இந்த வரிகளை நீங்கள்
வாசிக்கும் தருணம்
எங்காவது மழை பெய்யலாம்
யாராவது அன்னா அக்மதோவா படிக்கலாம்
யாரோ சரவணன் கடன் கேக்கலாம்
வாகனம் பழுதாகலாம்
யாராவது கல்யாணம் பண்ணலாம்
பட்டாம் பூச்சியின் படபடப்போடு
மரணம் யார் மீதாவது
பறந்து போகலாம்
ஆண் பிள்ளையாய் எவனாவது
மனைவியை அடிக்கலாம்
எது வேண்டுமானால் நிகழலாம்
என்றாலும்
அடுத்த கவிதையின் முதல் வரியை
நான் எழுதுவேன்
அடுத்த பக்கத்துக்கு நீங்கள்
செல்வீர்கள்
தவற விட்டவை
ஏராளமுண்டு என்னிடம்
மகனின் இருப்பை
பால்யத்தின் தத்துவத்தை
மனசின் தட்டானை
முகவரியற்ற தண்டவாளத்தின்
தனிமையை……………..
கூழாங்கற்களின் மேல்
பரவிச் செல்லும் நீரைப் போல்
சேகரித்து வைத்தவை
என்னைத் தவிர
வேறோன்றுமில்லை
பகலே இல்லாத இரவை
யார் நேசிப்பது
வெயில் அற்ற மழையில்
யார் நனைவது?
எப்போதாவது தோன்றினால்
மட்டுமே வானவில்
நீ நடந்து போகும் வழியில்
கசங்கி விழும் வெயில்
வழி விடுகிறது நினைவுகளாய்
உனக்கும் எனக்குமான
நிகழ்காலத்துக்குள்
எப்படி வந்தன
கடந்த கால நிழல்கள்
வலைப்பின்னல் போல்
உன் பொய்கள்
முகமுடி கிழியும்
வார்த்தைகளின் இடுக்குகளில்
சிதைகிறது என் மேலான நேசம்
மரனக் கிடங்கில் புன்னகைக்க
வேண்டுமென வேண்டிக்கொள்
முடிந்தால் நாளையாவது? - ஆ.வி ... தமயந்தி
No comments:
Post a Comment