பதிவு எழுதி கண நாளாகி விட்டது. அவ்வப்போது பதிவு எழுத வற்புறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.. நம்மையும் இந்த உலகம் நம்புதேய்யான்னு இருக்கு.. ;-)))
3 நாட்களுக்கு பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாளுக்கான விடுமுறை. இப்போது தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். தியாகத் திருநாளில் தங்களால் இயன்றதை இறைவனுக்காக அறுத்து, ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் பங்கு செய்து கொடுக்க வேண்டும். தியாகத் திருநாளின் நாட்களில் மெக்காவில் உள்ள இடங்களில் ஹாஜிகள் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற இருப்பார்கள்.
இவை அனைத்தும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகங்களையும், அவர்களது குடும்பத்தினரின் தியாகங்களையும் நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளவை. ஒரு சராசரி மனிதனால் செய்ய இயலாத தியாகங்களை இப்ராஹீம் நபி அவர்கள் செய்தார்கள்.
இறைவனின் கட்டளைப்படி தனது மனைவியையும், மகன் இஸ்மாயிலையும், பாலைவனத்தில் அமைந்துள்ள, எந்த மனித சஞ்சாரமும் இல்லாத இடத்தில், தண்ணீர்,உணவு வசதிகள் இல்லாத இடத்தில் விட்டு விட்டு வந்து விடுகின்றார். இறைவன் அவரது மனைவியும், தனது குழந்தையுடன் அங்கே தங்க சம்மதித்து கணவனை அனுப்பி விடுகின்றார்.
குழந்தை பசியால் துடிதுடிக்க தாய் தண்ணீர் தேடி அந்த குன்றுகளில் ஓடித் தேடுகின்றார். குழந்தை பசியில் கால்களை உதைத்து அழ அங்கு இறைவனின் அருளால் ஊற்று ஒன்று உருவாகின்றது. இதைக் கண்ட அந்த தாய் அந்த ஊற்றை மண்ணால் அரண் கட்டி ஜம், ஜம் (நில், நில்) என்று சொல்ல அதுவே இன்று ஜம்ஜம் கிணறாகி மாறி தண்ணீரை வாரி வழங்கி வருகின்றது. அந்த தாயின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஹாஜிகள் ஜம்ஜம் தண்ணீர் அருந்துகின்றனர். இரு குன்றுகளுக்கு இடையில் ஓடுகின்றனர்.(ஸயீ)
தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி பறவைகள் வர, அவைகளைக் கண்டு பிரயாணிகளும் வர அந்த வனாந்திரம் புதிய நகரமாக உருவாகின்றது. அதுதான் மெக்கா. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்ராஹீம் நபி அவ்விடம் வர அங்கு ஒரு ஊரே இருக்கின்றது. ஆண்டுகள் பல கழிந்தாலும் அவர் வந்ததன் நோக்கம் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற... அது என்ன கட்டளை. மகனை நரபலி கொடுக்க வேண்டும் என்பதே.
தனது தந்தை சொன்னதைக் கேட்ட அந்த வாலிப மகன் இஸ்மாயில் உடனே தயாரிகின்றான். ஏனெனில் கட்டளை அனைவரையும் ரட்சிக்கும் இறைவனின் புறத்தில் இருந்து வந்ததாயிற்றே... பலி கொடுக்கும் நேரம் இஸ்மாயிலின் இடத்தில் ஒரு ஆடு பலி கொடுக்கப் படுகின்றது. இறைவன் இப்ராஹீம் (நபி) தனது கட்டளை நிறைவேற்ற துணிந்த சிறந்தவராக ஏற்றுக் கொள்கின்றான்.
இதனால் தான் தியாகத் திருநாளில் பலிப் பிராணி அறுத்து ஏழைகளுக்கு உணவுக்காக அளிக்கப்படுகின்றது. பலி கொடுக்கும் அனைவரும் நிச்சயமாக மனதில் கொள்ள வேண்டியது இதுதான்.
“அல்லாஹ்வை அதன் மாமிசமோ, இரத்தமோ சென்றடையாது. மாறாக உங்களிடம் உள்ள இறையச்சம்தான் சென்றடையும்”
திருக்குர்ஆன் 22:37 வசனம்
அந்த தியாகங்களின் உள் நோக்கம் முற்றிலும் இறை ஆற்றலுக்கு வழிப்பட்டு நடப்பது. இந்த தியாகத் திருநாளிலும் அத்தகைய ஒரு நோக்கத்தை மனதில் கொண்டு இறைவன் நமக்கு அளித்துள்ள அளப்பரிய கிருபைகளுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக மாற வேண்டும். உலக மக்கள் அனைவரிடமும் நல்ல பண்புடனும், அன்புடன் நடந்து கொள்ளவும் மனிதில் கொள்வோம்.
நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள். தியாகத் திருநாள் மூலம் நல்லவைகளை அடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
...