Friday, June 12, 2009

அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க ( உரையாடல் போட்டிக்கான கதை)

"வாய்யா ! வா! என்ன திடீர்னு இந்த பக்கம்.. எப்பவுமே கூட இருக்கிற ஆளு தானே.. ஸ்பெஷலா வெளியே இருந்து வந்து உட்கார்ந்து இருக்க”

“ஒரு அழைப்பு கொடுக்க வந்தேன் ... நீங்க ரொம்ப முக்கியமான ஆளாச்சே.. அதான் ஸ்பெஷலா கூப்பிடலாமுன்னு”

“அதுவும் சரி தான்... சொல்லு.. என்ன விஷயம்?”

“எனக்கு அடுத்த வாரம் சஷ்டியப்த பூர்த்தி விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க... எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லைன்னாலும் என்னோட பசங்க, பேரக் குழந்தைகளுக்காக இதையெல்லாம் ஒத்துக்க வேண்டி இருக்கே.... என்னோட கனவு வாழ்க்கையில் அடுத்த மாதத்தோடு 60 வயசு முடியுது..கண்டிப்பா வரனும்”

“என்னோட நெற்றியில் ஏதாவது இருக்கா பாருங்க..”

“நெற்றியில்.....ம்ம்ம் ஒன்றுமில்லை.. புருவத்திற்கு மேல் ஒரு சிறு தழும்பு மட்டும் உள்ளது”

“அதில்லை... நெற்றியில் இளிச்சவாயன், ஏமாளி இப்படி ஏதாவது எழுதி இருக்கா?

“என்ன இப்படி சொல்றீங்க?”

“ஆமா.. நீ பிறந்தது முதல் 30 வருடமா என்னிடமே இருக்குற மனசாட்சி நீ.. என்னிடமே அறுபதாம் கல்யாணம் என்கிறாயே?”


“ம்ம்ம் அதுவும் உண்மை தான். உங்களுக்கு தெரியாதது இல்ல..”

“இருந்தாலும் நீயே சொல்லு என்ன விஷயம்ன்னு”

“எல்லாமே ஒரு கனவு வாழ்க்கையா இருக்கு.. இன்றைக்கும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கு. அவளை சந்தித்த அந்த முதல் கணங்கள்.. இந்தி தேர்வுகள் பிப், ஆகஸ்ட் இரண்டாம் சனி, ஞாயிறில் தான் நடக்கும்.. அப்படியான ஒரு 1991 ஆகஸ்ட் 11 ந்தேதி.. ஞாயிற்றுக் கிழமை தான் அவளைப் பார்த்தேன். என்னோட பிரவேசிகா தேர்வுக்கான நேரம். நான் தேர்வு எழுதும் இடத்தில் தான் அவளும் தேர்வு எழுதினாள். முதலில் பார்த்ததுமே ஏனோ ஒரு பிடிப்பு ஏற்ப்பட்டு விட்டு இருந்தது.”

“ம்”

“முதலில் கூப்பிட்டதே ‘அண்ணா’ என்று தான்.. இப்போதும் பேசும் போது சொல்லி கிண்டல் செய்வாள். Viva தேர்வுக்கு எனக்கு அடுத்து அவளது பெயர். சீக்கிரம் போக வேண்டுமென்பதற்காக என்னிடம் வந்து அவள் முதலில் போக அனுமதி கேட்டாள்.. விடலையே நானு.. ஆண் வர்க்க திமிர் அப்பமே..”

“தெரிந்தது தானே.. மேலே சொல்”

“1979 ல் பிறந்த எனக்கு அப்ப என்ன வயசு இருக்கும்ன்னு நீங்களே பார்த்துக்கங்க.. அடுத்த விசாரத் வகுப்பு போகும் போது பார்த்தால் அவளும் எங்க வகுப்பிலேயே சேர்ந்து இருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி... அப்போது ஆரம்பித்தது அந்த பிணைப்பு. கண்களால் கவிதைகளைப் பகிர்ந்து கொண்ட நேரம். அடுத்த இரண்டு ஆண்டுகள் இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறந்து கொண்டு இருந்த காலம். அவளது சிரிப்பும், முகமும் என்னை அவளை நோக்கி மேலும் மேலும் இழுத்துச் சென்றது. சொல்லாமலேயே இருமனங்கள் இணைந்தன. வாழ்க்கையின் ஏதோ புரியாத எல்லைகளை அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டேன்.. அவள் பிரிந்து செல்லும் வரை.”

“நல்லவேளை... அந்த பொண்ணு தப்பிச்சிட்டா”

“ஆமா.. பிரவீன் முடிந்ததும் அவள் பறந்து விட்டாள். 1993 ஆகஸ்ட்டுக்குப் பிறகு இன்று வரை அவளைக் காணும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. எங்கோ மாயமாகி விட்டாள். அவளது சதை, இரத்தம், எலும்பாலான உடல் மட்டுமே என்னை விட்டுப் பிரிந்து இருந்தது. ஆனால் அவளுடனான எனது கனவு வாழ்வுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. ஒரு மானசீக உறவாக, நல்ல நிலத்தில் இடப்பட்ட விதையாக, அந்த நினைவுகள் ஒரு விருட்சமாக மாறி இருந்தன. அவ்விருட்சம் நிலத்தில் ஆழப் புதையப் போகும் ஒரு பரந்து விரிந்த ஆலமரமாக ஊன்றப் போவதை அறியாமலேயே இருந்தேன்.”

“ம்ம்ம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கு.. மேல சொல்லு”

“அவளுடைய கண்களோடு பேசிக் கொண்டு இருந்த அந்த நாட்களை நினைவில் வைத்துக் கொண்டே எனது வாழ்வு கழிந்தது. ரம்மியமான வாழ்க்கை. அவளுடனான எனது பிணைப்பை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பல மொழிகளிலும் அதற்கான வார்த்தையைத் தேடி களைத்துப் போய் விட்டேன். காதல், பாசம், நேசம் போன்ற வார்த்தைகள் எல்லாம் ஏதோ குறைவுடையவையாகவே எனக்கு தோன்றுகின்றது.”

“அந்த உறவு விருட்சம் மெல்ல மெல்ல வளர்ந்து செடியாகி, மரமாகி, பூத்துக் குலுங்க ஆரம்பித்து இருந்தது. இலையுதிர்காலமும், வசந்தகாலமும் மாறி மாறி வரத் துவங்கி இருந்தன. எப்போது எப்படி எங்கு துவங்கியது என்று சொல்லத் தெரியவில்லை. அவளை நினைக்காத கணங்கள் கடினமானதாக இருந்தன. அவளது நினைவுகள் என்னை விட்டு அகலாமல் இருக்க எனது கணிணியில் கடவுச்சொல்லாகவே அவளது பெயர் மாறி இருந்தது.”

“என்ன இழவோ.. இலக்கியம் மாதிரி என்னவோ பின்னாத்தற.. நேரா மேட்டருக்கு வா”

“வேலை நிமித்தம் 1998 ல் துபாயில் போய் இறங்கினேன் என் கனவு வாழ்க்கையையும் மனதில் நிறைத்தபடி.. பெற்றோர்களின் தீவிர எதிர்ப்பை முறியடித்து.. அவர்கள் முழு சம்மதத்துடன் திருமணம், பின்னர் குழந்தைகள் என கண ஜோராக வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்ந்தது. என்னவளின் விருப்பத்திற்குத் தகுந்தாற் போல் இழைத்து இழைத்து கட்டப்பட்ட வீடு.. வீட்டின் முன் தோட்டம், மொட்டை மாடி ஊஞ்சல்கள் என நினைவுகளில் மறக்காதவை.”

“நான் வேலையில் இருந்து களைத்துப் போய் வரும் போது வியர்வையை அவள் துடைத்து விடும் தருணங்கள், மழையில் வேண்டுமென்றே நனைந்து கொண்டு வந்து அவளது முந்தானையில் துடைத்துக் கொள்வதற்காக ஒளிந்து கொள்ளும் தருணங்கள், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் அவளிடம் செல்லமான திட்டு வாங்கிக் கொண்டே எழ வேண்டுமென்பதற்காக போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கணங்கள் என பெட்ரோலும், ஆயில் வாசனையுமான எனது கணங்கள் அவளது நினைவில் மல்லிகை, ரோஜாவின் நறுமணங்களுடன் கனவில் நகர்ந்தன.”

“வெயிட்..வெயிட்... இதெல்லாம் என்னது? கற்பனையிலேயே இம்புட்டு வாழ்க்கையா வாழ்ந்த?”

“ஆமாம்.. தனிமையாக இருக்கும் நேரங்களில் எல்லாம் நான் தனிமையை சிறிது கூட உணரவில்லை. இருவரும் இணைந்து சுற்றிய ஊர்கள், ஜாலியாக சுற்றிய வெளிநாடுகள் என அசை போட வைக்கும் நினைவுகள். அவளது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு தொலைகாட்சி பார்க்கும் அந்த கணங்களும், அவளது கை விரல்களின் கோதுதல்களில் லயித்து உறங்கி விடும் பொழுதுகளும், அவ்வாறு தூங்கிப் போய் எழும் போது அவள் காட்டும் பொய்க் கோபமும், மொட்டை மாடி மழைத் தூறல் நனைதல்களும், அதீத உணர்ச்சிகளுடனான மதிய நேர கூடல்களும் நெஞ்சை நிறைத்து இருக்கின்றன.”

“எனக்கே ஒரு மாதிரி இருக்குய்யா... மேல சொல்லு”

“இரண்டு குழந்தைகள்.. ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக.. குழலினிது யாழ் இனிது என்பர் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவர் என்பது நம் மூத்தோர் சொன்னது. முற்றிலும் உண்மை. நான் குழந்தைகளை கண்டிக்கும் போது அவளும், அவள் குழந்தைகளைக் கண்டிக்கும் போது நானும் குழந்தைகளுக்காக பரிந்து பேசுவதும், பின்னர் ரகசியமாக சமிக்ஞை செய்து கொள்வதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சில உணர்வுகள்.”

“ம்”

“உடல் ரீதியான எந்த தேவைகளும், நினைவுகளும் அற்றதாகவே அந்த வாழ்க்கை இருந்தது. அவளுக்கு பிடிக்காதவைகளை நான் செய்வதில்லை. எனக்குப் பிடிக்காதவைகளை அவள் செய்வதில்லை. புகை, மது, சூது,பிற மாது போன்றவை அவளுக்கு முற்றிலும் விருப்பமில்லாதவை. அவளுக்கு பிடிக்காது என்பதற்காக இவைகளை விட்டும் முற்றிலும் விலகி இருந்தேன். எனது கனவு வாழ்வில் மட்டும் இன்றி நிஜத்திலும் அவளுக்காக இவைகளை விட்டும் தள்ளியே இருந்தேன். ஒரு அறிஞன் கூறுவான் “ ஒருவன் தவறு செய்யவில்லை என்று கூறினால், அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பொருள்”. ஆனால் மேற்சொன்னவைகளுக்கு வாய்ப்புகள் தானாகவே வந்த போதும் எந்த சிறு குழப்பமும் இல்லாமல் அவைகளை உதறித் தள்ளினேன்.. எல்லாம் எனது கண்ணம்மாவிற்காக.. ஆங்.. சொல்ல மறந்து விட்டேன்.. என்னவளை செல்லமாக கண்ணம்மா என்று தான் கூப்பிடுவேன். எனக்கும், அவளுக்கும் பாரதியை மிகவும் பிடிக்கும்.”

“பாரதியின் அடிமையா நீ.. அதான் இப்படி கற்பனையில மிதக்குற”

“ஆம்.. இருவருக்கும் இடையே அவ்வப்போது நடக்கும் ஊடல்களுடன் சண்டை நடக்கும். எனக்கு அவளுக்கு பிடித்த மாதிரி வாங்கித் தரும் சட்டைகளும், அவளுக்கு பிடிக்காத கலரில் எனக்கு பிடித்த மாதிரி வாங்கித் தரும் நீல நிற சேலைகளும் சண்டைகளை வளர்க்கும்.. ஒரு விதமான இன்ப அனுபவங்களோடு.. எனக்காக அவள் வாங்கி வந்த கல்கி, அசோகமித்திரன், JK, சுந்தர ராமசாமி, முதல் கொண்டு சுஜாதா, வைரமுத்து வரையிலானவைகளும், அவளுக்காக நான் வாங்கிய Mills & Boon, Ayn Rand, Jeffery Archer, Sidney Sheldon, J._K.Rowling போன்றவை எங்களது வீட்டை நிறைத்து வைத்திருக்கும்.”

“வாவ்... ரசனையான தம்பதிகளா இருந்து இருக்கீங்களே..”

“இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தி திருமணமும் செய்து கொடுத்தாகி விட்டது. இருவரின் மூலமும் எங்களுக்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். வாழ்க்கை இன்பகரமாக சென்று கொண்டு இருந்தது.. 2005 வரை..”

“ஏன்? என்னாச்சு?”

“அப்போது தான் நிகழ்காலம் உறைக்க ஆரம்பித்தது. உலக வாழ்க்கையும், கனவு வாழ்க்கையும் இணையாதாமே... வீட்டில் எனக்கு பெண் பார்க்கத் துவங்கி இருந்தனர். அவர்களிடம் சொல்லவா முடியும்.. எனது கனவு வாழ்க்கையில் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று.. இந்த ஜென்மத்தில் அவளை மறக்க முடியும் என்று தோன்றவில்லை.. அவள் எங்கிருக்கின்றாள் என்று தெரிந்திருந்தாலும் பார்க்க வேண்டுமென்றோ, பேச வேண்டுமென்றோ தோன்றாத அளவில் அவள் என்னுள் தொடச்சியான கணங்களில் நிறைந்து இருக்கின்றாள்”

“திருமணமும் நடந்தது. நிஜ வாழ்க்கைத் திருமணம் என்னை ஏமாற்றிடவில்லை. அன்பான கணவனாக மனைவிக்கும், பாசமுள்ள தந்தையாக மகனுக்கும் வாழ்கின்றேன்.”

“அடப்பாவி.. நல்லவேளை அப்பவாவது நிகழ்காலத்திற்கு வந்தியே”

“அதே நேரத்தில் கனவு வாழ்க்கை எந்த குறையும் இலலாமல் இன்று சஷ்டியப்த பூர்த்தி வரை வந்து விட்டது. கண்டிப்பாக அதற்கு வந்து விடுங்கள்”

“நான் இல்லாமலா.. கண்டிப்பா உன் கூடவே எப்போதும் போல் இருப்பேன்.. ஜமாய்!.. வாழ்த்துக்கள்.. உன்னிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது”

“சொல்லுங்களேன்”

“நகுலனின் டைரியில் இருந்து..
27-12-73
வரிகள்

எப்பொழுதும் உன் நினைவு - நீ எங்கேயோ இருக்கிறாய் - நான் எங்கேயோ இருக்கிறேன் - நீ மணமானவள் - நான் மணமாகாதவன் - நான் உன்னைக் காதலித்தேன் என்பதில் தவறில்லை.. (இப்போதும் காதலிக்கிறேன் - என்று சொல்வதில் பொய்யில்லை) -அதைப் போலவே நீ என்னைக் காதலிக்கவில்லை, என்னிடம் அன்பு காட்டவில்லை, அலக்ஷியம் செய்கிறாய் என்று சொல்வதும் தவறு. நம்மிடையே உள்ள உறவு தான் என்ன?...
என்றோ ஒருநாள் உன்னை நான் பார்த்தேன். அன்று என் கதை முடிந்தது.”

முற்றும்.

(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

33 comments:

Thamiz Priyan said...

இருபது நாட்களாக எழுத முயற்சித்து இறுதியில் ஒரு வழியாக முழு திருப்தி இன்றி கதை வெளியே வந்து விட்டது.. கிட்டத்தட்ட பிரசவ வேதனையை அனுபவித்து இருக்கின்றேன்...

இதில் வரும் அனைத்தும் முற்றிலும் கற்பனையே.

ஆயில்யன் said...

பாஸ் ஒரு தெய்வீக காதலை,அப்படியே ரசிச்சு ரசிச்சு கற்பனை கலந்து ஓட விட்டிருக்கீஙக !


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ! :)

ஆயில்யன் said...

//
இதில் வரும் அனைத்தும் முற்றிலும் கற்பனையே.//


ச்சே! ச்சே! முழுவதும் உண்மை அப்படின்னு சொல்றதுக்கு இதுல ஒண்ணுமேஏஏஏஏஏஎ இல்லீங்களே தம்பி!

நாமக்கல் சிபி said...

//
இதில் வரும் அனைத்தும் முற்றிலும் கற்பனையே.//

:))

anujanya said...

வித்தியாசமான சிந்தனை மற்றும் கதை. பரிசு வெல்ல வாழ்த்துகள் தமிழ்.

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

super boss

கற்பனைல கூட துபாய் தான் போவாங்களா பாஸ்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்

வெற்றி said...

சபாஷ் தம்பி,

கலக்கிட்டீங்க.

நிச்சயம் பரிசு உண்டு.

தமிழன்-கறுப்பி... said...

hooooooooooooooooooo

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் தல...

ராமலக்ஷ்மி said...

//அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க//

வந்து விட்டோம் வாழ்த்துக்களுடன்!

பின்னாடியே வந்து கொண்டிருக்கிறது பரிசு!!

பாராட்டுக்கள் தமிழ் பிரியன்.

மங்களூர் சிவா said...

கனவா ஒரு கமெண்ட் போட்டுக்கிறேன் இப்போதைக்கு.

நிஜத்துல அப்புறமா வரேன்!

தேவன் மாயம் said...

கதை வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

Sumathi. said...

ஹாய் தமிழ்,

//கற்பனைல கூட துபாய் தான் போவாங்களா பாஸ்.//
அதானே நல்லா கேளுங்கப்பா....

சரி சரி , உங்களுக்கே பரிசும் பாராட்டும் என இப்போதே தெ(அ)றிவித்து விட்டேன் பா..சரியா...

akila jwala said...

kathal enum inimayana unarvu endrum nummai puthithai uyirpiththukkondu irukum ... kathalai polave ungal sirukathaiyum azakai irukkirathu.. akila

ஸ்ரீ.... said...

அருமையான சிறுகதை. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

வெண்பூ said...

நல்ல கதை தமிழ்... நடை இன்னும் கொஞ்சம் தேத்தியிருக்கலாம்.

சென்ஷி said...

கலக்கல் தமிழ்!!!

வால்பையன் said...

என்ன தான் கற்பனைன்னு சொன்னாலும் தற்போது போட்டியில் கலந்து கொண்டிருக்கும் கதைகளில் முக்கால்வாசி அனுபவவாசனையுடன் தான் இருக்கிற்து!

கதை சொல்லியாக நீங்கள் சொன்னதை உங்கள் நண்பரை போல் கதைக்குள் நுழைந்து ரசித்தேன்!

கானா பிரபா said...

//
இதில் வரும் அனைத்தும் முற்றிலும் கற்பனையே.//

இதை நாங்க நம்மணுமாக்கும் சரி கற்பனையா நம்புறோம் :)

போட்டியில் வெற்றி உங்களுக்கே

gulf-tamilan said...

பரிசு வெல்ல வாழ்த்துக்கள் !!!

சுட்டிப் பையன் said...

கலக்கல்ஸ்....
அப்படியே இதையும் பாருங்கள்....

http://suttippayan.blogspot.com/2009/06/blog-post.html

நாடோடி இலக்கியன் said...

வித்யாசமான சிந்தனை.
புரியாத வார்த்தகளை பயன்படுத்தாமலே நல்லதொரு இலக்கியத் தரமான படைப்பு நண்பா...
நல்ல நடை....

வெற்றி பெற வாழ்த்துகள்..!

நாணல் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா... :)

//இருபது நாட்களாக எழுத முயற்சித்து இறுதியில் ஒரு வழியாக முழு திருப்தி இன்றி கதை வெளியே வந்து விட்டது.. கிட்டத்தட்ட பிரசவ வேதனையை அனுபவித்து இருக்கின்றேன்...

இதில் வரும் அனைத்தும் முற்றிலும் கற்பனையே.//

:)

S.A. நவாஸுதீன் said...

அருமையான கதை தல. வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒரு சில இடங்களில் தட்டச்சு பிழை. மாற்றிவிடுங்கள். உதாரணம்

"அவளுக்கு பிடிக்காதவைகளை நான் செய்வதில்லை. எனக்குப் பிடிக்காதவைகளை நான் செய்வதில்லை"

அவள் செய்வதில்லை

SUMAZLA/சுமஜ்லா said...

///நான் வேலையில் இருந்து களைத்துப் போய் வரும் போது வியர்வையை அவள் துடைத்து விடும் தருணங்கள், மழையில் வேண்டுமென்றே நனைந்து கொண்டு வந்து அவளது முந்தானையில் துடைத்துக் கொள்வதற்காக ஒளிந்து கொள்ளும் தருணங்கள், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் அவளிடம் செல்லமான திட்டு வாங்கிக் கொண்டே எழ வேண்டுமென்பதற்காக போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கணங்கள் என பெட்ரோலும், ஆயில் வாசனையுமான எனது கணங்கள் அவளது நினைவில் மல்லிகை, ரோஜாவின் நறுமணங்களுடன் கனவில் நகர்ந்தன///

அற்புதமான தாம்பத்தியத்தை அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். இன்றளவும் காசுபணத்துக்காக இளம் மனைவியைப் பிரிந்து, வெளிநாடு செல்லும் இளைஞர்கள், இப்படித்தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதை ஆங்கிலத்தில், Nostalgia என்பார்கள். இது மனநோய் என்று சொல்ல முடியாத ஒரு மனநோய்.

நானும், என் பள்ளிப் படிப்பின் மீது இருந்து அதிகப்பட்ச விருப்பினால், திருமணத்துக்குப் பின்னும், இதே போல கற்பனையில் வெகு நாட்கள், பள்ளிக்கு சென்று வந்தேன். தூங்கும் நேரத்தில், பள்ளி நினைவுகளைக் கண்முன் கொணர்ந்தால், நிம்மதியான தூக்கம் வரும். அந்நினைவுகளில் நான் சுற்றுலா சென்றதும் உண்டு.

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

தல கலக்கிட்டீங்க....கொஞ்சம் கொஞ்சமா உங்க எழுத்து மெருகேறிக்கொண்டே போகுது. உங்க வலைப்பூவை நீங்க ஆரம்பிச்ச காலத்தோடு ஒப்பிடும் போது இப்ப மிக உயர்ந்த இடத்துக்கு வந்து இருக்கீங்க. மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

ஒரு விஷயம் மட்டும் இடிக்குது தல....நீங்க அடிக்கடி புனைவு என்ற பெயரில் காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதுறதை பார்த்தா நிஜமாவே திருமணத்திற்கு முன்பு ஒரு காதல் இருந்திருக்குமோ? தாடி வேற வச்சிக்கிட்டு திரியிறதால ஏகப்பட்ட டவுட் வருது தல:)

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் on June 13, 2009 8:00 PM said...

ஒரு விஷயம் மட்டும் இடிக்குது தல....நீங்க அடிக்கடி புனைவு என்ற பெயரில் காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதுறதை பார்த்தா நிஜமாவே திருமணத்திற்கு முன்பு ஒரு காதல் இருந்திருக்குமோ? தாடி வேற வச்சிக்கிட்டு திரியிறதால ஏகப்பட்ட டவுட் வருது தல:)
///

ச்சே!

ச்சே!

அப்படியெல்லாம் நினைக்காதீங்க தம்பி உண்மையாவேஏஏஏஏஏஏஏஏஏ அப்படி எல்லாம் 1ம் கிடையாது அவுருதான் முற்றிலும் கற்பனையேன்னு வேற சொல்லியிருக்காருல்ல!

கோபிநாத் said...

தல

கலக்கிட்டிங்க..நல்ல எழுத்து நடை..;)

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

ஷாகுல் said...

நல்ல கதை. நீங்கள்லாம் இப்டி எழுதுனா புதுசா வந்த நாங்க என்ன பன்றது

//அப்படியெல்லாம் நினைக்காதீங்க தம்பி உண்மையாவேஏஏஏஏஏஏஏஏஏ அப்படி எல்லாம் 1ம் கிடையாது //

அப்டினா ஒன்னுக்கு மேலயா?

ஷாகுல் said...

சொல்ல மற்ந்துட்டேன்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Thamira said...

'உரையாடல் போட்டிக்கான கதை' என்றாலே போதுமே.. அதென்ன 'கதை, உரையாடல் போட்டிக்கான கதை' ? புரியலையே? கதையைப் பற்றி படிச்சதுக்கப்புறமா சொல்றேன்.