Tuesday, January 19, 2010

ஆயிரத்தில் ஒருவனும், ஒரு சிறுகதையும்.

எனக்கு நேரே நிற்க வைக்கப்பட்டிருந்த அந்த பத்துப் பேரையும் பார்க்கும் போது பாவமாக இருந்தது. காட்டுவாசிகள் போல் உடை அணிந்து இருந்தனர். அதில் நடுமையமாக நின்றிருந்த அந்த அழகான பெண்ணைப் பார்க்கும் போது ஏனோ மனம் அவள் பேரில் மயங்குவது போல் இருந்தது. என் கையில் இருந்த வாள் சூரிய வெளிச்சத்தில் பட்டு மின்னிக் கொண்டு இருந்தது. எனக்கு அருகில் இருந்த கேப்டன் கையைக் காட்ட என் வாள் மின்னல் வேகத்தில் சுழன்றது. சில வினாடிகளில் அங்கிருந்த பத்து பேரின் தலையும் வெட்டப்பட்டு கீழே கிடந்தது. எனது முகம், ஆடை முழுவதும் சூடான இரத்தம் பட்டு ஒழுகிக் கொண்டு இருந்தது. அந்த பெண்ணின் தலை தரையில் உருண்டு காலுக்கு கீழ் வரும் போது கலகலவென சிரிக்க ஆரம்பித்து இருந்தது.

சட்டென்று கண்ணைத் திறந்து பார்த்த போது படுக்கையில் இருந்தேன்... ஓ..கனவு.. உடல் முழுவதும் வியர்த்து ஒழுகிக் கொண்டு இருந்தது. என்ன குரூரமான கனவு... அந்த காட்டுவாசிகளை என் கையால் வெட்டிக் கொள்வது எவ்வளவு கொடுரம்...

அறையை விட்டு வெளியே வந்த போது, கப்பல் மிதமான வேகத்துடன் சென்று கொண்டு இருந்தது. மெதுவாக கப்பலின் மேல் தளத்திற்கு வந்த போது அங்கே குழுத் தலைவர் சான்சஸ் நின்று கொண்டு இருந்தார்... ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினார்

“ஹாய்! தமிழ்! என்ன இப்படி வேர்த்து விறுவிறுத்துப்போய் வந்து கொண்டு இருக்கிறாய்?”
“ஒரு கெட்ட கனவு சீப்... அதான்”
“ஓ... நான் கூட முதல் தடவை நீ கப்பலில் வந்த போது, வாந்தி எடுத்து அமர்க்களம் செய்தது நினைவுக்கு வந்து விட்டது”
கலகலவென சிரிக்கத் தொடங்கி இருந்தார். நம் நிலைமை நமக்கு தானே புரியும்? எதுவும் பேசாமல் கப்பலின் முனைக்கு சென்று நின்று கொண்டேன். தூரத்தில் வங்காள விரிகுடாவின் எல்லை முடிவே இல்லாமல் விரிந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. இடையிடையே சிறு சிறு தீவுக்கூட்டங்கள் தெரிந்தன.

என்னை உங்களுக்கு அறிமுகம் செய்யவில்லையே? நான் தமிழ் பிரியன்... இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பணியாளர்களில் ஒருவன். பொறியியல் முதுகலைப் பட்டம் படித்து, பின்னர் சில ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு விட்டு இந்த பணியில் இணைந்துள்ளேன். இப்போது நாங்கள் கப்பலில் ஒரு தீவுக்கு சென்று கொண்டு இருக்கின்றோம்.

இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் உலகில் உள்ள அவசரத் தேவையான மின்சாரத்தை புதிய முறையில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதில் ஒரு முக்கியமானவர்களில் நானும் ஒருவன். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Indionium (இண்டியோனியம்) என்ற தனிமத்தை செறிவூட்டி சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றலைக் கொண்டு அதிக அளவில் மின்சாரம் கண்டுபிடிக்க இயலும் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். யூரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்றவற்றை செறிவூட்டி, மின்சாரம் எடுக்கும் முறை மனித குலத்தின் அழிவுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் அதை இந்தியா முற்றிலுமாக கைவிட்டு இதில் இறங்கி உள்ளது.

இண்டியோனியத்தை சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றல் சில மணி நேரங்களில் குன்றி விடும். இதனால் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது என்றும் கண்டுபிடித்துள்ளோம். ஓரு தீவை இண்டியோனியம் குண்டு வைத்து தகர்க்கப் போய்க் கொண்டு இருக்கிறோம்.

வங்காள விரிகுடாக் கடலில் அந்தமான் தீவுகளுக்குக் கீழே கேர்க்கஸ் என்ற தீவுக்கு செல்கிறோம். அந்த தீவைத்தான் குண்டு வைத்து தகர்க்கப் போகின்றோம். சுமார் 6 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் உள்ள அந்த தீவு முழுவதும் கடுமையான பாறைகளைக் கொண்ட மலையினால் ஆனது. சுமார் 1000 மீட்டர் உயரம் உள்ள அந்த மலையின் மேல் இருந்து சுமார் 2000 மீட்டர் ஆழத்திற்க்கு துளை உருவாக்கப் பட்டுள்ளது. இண்டோனியம் செறிவூட்டப்படும் போது அந்த தீவு முற்றிலுமாக வெடித்து சிதறி விடும். அதன் மூலம்உலை வெடித்தால் இருக்கும் சேதாரங்களையும், கதிர்வீச்சின் வீரியத்தையும் கணக்கிட உத்தேசித்துள்ளோம்.

கப்பல் கோக்கஸ் தீவுக்கு அருகில் இருப்பது தெரிந்தது... மேற்கு திசையில் கதிரவன் தனது கைகளை சுருக்கிக் கொண்டு மறைந்து கொண்டு இருந்தான். கப்பல்தீவில் இருக்கும் அந்த நெடியாக மலை சோகமாக பார்ப்பது போல் இருந்தது. நங்கூரம் பாய்ச்சி நீர்மட்டம் அதிகமாக இருக்கும் இடத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டது.

இரவு மணி 11.00 .... கடலின் மேல் தளத்தில் நின்று, கடலை ரசிப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். கடல் அலைகள் தீவின் பாறைகளில் மோதும் ஓசை காதுகளில் வந்து அறைந்து கொண்டு இருந்தது. அப்போது தீவில் இருந்து அந்த மெல்லிய ஒலி கிளம்பத் தொடங்கி இருந்தது..... டம்டம் என்று ஆரம்பித்த ஓசை சிறிது சிறிதாக அதிகமாகி திடீரென்று நின்று போய் இருந்தது

சான்ஸன் கப்பல் மேல் தளத்திற்கு வருவது தெரிந்தது.

“ஹாய் தமிழ்! கடல் என்ன சொல்லது? ஏதாவது கவிதை சொல்லுங்களேன்”
“இல்லை சீப்! இந்த தீவில் மக்கள் வசிக்கிறார்கள் போல தெரிகிறது.. சிறிது முன் அங்கே ஏதோ இசைக்கும் சத்தம் கேட்டது”
“ஹா! ஹா! ஹா! அதெல்லாம் அலைகளின் ஓசையாக இருக்கும்... இங்கு நான் பல மாதமாக ஆராய்ச்சி செய்து இருக்கிறேன்.இந்த தீவில் சில சிறு விலங்குகளைத் தவிர வேறு யாருமே இல்லை. இன்ப்ரா ரெட் கதிர்களை அனைத்து பகுதியிலும் செலுத்தி உறுதி செய்து விட்டோம். மனிதர்கள் யாருமில்லை.. மலையைக் குடைந்து நமது உலையை ஏற்படுத்தி விட்டோம். அனைத்து உபகரணங்களையும் பொருத்தியாகி விட்டது. அப்படி யாராவது இருந்தால் இதற்குள் தெரிந்திருக்கும்”
“இல்லை சீப்! என் மனதுக்கு உறுத்தலாக உள்ளது... இங்கு யாரோ வாழ்கிறார்கள்”
“தமிழ்! உனக்கு இதே வேலையாய் போய் வீட்டது. இரவு நன்றாக தூங்கி எழு! எல்லாம் சரியாகி விடும். காலையில் சீக்கிரம் தீவுக்கு செல்ல வேண்டும். பை.. குட் நைட்”

சான்சஸ் கீழே சென்று விட மீண்டும் தீவில் இருந்து அந்த இசை கேட்க ஆரம்பித்து இருந்தது....

காலை சூரியன் தனது செங்கிரண கைக்களை விரித்துக் கொண்டு வேகமாக உதித்துக் கொண்டு இருந்தான். கப்பலில் ஆட்கள் வேலைக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. இரவில் கேட்ட சத்தங்களின் திகைப்பில் இருந்து மனம் இன்னும் மீண்டு இருக்கவில்லை.

மேலே வந்து பார்த்த போது தீவுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அதில் தேவையான தொழில் நுட்பக் கருவிகளும், உணவுப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இன்றைய எனது பணி கொஞ்சம் கடினமானதாக இருக்கும் என்றே தோன்றியது. எங்கள் குழுவில் முக்கிய குழு ஹெலிகாப்டர் வழியாக மலையின் உச்சியில் இருக்கும் முக்கிய ஆராய்ச்சி நிலையத்தை அடையும். அங்கிருக்கு ஆரம்பமாகும் ஆழ்துளையில் வெடிப்புப்பைத் தொடங்க வேலை நடக்கும். மற்ற சில குழுக்கள் தீவின் ஓரங்களில் உள்ள சிறு குன்றுகளில் ஏற்கனவே பொருத்தப்பட்ட டிரான்ஸ்மீட்டர்களை சரி பார்க்க வேண்டும்.

ஆழ்துளையில் வெடிப்பு நிகழும் போது தீவு முழுவதும் வெடித்துச் சிதறும் என்பதால் அதன் சக்திகளை அளவிட இந்த டிரான்ஸ்மீட்டர்கள் உதவும். இதை பல கிலோ மீட்டர் தூரத்தில் நிற்கப் போகும் எங்கள் கப்பல், தூத்துக்குடி, அந்தமான், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் இருக்கும் கட்டுப்பாடு அறைகள் கண்காணிக்கும்.

காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. எனக்கு தேவையான பொருட்களை முதுகில் சுமந்து கொண்டு தீவில் ஒரு புறத்தில் இறங்கி இருந்தேன். எங்களை இறக்கி விட்டு விட்டு ஹெலிகாப்டர் பராமரிப்புப் பணிக்காக கப்பலுக்கு வேகமாக நகர்ந்திருந்தது. என்னுடன் வந்திருந்தவர்கள் அனைவரும் தத்தமது உடைமைகளை எடுத்துக் கொண்டு தயாராக இருந்தனர். பல தடவை வந்த பழக்கமாக இடம் என்றாலும், இரண்டு நாட்களாக கண்ட கனவுகளாலும், அமானுஷ்யமான உணர்வுகளாலும் ஏனோ ஒரு கலவரமான உணர்வில் இருந்தேன்.

மா
லை ஆகிக் கொண்டு இருந்தது. வழி மாறிச் சென்றுவிட்டதால் உடன் வந்தவர்களை தவற விட்டு இருந்தேன். வழியில் இருந்த பல இடர்களால் நேரம் தாமதமாகி இருந்தது. ஒரு பாம்பு வேறு இடைமறித்து, அதை சுட்டுத் தள்ள வேண்டி இருந்தது. வேகமாக இருள் சூழ ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. ஹெலிகாப்டர் திரும்பி வந்து காத்துக் கொண்டிருக்கும். கையில் இருக்கும் வாக்கி - டாக்கியும் சார்ஜ் இல்லாமல் செத்துப் போய் இருந்தது.

திடீரென்று அந்த ஏகாந்தமான பாடல் பாடும் ஓசை கேட்க ஆரம்பித்து இருந்தது. அதோடு சுகந்தமாக மல்லிகைப் பூவின் வாசமும் வர ஆரம்பித்து இருந்தது. நேற்று கனவில் கேட்டது வாத்தியங்களின் ஒலியாக மட்டுமே இருந்தது. இன்று கேட்பது ஒரு பெண்ணின் குரல். இனிமையான குரல்... இதுவரை கேட்டிராத முறையில் கொஞ்சம் கடினமாக தமிழில் பாடிக் கொண்டு இருந்தாள். குரல் வந்த திசையை நோக்கி கால்கள் நகரத் துவங்கின.... சிறு குன்றுகளுக்கு இடையே இருந்த குறுகிய பள்ளத்தாக்கில் இருந்து தான் அந்த குரல் வந்து கொண்டு இருந்தது.

அங்கே மல்லிகைப் பூக்களின் செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன. அதில் இருந்து ஒரு பெண் பூக்களைப் பறித்து தன்னிடம் இருக்கும் பூக்கூடையில் போட்டுக் கொண்டு இருந்தாள். வித்தியாசமான பூக்களாலும், பருத்தியாலும் ஆனது போன்ற ஆடை அணிந்து இருந்தது ஒரு பழைய நாகரீக பெண் போல தெரிந்தாள்.

மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டு அந்த பெண்ணுக்கு அருகில் செல்லத் துவங்கினேன். அழகான குரலில் பாடிக் கொண்டே இருந்தாள். மெதுவாக இடுப்பில் இருந்த பிஸ்டலைக் கையில் பிடித்தவனாக அவளுக்கு அருகில் நெருங்கி இருந்தேன்.

“அங்கேயே நில்! யார் நீ”

கையில் இருந்த பூக்கூடையை கீழே தவற விட்டவளாக அதிர்ந்து போய் திரும்பினாள். என்னைக் கண்டதும், ஏதோ இதுவரைப் பார்க்காத ஒன்றைப் பார்தது போல் விதிர்விதிர்த்து நின்று கொண்டிருந்தாள்....

வீடியோ கான்பரன்ஸில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மேலதிகாரிகளுக்கும் முன் அமர்ந்து இருந்தேன். என் அருகில் கேப்டன் சான்சஸ் இருந்தார். சான்சஸின் முகம் வியர்வையில் குளித்து இருந்தாலும், அவருக்குள் இருக்கும் பதற்றத்தை அவரால் தவிர்க்க இயலாதது தெரிந்தது. அதிகாரிகள் கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்தனர்.

“தமிழ்! நீங்க சொல்வது உண்மையாயா?”

“கண்டிப்பாக... அந்த பெண்ணைப் பார்த்ததும், அவளை துப்பாக்கி முனையில் நிறுத்தினேன். அவளுக்கு துப்பாக்கியைப் பற்றி தெரியவில்லை. துப்பாக்கியைக் கண்டு கொள்ளாமலே இருந்தாள். அவளை மிரட்டும் தொனியில் பேசியதும் பயந்து போனாள். அவளது மொழியும் எங்களது தமிழ் மொழியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தது. அதனால் அவள் என்னுடன் பேசத் தொடங்கினாள்”

“நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தையே அதிகமாக்குகிறது தமிழ்! மேல சொல்லுங்க”

“யார் அவள் என்று விசாரித்ததில் அவள் அந்த தீவிலேயே அவர்களது குழுவுடன் வசிப்பதாகக் கூறினாள். அவர்களின் வீடுகள் மலைகளைக் குடைந்து படைக்கப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து யாரும் வெளியே வரக் கூடாது எனவும் கூறினாள். மேலும் மலைக்குள் சூரிய ஒளி வரும் அமைப்பு உள்ளதாகவும், தண்ணீர் அருவிகளும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகில் இருப்பதாகவும் கூறினாள்.”

“உணவுப் பொருட்களை விளைவிக்கும் பள்ளத்தாக்குகளுக்கு மட்டும் இரகசிய வழி வழியாக சென்று திரும்புவது வழக்கமாம். அந்த பெண்ணுக்கு மல்லிகைப் பூவின் மீது உள்ள ஆசையின் காரணமாக அவர்களது வீட்டை விட்டு அவளுக்கு மட்டுமே தெரிந்த பாறை இடுக்கு வழியே வெளியே வந்திருக்கிறாள்”

“தமிழ்! நீங்கள் சொல்வதை எல்லாம் நம்பவே முடியவில்லை. ஏதோ பழைய காலங்களில் சொல்லப்படும் கதை போல் உள்ளது”

“இல்லை கேப்டன்! நான் சொல்வதெல்லாம் உண்மை தான்.. அவள் சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அவளுடன் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். பாறைக்குப் பின் இருந்த ஒரு சிறு வழியாக என்னை அழைத்துச் சென்றாள். என்ன ஆச்சர்யம். ஒரு அழகான சிறு கிராமம் போல் இருந்தது. வீடுகள் அனைத்தும் அழகான மரங்களால் ஆன கதவுகளாலும் செய்யப்பட்டிருக்கிறது. நான் அந்த வீடுகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவள் ஓடிப் போய் விட்டாள். நான் அதிகப்படியான அதிர்ச்சியில் தட்டுத்தடுமாறி ஹெலிகாப்டரை அடைந்தேன்.”

“நீங்க சொல்வது உண்மை என்றாலும் கடந்த நான்கு நாட்களாக உங்களின் வழிகாட்டுதலில் அந்த தீவையே சல்லடை போட்டு தேடியாகி விட்டது. அல்ட்ரா சோனிக் முறையிலும் தேடி விட்டோம். நீங்கள் குறிப்பிடுவது போல் யாருமே அங்கு இல்லை. நீங்கள் சென்ற பாறை வழிப்பாதையையும் உங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இனியும் நீங்கள் சொல்லும் கதைகளை நம்ப இயலாது தமிழ்!”

“இது கதை இல்லை சார், இன்னும் சில நாட்கள் நம் சோதனையை தள்ளி வைத்து தேடலாம். நான் சென்ற நேரம் இருட்டி இருந்ததால் என்னால் அந்த பாதையைக் கண்டுபிடிக்க இயலவில்லை.”

“மன்னிக்கவும் தமிழ்! நமது இந்த ஆராய்ச்சியின் முடிவுக்காக உலகமே நம்மை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கின்றது. உங்களுடைய இந்த பேத்தல்களுக்காக எல்லாம் நம் சோதனையை தள்ளி வைக்க இயலாது. உங்களை இந்த சோதனை முடியும் வரை தீவுக்கு செல்ல தடை விதிக்கின்றோம். ஆனாலும் கப்பலில் இருந்து ஆராய்ச்சி பணிக்கு உதவுங்கள். Best of Luck!"

தற்கு அடுத்த வந்த சில நாட்கள் என் வாழ்வில் மறக்க இயலாதவை. இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு அந்த தீவையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனோ தூங்க முயற்சி செய்தால் அந்த அப்பாவிப் பெண்ணின் முகமே நினைவுக்கு வந்தது.

இன்று ஆய்வின் கடைசி நாள். மதியம் 1 மணிக்கு உலையை வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வெடித்தும் இருந்தது. பாதுகாப்பிற்காக கப்பல் தீவில் இருந்து பல நாட்டிக்கல் தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. சில மணிகளில் இந்தியாவில் இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களின் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து, எந்த கதிர்வீச்சும் இல்லை என அறிவிக்கப்பட்டது. எனவே தீவை நோக்கி மேல் தகவல்களுக்காக கப்பல் சென்று கொண்டிருக்கின்றது. தீவு இருந்த இடமே தெரியாமல் இருந்தது.

கப்பல் முன்னேறிக் கொண்டு இருந்தது. கப்பலின் முகப்பில் நின்று கொண்டு இருந்தேன். என் அருகில் சான்சஸூல் எதையோ பறிகொடுத்தவர் போல் தீவு இருந்த இடத்தை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். கடலில் ஏதோ மிதந்து வருவது போல் இருந்தது. அருகே வர வர அது என்னவென்று புரிந்தது...

“அது.. அதே தான்.. இது அந்த பெண் வைத்திருந்த பூக்கூடை”
எனது கத்தலில் அனைவரும் கப்பலின் முகப்பிற்கு வந்திருந்தனர். பூக்கடையை வீரர்கள் கப்பலுக்கு எடுத்து இருந்தனர். கப்பல் நகர நகர மரக்கதவுகளும், மரச் சாமான்களும் மிதந்து வந்து கொண்டு இருந்தன. இன்னும் தீவை நெருங்கும் போது மரங்களில் சிக்கிய வண்ணம் பிணங்கள் தெரிய ஆரம்பித்து இருந்தது. ஆதிவாசிகள் மாதிரியான ஆடைகளுடன்...

டிஸ்கி : இச்சிறுகதையை 2008 அக்டோபரில் எழுதி எனது வலைதளத்தில் பிரசுரித்து இருந்தேன். இங்கு மீண்டும் மீள்பதிவாக..

http://majinnah.blogspot.com/2008/10/blog-post_31.html

இக்கதையின் மூலம் கல்கி எழுதிய ஒரு சிறுகதையே.

Friday, January 15, 2010

ஆயிரத்தின் ஒருவன் படத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்க வேண்டும்,.

பண்டைய தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்கள் இருந்ததாக வரலாறுகள் சொல்கின்றன. சேரர்களைப் பற்றி அவ்வளவாக நமக்கு தெரியலை. ஆனால் சோழர்களைப் பற்றியும், பாண்டியர்களைப் பற்றியும் நிறைய படிச்சி இருக்கோம்.பள்ளியில் பாடமாகவும், அதற்குப் பிறகு பழைய சினிமா படங்களாகவும், பின்னர் வரலாற்று நாவலாகவும் இவர்களைப் பற்றி தெரிந்து கொண்டோம்.

இப்படி பல வழிகளில் மூவேந்தர்களைப் பற்றிய வரலாறுகளைப் படித்ததில் ஏனோ சில காரணங்களால் பாண்டியர்கள் வில்லன்களாகவே காட்டப்பட்டு இருப்பதாகவே எனக்குப் படுகின்றது. ஒருக்கால் எழுதியவர்கள் சோழ நாட்டினராகவும், சோழ மன்னர்களை மையமாக வைத்தும் எழுதுவதால் இருக்கலாமோ தெரியவில்லை.

எடுத்துக்காட்டுக்காகச் சொன்னால் பொன்னியின் செல்வனில் சோழ நாட்டின் வனப்பைச் சொல்லும் போதெல்லாம் ஒரு விதமாக பொறாமையே வரும். மலையே இல்லாத அந்த நாட்டின் காவிரி பாய்வதால் தான் இவ்வளவு வளமும் என்று இருக்கும். நம் பாண்டிய நாட்டைக் குறித்து இப்படிப் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று எரிச்சலாகக் கூட இருக்கும்.

அதே போல் சோழ மன்னர்களை வீராதிவீரர்களாகவும், பாண்டிய மன்னர்களை ஏதோ ஓடி ஒளியும் சோப்ளாங்கிகளாகவும் காட்டி இருப்பார்கள். இதுவும் எரிச்சலைத் தரும். எங்கள் மன்னன் வீரபாண்டியனை 18 வயசுப் பொடிப்பயல் ஆதித்த கரிகாலன் ஓட ஓட விரட்டிக் கொல்வதாக வரும் பொன்னியின் செல்வன் காட்சிகளில் எல்லாம் என் கோபம் உச்சத்தில் இருக்கும்.

சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் நீதி தவறி கோவலனை தண்டித்து, கண்ணகி மதுரையை எரித்து எல்லாம் எங்களுக்கு எதிராகவே அமையும். எங்கள் கோட்டைக் கொடிகள் கூட கண்ணகி மதுரைக்குள் வரும் போது மதுரைக்குள் வராதே என்பது போல் மறித்து கை காட்டுமாம். என்ன ஒரு துரோக சிந்தனை இளங்கோவுக்கு




மந்தாகினி, நந்தினி வரும் காட்சிகளில் எல்லாம் அவர்கள் மீதான பாசம் பீறிட்டு எழும். அதே போல் வில்லன்களாக காட்டப்பட்டு இருக்கும் ரவிதாசன் மீது எனக்கு என்னவோ எப்போதும் ஒருவித விசுவாசி போன்ற பரிதாபமே இருக்கும். ஆதித்த கரிகாலன் கொல்லப்படும் போது ஏனோ ஒரு குரூர திருப்தி(?) கிடைத்தது என்னவோ உண்மை தான்.

உண்மை வரலாற்றில் பாண்டியர்கள் தோற்று போய் சில காலம் கழிந்து சுந்தரபாண்டியன் காலத்தில் மீண்டும் சோழர்களை வென்றதாக வரலாறு கூறுகின்றது. நம்ம மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் அதைத் தான் காட்டுகிறார்களாம். எம்.ஜி.ஆரின் கடைசிப் படம் அதுதான். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படப்பட்டியலில் வைத்துள்ளேன். இணையத்தில் கிடைக்கவில்லை.

அதே போல் அகிலனின் கயல்விழி நாவலும் இக்கதையைப் பற்றியே பேசுகின்றது என்று சொல்வதால் அதையும் வாங்க ஒரு சோழ நாட்டவரிடமே (ஆயில்யன்..ஹிஹிஹிஹி)சொல்லி அனுப்பியுள்ளேன்.

சமீபத்தில் ரிலீஸான செல்வராகவனின் ’ஆயிரத்தின் ஒருவன்’ படமும் சோழ, பாண்டியர்களின் பிரச்சினையின் நீட்சியாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிகின்றது. வீர பாண்டிய மரபில் பிறந்த ரீமா சென் எஞ்சி இருக்கும் சோழர்களைத் தேடிச் சென்று அழிப்பது தான் கதையாம். அப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது. விரைவில் கயல்விழி நாவலைப் படிக்க வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்க்க வேண்டும்.

டிஸ்கி : சோழர்களின் மீது பொறாமை என்றால் சோழ நாட்டு மக்களின் மீதான வெறுப்பல்ல.. ஹிஹிஹி... அமெரிக்கா மீது வெறுப்பு என்பது அமெரிக்க குடிமக்களின் மீதான வெறுப்பல்ல என்பதைப் போன்றது. இதைப் புரிந்து கொள்ளலாம்.

...

Sunday, January 10, 2010

U/A பதிவர் டிப்ஸ் : சுவாரஸ்யமான பதிவு எழுதுவது எப்படி?

ப்ளாக்கை இவ்வளவு நாட்களாக ஒளித்து வைத்து என்னுடன் கண்ணாமூச்சி ஆடிய கூகுளை கண்டித்தும், திரும்பி தந்தததற்கு நன்றி தெரிவித்தும் கூகுளாண்டவருக்கு இப்பதிவை கடும் கோபத்துடன் சமர்ப்பிக்கின்றேன்.. ;-)



இயற்கையான விடயங்களைப் படித்து முகம் சுளிப்பவர்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம்.

இந்தப் பதிவு பதிவு எழுத வேண்டுமென்பதற்காக பதிவு எழுதுபவர்களுக்கானது அல்ல.... எழுத வேண்டுமென்பதற்காக பதிவு எழுதுபவர்களுக்கானது.. புரிந்தவர்கள் மேலும் தொடரலாம். இது முதல் கட்டம்.

சுவாரஸ்யமான பதிவு எழுதுவது என்பது ஒரு கலை. மற்றவர்களை வசீகரிக்கும் வண்ணமும், படித்தவுடன் கமெண்ட் போட வேண்டும் என யோசனை வரும் வண்ணம் சுவாரஸ்யமான பதிவுகள் எழுதுவது கொஞ்சம் கஷ்டமான ஒரு விடயம் தான். இது கிட்டத்தட்ட ஒரு சிற்பத்தை செதுக்கும் சிற்பி போலவும், ஓவியம் வரையும் ஓவியன் போலவும் ஒரு நுட்பமான செயல்.

இனி இரண்டாவது கண்டிசன்... இனி உங்களது ப்ளாக்குக்கு செல்லுங்கள். சொந்தமாக 50 இடுகைகளுக்கும் மேல் எழுதி இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது அல்ல...உடனடியாக கிளிக் செய்து நல்லா இருக்கு! குட்! உபயோகமான தகவல் என்ற பின்னூட்டங்களில் ஒன்றையோ :) :))) இதில் ஏதாவது ஸ்மைலியையோ போட்டு விட்டுச் செல்லலாம்

இரண்டாம் கட்டத்தைக் கடந்தும் தொடர்பவர்கள் இனி உன்னிப்பாக கவனிக்கவும். ஒரு பதிவுக்கு முக்கியமானது கரு. நாம் எதைப் பற்றி எழுதப் போகிறோம் என்பது தான் கரு. தமிழ் பதிவுலகில் மொத்தமே 6 கரு தான் உள்ளது. அதைத் தான் மாற்றி மாற்றி எழுத முடியும் என்று சூதாடி சித்தர் கூட சொல்லியுள்ளார். எனவே நமது அனுபவம், பக்கத்து வீட்டில் நடந்தது, அடுத்த தெருவில் நடந்தது, பள்ளி கல்லூரி அனுபவம், எங்காவது படித்தது, ஆங்கில நாவலில், கட்டுரையில் சுட்டது என கதைக்கான கருவை அந்தந்த சந்தர்ப்பங்களில் கண்டுபிடித்து வைத்துக் கொள்ளுங்கள். கரு கிடைத்தவுடன் எப்படி பதிவு எழுத வேண்டுமென்று மட்டும் சிந்திக்காதீர்கள்.

சரி கதை கிடைத்து விட்டது..இனி அதைப் பதிவாகஎழுத வேண்டும். இதில் தான் நிறைய பேர் கோட்டை விடுகின்றனர். கரு கிடைத்தவுடன் New Post கிளிக் செய்து உட்கார்ந்து விடுகின்றோம். இது தவறான அணுகுமுறை. கருவை முதலில் போட்டு ஊற வையுங்கள்.

காலையில் சீக்கிரமாக எழுங்கள். குளித்து நாஸ்தா எல்லாம் முடித்து விட்டு 9 மணி ஆபிஸ் என்றால் 10 நிமிடம் முன்னமே 8:50 க்கே சென்று விடுங்கள். உங்கள் மேலதிகாரி யாராவது வந்து இருந்தால் அவரிடம் சென்று ஒரு விஷ் பண்ணுங்கள். வேறு எங்கும் சென்று அரட்டை அடிக்காமல் உங்கள் இருக்கைக்கு வந்து வேலையைத் துவக்குங்கள். ஆணி இருந்தால் பிடுங்கவும். இல்லையெனில் ஆணி பிடுங்குவது போல் ஆக்ட் கொடுக்கவும். இடையில் மூத்த அதிகாரி யாராவது கிராஸ் செய்தால் சீரியஸாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு விஷ் பண்ணுங்கள்.

முடிந்தால் 9:15 க்குப் பிறகு உங்கள் மேலதிகாரிகளிடம் சென்று ஏதாவது முக்கிய டவுட் கேப்பது போல் கேளுங்கள். உங்கள் கீழ் அதிகாரிகளிடம் கண்டிப்பாக முடிந்திருக்காது என்று தெரியும் ஏதாவது விஷயத்தை முடிந்து விட்டதாக என்று விசாரியுங்கள். இதை 10 மணி வரைத் தொடருங்கள்.

இனி 10 மணிக்குப் பிறகு . ரீடரில் வேண்டியவர்களின் பதிவு இருந்தால் நல்லா இருக்கு என்றோ.. பதிவில் இருந்து சில வரிகளை கோட் செய்து கிரேட்! சூப்பர் என்று பின்னூட்டம் போடுங்கள். மீ த பர்ஸ்ட், மீ த 20! மீ த 100! மீ த 420! போடுவது சிறப்பானது.பின்னர் தமிழ் மணத்தைத் திறந்து அதில் உங்களுக்கு வழக்கமாக கமெண்ட் போடுபவர்களின் பதிவு இருந்தால் அதிலும் மேற்க்கண்ட கமெண்ட்களைப் போடுங்கள். கண்டிப்பாக எந்த பதிவையும் படிக்காதீர்கள்.

இதற்குள் மணி 10:30 ஆகி இருக்கும் இனி தான் முக்கியமான கட்டம். இப்போது ஆபிஸே அமைதியாக இருக்கும். கணிணித் திரையில் ஏதாவது ஸ்டேட்மெண்ட், கம்பைல் பண்ணாத கோடிங், அக்கவுண்ட்ஸ் இப்படி வைத்துக் கொள்ளுங்கள்.மெல்ல எழுந்து வயிறு சரியில்லாததைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு நேராக டாய்லெட்டுக்கு செல்லுங்கள்.

எதையும் செய்வதற்கு நல்ல இடம் முக்கியம். கலைஞர் கூட கவிதை எழுத கொடைக்கானல் போவதைக் கேள்விப்பட்டு இருப்போம். சினிமா பாடகர்கள் கூட 5 நட்சத்திர ஹோட்டல்களில் ??ட்டிகள் சூழ பாட்டெழுவதாக வதந்தி இருக்கும் முன்னால் எல்லாம்.. அது போல். டாய்லெட்டில் நல்ல WC உள்ள அறைக்கு செல்லுங்கள். ஐரோப்பிய மாடல் WC க்கள் மிகச்சிறப்பானவை. உள்ளே சென்றதும் அறைக் கதவை தாளிட்டு WC ல் வழக்கமாக அமர்வது போல் அமருங்கள்.(வழக்கமாக எப்படி அமர்வது என்ற கேள்வி இந்த இடத்தில் எழுப்பினால் கெட்ட கோவம் வரும்..)

இனி உங்கள் கைகளை உள்ளங்கை தெரிவது போல் முன்னால் நீட்டுங்கள் . இதே நிலையில் சுமார் 2 நிமிடங்கள் அமருங்கள். கிட்டததட்ட யோகாசன நிலை போல் இருக்கும். கண்டிப்பாக பதிவைப் பற்றி யோசிக்கவே கூடாது. (பின் குறிப்பு அ பார்க்க) இரண்டு நிமிடம் முடிந்ததும் அதே நிலையில் அமர்ந்து கொண்டு உங்கள் பதிவுக்கான கருவைப் பற்றி சிந்தியுங்கள். இனி ஆரம்பம் முதல் இறுதி வரை பதிவுக்கான மேட்டர் சரசரவென வந்து மனதில் அமரும்.




ஒரு பொருளை ஒரு இடத்தில் வைக்க வேண்டுமானால் அந்த இடத்தில் வேறு பொருள் இருக்கக் கூடாது என்பது இயற்கையின் நியதி. எனவே இயற்கையாக உங்கள் வயிற்றில் இருந்து ஏதாவது காலியானால் ஆனந்தமாக கழியுங்கள். அந்த சந்தர்ப்பங்களில் இடையிடேயே சேர்ப்பதற்கான விட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நல்ல தலைப்பும் அப்போது தான் கிடைக்கும்.

பதிவு கடைசி வரை இறுதியானதும் வேகமாக கதவைத் திறந்து உங்கள் இருக்கைக்கு விரையுங்கள்.. வெயிட்..வெயிட்.. சுத்தம் வேண்டியது இருந்தால் சுத்தம் செய்து விட்டு செல்லுங்கள். நீங்கள் உள்ளே வந்து வெளியே சென்ற நேரத்தையும் கணக்கில் கொண்டே உங்கள் பதிவு சூடாகும். இதற்கு ஒரு சுலபமான சூத்திரம் இருக்கு.. அதாவது நீங்கள் 15 நிமிடங்கள் இருந்திருந்தால் அது நல்ல பதிவு. அதற்குக் குறைவாக இருந்திருந்தால் சுமாரான பதிவு. 15 நிமிடத்திற்கும் அதிகமாக இருந்தால் அது நிச்சயம் சூப்பர் ஹிட் பதிவு தான்.

இருக்கைக்கு பயர் டிரிலில் ஓடுவது போல் வேகமாக சென்று அமருங்கள். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு பதிவை தட்டச்சுங்கள். கவனத்தை வேறு பக்கம் சிதற விடாதீர்கள். அவ்வளவு தான்! டன்! இப்போது நீங்கள் எழுதும் பதிவு கண்டிப்பாக சூடாகி விடும். ஹிட்ஸூம் அதிகமாக வரும்.

அந்த கஷ்டமான கணங்களை சுவாரஸ்யமான கணமாக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது. அந்த நேரங்களில் யோசித்தால் உங்களுக்கு பி.ந. சொல்லாலடனுனான பதிவுகள், கர்ண் கொடூர கவுஜைகள், ஆரம்பமும் இறுதியும் புரியாத கட்டுரைகள் எல்லாம் யோசனையில் கிடைக்கும். அதை அப்படியே பதிவாக மாற்றலாம்.

பின் குறிப்பு அ
அந்த நேரத்தில் நயன்தாரா,அசின் , மல்லிகாசெராவத், வித்யா பாலன் (அங்கிள்களுக்கு மட்டும் ) என்று எதையாவது நினைத்தால் அதன் பின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பாகாது.