Friday, August 6, 2010

சண்முகசுந்தரம் அண்ணனும் ஸ்டெல்லா அக்காவும்

சண்முக சுந்தரம் அண்ணனை எனக்கு எப்படித் தெரியும்னு யோசிச்சா கொஞ்சம் சிரிப்பாக் கூட இருக்கும். அண்ணனுக்கு எங்க தெரு தான்.. அண்ணனை எல்லாருக்கும் நல்லா தெரியும். நாங்க சின்ன வயசுல டவுசர் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருக்கும் போது அண்ணன் கல்யாண வயசில் இருந்துச்சு.. அண்ணன் எப்பவுமே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் தான் இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியின் ஏதோ பொறுப்பு வேற.. ஒரு சைக்கிள். பழைய ஹெர்குலிஸ் மாடல். அதில் அண்ணன் பெயர் போட்டு இருக்கும். சைக்கிள் பின்னாடி மர்க்காடில் அவங்க கட்சி சின்னம் கூட இருக்கும்.

இந்த தடவை ஊருக்கு போய் இருக்கும் போது அண்ணனோட பன்னிரண்டாவது நினைவு நாளாம். அவங்க கட்சிக்குன்னு ஒரு சிறு படிப்பகம் இருக்கும். தீக்கதிரோ, தினக்குரலோ ஏதோ ஒரு பத்திரிக்கை மட்டும் வரும். சின்ன வயசில் அண்ணன் கூப்பிட்டுப் போகும் போது படிச்சி இருக்கேன். அந்த படிப்பகத்திற்கு வெளியே தான் அண்ணனோட படத்துக்கு மாலை எல்லாம் போட்டு மைக் செட் வச்சு பாட்டு எல்லாம் ஓடுச்சு. நைட் அந்த மைக் செட்காரன் டப்பாக்குத்து பாட்டு எல்லாம் போட்டது தனி மேட்டர். காலையில் தான் அஞ்சலி. தெருவில் இருக்கும் பசங்கள் எல்லாம் அங்க தான் இருந்தானுக

சண்முகசுந்தரம் அண்ணன் நான் ஏழாப்பு படிக்கும் போது தான் செத்துப் போச்சு... எங்க ஊர் இரயில்வே தண்டவாளத்தில் ஆள் அடையாளம் காண முடியாதபடி அண்ணனோட பிணம் கிடந்தது. முகம், உடல் எல்லாம் சிதைந்து கிடந்தது. போட்டு இருந்த சட்டை, வேட்டி வச்சுத் தான் அண்ணன்னு கண்டுபிடிச்சாங்க.. . அண்ணனோட கட்சி உறுப்பினர் கார்டும் கூட இருந்ததாம்.

அண்ணனுக்கு கொஞ்சம் நல்ல பேர் தான் ஏரியாவில்.... ரேசன் கார்டு பிரச்சினை, சாதிச் சான்றிதழ் பிரச்சினை, பசங்களை ஸ்கூலில் சேர்க்கும் போது பிரச்சினை இப்படின்னு எல்லா பிரச்சினைகளிலும் அண்ணன் எல்லாருக்கும் உதவும். பாரம் ஃபில் பண்றதெல்லாம் அண்ணனுக்கு தண்ணி பட்டபாடு. அரசாங்க ஆபிஸ்களில் அண்ணனுக்கு நிறைய பேரைத் தெரியும்.

அண்ணன் ஏன், எப்படி இறந்தார்ன்னு நிறைய பேருக்கு சந்தேகம். கொஞ்சம் பேர் போலீஸ் கஸ்டடியில் செத்துப் போனதால் அவரைப் போலீஸே கொண்டு வந்து தண்டவாளத்தில் போட்டு விட்டதாக இன்றும் பேசிக் கொள்வார்கள். அப்போது ஏற்ப்பட்ட ஒரு சாதி தகராறில் ஒரு போலிஸ்காரரை உயிரோடு கொளுத்தியதாக அண்ணன் மீது குற்றச்சாட்டு. அண்ணனுக்கு சாதி எல்லாம் பிடிக்காது என்றாலும் எப்படியோ இந்த கேஸில் மாட்டி விட்டு இருக்காங்க.. அதனால் தான் போலிஸ் பிடிச்சு கொன்னுட்டதா பேச்சு. அப்பவெல்லாம் என்கவுண்ட்டர் கலாச்சாரம் இல்லையே?.



கொஞ்சம் அந்தரங்கமாக சண்முகசுந்தரம் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூடப் பேசிக் கொள்வார்கள். அண்ணனுக்கு ஒரு லவ் இருந்தது. அந்த பொண்ணு பேரு ஸ்டெல்லா. அந்த பொண்ணும் எங்க தெரு தான். தையல் கிளாஸ் போகும் போது படிப்பகத்தைத் தாண்டி தான் போகும். அப்ப அண்ணன் சரியா படிப்பக வாசலில் நிக்கும். ரெண்டு பேரும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். புன்னகையும் பிறக்கும். இதைப் பார்க்க எங்களுக்கு ஜாலியா இருக்கும். அண்ணன் சில நேரம் எங்களை விரட்டி விடும். ஸ்டெல்லா அக்கா வேறு மதம் என்பதால் ரெண்டு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு.

கடைசியில் ஸ்டெல்லா அக்காவுக்கு சிவகாசியில் இருந்து ஒருவனுக்கு கல்யாணம் முடிச்சி கொடுத்துட்டாங்க... அண்ணன் தாடி மீசையோட கொஞ்ச நாள் அலைந்தது. ஸ்டெல்லா அக்காவும் கொஞ்ச நாள் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்களாம். அப்புறம் கொஞ்ச நாள் லூசு மாதிரி இருந்தாங்களாம். அப்புறம் எங்கியோ காணாமப் போய்ட்டாங்களாம். அதனால் ஏற்பட்ட துக்கத்தில் தான் அண்ணன் செத்துப் போனதாவும் பேச்சு.

நானும் போய் நினைவஞ்சலியில் கலந்து கொண்டேன். இப்ப புதுசா இருக்கும் ஒன்றியத்தலைவர் அண்ணனின் வீரதீரபிரதாபங்களை எல்லாம் விளக்கிச் சொல்லிக்கிட்டு இருந்தார். அண்ணனை போலிஸ் அராஜகம் கொன்று விட்டதாகக் கூறி போலிஸையும் தாக்கிக்கிட்டு இருந்தார். சூட்டோட தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் உண்டியலும் குலுக்கப்பட்டது. என்னிடம் வந்த போது ’வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கீங்க.. தாராளமாப் போடுங்க’ன்னு மைக்கிலேயே சவுண்ட் வேற.. வேற வழி இல்லாம 50 ரூபாயைப் போட வேண்டி வந்துச்சு. எல்லாத்தையும் கேட்டுவிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்த போது உம்மாவும், பக்கத்து வீட்டு அக்காவும் அண்ணன் குறித்து பெருமையாகப் பேசிக்கிட்டு இருந்தாங்க... அவங்களுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி சென்னையில் நடந்ததைச் சொல்லலாம்னு நினைச்சுட்டு பின்ன விட்டுட்டேன். அதை உங்களுக்கு மட்டும் சொல்லி விடுகிறேன். சென்னையில் படிக்கும் போது ஞாயிறுகளில் தி.நகரில் சுற்றுவது வழக்கம். அப்படி ஒருநாளில் தான் அண்ணனையும், ஸ்டெல்லா அக்காவையும் அங்க பார்த்துட்டேன்.

வேகமா போய் அண்ணன் கையைப் பிடிச்சிக்கிட்டு விசாரிச்சேன்ன். ஸ்டெல்லா அக்காவுக்கு முகமெல்லாம் வேர்த்துப் போச்சு.. கூடவே ஒரு அஞ்சாறு வயசில் ஒரு பையன் வேறு. அண்ணனால் அக்காவை மறக்க முடியலையாம். அதோட போலிஸ் கேஸ் வேற.. அதனால் ரெயில்வே ஸ்டேசன் ஓரம் செத்துக்கிடந்த ஒரு பிச்சைக்காரனுக்கு அவரோட டிரஸ் எல்லாம் போட்டு, முகத்தைச் சிதைத்து இரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மாதிரி போட்டுட்டு ஸ்டெல்லா அக்காவோட பெங்களூருக்கு ஓடிப் போய்ட்டாராம். ரெண்டு வருஷம் கழிச்சு சென்னைக்கு வந்து செட்டில் ஆயிட்டாராம். யார்கிட்டயும் சொல்லிடாதன்னு கேட்டுக்கிச்சு.. ஸ்டெல்லா அக்காவும் ஒரு அழுகையோட இப்பதான் சந்தோசமா இருக்கேன். யார்கிட்டயும் காட்டிக் கொடுக்காதன்னுச்சு. சரின்னு விட்டுட்டேன். நீங்களும் இதை மறந்துடுங்க என்ன..

Wednesday, August 4, 2010

பழைய காதல் கோட்டை ஒன்று

அப்ப ஊரில் கடையில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம். காலையில் 7 மணிக்கு நான் தான் கடையைத் திறக்கனும். வழக்கம் போல் அன்றும் கடையைத் திறந்து சாதனங்களை எல்லாம் வெளியில் வைத்து விட்டு முன் பகுதியை விளக்குமாற்றால் கூட்டிக் கொண்டு இருந்தேன். கடை ஓனர் 8:30 க்குத் தான் வருவார் என்பதால் கடையைத் திறந்து சுத்தம் செய்து வைக்கும் வேலை என்னுடையது. எல்லாம் முடிந்ததும் ஒரு டீயும், மசால் வடையும் சாப்பிடலாம். பேவரைட் அயிட்டம் அது. அதனால் வேகமாக பெருக்கிக் கொண்டு இருந்தேன்.

அப்பத் தான் நம்ம பரணி வந்து சேர்ந்தான். பரணியைத் தெரியாதவங்க இங்க போய் தெரிஞ்சுக்கங்க.. தெரிஞ்சவங்க மேல படிக்கலாம். காலை ஏழு மணிக்கே அவன் வந்தது ஏனோ ஒரு வில்லங்கம் போல இருந்தது. என்னடானு கேட்டால் மென்னு முழுங்குறான். கையில் ஒரு பேக் வேற வச்சு இருக்கான். பக்கத்து தெரு லாவண்யாவோட ஓடிப் போகும் ப்ளான் ஏதும் வச்சு இருக்கானோன்னு ஒரு டவுட்டு வேற மைல்டா ஓடுது. ஆனாலும் அந்த புள்ளைக்கு இருக்கும் தைரியத்தில் 100 ல் ஒரு மடங்கு கூட இந்த பயலுக்கு இருக்காது என்பதால் அதை கூட்டிய விளக்குமாற்றாலேயே அழித்து விட்டேன்.

சரி.. உட்காருடான்னு சொல்லி ஒரு டீயும் ஆர்டர் கொடுத்து குடிக்கச் சொல்லியாச்சு.. உறிஞ்சி உறிஞ்சி குடிக்கிறேன். முழியே சரியில்லை. நல்ல நேரத்திலேயே திருட்டு முழி... இப்ப பேய் முழி வேற... பயபுள்ள கையில் இருக்கும் பேக் எங்காயவது ஆட்டையைப் போட்டதா இருக்குமோன்னு ஒரு டவுட்டு. பக் னு ஆயிடுச்சு... ஆகா நம்மளையும் சேர்த்து மாட்டி விட்டுடுவானோன்னு பயம் வேற.. டீக்கிளாஸை பிடிங்கிட்டு விரட்டிலாமான்னு யோசனை வேற.. என்ன ஆனாலும் பரவாயில்லை விசாரிக்கலாம்னு விசாரிச்சா உண்மையை கக்கிட்டான்.

பேக் உண்மையில் திருடப்பட்டதாம். ஆனாலும் திருடியது அவன் இல்லையாம். கேப்பையில் நெய் வடியுது பழமொழி நினைவில் வந்தாலும் பரணி நம்மிடம் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது. எங்கள் ஊரைக் கடந்து போகும் ஒரு பஸ்ஸில் இருந்து இந்த பேக்கை ஆட்டையைப் போட்டுள்ளான் ஒரு X . அதில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டான். பேக்கில் ஒரு பெண்ணின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களும் இன்னும் சில முக்கிய தஸ்தாவேஜ்களும் இருக்க அவன் இவனிடம் கொடுத்துள்ளான். இந்த நல்லவன் அதை இங்கு கொண்டு வந்து விட்டான்.

அந்த X எவன்டா என்றால் சொல்ல மாட்டேன் என்கின்றான். அவன் இவனிடம் மிரட்டி சத்தியம் வாங்கி விட்டானாம். பெரிய சத்தியவான், அரிச்ச்ந்திரன் பரம்பரை.. பிட் படத்திற்கு போகும் போது மட்டும் ஆயிரத்தெட்டு பொய் சொல்லிட்டு வருவான். சரி கொண்டாடான்னு சர்டிபிகேட்களைப் பார்த்தால் அது ஒரு மலையாளப் பெண்ணுடையது. திண்டுக்கலில் ஒரு கல்லூரியில் மேற்படிப்பு படிக்கும் அதன் சொந்த ஊர் தொடுபுழா. திண்டுக்கலில் இருந்து தொடுபுழா செல்ல எங்கள் ஊர் வழியா சென்று இருக்கின்றது. அந்த கேப்பில் எவனோ பேக்கை சுட்டு இருக்கின்றான்.



இரண்டு மேதாவிகளும் சேர்ந்து யோசித்த போது T.Meena என்ற அந்த மல்லுவின் சோகமான அழும் முகம் தான் நினைவில் வந்தது. பாவம் சர்டிபிகேட்டை தொலைத்து விட்டு எங்கே அழுது கொண்டு இருக்கின்றதோ என்று எங்கள் இருவருக்கும் ஒரே ஃபீலிங். காலேஜ் படிக்க முடியாம கடையில் அதை நினைத்து ஃபீல் பண்ணும் எங்களுக்கு இந்த ஃபீலிங் புடிச்சி இருந்தது. சரி அந்த பெண்ணோட கண்ணீரைத் துடைக்கனும்னு முடிவு செய்தாச்சு.

அட்ரஸ் இருக்கு... போன் நம்பர் ஏதும் இல்லை. திண்டுக்கல் ஹாஸ்டல் அட்ரஸூக்கும், தொடுபுழா வீட்டு அட்ரஸூக்கும் தந்தி கொடுக்கலாம்ன்னு ரெண்டு நல்லவிங்களும் ஏகமனதா முடிவு பண்ணிட்டோம். கடை ஓனர் வந்ததும் வெளியே போறதா சொல்லிட்டு நேரா வள்ளுவர் சிலை அருகில் இருக்கும் தலைமை தபால்-தந்தி அலுவலகத்திற்கு போயாச்சு.. அங்க இருந்த ஆபிஸரு ஃப்ரம் அட்ரஸ் வேணும்னு சொல்லிட்டார். வீட்டு அட்ரஸ் கொடுத்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு எங்க கடை அட்ரஸ் கொடுத்தாச்சு.

கடைக்கு வந்தா ஓனரு லெப்ட் ரைட் வாங்குறாரு... கடை அட்ரஸை ஏன்டா கொடுத்தீங்கன்னு... சாயங்காலம் ஆச்சு.. ரெண்டு அம்பாஸிடர் காரில் தடிதடியா 5,6 சேட்டனுங்க கடைக்கு வந்து இறங்குறாங்க... அதுவரை என் கூட உட்காந்து காதல் கோட்டை கற்பனை பண்ணிக்கிட்டு இருந்த பரணி பயல் எஸ்கேப் ஆயிட்டான். பேக் எல்லாம் செக் பண்ணிப் பார்த்துட்டு சர்டிபிகேட் எல்லாம் கரெக்டா இருந்ததில் திருப்தி. ஆனால் அதில் இருந்த ஒரு தங்க மோதிரமும், கொஞ்சம் பணமும் மிஸ்ஸிங்காம். பேக் எப்படி எங்களுக்கு கிடைச்சதுன்னு பெருமையா விளக்கம் வேற கொடுத்தேன்.

எத்தனை மணிக்கு கிடைச்சதுன்னு கேட்டப்ப 7 மணிக்கு கொண்டு வந்ததைக் கணக்கில் வச்சு 6 மணிக்கு ரோட்டில் கிடந்ததுன்னு சொல்லியாச்சு.. அதில் ஒரு சேட்டன் .. தம்பி உங்க ஊரை மீனா வந்த வண்டி 6:30 த்தான் கடந்து இருக்குன்னு பொசுக்குன்னு சொல்லிட்டார். எனக்கு வதக்கு ஆயிடுச்சு.. நல்ல வேளை வேற ஒன்னும் சொல்லாம பேக்கை எடுத்துட்டு போய்ட்டாங்க.. ஒரு பத்து ரூவா கூட கொடுக்கல..

சரி நம்ம அட்ரஸூக்கு மீனாகிட்ட இருந்து லெட்டர் ஏதாவது வரும்னு ரொம்ப நாள் பரணி காத்துக்கிட்டு இருந்தான்.. ம்ஹூம் ஒன்னு கூட வரலை.. நானும் காத்துக்கிட்டு இருந்து விட்டுட்டேன். இப்ப திடீர்னு நினைவு வந்து ஆர்குட், பேஸ்புக் எல்லாம் தேடிக்கிட்டு இருக்கோம் ரெண்டு பேரும்.. இன்னும் கிடைக்கலை. கிடைச்சா சொல்லுங்க பாஸ் பேரு T.மீனா.. ஊரு தொடுபுழா.. காலேஜ் படிச்சது திண்டுக்கல். நன்றி வணக்கம்.