினதுமில்லை, விரைச்சதுமில்லை.. ஸ்ட்ரக்கப் ஆயிட்டான்.. அப்புறம் என்ன வேற வழி இல்லாம எனக்கே கல்யாணம் முடிச்சுத் தருகிறேன்னு எங்க வீட்டு வாசப்படி ஏறி வந்துட்டான்.. அடுத்த வாரமே கல்யாணம்...

இதுவரை எழுத வேண்டிய சிறுகதையை எழுதி வைத்து விட்டு படித்துக் கொண்டு இருந்தேன்.. பின்னாடி இருந்து கழனித் தண்ணி மீதியை தலையில் விசிறி அடித்து விட்டு அப்பத்தா கத்தத் தொடங்கினார்.. “ஏண்டா? சல்லவாரி நாயே.. அப்ப இருந்து பசு மாடு கத்துது அதைக் கொண்டு போய் தோட்டத்துல கட்டுன்னு நாயா பேயா கத்திக்கிட்டு இருக்கே... பேப்பரிலே ஏதோ ஜில்லா கலெக்டர் பரிட்சைக்கு போறவன் மாதிரி உட்கார்ந்து கிறுக்கிகிட்டு இருக்க... ஒன்னு ஏதாவது பொஸ்தகத்தை எடுத்து படிச்சிட்டு லூசு மாதிரி மோட்டு வளையைப் பார்க்குறான்.. இல்லைன்னா எதையாவது எழுதுறான்.. என்னைக்கு தான் திருந்த போறானோ என்று புலம்பிக் கொண்டே போனாள்.

மாட்டை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்த போது, என் காதலி குடி இருக்கும்\இருந்த வீட்டில் பல ஆண்டுகளாக குடி இருக்கும் வள்ளிக் கிழவி வீட்டின் முன் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

Wednesday, February 17, 2010

இளமை தொட்டிலாட்டுது.. Some pages from my teenage diary

டீன் ஏஜ் டைரிக் குறிப்பு எழுதலாம்ன்னு உட்கார்ந்தாச்சு.... ஆரம்பமே இடக்காத் தான் போச்சு... டீன் ஏஜ் என்பது எந்த வயதில் இருந்து எந்த வயது வரை என்பது சந்தேகமா போச்சு.. வழக்கம் போல் ஸ்டேடஸில் கேள்வியைப் போட்டால் பல பதில்கள் வந்தன. அதில் முத்துலக்ஷ்மி அக்காவிடம் கேட்டால் Thirteen முதல் Nineteen வரையாம்... காரணம். .. இவைகளுக்கு இடையில் மட்டும் தான் Teen வருதாம்... லாஜிக்.. சினிமாவைத் தவிர எல்லாத்துக்கும் லாஜிக் பார்ப்பவர்கள் தானே நாம்... :)

கூகுளாண்டவரிடம் கேட்ட போதும் அப்படியே சொன்னதால் அப்படியே எடுத்துக்கலாம். எனவே 13 முதல் 19 வரை... அந்த காலம் (இன்றும் கூட.. ) எனக்கு ஏனோ ஒரு தாழ்வு மனப்பான்மையிலும், சோகத்திலுமே கழிந்த காலம் எனலாம். டீன் ஏஜ் டைரி என்றே தலைப்பை வைத்ததால் என் டீன் ஏஜ் டைரி ஒன்றைப் பற்றி சொல்லனும். வெளிநாட்டுக்கு வரும் போது எனது டீன் ஏஜ் நினைவுகளாக பல பொருட்கள் ஒரு டிரங்க் பெட்டியில் போட்டு வைத்து விட்டு வந்தேன். எங்கள் வீட்டைப் புதுப்பித்து கட்டும் போது எல்லாவற்றையும் எங்க ஊர் ஆற்றில் விட்டு விட்டார்களாம். அதில் இருந்த பிக்ஃபன் டைரியும், அதில் இருந்த என் வசந்த கால நினைவுகளும் தண்ணீரில் போய் விட்டது. இன்று வரை அது குறித்து ஃபீலிங் இருக்கின்றது... அதற்குப் பிறகு டைரி எழுதும் வழக்கம் இல்லை. இப்போது ப்ளாக் தான் டைரியாகிப் போனது.


1994 - 10 ஆம் வகுப்பு படிக்கும் போது
என் டீன் ஏஜ் ஆரம்பமே அலப்பறையா தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆரம்பம் மட்டும் தான்... டவுசரில் இருந்து அப்ப தான் மாமா, அண்ணன்களின்பேண்ட்டுக்கு மாறிய காலம். செருப்பு போடாமல் போய் என் நண்பன் ரிச்சர்ட் வசம் திட்டு வாங்கும் நாட்கள்.. (இருந்தா போட மாட்டமா?)

என் டீன் ஏஜ் டைரி ரெண்டு பாகமா இருக்கு.. ஒன்று உணர்வு பூர்வமானது.. இன்னொரு பொருளாதார ரீதியில்.. ரெண்டாவதை கடைசியில் சுருக்கமா சொல்லிக்கலாம். முதலாவது மட்டும் இப்ப... என்ஜாய் செய்தேன் என்று சொல்லலாம்.

வீட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் ஸ்கூல்... நடந்தே போக வேண்டும். சைக்கிள் பத்தாம் வகுப்பில் கடைசியில் தான் வாங்கிக் கிடைத்தது. அதுவரை நடராஜா தான்.. அதுவும் ஒரு இன்பம்.. சைக்கிள் வந்த பிறகு அழிச்சாட்டியங்கள் அதிகமாயின. இரு சைக்கிள் நினைவு பதிவுகள் 1, 2 . இன்னும் நினைவில் இருக்கும் சில விஷயங்கள். 9 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு மருத்துவரின் மகனான சக வகுப்பு தோழனுக்கு குழந்தை பிறப்பு பற்றி எடுத்த பாடங்கள் நினைவில் இருக்கு... ஹிஹிஹி... உடலுறவு, கருமுட்டை, கரு வளர்ச்சி, இதையெல்லாம் அப்பமே தெரிஞ்சு வச்சு இருந்து இருக்கோம்ல... ;-) ஆனா அந்த பழம் இதையெல்லாம் நம்பாதது பெரிய கூத்து.. அப்புறமா நம்பி இருக்கனும்.. ஏன்னா கல்யாணம் ஆகி அவனுக்கு குழந்தை இருக்கு.. முக்கியமா அவனை மாதிரியே பழமா... ;-))

சகட்டுமேனிக்கு பலரையும் சைட் அடித்துப் பழகவில்லை. பெண்கள் என்றாலே இன்று வரை ஒரு மரியாதை, ஒழுங்கு வைத்து இருக்கின்றேன். அதே போல் கலாய்க்கும் பழக்கமும் வரவில்லை. நிறைய நாட்கள் நூலகங்களில் கிடையாய் கிடப்பேன். தூண்டப்படாத தீபம்.

+1, +2 படிக்கும் போதே மாலையில் பொரிகடலை கடையில் சென்று வியாபாரம் செய்ய.. ப்ராக்டீஸாம்... சைட் அடித்து கடலை போட வேண்டிய வயதில் கடலைக் கடையில் வேலை... விருப்பம் இல்லாமல் செய்ய துவங்கியதால் என்னவோ இன்று வரை பணம் சம்பாதிக்கும் விஷயத்தின் மீது ஒரு வெறுப்பு வர ஆரம்பித்தது. ஆனால் காலத்தில் கட்டாயம் பணம் இல்லையேல் உலகம் இல்லை என்பது போல் மக்களின் தன்மை மாறி விட்டது.

* பள்ளியைக் கட் அடித்து விட்டு சினிமாக்களுக்கு சென்றது
* பள்ளியைக் கட் அடித்து விட்டு அருவி, ஆறுகளில் குளிக்க சென்றது.
* வடுகபட்டிக்கு சைக்கிளில் சினிமாவுக்கு போய் சைக்கிள் ரிம் உடைந்து சைக்கிளை மூன்று பேர் சேர்ந்து தூக்கி வந்தது.
* தேனியில் போய் முதல் ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹைன் கெளன் பார்த்தது
* எதிர் வீட்டுப் பெண்ணின் காதலுக்கு தூது போனது


காதல்.. டீன் ஏஜியில் வரும் முக்கியமான வியாதி.. எனவே ஒன்பதாம் வகுப்பிலேயே காதல்(?) வந்து விட்டது. சொர்க்கத்தில் சேர இயலாத சொல்லாத காதல் அது. சகட்டுமேனிக்கு பலரையும் சைட் அடித்துப் பழகவில்லை. பெண்கள் என்றாலே இன்று வரை ஒரு மரியாதை, ஒழுங்கு வைத்து இருக்கின்றேன். காதல் என்றால் அவளிடம் மட்டும்... கடைசியாக +2 முடிவுகள் வந்த போது அவளைப் பார்த்தது. தான் கோவைக்கு அருகில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேரப் போவதாக சொன்னாள். என்னைப் பற்றிக் கேட்ட போது சஸ்பென்ஸ் என்று சொல்லி வைத்தேன். படிப்பை மூட்டை கட்டி விட்டு கடையில் வேலைக்கு போகப் போறேன் என்ற சொல்ல தன்மானம் தடுத்தது. அதுதான் அவளை இறுதியாக சந்தித்தது.

அந்த டீன் ஏஜ் நினைவில் தாக்கம் இன்று வரை விடவில்லை. சமீபத்தில் சென்ற வருட ஆரம்பத்தில் அவளின் கணவனுக்கும், அவளு(ர் விகுதி போட கை மறுக்கின்றது)க்கும் இடையே வந்த உளவியல் ரீதியான ஒரு சிறு மனமுறிவைப் பற்றி அறிந்த போது அன்றைய இரவு தூக்கம் குறைவாகி இருந்தது. ஆனாலும் அந்த பிரச்சினையின் உள்ளர்த்தம் அவள் மீதான அவளது கணவனின் அன்பின் மிகுதியே என (possessiveness) உணர்ந்த போது கொஞ்சம் திருப்தியாகவே இருந்தது.

+2 முடித்த பிறகு கடை... 17 வயது. ரெடிமேட் ஆடைகளுக்கான மூட்டையுடன் ஈரோட்டிலும், செருப்பு மூட்டைகளுடன் மதுரை நேதாஜி ரோட்டிலும் வலம் வந்த நாட்கள்... மகிழ்வைக் கொடுக்கவில்லையெனிலும் அதிகப்படியான அனுபவத்தையும், பொறுமையையும் கற்றுக் கொடுத்தது. அதற்கு அடுத்த வருடம்... சென்னை... TCS (Tata consultancy services)ல் வேலை... வெயிட்... வெயிட் பயப்பட வேண்டாம்.... தமிழ் ஹீரோவாக எல்லாம் மாறவில்லை. TCS அம்பத்தூரில் கட்டிட புதுப்பிப்பு பணியிலும், TCS சோழிங்கநல்லூரில் கட்டிட நிர்மாணப் பணியிலும் வேலை. வீட்டில் என் மீது இருக்கும் சோம்பேறி அல்லது உதவாக்கரை என்ற கருத்தாக்கம் உண்மையில்லை என்பதை நான் மட்டும் உணர்ந்து கொண்ட காலம்.

சென்னையில் தங்கி இருந்த காலங்களும் வசந்த காலங்கள் தான்... ஒரே அறையில் பத்து பேர் தங்கி இருந்தோம். ஒரே லூட்டி தான்.. வாரம் ஒரு சினிமா... அடிக்கடி மெரினா பீச்... ஹாஸ்டலில் யாருக்கும் தெரியாமல் நடந்த ஒரு நிகழ்ச்சி.. (எழுத இயலாதது).. அப்புறம் முக்கியமா ‘அந்த’ மாதிரி படம் பார்க்கனும்னு நண்பனின் வீட்டுக்கு போனால் அந்த பகுதியில் அன்று முழுவதும் கரண்ட் கட்... டென்சனின் போய் ஜெனரேட்டர் கொண்டாங்கடா என்று கத்தி கூப்பாடு போட்ட நண்பனை வலுக்காட்டயாமாக பஸ்ஸில் ஏற்றியது.

அத்தோடு என் டீன் ஏஜ் முடியவில்லை. அடுத்து 19 வது வயதில் ஸ்ஸ்ஸ்ஸ் பிளைட் பிடித்து துபாயில் இறங்கியாச்சு... துபாயில் வேலை எப்படி இருக்கும் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். எனக்கு மேலதிகாரி ஒரு மலையாளி... ஆரம்ப நாட்களில் வேலை சக்கையைப் பிழிந்து வாங்கி விடுவார். வடிவேலு சொல்வது போல் அதுக்கு அப்புறம் வலிக்கவே இல்லை என்பது போல், எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் புலம்பிக் கொண்டே முடிக்கும் வழக்கம் வந்து விட்டது.

நண்பர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லையென்றாலும் அதில் ரிச்சர்ட் (சென்னையில் IAS க்கு கடைசிகட்ட முயற்சியில் இருக்கிறான்), கோவிந்தராஜன் (கோவை கல்லூரியில் விரிவுரையாளர்), நாகூர் மீரான் (சென்னை - பூந்தமல்லி) முக்கியமானவர்கள். கொஞ்சமேனும் எனது உணர்வுகளை புரிந்து கொள்ளத்தக்கவர்கள்.

பொதுவான இடத்தில் பல சுவாரஸ்யமான சம்பங்களை சொல்ல இயல்வதில்லை. எல்லாவற்றையும் விரிவாக ஒவ்வொரு பதிவாக எழுதலாம்.. அம்பூட்டு மேட்டர் இருக்கு.

இதைத் தொடர சில நண்பர்களை அழைத்து இருக்கின்றேன். எழுதுங்க மக்களே.

.
.
.

Thursday, February 11, 2010

வேங்கையின் மைந்தன், Apocalypto, கீரைக்காரன்

கேட்டது.

என்னுடன் வேலை செய்யும் ஒரு பணியாளர் இந்திய-நேபாள எல்லையைச் சேர்ந்தவர். அவர்களது மொழி மைதிலி எனப்படும் ஒருவகை ஹிந்தி.. போஜ்பூரி போல... ஆனா போஜ்பூரியை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். ஆனா மைதிலி கஷ்டம்.. :( அது இருக்கட்டும்.... கொஞ்சம் கிராமத்து ஆள் மாதிரி.. விவசாயம், ஆடு,மாடு மேய்ப்பது என்று இருந்தவன். பால்ய விவாகம் செய்யும் வழக்கம் உள்ள கிராமங்கள் அவை. அவனுக்கும் சிறு வயதில் திருமணம் வேறு ஆகி இருக்கின்றது.

ஒரு முறை வழக்கம் போல் மாடு மேய்க்கச் சென்று இருக்கின்றான். ஊருக்கு வெளியே காட்டுப்பகுதிகளில் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வயலில் நல்ல கீரை(பாலக்) விளைந்து இருந்திருக்கின்றது. பையனுக்கு பார்த்ததும் கை அரிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நைசாக தோட்டத்திற்குள் இறங்கி கீரையை பறிக்க ஆரம்பித்து இருக்கின்றான். திடீரென்று எங்கிருந்தோ ஒரு இளம்பெண் வந்து இவனை வளைத்துக் கொண்டாள். அவள் அந்த தோட்டத்தின் உரிமையாளரின் மகள்.

இவனைப் பிடித்துக் கொண்டு கூச்சல் போட மாடுகளை விட்டு விட்டு ஓட முடியாத சூழலால் அமைதியாக இருந்து விட்டான். அவளது கூச்சலைக் கேட்டு பலரும் ஓடி வர இவன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டான். அங்கு வந்த உரிமையாளர் இவனைக் குறித்து விசாரிக்க தனது கிராமத்தின் பெயரை சொல்லி இருக்கின்றான். வரிசையாக தெரு, வீடு, அப்பா பெயர் , தன் பெயர் எல்லாம் சொல்ல அந்த தோட்டக்காரர் அவன் பறித்த கீரையுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து அவனை நல்லபடியாக வழி அனுப்பி வைத்தாராம்.. ஏன் என்று யோசிங்க பார்க்கலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


படித்தது:

வரலாற்று நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு அலாதி இன்பம் இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் படித்தது அகிலன் எழுதிய ‘வேங்கையின் மைந்தன்’.

இது இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது. பதிவிறக்கி படித்துக் கொள்ளலாம். http://www.scribd.com/document_downloads/24812602?extension=pdf
நன்றி : பிகேபி வலைப்பதிவு

இதுவும் வழக்கமான ஒரு சோழப் புகழ் பாடும் நாவல்தான். பொன்னியின் செல்வனின்(இராஜராஜ சோழன்) மகனான வேங்கையின் மைந்தன்(இராஜேந்திர சோழன்) பற்றியது. பொன்னியின் செல்வனோடு ஒப்பிடும் அளவில் இல்லையென்றாலும், படிக்க சுவாரஸ்யமாகத் தான் இருந்தது. பொன்னியின்செல்வனில் வந்தியதேவன் கதாநாயகன் என்றால் இங்கு இளங்கோவேள் என்ற கொடும்பாளூர் இளவரசன்.

இராஜேந்திரரும் கொஞ்ச வயசானவராக இருக்கின்றார். வழக்கமான தமிழ் ஹீரோ போன்ற அதி புத்திசாலி அரசர்.. அவருக்கு உறுதுணையாக சில அரசியல் வீர வீத்தகர்கள். வந்தியதேவன் இருக்கிறார். ஆங்காங்கே வந்தியதேவன், குந்தவையின் காதல் காட்சிகளை பொன்னியின் செல்வனில் இருந்து மனக்கண்ணில் ரசிக்க முடிகின்றது. திடீர் திருப்பங்கள் இல்லாத ஒரு நாவல். சில நேரங்களில் காலம் செல்லும் வேகத்திற்கு பயணிக்க இயலாமல் போய் விடுகின்றது.

இரண்டு கதாநாயகிகள். ரோகினி என்ற இலங்கைப் பெண், அருள் மொழி என்ற இராஜேந்திரரின் மகள். காதல், வீரம் இரண்டும் தான் வேங்கையின் மைந்தனை இட்டுச் செல்கின்றது. ரோகிணி தோல்வியைத் தழுவும் இலங்கை மன்னரின் மகள். முதலில் இருந்தே ஒரே அழுக்காச்சி காவியம். சில இடங்களில் காதலன் மற்றும் நாட்டுப்பாசத்திற்கு இடையில் கிடந்து உழல்கின்றாள்.

வீர தீர பிரதாபங்களும், அதன் வர்ணனைகளும் சுமார் தான். பாண்டிய நாட்டின் மணி முடியையும், இந்திரனின் ஆரத்தையும் தனி ஒருவனாக சண்டையிட்டு கொண்டு வருகின்றார் கதாநாயகன். கொஞ்சம் பில்டப்புடன் தெலுங்கு சினிமா பார்த்த பாதிப்பு வருகின்றது.

மற்றபடி படிக்க வேண்டிய வரலாற்று நாவல்களில் ஒன்று.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பார்த்தது :

சமீபத்தில் பார்த்த ஒரு படம் அபகலிப்டோ... ஒரு சமூகத்தின் அழிவை கண் முன் கொண்டு வந்த படம். அற்புதமான காட்டுப்பகுதியில் படம் படமாக்கப்பட்டு இருக்கின்றது.கிராபிக்ஸ் உறுத்தல்கள் இல்லாமல் இயற்கையாக இருப்பது போன்ற தோற்றமே படம் முழுவதும்.. தென் அமெரிக்க காட்டுகளுக்குள் நடக்கும் இன மோதல்களின் வழியே தங்களுக்குள் எப்படி அழித்துக் கொண்டனர் என்பதை சிம்பிளாக சொல்லும் படம்.

பொதுவாக ஸபானியர்கள் அமெரிக்க கண்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பழங்குடியினரை அழித்ததாகத் தான் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.. இதில் பல கருத்து வேறுபாடு இருந்தாலும், இப்படம் அப்பழங்குடியினர் தங்களுக்குள் சண்டையிட்டு அழித்துக் கொண்டனர் என்பதை நாசூக்காக சொல்லும் முயற்சியோ என்ற தோற்றம் கூட வந்தது. ஆனாலும் சிறு குழுக்களுக்கு இடையே இது போன்ற மோதல்கள் இருந்ததை ஒத்துக் கொள்ள வேண்டி தான் வரும்.

இப்படத்தில் ஒரு அதி அற்புதமான காட்சி கண்டிப்பாக காண வேண்டியது. கதாநாயகியின் பிரசவக் காட்சி.. ஒரு கிணற்றுக்குள் அவளும், அவளது சிறு மகனும் இருக்க மழை காரணமாக கிணற்றுக்குள் தண்ணீர் நிறைய ஆரம்பிக்கின்றது. அவ்வேளையில் பிரசவ வலியில் அவள் துடிக்க, தண்ணீருக்குள் குழந்தை பிறக்கின்றது. இதை வர்ணிப்பதை விட நேரடியாகப் பார்த்தால் அதை அனுபவிக்கலாம்... இது சாதாரணமாக எல்லாரும் பார்க்க வேண்டிய காட்சி தான்... திட நெஞ்செமெல்லாம் வேண்டாம்.


இதன் 1:50 வினாடிகளில் இருந்து 2:45 வரை பாருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கீரைக்காரனுக்கு விடை... அந்த பெண் அவன் சிறு வயதில் திருமணம் முடித்திருந்த பெண். அவர் அவனது மாமனாராம்.. சிறு வயதில் திருமணம் முடிந்து விட்டு மாப்பிள்ளையும், பொண்ணும் அவரவர் வீட்டில் இருப்பார்களாம். பெரியவர்களானதும் இருவரையும் இணைத்து வைப்பார்களாம். இதை அடிக்கடி சொல்லி சக பணியாளர்கள் அவனை கலாய்ப்பார்கள்.

Wednesday, February 3, 2010

முதல் நாள் - பள்ளிக்கூடம்.

நேற்று தான் மகன் முதன்முதலாக பள்ளி சென்றுள்ளான். சில காலம் கழித்து இந்த நாள் அவனுக்கு நினைவில் இருக்குமா இல்லையா என்று தெரியாது. (ஆனால் பள்ளி சென்ற முதல் நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. ) இரண்டாவதாக மகள் பிறந்ததால் கன்னியாகுமரியில், அவர்களது அம்மா வீட்டில் இருந்த மனைவி வீடு திரும்பி இருக்கிறாள். இதுவரை ஜாலியாக அங்கு சுத்திக் கொண்டு இருந்த மகனை ஊர் வந்ததும் பள்ளியில் சேர்ப்பது என்று முடிவாகி இருந்தது. (வயது 3 1\2 )இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் மட்டும் வீட்டிற்கு அருகில் இருக்கும் நர்சரியில் PreKG படிக்கட்டும் என ஏற்பாடு. ஜூன் முதல் வேறு பள்ளியில் LKG.

எல்லாரையும் விட எனக்கு தான் கொஞ்சம் பரபரப்பு. அழுகாமல் பள்ளி செல்ல வேண்டுமே என்று.. ஏற்கனவே வேலைப்பளுவின் அழுத்தத்தில் திணறிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் இந்தியாவில் இருக்கும் இன்னும் கவலைகளும்... ஊரில் இருந்தாலாவது நாமே நேரடியாக பள்ளிக்கு கூட்டிச் செல்லலாம்.

ஆனால் ஏதும் சுவாரஸ்யமாக நடக்கவில்லை. காலையில் சென்று பள்ளியில் விட்டதும் மலங்க மலங்க விழித்துக் கொண்டு இருந்திருக்கின்றான். மதியம் திரும்பவும் அழைத்து வரும் போது மட்டும் லேசான கரைதல். இனி பள்ளி செல்வதில் பிரச்சினை இருக்காது என்று தோன்றுகின்றது. ஏற்கனவே மனைவியின் ஊரில் மதரஸா எனப்படும் இஸ்லாமிய கல்வி அளிக்கும் பள்ளியில் காலை சென்று வருவான். சுமார் 1 மணி நேரம் அங்கு ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இருந்த பழக்கம் இருப்பதால் பள்ளிக்கூடம் அவனுக்கு ஏதும் பிரச்சினையாக இருக்கவில்லை. இனி பள்ளிக்கூடம் போகனுமா? சாக்லேட் கொடுங்க, செலவுக்கு காசு கொடுங்க போன்ற மிரட்டல்களும், கால் வலிக்குது, காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு போன்ற சால்ஜாப்புகளும் வரும் என நினைக்கிறேன்... இதெல்லாம் நாங்க செஞ்சது தானே..ஹிஹிஹி





கொஞ்சம் ப்ளாஷ்பேக் : நான் முதலில் பள்ளிக்கு சென்ற நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. எனது சித்தப்பா தான் என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். ஒண்ணாப்பு படிப்பதற்கு முன்னால் அரை கிளாஸ் படிக்க வேண்டும். அரை கிளாஸூம், ஒண்ணாப்பும் ஒன்றாகத் தான் இருக்கும். ஒரு வகுப்பில் அந்த ஆண்டு அரைகிளாஸ் படித்தவர்கள் அடுத்த வருடம் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள். என்னை அழைத்துச் சென்று எங்க குடும்ப ஆசிரியர்(?) இருக்கும் வகுப்பிற்கு அழைத்துச் சென்றார். அங்கு தான் எங்கள் அத்தை, சித்தப்பா, அக்கா, அண்ணன் எல்லாரும் அரை கிளாஸ், ஒண்ணாப்பு படித்தார்களாம்.

ஒரே அழுகை. செந்தில் சொல்வது போல் அழைத்து வரப்படவில்லை. இழுத்துச் செல்லப்பட்டு இருந்தேன். ஆசிரியை பெயர் ஞானம்மாள். அன்பாக பேசி எல்லா பிள்ளைகளையும் காட்டி “பாரு.. எல்லாரும் அழாமல் இருக்காங்கல்ல” என்று கூறி ஒரு சாக்பீஸூம் கொடுத்தார்.

ஒன்றாம்வகுப்பு படிக்கும் போது 500 க்கு 500 மார்க் வாங்கி முதல் ரேங்க் எடுத்ததும் இன்னும் நினைவில் இருக்கு..ஹிஹிஹி.


லேட்டஸ்ட் அப்டேட் : இன்றைக்கு இரண்டாம் நாள்... காலையில் ஸ்கூல் எல்லாம் போக மாட்டேன் என்று அடம் பிடித்தவனை சென்ஷியின் பதிவைக் காட்டி இந்த மாமாவிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டியதும் ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்று விட்டான்.... ஹிஹிஹி சும்மா... இன்று லேசான அழுகை மட்டும்.

...,