Wednesday, May 27, 2009

என்னத்தங்க எழுத..

கொஞ்சநாளா பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம் கருத்தை திணிக்க நினைக்கும் ஒன்றாக பதிவு எழுதுகின்றோமோ என்ற யோசனை வருகின்றது. அவரவர் மன திருப்திக்காக எழுதினாலும், பதிவு போட வேண்டும் என்பதற்காக எழுதுவதற்கும், நம் எழுத்தை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவும் பதிவு எழுதுவதற்கும் பல மடங்கு வித்தியாசம் இருப்பதாகவே உணர்கின்றேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Fireproof என்று ஒரு படம் பார்க்க நேரிட்டது. ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினைகள் அவர்களை விவாகரத்து வரை இட்டுச் செல்கின்றது. தீயணைப்பு பணியில் இருக்கும் அந்த அவனது தந்தை மகனையும், மருமகளையும் ஒன்றிணைக்க ஒரு 40 நாள் திட்டத்தை சொல்கின்றார்.. அதன் இறுதியில் என்ன ஆனது என்பது தான் அந்த ரம்மியமான கதை. எந்த சினிமாத்தனமும் இல்லாத படம்.

இதைப் பற்றி எழுதலாம் என்று எண்ணி இருந்த நேரத்தில் நம்ம நண்பர் குசும்பன் IMDB பார்த்து கதை எழுதுவது எப்படி என்று பதிவு வேறு போட்டு விட்டதால் அதை அப்படியே விட்டு விடுகின்றேன்... ;-)))


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





பல நாட்களாக பதிவு எழுதாமல் விட்டுள்ளதால் ஹிட்ஸ் கவுண்டர் காற்று வாங்குகின்றது. தினசரி 50 ஹிட்ஸ் வருகின்றது. எல்லாம் பொதுவாக கூகுள் தேடல் மூலம் வருபவர்களே அதிகமாக இருக்கின்றனர். தேடு பொறியின் குறிச் சொற்களைப் பார்த்தால் நமக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. நடிகையின் பெயர்களை குறிச் சொல்லாக இட்டு தேடப் பட்டு வருபவையே அதிகமாக இருக்கின்றன.


சில காலத்திற்கு முன் பதிவுலகில் மும்முரமாக இருந்த நேரம் பொன்னியின் செல்வன் பற்றி சில விஷயங்கள் எழுதி இருந்தேன். நந்தினிக்கும், வீர பாண்டியனின் இடையே உள்ள உறவு குறித்து.. இந்த பதிவுக்கும் கூகுள் தேடல் மூலம் ஹிட்ஸ் வருவது அதிகமாக இருக்கின்றது. நம்மளை மாதிரி பொன்னியின் செல்வன் பித்தர்கள் அதிகமாக இருப்பார்கள் போல உள்ளது.. ;-))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நமக்கு நுனிப்புல் மேய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். அது இலக்கியமா இருந்தாலும் சரி, அரசியலா இருந்தாலும் சரி. எனக்கு இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கு. பதிவைப் படிக்கும் போது முன்னால் உள்ள ஒரு பாராவைப் படித்துவிட்டு கீழே சென்று கமெண்ட்களைப் பார்த்து அதற்குத் தகுந்தாற் போல் கமெண்ட் போட்டு விட்டு சென்று விடுவேன்... நான் மட்டும் தான் இப்படியா? நம் மக்களும் இபப்டியான்னு சந்தேகம் வரும். அவ்வப்போது மக்களை டெஸ்ட் பண்ணி இதைக் கன்பர்ம் பண்ணிக்குவேன்.

முன்பு வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய ஒரு கவிதையைப் போட்டு கீழே இது பிரபல பதிவர் எழுதியது என்று எழுதி வைத்து இருந்தேன்.. எல்லாரும் அது என் கவிதை என்று நினைத்து பாராட்டி விட்டு சென்றனர். ஒரு சிறுகதை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதினேன்.... என்னை மாதிரியே எல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டுட்டு போய்ட்டாங்க... ;-))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கு ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன். தீம் ரெடி... கதை எப்ப எழுத முடியும்ன்னு தெரியல... பார்ப்போம்..

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html

படம் இணைப்பு : பிக்காசாவில் கிடைத்த படம்... அழகான இடத்தில் எல்லோரும் நினைவு கூறும் சைக்கிள் பழகும் படம். அழகா இருந்தது.

Wednesday, May 13, 2009

பரிசல், ராமலக்ஷ்மி இன்னும் பலருக்கும் வாழ்த்துக்கள்!

இன்று வலையுலக நண்பரும் எழுத்தாளருமான அண்ணன் பரிசலாருக்கு பிறந்தநாள். அவருக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வால் பையன் சொன்னது போல் இந்த வயசிலும் இளமையுடன் சுறுசுறுப்பாக இருக்கும் யூத் ஐகான் பரிசலார் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வுடன் திகழ வாழ்த்துக்கின்றோம்... ;-))

*******************************************************

பரிசலாரின் சிறுகதை இந்தவார ஆனந்தவிகடனில் வருகின்றதாம். அதற்கும் ஒரு சிறப்பான வாழ்த்துக்கள்.

*******************************************************


பெங்களூரூவைச் சேர்ந்த கவிஞர் ராமலக்ஷ்மி அக்காவின் முதல் சிறுகதை அச்சு இதழான கலைமகள் மாத இதழில் வெளி வந்துள்ளது. இதுவரை அவரது அழகான கவிதைகள் மட்டுமே அச்சு இதழ்களில் வந்த நிலையில் முதன் முதலாக அவரது சிறுகதை கலைமகள் இதழில் வந்ததில் நாம் அனைவரும் பெருமை அடைகின்றோம். அச் சிறுகதையைப் படிக்கவும் ,வாழ்த்தவும் இங்கே செல்லவும்.
http://tamilamudam.blogspot.com/2009/05/50.html

அவரது முத்துச்சரம் இணையதளம் 50 பதிவுகளை தொட்டுள்ளது. தேர்ந்தடுத்த பதிவுகளால் முத்துக்கள் போல் கோர்க்கப்பட்ட சரமாக இருக்கும் முத்துச்சரம் மேலும் இது போல் பல படைப்புகளைக் காண வாழ்த்துகின்றோம்.

*******************************************************

சக பதிவர்கள் நர்சிம், மற்றும் அதிஷா ஆகியோரின் படைப்புகள் சென்ற வார ஆனந்த விகடனில் வெளி வந்துள்ளது. அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

*******************************************************

பதிவர்களின் கூட்டங்கள் பொதுவாக இணையம் தொடர்பானதாகவே இருக்கும். முதன் முறையாக ‘நல்ல தொடல்! கெட்ட தொடல்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் பாலியல் மற்றும் மனோத்துவ ரீதியான பாதிப்புகளைப் பற்றி அலசி ஆராந்து, கலந்துரையாடிய ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நடைபெற்றது.

ஆரோக்கியமான இந்நிகழ்ச்சிக்கு வித்திட்ட, ஒருங்கிணைத்த, நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றிகளும், வாழ்த்துக்களும்... :)

*******************************************************
மேற்க்குறிப்பிட்டவை அனைத்தையும் ஏனோ நாங்களே செய்தது போன்ற பூரிப்பையும், பெருமையையும் தந்தது. கொஞ்சம் இறுமாப்பு என்று கூட சொல்லலாம்... எங்களை எல்லாம் ஒரே நல்ல நேர்கோட்டின் கீழ் இணைய உதவிய இணைய உலகிற்கும், தமிழ் மணத்திற்கும் சிறப்பு நன்றிகள்.

*****************************************************

சரி.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. இன்னைக்கு நம்ம ஊர்ல தேர்தல்.ஓட்டுப்ப் போட்டாச்சா? நமக்கு இருக்கும் ஒரே ஜனநாயகக் கடமை அதுதான்.. எல்லாம் போய் எந்த சால்சாப்பும் சொல்லாம ஓட்டுப் போட்டுட்டு வாங்க... நல்லதே நடக்கும். ஓட்டுப் போட்டு விட்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Monday, May 11, 2009

”இப்ப நான் எங்க இருக்கேன்?” “where is my shopping bags?"

(வாசிப்பதற்கு முன்..
நீல நிறத்தில் இருப்பது ஆங்கிலத்திலும், கறுப்பு நிறத்தில் இருப்பது தமிழிலும் இருப்பதாக நினைத்துக் கொண்டு வாசிக்கத் துவங்குங்கள்.. இது ஒருவகையான Anti-Post modernism வகையிலான முயற்சி. புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ;-)) அன்புடன் தமிழ் பிரியன்.)

ஜானுக்கு என்றைக்கும் இல்லாத ஒரு பரபரப்பு இன்னைக்கு இருந்தது. மதிய வேளைஅலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வேகமாக விரைந்து கொண்டு இருந்தார். வேகமாக நடந்ததால் கொஞ்சம் மூச்சிரைக்க ஆரம்பித்து இருந்தது. குளிரால் அனைவரும் நடுங்கிக் கொண்டே நடந்து கொண்டு இருந்தனர். வயசும் 55 ஐ தாண்டிக் கொண்டு இருக்கிறதே..... khyber pass road போக்குவரத்து வர வர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவே அவருக்குப் பட்டது. “ஆக்லாந்தின் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது” என முணுமுணுத்துக் கொண்டார். New Market பகுதியில் இருந்த ஒரு கடையில் பேரன் பேத்திகளுக்காக சில விளையாட்டுப் பொருட்களையும், திண்பண்டங்களையும் வாங்கிக் கொண்டார்.

மாயக்காளைக்கு அந்த அதிகாலை வேலையிலும் வேர்த்து ஒழுக ஆரம்பித்து இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் நேரம் என்பதால் தனது மாட்டு வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு இருந்தார். காலை நேரம் சீக்கிரமே புலர்ந்து கொண்டு இருந்தது. வெயில் வருவதற்குள் உசிலம்பட்டியை அடைந்து விட்டால் கீரைக்கட்டுகளை வேகமாக விற்று விடலாம் என்பது அவரது எண்ணம். கீரை கட்டுகளும், காய்கறிகளும், இரண்டு ஆட்டுக் குட்டிகளும் அவரது மாட்டு வண்டியை நிறைத்திருந்தது. இந்த இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் விற்று விட்டு, மகளுக்கு சீர் செய்து சமாளிக்க வேண்டும் என்பது மாயக்காளையின் எண்ணம்.


ஜானின் நடை Boston road Railway station ஐ நோக்கி விரைவாக இருந்தது... அவருக்கு Avondale அருகில் உள்ள வீட்டிற்கு ரெயிலில் செல்ல வேண்டிய அவசரம். கைகளில் இருந்த Shopping bag களின் கனம் வேறு அவரது நடைக்கு தடையாக இருந்தது. இருந்தாலும் அமெரிக்காவில் வசிக்கும் மகள் பேரன் பேத்திகளுடன் வருகிறாள் என்ற மகிழ்ச்சி அவரது நடையில் ஒரு மிடுக்கையே கூட்டி இருந்தது. சில நாட்களாக பராமரிப்பு வேலைகளால் பொழிவிழந்து இருந்த ரெயில் நிலையம் இப்போது கொஞ்சம் களையாக தெரிந்தது. அதே காரணத்திற்காக ரெயில் நிறுத்தப்பட்டிருந்த போது போது காரில் வந்து, பார்க்கிங்கிற்காக karangahape road க்கு ஓடிய நாட்களை நினைத்துக் கொண்டார்.

மாயக்காளையால் மோசமான ரோட்டால் மாடுகளை வேகமாக செலுத்த இயலவில்லை. வண்டி கன்னாபட்டி, செக்காபட்டியைக் கடந்து போய்க் கொண்டு இருந்தது. ரோடு போட்டால் ஒரே வருடத்தில் பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றது. எல்லாம் அரசியல்வாதிகளின் கமிஷன் செய்யும் வேலை என நினைத்துக் கொண்ட போது ஆத்திரமே வந்தது. தேர்தல் நேரத்தில் அவர்கள் செய்யும் கூத்தும் அவரின் கோபத்திற்குக் காரணம்.

ஜான் ரெயில் நிலையத்திற்கு அருகில் நெருங்கிக் கொண்டு இருந்த போதுதான் அது நிகழ்ந்ததது.. டமார் என்ற பலத்த சத்தம்.. எங்கிருந்தோ வேகமாக வந்த வண்டி அவரின் மீது மோதி அவரை வீழ்த்தியது.... Oh! My god என்ற அலறல் மட்டும் கேட்டது.




செங்க மங்கலாக காலைப் பொழுது புலர்ந்து கொண்டு இருந்தது. உசிலம்பட்டி ரெயில்வே கேட்டை மாயக்காளையின் மாட்டு வண்டி நெருங்கி இருந்தது. பின்னே கேட்ட ஹார்ன் சத்தத்தால் மீது சென்று கொண்டு இருந்த மாயக்காளை திரும்பிப் பார்த்த போது மிக வேகமாக ஒரு லாரி அவரது வண்டியை நோக்கி வந்து கொண்டு இருந்தது... லாரியின் பிரேக் பெயிலியர் என்பதை புரிந்து கொள்ள சில வினாடிகளே தேவைப்பட்டது. வேகமாக மாடுகளை முடுக்கி விட்டார்.. ஆனாலும் லாரி அதி வேகத்தில் மாட்டு வண்டியின் மீது மோதி வண்டியை தூக்கி விசிறி அடித்தது.. ஐயோ.. அம்மா என்ற அலறலுடன் மாயக்காளை தூக்கி விசிறியடிக்கப்பட்டிருந்தார்.

அவர் அரை மயக்கத்தில் விழித்துப் பார்த்த போது ரெயில்வே கேட்டுக்கு அருகில் கிடந்தார். அவருக்கு அருகில் கீரைக்கட்டுகளும், காய்கறிகளும் சிதறிக் கிடக்க ஆடு ஒன்று காயத்துடன் கதறிக் கொண்டு இருந்தது. அவர் வாழ்க்கையில் கண்டிராத வெயில் அவரைத் தாக்கிக் கொண்டு இருந்தது. வாய் இம்சையில் முணுமுணுத்தது "where am i" “where is my shopping bags?"

குளிரால் அவரது உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது... அவர் இதுவரை கண்டிராத ஒரு இடத்தில் காயங்களுடன் கிடக்க, ஆம்புலன்ஸின் சத்தம் அசரீரியாக கேட்டுக் கொண்டு இருந்தது.. அவரைச் சுற்றி சில பொம்மைகளும், சாக்லெட்களுடம் கிடக்க ஈணஸ்வரத்தில் முனங்கினார்.. “என்னோட மாட்டு வண்டி, ஆடு, மாடு எல்லாம் எங்க போச்சு?.. இப்ப நான் எங்க இருக்கேன்?”.

படங்கள் நன்றி : ப்ளீக்கர் இணையம்.

Friday, May 8, 2009

எங்கள் ஓட்டு ‘ஈழத் தாரகை’ அம்மா(ஜெ.)விற்கே!... வாசகர் கடிதம்.

கடந்த சில வாரங்களாக பதிவு ஏதும் எழுதவில்லை. ஏன் பதிவு எழுதவில்லையென்று கேட்டு, விசாரித்து இதுவரை 18 மொழிகளில் 14,28,332 கடிதங்கள் வந்த கடிதங்களைப் பற்றி இங்கு பேச வேண்டிய அவசியம் இல்லா விட்டாலும் 14,28,333 வது கடிதமாக கூட்டுத் தொகை 9 ஆக வந்த ஒரு கடிதத்தை உங்களுக்கு அப்படியே அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

திமுக அடிவருடி தமிழ் பிரியன் அவர்களுக்கு,


வருகின்ற 2009 மே 13 ந்தேதி இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள சூழலில் உங்களது பொன்னான வாக்குகளை தமிழக மக்களின் ஒரே இறுதி நம்பிக்கை ஜெ.விற்கு அதிமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடும்படிகேட்டுக் கொள்கின்றோம்.

அம்மா... இந்த பெயரைச் சொன்னதும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் அம்மா ஜெ. அவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். அன்றும், இன்றும், என்றும் ஈழ மக்களின் மேல் அக்கறை கொண்டுள்ள அம்மா அவர்கள் தற்போதைய தேர்தலுக்குப் பின் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

அதன்படி தேர்தல் முடிந்ததும் அம்மாவிடம் இருக்கப் போகும் 40 எம்.பி சீட்டுக்களை வைத்து அம்மா இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பார். அம்மாவின் பாசத்திற்குரிய ஒருவர் மட்டுமே இனி இந்தியாவில் பிரதமராக முடியும் என்ற தலையெழுத்து அமையும்.



புதிய இந்தியத் தலைமை அம்மாவின் காலடியில் அமைந்ததும், உடனே இந்திய ராணுவம் இலங்கையை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் களம் இறக்கப்படும். முழு இலங்கையும் இந்தியாவிம் காலடியில், அம்மாவின் ஆணைக்காக காத்திருக்கும். அம்மா ஆணையிட்டால் முச்சந்ந்தி முனுசாமி கூட பிரதமர் நாற்காலியில் அமர முடியும்.

அவ்வாறு அம்மாவின் காலடியின் கீழ் மத்திய அரசு அமைந்ததும், அம்மாவின் முதல் செயல்பாடே இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்புவது தான். இலங்கையில் சரிவை சந்தித்து வரும் விடுதலை போராட்ட வீரர்களுடன் இந்திய ராணுவம் இணைந்து முழு இலங்கையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அம்மா ஏற்பாடு செய்வார்கள். ராஜபக்‌ஷே சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அம்மாவால் அடைக்கப்படுவார்கள்.

இலங்கையில் ஜனாதிபதியாக மிஸ்டர் கிளீன் ஓ.பன்னீர்செல்வத்தை அம்மா நியமிக்கப்பார். அம்மாவால் தேசிய தலைவர், இலங்கையின் இராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவார். இளைய தளபதி கருணாவை, ஐரோப்பா கண்டத்திற்கான இலங்கைத் தூதராக நியமித்து எங்கிருந்து அடிவாங்கிக் கொண்டு வந்தாரோ அங்கேயே சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்க அம்மா வழி செய்வார்கள்.

இலங்கையில் கிழக்கு மண்டலத்திற்கு ரவுப் ஹக்கீமையும், வடக்கு மண்டலத்திற்கு பிள்ளையானையும் முதல் மந்திரியாக நியமித்து அம்மா அழகு பார்ப்பார்கள். அம்மாவின் ஆசியால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வெறும் 50 ரூபாயில் இரயில் பயணம் செய்ய சட்டம் இயற்றப்படும். A9 பாதை வழியாக செல்லும் தமிழர்களுக்கு எந்த சோதனையும் செய்யாமல் அம்மா பார்த்துக் கொள்வார்கள்.மலையக மக்களின் வசதிக்காக அனைத்து போகுவ்ரத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். அங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு முழு வரி விலக்கும், மானியமும் வழங்கப்படும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அம்மா ஏற்படுத்திய ஒற்றுமையைக் குலைக்க அம்மாவின் எதிரி அரசான மைனாடிரிட்டி திமுக அரசு முயற்சி செய்த காரணத்தால் அவ்வாட்சி கலைக்கப்படும். ஏழைகளின் உற்ற தோழி அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும். ஈழம் மற்றும் தமிழக மக்களிடையே உள்ள உறவை பிரிக்கவே சேது சமுத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை அம்மா அவர்கள் உணர்ந்துள்ளார்கள். எனவே மைனாரிட்டி கருணாந்தி அரசால் ஆழம் செய்யப்பட்ட சேது சமுத்திரம் முழுவதும் மணலால் நிரப்பட்டு இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே பஸ், இரயில் போக்குவரத்து அம்மாவால் விடப்படும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 90 களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கப்படும். அவர்களின் பழைய உடைமையான அவர்களின் வீடு, நிலம், வியாபாரம் அனைத்தும் அம்மாவின் பொற்கரங்களால் மீண்டும் வழங்கப்படும் . ஈழத்தில் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச உரம் போன்றவை அம்மாவின் கட்டளையின் கீழ் வழங்கப்படும். கரும்புக்கு டன்னுக்கு 10,000 ரூபாயும், நெல்லுக்கு கிலோவுக்கு 50 ரூபாயும் அம்மாவின் ஒப்புதலின் கீழ் வழங்கப்படும்.

புலம் பெயர்ந்து வறுமையில் வாடும் ஈழத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விரும்பினால் இலவசமாக வீடும், 5 ஏக்கர் நிலமும், 10 லட்சம் ரூபாயும் அம்மாவின் கருணையால் வழங்கப்படும்.

இலங்கைக்கான ஐ.நா. தூதராக வைகோவும், இந்தியத் தூதராக ராமதாஸூம் அம்மாவால் நியமிக்கப்படுவார்.

மேற்கண்ட நன்மைகளை செய்ய அம்மா முடிவு செய்து இருப்பதால் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுக்களை அதிமுகவின் கூட்டணிக்கு தரும் படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் ஈழத்தில் நீதியை நிலை நாட்டி தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கித் தந்து, ஈழ மக்களின் மனதிலும், சரித்திர புத்தகங்களிலும் நீங்கா இடம் பிடிக்கப் போகும் அம்மாவின் சீரிய பணியைப் பாராட்டி பெரியார் புத்தகங்களின் காவலர், கல்வி நிறுவனங்களின் தளபதி தமிழினத்தின் இளைய தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் அம்மாவுக்கு ஈழத் தாரகை என்ற பட்டத்தை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

வாழ்க அம்மா! வளர்க அதிமுக! ஓங்குக எம்.ஜி.ஆர் புகழ்!

இவண்
தலையைச் சொறிய எரியும் கொள்ளியைப் பயன்படுத்துவோர் சங்கம்.
Pirates of graveyard Nager AIADMK கிளை
Somalia.

டிஸ்கி 1 : கடிதத்தை படித்து விட்டு இது மண்டபத்தில் எழுதியது என்று பின்னூட்டம் போட்டால், அவர்கள் வைகோ விடம் தேம்பி தேம்பி முந்தானையில் மறைந்து அழுவது எப்படி என பயிற்சி அளிக்க அனுப்பப்படுவார்கள்.

டிஸ்கி 2 : மண்டபம் என்றால் என்ன? இராமேஸ்வரம் பக்கத்தில் இருக்கும் ஊரா? என்று கேட்பவர்கள் சில வினாடிகளில் நிறம் மாறுவது எப்படி என்று பயிற்சி எடுக்க மருத்துவர் ஐயாவிடம் அனுப்பப்படுவார்கள்.

படம் நன்றி : கீற்று இணைய தளம்