Friday, August 6, 2010

சண்முகசுந்தரம் அண்ணனும் ஸ்டெல்லா அக்காவும்

சண்முக சுந்தரம் அண்ணனை எனக்கு எப்படித் தெரியும்னு யோசிச்சா கொஞ்சம் சிரிப்பாக் கூட இருக்கும். அண்ணனுக்கு எங்க தெரு தான்.. அண்ணனை எல்லாருக்கும் நல்லா தெரியும். நாங்க சின்ன வயசுல டவுசர் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருக்கும் போது அண்ணன் கல்யாண வயசில் இருந்துச்சு.. அண்ணன் எப்பவுமே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் தான் இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியின் ஏதோ பொறுப்பு வேற.. ஒரு சைக்கிள். பழைய ஹெர்குலிஸ் மாடல். அதில் அண்ணன் பெயர் போட்டு இருக்கும். சைக்கிள் பின்னாடி மர்க்காடில் அவங்க கட்சி சின்னம் கூட இருக்கும்.

இந்த தடவை ஊருக்கு போய் இருக்கும் போது அண்ணனோட பன்னிரண்டாவது நினைவு நாளாம். அவங்க கட்சிக்குன்னு ஒரு சிறு படிப்பகம் இருக்கும். தீக்கதிரோ, தினக்குரலோ ஏதோ ஒரு பத்திரிக்கை மட்டும் வரும். சின்ன வயசில் அண்ணன் கூப்பிட்டுப் போகும் போது படிச்சி இருக்கேன். அந்த படிப்பகத்திற்கு வெளியே தான் அண்ணனோட படத்துக்கு மாலை எல்லாம் போட்டு மைக் செட் வச்சு பாட்டு எல்லாம் ஓடுச்சு. நைட் அந்த மைக் செட்காரன் டப்பாக்குத்து பாட்டு எல்லாம் போட்டது தனி மேட்டர். காலையில் தான் அஞ்சலி. தெருவில் இருக்கும் பசங்கள் எல்லாம் அங்க தான் இருந்தானுக

சண்முகசுந்தரம் அண்ணன் நான் ஏழாப்பு படிக்கும் போது தான் செத்துப் போச்சு... எங்க ஊர் இரயில்வே தண்டவாளத்தில் ஆள் அடையாளம் காண முடியாதபடி அண்ணனோட பிணம் கிடந்தது. முகம், உடல் எல்லாம் சிதைந்து கிடந்தது. போட்டு இருந்த சட்டை, வேட்டி வச்சுத் தான் அண்ணன்னு கண்டுபிடிச்சாங்க.. . அண்ணனோட கட்சி உறுப்பினர் கார்டும் கூட இருந்ததாம்.

அண்ணனுக்கு கொஞ்சம் நல்ல பேர் தான் ஏரியாவில்.... ரேசன் கார்டு பிரச்சினை, சாதிச் சான்றிதழ் பிரச்சினை, பசங்களை ஸ்கூலில் சேர்க்கும் போது பிரச்சினை இப்படின்னு எல்லா பிரச்சினைகளிலும் அண்ணன் எல்லாருக்கும் உதவும். பாரம் ஃபில் பண்றதெல்லாம் அண்ணனுக்கு தண்ணி பட்டபாடு. அரசாங்க ஆபிஸ்களில் அண்ணனுக்கு நிறைய பேரைத் தெரியும்.

அண்ணன் ஏன், எப்படி இறந்தார்ன்னு நிறைய பேருக்கு சந்தேகம். கொஞ்சம் பேர் போலீஸ் கஸ்டடியில் செத்துப் போனதால் அவரைப் போலீஸே கொண்டு வந்து தண்டவாளத்தில் போட்டு விட்டதாக இன்றும் பேசிக் கொள்வார்கள். அப்போது ஏற்ப்பட்ட ஒரு சாதி தகராறில் ஒரு போலிஸ்காரரை உயிரோடு கொளுத்தியதாக அண்ணன் மீது குற்றச்சாட்டு. அண்ணனுக்கு சாதி எல்லாம் பிடிக்காது என்றாலும் எப்படியோ இந்த கேஸில் மாட்டி விட்டு இருக்காங்க.. அதனால் தான் போலிஸ் பிடிச்சு கொன்னுட்டதா பேச்சு. அப்பவெல்லாம் என்கவுண்ட்டர் கலாச்சாரம் இல்லையே?.



கொஞ்சம் அந்தரங்கமாக சண்முகசுந்தரம் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூடப் பேசிக் கொள்வார்கள். அண்ணனுக்கு ஒரு லவ் இருந்தது. அந்த பொண்ணு பேரு ஸ்டெல்லா. அந்த பொண்ணும் எங்க தெரு தான். தையல் கிளாஸ் போகும் போது படிப்பகத்தைத் தாண்டி தான் போகும். அப்ப அண்ணன் சரியா படிப்பக வாசலில் நிக்கும். ரெண்டு பேரும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். புன்னகையும் பிறக்கும். இதைப் பார்க்க எங்களுக்கு ஜாலியா இருக்கும். அண்ணன் சில நேரம் எங்களை விரட்டி விடும். ஸ்டெல்லா அக்கா வேறு மதம் என்பதால் ரெண்டு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு.

கடைசியில் ஸ்டெல்லா அக்காவுக்கு சிவகாசியில் இருந்து ஒருவனுக்கு கல்யாணம் முடிச்சி கொடுத்துட்டாங்க... அண்ணன் தாடி மீசையோட கொஞ்ச நாள் அலைந்தது. ஸ்டெல்லா அக்காவும் கொஞ்ச நாள் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்களாம். அப்புறம் கொஞ்ச நாள் லூசு மாதிரி இருந்தாங்களாம். அப்புறம் எங்கியோ காணாமப் போய்ட்டாங்களாம். அதனால் ஏற்பட்ட துக்கத்தில் தான் அண்ணன் செத்துப் போனதாவும் பேச்சு.

நானும் போய் நினைவஞ்சலியில் கலந்து கொண்டேன். இப்ப புதுசா இருக்கும் ஒன்றியத்தலைவர் அண்ணனின் வீரதீரபிரதாபங்களை எல்லாம் விளக்கிச் சொல்லிக்கிட்டு இருந்தார். அண்ணனை போலிஸ் அராஜகம் கொன்று விட்டதாகக் கூறி போலிஸையும் தாக்கிக்கிட்டு இருந்தார். சூட்டோட தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் உண்டியலும் குலுக்கப்பட்டது. என்னிடம் வந்த போது ’வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கீங்க.. தாராளமாப் போடுங்க’ன்னு மைக்கிலேயே சவுண்ட் வேற.. வேற வழி இல்லாம 50 ரூபாயைப் போட வேண்டி வந்துச்சு. எல்லாத்தையும் கேட்டுவிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்த போது உம்மாவும், பக்கத்து வீட்டு அக்காவும் அண்ணன் குறித்து பெருமையாகப் பேசிக்கிட்டு இருந்தாங்க... அவங்களுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி சென்னையில் நடந்ததைச் சொல்லலாம்னு நினைச்சுட்டு பின்ன விட்டுட்டேன். அதை உங்களுக்கு மட்டும் சொல்லி விடுகிறேன். சென்னையில் படிக்கும் போது ஞாயிறுகளில் தி.நகரில் சுற்றுவது வழக்கம். அப்படி ஒருநாளில் தான் அண்ணனையும், ஸ்டெல்லா அக்காவையும் அங்க பார்த்துட்டேன்.

வேகமா போய் அண்ணன் கையைப் பிடிச்சிக்கிட்டு விசாரிச்சேன்ன். ஸ்டெல்லா அக்காவுக்கு முகமெல்லாம் வேர்த்துப் போச்சு.. கூடவே ஒரு அஞ்சாறு வயசில் ஒரு பையன் வேறு. அண்ணனால் அக்காவை மறக்க முடியலையாம். அதோட போலிஸ் கேஸ் வேற.. அதனால் ரெயில்வே ஸ்டேசன் ஓரம் செத்துக்கிடந்த ஒரு பிச்சைக்காரனுக்கு அவரோட டிரஸ் எல்லாம் போட்டு, முகத்தைச் சிதைத்து இரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மாதிரி போட்டுட்டு ஸ்டெல்லா அக்காவோட பெங்களூருக்கு ஓடிப் போய்ட்டாராம். ரெண்டு வருஷம் கழிச்சு சென்னைக்கு வந்து செட்டில் ஆயிட்டாராம். யார்கிட்டயும் சொல்லிடாதன்னு கேட்டுக்கிச்சு.. ஸ்டெல்லா அக்காவும் ஒரு அழுகையோட இப்பதான் சந்தோசமா இருக்கேன். யார்கிட்டயும் காட்டிக் கொடுக்காதன்னுச்சு. சரின்னு விட்டுட்டேன். நீங்களும் இதை மறந்துடுங்க என்ன..

7 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓஹோ நல்ல மனுசன் :)

(நான் பின்னூட்டம் போட்டதையும் மறந்துடுங்க)

ஆயில்யன் said...

எல்லாரும் எல்லாத்தையும் மறந்துட்டோம் !

நானும் மறந்துட்டேன் - நீங்களும் மறந்துடனும் ! டீல் ஒ.கேவா!

anbarasan said...

CLICK THE LINK ABD READ


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

...........

cheena (சீனா) said...

ஆமா எல்லாம் மறந்து போச்செ

இப்ப என்ன செய்யறது

எதப் பத்தி மறுமொழி இடறது

நல்லாருக்கு கத
நல்வாழ்த்துகள் தமிழ்ப்ரியன்
நட்புடன் சீனா

ராமலக்ஷ்மி said...

கதை அருமை. ஆனா எந்தக் கதை யார் எழுதியது என்பதுதான் மறந்து விட்டது:)!

ரசிகன் said...

அந்த பிச்சைக்கார பிணம் அதை ரயில்வே ரோட்டுல போட்டுன்னு ஏதோ வன்முறை கொஞ்சம் உறுத்தலாயிருந்தாலும் கதையின் முடிவு ஓகே:)

Thamira said...

எனக்கு இந்தக்கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. ரொம்ப சுவாரசியமான முடிவு. இன்னும் கொஞ்சம் மானே தேனே போட்டிருந்தா பத்திரிகைக்கு ரெடி.