Wednesday, July 30, 2008

ஒலிம்பிக் - முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி

.

இன்னும் சில தினங்களில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக சீனாவில் தொடங்க உள்ளன. அதில் பங்கு கொள்ளும் நாடுகள் அனைத்தும் பதக்க வேட்டைக்கு தயாராகி வருகின்றனர். நம் இந்தியர்கள் வழக்கம் போல் ஒரு பதக்கமாவது கிடைக்குமா என்று கனவு கண்டு வருகின்றனர். அந்த கதையெல்லாம் பேசி நம்ம மனசை புண்ணக்கிக் கொள்ள வேண்டாம். ஒரு சரித்திர சாதனை புரிந்த வீராங்கனையைப் பற்றிப் பார்க்கலாம்.

வருடம் : 1976

இடம் : கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரம்

நிகழ்ச்சி : ஒலிம்பிக் விளையாட்டு

அந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ருமேனியா நாட்டின் சார்பாக கலந்து கொண்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாதியா எலினா கெமனேசி . ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட போது அவளுக்கு வயது 14 மட்டுமே. இந்த சின்ன பெண்ணால் என்ன சாதிக்க இயலும் என்ற கேள்விக் கணைகள் எழுந்த போது சாதனைகளால் மெய்சிலிர்க்க வைத்தவர்.ஜிம்னாஸ்டிக் பிரிவில் Uneven Bars எனப்படும் கம்பிகளுக்கே இடையேயான விளையாட்டில் தங்க வென்றார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 10/10 என்ற புள்ளிகளை நவீன ஒலிம்பிக்கில் பெற்ற முதல் வீராங்கனை என்பதே அது. அந்த இடத்தில் இருந்த நடுவர்களும், பார்வையாளர்களும் அந்த சிறுமியின் அபாரமான திறமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். 1976 ஒலிம்பிக்கில் All Round, Bars, Beams ஆகிய மூன்று போட்டிகளில் தங்கமும், Floor Exercise பிரிவில் வெண்கலமும் தட்டிச் சென்றார். அதே போல் 1980 ஒலிம்பிக்கிலும் கலந்து கொண்டு Beams, Floor Exercise பிரிவில் தங்கத்தை வென்றார்.

நாதியா எலினா கெமனேசி இளம் வயதில் புரிந்த சாதனைகள் இனி முறியடிக்க இயலாதவை. எப்படி? 1976 ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் போது கெமனேசியின் வயது 14 மட்டுமே. தற்போதைய ஒலிம்பிக் சட்டப்படி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் தினத்தன்று குறைந்தபட்சம் 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். எனவே இனி யாரும் அவரது சாதனையை முறியடிக்க இயலாது.

பல விருதுகளையும் கெமெனெசி வென்று சாதனை படைத்துள்ளார். இன்னும் ஜிம்னாஸ்டிக் உலகில் தொடர்ந்து பணி ஆற்றி வருகிறார்.
1976 ஒலிம்பிக்கில் கெமெனெசி நிகழ்த்திய சாதனைகள்.....

10/10 புள்ளிகளை வென்ற Uneven Bars
Tuesday, July 29, 2008

அசின், ஸ்ரேயா, நமீதா - A முதல் Z வரை

.

ஆயில்யன் நாம் தினசரி பயன்படுத்தும் வலைப்பக்கங்களை abcd என்று வகைப்படுத்திக் கூறுக என்று டேக் செய்து விட்டார். இனி வகைப்படுத்தியவை..
A - www.arabnews.com இங்க லோக்கல் செய்திகளைத் தெரிந்து கொள்ள அவ்வப்போது பார்ப்பது
www.arusuvai.comசமையல் கலையை கரைத்துக் குடிக்க முயற்சி செய்து அடிக்கடி பார்க்கிறேன். ஆனால் அனைத்து தடவையும் தோல்வியில் முடிந்துள்ளது. மீண்டும் முயற்சிப்போம்.

B - எந்த குழப்பமும் இல்லாமல் www.blogger.com. நமக்கும் எழுத இடம் கொடுத்த மகான் ஆச்சே

C . www.cricinfo.com கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறும் போது கட்டாயம் திறந்திருக்கும் கதவு
www.cooltoad.com MP3 பாடல்களின் சுரங்கம். பாடல் தேவைப்பட்டால் முதலில் தேடுமிடம்

D. www.dinamalar.com தமிழில் செய்திகளைத் தெரிந்து கொள்ள... முக்கியமாக தினமும் காலையில் மாவட்ட செய்திகளைப் பார்ப்பது வழக்கம்

E. www.esnips.com நான் தொகுத்த புத்தகங்கள் எல்லாம் PDF கோப்பாக வைக்கப்பட்டு இருக்குமிடம். மற்றவர்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்கின்றனர்.

G
. www.google.com முதல் பக்கமே இவர் தான். கூகுள் இல்லையேல் உலகே மாயமாகி விடும் என்ற பிரமை வந்து விட்டது.

H. www.hinduonline.com இங்கிலீபீஸூ அறிவை வளர்க்க செல்லுமிடம்... ம்ஹூம்.. இதுவரை கொஞ்சம் கூட தேர்ச்சி இல்லை. :(

I. www.imageshack.us படங்களை இணையத்தில் காட்ட தேர்ந்தெடுக்குமிடம். அப்பாவி தமிழ் பிரியன் அங்கிருந்து தான் வருவான்... பாவமா இருக்குல்ல அவனைப் பார்த்தா
www.islamkalvi.com இஸ்லாம் தொடர்பான சொற்பொழிவுகளைக் கேட்க செல்லுமிடம்

K. www.keepvid.com யூடியூபில் பார்க்க வேண்டிய வீடியோக்களை இங்கு சென்று அழகாக பதிவிறக்கி பார்ப்பது தான் வழக்கம்.

L . www.lanka.info/dictionary/ தமிழ், ஆங்கிலம் மொழிபெயர்ப்பு பார்க்க

M . www.megavideo.com வீடியோக்கள் பார்க்க

O. www.onlinepj.com இஸ்லாமிய ஆடியோ உரைகள் கேட்க, கட்டுரைகள் பார்க்க

P. http://www.projectmadurai.org.vt.edu/, தமிழ் சார்ந்த பதிவுகள் இட ஓடிப் போய் உட்கார்ந்து கொள்ளுமிடம்

R
. www.rapidshare.com, கோப்புகள் பதிவிறக்க

S. www.stc.com vaவாரத்திற்கு 15 குறுஞ்செய்தி இலவசமாக இந்தியாவுக்கு அனுப்ப உதவும் வள்ளல் (தொலைபேசி சேவை அவசியம்)

T. தமிழ் மணம் தமிழ்மணம் வேலை செய்யவில்லையென்றால் கை, காலெல்லாம் நடுங்குகின்றது.
www.tntj.net தவ்ஹீத் ஜமாத் செய்திகளைத் தெரிந்து கொள்ள

U . www.usertube.com கனா காணும் காலங்கள் பார்க்க மட்டும்

W. http://www.wikipedia.org/ மண்டையில் புழு கடிக்கும் போதெல்லாம் சென்று பார்த்துக் கொள்ளுமிடம்

Y. www.youtube.com வீடியோக்களின் சுரங்கம்

Z . www.ziddu.com இன்னும் இங்கு தடை செய்யப்படாமல் இருக்கும் ஓரிரு பைல் சர்வர்களில் ஒன்று.

இனி நான் எனக்கு நன்கு தெரிந்த மூன்று பேரை டேக் செய்ய வேண்டும் என்று ஆயில்யன் சொன்னார். எனக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் மூவரை அழைக்கிறேன்...,,

1. சின்

2. ஸ்ரேயா

3. நமீதா

இவங்க தான் என் கனவில் அடிக்கடி வந்து தொல்லை பண்ணுகிறார்கள். அதனால் இவர்களை டேக் செய்தாகி விட்டது.

Wednesday, July 23, 2008

சீறாப்புராணம் - இஸ்லாமிய இலக்கியமா? ஓர் ஆய்வு - 1

தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள இலக்கியங்களின் சுவை அலாதியானது. இவைகளை பொதுவாக இரண்டு வகைகளுக்குள் அடக்கி விடலாம். ஒன்று வாழ்வியல் சம்பந்தமானவை அதாவது வாழ்க்கை வரலாறு, காதல், போர், வீரம், புனைக்கதை வரலாறு இப்படி... இரண்டாவது பக்தி இலக்கியங்கள்.... பல்வேறு வகையான மத, சமயத்தின் கருத்துக்களையும், அதில் புனிதமானவர்களாக கருதப்படுபவர்களின் வரலாறு, கடவுள்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் பெருமைகள், அவர்கள் செய்த அற்புதங்கள் இப்படி பிரித்து விடலாம்.

தழிழில் பொதுவாக பக்தி இலக்கியங்களை இந்து மக்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்கின்றனர். சில இடங்களில் மட்டும் பக்தி சார்ந்தவை வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்படுகின்றது. அவைகளை விதிவிலக்காகக் கருதி விட்டு விடலாம். அதே போல் கிறித்தவ மதத்திலும் இவ்வாறான பக்தி இலக்கியங்கள் தமிழில் இருக்கின்றன. அவர்களின் பிரார்த்தனைகளிலும் அவைகள் பாடப்படுவதைக் காணலாம். இந்த வரிசையில் உலகில் உள்ள மதங்களில் முக்கிய இடத்தை வகிக்கும் இஸ்லாமும் வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு என்று தொழுகை, பிரார்த்தனை, இன்னபிற வணக்கங்களும் இருக்கின்றன.

தமிழில் இஸ்லாமிய பக்தி இலக்கியம் என்ற உடன் பாட நூல்களிலும் இலக்கிய ஆர்வலர்களாலும் சுட்டப்படுவது சீறாப்புராணம் தான். சீறாப்புராணம் ஒரு சிறந்த தமிழ் இலக்கியம் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அதை ஒரு இஸ்லாமிய இலக்கியமாக அல்லது இஸ்லாமிய வரலாற்றுக்கு மூலமாக பார்ப்பது தவறு.

முதலில் இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தி விடலாம். இஸ்லாமிய மார்க்கம் கவிதைகளுக்கு எதிரானது அல்ல. தனது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கவிதைகளை அது அனுமதிக்கவே செய்கின்றது. ஹிஜ்ரத் செய்தவர்கள் தமது சொந்த மண்ணிற்கு திரும்புவது எப்போது எனக் கவலையுடன் கவிதை படித்ததாக ஹதீஸ்களில் வருகின்றது. அதே போல் கவிதையில் இஸ்லாத்தை தூற்றியவர்களுக்கு கவிதையிலேயே ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) பதிலடி கொடுத்த சம்பவங்களும் கிடைக்கின்றன.

இரண்டாவது இஸ்லாம் அதிகப்படியான புகழுரைகளையும், முகஸ்துதிகளையும், உண்மைக்கு புறம்பான விடயங்களையும் கவிதை வடிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

இஸ்லாத்தின் இருக்கக் கூடிய முக்கிய நம்பிக்கைகளில் முகமது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை வாழ்வில் கடைபிடிப்பதும் ஒன்று. அதன்படியே இஸ்லாமியர்கள் செயல்பட வேண்டும். எனவே இதில் பொய் கலந்து விடக்கூடாது. எனவே தான் ஹதீஸ் கலை வல்லுனர்கள் பலவிதங்களிலும் ஆராய்ந்து ஹதீஸ்களை தொகுக்கின்றனர். சீறாப்புராணம் என்பது இஸ்லாத்தின் கடைசித் தூதர் முகமது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நூலாகவே சொல்லப்படுகின்றது. அழகு தமிழில், மித மிஞ்சிய கற்பனைகளை கலந்து எழுதப்பட்டதே சீறாப்புராணம். இதில் நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் சில தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்து தமிழில் புனையப்பட்டுள்ளது, இதில் இடம்பெறும் தகவல்கள் அனைத்திலும் நம்பகத்தன்மை இல்லை. இதன் மூன்று காண்டங்களிலும் பார்த்தோமேயானால் சிறு செய்தியை மட்டுமே வைத்து அதை விவரிக்கும் நோக்கில் தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டுருப்பதைக் காண இயலுகின்றது. அவைகளை இங்கு விரிவாக காண்பதற்கு பதிவு போதாது என்றாலும் ஒரு சிறு உதாரணத்தை மட்டும் காட்டுகிறேன். நபிகளாரின் மகள் பாத்திமாவின் கணவர் பெயர் அலி (ரலி). இவர்களது திருமணம் நடந்த விதம் சம்பந்தமான வரலாற்று சான்றுகள் குறைவு. ஆனாலும் அதை விவரிக்க விரும்பிய உமறுப்புலவர் பாத்திமா திருமணப்படலத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். பாடலின் மூலத் தொகுப்பு

அந்தத் திருமணச் செய்தி மதீனா நகரெங்கும் முரசறைந்து அறிவிக்கப்படுகிறது! இதைச் செவியுற்ற மதீனா நகரத்து மக்கள் தங்கள் வீடுகளையும், மாடங்களையும் அலங்கரித்தார்கள்! தங்கள் வீடுகளின் சுவர்களில் கோலமிட்டார்கள்! ஒவியம் வரைந்தார்கள். தோரணம் கட்டினார்கள். பந்தல்கள் போட்டார்கள். அந்தப் பந்தல்களில் தொங்கவிடப்படாத பொருட்களே இல்லையாம்! தரை தெரியாத அளவுக்கு மலர்கள் தூவினார்கள். தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் அறுசுவை உணவுகளைச் சமைத்தார்கள். பெண்கள் புத்தாடை அணிந்து குயில் போல் பாடினார்களா! இளைஞர்கள் வீதிதோறும் வாழ்த்துப்பா பாடினார்களாம் முதியவர்கள் தெருத் தெருவாய் குர்ஆனை உரத்த குரலில் ஓதிக்கொண்டு வலம் வந்தனராம்! பின்னர் அலி(ரழி) அவர்கள் குதிரை மீது ஏறி பவனி வந்தார்கள். உலகத்தில் உள்ள எல்லா இசைக்கருவிகளும் வரவழைக்கப்பட்டு விண்ணும் மண்ணும் அதிர இசைக்கப்படுகிறதாம்! அலி(ரழி) அவர்களின் பேரழகை கன்னிப் பெண்கள் தம் கடைக்கண்களால் பருகினார்கள். அடைந்தால் இவரைப் போன்ற அழகரை அடைய வேண்டும்; இல்லாவிட்டால் செத்து மடிய வேண்டும் என்று எண்ணி ஏங்கினார்கள். இவருடைய அழகை பாத்திமா(ரழி) ஒருவர் தானா அடைய வேண்டும் என்று பொறாமைப்பட்டார்கள்.
பாத்திமா அவர்களுக்கு தாலி கட்டப்பட்டது என்றும், இந்த திருமணத்திற்கு வானவர்கள் வந்திருந்தனர் எனவும் சொல்லப்பட்டுள்ளது

இஸ்லாமியத் திருமணம் என்பது மிக எளிமையாக நடத்தப்பட வேண்டிய ஒன்று. அனைவருக்கும் முன்மாதிரியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபியவர்கள் இது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடவில்லை. பல நேரங்களில் வறுமையின் காரணமாக உணவின்றி கஷ்டப்பட்டுள்ளனர். இறக்கும் போது கூட தனது கவச உடையை அடமானத்தில் இருந்து மீட்க இயலாமலேயே மரணித்துள்ளார்கள். நபிகளாரின் வீட்டில் தொடர்ந்தார் போல் மூன்று தினங்களுக்கு அடுப்பு எரிந்தது இல்லை என அவரது துணைவியார் கூறுவதும் ஹதீஸ்களில் வந்துள்ளது. அதே போல் திருமணத்திற்கு தோரணங்கள், அலங்காரங்கள், தாலி போன்றவையும் அவர்களிடம் இருந்ததில்லை. இவைகள் வர்ணணைக்காக இருந்தாலும் முகமது நபி (ஸல்) அவர்களின் மீது பொய்யான விடயங்களை இட்டுக் கட்டி கூறுவதிலேயே அமையும். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
மேலும் நபிகள் கூறும் போது யார் வேண்டுமென்றே என் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி) .

இந்த காட்சி ஒரு உதாரணத்திற்கு மட்டுமே! இது போல் அனைத்து பகுதிகளிலும் உண்மைக்குப் புறம்பான காட்சிகளே காணக் கிடைக்கின்றன.

1. இவை சாதாரண காட்சி வர்ணனைகள், இவைகள் இலக்கியங்களுக்கு அழகு சேர்ப்பவை. கவிதைக்குப் பொய் அழகு. எனவே இதை மறுதலிக்கக் கூடாது?

2. சீறாப்புராணத்தை நபிகளின் புகழ் கூறும் புகழ்மாலையாகத் தான் பார்க்க வேண்டும்

இவ்வாறு கூறுபவர்களின் கூற்று இஸ்லாத்தின் பார்வையில் தவறானது என்பதை அடுத்த பதிவில் காணலாம்.........................
ஆய்வு தொடரும்

Monday, July 21, 2008

அறிவியல் கதை - போகாதே! போகாதே! என் கணவா!

2099 - டிசம்பர் மாதம் 30 ந்தேதி
“என்னங்க இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?” கண்களில் கண்ணீருடன் கணவனை நோக்கினாள் ஹேமா.

“இதுதான் என்னோட வாழ்க்கையின் லட்சியம். ஐந்து வருடமா ஆராய்ச்சி செய்து இப்பதான் எல்லாம் கைகூடி வருது. இதுக்கு பலபேர் போட்டி போட்டும் கடைசியில் நான் தான் ஜெயிச்சேன்” பெருமிதமாக கூறினான் 30 வயதே ஆன விக்னேஷ்.

“இதாங்க வெற்றி? பிள்ளைகளையும், என்னையும் நிரந்தரமாக பிரிந்து செல்வதா வெற்றி?”
”கவலைப்படாத ஹேமா! அரசாங்கம் உனக்கும், பிள்ளைகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தரும்”

பிள்ளைகள் இரண்டும் ஒன்றும் விளங்காமல் அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தன.

“பணமாங்க வாழ்க்கை! எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நீங்கதாங்க முக்கியம். நீங்க இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியலைங்க”

“இப்ப உனக்கு 27 வயசு தான ஆகுது? நான் போனதும் வேற ஒரு கல்யாணம் முடிச்சுக்க. உன் அழகுக்கும், அறிவுக்கும் என்னைவிட நல்ல கணவன் கிடைப்பான். கவலைப்படாதே இன்று தான் நாம் இருவரும் சேர்ந்திருக்கும் கடைசி இரவு. நிம்மதியா தூங்கு”

விளக்கை அணைத்து விட்டு விக்னேஷ் தூங்கிப் போக ஹேமாவின் விசும்பல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

2100 ஜனவரி 1

இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள் அனைவரும் அந்த பெரிய ஹாலில் கூடி இருந்தனர். ஹேமா சிவந்த கண்களுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் நின்று கொண்டிருந்தாள். அரசியல் தலைவர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹேமாவிடம் வந்த போது விக்னேஷால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மனைவியையும் மகன்களையும் கட்டியணைத்து கதற ஆரம்பித்து விட்டான். மூத்த மகன் நடப்பது புரியாமல் “ அப்பா! நீங்க போய் போன் கூட பண்ண முடியாதா?”

“இரண்டு நாள் வரை போன் செய்யலாம். அதற்குப் பிறகு முடியாதுடா செல்லம்” என்று சொல்லி விட்டு மீண்டும் அழத் தொடங்கினான்.

வெள்ளைக் கோட் அணிந்திருந்த ஒரு விஞ்ஞானி மெதுவாக விக்னேஷிடம் வந்து “ விக்னேஷ் மனதைத் தேற்றிக் கொள்! நேரமாகிவிட்டது. கிளம்பலாம்” என்று கூறிய உடன் சுய நினைவு வந்தவனாய் எழுந்து, அனைவருக்கும் கை காட்டிக் கொண்டே கண்ணாடி அறைக்குள் நுழைய கதவு பூட்டிக் கொண்டது. அறைக்குள் தனக்கான ஆடைகளை அணிந்து விக்னேஷ் தயாரானான்.

ஹேமா குழந்தைகள் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த ஹாலை விட்டு வெளியே வர அடுத்த சில மணி நேரங்களில் அந்த ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டுச் சென்றது. அந்த ராக்கெட்டில் விக்னேஷ் அமர்ந்திருந்தான்.

அந்த ராக்கெட் பூமியில் இருந்து பல லட்சம் மைல் தூரத்தில் இருக்கும் வேகா கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக சென்று கொண்டிருக்கின்றது. நமது சூரிய குடும்பத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அங்கு ஒளியின் வேகத்தில் செல்லும் இந்த ராக்கெட் சென்று சேரவே சில ஆண்டுகள் ஆகும். பின்னர் ஆராய்ச்சிகள் முடிந்து திரும்பும் போது விக்னேஷூக்கு 55 வயதுகள் ஆகி இருக்கும். ஆனால் பூமியின், வேகாவின் பால்வெளி மாறுபாடுகளால் பூமியில் 2310 ஆம் ஆண்டு நடந்து கோண்டிருக்கும். விக்னேஷின் கைக்கடிகாரம் 25 ஆண்டுகளை மட்டும் கடந்திருக்க பூமியில் 310 ஆண்டுகள் கடந்திருக்கும்.

இது சிறில் அலெக்ஸ் அவர்களின் அறிவியல் புனைக் கதைப் போட்டிக்காக

Friday, July 18, 2008

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்...... இறுதிப் பகுதி

.


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் முதல் பகுதி
2006 மே மாதம் - மதுரை இரயில் நிலையம்

கையில் மகளைத் தூக்கிக் கொண்டு மற்றொரு கையில் சூட்கேஸூடன் நின்று கொண்டிருந்தேன். அருகிலேயே மனைவி பிராயணப் பையுடன் நின்று கொண்டிருந்தாள். சென்னை செல்லும் அனந்தபூரி எக்ஸ்பிரஸ் வேகமாக நுழைந்து கொண்டு இருந்தது. பெட்டி எண் நிற்கும் இடத்திற்கு நேரே நின்றிருந்தாலும் வழக்கம் போல் நான்கு பெட்டி தள்ளியே இரயில் நின்றது. இருவரும் ஓட்டமும் நடையுமாக எங்களது பெட்டியை அடைந்தோம்.

கீழ் மற்றும் நடு படுக்கைகளை முன்பதிவு செய்திருந்தோம். மனைவியையும், மகளையும் இருக்கையில் அமர வைத்து விட்டு பெட்டிகளை இருக்கைக்கு அடியில் தள்ளி விட்டேன். ஓடி வந்து ஏறியது மூச்சிறைத்தது. மனைவியை ஜன்னலோரத்தில் தள்ளி அமரச் சொல்லி விட்டு இருக்கையில் அமர்ந்தேன். எங்களது இருக்கைக்கு மேலே ஒரு பெரியவர் தூங்கிக் கொண்டிருந்தார். எதிர் வரிசையில் ஒரு தம்பதியினர் தங்களது மகனுடன் அமர்ந்திருந்தனர். எதிர் வரிசையின் ஜன்னலோரத்தில் இருந்த பெண் ஜன்னல் வழியாக எதையோ வாங்கிக் கொண்டிருந்தார்.

முன் இருக்கையில் இருந்தவர் சினேகமாக புன்னகைத்தவாரே “ஹலோ சார்! சென்னைக்கா?”
“ஆமாம் சார்! சீசன் நேரம் டிக்கெட் கிடைக்கலை. அதான் நடுஇராத்திரியில் ஓட்டப்பந்தயமா இருக்கு”
“நீங்க எங்க இருந்து வர்றீங்க?”
“நாங்க திருவனந்தபுரத்தில் ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வர்றோம். சென்னையில் தான் வாசம். நீங்க மதுரை தானா?”
“நாங்க ஒரு திருமணத்துக்கு தான் சென்னை போறோம். எங்க ஊர் இங்க பக்கம் தான்.... வதிலை”
“அப்படியா? என் ஒய்ப் கூட உங்க ஊர் தான்”
தினமும் என் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருந்த அந்த பெயரைச் சொல்லி அவர் அழைக்க ஜன்னலில் வாங்குதலை முடித்து அந்த பெண் திரும்பினார்.... “இவர் உங்க ஊர் தானாம். உனக்கு தெரியுமா?” அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் இறங்கிக் கொண்டிருந்த இதயத் துடிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து நெஞ்சை அடைத்தது. தாடியுடன் இருந்தாலும் என் முகத்தை அடையாளம் கண்டு கொண்டதை அவள் முகம் கூறியது. அந்த முகத்தைப் பார்த்தும் வழக்கம் போல் கண்கள் அந்த கண்ணுக்குள் எதையோ தேடியது. சட்டென்ற குலுக்கலுடன் இரயிலும் கிளம்பத் தொடங்கியது.

பதில் சொல்ல அவள் திணருவது தெரிந்தது. “இல்லைங்க என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நான் 12 வருடமா வெளியூர்களில் தான் சுத்திக் கொண்டிருக்கிறேன்”. இப்போது அவள் என் மனைவியையும் மகளையும் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவளது கணவரே தொடர்ந்தார் “ ஆமாம். அவங்க குடும்பமும் சென்னைக்கு குடி வந்திட்டாங்க” எனறு எனக்கு தெரிந்த மேலதிக தகவல்களை அவரே சொல்ல ஆரம்பித்தார். சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.
வண்டி கொடை ரோடைத் தாண்டி சென்று கொண்டு இருந்தது. அவளது கணவர்
“ சரி எனக்கு தூக்கம் வருகின்றது. நான் மேலே சென்று படுக்கிறேன்” என்று சொல்லி விட்டு மேல் பெர்த்துக்கு சென்று ஏறிக் கொண்டார்.
எனது மனைவி “ என்னங்க சாப்பிடலாமா?” என்று கேட்டுக் கொண்டே பொட்டலங்களைப் பிரிக்க ஆரம்பித்தாள். உள்ளே லெமன் சாதம் வாசனையுடன் எட்டிப் பார்த்தது.
என் மனைவி எதிரே இருந்தவளிடம் “ நீங்க சாப்பிட்டீங்களா? லெமன் சாதம் இருக்கு. வாங்க சாப்பிடலாம்”
“நன்றிம்மா! நான் பிரயாணத்தில் சாப்பிட மாட்டேன். லைட்டா பிஸ்கட் மட்டும் தான்” இது அவள்.
நாங்க வெளியே எங்க போனாலும் லெமன் சாதம் அல்லது தயிர் சாதம் தான். அது தான் அவங்களுக்கு பிடிக்கும்” சொல்லி விட்டு என்னவள் என்னைப் பார்க்க எதிரே இருந்தவளும் என்னைப் பார்க்க என் கண்கள் கீழே பணித்தன.
இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம். அவ்வப்போது அவள் என்னையும், எனது மகளையும் பார்த்துக் கொள்வது தெரிந்தது. ஆனாலும் அவளை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் வரவில்லை. சாப்பிட்டு முடித்ததும் கீழ் பெர்த்தில் நான் உட்கார்ந்து கொள்ள மனைவியும், மகளும் அங்கேயே படுத்துக் கொண்டனர். மகளின் காலில் இருந்த ஷூ, சாக்ஸைக் கழட்டிய போது மகளின் காலில் இருந்த தங்கக் கொலுசு திண்டுக்கல் இரயில் நிலைய வெளிச்சத்த்தில் மின்னியது. அதே நேரத்தில் எதிரே இருந்தவளின் கண்களிலும் மின்னல் வெட்டி மறைந்தது. சற்று நேரத்தில் விளக்கை அணைத்து விட்டு தூங்கிப் போனேன்.

இருந்த அலுப்பில் நான் நன்றாகத் தூங்கிப் போனேன். இடையில் முழிப்பு வந்தாலும் அதையும் தாண்டிய களைப்பு தூங்கச் செய்து விட்டது. நன்றாக விடிந்து கொண்டிருந்தது. இரயில் விழுப்புரத்தை நெருங்குவது தெரிந்தது.
மேலே தூங்கிக் கொண்டிருந்தவர் கீழே வந்திருந்தார், அதற்குப் பிறகு கடைசி வரை அவளைப் பார்க்கவே இல்லை. தாம்பரத்தில் இறங்கிச் சொல்லும் போது அவளைப் பார்த்த போது கண்களால் என்னவொ சொல்ல நினைத்தாள். பின்னர் எனது மகளின் கையில் எதையோ திணித்தாள். சொல்ல வந்ததை சொல்ல இயலாமல் போன முக பாவத்துடன் போய் வருகிறேன் என்று மட்டும் சைகை செய்து விட்டு இறங்கி போய் விட்டாள்.

அவர்கள் கடந்ததும் என் மனைவி கூறினாள் “ எதிரே இருந்த பெண் இரவு முழுவதும் தூங்கவே இல்லை. அடிக்கடி உங்களையும், நம் மகளையும் பார்த்துக் கொண்டே இருந்தாள். அடிக்கடி அழுது கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். பாவம் என்னவென்று தெரியவில்லை?”

மனைவியிடம் சொல்லவா முடியும்? ... ஐந்து ஆண்டுகள் உள்ளத்தில் உள்ளதை வாயால் பேசாமல் கண்களால் மட்டுமே பேசிக் கொண்ட இரண்டு ஜோடிக் கண்கள் எட்டு ஆண்டு பிரிவுக்குப் பின் சந்தித்த போது பேச வேண்டியதை பேசவே இயலாத சந்தர்ப்பத்தில் இருந்ததை.....

எனது மகளின் கைவிரல்களைப் பிரித்து பார்த்த போது கழுத்தை ஒட்டி அன்று அவள் போட்டிருந்த மெல்லிய தங்க செயின் இருந்தது,

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்...... 1.
1995 ஒரு கோடைக்கால பகலில் கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில்


“என்ன சாப்பாடு கொண்டு வந்திருக்க” கேட்டுக் கொண்டே அவளருகில் அமர்ந்தேன்.
“காலைலக்கி லெமன் சாதமும், மதியத்துக்கு தயிர் சாதமும் கொண்டு வந்தேன். காலைல தான் யாருமே சாப்பிட விடலையே? இரண்டும் அப்படியே இருக்கு”
“நீ தான் பஸ்ஸிலே ஏறியதும் கும்பகர்ணன் மாதிரி தூங்க ஆரம்பிச்சுட்டியே? எப்படி பசிக்கப் போகுது”
“ஏய் கிண்டல் பண்ணாத”
“ஏம்ப்பா எப்போவாதான் டூர் வர்றோம். இங்கயும் அதே லெமன் சாதமும், தயிர் சாதமும் தானா?”
“வெளியே கடைகளில் சாப்பிட்டா ஒடம்புக்கு நல்லதில்ல. அதான் ஆமா நீ என்ன சாப்பிடப் போற”
“நான் ஏதும் கொண்டு வரலை! கடையில பசங்களோட சேர்ந்து சாப்பிடப் போறேன். இல்லைன்னா ஒரு பிஸ்கட் பாக்கெட் இருந்தாலே எனக்கு போதும்”
“அய்ய இப்பதான சொன்னே கடை சாப்பாடு ஒடம்புக்கு நல்லதில்லைன்னு. நீ தயிர் சாதம் சாப்பிடு. நான் லெமன் சாதம் சாப்பிட்டுக்கிறேன்”

“ நீ ஒல்லியாதன இருக்க இரண்டையும் சேத்து தின்னு ஒடம்பை தேத்து”
“ஏய் கேலி பண்ணாத சாப்பிடனும்னா சாப்பிடு இல்லைன்னா போ நான் கீழ கொட்டிக்கிறேன்”
சட்டென்று எனது கண்களை ஊடுருவிப் பார்த்தாள். நான் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.
“என்னோட ரேஞ்சுக்கு தயிர் சாதமும் லெமன் சாதமும் சாப்பிட மாட்டேன். இருந்தாலும் உனக்காக சாப்பிடுகிறேன்”
இப்போது அவளது கண்களை நான் பார்க்க அவள் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்

“நல்லா தான் இருந்தது உங்க வீட்டு தயிர் சாதம்... கை கழுவ தண்ணி ஊத்து”
“கர்சிப் எடுத்து கையைத் தொடச்சுக்க”
“வர்ற அவசரத்துல கர்சிப்பை மறந்துட்டு வந்துட்டேன்ப்ல”
“இந்தா இந்த துப்பட்டால கையைத் துடைச்சுக்க”

1995 ஜூன் மாதம் பள்ளிக்கூட மரத்தடியில்

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” அவள் கொடுத்த சாக்லேட்டை எடுத்துக் கொண்டே கூறினேன். தேன் கலரில் சுடிதாரில் அழகாகத் தெரிந்தாள்.

எனது பையில் இருந்து அந்த வாழ்த்து அட்டையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கியதும் பிரித்து பார்த்தாள். ஹேப்பி பர்த் டே டூ யூ என்று இசை முழங்கியது. வாழ்த்து அட்டையில் ஏதும் எழுதாததால் ஏற்ப்பட்ட ஏமாற்றம் அவளது முகத்தில் தெரிந்தது.
“ரெம்ப தேங்க்ஸ்... இது எங்கம்மா எனக்கு புதுசா எடுத்துக் கொடுத்த சுடிதார். எங்கப்பா எனக்கு பிறந்த நாள் பரிசா இந்த செயின் கொடுத்தாங்க” அழகான கழுத்தை ஒட்டி போட்டிருந்த தங்க செயினை ஒரு விரலால இழுத்து காண்பித்தாள்.

“தங்கத்தை பாத்தேலே வாயெல்லாம் பல்லாகிடுமே இந்த பொம்பளைகளுக்கு தங்கத்து மேல அப்படி என்ன ஆசையோப்பா”
“நானெல்லாம் அப்டி இல்ல. எஙகப்பா வாங்கிக் கொடுத்தாங்க போட்டிருக்கேன்”
இப்படி ஏதாவது சொல்லி சமாளிங்க! கழுத்து, காது, மூக்குன்னு தங்கத்தை மாட்டிக்கிட்டு திரியிரவங்களை பாத்தா எரிச்சலா இருக்கு”
“சரி விடு உன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு தங்கமே வாங்கித் தராத”
“நான் தங்கமெ வாங்கித் தர மாட்டேன் பாரு”
அவளது கண்கள் என் கண்களைப் பார்க்க சட்டென்று எனது கண்கள் தரையை நோக்கி பணிந்தன.
.......... நினைவுகள் தொடரும்

Sunday, July 13, 2008

தசாவதாரத்தின் உல்டா ******* .................

.
**** பதிவு எழுத இயல்வதில்லை. சில நேரங்களில் முயற்சி செய்தும் தோல்விலேயே முடிந்திருக்கின்றது. ஆனால் பின்னூட்டத்திலும், சாட்டிங்கிலும் மட்டும் கடுமையான மொக்கை போடுவதாக நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த **** வீடியோ பதிவு.

அதுக்கு முன் ஒரு முன்னுரை... பொதுவாக தமிழில் வரும் முன்னணி தொலைக்காட்சிகளில் செய்திகளைத் தவிர வேறு ஏதும் பார்ப்பதில்லை. குறிப்பாக அழுகாச்சி நாடகங்கள் என்பதே நமக்கு கொஞ்சம் அலர்ஜியான விசயம் தான். அதே போல் 'டாக் ஷோ'க்களைக் கண்டாலும் நமக்கு ஏதோ நாடக உணர்வு தான் வருகின்றது. எனவே அந்த பக்கமும் தலை வைத்துப் படுப்பதில்லை. சில நேரங்களில் நல்ல தமிழ், இந்தி திரைப்படங்களையும் பார்ப்பது பழக்கம். இருந்தாலும் நான் தொடர்ந்து பார்க்கும் ஒரே தொலைக்காட்சி தொடர் விஜயில் வரும் கனா காணும் காலங்கள்....
சமீபத்தில் அதில் பார்த்த ஒரு ***** காட்சி. கண்டிப்பாக பீலிசிவத்தின் வாகன ஒட்டுனரின் கமெண்டை கவனிக்கவும்.... :))))) Enjoy Maadies.. :)))

http://www.youtube.com/v/7kmLIf9P0Fs

டிஸ்கி : ****** என்னவென்று கண்டுபிடுத்திருப்பீர்கள் தானே.... ;) எல்லாம் பயந்தேன்... தமிழ்மண கருவிப்பட்டை வரலைன்னா என்ன செய்ய?

மனசாட்சி : ஒரு **** பதிவைக் கூட இம்புட்டு சீரியஸா ஆக்கிட்டியேடா? என்னத்த சொல்ல... :(

Wednesday, July 9, 2008

நிற்க உதவிய ஊன்றுகோல்கள் (அ) நிமிர உதவிய நெம்புகோல்கள் - 50 வது பதிவுஇது எனது பதிவின் 50 வது இடுகை. ஒரு வருடமாக தமிழ்மணத்தோடு இருந்தாலும் இப்போது தான் 50 வது இடுகையே எட்ட முடிந்துள்ளது. பதிவை பின்னோக்கி பார்க்கும் அதே நேரத்தில், வாழ்வில் வந்த பாதையை பின்னோக்கி பார்க்கும் போது நம் பின்னே பலரும் இருப்பது கண்கூடாகத் தெரிகின்றது. அதிலும் சிலர் மிக உயரமாக தெரிகின்றனர். மனதில் மிக்க மதிப்புடன் பதிந்து போன வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு என்னை எடுத்துச் செல்ல உதவிய சிலரை ஞாபகப் படுத்திக் கொள்ளவே இந்த பதிவு.
என்னை பெற்று, வளர்த்து, ஆளாக்கிய பெற்றோர்களுக்குப் பிறகு நான் முக்கியமாக நினைக்கும் நபர்கள் பலர் இருந்தாலும் முக்கியமாக மூவரை அறிமுகம் செய்கின்றேன்.

1. அமரர் ஆசிரியர் தனுஷ்கோடி.....

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியராக இருந்தவர். மிகச் சிறப்பான பாடம் நடத்தக் கூடியவர். அப்போதெல்லாம் மூன்றாம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலம் இருக்கும். ஆங்கிலத்தை வாசிக்கத் தெரியாமலேயே ஐந்தாம் வகுப்பு வரை அனைவரும் வந்து விட்டோம் அல்லது விடுவோம். தனுஷ்கோடி ஐயா தான் ஆங்கிலத்தை தனது மாணவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று முழு கவனத்துடன் பாடம் நடத்துவார். பாடங்களை புரிந்து படிப்பது, என்ன எழுதப் போகிறோம் என்று எப்படி யோசித்து வைப்பது, எழுத்தை அழகாக்க என்ன செய்வது, படிப்புக்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்பு என பள்ளிப் பாடத்திற்கு வெளியே உள்ள கட்டுடைக்கும் வேலைகளை சொல்லித் தருவார். பொதுவாக ஆசிரியர்கள் தனது கடன் பாடத்தை வாசித்து, போர்டில் எழுதிப் போடுவது என்று இருக்கும் பொதுபுத்தியை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையாளர். மாணவர்களுக்கு போட்டி வைத்து தனது சொந்த பணத்தில் பரிசுகளை வாங்கிக் கொடுத்து ஊக்குவிப்பார். நிச்சயமாக நினைவில் வைத்திருக்க வேண்டிய சிறந்த ஆசிரியர்.
ஆனால் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒரு தீய பழக்கம் இருந்ததால் பணி மூப்பிற்கு முன்னே மரணம் எய்தியதைக் கேட்டதும் கண்கள் கலங்கின. சிறந்த மனிதர்ர்களுக்கு சாபக்கேடு தான் மது எண்ணும் அரக்கன்.

2. ஆனந்தி அக்கா (ஹிந்தி ஆசிரியை)

பொதுவாக தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்கள் மிகக் குறைவு. 60 களில் ஏற்ப்பட்ட இந்தி எதிர்ப்பால் அதற்குப் பிறகு இந்தி படிப்பவர்கள் எதிரிகளாக பார்க்கப்பட்டனர். இப்போது நிலைமை மாறி வருகின்றது. தேவை எனக் கருதுபவர்கள், விருப்பமுள்ளவர்கள் படிப்பது நல்லது. அப்படி படித்தவர்களில் நானும் ஒருவன். நான் படித்த இந்தி எனக்கு நல்ல முறையிலேயே உதவியுள்ளது. உருது மற்றும் இந்தி தெரிந்தவர்களுடன் நன்றாகவே சண்டை போட முடிகின்றது. (கவனிக்க : எனது குடும்பத்தில் உருது, இந்தி யாருக்கும் தெரியாது). இன்னும் சிலர் 'நீ மதராசியா? நம்பவே முடியலை' என்று சொல்வதும் கூட நடக்கின்றது. சுயபுராணம் அதிகமாயிடுச்சோ... நிப்பாட்டிடுறேன்....

ஆனந்தி அக்கா எனக்கு இந்தி சொல்லிக் கொடுத்த ஆசிரியை. ஆசிரியை என்ற உடன் எங்க கண்ணாடி போடாத கண்மணி டீச்சர் மாதிரியோ, இல்லை கண்ணாடி போட்ட கயலக்கா மாதிரியோ யோசிக்காதீங்க... நான் 7 ம் வகுப்பு படிக்கும் நேரம், இந்தி வகுப்பு செல்ல ஆரம்பித்த போது அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இந்தியும் படித்துக் கொண்டிருந்தார்கள்... அதோடு பகுதியாக இந்தியும் கற்பித்துக் கொண்டு இருந்தார்கள். நான் இந்தியில் பிரார்தமிக்(1) படிக்கும் போது அவர்கள் பிரவேசிகா(4) படித்தார்கள். அப்படியே மற்றவர்களுக்கு ஆசிரியையாகவும் சொல்லிக் கொடுத்து வந்தார்கள். ஒரு சிறந்த ஆசிரியைக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் அவரிடம் மட்டுமே கண்டேன். பாடம் சொல்லிக் கொடுக்கும் முறை, மாணவர்களுக்கு புரிய வைக்கும் விதம், புரியதாவர்களுக்கு தனிக்கவனம் எடுப்பது, பணம் செலுத்த தாமதிப்பவர்களுக்கு உதவுவதும், படிப்பில் கண்டிப்பு என சிறப்பாக செயல்படுவார். இந்தி கற்றுக் கொள்பவர்களில் 90 சதவீதம் மெட்ரிக்குலேசன் முறையில் பயில்பவர்களே இருப்பர். என்னைப் போன்ற தமிழில் படிப்பவர்கள் அந்த ஜோதியில் இணைந்து மாட்டிக் கொள்வோம். 90 சதம் பேருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் திறமை(?)யால் 10 சதத்தினர் பாதிக்கப்படக் கூடாது என்று தனிக்கவனம் எடுத்துக் கொள்வார். மற்றவர்கள் ஆங்கில முறையில் 'மிஸ்' என்று கூப்பிடும் போது நான் 'அக்கா' என்றே அழைப்பேன். :)
திராவிட கொள்கையில் உள்ளவர்களுக்கு பொதுவாக பார்ப்பனீய எதிர்ப்பு இயல்பாக இருக்கும். அந்த எதிர்ப்பு எல்லோரிடமும் நாம் காட்டக் கூடாது என்றும், இயல்பாகவே சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்றும் நான் இன்று நம்புவதற்கு காரணமாக இருந்தவர்.
தற்போது ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வருகின்றார். தற்போதும் அதே கவனத்துடன், பாடம் நடத்தி வருகிறார் என்றால், அவரது மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறுவார்கள் எனபதில் இம்மியும் சந்தேகம் இல்லை.

3. செல்வகுமார் அண்ணன்

துபாயில் பணி செய்த போது எனது மேற்பார்வையாளர். நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர். முதன்முதலில் 0 மீட்டரில் வேலைக்கு சேர்ந்த போதும் சரி 7 வருடம் கடந்து வேலை கற்றுக் கொண்ட போதும் ஒரே மாதிரி இருந்தவர். அண்ணன் கொஞ்சம் தடாலடியானர். ஆனால் கட்டிடமே இடிந்து விழுந்தாலும் பதறாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர். வேலையே தெரியாவிட்டாலும் பரவாயில்லை... வேலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே போதும் என்று திடமாக நம்பியவர்.
ஓவர் டைம், வேலை சம்பந்தமாக அவ்வப்போது பூசல்களை ஏற்ப்படுத்திக் கொண்டாலும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பராக இருப்பார். இன்று எனது தொழில்நுட்ப வேலையில் பொறியாளர்களுடன் சவால் விடும் அளவுக்கு வேலையை கற்க ஊன்றுகோலாக இருந்தவர். எந்த தவறு செய்தாலும் அவர் திட்டும் அதிகபட்ச வார்த்தையே.... “ என்ன்ன்ன்ன்ன்னங்க நீங்க.......” என்பது தான் :) தற்போது ஊரில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

டிஸ்கி : என்னன்னே தெரிலீங்ண்ணா! நமக்கு காமெடியா ஏதாவது பதிவு போடலாம் என்றால் மண்டை மூளை வேலை செய்ய மறுக்கின்றது... (இருக்கா என்பதே சந்தேகம் தான் என்கின்றீர்களா? அதுவும் சரிதான்) யாராவது காமெடியா பதிவு போட ஐடியா கொடுங்க... சென்டிமெண்ட் இனி வாணாம்..... அவ்வ்வ்வ்வ்வ்வ் :(

Monday, July 7, 2008

கண்ணில் வைரம் மின்னும் பூனையார் - PIT போட்டி

.

எங்கள் ஊரில் சிறுவர்கள் விளையாடும் போது ஒன்னும் உதவாத உதவாக்கரைகளை ஆட்டத்தில் சேர்க்க மாட்டார்கள். அது போல தான் PIT போட்டிக்கு நம்ம புகைப்படங்கள். நி.நல்லவன் அண்ணன் மாதிரி காசு போட்டெல்லாம் கேமரா வாங்கலை. செல் போனை வைத்து எடுப்பது தான் எல்லாம்..... :))))
இருட்டை வைத்து PIT போட்டிக்கு போட்டோ எடுக்க இருட்டான இடங்களில் எல்லாம் பேய் மாதிரி சுத்தி போட்டோ எடுத்ததில் தேறியது இவை தான்.

1. இந்த பூனையை போட்டோவுக்கு போஸ் கொடுக்க செய்வதற்கு பொறிச்ச கோழியும், வறுத்த மீனும் கேக்குது.... என்ன கொடுமைங்க இது....


2. பணி செய்யும் இடத்தில் இயந்திர அறையில் நண்பர் ஒருவர் இருட்டில் வெளிச்சத்துடன் விளையாடிக் கொண்டு இருந்த போது கிளிக்க்கியது.

3. இவர் கொஞ்சம் சமத்தானவர். கோழி மீனெல்லாம் கேக்கலை. ஆனா போஸ் கொடுக்காம ஓடி ஓடி போனவர்.


இதில் முதலில் உள்ள பூனையார் தான் போட்டிக்கு.

Friday, July 4, 2008

பெரீரீரீரீ.....ய திருப்புமுனை - வாழ்க்கை அனுபவம்

.

சர்வேசன் பதிவர்களின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனைகளை எழுத அழைப்பு விடுத்து இருந்தார். நம்முடைய வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தை, அல்லது நபர்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக இருக்கும் என்று அதற்கு காரணம் கூறினார். சில தினங்களாக ஆணி மிகமிக அதிகமாகிப் போனதால் உடனடியாக எழுத நினைத்ததை எழுத இயலவில்லை. இனி என்னுடைய வாழ்வில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய திருப்புமுனையை சொல்கிறேன்......1996 ஆவது வருடம் +2 எனப்படும் மேல்நிலைத் தேர்வை எழுதி 70% க்கு கொஞ்சம் குறைவாக மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன். அதற்கு அடுத்த என்ன படிக்கலாம் என்று தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு திரிந்து கொண்டிருந்தேன். அப்ப தான் வீட்டில் பெரிசா வெடி குண்டு ஒன்றைப் போட்டார்கள்... படிச்சு கிழிச்சது வரை போதும், அடுத்து படிக்கவெல்லாம் 'வெள்ளையப்பன்' இல்லைன்னு... என்னடா இது ஏதேதோ கனவு கண்டோமே எல்லாமே புட்டுக்கிச்சா என்று கவலையுடம் இருக்க வேண்டி வந்தது. வீட்டையும் குறை சொல்ல முடியாது., அப்ப சூழ்நிலை அப்படி... சகோதரிக்கு அப்போது தான் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தோம். செலவுகள் அதிகமாகி வீட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது. ஆனாலும் எங்காவது இலவசமாக படிக்க வாய்ப்பு இருக்குமான்னு தெரிந்த இடங்களில் கேட்டுப் பார்த்தோம். ஏதாவது ITI, பாலி டெக்னிக்கிலாவது படிக்க முயற்சி செய்தாலும் எல்லாமே சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்து கொண்டிருந்தது. பாலிடெக்னிக்கில் கூட செமஸ்டர் பீஸ், ஹாஸ்டல் பீஸ், போக்குவரத்து செலவு என்று முழி பிதுங்கி விடும் என்று தெரிந்தது. எனவே படிப்பை துறக்க வேண்டி வந்தது. அதே போல் தம்பிக்கும் சில காரணங்களால் படிப்பை நிறுத்த வேண்டி வந்தது. (தம்பி, தற்போது 26 வயதில் 10 வது பரீட்சை எழுதுகிறான். பெருமையாக இருக்கிறது). 1996 ஜூலையில் 18 ஆயிரம் முதலீட்டில் எனக்கும், எனது தம்பிக்கும் சேர்த்து ஒரு பெட்டிக் கடை போல் அப்பாவால் வைத்து தரப்பட்டது. படிப்பைத் தொடர இயலாத சோகத்துடன் கடையை நடத்தத் தொடங்கினோம். ஓரளவு வீட்டுச் செலவை தாக்குபிடித்து கடை நடந்தது. இது 1997 ஜூலை வரை தொடர்ந்தது. இதற்குள் படிப்பின் வாசம் முழுவதுமாக நீங்கி இருந்தது.

அப்போது தான் அந்த திருப்புமுனை ஒரு இன்லேண்ட் லெட்டர் வடிவில் வந்தது. அதை எழுதி இருந்தது எங்களுடைய தூரத்து உறவினர் மதிப்பிற்குரிய பீர் முகம்மது அவர்கள். (எனது பாட்டிக்கு மாமா மகன்) தொலைவில் உள்ள ஒரு ஊரில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவரது பள்ளியில் நடக்கும் ஒரு கேம்பஸ் இண்டர்வியூ பற்றி எழுதி இருந்தார்.அந்த கடிதத்தில் சுருக்கம் இதுதான். வளைகுடாவில் இருக்கும் தமிழர்களால், தமிழர்களைக் கொண்டு, ............களுக்காக நடத்தப்படும் ஒரு நிறுவனம் +2 வரைப் படித்தவர்களைத் தெரிவு செய்து இலவசமாக ஒரு வருடம் தொழிற்கல்வியை இந்தியாவில் கற்றுக் கொடுத்து, வளைகுடாவில் உள்ள தனது நிறுவனத்தில் வேலையும் தரும். இலவசமாக தொழிற்கல்வி கற்றுத் தந்து, இலவ்சமாக அழைத்துச் செல்வதால் குறைந்த ஊதியத்திற்கு ஏழு ஆண்டுகள் பணி செய்ய வேண்டுமென்பது முக்கிய நிபந்தனை. இதில் நம்மைக் கவர்ந்தது இலவசக் கல்வி என்பது மட்டுமே. கடிதத்தில் நேர்முகத் தேர்வு நடக்கும் தேதி ஏதும் இல்லை. தொலைபேசவும் வாய்ப்பு இல்லாததால் உடனே கிளம்பி சென்றோம். நாங்கள் சென்ற அன்று தான் நேர்முகத் தேர்வு. சுமார் 25 பேர்களைத் தேர்ந்தெடுக்க 250 மாணவர்கள் இருந்தனர். எப்படியோ தட்டுத் தடுமாறி அதில் தேறினேன். அடுத்த ஒரு வருடம் ஒரு சிறப்பான கல்வி நிலையத்தில் கல்வி மற்றும் செய்முறைப் பயிற்சிகள். அனைத்திலும் முதலாக தேறி சாதனை வேறு..

கடையை தம்பியும், அப்பாவும் பார்த்துக் கொண்டனர். 1998 ஆகஸ்ட்டில் ஓராண்டு கல்வி முடிய செப்டம்பரில் விமானம் ஏறி துபாயில் இறங்கியாகி விட்டது. அப்போது வயது 19 + தான். அடுத்த 5 1/2 ஆண்டுகள் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை. வேலை செய்த இடத்தில் ஒரு எகிப்து மருத்துவரின் உதவியால் கணிணியும் கற்றுக் கொண்டாகி விட்டது. (எனது மொக்கை பதிவுகளுக்கு கணிணி கற்றுக் கொடுத்தவரை காரணமாக்காதீர்கள்... ;) ) இதற்குள் ஓட்டு வீடு கான்கிரீட் போட்ட வீடாகி இருந்தது. பின்னர் 4 மாத விடுமுறையில் இந்தியா. மீண்டும் 1 1/2 வருடம் என 7 ஒப்பந்த ஆண்டுகள் முடிந்தது. கான்கிரீட் போட்ட வீடு மாடி வீடானது. அதற்குப் பிறகு வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு வந்து திருமணம். பழைய ஊதியத்தை விட மூன்று மடங்கு ஊதியத்தில் புனித மெக்காவுக்கு அருகிலேயே புதிய வேலை......... வாழ்க்கை தொடர்கின்றது.
எங்கேயோ ஆரம்பித்து எங்கோ முடிந்து விட்டது............ நான் கருதும் திருப்புமுனை அந்த நல்லவரின் இன்லேன்ட் கடிதம்... மேலும் கணிணி கற்றுக் கொண்டது, வேலையில் வைத்திருந்த வெறி, ஒரு காதல் தோல்வி(நல்ல வேளை தப்பிச்சாச்சு), திருமணம் என்று சில சிறிய திருப்புமுனைகளையும் சொல்லலாம்.

Wednesday, July 2, 2008

மீண்டும் மீண்டும் மரிக்கிறேன் !!!!

.


பாலையாய் இருந்த

பாதையில் சருகுகள்

விரிப்பாக...

விரைவாக நடக்கிறேன்...


உறவுகள் சுமையென

உதறும் மனிதர்கள் போல

இலைகள் சுமையென

இறக்கிய மரங்கள்

வெறுமையாய் நின்று

வெய்யிலை உணர்த்த ...


கண்ணீர் இன்றி வறண்ட கண்களும்

தண்ணீர் இன்றி வறண்ட நிலங்களும்

ஒன்றை ஒன்று ஒப்பீடு செய்ய ...


உயிரின் கடைசி துளி

ஈரப்பதத்தில்

இழுத்துக் கொண்டிருந்த

ஒரு உயிர்...

உயிர்த்தது

உன்னை கண்டு

உலகமே சோலையானது

உயிர் வசமானது


மரங்கள் பூத்தது

மனமும் குளிர்ந்து

மரணமும் இனித்தது

ஆம் உனது மடியில்

மரணம் கூட இனிக்கும்.


ஒவ்வொரு முறையும்

உன் மடியில் சாய்வதர்க்க்காகவே

மீண்டும் மீண்டும் மரிக்கிறேன் !

கவிதை எழுதியவருக்கு நன்றிகள்

LinkWithin

Related Posts with Thumbnails