நமக்கு அடி எல்லாம் பாராட்டு மாதிரி அப்படியே உதிர்த்து விட்டு போய்டுவோம். அப்படி விழுந்த அடியில் மண்டை எல்லாம் உடைந்த கதை எல்லாம் கூட இருக்கு. அந்த அடியால் உண்டான தழும்பை மறைக்க வலது பக்கமாக வகிடு எடுக்கும் பழக்கம் கூட உண்டாச்சுன்னா பார்த்துக்கங்க... சரி மேட்டருக்கு வருகிறேன்.
என்னதான் ஆத்துல குளிச்சுப் பழகி இருந்தாலும் நீச்சல் அடிக்க மட்டும் கத்துக்கவே இல்லை. என்னவோ அது மட்டும் தோணவே இல்லை. கொஞ்சம் பெரிதானதும் கும்பக்கரை அருவிக்கு சைக்கிளிலேயே நண்பர்களுடன் போவோம். அழகான அருவி..கூட்டமும் இருக்காது. ஜாலியாக குளிப்போம். நீச்சல் தெரிந்தவர்கள் எல்லாம் யானை கெஜம், குதிரை கெஜம் எல்லாவற்றிலும் டைவ் அடித்துக் குளிப்பார்கள். நான் அருவிலும், வலுக்குப் பாறைகளில் சறுக்கியும் குளிப்பேன். என் நண்பர்கள் கமலக்கண்ணன், அப்பாஸ் எல்லாரும் நீச்சல் கத்துக் கொடுக்க முயற்சித்து கடைசியில் தோல்வியைத் தழுவினர். என்னை கூட்டிக் கொண்டு சென்றதற்கே எங்க அம்மாவிடம் திட்டு வாங்குவானுக... ;)))
திருமணம் முடிந்து சில நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் ஒரு முறை கும்பக்கரை அருவிக்குச் சென்றோம். அதற்குப் பிறகு ஒரு முறை மச்சினன் மற்றும் அவரது நண்பர்களுடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 அருவிகளுக்கு ஒரே நாளில் சென்றோம். காலையில் கிளம்பி ஒரு அருவில் ஒரு மணி நேரக் குளியல், சாப்பாடு, மீண்டும் பயணம், அடுத்த அருவி, மீண்டும் குளியல் மீண்டும் சாப்பாடு... இப்படியே கடைசியில் குற்றாலத்தில் முடிந்தது.
குற்றாலம் எப்பவுமே எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததில்லை. கூட்டமான கூட்டம் இருக்கும். அருகிலேயே சோப்பு, சீயக்காய் நுரையுடன் ஆட்கள் என்று வெறுப்பாக இருக்கும். லைனில் சென்று உடனே திரும்ப வேண்டும். பெண்களுக்கு குளிக்க
சரியான வசதி இருக்காது.
கும்பக்கரைக்கு சென்றால் தனியாக ஒரு மணி நேரம் அருவியில் நிற்பேன். அது தான் உண்மையான இன்பம்... இதற்காகவே விடுமுறை இல்லாத நாட்களில் செல்வோம்.
தனியாக ஆனந்தக் குளியல்
*********************************************************************
தாமிரபரணிக்கும் நம்ம ஊருக்கும் சம்பந்தமே இல்லை... 10 வருடத்துக்கு முன்னாடி ஒரு தடவை டூர் போய் இருக்கும் போது நெல்லைக்கு அருகில் உள்ள வல்லநாடு அக்ரி காலேஜ் பக்கம் இருக்கும் ஆற்றில் குளித்தது தான் அதற்கிடையேயான தொடர்பு.
அந்த தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் பாக்கியம் மீண்டும் சமீபத்தில் கிடைத்தது. சகோதரனுக்கு பிறந்துள்ள மகனைப் பார்க்க நெல்லைக்கு அருகில் உள்ள செய்துங்கநல்லூருக்கு சென்றோம். அந்த ஊரில் தாமிரபரணி ஓடாததால் அங்கிருந்து சாத்தான் குளம், ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் உள்ள கருங்குளம் சென்றோம். நாங்கள் சென்ற நேரம் நல்ல தண்ணீர் ஓடியது.
நல்லா ஜாலியான குளியல். அப்பாவுடன், சகோதரர்கள், மச்சான் எல்லாம் சென்றோம். நீச்சல் மட்டும் அடிக்க முடியல.. மகனையும், தம்பி மகனையும் ஆற்றில் இறக்கி குளிக்க வைக்கலாம் என்றால் இருவரும் கோரஸாக “அத்தா, இது பச்சத் தண்ணி.. குளிரா இருக்கும். அம்மா வைவாங்க.நாங்க வீட்ல போய் குளிச்சுக்கிறோம்” பயலுக காலைக் கூட ஆற்றில் வைக்க விடவில்லை.

அன்று மாலையே மீண்டும் அதே தாமிரபரணி தரிசனம். இப்ப குளிக்க அல்ல. அந்த ஆற்றைக் கடந்து தான் ஒரு ஊருக்கு செல்ல வேண்டுமாம். உறவினர் வீட்டுக்கு. காலையில் குளிக்கும் போதே கவனித்தோம். நிறைய பேர் மறுகரையில் இருந்து இக்கரைக்கு ஆற்றைக் கடந்து சென்று கொண்டு இருந்தனர். பொதுவாக முஸ்லிம்கள். பெண்களும் இதில் அடங்குவர்.
அந்த ஊரின் பெயர் கொங்காராயகுறிச்சி(சரியா??). அதற்கு செல்ல பாலம் ஏதுமில்லை. செய்துங்கநாலூரில் இருந்து நெல்லை சென்று அங்கிருந்து வேறு வழியாக தான் பஸ் உள்ளது. நாங்கள் சென்ற ஊரில் இருந்து பஸ்ஸில் செல்ல வேண்டுமானால் பல கி.மீ சுற்ற வேண்டும். 10 நிமிடம் பிரயாணித்து ஆற்றில் இறங்கி நடந்தால் சிறிது நேரம் தான்... என்ன கொடுமய்யா...
| அந்த பகுதி மக்கள் அங்கு பாலம் கட்டச் சொல்லி பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு இயந்திரங்கள் செவி சாய்க்க வில்லையாம். |
அந்த கிராமத்தில் நிறைய வீடுகள் . பெரிது பெரிதாக உள்ளன. பழமையும் புதுமையும் கலந்த மக்கள். நாங்கள் சென்ற வீடு சினிமாவில் வரும் வீடு போல் பெரி...தாக இருந்தது. ஆனால் இரண்டு பேர் தான் இருக்கின்றனர். நல்ல அனுபவங்கள்.
டிஸ்கி 1 : அருவியில் நிற்கும் போட்டோ சமீபத்தில் தான் எடுத்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். யாரும் போட்டோவை காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டாம். தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அதை விட அழகான போட்டோ அனுப்பி வைக்கப்படும்.
டிஸ்கி 2 : பிரபலமான ஒரு சக பதிவருக்கு அந்த கொங்கராயக்குறிச்சி தான் சொந்த ஊர்.. யார் என்று ஊகியுங்கள் பார்க்கலாம்.
டிஸ்கி3: ஊரில் இருந்து வந்ததும் எழுதி டிராப்டில் போட்டது.. அனுஜன்யாவின் சமீபத்திய பதிவைப் பார்த்ததும் வெளியிட்டு விட்டேன்.





