Thursday, February 16, 2012

அஸ்மாவுக்கு நிக்காஹ்

”ஒழுங்கா சொல்றதைக் கேட்கனும்.. இல்லைன்னா பிச்சுப்போடுவேன்..இன்னும் ஒரு மாசத்தில் நிக்காஹ்.. நீ சம்மதிச்சே ஆகனும்” அஸ்மாவின் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது. வாப்பாவின் கோபமான கர்ஜனையையும், அடியையும் பொறுக்காத அஸ்மா ஆடிப் போய் விட்டாள்...கண்களில் தாரைதாரையாக தண்ணீர் கொட்டியது. எப்போதும் அதிர்ந்து பேசாத வாப்பாவா இப்படி என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அஸ்மாவின் அம்மா ஜூபைதாவின் அதிர்ச்சியோ அதை விட அதிகமாக இருந்தது. கணவன் இதுவரை குழந்தைகளை அடித்ததே இல்லை... ஜூபைதா அடித்தால் கூட குழந்தைகளை அடிக்கக் கூடாது என்று கண்டிப்பவர்.. இன்று இப்படி நடந்ததும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டாள்..


“தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை இப்படி கை நீட்டி விட்டீர்களே?” என்று கண்களின் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ரசூல் பாயைப் பார்த்து கொஞ்சம் கோபமாகவே கேட்டு விட்டாள்... ரசூல் பாய் ஒரு வெறுமையான சூடான பார்வையை ஜூபைதா மீது வீசி விட்டு, வேகமாக செருப்பை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

ரசூல் பாய் என்றால் மயிலம்பட்டி கிராமத்தில் மட்டுமின்றி அதைச் சுற்றி உள்ள பல ஊர்களுக்கும் தெரியும். பலசரக்கு மொத்த வியாபாரம்... நாணயமான மனுசன், வியாபார நெளிவு சுழிவு தெரிந்தவர்... வரவு செலவில் தாமதம் என்றால் கூட மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து தவணை தரக் கூடியவர். சொன்ன நேரத்தில் சரியாக சரக்கு கிடைக்கும், பணமும் கிடைக்கும் என்பதால் இவரிடம் வியாபாரம் செய்பவர்களுக்கும், இவர் வியாபாரம் செய்பவர்களுக்கும் ரசூல் பாயை ரொம்ப பிடிக்கும்.

இவ்வளவு அமைதியான ரசூல் பாய் தான் இன்று கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ரசூல் பாய்க்கு அஸ்மா ஒரு மகள்.. இரண்டு மகன்கள்.. மூவரையும் 20 கி.மீ தூரம் தள்ளி இருக்கும் கல்லூரி அனுப்பி படிக்க வைத்தவர். மஹல்லாவில் முதல் பட்டதாரி பெண்ணாக அஸ்மா இருந்தாள். இரண்டு மகனில் ஒருவன் பைசல் சென்னையின் ஒரு பன்னாட்டுக் குழுமத்தில் உயர்பதவியில் இருக்க... இன்னொருவன் அய்யூப் வாப்பாவுடன் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்கின்றான்.

அஸ்மா கடைக்குட்டி என்பதால் வீட்டில் எல்லோருக்கும் செல்லம்.. வாப்பாவிடம் செல்லமும், அன்பும் அதிகம்.. அதே போல் உம்மாவும், அண்ணன்மார்களும் அஸ்மாவை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். 20 கி.மீ தூரம் தள்ளி தினசரி சென்று வரும்வகையில் கல்லூரி என்றபோது உம்மா ரொம்பவே தயங்கினாள். ஆனால் ரசூல் பாய் மஹல்லாவாசிகளின் முதுகுக்கு பின்னான பேச்சுக்களையும் மீறி அவளைக் கல்லூரி அனுப்பி இளங்கலை பட்டம் வாங்க வைத்தார்.

மகன்களுக்கு திருமணம் முடிப்பதற்கு முன்னே மகளுக்கு மணம் முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்ற சராசரி தகப்பனின் மனம் தான் ரசூல் பாயை பல இடங்களில் அலைந்து மணமகன்களைத் தேட வைத்தது. ஆரம்பம் முதலே அஸ்மாவிற்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு வரனுக்கு ஒரு காரணம் கூறி தட்டிக் கழித்தாள்.. சென்னையில் இருந்த அண்ணன்காரனும், ஊரில் இருந்த அண்ணன்காரனும் கூட சில நல்ல வரன்களைக் கொண்டு வந்தனர்... வரதட்சணை தரும்/வாங்கும் பழக்கம் இல்லாததால் அப்படியான குடும்பங்களில் இருந்தே அனைத்து வரன்களும் இருந்தன... எல்லாரின் உழைப்பும் அஸ்மாவினால் ஒரு நிமிடத்தில் கலைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

கல்லூரி சென்ற பெண்ணாயிற்றே ஏதும் காதல், கீதல் என்று அகப்பட்டு விட்டாளோ என்று கூட ஜூபைதாவிற்கு சந்தேகம் வந்திருந்தது... ஆனால் அப்படி ஏதுமில்லை என்று அஸ்மா அழுத்தம் திருத்தமாக இருந்தாள்... அஸ்மாவின் தோழிகளிடம் கேட்ட போதும் இதையே தான் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அஸ்மா அல்லாஹ்வின் மீதே சத்தியமிட்டும் கூறி விட்டாள். இதை எல்லாம் ஜூபைதா தன் கணவரிடம் சொல்லி விட்டிருந்தாள்... எந்த குறையும் இல்லாத வரன்களை தட்டிக் கழிப்பதைப் பார்க்க பொறுக்கமாட்டாத ரசூல் பாய் இன்று ஒரு முடிவு தெரிய வேண்டும் என்று தான் காலை டிபனை முடித்தவுடன் பிரச்சினையை ஆரம்பித்தார்.

வாப்பாவை எதிர்த்துப் பேசி பழக்கமே இல்லாத அஸ்மாவே “நிக்காஹ்வும் வேணா... ஒரு மண்ணும் வேணா “ என்றதும் கோபம் எல்லை மீறி சென்று விட்டது ரசூல் பாய்க்கு... அருமை மகளை அடித்து விட்டு கடைக்கு சென்று விட்டார். சின்ன அண்ணன் அய்யூபும் உம்மாவிடம் “ஏதா இருந்தாலும் இன்னைக்கு கேட்டு வைங்க உம்மா... வாப்பா இப்படிக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை” என்று சொல்லி விட்டு கடைக்கு சென்றான்... அழுது கொண்டு இருந்த அஸ்மாவிற்கும் இது நன்றாகவே கேட்டது.

ஜூபைதாவால் மகள் அழுவதைக் கண்டு சும்மா இருக்க இயலவில்லை.. அழுதவளை தேறுதல் சொல்ல அருகில் சென்றது தான் தாமதம்.. அஸ்மா உடைந்து கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.. உம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு ரொம்ப நேரம் அழுதாள்... ஜூபைதாவும் மகளின் அதிர்ச்சி குறையட்டும் என்று சிறிது நேரம் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

சிறிது ஆசுவாசம் அடைந்த அஸ்மா மெல்ல
“உம்மா, எனக்கு பயமா இருக்கும்மா”
“அடி.. பயப்படாதே.. என்றைக்கா இருந்தாலும் பொண்ணுன்னா நிக்காஹ் பண்ணித் தான் ஆகனும்”

“அது நிக்காஹ் பண்ணினா மாப்பிள்ளையோட இருக்க வேண்டி இருக்குமே?”

“அதுவா உன் பிரச்சினை... உங்க வாப்பாவை நிக்காஹ் முடிக்கும் போது 16 வயசு தான்... நானெல்லாம் நல்லா தானே இருக்கேன்.. இப்பமே உனக்கு 22 ஆச்சு.. ஒண்ணும் ஆகாதும்மா... நிக்காஹ் ஆகி கொஞ்ச நாள் ஆச்சுன்னா எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடும்மா”


“அதில்லை உம்மா... எனக்கு கொஞ்ச நாளாவே மாரில் ஒரு மாதிரி வலி இருக்கு.. அதோட சின்னதா கட்டிக இருக்க மாதிரி இருக்கு... என்னோட பிரண்ட்ஸ்க கிட்ட கேட்டா இதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு சொல்றாளுக... அங்க அழுத்தினா லேசா வலி இருக்கு”

“யா அல்லாஹ்.. ” என்று அதிர்ச்சியுடன் மடியில் இருந்து மகளை இறக்கு விட்ட ஜூபைதா... “இதெல்லாம் நீ முன்னமே சொல்றது இல்லியா... இந்த மாதிரி பிரச்சினைகள் வந்தா உடனே உம்மாகிட்ட சொல்லிடனும்ல... இது மாதிரி தான் இருந்த எங்க உம்மாவோட பெரிய லாத்தா அதை அப்படியே விட்டுட்டாங்க... அப்புறம் அதுனாலயே வபாத்தாயிட்டாங்கன்னு எங்க உம்மா சொல்லி இருக்காங்க.. நாளைக்கே டாக்டரைப் போய் பார்க்கலாம்”

அடுத்த சில நாட்களில் எல்லாம் வேகமாக நடந்தது. சென்னையில் இருந்த பைசல் தனது டாக்டர் நண்பனை அணுகி இது குறித்து விசாரிக்க.. உடனே எல்லாரும் சென்னை விரைந்தனர். அனைத்து சோதனைகளுக்கும் பிறகு இது புற்று நோயின் ஆரம்ப அறிகுறி எனத் தெரிய வந்தது. தேவையான சிகிச்சைகளுக்குப் பிறகு அடுத்த சில மாதங்களில் அஸ்மா முழுவதுமாக குணமாகி இருந்தாள்.. பைசலின் டாக்டர் நண்பனே அஸ்மாவை நிகாஹ் முடித்துக் கொள்வதாக ரசூல் பாயிலிடம் கூற, நிக்காஹ்வும் சிறப்பாக நடைபெற்றது..

அதோ கையில் சாப்பாட்டு பாத்திரத்துடன் ”ஓடாதே.. ஒழுங்கா சொல்றதைக் கேட்கனும்.. இல்லைன்னா பிச்சிப் போடுவேன்” என்று கத்திக் கொண்டு தன் 3 வயது மகனை விரட்டிக் கொண்டு இருக்கிறாளே அவள் தான் அஸ்மா என்பது தெரிகின்றதா? நிக்காஹ்குக்குப் பிறகு சந்தோசத்தில் ஒரு சுற்று பெருத்து விட்ட அஸ்மாவை நமக்கு அடையாளம் தெரியாமல் போனதில் தவறேதுமில்லை.

நேசம் - யுடான்ஸ் புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிக்காக எழுதப்பட்டது. கால அவகாசம் முடிந்து விட்ட பிறகு வெளியிடப்படுகின்றது.

அன்புடன்
தமிழ் பிரியன்