பிறந்த குழந்தை கொன்ற தந்தை!! புதன்கிழமை, அக்டோபர் 17, 2007 | |
கடையநல்லூர்:
மனைவியுடன் அடிக்கடி சண்டை வருவதற்கும், ராசியில்லாததற்கும் பிறந்த குழந்தைதான் காரணம் என்று நினைத்ததால் ஆத்திரத்தில் குழந்தையை நானே கழுத்தை நெரித்துக் கொன்றேன் என்று குழந்தையின் தந்தை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகள் மகேஷ்வரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர் சில நாட்கள் மட்டுமே இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன் பிறகு கணவன் மனைவி இடையே தேவையில்லாமல் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவசத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்ரீமதி என பெயரிட்டனர்.
குழந்தை பிறந்து 4 மாதமே ஆன நிலையில் மனைவியையும், குழந்தையையும் தனது வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக முத்துபாண்டி நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு வந்தார். சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளதால் இன்னும் ஒரு சில மாதங்கள் கழித்து அவரை அழைத்து செல்லலாம் என்று மகேஷ்வரியின் உறவினர்கள் முத்துபாண்டியிடம் கூறினர்.
இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மனைவி வீட்டிற்கு சென்ற முத்துப்பாண்டி தனது வீட்டிற்கு வருமாறு மகேஷ்வரியை அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் தலையிட்டு சமரசப்படுத்தினர்.
பின்னர் முத்துப்பாண்டி குழந்தையை மட்டும் தனது வீட்டிற்கு தூக்கி சென்றார். குழந்தையுடன் சென்ற கணவர் வெகுநேரமாகியும் வராததால் அதிர்ச்சியடைந்த மகேஷ்வரி உறவினர்களை அனுப்பி குழந்தையை தூக்கி வருமாறு கூறினார். இதையடுத்து முத்துபாண்டி வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர். அங்கு மூக்கில் ரத்தம் கசிந்த நிலையில் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உறவினர்கள் போலீசில் புகார் கூறியதால், கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துபாண்டியை கைது செய்தனர். விசாரணையில் போலீசாரிடம் முத்துப்பாண்டி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
மனைவி மகேஷ்வரி கருவுற்றிருக்கும் போதே குழந்தை ஜனித்த நேரம் சரியில்லை. கருவை கலைத்து விடுவோம் என்று கூறினேன். அதற்கு அவளும், அவளது குடும்பத்தாரும் சம்மதிக்கவில்லை. குழந்தை உருவானதில் இருந்தே எனக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குழந்தை பிறந்ததும் ஜாதகம் பார்த்ததில் ஜோசியர் குழந்தை பிறந்த நேரத்தால் உங்கள் இருவருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.
இந்நிலையில் ஏற்கனவே கடந்த 15ம் தேதி மனைவியையும் குழந்தையையும் அழைக்க சென்றேன். இன்னும் சில மாதங்கள் ஆகட்டும் என்று மாமனாரும், மாமியாரும் கூறி விட்டனர்.
மீண்டும் நேற்று அழைக்க சென்றேன். ஏமாற்றமே மிஞ்சியது. ஜோசியர் கூறியபடி மனைவியையும் என்னையும் பிரிப்பது குழந்தைதான் என்று நினைத்து குழந்தை மீது ஆத்திரம் வந்தது.
இந்த குழந்தை இருந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என்று நினைத்ததால் குழந்தையை என்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து கழுத்தை நெரித்து கொன்றேன் ஓன வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.