தமிழ் பதிவுலகில் நான் கடவுள் படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விமர்சனங்கள் வந்து விட்டன. எனவே இது விமர்சனப் பதிவு அல்ல.. ஆனாலும் ஒரு விடயத்தை மட்டும் தொட்டு விட்டு விட்டு சொல்கின்றேன். பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள் மீது ஏதாவது ஒரு முத்திரை குத்தப்பட்டுவது வழக்கம். எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல..
நான் கடவுள் படத்தில் நாயகியைக் கொண்டு செல்ல நாயர் வரும் போது காப்பாற்றப் படுகின்றாள். அப்போது சாமி காப்பாத்துங்க என்று ஓடுகின்றாள். இரண்டாவதாக ஒரு அலங்கோலமானவன் வரும் போது வேறு மத (கிறித்தவ) தெய்வத்தை வேண்டுகின்றாள். அப்போது அவளுக்கு பாதுகாப்பு கிடைக்காமல் சிதைக்கப்படுகின்றாள். இதன் நுண்ணரசியல் பற்றி ஒரு பதிவர் எழுதி இருந்தார்.
இந்த காட்சியைப் பற்றி எழுதும் போது ஜெயமோகன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“ இன்னொன்று சிலகாட்சிகள் வெட்டுபட்டுள்ளன. அம்சவல்லி மதமாற்றம் செய்யப்படுகிறாள். அடுத்த காட்சி வலுவானது. தாண்டவன் அவளை கொடுக்கும்படிக் கோர ‘முப்பது வெள்ளிக்காசுக்கு காட்டிக்கொடுக்க நாங்கள் ஒன்றும் யூதாஸ்கூட்டம் இல்லை‘ என்று கன்யாஸ்திரீ சொல்ல ‘அப்படியானால் முப்பதாயிரம் வெள்ளிக்காசு?’ என்பான் தாண்டவன். அடுத்தகாட்சி அவன் இடத்தில் இருக்கும் அம்சவல்லி. அது படத்தில் இல்லை.”
படத்திற்கு நிறைய செலவானதாக படிக்க முடிந்தது. காசி, அந்த கரடு, மற்றும் பள்ளத்தில் இருக்கும் கோவில், குளிக்கும் மற்றும் சண்டை நடக்கும் கும்பக்கரை அருவி என்று நான்கு இடங்களே அதிகமான இடங்களை ஆக்கிரமித்து இருந்தன. இதில் படமாக்குவதற்கா இவ்வளவு செலவானது என்று ஆச்சரியமா இருக்கின்றது... என்னவோ .. இருக்கட்டும் பாலாவுக்கே வெளிச்சம்.
இந்த படத்தை விடுமுறை முடிந்து வந்ததும் வேகமாக பார்த்ததற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு... ஒரு காட்சி எங்கள் கடைக்கு முன் படமாக்கப்பட்டு இருந்தது தான். குருட்டுப் பெண்ணை( நாயகி பூஜா) ஒரு கிழவன் கை பிடித்து பிச்சை எடுக்க அழைத்துச் செல்வது போன்ற காட்சி தான் அது. யாருமே உணராத வண்ணம் அந்த காட்சி தத்ருபமாக எடுக்கப்பட்டது. எடுத்து முடித்ததும் படப்படிப்பு நடந்தது தெரிந்தது. ஆனால் அந்த காட்சி படத்தில் வரவே இல்லை.. ஏமாற்றம்.
காசிக்கு நாம போனதில்லை. அதனால் அது தெரியாது. அந்த பள்ளத்தில் உள்ள கோவில் காஞ்சிபுரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் எடுக்கப்பட்டதாம். நன்றாக எடுத்துள்ளார்கள்.
மலையில் உள்ள கோவில் எடுக்கப்பட்ட இடம் நமக்கு ரொம்ப பரிட்சயமான இடம். அதன் அடிவாரத்தில் தான் எங்க தீப்பெட்டி ஆபிஸ் இருந்தது. (சிறு தொழில் வளர்ச்சி வாரியம் அதிகாரிகளின் திருட்டுத் தனத்தால் நஷ்டமடைந்ததெல்லாம் எங்கள் கண்ணீர்க் கதை. இன்றும் குட்டிச்சுவர்களாக கட்டிட எச்சங்கள் இருக்கின்றன.) சின்ன வயசில் அந்த பகுதிகளில் எல்லாம் சுற்றித் திரிந்தோம். எனவே அந்த கோவில் ஒரு புதிய அனுபவத்தைத் தரவில்லை. அந்த கரட்டுக்கு மக்கள் போக்குவரத்து கூட இருக்காது... இப்போது வேண்டுமானால் இருக்கலாம்... ஏனெனில் சினிமா எடுக்கப்பட்ட இடமாக இருப்பதால்..:) அந்த அருவி மற்றும் தண்ணீர்ப் பாறைகளும் அடிக்கடி வழுக்கி விளையாடி இடம் தான்.
டிஸ்கி : இப்போது தான் ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்துக் கொண்டு இருக்கின்றேன். இதை மூலமாக வைத்து தான் நான் கடவுள் படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.. படித்து விட்டு மீண்டும் பேசலாம்.
(அடிக்கடி ஏதாவது பதிவு போடனுமாமே.. அதான்.. ;) )