Friday, September 10, 2010

கன்னி மேடைகள்

இன்னைக்கு மகனுக்கு கன்னி மேடை. அதுக்குள்ள போறதுக்கு முன்னாடி கொஞ்சம் சுய சொறிதல் இருக்கு..

மேடைப் பேச்சு என்பதே ஒரு சுவாரஸ்யம்.. எல்லாருக்கும் அந்த கலை வருவதில்லை. பேசும் டாபிக்கை விடு எங்கெங்கோ சென்று இழையை விட்டுவிடுபவர்களைப் பார்க்கலாம்.. அதெல்லாம் ஒரு பெரிய டாபிக்.. அது வாணாம்.. நாம வழக்கமான மொக்கைக்கு போகலாம்.. நமக்கும் இந்த மேடைகளுக்கும் ஆவறதே இல்லை. பள்ளியில் படிக்கும் போது திங்கள் கிழமை காலை வணக்கத்தில் ஒரு தலைவரைப் பற்றி ஒரு மாணவன் உரையாடனும். எங்கள் வகுப்பு வரும் போது அந்த வாய்ப்பு எனக்குதான் கிடைக்கும்.. அது மாதிரி பாரதியார், காந்தி ,நரசிம்மராவ் (அவ்வ்வ்வ்... அப்ப அவர் தான் பிரதமர்) பற்றி எல்லாம் பேசி இருக்கோம்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது மாவட்ட அளவில் ஒரு பேச்சுப் போட்டி.. குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி. நேரு பற்றி பேசலாம்னு போயாச்சு.. அங்க பார்த்தா எல்லா பசங்களும் பொளந்து கட்டி அடிக்கிறானுக.. அப்ப தான் நாம கிணற்றுத் தவளையா இருந்து இருக்கோம்னு தெரிஞ்சது.. சொந்த பள்ளியில் ராஜா மாதிரி இருந்துட்டு வெளியே போனா கை, கால் எல்லாம் நடுங்கிப் போச்சு.. எப்படி சமாளிச்சிட்டு வந்தாச்சுன்னு வச்சுக்கங்களேன்.

சென்னையில் படித்த போதும் அப்படித்தான்.. படிப்பு முடிந்ததும் கல்லூரி சார்பில் நிகழ்ச்சி..(நீ எப்ப கல்லூரி போனன்னு கேட்கப்படாது..ப்ளோவில் வரும் இதெல்லாம்) கல்லூரி பேராசிரியர்கள், எங்களைப் படிக்க வைத்த துபாய் நிறுவன உயர் அதிகாரிகள் எல்லாம் இருக்காங்க.. கழுத்தில் டை எல்லாம் கட்டி ஸ்டைலா மேடை ஏறி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சார்பா நன்றி சொல்லனும்.. இங்கிலிபீஸில் தான்.. :) கூட படித்த ஒருத்தன் கேமராவோட இருந்தான்.. “டேய்.. நான் மேடையேறி பேசும் போது ஒரு போட்டோ எடு” ந்னு சொல்லிட்டேன்... சித்தார்கோட்டைக்காரன்.. படுபாவி.. நான் பேசப் போறதுக்கு முன்னாடி நல்லா தான் எல்லாரையும் போட்டு எடுத்துக்கிட்டு இருந்தான். நான் மேடை ஏறியதும் கேமராவில் ஏதோ ரிப்பேர்னு நோண்ட ஆரம்பிச்சான்.. இறங்கும் போது தான் சரியாச்சுன்னு சொன்னான்.. சதி வேலை போல இருக்கு.. என்னவோ என் மேடை போட்டோக் கனவு கானல் நீராப் போச்சுன்னு வச்சுக்கங்க... சரி அதை விடுவோம்.

நான் போய் வாக்கப்பட்ட(அல்லது பொண்ணு எடுத்த ஊர்) தமிழகத்தின் தெற்குக் கடைசியில் கன்னியாகுமரிக்கு பக்கத்தில் இருக்கு.. சிறு குக்கிராமம்.. ஒரு பகுதியில் மசூதி.. அதை சுற்றி மூன்று, நான்கு முஸ்லிம் மக்கள் வசிக்கும் தெருக்கள்.. அந்த ஊரில் ஒரு பழக்கம்.. நோன்புப் பெருநாள் அன்று விழா போல் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒட்டப்ப்பந்தயம், கயிறு ஏறுதல், கயிறு இழுத்தல், சிறுவர் சிறுமிகளுக்கு போட்டிகள் எல்லாம் இருக்கும். அந்த ஊரில் இருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் மாலையில் மேடையில் பேச வேண்டும். பேச்சுப் போட்டி என்பது எல்லாம் இல்லை. எல்லாரும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.

ரமழான் மாதம் ஆனதுமே இதுக்காக முஸ்தீபுகளில் சிறுவர், சிறுமியர் இறங்கி விடுவார்கள். எல்லா வீட்டுப்பிள்ளைகளும் கையில் பேப்பர்களை வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்து கொண்டு திரியும்.. போன வருடம் ஊரில் இருந்த போது பார்த்தது இதெல்லாம்... எங்க வீட்டில் ஒரு மைனர் இருக்காரே.. அவருக்கு அப்ப வயசு 3.. எல்லாப் பிள்ளைகளும் மேடை ஏறும் போது நல்ல பிள்ளை மட்டும் மேடை ஏறலைன்னா அசிங்கமா போயிடும்னு அவனையும் மேடை ஏற்ற ஏற்பாடு பண்ணியாச்சு.

பள்ளிவாசல் இமாம் அவனை பரிசோதித்து (?) குரானில் இருந்து 7 வசனங்கள் உள்ள ஒரு சூரா சொல்லட்டும் என்று சொல்லி விட்டார். ஏற்கனவே மனைவி அவனுக்கு இதைக் கற்றுக் கொடுத்து வைத்து இருந்ததால் மனப்பாடமாக சொல்வது பிரச்சினையாக இல்லை. போன வருடப் பெருநாளும் வந்தது. நம்ம ஆளு புல் மேக்கப்போட ரெடி.. பயமெல்லாம் இல்லை.. எங்களுக்கு தான் பயமா இருந்தது. நான் வீடியோ கேமராவோட மகன் மேடையில் சொல்லப் போவதை பதிவு செய்ய ரெடி.. மச்சினன் தனது மருமகன் மேடையில் நிற்பதை போட்டோ எடுக்க கேமராவோட ரெடி.

மகன் பெயர் கூப்பிடப்படுகின்றது. அசால்டா மேடை ஏறினான்.. மைக்கு முன்னாடி தைரியமா வந்து நின்றான்.. நின்றான்.. நின்றான்.. நின்னுக்கிட்டே இருந்தான். ம்ஹூம்.. வாயைத் திறக்கவே இல்லையே.. பின்னாடி... முன்னாடி எல்லாரும் சொல்லுடா சொல்லுடா என்று கத்தியது தான் மிச்சம்.. மேடையில் நின்று எல்லாரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றான்.. அப்புறம் வம்படியா இறக்கி விட்டுட்டாங்க.. முதல் கன்னி மேடைப் பேச்சு பேசப்படாமலே போச்சு.

போட்டோ எடுத்தாச்சு... சொல்லுடா சொல்லுடா என்ற இறைச்சலோடு வீடியோவும் எடுத்தாச்சு.. அப்புறம் மனைவியின் தோழிகள் எல்லாம் நம்மை கிண்டல் செய்தது வேற கதைன்னு வச்சுக்கங்க..

இப்போது வயது 4 . இதோ இந்த ஆண்டும் ரமழான் வந்தது. நேற்றுடன் முடிந்து விட்டது. இன்று பெருநாள் பண்டிகை.. இந்த ஆண்டும்.. போட்டிகள்.. அதே பேச்சுகள்.. மேடை எல்லாம் இருக்கும். நாங்களும் முயற்சியில் சற்று மனம் தளராமல் அவனை மேடை ஏற்ற தயாராகி விட்டோம். ஊரில் இல்லையென்றாலும் என்ன செய்யப் போகின்றானோ என்ற பதைபதைப்பு. இரவு தெரிந்து விடும். இப்போதும் கன்னி மேடையா? அல்லது கன்னிப் பேச்சா என்று..

இரவு அப்டேட் : மகனார் நல்லபடியாக மேடை ஏறி பேசி விட்டாராம். பேசியது இதுதான்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்ஹூவல்லாஹூ அஹத். அல்லாஹூஸ் ஸமத். லம்யலித் வலம் யூலத். வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்.

பொருள் : (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.


அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்