Friday, October 19, 2007

நல்லாசிரியரைப் பாருங்கள்

கேரள மாநிலம் குற்றீச்சலைச் சேர்ந்தவர் ஆசிரியை லலிதா. 1997 ல் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியை தொழில் செய்து வருகிறார். இவர் வேலை செய்யும் இடம் தான் விஷேசம். என்னவென்று கேட்கிறீர்களா? இவர் கல்வி கற்பித்துக் கொடுப்பது மலை வாழ் ஆதிவாசிகளுக்கு. இவர் வேலை செய்யும் இடத்திற்கு பேருந்து வசதி கூட கிடையாது. எனவே இவர் சுமார் 12 கி.மீ தூரம் நடந்து தனது பள்ளிக்கு செல்கிறார். இந்த மலை வாழ் மக்கள் முதல் முதலாக இந்த தலைமுறையில் தான் கல்வி கற்கின்றனர். இந்த ஆசிரியை பாராட்டப்பட வேண்டியவர் தானே?

மாதங்கி கவிதைகள்





பெண் குழந்தை

இரண்டாவது பிரசவத்திலும்
ஆண் குழந்தை
என்று குமுறி அழுதவளே!

காத்திரு
உன் அன்பையெல்லாம்
சேர்த்திரு.

உன்னிடம்
இரண்டு பெண்கள்
நிச்சயம் வருவார்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்
பின்பு.

சமத்துவம்

எங்கள் வீட்டில்
இருவருக்கும்
முடிவெடுக்க
உரிமை உண்டு.

வீடு, நிலம், சேமிப்பு
இதெல்லாம்
அவர் பொறுப்பு.

பள்ளிக்கூடச் செலவுகள்
படுக்கைத் தலையணை உறைகள்,
துணிமணி தேர்வுசெய்வது
நான் என்றாயே தோழி

திருமணமானவுடன்
உன் பொருளாதாரப் பட்டத்தையும்
உன் வீட்டில்
விட்டுவிட்டாயா?

அறியாமை

இந்த வரிகளை நீங்கள்

வாசிக்கும் தருணம்

எங்காவது மழை பெய்யலாம்

யாராவது அன்னா அக்மதோவா படிக்கலாம்

யாரோ சரவணன் கடன் கேக்கலாம்

வாகனம் பழுதாகலாம்

யாராவது கல்யாணம் பண்ணலாம்

பட்டாம் பூச்சியின் படபடப்போடு

மரணம் யார் மீதாவது

பறந்து போகலாம்

ஆண் பிள்ளையாய் எவனாவது

மனைவியை அடிக்கலாம்

எது வேண்டுமானால் நிகழலாம்

என்றாலும்

அடுத்த கவிதையின் முதல் வரியை

நான் எழுதுவேன்

அடுத்த பக்கத்துக்கு நீங்கள்

செல்வீர்கள்

தவற விட்டவை

ஏராளமுண்டு என்னிடம்

மகனின் இருப்பை

பால்யத்தின் தத்துவத்தை

மனசின் தட்டானை

முகவரியற்ற தண்டவாளத்தின்

தனிமையை……………..

கூழாங்கற்களின் மேல்

பரவிச் செல்லும் நீரைப் போல்

சேகரித்து வைத்தவை

என்னைத் தவிர

வேறோன்றுமில்லை

பகலே இல்லாத இரவை

யார் நேசிப்பது

வெயில் அற்ற மழையில்

யார் நனைவது?

எப்போதாவது தோன்றினால்

மட்டுமே வானவில்

நீ நடந்து போகும் வழியில்

கசங்கி விழும் வெயில்

வழி விடுகிறது நினைவுகளாய்

உனக்கும் எனக்குமான

நிகழ்காலத்துக்குள்

எப்படி வந்தன

கடந்த கால நிழல்கள்

வலைப்பின்னல் போல்

உன் பொய்கள்

முகமுடி கிழியும்

வார்த்தைகளின் இடுக்குகளில்

சிதைகிறது என் மேலான நேசம்

மரனக் கிடங்கில் புன்னகைக்க

வேண்டுமென வேண்டிக்கொள்

முடிந்தால் நாளையாவது? - ஆ.வி ... தமயந்தி


Thursday, October 18, 2007

யாரப்பா இதில கெட்டிக்காரன் ?

அய்யா இந்த கதையைக் கேளுங்க,
நம்ம தமிழ்நாட்டுல லாட்டரி சீட்டை ஒழிச்சுட்டாங்களாம்ப்பா, சரி நல்ல விஷயம் தானே, அதுவும் நடந்து பல வருஷம் ஆச்சேனு சொல்றீங்களா! அங்க தானே சாமி விஷயமே இருக்கு. இப்ப தமிழ்நாட்ல திரும்பவும் லாட்டரியைக் கொண்டு வந்துட்டாங்கப்பா! அட கூறுகெட்ட கூமுட்டை. எங்கடா லாட்டரி விக்கிறாங்கன்னு கேளுங்க சாமி.
அதை அரசாங்கமே விக்கிறாங்க. தினமும் ராத்திரிக்கு நீங்கத் தூங்கப் போவீங்களாம்ல அதுக்கு முன்னாடி கலைஞர் டீவியைப் பாக்கனுமாம். அதில ஒரு நிகழ்ச்சி இருக்காம். பேரு சுத்த தமிழ்ல பிட் டு வின்னாம். என்க்கு ஒரு மண்ணும் விளங்கலை. உங்க செல்பேசில இருந்து நீங்க எவ்வளவு பந்தயம் கட்டப் போறிங்கன்னு சொல்லனுமாம். ஒரு தடவை குறுஞ்செய்தி அனுப்பினா 3 ரூபா மட்டும் போகுமாம். எத்தனை தடவை வேண்டுமானாலுல் அனுப்பலாமாம். ஒவ்வோரு தடவைக்கும் 3 ரூபா தானாம். தமிழ்நாட்ல இருக்கிற நாமேல்லாம் சரமாரியா குறுஞ்செய்தி அனுப்பினா கடைசில ஒரு ஆளுக்கு மட்டும் செல்பேசி ஒன்னைக் குடுத்துட்டு மத்த காசை எடுத்துட்டு அவன் வட நாட்டுக்கு போயிருவானாம். அப்ப இது லாட்டரி தான? மக்கா எல்லாரும் நாளைக்கு கலைஞர் டீ.வியை பாத்துட்டு குறுஞ்செய்தி அனுப்பனும். சரியா.