**********************************************************************
ஹிந்தி சில வித்தியாசமான படங்கள் வரும். டர்னா மனா ஹை (डरना मना है)... அதாவது பயப்படுவதற்கு தடை என்று வைத்துக் கொள்ளலாம். சுற்றுலா வரும் ஒரு நண்பர்கள் குழுவினரின் வாகனம் பழுதாக காட்டில் ஒரு இடத்தில் இரவு தங்குகின்றனர். அதில் நம் வாள மீன் மாளவிகா கூட இருப்பார். கதை நமக்கு தேவை இல்லை. அதில் அனைவரும் ஆளுக்கு ஒரு பேய்க் கதை சொல்வார்கள். ஒரு கதையில் ஷில்பா ஷெட்டி கடையில் ஆப்பிள் வாங்குவார். அன்று அதை உண்ணும் அவளது கணவன் மறுநாள் காலையில் படுக்கையில் ஆப்பிளாக மாறி இருப்பார். அவள் அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தால் ஊரே வெறிச்சோடி கிடக்கும். ஆப்பிள் உண்ட அனைவரும் ஆப்பிளாக மாறி தெருவில் ஆங்காங்கே இருப்பார்கள். ஆப்பிள் வியாபாரி கடைசி ஆப்பிளை அவளுக்கு ஓசியாகத் தருவதாகக் கூறுவான். கூடவே ஒரு பேய் இருக்கும்.
******************************************************************
நான் முதன் முதலில் துபாய் சென்ற போது அங்கு இவ்வளவு டிராபிக் இல்லை. மக்கள் தொகையும் குறைவாக இருந்தது. அரை மணி நேரத்தில் சார்ஜா வந்து விடலாம். அப்போது தான் துபாயின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டம்.
அடுத்தடுத்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி ஆரம்பமானது. எங்கு பார்த்தாலும் உயரமான கட்டிடங்கள். மக்கள் திரள். வீதிகளில் விலக இடமில்லாமல் மக்கள் திரள். உட்சபட்மாக டிராபிக் ஜாம். இது ஒரு புறமிருக்க அடிப்படைத் தேவையான இருக்கும் இடத்தின் வாடகை அமோகமான வருடா வருடம் ஏறிக் கொண்டே இருந்தது. கட்டிடங்களை 99 வருடத்திற்கு விலைக்கு விற்கும் புதிய முறை ஆரம்பமானது.
பல பிரபலங்களும், கறுப்பப்பணக்காரர்களும் துபாயில் வந்து பணத்தைக் கொட்ட ஆரம்பித்தனர். கொஞ்சம் அப்பர் மிடிஸ் கிளாஸ் கூட பணத்தைச் சேர்ந்து ப்ளாட் வாங்கி வாடகை வாங்க ஆரம்பித்து இருந்ததனர். (இதில் நிறைய பேர் பாகிஸ்தான், இந்தியர்கள்)
ப்ளாட்களில் தேவை அதிகமாக, அதிகமாக கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகமானது. கட்டிடங்களுக்கு பெயர் வைப்பதே பெரிய கடினமான வேலையாக மாறிவிட்டிருந்தது. தமிழ் சினிமா போல் எல்லா பெயர்களையும் அனைவரும் வைத்திருந்தனர்.
கடலுக்குள் வில்லாக்களையும், உயரமான கட்டிடங்களையும் கட்டிக் கொண்டு இருந்தனர். அதன் உச்சகட்டம் தான் பேரீச்சம் மரம் போன்ற அமைப்பில் வீடுகள், உலக மேப் அமைப்பில் வீடுகள், உலகின் உயரமான கட்டிடம் என்று.. தேரா பகுதியில் கடலில் கப்பல் மூலம் மண்ணைக் கொட்டிக் கொண்டு இருக்கும் போது பேசிக் கொள்வோம்.. கடலில் பணத்தை வாரி இறைக்கிறார்களே.. என்று.
அந்த நேரங்களில் அபுதாபி ரோட்டில் செல்லும் போதெல்லாம் எனக்கு மேலே நான் சொன்ன இரண்டு கதைகள் தான் நினைவுக்கு வரும். துபாய் இருக்கும் மக்கள் தொகைக்கும் இங்கு கட்டப்பட்டுக் கொண்டு வரும் கட்டிடங்களுக்கும் விகிதாச்சாரம் அதிக வித்தியாசமாக இருக்கின்றதே..இதையெல்லாம் யார் வந்து நிரப்பப் போகின்றனர் என்று... எல்லாம் சரியாக நடக்க வேண்டும் இல்லையென்றால்.... கட்டிடங்கள் பாழடைந்து , தெருக்கள் வெறிச்சோடி மயான அமைதியாகி விடும் என்று நினைத்துக் கொள்வேன்.
ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்க வில்லை. முதலில் அமெரிக்காவுக்கு விழுந்த அடி.. துபாய் வரைத் திரும்பி விட்டது. ரியல் எஸ்டேட் சரிவு என்ற உடன் மக்கள் துபாயில் முதலீடு செய்யத் தயங்க, வங்கிகள் அடுத்த கட்ட லோனை நிறுத்த ஆரம்பித்தன. கட்டிய கட்டிடங்கள் விற்கப்படாமல் தேங்க வங்கிகள் பண முடைக்கு ஆளாகின. வாங்கியவர்கள் விற்க எத்தனிக்கின்றனர். வங்கிக்கு பணம் கட்ட முடியாமலும், கட்டியதை விற்க முடியாமலும் நிறுவனங்கள் தவிக்க கூடவே இருக்கும் பணியாளர்களுக்கு சம்பளப் பிரச்சினை.



வேலை இல்லாததால் பெரும்பாலானோரை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்கள் காலியானதால் அவர்கள் இருந்த கட்டிடங்களும் காலியாகின்றன. அவர்களை டார்கெட்டாக வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களும் வியாபாரமின்றி தவிக்கின்றனர். எப்போதும் அமர்க்களமாக இருக்கும் துபாய் ஷாப்பிங் திருவிழா இந்த ஆண்டு சத்தமே இல்லாமல் நிறைவடைந்துள்ளது.
நிறுவனங்கள் ஆட்களை வேலை விட்டு தூக்குகின்றனர். இல்லையேல் நீண்ட விடுமுறை கொடுத்து தற்காலிகமான தங்களை சிக்கலில் இருந்து விடுவித்துக் கொள்கின்றனர்... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது போல் துபாய் தனது உச்சத்தை எட்டி விட்டது... துபாயுடன் சேர்ந்து சார்ஜா, அஜ்மான் போன்றவையும் பாதிக்கப்படுகின்றன. அபுதாபியின் எண்ணைய் வளம் அதைக் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
மீண்டும் உலக மக்கள் நம்பிக்கை கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் முன்னேறி, மக்கள் நம்பிக்கையுடன் மீண்டும் துபாயில் மண்ணில் முதலீடு செய்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். இல்லையேல் கல்லும். மண்ணும், கான்க்ரீட்டும், தான் அதன் மிச்சமாகக் கிடைக்கும்.
“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குர்ஆன் 2:276)