Thursday, June 26, 2008

????????????? (அ) ???????????????? (அ) சிலந்தி

.முன் டிஸ்கி : நான் இன்னும் தசாவாதாரம் படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை. ஒரு தமிழ் பதிவருக்கான இலக்கணத்தை இது மீறுவதாக அமைவதாக நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதைப் பற்றி எனக்கு இம்மியும் கவலையில்லை. ஆனாலும் ஒரு விமர்சனம் இங்கு எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

சமீபத்தில் பார்த்த ஒரு படம் தான் ‘சிலந்தி'. முன்னா, மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை இயக்கியவர் ஆதி. கால் சென்டர், ஐடி பெண்கள் மீது என்ன கோபமோ இயக்குனருக்கு. அந்த கலாச்சாரத்தின் பாதிப்புகளை கிளாமர் கலந்த ஒரு த்ரில்லர் கதை மூலம் சொல்லியிருக்கிறார்.

அறிமுக நாயகன் முன்னா, பெயரளவுக்கு தான படத்தில் ஹீரோ. மற்றபடி, மோனிகாவும், அவரது தாராள கவர்ச்சியும் தான் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

புதுமணத் தம்பதிகளான முன்னா- மோனிகா ஜோடி தேனிலவுக்காக ஓர் உல்லாச தீவுக்குள் செல்கின்றனர். வயாக்ரா வாங்குவதற்காக முன்னா தீவைவிட்டு வெளியே வர, மோனிகாவை ஒரு உருவம் பயமுறுத்துகிறது.

இதற்கிடையே, மோனிகாவின் தோழிகள் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர்.

தீவுக்கு திரும்பிவரும் முன்னாவிடம் மர்ம உருவம் குறித்து சொல்கிறார் மோனிகா. முதலில் நம்ப மறுக்கும் முன்னாவே, பிறகு அந்த உருவத்தை கண்டு அலற, அந்த மிரட்டல் உருவம் ஏன், எதற்காக அவர்களை துரத்துகிறது என்பது தான் க்ளைமாக்ஸ்.

ஒரு சஸ்பென்ஸ் கதையை எப்படி சொல்லக் கூடாது என்று தெளிவாக விளக்கிய படம் என்று கூட சொல்லலாம். சஸ்பென்ஸ் என்ற கருமத்தை இடைவேளையிலேயே உடைத்து விடுகிறார்கள். அதற்கு பிறகு படம் சுவாரஸ்யமே இல்லாமல் போகின்றது. பாதி படம் இருட்டில் வேறு செல்வதால் எதையும் பார்க்கக் கூட இயலவில்லை.

பேசாமல் இதற்கு மோகினிகளின் மோக இராத்திரி அல்லது அஜால் குஜால் சுந்தரிகள் என்று பெயரிட்டு சகீலா படத்தையும் போஸ்டரில் இட்டிருந்தால் (போஸ்டரில் இருப்பவர்கள் எல்லாம் படத்திலும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது தனி சட்டப் பிரிவு) படம் பிய்த்துக் கொண்டு போயிருக்கும். நமது பரங்கிமலை ஜோதி, போரூர் பானு, ராம் ( இடிச்சிட்டாங்களாமே..... ஃப்லோல வருதுங்க..... கண்டுக்காதீங்க) தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கல்லாவாவது சேர்ந்து இருக்கும்.

பின் டிஸ்கி : இமேஜை உடைக்கும் முயற்சி. தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் கண்டுக்காதீங்க....

Wednesday, June 25, 2008

வைகையின் புதல்வன் - சரித்திர தொடர் 1 - குதிரையின் குளம்பொலி

.


”கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
("கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!")

பாண்டிய மன்னன் பெரும்பெயர் வழுதி பற்றி இரும்பிடர்த் தலையார் பாடியது. நூல் : புறநானூறு பாடல் : 3


வைகையின் குமாரன் - 1. குதிரை குளம்பொலி

கதிரவன் தனது விசித்திரமான கைகளை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கே இழுத்துக் கொண்டு இருந்தான். அமாவாசையின் மாலை நேரமாதலால் கருமை வெகு வேகமாக பரவிக்கொண்டிருந்தது. காட்டு மரங்களில் இருந்து சலசலவென் சத்தம் இரைச்சலாய் கேட்டுக் கொண்டிருந்தது. ஆந்தைகளின் உருமலும், கோட்டான்களின் கூவுதலும் பயமுறுத்துவதாக இருந்தது. நரிகள் இரை கிடைத்த மகிழ்விலோ என்னவோ ஊளையிடத் துவங்கி இருந்தன.

அந்த நேரத்து மெளனத்தைக் கிழித்துக் கொண்டு வரும் குதிரைகளின் குளம்படி ஓசைகளைக் கேட்டு பறவைகள் சில சத்தத்துடன் எட்டிப் பார்த்தன. மொத்தம் ஐந்து குதிரைகள். போர்க்களத்தில் எதிரிகளைத் தாக்குவதற்கு கிளம்பியது போல் மிக வேகமாக வந்து கொண்டிருந்தன. முன்னால் சென்ற இரண்டு குதிரைகளில் ஆஜானுபாகான இரண்டு குதிரை வீரர்கள். அதே போல் பின்னால் இரண்டு வீரர்கள். நால்வரின் இடையிலும் உடைவாள் தொங்கிக் கொண்டு இருந்தது.
நடுவில் சென்ற குதிரையில் ஒரு பெண். குதிரையின் வேகத்திலும், மாலை நேர மயங்கிய இருளிலும் அவளது உருவத்தை சரியாக காணவில்லை. ஆனாலும் அவள் குதிரை ஓட்டும் திறனைப் பார்க்கும் போது நல்ல பயிற்சி பெற்றவளுக்கான வேகம் தெரிந்தது. குதிரைகளில் இடப்பக்கத்திலேயே தென் தமிழகத்தின் ஜீவநதி வைகை வளம் குன்றி ஏதோ சோகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.

மாலையின் இருளைக் கிழித்துக் கொண்டு அங்காங்கே தீக்கங்குகளும், புகை மூட்டங்களும் வந்து கொண்டிருந்தன. நதிக் கரையை ஒட்டி இருந்த வயல்களில் எரிந்து மிச்சமாகிப் போய் இருந்த நெற்க்கதிர்களை காண முடிந்தது. வயல்களை ஒட்டி இருந்த குடியானவர்களின் வீடுகள் சின்னா பின்னமாக்கப் பட்டு எரிக்கப்பட்டதும், எரிந்து கொண்டிருந்ததுமாக நெருப்பை கக்கிக் கொண்டு இருந்தன. குதிரைகள் சென்று கொண்டு இருந்த பாதையில், பல இடங்களில் குதிரைகள் செத்து கிடப்பதையும், சில குதிரைகள் தங்களது கடைசி கட்ட மூச்சை விட்டுக் கொண்டு கனைத்துக் கொண்டும் இருந்தன. சில இடங்களில் செத்த பிணங்கள் கூட்டமாக வைத்து எரிக்கப்பட்டதற்கான அடையாளமாக பிணவாடை வந்து கொண்டு இருந்தது.

மிக கோரமாக ஏதோ நிகழ்வு அங்கு நடந்துள்ளது என்பது மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தது. குதிரைகளில் முன்னால் சென்றவர்கள் குதிரை வேகத்தைக் குறைப்பதைக் கண்டவுடன் பின்னால் வந்த குதிரைகளும் தங்களது வேகத்தைக் குறைத்தன. அதற்கு ஏதுவாக முன்னால் சென்ற குதிரையில் இருந்த வீரன் தனது கையை உயர்த்தி நிற்க வேண்டுமென சமிக்ஞை செய்தான். அந்த வீரன் குதிரையை நிறுத்திய உடன் மரத்திற்கு பின்னால் ஒளிந்து இருந்த இரண்டு வீரர்கள் வேகமாக வந்து குதிரை வாங்க அவன் கீழே இறங்கினான். நடுவில் இருந்த குதிரையில் இருந்த பெண்ணிற்கு அருகில் வந்து தலை வணங்கி
”நாம் இறங்க வேண்டிய இடம் வந்தாகி விட்டது. மாமன்னர் இங்கு தான் சற்று தொலைவில் தெரியும் குடிசையில் தங்களை இருக்க பணித்துள்ளார்”
அதற்குள் மற்ற ஒருவன் தீப்பந்தத்தை அருகில் கொண்டு வர அந்த தீயின் வெளிச்சத்தில் பெண்ணின் முகம் தெரிந்தது. அந்த முகத்தில் இயற்கையாக குடி கொண்ட, அன்று வர மறுத்து விட்ட நிலவின் குளிர்ச்சியையும் காண முடிந்தது. அதே நேரம் சற்று முன் மறைந்த ஆதவனின் ஜூவாலையைப் போல் தகிப்பதையும் காண முடிந்தது.
“அரசர் எப்போது வருவார் என்று தெரியுமா” எனக் கேட்டாள்.

இருந்தவர்களில் கொஞ்சம் மூத்தவன் பதிலுறைத்தான்.
“அதைப் பற்றி ஏதும் தகவல் இல்லை நந்தினி பிராட்டியாரே! ஆனால் மிக அருகிலேயே இருப்பதாக செய்தி வந்துள்ளது”.
.............. தொடரும்...

Tuesday, June 24, 2008

பொன்னியின் செல்வன் - நந்தினி - வீரபாண்டியன் உறவு சர்ச்சை 1

கல்கி கி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய அற்புத காவியம் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலைப் பற்றி தமிழ் அறிந்தவர்களிடம் விளக்க வேண்டிய அவசியமில்லை. நானும் பொன்னியின் செல்வன் படித்துள்ளேன் என்பதை அனைவரும் பெருமிதமாக கூறுவதைக் கூட காணலாம். எனவே அதைப் பற்றி இங்கு சிலாகிக்கப் போவதில்லை. சமீபத்தில் நண்பர் ஜியா அவர்கள் தனது பதிவில் பொன்னியின் செல்வன் படித்ததைப் பற்றி எழுதி இருந்தார், அத்தோடு அதில் ஆதித்த கரிகாலனால் கொல்லப்பட்ட மதுரையின் அரசன் வீரபாண்டியனுக்கும், பழவூர் இளைய ராணியாக வரும் நந்தினிக்கும் இடையேயான உறவைப் பற்றி சந்தேகத்தையும் எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த நண்பர் அறிவன் அவர்கள்
///பழுவேட்டரையர் மூலம் தெளிவாகவே குறிப்பிடுகிறார்,நந்தினி வீரபாண்டியன் மகள் என்று.
இதை ஆழ்வார்க்கடியானும் உறுதி -கருத்திருமன் மூலம்-செய்வான்....///

என்று கூறியிருந்தார். மேலும் சந்தேகத்தைத் தெளிவு படுத்தும் பொருட்டு

///பைத்தியக்காரன் - வந்தியத்தேவன் உதவியால் பாதாளச்சிறையிலிருந்து தப்பித்து ஓடும் போது ஆழ்வானிடம் படகில் மாட்டுவான்;அப்போதும் கருத்திருமன் முதலில்,தான் தான் அந்த இரு குழந்தைகளின் தகப்பன் எனக் கூறுவான்;பின்னர் ஆழ்வான் ‘நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கிக்' கேட்டவுடன்,இல்லை அந்த இரு குழந்தைகளும் என் எஜமானரின் குழந்தைகள்(வீரபாண்டியன்) என்பான்;புதைக்கப் பட இருந்த அவற்றை காப்பாற்றியது தான் தான் என்றும்,அதற்காகவாவது உயிருடன் விட்டு விடும் படியும் கேட்பான்;ஆழ்வான்,'உண்மையில் அதற்காகத்தான் விடுகிறேன்' பிழைத்துப் போ' என்று விடுவான்.

பின்னர் கதையில் நந்தினி கரிகாலரிடம் உண்மையைச் சொன்ன கணத்தில் பழுவேட்டரையர் மறைந்து கேட்பார்.
இத்தகவல் நந்தினியால் நேரடியாக அவருக்குக் குகையில் உறுதி செய்யப் படும்.
அதை பழுவேட்டரையர் அரசசபையில் தான் தற்கொலை செய்யும் முன்னர் பகிரங்கமாகத் தெரிவிப்பார்....///

இனி இது தொடர்பான நமது விஷயத்துக்கு வரலாம். நந்தினியின் பிறப்பு நடந்தது சோழ நாட்டில் அரண்மனைக்கு அருகிலேயே. அவளது தாய் ஊமையான மந்தாகினி அம்மையார். (வாணியின் தமக்கை). நந்தினியை பிரசவித்து விட்டு அவர் காணாமல் போய் விடுவார். மேலும் நந்தினிக்கும் மந்தாகினிக்கும் உள்ள உருவ ஒற்றுமை இதை மேலும் ஊர்ஜிதப்படுத்தி விடும். எனவே இதில் எந்த சந்தேகமும் இல்லை.
நந்தி்னியின் தந்தை யார் என்பது தான் இங்கு கேள்வி? முதலில் கதையோட்டத்தில் முதலில் நந்தினியின் தந்தையாக சுந்தரசோழனை நினைக்கும்படி கதை அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏதுவாக சுந்தர சோழரும் மந்தாகினியுடன் பழகி இருப்பார். ஆனால் சுந்தர சோழர் இலங்கையில் இருந்து திரும்பி இரண்டு ஆண்டுகள் கழித்தே நந்தினியும், (பழைய)மதுராந்தகரும் பிறந்ததால் அதற்கான வாய்ப்பே இல்லை. அடுத்து உள்ள வாய்ப்பு மதுரையின் அரசன் வீர பாண்டியன். வீரபாண்டியனின் பெயரைக் குறிப்பிட்டே கல்கி சில கதாபாத்திரங்கள் மூலம் இதை சொல்ல வைத்திருப்பதன் மூலம் அதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தோன்றுகின்றது.
முதலில் நண்பர் அறிவன் சொன்ன இரண்டு இடங்கள்

1. கருத்திருமன் ஆழ்வார்க்கடியானிடம் சொன்னது

இதில் தெளிவாக ஏதுமில்லை. ஏனெனில் என்ன பெயரை கருத்திருமன் சொன்னான் என்று அங்கு வரவில்லை.

///ஆழ்வார்க்கடியான் கருத்திருமனுடைய நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கி, "உண்மையைச் சொல்! மதுராந்தகன் யாருடைய மகன்?" என்று கேட்டான்.

"
இது என்ன கேள்வி? செம்பியன் மாதேவியின்... இல்லை, இல்லை நெஞ்சை அமுக்காதே! என் உயிர் போய்விடும்! ஊமை மந்தாகினியின் மகன்."

"
மதுராந்தகனின் தகப்பன் யார்? உண்மையைச் சொல்! இல்லாவிட்டால் உயிரோடு தப்ப மாட்டாய்!"

கருத்திருமன் இதற்குப் பதில் மிக மெல்லிய குரலில் சொன்னான். ///

2. பெரிய பழுவேட்டரையர் சொன்னது

////மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எந்தப் பெண்ணின் முகலாவண்யத்தைக் கண்டு மயங்கி மோக வலையில் வீழ்ந்து அவளை என் அரண்மனையில் சர்வாதிகாரியாக்கி வைத்திருந்தேனோ, அவள் வீரபாண்டியனுடைய மகள்! அவள் வாயினால் இதை ஆதித்த கரிகாலரிடம் சொல்லியதை நான் என் காதினால் கேட்டேன். வீரபாண்டியனை ஆதித்த கரிகாலர் கொன்றதற்குப் பழிக்குப்பழி வாங்கவே பழுவூர் அரண்மனைக்கு அவள் வந்திருந்தாள். அதற்குத்தான் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள்.///

அ. இதே போல் வந்தியதேவன் சொல்வது

///குந்தவை : "நந்தினி வீர பாண்டியனின் மகள் என்பது உண்மையாயிருக்குமா?"

வந்தியத்தேவன் : "நந்தினி அவ்வாறு ஆதித்த கரிகாலரிடம் கூறியதை என் காதினால் நானே கேட்டேன். பெரிய பழுவேட்டரையரும் கேட்டார்.///

மேற்காட்டியவைகளை வைத்து நந்தினி வீரபாண்டியனின் மகள் தான் என்று ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆனால் வேறு சில காரணங்கள் காட்டப்பட்டு நந்தினி வீரபாண்டியனின் மனைவி/காதலி என்றும் சொல்லப்படுகின்றது. அந்த காரணங்களையும், மேலே உள்ள மூன்று சாட்சிகளும் எவ்வாறு பொய்யாக முடியும் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.........

............தொடரும்

Monday, June 23, 2008

நந்தினி வீர பாண்டியனின் காதலியா? சர்ச்சை 2 - பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் - நந்தினி- வீர பாண்டியன் சர்ச்சை 1
முதல் பதிவைப் படித்து விட்டு இதைத் தொடருங்கள்.........
முதலில் நந்தினி வீரபாண்டியனின் காதலி/மனைவி என்பதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.

ஆதாரம் 1 - வீரபாண்டியன் கொலைக்களம்.

ஆதித்தன் கூறுவது

/// நான் தட்டுத் தடுமாறி, 'உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவன் உயிரைக் காப்பாற்றும்படிக் கேட்கிறாய்?' என்றேன்.

'இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்து கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்!' என்றாள் நந்தினி. ///

ஆதாரம் 2 - சிறுவனுக்கு காட்டில் மன்னர் பட்டம் கட்டுமிடம்

/// நந்தினி சிறுவன் அருகில் வந்ததும் தன் இருகரங்களையும் நீட்டினாள். சிறுவன் அவளையும் தனக்குப் பின்னால் நின்ற ஸ்திரீயையும் மாறி மாறிப் பார்த்தான்.

"நீ தானே என் அம்மா? இவள் இல்லையே" என்று கேட்டான்.

"ஆம், கண்மணி!"

"இவள் ஏன் என்னுடைய அம்மா என்று சொல்லிக் கொள்கிறாள்?"

"அவள் உன்னை வளர்த்த தாய்!"

"நீ ஏன் என்னை வளர்க்கவில்லை? ஏன் உன்னுடன் என்னை வைத்துக் கொள்ளவில்லை? இவள் எதற்காக என்னை எங்கேயோ மலைக் குகையில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்?"

"கண்மணி! உன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான். உன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான்!" ///

ஆதாரம் 3 - ரவிதாசன் தனது கூட்டாளியிடம் கூறுமிடம்

"பழுவூர் ராணியா அவள்? பாண்டிமாதேவி என்று சொல் வீர பாண்டியர் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னால் அவளைத் தம் பட்ட மகிஷியாக்கிக் கொண்டதை மறந்து விட்டாயா? வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்துவிட்டாயா?

ஆதாரம் 4 - ஆதித்தன் வந்தியதேவனிடம் சொல்வது

(நந்தினியைத் தனது சகோதரி என்று நினைத்து)

என் சகோதரி வீர பாண்டியன் மீது காதல் கொண்டு அவன் உயிருக்காக என்னிடம் மன்றாடினாள் என்பதை நினைத்தாலே என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது.

ஆதாரம் 5 - ஆதித்தன் கொலைக்கு சற்று நேரத்திற்கு முன் நந்தினி தனியாக குழம்பிப் பேசுவது

திடீரென்று நந்தினியின் உடம்பு முழுவதும் ஒரு தடவை சிலிர்த்தது. வெறிக்கனல் பாய்ந்த கண்களினால் மேல் நோக்காகப் பார்த்தாள்."ஆகா! நீ வந்துவிட்டாயா? வா! வா! சரியான சமயத்திலேதான் வந்தாய்! என் அன்பே! என் அரசே! வா! வீர பாண்டியன் தலையே! ஏன் கூரை ஓரத்திலேயே ......................................................................................... எல்லாரும் எந்த வீர சொர்க்கத்துக்குப் போகிறார்களோ, அந்த வீர சொர்க்கத்துக்கு நீயும் போவாய்! அங்கே என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள்! அவர்களில் ஒருத்தியை... என்ன? மாட்டேன் என்கிறாயா? சரி

ஆதாரம் 6 - ஆதித்தன் நந்தினியுடன் அவனுடன் உரையாடும் போது

'இளவரசே! முதலில் தாங்கள் என் காதலைக் கொன்றீர்கள்; பிறகு என்னைக் காதலித்தவனை என் கண் முன்னால் கொன்றீர்கள்;

ஆதாரம் 7 - வந்தியதேவன் ரவிதாசனிடம் மாட்டிய போது நடக்கும் உரையாடல்

"இன்னுமா உனக்குத் தெரியவில்லை? பாண்டிமாதேவிதான். பெரிய பழுவேட்டரையரின் வீட்டில் வந்திருக்கும் வீர பாண்டிய சக்கரவர்த்தியின் வீரபத்தினி நந்தினி தேவிதான்!"

ஆதாரம் 8 - ஆதித்தன் நந்தினியுடன் கடைசியாக 'இருவரும் எங்காவது சென்று மணம் செய்து கொள்ளலாம்' எனும் போது 'அது நமக்குள் இயலாது' என்று மறுதலிக்கும் போது

///ஆயினும் சொல், நந்தினி! என்னுடன் வருவதற்கு, - நம் இளம் பிராயத்து ஆசைக் கனவு நிறைவேறுவதற்கு - தடையாயிருக்கும் உண்மையான காரணம் என்னவென்று சொல்!///

மேலே உள்ள காரணங்களைப் பார்க்கும் போது


ஆதாரங்கள் 2,3,7 ஆகியவையின் மூலம் ரவிதாசன் உள்ளிட்ட கூட்டாளிகள் முன் வீரபாண்டியன் நந்தினியை தனது பட்டத்து மகிஷியாக ஏற்றுக் கொண்டுள்ளான் என தெளிவாக் விளங்குகின்றது.
ஆதாரங்கள் 1 மற்றும் 4 ன் படி ஆதித்தன் இரண்டு இடங்களில் வீரபாண்டியன் தான் நந்தினியின் காதலன் என்பதைத் தெளிவாகக் கூறுகிறான்.
ஆதாரங்கள் 5 மற்றும் 6 ன் படி நந்தினியே தன்னை வீரபாண்டியனின் காதலியாக தெளிவாக காட்டிக் கொள்கிறார். அதிலும் தனியாக புலம்பும் காட்சியில் வீரபாண்டியனின் தலையைப் பார்த்து அன்பே என்று விளிக்கின்றாள். மேலும் சுவர்க்கத்தில் பல பெண்கள் இருப்பார்களே அவர்களை ஏற்றுக் கொண்டு அங்கே போக வேண்டியது தானே? என்று கேட்டுவிட்டு உடனே இல்லை உனக்கு நான் தான் வேண்டும் போல் என்ற தோரணையில் பேசுவாள்.
இவைகளின் மூலம் மிகத் தெளிவாக நந்தினி வீர பாண்டியனின் காதலி தான் என்பது தெளிவாகின்றது.
வீர பாண்டியன் ஆட்டத்தில் இருந்து விலகி விட்டாலும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் வந்தியதேவன் கூறிய கூற்றுக்களை முதல் பதிவில் பார்த்தோம். இனி வரும் அடுத்த பதிவில் அவர்களின் கூற்றை ஆராய்ந்து விளக்கலாம். அதற்கு அடுத்து நந்தினியின் தந்தை யாராக இருக்க முடியும், ஜி அவர்கள் கூறியது போல் பைத்தியக்காரன் தந்தையாக இருக்க எவ்வளவு சாத்தியக்கூறுகள் உள்ளது என்பனவற்றை விரிவாக பார்க்கலாம்.

Sunday, June 22, 2008

நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? சர்ச்சை 3 பொன்னியின் செல்வன்

முதல் பதிவு : நந்தினி - வீரபாண்டியன் உறவு சர்ச்சை
இரண்டாம் பதிவு : நந்தினி வீர பாண்டியனின் காதலியா? சர்ச்சை 2
சென்ற இரண்டு பதிவுகளாக நந்தினி, வீரபாண்டியனுக்கு மகளா, காதலியா என்பதற்கான சாத்தியக் கூறுகளைப் பார்த்தோம். இதில் இரண்டாவது பகுதியில் ஆதித்தன், நந்தினி, ரவிதாசன் ஆகியோரின் கூற்றை வைத்து வீரபாண்டியனின் காதலி தான் நந்தினி என்பதை நிரூபிக்க முயற்சித்தோம். இந்த பகுதியில் முதல் பகுதியில் வந்த நந்தினி வீரபாண்டியனின் மகள் எனக் கூறும் பெரிய பழுவேட்டரையர், மற்றும் வந்தியதேவனின் கூற்றுக்களை ஆராய்வோம்.
முதன் முதலில் நந்தினி வீரபாண்டியனின் மகள் என வரும் இடம் பெரிய பழுவேட்டரையர் விசாரணை மண்டபத்தில் கூறுமிடம். அதைத் தொடர்ந்தே வந்தியதேவன் மற்ற இடங்களில் அதைக் கூறுகிறான். இனி அந்த இரண்டு விஷயத்தையும் பார்க்கலாம்.
1. பெரிய பழுவேட்டரையர் விசாரணையில் கூறியது.

////மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எந்தப் பெண்ணின் முகலாவண்யத்தைக் கண்டு மயங்கி மோக வலையில் வீழ்ந்து அவளை என் அரண்மனையில் சர்வாதிகாரியாக்கி வைத்திருந்தேனோ, அவள் வீரபாண்டியனுடைய மகள்! அவள் வாயினால் இதை ஆதித்த கரிகாலரிடம் சொல்லியதை நான் என் காதினால் கேட்டேன். வீரபாண்டியனை ஆதித்த கரிகாலர் கொன்றதற்குப் பழிக்குப்பழி வாங்கவே பழுவூர் அரண்மனைக்கு அவள் வந்திருந்தாள். அதற்குத்தான் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள்.///
ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய விசாரணையில் தானாக முன் வந்து ஆதித்தனைக் கொலை செய்ததாக பெரிய பழுவேட்டரையர் கூறிவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்கின்றார். இந்த சூழ்நிலையில் தான் அவர் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் எனக் கூறுகின்றார். இந்த கூழலை ஆராய்ந்தால் பெரிய பழுவேட்டரையர் விசாரணைக்கு வரும் போது அவரது மனநிலை கீழ்க்கண்டவற்றால் கலங்கிப் போய் இருந்தது.
அ. சோழர்களை அழிக்க நினைத்த நந்தினியை மணந்தது
ஆ. நந்தினியை தஞ்சை அரண்மனைக்குள்ளேயே விட்டது
இ. பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் தனது அரண்மனைக்குள் வந்து சென்றது.
ஈ. அரண்மனை பொக்கிஷத்தில் இருந்து அவர்களுக்கு உதவி செய்தது
உ. சோழ வம்சத்திற்கு துரோகம் செய்து சோழன் அல்லாத மதுராந்தகனுக்கு பட்டம் சூட்ட நினைத்தது.
ஊ. மதுராந்தகனுக்கு பட்டம் சூட்டுவதாக கூறினாலும் உள்மனதில் மன்னனாகும் ஆசையை தெரிந்தோ தெரியாமலோ வளர்த்துக் கொண்டது.
எ. நந்தினியின் மீதும், அவளைத் தேடி வருபவர்கள் மீதும் சின்ன பழுவேட்டரையர் சந்தேகத்தை எழுப்பியும் அதை நம்பாமல் நிராகரித்தது.
ஏ. தனது செயல்களால் சோழ சக்கரவர்த்தியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியது,
ஐ. சோழ நாட்டின் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தனக்கு முன்னால் கொலை செய்யப்பட்டதை தடுக்க இயலாதது.
ஒ. ஈழத்தில் இருந்த சோழப்படைகளுக்கு உணவு, ஆயுதங்கள் அனுப்புவதிலு சுணக்கம் காட்டியது...........
இப்படி தனது குலமும், தாமும் செய்திருந்த சபதங்களுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டு மனம் வெறுத்து போய் இருந்தார். அதற்கு தண்டனையாக தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற மனநிலையிலேயே அங்கே வந்திருந்தார். தான் செய்த பாவமான காரியங்களுக்கு பரிகாரமாக வந்தியதேவன் மீது இருந்த ஆதித்த கரிகாலன் கொலைப் பழியை தன் மீது பொய்யாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தார். ஏனெனில் வந்திய தேவனை சோழ இளவரசி குந்தவை காதலித்து வந்தாள். தாம் தற்கொலை செய்வதற்கு முன் வந்தியதேவனை விடுவித்து இதற்கெல்லாம் பரிகாரம் தேடவே நினைத்திருந்தார்.
பொய் சொல்ல வேண்டுமென்று முன்னரே தீர்மானம் செய்து வந்த சூழலில் தான் பெரிய பழுவேட்டரையர் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் என்று சொல்கிறார். ஏற்கனவே பொய்களைச் சொன்னவர் இதையும் பொய்யாக சொல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு கீழ்கண்ட காரணங்களையும் கூறலாம்.
I) நந்தினி அவருடைய மனைவி. அவள் மீது அவர் மிகுந்த அன்பை வைத்திருந்தார், அவள் வீரபாண்டியனின் மனைவி என்று சொல்லி வந்த நிலையில், அவன் இறந்த பிறகு அந்த கருத்தை மாற்ற நினைத்திருக்கலாம்.
II) நந்தினியின் தந்தை யார்? என்று வேறு யாருடைய பெயராவது வருவதன் மூலம் தற்போதைய சோழ இராஜ்ஜிய பிராச்சினைகளில் குழப்பங்கள் வரலாம்.
III) நந்தினி பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்பட்டது வெட்ட வெளிச்சமாகி, அவர்களுடனே அவள் சென்றுவிட்டதாக செய்தி வரவிய நிலையில், அவள் வீரபாண்டியனின் மகள், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுக்கு அரசி என்று சொல்வதன் மூலம் அவளது நடத்தைக்கு மக்கள் மத்தியில் ஏற்ப்பட்டுள்ள களங்கத்தை போக்கவும் நினைத்திருக்கலாம்.

2. வந்தியதேவன் குந்தவையிடம் கூறியது

///குந்தவை : "நந்தினி வீர பாண்டியனின் மகள் என்பது உண்மையாயிருக்குமா?"

வந்தியத்தேவன் : "நந்தினி அவ்வாறு ஆதித்த கரிகாலரிடம் கூறியதை என் காதினால் நானே கேட்டேன். பெரிய பழுவேட்டரையரும் கேட்டார்.///
வந்தியதேவனிடம் குந்தவை கேட்கும் போதி இதைக் கூறுகிறான். வந்தியதேவன் இயற்கையாகவே கொஞ்சம் புனைந்து கூறுவதில் வல்லவன். பெரிய பழுவேட்டரையர் விசாரணையில் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் எனறு சொல்லும் வரை வந்தியதேவன் யாரிடமும் இதை சொல்லவில்லை. இதற்கு பிறகே ஆமாம் போட துவங்கியுள்ளான். அருள்மொழியிடம் கூட கூறவில்லை. வந்தியதேவைப் பொறுத்தவரை எப்படியாவது சிறையில் இருந்து தப்பி ஈழத்திற்காவது ஓடி விட வேண்டுமென்ற நிலை தான் இருந்தது. கொலை குற்றத்தை சட்டபூர்வாமாகவோ, நேர்மையாகவோ சந்திக்க அவன் விரும்பவில்லை. எனவே தான் பாதாளச் சிறையில் இருந்து தப்புகிறான். எனவே பெரிய பழுவேட்டரையர் சொன்னதை வழிமொழியும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். உண்மையில் நந்தினி வேறு பெயரைக் கூறி இருந்து, பழுவேட்டரையர் சொன்னது பொய் என்று இவன் கூறினால் அவர் அடுத்து சொன்ன வந்தியதேவன் குற்றவாளி இல்லை எனக் கூறியதும் பொய்யாக ஆகி விட வாய்ப்பு ஏற்ப்பட்டு விடும். பெரிய பழுவேட்டரையர் தற்கொலைக்கு முயன்று விட்ட நிலையில் இதை அப்படியே தொடர்ந்தால் பிரச்சினைகள் ஏதும் இருக்காது என நினைத்து இருக்கலாம்.

வந்தியதேவன், பெரிய பழுவேட்டரையர் இருவரின் நிலை

இருக்கலாம். கொலை நடந்த களத்தையும் கொஞ்சம் பார்த்தால் இவர்கள் இருவரும் சொலவது பொய் என்று மிகத் தெளிவாக விளங்கும். சம்பூவரின் அரண்மனையில் நந்தினி இருந்த அறையில் ஆதித்தனும், நந்தினியும் கடும் வாக்குவாதத்தில் இருக்கின்றனர். அப்போது வந்தியதேவன் நெற்களஞ்சியத்திற்குள் ஒளிந்து கொண்டுள்ளான். எனவே அவர்களுக்கும் வந்தியதேவனுக்கும் இடையே தடுப்பு உள்ளது. மேலும் பெரிய பழுவேட்டரையர் வந்தியதேவனுக்கு பின்னால் உள்ளார். மிக அருகில் என்றால் வந்தியதேவனுக்கு தெரிந்து போய் இருக்கும். அவர் வருவதை உணராதவனாகத் தான் வந்தியதேவன் இருந்துள்ளான். எனவே அவர் கொஞ்சம் தூரத்திலேயே இருந்துள்ளார். இந்த சூழலில் தான் நந்தினி ஆதித்தனிடம் தனது தந்தை யார் எனக் கூறுகிறாள்.

///நந்தினி ஆதித்த காரிகாலரை மிக நெருங்கி அவர் காதண்டை மிக மெல்லிய நடுங்கிய குரலில் "என்னைப் பெற்ற தந்தை... தான்!" என்று கூறினாள். கூறிவிட்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.///
வந்தியதேவனும், பெரிய பழுவேட்டரையரும் இருக்கும் தூரத்தைக் கணக்கில் கொள்ளும் போது நந்தினி காதருகே சென்று மெல்லிய குரலில் சொன்னது அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்ப்பே இல்லை. அவ்வாறு கேட்டிருந்தாலும் அதை அவர்கள் தவறாக புரிந்திருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே தான் வந்தியதேவன் குந்தவையிடம் அதைக் கூறும் போது கூட சான்றுக்கு பெரிய பழுவேட்டரையரையும் துணைக்கு அழைக்கிறான்.

///குந்தவை : "நந்தினி வீர பாண்டியனின் மகள் என்பது உண்மையாயிருக்குமா?"

வந்தியத்தேவன் : "நந்தினி அவ்வாறு ஆதித்த கரிகாலரிடம் கூறியதை என் காதினால் நானே கேட்டேன். பெரிய பழுவேட்டரையரும் கேட்டார்.///
அழைக்கிறான். எனவே பெரிய பழுவேட்டரையரும், வந்தியதேவனும் கூறியது பொய், நந்தினியின் தந்தை வீரபாண்டியன் அல்ல. இரண்டாவது பதிவில் கூறியபடி வீரபாண்டியன் நந்தினி காதலன் தான் என்பது தெளிவாகின்றது.

அப்படியானால் நந்தினியின் தந்தை யார் என்ற கேள்வி இன்னும் உள்ளது? பொதுவாக வாசகர்கள் மத்தியில் வரும் சந்தேகத்தின் படி மூவர் இந்த இடத்தில் உள்ளனர்.
1. வீரபாண்டியன்
2. சுந்தர சோழன்
3. பைத்தியக்காரன் என அழைக்கப்படும் கருத்திருமன்
வீரபாண்டியனும், சுந்தர சோழரும் தந்தை இல்லை என முடிவானதால் அவர்களை விட்டு விட்டு கருத்திருமன் தான் தான் தந்தை என ஆழ்வார்க்கடியானிடம் கூறீயதாக வருவதை அடுத்த பதிவில் ஆராயலாம்.

டிஸ்கி : இது முழுக்க முழுக்க பொன்னியின் செல்வனின் ரசிகர்களுக்காக எழுதப்படுவது. எனவே மற்றவர்கள் ஏமாற்றமாக உணராதீர்கள். நீங்களும் பொன்னியின் செல்வன் படித்து விட்டு வந்து இந்த ஜோதியில் கலந்து கொள்ளுங்கள். பொன்னியின் செல்வன், தமிழறிந்தவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய சரித்திர நாவல்.
இணையத்தில் நண்பர் பொன்வண்டின் கூகுள் பக்கத்தில் சுலபமாக படிக்கலாம்.
http://yogeshmsc.googlepages.com/kalkinovels.html

Saturday, June 21, 2008

பொன்னியின் செல்வன் நந்தினி பின்னூட்டமே பதிவாய்...

பொன்னியின் செல்வனில் ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்.
கடந்த மூன்று பதிவுகளாக ( முதல் பதிவு , இரண்டாம் பதிவு, மூன்றாம் பதிவு )நான் எழுதிய பதிவுகள் மற்றும் அதற்கு வந்த பின்னூட்டங்கள் ஆகியவை பொன்னியின் செல்வன் ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல மறு நினைவூட்டலாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மூன்றாவது பதிவில் பின்னூட்டமாக இடவேண்டியது இங்கு பதிவாக இட வேண்டி வருகின்றது. கடந்த சில நாட்களாக இங்கு பார்வையாளர்களாக வந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நான் எந்தவிடயத்தை வழியுறுத்தி கூறுகிறேன் எனபதை தெளிவு படுத்த வேண்டும் என்பதற்கே...... :) சிலருக்கு போரடிப்போது போல் தோன்றினாலும் வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற தாரக மந்திரத்தை கைக்கொண்டு இதைத் தொடர்கிறேன்.....இனி...

நந்தினி வீரபாண்டியனின் தந்தை என்ற வாதத்திற்கு சான்றாக வந்தியதேவன் மற்றும் பெரிய பழுவேட்டரையர் ஆகிய இருவரின் கூற்றுக்களே காட்டப்படுகின்றது. இவர்கள் இருவரும் கேட்டதாக சொல்வது ஒரு இடத்தில் மட்டுமே. அது ஆதித்த கரிகாலன் கொலைக்களம். இவர்கள் இருவரும் பொய் சொல்லி இருக்கு நிறைய வாய்ப்பு உள்ளது என மூன்றாம் பதிவில் கூறியுள்ளேன். அதே போல் அவர்கள் இருந்த இடமும், நந்தினி காதண்டை சொன்ன விதமும் இவர்கள் இருவரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை நிரூபிப்பதாக அமைகின்றது. இதை மேலும் விளக்குகிறேன்.இந்த 'மாதிரி படத்தை' பார்த்தால் கொஞ்சம் விளங்கலாம். யாழ்களஞ்சியத்தின் கதவுக்கு பின்னால் வந்தியதேவன் உள்ளான். அவனுக்கு பின்னால் பெரிய பழுவேட்டரையர் வருகிறார். வந்திய தேவன் உணராத தூரத்தில் பெரிய பழுவேட்டரையர் இருக்கிறார். நந்தினி ஆதித்த கரிகாலனின் காதருகே வந்து சொல்கிறார். வந்தியதேவனை வீழ்த்தி விட்டு வரும் பெரிய பழுவேட்டரையர் கத்தியை நந்தினியை நோக்கி வீசுகிறார்.
///இதை வீசி எறிந்தவன் நானேதான்! இந்த என்னுடைய வலது கரந்தான்! சோழ சக்கரவர்த்திகளுக்கு முடிசூட்டிய பரம்பரையில் வந்த இந்தக் கரந்தான் கத்தியை எறிந்தது. ஆனால் இளவரசர் கரிகாலர் மீது எறியவில்லை, நந்தினியின் பேரில் எறிந்தேன். என்னை மோகவலையில் ஆழ்த்தித் துரோகப் படுகுழியில் வீழ்த்திய அந்த மாயப் பிசாசைக் கொன்றுவிட எண்ணி எறிந்தேன்; குறி தவறிக் கரிகாலர் மீது விழுந்தது!///

சிறந்த போர் வீரன் தன்னிடம் உள்ள பிச்சுவா கத்தியை எதிரியை நோக்கி வீசி எறிந்து கொல்ல வேண்டுமென்றால் எவ்வளவு தூரம் இருக்க வேண்டுமென்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இவ்வளவு தூரத்தில் இருந்த பெரிய பழுவேட்டரையர், நந்தினி காதருகே சொன்னதை கேட்க முடிந்தது எனபது இயலாத காரியம். கல்கி தனது கருத்தில் மிகத் தெளிவாகவே காட்சிகளை அமைத்ததைக் காண முடிகின்றது.

அடுத்து வீர பாண்டியனின் காதலி என்பதற்கு நான் வைத்த ஆதாரங்களில் எழுந்த சந்தேகங்கள்....
1. பூங்குழலியின் கருத்து...
அதாவது ஆதித்த கரிகாலம் வீர பாண்டியனை கொலை செய்யும் போது நந்தினியின் மன்றாட்டத்தை சரியாக கவனிக்க வில்லை. நந்தினி தந்தையை விட்டுவிடு என்றதை போர், கொலை வெறியில் காதலன் என்று தவறாக எண்ணி விட்டான் என்பது.. சிறந்த வாதம். இதை தவறு என நிரூபிக்க வேண்டியது எனது கடமை....
ஆதித்த கரிகாலன் மூன்று முறை வீரபாண்டியன் சம்பந்தமாக பேசி நந்தினியை சந்தித்துள்ளான்.
அ. வீர பாண்டியன் கொலைக்களம்
ஆ. பழவூர் அரண்மனையில்
இ. கடம்பூர் அரண்மனையில் கொலை செய்யப்படுவதற்கு முன்னால்...

அ. வீரபாண்டியன் கொலைக்களம்

/// நான் தட்டுத் தடுமாறி, 'உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவன் உயிரைக் காப்பாற்றும்படிக் கேட்கிறாய்?' என்றேன்.

'இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்து கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்!' என்றாள் நந்தினி. ///


ஆ. பழவூர் அரண்மனையில்

மேற்கண்டதை ஆதித்தன் நேரடியாக பார்த்திபேந்திரனிடம் கூறுகிறான். இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் வீர பாண்டியன் கொலை நடந்து பல நாட்கள் கழித்தே நந்தினியை ஆதித்தன் சந்திக்கின்றான். அவளிடம் சென்று வீர பாண்டியன் உடனான காதலைப் பற்றிக் கேட்கிறான்.

///என் அன்பை நிராகரித்தது பற்றியும், வீரபாண்டியனைக் காதலித்தது பற்றியும் அவள் மீது நான் குற்றம் சாட்டினேன். கிழவர் பழுவேட்டரையரை மணந்தது பற்றியும் குத்தலாகப் பேசினேன்.///

உண்மையில் அவள் வீர பாண்டியனை தந்தை என்று முதலில் சொல்லி இருந்தால் “ தூத்தேறி நாயே! நான் தந்தை என்று சொன்னது உனக்கு கொலை வெறியில் காதலன் என்றா கேட்டது?” என்று சொல்லி இருப்பாள். ஆனால் நந்தினி சொன்னது

///'இளவரசே! முதலில் தாங்கள் என் காதலைக் கொன்றீர்கள்; பிறகு என்னைக் காதலித்தவனை என் கண் முன்னால் கொன்றீர்கள் /

(கவனிக்க : இந்த இடமும், வீர பாண்டியன் கொலைக்களமும் வேறு) ஆனால் நந்தினி நொந்து போனவளாய் இருந்தாலும் தன் காதலனைக் கொன்றதை தெளிவாகக் கூறுகின்றாள். இந்த பழவூர் அரண்மனைக்கு ஆதித்தன் சென்றது, பேசியது பூங்குழலி மற்ற யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஆதித்தன் சென்ற விதம் அப்படி

///பழுவேட்டரையர் ஊரில் இல்லை. அவருடைய அரண்மனையில் என்னைத் தடுப்பாரும் இல்லை; எனக்கும் நந்தினிக்கும் ஏற்பட்டிருந்த பழைய சிநேகிதத்தைப் பற்றி அங்கே அறிந்தவர்களும் இல்லை. இளவரசுப் பட்டம் கட்டிக் கொண்ட ராஜகுமாரன் பழுவூர் அரண்மனை ராணிமார்களிடம் ஆசி பெறுவதற்காக வருவதாகவே நினைத்தார்கள்.///

2. நந்தினி தனியாக பேசிக் கொள்ளுமிடம்
இந்த இடமும் காதலி என்ற மனோபாவத்திற்கு வருவதற்கு காரணமான இடம். இங்கு நந்தினி தனியே பேசிக் கொள்கிறான். இதில் வீரபாண்டியனை பிரமையில் உணர்ந்து ‘அன்பே' என அழைக்கிறாள் எனக் கூறி இருந்தேன். 'அன்பே' என தந்தையையும் அழைக்கலாம் என்ற கருத்து பின்னூட்டத்தில் வந்துள்ளது. பாண்டிய நாட்டைச் சேர்ந்தவனானதால் இது எனக்கு புதிய கருத்தாக படுகின்றது. மேலும் தமிழைப் படித்து அறியாமல் அனுபமாக அனுபவிப்பவன் என்பதால் எனக்கு இதில் முழு திருப்தி இல்லை. அப்படியே கூறினாலும் எனக்கு கீழ்காணும் வினாக்கள் எழுகின்றன.

அ. அன்பே என்று தந்தையை அழைக்க முடியுமா?

ஆ. உன் அடியாளைத் தவிர வேறு யாருமில்லை! வா! என தந்தையைப் பார்த்து அழைக்க இயலுமா?

இ. சுவர்க்கத்தில் என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள்! அவர்களில் ஒருத்தியை............... என்ன? மாட்டேன் என்கிறாயா? இதில் புள்ளி உள்ள இடங்களை எதைப் போட்டு நிரப்ப இயலும்?

பதிவு மேலும் வளர்ந்து கொண்டே செல்வதால் இங்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Wednesday, June 18, 2008

இது தான் சூப்பர் ஸ்டார் :))))))))

ஹ்ரித்திக் ரோஷன்
...........................இன்று ...................... நாளை


கபில்தேவ்
...............................இன்று ...................... நாளை


யுவராஜ் சிங்
...............................இன்று ...................... நாளை


ஸ்டீவ் வாஹ்
...............................இன்று ...................... நாளை


சச்சின் டெண்டுல்கர்
...............................இன்று ...................... நாளை


ஷாருக்கான்
...............................இன்று ...................... நாளை


சொயிப் அக்தர்
...............................இன்று ...................... நாளை


சூப்பர் ஸ்டார் ரஜினி
...............................இன்று ...................... நாளை


சும்மா பேரைக் கேட்டாலே அதிரும்ல

Thursday, June 12, 2008

மெக்கா புனித பயணம் - சில நினைவுகள் - பின்லேடன் நுண்ணரசியல்

மத நம்பிக்கையுள்ள அனைவருக்கும் தாங்கள் புனிதமாக நம்பும் இடங்களுக்கு செல்வது என்பது ஒரு கனவாகவே இருக்கும். முஸ்லிம்களுக்கு புனித மக்கா பயணம் என்பது ஒரு மிகப் பெரிய இறைவனின் கருணை என்றே கூறலாம். அதிலும் இந்தியாவில் இருந்து செல்வது பணம், உடல்நலம் காரணமாக பலருக்கும் எட்டாக் கனியாகவே இருக்கும்.
முஸ்லிம்கள் புனித யாத்திரை மேற்கொள்வது என்பது மூன்று பள்ளிகளில் தொழுகைக்காக மட்டுமே இருக்கும். மக்கா, மதினா, ஜெருசலம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள பள்ளிகள் மட்டுமே நன்மையை நாடி செல்ல தகுதி படைத்தவை.
(இந்தியாவில் இருப்பவர்கள் அஜ்மீர், நாகூர், ஏர்வாடி என்று செல்வது தவறான வழிகாட்டல்களில் அடிப்படையில் நிகழ்வது... அதற்கும் இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இஸ்லாத்தின் அடிப்படையில் அங்கு செல்வது பாவமான காரியமாகும்.)

அப்படிப்பட்ட மக்காவிற்கு செல்லும் வாய்ப்பு இறைவனின் அருளால் சமீபத்தில் 2002 ல் துபாயில் இருக்கும் போது கிடைத்தது. சின்ன (?) வயதில் ஹஜ் செய்யும் நோக்கத்தில் அங்கிருந்து சவுதி சென்று ஒரு மாதம் தங்கினோம். மீண்டும் இங்கு வரும் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சிந்தினையில் தான் அங்கிருந்து திரும்பினோம்.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

2005 வரை துபாயில் ஆணி பிடுங்கி விட்டு, ஒரு வருடம் ஊரில் ஆணி பிடுங்குவதில் தோல்வி அடைந்து மீண்டும் வந்து சேர்ந்த இடம் சவுதி. அதிலும் மக்காவிற்கு மிக அருகில் வேலை அமைந்து இரண்டு வருடமாகப் போகின்றது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறை உம்ரா பயணம் மேற்கொள்ள முடிகின்றது.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

இப்போது சவுதியில் வெயில் காலம் ஆரம்பமாகி விட்டது. சவுதி மன்னர் குடும்பம், பணியாளர்கள் வெப்பத்தில் இருந்து தப்பிக்க நாங்கள் இருக்கும் மலைப்பகுதி மாளிகைக்கு வரத் தொடங்கி விட்டனர். எனவே ஆணிகளால் முழி பிதுங்கி நிற்கிறோம்.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

கடந்தவாரம் புதன்கிழமை இரவு மக்கா பயணம் மேற்கொண்டோம். வியாழன் வெள்ளிகளில் விடுமுறை என்பதால் கூட்டமாக இருக்குமென்பதால் புதன்கிழமை இரவைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். எங்கள் இடத்தில் வெப்பநிலை 95 டிகிரி என்றால் மக்காவில் 110 இருக்கும். எனவே இரவோடு இரவாக சென்று திரும்புவது வழக்கம். பயணம் சிறப்பாக இருந்தது.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

மக்கா பள்ளியைச் சுற்றி கிழக்கே 500 மீட்டர் தூரத்திற்கு இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பள்ளி விஸ்தரிப்பு பணிகள் நடக்கின்றன. அதே போல் பள்ளியில் உள்ளே சயி செய்யும் இடங்களிலும் விஸ்தரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

புதன் கிழமை என்பதால் கூட்டம் குறைவாக இருந்ததால் தவாப், தொழுகை, சயி போன்றவைகளை சுலபமாக நிறைவேற்ற முடிந்தது. மனமும் லேசாக இருந்தது.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

ஈரான், இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து நிறைய பேர் உம்ரா வந்திருக்கின்றனர். அவர்கள் மொத்தமாக இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபடுவது ரசிக்கும்படி இருக்கின்றது.

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

சிறு குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் வந்திருக்கின்றனர். அவர்களில் சேட்டைகளை பார்க்கும் போது, காலடி ஓசை கேட்டவுடனே ஓடி வரும் மகனின் நினைவு வந்தது,... :(

۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞

சவுதியில் உள்ள இரண்டு புனிதத் தளங்களிலும் பராமரிப்பு பணிகளை பல ஆண்டுகளாக மேற்கொள்வது பின்லேடன் குழுமம் தான். அவர்களில் முக துரிதமாக பணிகள் பிரமிக்க வைக்கும். இப்போது பணியாளர்களில் சீருடைகளில் இருந்த பின்லேடன் குழுமத்தில் பெயரும், அவர்களில் லோகோவும் துணி வைத்து தைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. உலக எண்ணைய் வளத்தைத்தின் பெரும் பகுதியை தன்னகத்தே கொண்டுள்ள சவுதி அரசின் நுண்ணரசியலின் இன்னொரு பக்கம் சிரிப்பைத் தான் வரவழைத்தது.

Monday, June 9, 2008

ஜிவாஜி வாயிலே ஜிலேபி

கி.பி 2099 ஜூன் 9 ந்தேதி காலை 6:15
அப்போது தான் தனது அபிமான நடிகையுடன் கனவில் சாட்டிங் செய்து கொண்டிருந்தான். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அலாரம் விடாமல் அடிக்க ஆரம்பித்தது. கனவு கலைந்த எரிச்சலில் கட்டிலை விட்டு இறங்கியதும், அலாரம் தானாக அடிப்பதை நிறுத்த, கட்டில் தானாக மடங்கி சுவருக்குள் சென்றது. ஆயாசமாக உணர்ந்தாலும் இன்னும் ஒரு மணி நேரம் தூங்க அவனுக்கு அனுமதி கிடையாது. இன்னும் 5 நிமிடத்தில் ஷவரில் தண்ணீர் வர ஆரம்பமாகி விடும். 4 நிமிடம் 20 நொடிகள் மட்டுமே அவனுக்கு குளிக்க அனுமதி... விரைவாக தயாராக ஆரம்பித்தான்.
குளித்து விட்டு வர அவனுடைய அறிவிப்பு பலகையில் அன்று அணிய வேண்டிய ஆடையின் அறிவிப்பு இருந்தது, அவனுக்கு முற்றிலும் பிடிக்காத நிறம்... எரிச்சலுடன் அணிந்து கொண்டான். தானியங்கி கதவு தானாக திறக்க வீட்டை விட்டு வெளியே வந்ததும் கதவு தானாக மூடிக் கொண்டது. தானியங்கி லிப்ட் மூலம் கீழே வந்தான். கட்டிடத்தின் வெளியே அவனுக்கான வாகனம் தயாராக இருந்தது. கடிகாரத்தைப் பார்க்க இன்னும் 2 நிமிடம் 40 வினாடிகள் இருந்தது. கட்டிட முகப்பில் இருந்த தானியங்கி உணவு இயந்திரத்தில் தனது அடையாள அட்டையை செருக அது அன்றைய காலை உணவாக 4 மாத்திரை கொண்ட அட்டையை துப்பியது. நேற்று இணையத்தில் பார்த்த நூற்றாண்டுக்கு முந்திய தோசை, இட்லி போனறாவைகளை நினைத்து நொந்து கொண்டே அட்டையைப் பிரித்து வில்லைகளை விழுங்கினான்.
இங்கு இவனைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடலாம். இவன் பெயர் JBRQA762118456. வயது 26. அரசாங்கத்தால் இவன் கருவில் இருக்கும் போதே இந்த பெயர் வைக்கப்பட்டுவிட்டது. மேலும் இவனது படிப்பு, வேலை, திருமணம் மற்றும் மரணம் அப்போதே முடிவு செய்யப்பட்டு விட்டது. இப்போது செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்காக பூமியில் பொட்டி தட்டுகிறான்.
தனது வாகனத்திற்கு அருகில் வந்த போது ரோபோ ஓட்டுனர் காலை வணக்கம் சொல்லியது. வாகனத்தில் ஏறி அமர்ந்ததும் அங்கிருந்த டிஜிட்டல் போர்ட் இன்னும் வாகனம் 20 வினாடிகளில் கிளம்பும் என அறிவித்தது. அவன் அசதியாக கண்ணை மூடியதும் சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த குதிரை வண்டி, மாட்டு வண்டிகளில் நினைவு வந்தது. வாகனத்தில் குலுக்கலில் கண்ணைத் திறந்த போது பூமியில் இருந்து வாகனம் 4000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. வான் வெளியிலும் வாகனப் போக்குவரத்து மிகைத்து இருந்ததை பார்க்க முடிந்தது. ரோபோ இன்னும் 17 நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்து விடலாம் என அறிவித்து விட்டு செய்திகளை வாசிக்கத் தொடங்கியது. இதை நிறுத்தவும் இயலாது. அரசாங்கம் கண்டிப்பாக வாகனத்தில் காலையில் செல்லும் போது செய்திகளை கேட்பதை கட்டாயமாக்கி விட்டது. செவ்வாயின் வட துருவத்தில் உள்ள பனிக்கட்டிகளை உருக்கி தண்ணீராக மாற்ற செவ்வாயின் மீது ஏற்படுத்தப்பட்டு வரும் சூரிய வெப்ப தடுப்பான்களைப் பற்றியும், 47 வது கேலக்ஸியின் சூரியன் தனது ஆர்பிட்டில் இருந்த கோள்களை தனக்குள் கவர்ந்து பெருத்து வெடித்துச் சிதறியதையும், கட்டாய மரண ஓய்வை 65 வயதிலிருந்து 64 வயதாக மாற்ற எடுக்கப்பட்டு வரும் ஆய்வுகள் குறித்தும், தமிழ் தான் நிலையான சிறந்த மொழி என்று ஒரு தமிழறிஞரின் ஆய்வைப் பற்றியும் ரோபோ கூறிக் கொண்டே வந்தது.
சரியாக 17 வது நிமிடம் அவனது வாகனம் அலுவலகத்தை வந்து அடைந்தது. அவனது இருக்கையில் அவன் அமர்ந்ததும் கணிணித் திரை தானாக ஒளிர்ந்தது. இணைய உலாவியைத் திறக்க அது அவனது உலாவியின் முதல் பக்கமான தமிழ்மணம்.காமிற்கு சென்றது. வழக்கம் போல் அது மெதுவாக திறக்க அடுத்த டேபில் (TAB) மின்னஞ்சலைப் பார்க்கலானான். வழக்கம் போல் நேற்று போட்ட பதிவுக்கு செவ்வாயில் பணி செய்து வரும் அவனது இணைய நண்பன் மீ த பர்ஸ்ட் என்று ஆரம்பித்து 10 கமெண்ட்களைப் போட்டு கும்மி அடித்திருந்தார். பூமியின் வேறு பகுதியில் இருந்து ஒருவர் நல்லா இருக்கு என்று டெம்ப்ளேட் பின்னூட்டம் இட்டு இருந்தார். நிலாவில் கட்டுமானப் பணியில் இருக்கும் ஒரு நண்பர் தொடர் பதிவு விளையாட்டுக்கு டேக் அழைப்பு விடுத்திருந்தார்.
தலைப்பு : ஜிவாஜி வாயிலே ஜிலேபி

டிஸ்கி : இது ஜீவ்ஸ் போட்ட ஜிவாஜி வாயிலே ஜிலேபியில் ஆயில்யனை டேக் செய்திருந்தார். ஆயில் நம்மை டேக் செய்ய நாம் தொடர் பதிவுக்கு டேக் செய்வது
1. அண்ணன் மங்களூர் சிவா
2. அண்ணன் நிஜமா நல்லவர்
3. அண்ணன் 'காதல் கறுப்பி' தமிழன்

பொன்னிற தேவதைக்கு பிறந்தநாள்

நீ மிக அருகில் இருந்த போது தூரமாக உணர்ந்தேன்.....
இப்போது தூரமாக இருக்கிறாய்..
மிக மிக அருகில் உணர்கிறேன்.....


சமீபத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்த ....
பொன்னிற தேவதையே!....
'சிகப்பி' நண்பியே! உனக்கு இன்று பிறந்தநாள்......
நீ மறந்திருந்தாலும் நான் மறப்பதில்லை..
உன் பிறந்தநாளை...
எங்குள்ளாய் எனத் தெரியாததால் இங்கு
எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்...
ஒரு பாடலையும் காணிக்கையாய்.....


தோழா தோழா, கனவுத் தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சிக்கணும்
நட்பைப் பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

உன்னை நான் புரிஞ்சிக்கணும்
ஒண்ணொண்ணா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதலாகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது, நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது, நட்புக்குள் ஆண் பெண் தெரியாது

நட்பு என்னும் நூலெடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து

நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை

நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லிய உண்மை

நீயும் நானும் பழகுறமே காதலாகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

தனன னன தானா னானா .... ..... ...... ......

நீயும் நானும் வெகுநேரம் மனம் விட்டுப் பேசிச் சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி?
புரிதலில் காதல் இல்லையடி பிரிதலில் காதலைச் சொல்லுமடி!
காதல் காதல்தான் நட்பு நட்புதான், நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையான கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட பிரிந்தபின் ரணமாய் கொல்லும்

ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம்.....
ஆ இது கரெக்ட்
அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பாத்துக்கலாம்

தோழா தோழா, கனவுத் தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சிக்கணும்
நட்பைப் பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சிக்கணும் ஒண்ணொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம்.....
ஆ இது கரெக்ட்
அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பாத்துக்கலாம்

LinkWithin

Related Posts with Thumbnails