Sunday, November 11, 2007

குர்ஆன் ஏன் அரபியில் அருளப்பட்டது?

உலகம் முழுவதற்கும் வழிகாட்ட அருளப்படும் வேதம் அரபு மொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.
அரபு மொழி தான் தேவ மொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.
இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டு நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.
யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.
நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும், உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.
ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்குத் தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

22 comments:

மஸ்தூக்கா said...

எதைப் பத்தி வேணாலும் பேசலாம் என்றாலும் குர்ஆன் ஏன் அரபியில் அருளப்பட்டது என்பது பற்றி அழகான கருத்தை அருமையாகப் பேசியிருக்கறீர்கள் பராட்டுக்கள் தமிழ்ப்பிரியன் அவர்களே!

அரபுத்தமிழன் said...

விளக்கம் அருமை நண்பரே !
தங்களின் முயற்சிக்கு நன்றி.

Admin, said...

சிறந்த கட்டுரை. தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

மு. மயூரன் said...

அப்படியானால் இங்குள்ள பள்ளிவாசல்களில் அரபு மொழியில் ஓதுதல், பயன்பாடு போன்றவற்றை விட்டுவிட்டு அதற்குரிய தமிழ் மொழிபெயர்ப்பினைப் பயன்படுத்தலாமே?

நானறிய தொழுகையும் அழைப்பும் எந்தப்பள்ளிவாசலிலும் தமிழில் நடைபெறுவதாய்த் தெரியவில்லை.

Me said...

தேசிய கீதம் வங்காள மொழியில் இருந்தாலும், தேசிய கீதத்தை பாட வங்காள மொழியை முழுமையாக கற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மதரஸாக்களில் அலிஃப், பே, தே என அரபிய உயிரெழுத்துகள் எல்லாம் முதலில் கற்பிக்கப்பட்டு அதில் தேறிய பின்னால தான் யாசின், குர்ஆன் கற்பிக்கப்படுகிறது. அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்களை சக இஸ்லாமியர்களே கேவலமாக பார்க்கும் நிலை உள்ளது உண்மைதானே.

மேலும் தேசிய கீதத்தின் அர்த்தத்தை ஒரு தமிழரிடம் கேட்டுப் பாருங்கள். "சற்றுப் பொறுங்கள் புத்தகத்தைப் பார்த்து கூறுகிறேன்!" என்றுதான் பதில் வரும். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருளைக் கேட்டால் புத்தகத்தை தேடாமல் ஒரளவிற்காவது விளக்குவார்கள். குல்ஹுவல்லாஹூப் போன்ற சிறிய சூராக்களுக்குக் கூட அர்த்தம் தெரியாமல் அதைப் படிக்கும் முஸ்லிம்கள் நிறைய பேர் உண்டு.

"அரபியில் ஓதப்படும் சூராக்கள் எனக்கு விளங்கவில்லை தமிழில் தொழுகை நட‌த்துங்கள்" என்று எந்த இமாமிடமாவது கேட்டுப் பாருங்கள். உடன‌டியாக ஃப‌த்வா பறக்கும்.

அப்துல் குத்தூஸ் said...

மு.மயூரன் மற்றும் உறையூர்காரன் போன்றேர் மேற்கூறியவற்றை சரியாக விளங்கவில்லையோ என நான் ஐயுருகின்றேன். ஏனென்றால் அவர்கள் கேட்கின்றார்கள்

//நானறிய தொழுகையும் அழைப்பும் எந்தப்பள்ளிவாசலிலும் தமிழில் நடைபெறுவதாய்த் தெரியவில்லை.


அரபியில் ஓதப்படும் சூராக்கள் எனக்கு விளங்கவில்லை தமிழில் தொழுகை நட‌த்துங்கள்" என்று எந்த இமாமிடமாவது கேட்டுப் பாருங்கள். உடன‌டியாக ஃப‌த்வா பறக்கும். //

மேற்கூறியவற்றில் தவறுள்ளது. அவர்கள் சற்று சிந்தித்தார்கள் எனில் இதை தெளிவாக விளங்க இயலும்.
தேசிய கீதத்தை எதற்கு உதாரணப்படுத்திக் கூறப்பட்டது என்றால். அது பல்வேறுபட்ட மொழியாளர்களை ஒரு நாட்டு மக்கள் என்ற ஒருங்கினைப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது. அந்த தேசியகீதத்தையே மொழியாளர்களின் வேறுபாட்டிற்கு ஏற்ப மொழிபெயர்த்து பாடப்பட்டால் எப்படி இருக்கும் என சிந்தித்துப் பார்க்கவும். அது மட்டும் அல்லாமல் அனைத்து மொழியாளர்களும் ஒன்று கூடும் இடத்தில் எந்த மொழியில் தேசிய கீதத்தை பாடவேண்டும் என்ற பிரச்னை எழாதா? இதே அடைப்படை தான் அரபியில் தொழுவதற்காண காரணமும் ஆகும்.

தனிமனிதனின் பிரார்த்னைகள் யாவும் அவர் அவர் மொழியின் வழியிலேயே பிரார்த்தனை செய்து கொள்வார்கள் இதில் எந்தவித தடையும் இல்லை. தொழுகை என்பது ஒரு கூட்டு பிரார்த்தனையாகும். இதில் ஒருமைப்பாட்டைக்கருதி அரபி மொழியைப்பின்பற்றப்படுகின்றது எனபதே உண்மை.

மு. மயூரன் said...

இலங்கையில் தேசிய கீதம் இரு மொழிகளில் பாடப்படுகிறது.

சரி, அது வேறு விடயம்.

தமிழர்கள் மட்டுமே உள்ள சமூகத்தில் இருக்கும் பள்ளிவாசலில் கூட அழைப்பு அரபியிலேயே செய்யப்படுகிறது.

அத்தோடு அரபி இஸ்லாம் மாணவர்களுக்குக் கட்டாயமாகக் கற்பிக்கப்படுகிறது.

பள்ளிவாசல்கள் மொழிப்பொதுமைக்காக அரபியில் அழைப்பினை, ஓதுகையைச் செய்கிறதென்றால், அவை தவிர்ந்த ஏனைய விஷயங்களையும் அரபியில் அல்லவா செய்ய வேண்டும்? தொழுகை முடிந்த பின்னான கூட்டங்கள், உரைகள், மத நெறி விளக்கங்கள் எல்லாம் தமிழில் தானே செய்யப்படுகிறது? அரபியில் இல்லையே?


பிறகு வணக்கம் மட்டும் எதுக்கு அரபியில் சொல்லப்பட வேண்டும்?

Me said...

//அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்களை சக இஸ்லாமியர்களே கேவலமாக பார்க்கும் நிலை உள்ளது உண்மைதானே//

இதற்கு யாரும் பதிலளிக்கவில்லையே?

சவூதி தமிழன் said...

இதையும் பார்வையிடுங்கள். மு. மயூரனுக்கு விளக்கம் கிடைக்கலாம்.

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=144&Itemid=40

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=143&Itemid=40

அப்துல் குத்தூஸ் said...

//மு.மயூரன் said... தமிழர்கள் மட்டுமே உள்ள சமூகத்தில் இருக்கும் பள்ளிவாசலில் கூட அழைப்பு அரபியிலேயே செய்யப்படுகிறது.//

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள், அனைத்து சமுதாயத்தவர்களையும் ஒருங்கினைத்தே கூட்டு பிரர்த்னையாகச் செய்யபபடுகின்றது. அங்கு மற்றைய சமுதாயத்தினர் இல்லை என்பதால் தமிழிலும், இருந்தல் அரபியிலும் பிரார்த்னை நடந்தால் மொழி அடிப்படையில் பிரிவினை ஏற்பட்டுவிடும். அது மிகவும் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

//அத்தோடு அரபி இஸ்லாம் மாணவர்களுக்குக் கட்டாயமாகக் கற்பிக்கப்படுகிறது. //

இது தவறு. நானே 25 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரேபியா வந்துதான் அரபியை சிறிய அளவில் இன்னும் கற்றுக் கொண்டு வருகின்றேன். அதுமட்டும் அல்லாமல் இஸ்லாத்தையே இங்கு வந்துதான் கற்கவே ஆரம்பித்தேன் எனக்கூட கூறலாம். இதன் விளைவுதான் உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முயற்சிப்பது அதன் மூலம் மேலும் இஸ்லாத்தை அறியலாமே என்ற ஆவலும் கூட.

//பள்ளிவாசல்கள் மொழிப்பொதுமைக்காக அரபியில் அழைப்பினை, ஓதுகையைச் செய்கிறதென்றால், அவை தவிர்ந்த ஏனைய விஷயங்களையும் அரபியில் அல்லவா செய்ய வேண்டும்? தொழுகை முடிந்த பின்னான கூட்டங்கள், உரைகள், மத நெறி விளக்கங்கள் எல்லாம் தமிழில் தானே செய்யப்படுகிறது? அரபியில் இல்லையே?//

இது பிரார்த்தனையோ அல்லது கூட்டு வழிபாடோ கிடையாது. இஸ்லாத்தைப்பற்றிய விழிப்புணர்வு கூட்டம்தான். இது மட்டும்தான் மொழியை அடிப்படையாக் கொண்டு கூட்டங்கள் தனித்தனியாக நடத்திக் கொள்வார்கள்.


//பிறகு வணக்கம் மட்டும் எதுக்கு அரபியில் சொல்லப்பட வேண்டும்?//

இதை இஸ்லாம் கூட்டாக நடத்தவேண்டும் என முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றது. அதனால் தான் அவ்வாறு நடைபெருகின்றது.

அப்துல் குத்தூஸ் said...

உறையூர்காரன் said...
//அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்களை சக இஸ்லாமியர்களே கேவலமாக பார்க்கும் நிலை உள்ளது உண்மைதானே//

இதற்கு யாரும் பதிலளிக்கவில்லையே?
********

இதில் சிறிதும் உண்மை இல்லை உரையூர்காரரே. அரபி தெரிந்தவர்கள் மிகுதியாக இருந்திருந்தால் பத்வா கொடுப்பதற்கு நாங்கள் இமாம்களைத் தேடவேண்டிய அவசியம் இல்லை.

அரபி தெரியாததால் தான் நாங்கள் இமாம்களை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அரபி தெரிந்திருந்தால் நாங்கள் இப்படிப்பட்ட புரோகிதர்களை நம்பி இஸ்லாமிய அறிவு மங்கி இருக்க மாட்டோம். இப்படிப்பட்ட இயலாமையால்தான் ஒரு சில இமாம்கள் இஸ்லாத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டு உள்ளார்கள்.

கட்டாயம் அரபி தெரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் கூடி இப்படிப்பட்ட பிழைப்பு நடத்தும் இமாம்களுக்கு பயந்துதான்.

அதுமட்டும் அல்லாமல் பிரார்த்னை நடத்தும் பொழுது அதை விளங்கிக் கொண்டு பிரார்த்தித்தால் அதில் ஈடுபாடு அதிகரிக்கும் என்பதும் ஒரு காரணம்.

Thamiz Priyan said...

//Blogger மு.மயூரன் said...
பிறகு வணக்கம் மட்டும் எதுக்கு அரபியில் சொல்லப்பட வேண்டும்?//
சகோதரர் மயூரனின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
தொழுகை என்பது இஸ்லாத்தில் கூட்டாக நிறைவேற்றப்படுவது. அது உலகம் முழுவதும் ஒரே விதமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக நான் இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)கொடுக்கப்பட்டால் தெரிந்து விடும். பிராந்திய மொழிகளில் உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி எனும் போது எனக்கு குழப்பம் வந்து விடும். இது உலகத்தில் அனைவருக்கும் பொதுவானது. இதுதவிர வேறு காரணம் இல்லை..

மு. மயூரன் said...

எனக்கு பரிந்துரைக்கப்பட்ட தொடுப்பிலும் சரி, உங்கள் பதில்களிலும்சரி குர் ஆன் அரபியில் தான் ஓதப்பட வேண்டும் என்பதும், இஸ்லாத்தின் பொதுமொழி அரபிதான் என்பதும் ஏற்ற்குக்கொள்ளப்படுகிறது.

அடிப்படையில் எல்லா மதங்களும் இந்த இயல்பினைக் கொண்டிருக்கின்றன.

இந்து மதத்தில் வேத மந்திரங்கள், வேறு மொழியில் சொல்லப்பட்டால் அர்த்தம் திரிந்துவிடும், ஓசையதிர்வுகள் குலைந்துவிடும் என்ற காரணம் முன்வைக்கப்படுகிறது.

பவுத்தத்தில் பாளி முதன்மை இடத்தைப்பெறுகிறது.

எல்லா மதங்களும் தாம் தோன்றிய காலத்தில் தாம் தோன்றிய மொழியை இப்படிப் பொதுமொழியாகவும் புனித மொழியாகவும் அறிவிக்கின்றன.

கிறிஸ்தவத்தில் மட்டும் நானறிய இந்தப்பண்பு மிகக்குறைவு,

இங்கே தேவாலயங்கள் சிங்களப்பிரதேசங்களிலிருந்தால் முழு வணக்கமும் சிங்களத்தில் நிகழ்கிறது. தமிழிலென்றால், தமிழில் நிகழ்கிறது. அவர்கள் சாதாரண மக்களிடம் வரும்போது புனித மொழிகள் எதையும் தூக்கிப்பிடிப்பதில்லை.

இரு இனங்களும் கலந்துவாழுமிடங்களில் இரு மொழிகளில் நிகழ்கிறது.

மதங்கள் எந்த மக்களுக்குள் ஆதரவு பெறவேண்டுமென்று ஆசைப்படுகிறதோ, ஆகக்குறைந்தது அந்த மக்களின் மொழியை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி அல்லாது பொது மொழி, புனித மொழி என்ற பெயரில் வேற்று மொழியொன்றை, வேற்றுக்கலாசாரமொன்றை திணிக்கும் வேலையைச்செய்வது சரியல்ல.

சாதாரண மதவழிபாட்டாளர்களகா இருக்கும் நீங்கள் இவை எதனையும் மாற்ற முடியாது.

நீங்கள் செய்யக்கூடியதெல்லாம், தற்போது இஸ்லாத்தில் பின்பற்றப்படும் அனைத்தையும் எவ்வகையிலாவது நியாயப்படுத்திக்கொண்டிருப்பதே.


மற்றைய மதங்களை விட இஸ்லாத்தை நான் மிக மிக அந்நியமாக உணர அடிப்படைக் காரணம் அது அரபிமயமாக இருப்பதுதான்.

கடவுள் எல்லா மொழி மனிதர்களுடனும் அந்தந்த மொழிகளில் பேசி தனது இருப்பின் செய்தியைச் சொல்ல முடியாதவராக இருக்கிறார் என்பது வருத்தத்துக்குரியதே.

கடவுளின் மொழியறிவு பூச்சியமாக இருப்பதையிட்டு மிகவும் மனம் வருந்துகிறேன்.

Thamiz Priyan said...

//Blogger உறையூர்காரன் said...//அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்களை சக இஸ்லாமியர்களே கேவலமாக பார்க்கும் நிலை உள்ளது உண்மைதானே//இதற்கு யாரும் பதிலளிக்கவில்லையே?//
இது உலகம் முழுவதும் உள்ள நிலைதான். அது மக்களின் மனத்தில் உதித்த கர்வமாக இருக்கலாம். ஆனால் இஸ்லாம் அவ்வாறு சொல்லித்தரவில்லை. முகமது(ஸல்) நபி தனது இறுதி உரையில் கூட அரபிக்கும் அரபியல்லாதவர்களுக்கும் எந்த வேறுவாடுமில்லை என்று கூறியுள்ளார்கள். மனிதன் வேறுபடுவது அவன் செய்யும் நல்ல காரியங்களை வைத்துத் தான்.

Thamiz Priyan said...

//மு.மயூரன் said...கடவுளின் மொழியறிவு பூச்சியமாக இருப்பதையிட்டு மிகவும் மனம் வருந்துகிறேன்.//

இரண்டு விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்ளலாம். 1.வணக்கம் என்பது கடவுளுக்கு எந்த தேவையும் இல்லாதது. மனிதனைக் கட்டுக்குள் வைக்கவே வணக்கம். எனவே மனிதர்களுக்கு ஒரே மாதிரி இருக்கவே அரபியில் வணக்கம்.
2. இறைவனிடம் பிரார்த்திப்பது என்பது இறைவனுடனான மனதனின் தொடர்பு. இதற்கு இஸ்லாம் எந்த கட்டுப்பாடும் வைக்கவில்லை. அவரவர்க்கு தெரிந்த மொழியில் கேட்டுக் கொள்ளலாம்.

அப்துல் குத்தூஸ் said...

// மு.மயூரன் said...
இரு இனங்களும் கலந்துவாழுமிடங்களில் இரு மொழிகளில் நிகழ்கிறது. //

பல மொழியாளர்கள் கலந்து வாழுமிடங்களில் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என் கூறுகின்றீர்கள்? உதாரணமாக சவூதியில் அரபி,உருது,தமிழ்,சிங்களம்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,பங்களா,மகராஸ்டிரா,சிந்தி,ஆப்கானிஸ்தானியர்கள் கூட ஏதோ ஒரு மொழி பேசுகின்றனர் பெயர் அறியவில்லை, ஆங்கிலம், பிலிப்பைன்ஸ், இந்தோநேசியன்ஸ் மற்றும் பல மொழியாளார் இங்கு கூடுகின்றனர் இப்பொழுது எப்படி, எந்த மொழியில் கூட்டு பிரார்த்தைன நடத்த வேண்டும் என் கூற முடியுமா?

அது மட்டுமன்று அந்த வணக்க வழிபாடுகள் நேரம் குறிக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு நாளுக்கு 5 முறை பிரார்த்தனை செய்யவேண்டும் என்பது எங்களின் கடமையாகும்.

இதற்கு சரியான தீர்வு தாங்கள் தான் கூறுங்களேன்?

வெற்றியின் பக்கங்கள் said...

//குர்ஆன் ஏன் அரபியில் அருளப்பட்டது?//

ஏனென்றால் நபி அவர்கள் அரேபியாவில் தோன்றியதால்! அவர் தமிழகத்திலோ அல்லது அலாஸ்காவிலோ தோன்றியிருந்தால் இஸ்லாமின் வேதம் முறையே தமிழிலோ அல்லது இன்யூட் மொழியிலோ அருளப்பட்டிருக்கும். As simple as that.

Anonymous said...

//உதாரணமாக சவூதியில் அரபி,உருது,தமிழ்,சிங்களம்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,பங்களா,மகராஸ்டிரா,சிந்தி,ஆப்கானிஸ்தானியர்கள் கூட ஏதோ ஒரு மொழி பேசுகின்றனர் பெயர் அறியவில்லை, ஆங்கிலம், பிலிப்பைன்ஸ், இந்தோநேசியன்ஸ் மற்றும் பல மொழியாளார் இங்கு கூடுகின்றனர் இப்பொழுது எப்படி, எந்த மொழியில் கூட்டு பிரார்த்தைன நடத்த வேண்டும் என் கூற முடியுமா?
///

இது விதண்டாவாதம் அய்யா.

நாம் கேட்பது ஒரு சமூகம் சார்ந்த பகுதியிலே.

எ.கா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே வழிபாட்டிற்கு வரும் போது அந்த மொழியிலேயே நடத்தலாமே.

Me said...

இன்னோரு கேள்வி,

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களின் ஜூம்மா தொழுகைக்கு முன் பயான் எனப்படும் மார்க்க சொற்பொழிவு மட்டும் தமிழில் நடைபெறுகிறது. அதில் பெரும்பாலும் ஹதிஸ், புனித குர்ஆன் ஆகியவற்றை பற்றியே அதிகம் போதிக்கப்படுகிறது. தொழுகைக்கு முன்னால் நடைபெறும் பயானில் தமிழ்ப்படுத்தப் படும் புனித குர்ஆனை தொழுகையின்போது மட்டும் தமிழ்படுத்த மறுப்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

இதற்கும் வழக்கம் போல மழுப்பலான பதிலே வரும் என எதிர்ப்பார்க்கிறேன்.

சவூதி தமிழன் said...

மு.மயூரன்,

நான் கொடுத்த சுட்டிகளை நீங்கள் படிக்கவில்லை அல்லது மிக மிக மேலோட்டமாகப் படித்துள்ளீர்கள் அல்லது முன் முடிவுடன் படித்துள்ளீர்கள் என்பது உங்கள் பதிலில் இருந்து தெரிகிறது.

//புனித மொழி என்ற பெயரில் வேற்று மொழியொன்றை, வேற்றுக்கலாசாரமொன்றை திணிக்கும் வேலையைச்செய்வது சரியல்ல.//

புனித மொழி என்று அரபியை எந்த முஸ்லிமாவது கருதுவாரானால் அவர் அறியாமையில் இருக்கிறார்.

வேறு சில மதங்களைப் போலல்லாது நீச மொழி என்று எந்த மொழியையும் இஸ்லாம் கருதுவதில்லை.

மொழிகளுக்கு அப்பாறபட்டவன் இறைவன்.

நான் தமிழனாக இருந்து கொண்டே முஸ்லிமாகவும் இருக்க இயலும். இதில் கலாச்சாரம் எங்கே காணாமல் போனது?

தளையறு செயலிகள் பற்றி விவரமாக எழுதும் உங்களிடம் Free software என்பதை Free Speech என்ற சொல்லில் வரும் Free போலப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, Free Burger என்ற பொருளில் புரிந்து கொள்ளக்கூடாது என்று ஓர் உதாரணத்திற்காகச் சொல்ல விழைகிறேன்.

இஸ்லாத்தினை நீங்கள் அந்நியமாக உணர்வதாகக் கூறுவதால் குர்ஆன் தமிழாக்கம் படித்தீர்களா என்று கேட்கவும் விரும்புகிறேன். (சிங்களம், ஆங்கிலத்திலும் கூட பெயர்ப்புகள் உள்ளன)

மும்பை மலாட் என்ற பகுதியில் ஒரு பெரிய சர்ச் இருக்கிறது. அங்கு தமிழ், மராத்தி, துளு, ஆங்கிலம், கன்னடம், இன்னும் சில மொழிகளில் mass நடைபெறுகிறது. ஆனால் அவர்கள் இடையே எந்தப் பிணைப்பையும் நான் காணவில்லை. குழுமனப்பான்மை ஓங்க சர்ச்சே தூண்டுகோலாகிவிட்டதை நான் காண முடிந்தது.

ஒரு மொழிக்குள் இஸ்லாத்தை அடைக்க இயலாது. அவ்வாறு அடைக்க முயல்வது அறியாமை என்பதை மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன்.

வஹ்ஹாபி said...

கட்டுரைத் தலைப்புக்கான கூடுதல் தகவல்கள் - வாசகர்கள் ஒப்பிட்டு நோக்குவதற்காக:
1- "... தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் ..." [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.

2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை - காரணம்,

3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.

4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.

5- உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும்.

குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறதாம். அதனால் தமிழ்த் தொழுகைதான் வேண்டுமாம். தமிழில் மட்டுமின்றி உலகமொழிகள் பெரும்பாலானவற்றில் குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டு விட்டது என்பதையும் இங்குச் சொல்லி வைக்க வேண்டியதாகி விட்டது. மொழித் தழுவல்கள் நூறைத் தாண்டினாலும் மூலம் ஒன்றுதான் - அன்றிலிருந்து இன்றுவரை.

முழுதும் படிக்கச் சொடுக்கவும்.

Asalamsmt said...

பீஸ் டி.வி (peace t.v) யில் மிக அழகாக டாக்டர் ஜக்கீர் நாயக் இந்த தலைப்பில் பல தடவை கேள்வி பதில் நிகழ்ச்சியில் சொல்லி புரிய வைத்துஇருக்கிறார். நமது தமிழகத்தில் பீஸ் டி.வி. நிகழ்சிகளை தமிழில் மொழிபெயர்த்தும், பீஸ் டி.வி யை பிரபல படுத்தியும் அதை ஸ்பான்ஸாராக ஏதாவது தொழில் அதிபர்கள் அல்லது செல்வந்தர்கள் முன் வர முயற்ச்சி செய்தால், இப்படி பட்ட கேள்விகளுக்கு விடை எளிதாகவும், எல்லாருக்கும் சென்று அடையும் ஒரு செய்தியாக வும் இருக்கும். யார் இதை முன் வந்து செய்வார்கள்!!!
பீஸ் டிவியின் dish set up:

Satellite: PAS-10, Transponder 2C

Satellite Position: 68.5 degrees East

Frequency: 3783.25, FEC: 2/3

Symbol Rate: 3250

Polarization: Horizontal