குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, ஓடும் பஸ்சில் அரிசி வியாபாரியிடம் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையடித்த பஸ்சிலேயே மீண்டும் ஏறிய போது கொள்ளையர்கள் பிடிபட்டனர்.
அரிசி வியாபாரி
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர், சேகர் (வயது 46). அரிசி வியாபாரி. கேரளாவில் விற்பனை செய்த அரிசிக்கான தொகை ரூ.5 லட்சத்தை வசூலித்துக்கொண்டு, குருவாயூரில் இருந்து இரவு 9 மணி அளவில் சேலத்துக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பணத்தை சேகர் ஒரு துணியில் சுற்றி இடுப்புடன் சேர்த்து கட்டி இருந்தார்.
பஸ் திருச்சூர் வந்தபோது 2 பேர் அந்த பஸ்சில் ஏறினார்கள். அவர்கள் வியாபாரி சேகரின் அருகில் வந்து அமர்ந்துகொண்டனர். கோவைக்கு செல்லவேண்டும் என்று டிக்கெட் வாங்கினார்கள்.
குளிர்பானம் கொடுத்தனர்
அவர்கள் இருவரும் வியாபாரி சேகரிடம் பேச்சு கொடுத்தனர். நாங்கள் நெல் புரோக்கர் என்று அறிமுகம் செய்து கொண்டனர். அதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பஸ் கோவைக்கு வந்தும் அந்த 2 பேரும் பஸ்சை விட்டு இறங்கிச்சென்று குளிர்பானம் குடித்தனர். சேகருக்கும் குளிர் பானம் வாங்கிக்கொடுத்தனர்.
கோவை வரையில் தான் அவர்கள் 2 பேரும் டிக்கெட் வாங்கி இருந்தனர். மீண்டும் பஸ்சில் ஏறிக்கொண்ட அவர்கள், கண்டக்டரிடம் அவினாசி வரைக்கு டிக்கெட் வாங்கினார்கள். அவினாசிக்கு வந்த பின்னர் மீண்டும் ஈரோட்டுக்கு என்று 2 டிக்கெட் கேட்டனர். இதனால் குழம்பிப்போன கண்டக்டர் சுப்பிரமணி, ஏன் இப்படி ஊர் ஊராக மாற்றி மாற்றி டிக்கெட் எடுக்கிறீர்கள்? ஒரேயடியாக சேலத்துக்கு டிக்கெட் எடுத்து இருக்க வேண்டியதுதானே என்றார். அதற்கு பதில் அளித்த அந்த 2 பேரும், எங்கள் லாரி வழியில் விபத்துக்குள்ளாகி நின்று விட்டது. அது எங்கு நிற்கிறது என்று தெரியவில்லை. அதனால்தான் இப்படி டிக்கெட் எடுத்தோம் என்றனர்.
ரூ.5 லட்சம் கொள்ளை
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே பஸ் வந்தபோது ரோட்டு ஓரத்தில் ஒரு லாரி விபத்துக்குள்ளாகி நின்றது. உடனே அந்த மர்ம மனிதர்கள் இருவரும், அதுதான் எங்கள் லாரி, இங்கேயே நாங்கள் இறங்கிக்கொள்கிறோம் என்று கூறி நடு வழியில் பஸ்சை நிறுத்தி இறங்கிக்கொண்டனர்.
பஸ் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கண் விழித்த வியாபாரி சேகர், தன் இடுப்பில் கட்டி வைத்திருந்த பணத்தை காணாமல் திடுக்கிட்டார். உடனே கண்டக்டர், டிரைவரிடம் இது பற்றி கூறிய சேகர் அருகில் இருந்த 2 பேரை எங்கே? என்று கேட்டார். இருவரும் விஜயமங்கலத்தில் இறங்கி விட்டனர். ஏன் என்ன விஷயம்? என்று அவர்கள் திருப்பிக் கேட்டனர். நான் வைத்திருந்த பணத்தை அவர்கள் 2 பேரும்தான் எடுத்துக்கொண்டு இறங்கி இருக்க வேண்டும் என்று பதறியபடி கூறினார்.
சாமர்த்தியமான நடவடிக்கை
இதை கேட்ட டிரைவர் கணேசன்-கண்டக்டர் சுப்பிரமணி ஆகியோர் சாமர்த்தியமாக ஒரு திட்டம் தீட்டினார்கள். கொள்ளையர்கள் இறங்கிய இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் பஸ் வந்து இருக்கிறது. அதனால் இருவரையும் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு பஸ்சை மீண்டும் வந்த வழியை நோக்கி திருப்பினார்கள்.
முன்னெச்சரிக்கையாக பஸ்சின் முன்பகுதியில் இருந்த சேலம் என்ற பெயர் பலகை அகற்றப்பட்டது. அந்த மர்ம மனிதர்கள் இறங்கிய இடமான விஜயமங்கலம் நோக்கி பஸ் சென்றது. எதிர்பார்த்தது போலவே அந்த மர்ம மனிதர்கள் இருவரும் கையை காட்டி பஸ்சை நிறுத்தினார்கள்.
மடக்கி பிடித்தனர்
டிரைவரும் பஸ்சை அவர்கள் பக்கம் நிறுத்தினார். அந்த மர்ம மனிதர்கள் பஸ்சில் ஏறியபோதே, இது நாம் ஏற்கனவே வந்த பஸ் மாதிரி தெரிகிறதே என்று பேசிக்கொண்டே ஏறினார்கள். அத்துடன் கண்டக்டரை பார்த்ததும், டேய், இது அதே பஸ்தாண்டா இறங்கி ஓடு என்று குரல் கொடுத்துக்கொண்டு தப்பிஓட முயன்றனர். அதற்குள் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அனைவரும் அந்த மர்ம மனிதர்களை சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டனர்.
இது தொடர்பாக பெருந்துறை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் அங்கு விரைந்து வந்து மர்ம மனிதர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பணம் மீட்பு
விசாரணையில், அவர்கள் கோவை காரமடை ரங்கநாதர் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜன் (42), கும்பகோணத்தை சேர்ந்த பழனிவேல் (43) என்பது தெரியவந்தது. இருவரும் சேகரிடம் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த பணம் ரூ.5 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான இருவரும் கூறுகையில், வியாபாரி சேகர் மாதம் தோறும் பணம் வசூலுக்காக வருவார். திட்டமிட்டு இந்த கொள்ளையை நடத்தினோம். குளிர்பானம் வாங்கி அதில் மயக்க மாத்திரை கலந்து அவருக்கு கொடுத்தோம். மயங்கியதும் பணத்தை கொள்ளை அடித்தோம் என்றனர்.
சாமர்த்தியமாக பஸ்சை திருப்பிச்சென்று மர்ம ஆசாமிகளை பிடித்துக்கொடுத்த டிரைவர்-கண்டக்டரை போலீசார் மற்றும் பயணிகள் பெரிதும் பாராட்டினார்கள்.
நன்றி : தினத்தந்தி...
16 comments:
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பாராட்டுக்கு உரியவர்கள்.
இப்பிடியெல்லாம் நம்ம சமூகத்தில ஐடியா வருது என்பதை நினைக்க மகிழ்ச்சியா இருக்கு
இந்த சாரதி,நடத்துனர் மிகப் பாராட்டுக்குரியோர், அத்துடன் அந்த சேகருக்கும் ஏதோ இப்பணம் கிடைக்க வேண்டுமென இருந்திருக்கு, அவர் இன்னும் பல கிலோமீட்டர் சென்ற பின் விழித்திருந்தால்...
இக்கொள்ளையர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அடுத்தவர்கள் இது பற்றி நினைக்காது இருக்க வேண்டும்.
//நிஜமா நல்லவன் said...
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பாராட்டுக்கு உரியவர்கள்.///
வருகைக்கு நன்றி நி.நல்லவன்... :)
//கௌபாய்மது said...
இப்பிடியெல்லாம் நம்ம சமூகத்தில ஐடியா வருது என்பதை நினைக்க மகிழ்ச்சியா இருக்கு//
மாறுபட்ட சிந்தனை மட்டுமல்லாது அதற்கு ஒத்துழைத்த நடத்துனர், ஓட்டுனர், சக பயணிகள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.. :)
///யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இந்த சாரதி,நடத்துனர் மிகப் பாராட்டுக்குரியோர்,///
யோகன் அய்யா! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.. :)
சரியான ஐடியா அந்த போர்டை மாத்தினது... சூப்பர்...
அவர்கள் இருவரையும் போக்குவரத்து துறையில் இருந்து போலிஸ் துறைக்கு மாற்றலாம்
இந்த நாட்டில் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
நானும் படித்தேன் !! சூப்பர் ஐடியா !! காவல் நிலையம் போகாமல் நடத்துனர், ஓட்டுநரின் சமயோசிதத்தால் 5 லட்சம் திரும்பக் கிடைத்தது.
அந்த பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் பாராட்டுகுரியவர்கள்.:)
தொலைகாட்ச்சியில் செய்தி கேட்டேன்.
///ச்சின்னப் பையன் said...
சரியான ஐடியா அந்த போர்டை மாத்தினது... சூப்பர்...///
ஆமாங்க ச்சின்னப் பையன்.. :)
/Gnaniyar @ நிலவு நண்பன் said...
அவர்கள் இருவரையும் போக்குவரத்து துறையில் இருந்து போலிஸ் துறைக்கு மாற்றலாம்///
:)
//தென்றல்sankar said...
இந்த நாட்டில் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள//
கண்டிப்பாக. அதுதான் சமச்சீர் நிலையைத் தருகின்றது
///பொன்வண்டு said...
நானும் படித்தேன் !! சூப்பர் ஐடியா !! காவல் நிலையம் போகாமல் நடத்துனர், ஓட்டுநரின் சமயோசிதத்தால் 5 லட்சம் திரும்பக் கிடைத்தது ////
நம்மைப் போல சில அறிவாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. :))))
///SanJai said...
அந்த பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் பாராட்டுகுரியவர்கள்.:)
தொலைகாட்ச்சியில் செய்தி கேட்டேன்.///
நன்றி சஞ்சய்.. :)
Post a Comment