Sunday, September 14, 2008
அலசல் : மின் வெட்டு, ஆற்காடு,கூடங்குளம்... இன்ன பிற
“மின் வெட்டுப் பற்றி ஆற்காட்டாரிடம் மட்டும் கேட்காதீர்கள். ஏனெனில் அவருக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது” “தி.மு.க. அடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனால் அதற்கு முக்கியமான காரணம் ஆற்காட்டார் தான்”.......
இவை இரண்டும் தமிழக அரசியலில் கேலியாக பேசப்பட்ட விடயங்கள் என்றாலும், இதில் நிறைய உண்மைகள் இருப்பதாகவே படுகின்றது... அரசியலை விட்டுவிட்டு இந்த பிரச்சினையின் ஆழத்தை ஆராயலாம்.
தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை தலைவிரித்தாடுகின்றது. தினசரி அறிவிக்கப்பட்ட மின் வெட்டு, அறிவிக்கப்படாத மின் வெட்டு என ஏதேதோ காரணங்களைச் சொல்லி தினசரி பல மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகின்றது. இதை ஒரு வித்தியாசமான பார்வையில் பார்க்கலாம்.... :)
தமிழகம் முழுவதும் உள்ள மின் தேவை சுமார் 10,000 மெகாவாட்டாக உள்ளது. இது வருடம் தோறும் 400 முதல் 600 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது அடுத்தடுத்த வரக் கூடிய ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் படிப்படியாக உயர்ந்து வருகின்றது. முன்பெல்லாம் மின்சாரம் இருக்கும் வீடுகள் அபூர்வமாக இருந்தது. பின்னர் டீவி, பிரிட்ஜ், வாசிங் மெசின் என்று தேவைகள் அதிகமாகி விட்டன.
இரண்டு குண்டு பல்புகளும், ஒரு பேனும் இருந்த வீடுகளில் இப்போது நான்கு டியூப் லைட், இரண்டு பேன், ஒரு பிரிட்ஜ், ஒரு வாசிங் மெசின் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து வீடுகளும் இது போன்ற பொருட்கள் கட்டாயமாகி விடும். அதே போல் குளிர்சாதன பெட்டிகளும் இப்போது சகஜமாகி வருகின்றன.
இவ்வாறு மின் தேவை மிகவும் அதிகமாகி வரும் வேளையில், மின் உற்பத்தியின் அளவும் அதிகரிக்க வேண்டும்.அதிகபட்ச மின் உற்பத்தியின் போது மின் வாரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 5,500 மெகாவாட் மின்சாரமும், தனியார் மின் உற்பத்தி மூலம் 1,200 மெகாவாட்டும், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 2,800 மெகாவாட்டும், இதர உற்பத்தி மூலம் 500 மெகாவாட்டும் கிடைக்கும். இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள தனியார் காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது இந்த ஆண்டின் தமிழகத்தின் முழு தேவையையும் பூர்த்தி செய்ய போதுமானது.
ஆனால் இதில் குறைவு ஏற்படும் போது தான் பிரச்சினைகள் உருவாகின்றன. நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்திற்கு அதிகமான நீர் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். பருவ மழைகள் பொய்த்துப் போவதால் குறைவு ஏற்படும். அதே போல் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் உற்பத்தியைப் பொறுத்து மாறுபடும். நெய்வேலி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கிடைக்கவில்லையெனில் மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு மின்சாரம் கிடைக்காது. அதே போல் காற்று வீசுவதும் குறைந்து விட்டாலும் மின்சாரம் கிடைக்காது. இதனால் தமிழகத்திற்கு 20 முதல் 40 சதம் வரை மின்தட்டுப்பாடு ஏற்படும்.
சரி இந்த ஆண்டு வெயில் காலம் முடிந்து விட்டது. அணைகளும் நிரம்புகின்றன. காற்றும் வீசுவதால் காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கின்றது. இனி அனைவரும் மின் பற்றாக்குறையை மறந்து விடப் போகின்றோம்.... மீண்டும் அடுத்த முறை மின் வெட்டு வரும் போது ‘குய்யோ! ‘முறையோ’ என கத்துவோம்.
அடுத்த ஆண்டு இந்த பிரச்சினையில் தீவிரம் அதிகமாகும்... 2 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். தொழிற்சாலைகள் பெருகி விட்டன. மின்சாரம் இல்லையென்றால் எந்த தொழிலும் நடக்காது என்ற நிலை வந்து விட்டது. முக்கியமாக சின்னத்திரை சீரியல்கள் பார்த்து குடும்பப் பெண்கள் கண்ணீர் வடிக்கும் அளவில் குறைவு ஏற்ப்பட்டு விடும்.
அரசு வைக்கும் தீர்வுகளும், குறைபாடுகளும்
மின் பற்றாக்குறை ஏற்படும் போது மின் வாரிய அமைச்சரும், மற்ற அரசு அதிகாரிகளும் சொன்ன சால்ஜாப்பு அணைகளில் நீர் இல்லை, காற்று இல்லை, நிலக்கரி இல்லை என்பதாகும். அடுத்த ஆண்டும் இதே நிலை ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? (அப்படி ஏற்படாமல் இருக்க பிரார்த்திப்போம்) அப்போது என்ன செய்வது?
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைச் செயலர் திரிபாதி 2009 ஆரம்பத்தில் கூடங்குளம் அணு உலை தனது முதல் மின் உற்பத்தியை ஆரம்பிக்கும் என்றும் இரண்டாம் உற்பத்தி டிசம்பரில் தொடங்கும் என்றும்,அதன் மூலம் சுமார் 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். ஏதோ கொல்லன் பட்டறையில் அடுப்பு ரெடியாகி விடும் என்பது போல் கூறி விட்டு சென்று விட்டார். 2011 ல் கூட கூடங்குளம் அணு உலை மின் உற்பத்தியை ஆரம்பிக்க இயலாது என்பது அங்கிருந்து நண்பர்கள் வாயிலாக வரும் தகவல்.
தமிழக அரசும் தனியாக ஒரு அமைச்சர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. அதிகாரிகள் சொத்தை ரிப்போர்ட்களை தாக்கல் செய்து விட்டு குழு அக்வாபீனா குடித்து விட்டு கலைந்து போகப் போகின்றது.
நாம் கொடுக்கும் தீர்வுகள்:
தீர்வு 1 :
நீர் மின்சார உற்பத்தியில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு முழு வீச்சில் அதை சரி செய்ய வேண்டும். அதிக நீர் வெளியேற்றம் உள்ள இடங்களில் மேலும் நீர் மின் உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்தி நீர் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதை ஒரு குழு எப்போதும் கண்காணிக்க வேண்டும்.
தீர்வு 2:
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் அதிக தேவையுடைய மாநிலமான தமிழகத்திற்குள்ளேயே பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அல்லது NLC யை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
தீர்வு 3:
காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை, ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோரிடம் அதற்கு ஆர்வமூட்ட வேண்டும். காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக ஒரு காற்றாடி மூலம் 1.5 மெகாவாட் மின்சாரம் எடுக்கப்படுகின்றது. (2 மெகாவாட் எடுக்க அமைக்கப்பட்ட அம்மாவின் காற்றாடி இறக்கை உடைந்து வெடித்து சிதறியது தனிக்கதை)அதற்கு குறைந்தது 3 ஏக்கர் நிலமும், (லஞ்சமெல்லாம் சேர்த்து) சுமார் 1 கோடி பணமும் தேவைப்படலாம். பராமரிப்பு பணி வரும் போதும் அதை தாங்கும் ஆற்றல் வேண்டும். அவ்வாறு இதில் இறங்க ஆர்வமுள்ளவர்களுக்கு அரசு சகல உதவிகளும் செய்ய வேண்டும். இப்போது இருக்கும் 3500 மெகாவாட் காற்றாலை மின்சாரத்திற்கு சுமார் 10,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கும். இதே போல் சுமார் 4000 கோடி முதலீட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவலாம். இதன் மூலம் சுமார் 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். (லஞ்ச ஊழல் சேர்க்காமல்)
தீர்வு 4
மேலே உள்ளவை அனைத்தும் காரண காரியங்களைக் கொண்டு மாறக் கூடியவை. அணையில் நீர் இல்லையெனில், நிலக்கரி இல்லையெனில், காற்று இல்லையெனில் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் தொடந்து மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவல்ல விடயம் தான் அணு மின்சாரம். கூடங்குளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பல கோடி ரூபாய்களை முழுங்கி விட்டுஅணு மின்சாரம் தயாரிப்பதற்கான அணு உலை கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது.
சம்சாரம் அது மின்சாரத்தில் விசு சொல்வார்... படித்தான்... படிக்கிறான்... படித்துக் கொண்டே இருப்பான் என்று. அதே போல் தான்... எப்போது மின் உற்பத்தி ஆரம்பமாகும் என்று தெரியாது. ஆனால் விரைவில் நடக்கும் என சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்பார்கள்... :( இந்த லட்சணத்தில் மேற்கொண்டு நான்கு அணு உலைகள் அமைக்க ஏற்பாடு நடக்கின்றதாம்... கமிஷன் அதிகமா கிடைக்கும் போல இருக்கு... என்ன கொடும இது..
2011 ல் அணு உலை தயாராகும் போது, ‘அணு உலை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டன. இது ISO (உலக தரக் கட்டுப்பாடு) தரத்தில் இல்லை. எனவே இங்கு அணு மின்சாரம் தயாரிக்க இயலாது’ என்று சொன்னாலும் சொல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகத்தின் அவசர தேவையைக் கருத்தில் கொண்டு அங்கு உடனடியாக மின்சாரம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும். தூங்கிக் கொண்டு இருக்கும் வேலைகளை தட்டி எழுப்ப வேண்டிய நேரமிது.
கூடங்குளம் அணு மின் நிலையமும் கடலுக்கு மிக அருகில் இருப்பதால் சுனாமி, அல்லது புயல் ஏற்படும் நேரங்களில் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் இன்னும் அதிகப்படியான மின் உற்பத்திக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்...
இல்லையேல் ஆற்காடு வந்தாலும், அம்மா வந்தாலும், ஆட்டுக்குட்டி வந்தாலும் பனை ஓலை விசிறியோடு திண்ணையில் உட்கார வேண்டியது தான்
மேலதிக தகவல்கள்....
1. 2007 ல் ஸ்பெயின் 3520 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவியுள்ளது.
2. ஐரோப்பாவில் 90 மில்லியன் மக்களின் மின் தேவையை காற்றாலைகள் பூர்த்தி செய்கின்றன.
3. 2007 ல் அமெரிக்கா 5240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவியுள்ளது.
4. இந்தியா முழுவதும் 2007 ல்1,730 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவப்பட்டுள்ளன.
5. 2007 ல் சீனா3450 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 150 சதவீதம் அதிகம்
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
அண்ணா படிக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன்:)
மாடரேஷன் ஏன் அண்ணா போட்டு இருக்கீங்க?
ரொம்ப நல்லா இருக்குண்ணா பதிவு:)
முழுமையான அலசல் !
//கூடங்குளம் அணு மின் நிலையமும் ஒரு குறிப்பிட்ட விளைவை எதிர் நோக்கியுள்ளது. அது சுனாமி... கடலுக்கு மிக அருகில் இருப்பதால் சுனாமி ஏற்படும் நேரங்களில் ஆபத்தும் அதிகம்//
இதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவு! என்பது நான் அந்த சுழலில் பணி புரிந்த காலத்தில் தெரிந்துக்கொண்ட செய்தி!
அண்ணே நீங்க ஏன் தேர்தலில் நிக்க கூடாது... இப்படி அடிச்சி ஆடுறிங்களே... சூப்பர்ணே... வாழ்த்துக்கள்...
அது என்னண்ணே குய்யோ முறையோனு சத்தம்... நம்ப பரிசல் மாதிரியா....
மிக அருமையான தீர்வுகளை உடையப் பதிவு. உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன்.
ஆனாலும் சூரிய ஒளி மின்சாரம் என்பதை நீங்கள் விட்டுவிட்டீர்கள். பராமரிப்பு செலவு மிகக் குறைவான பல சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன. இது முழு தீர்வாக அமையாவிட்டாலும் சிறு சிறு இடங்களில் இதன் பயன்பாட்டை அதிகரித்து தேவையை பூர்த்தி செய்யலாம். எனது பதிவில் நான் கூறியிருந்தது போல தெரு விளக்குகள் சோலார் விளக்குகளாக அமைக்கப்பட்டால் கோடை காலங்களில் சூரிய வெப்பம் அதிகமாய் இருப்பதால் அவை முழு அளவு மின்சாரத்தையும் சூரிய ஒளியில் இருந்து பெறும், மழை காலங்களில் முழுமையாக மின்சாரம் கிடைக்காது. வெப்பம் குறைவாக உள்ள குளிர்காலங்களில் 50% முதல் 70% மின் உற்பத்தி செய்யலாம்.
நீர் மின்நிலையங்களில் கோடை காலங்களில் மின் உற்பத்தி அதிகளவில் இருக்காது , அக் காலங்களில் ஏற்படும் பற்றாகுறையை சூரிய ஒளியில் இருந்து ஈடு செய்யலாம்.
தற்போது மென்பொருள் நிறுவனங்கள் போன்ற பெரிய கட்டிடங்கள் கட்டும் போது, வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வர இயலாத வகையில் கட்டுவதால் பகலில் கூட மின் விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கும் . சிங்கப்பூரில் இந்த ஆண்டு திறக்கப்பட்ட விமான நிலைய 3 வது முனையம் இயற்கை வெளிச்சத்தை பெருமளவில் பயன்படுத்தி, பகலில் மின் விளக்குகளின் தேவையை குறைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது. அது போல் கட்டிடக் கலையிலும் சில மாறுதல்கள் செய்யப்பட வேண்டியது அவசியம்.
///ஜோசப் பால்ராஜ் said...
மிக அருமையான தீர்வுகளை உடையப் பதிவு. உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன்.
ஆனாலும் சூரிய ஒளி மின்சாரம் என்பதை நீங்கள் விட்டுவிட்டீர்கள்.////
சூரிய ஒளி கொண்டு உருவாக்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைவாகவே இருக்கும். வீடுகள், அலுவலகங்களுக்கு அவை பயனுள்ளவை. இதை அரசே ஏற்று நடத்துவது என்பது சிக்கலான விஷயம். ஏனெனில் சூரிய ஒளி கிரகிப்பு அட்டைகளை அதிக அளவில் பொருத்த இட வசதி அதிகம் தேவை. ஒரு கட்டிடத்தில் மேற் கூரையில் இவைகளைப் பொருத்த அந்த கட்டிட உரிமையாளர் மட்டுமே உரிமையுடையவர்.
அது மட்டுமின்றி சோலார் பேனல்களை பொருத்த செலவும் அதிகமாகும் என்பது என் கருத்து. சுமார் 200 வாட்ஸ் அளவுக்கு சோலார் பேனல் 800 முதல் 1200 டாலர்கள் வரை ஆகும் போல் கூகுள் சொல்கின்றது.. இந்திய மதிப்புக்கு... :)
we can install up to 5MW turbines in india . only logistics problem.
2 Mw turbine was not blasted . it has some technical error.
same 2MW turbine is pumping power to Grid in Kutch at gujarat
அருமையான பதிவு...
இதெல்லாம் தேவையே இல்லண்ணே, நாங்கெல்லாம் சுடுகாட்டுக்கு போயி பேயி,பிசாசு,அவட்டை கிட்ட பேசப்போறப்ப இருட்டுலதான் போவோம். நீங்களும் அப்படி பழகிக்கங்க.இருட்டுதான் வாழ்க்கையின் அர்த்தமே.
///பாரதி said...
அண்ணா படிக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன்:)////
அப்படின்னா என்னங்ண்ணா?
///பாரதி said...
மாடரேஷன் ஏன் அண்ணா போட்டு இருக்கீங்க?///
திறந்த வீட்டில் சிலது சில நேரம் வந்துடுதுக.. அதுக்குதான்.. இப்ப எடுத்தாச்சு
//பாரதி said...
ரொம்ப நல்லா இருக்குண்ணா பதிவு:)///
நன்றிங்ண்ணா!
///ஆயில்யன் said...
முழுமையான அலசல் !
//கூடங்குளம் அணு மின் நிலையமும் ஒரு குறிப்பிட்ட விளைவை எதிர் நோக்கியுள்ளது. அது சுனாமி... கடலுக்கு மிக அருகில் இருப்பதால் சுனாமி ஏற்படும் நேரங்களில் ஆபத்தும் அதிகம்//
இதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவு! என்பது நான் அந்த சுழலில் பணி புரிந்த காலத்தில் தெரிந்துக்கொண்ட செய்தி!///
நன்றி ஆயில்யன்! சுனாமி, புயல் போன்றவை வரும் போது உற்பத்தி பல நாட்களுக்கு நிறுத்தி வைப்பப்படும் வாய்ப்பும் உள்ளது!
/// VIKNESHWARAN said...
அண்ணே நீங்க ஏன் தேர்தலில் நிக்க கூடாது... இப்படி அடிச்சி ஆடுறிங்களே... சூப்பர்ணே... வாழ்த்துக்கள்.///
ஏனிந்த கொல வெறி உங்களுக்கு.. அவ்வ்வ்வ்
///Muthu said...
we can install up to 5MW turbines in india . only logistics problem.
2 Mw turbine was not blasted . it has some technical error.
same 2MW turbine is pumping power to Grid in Kutch at gujarat///
தகவல்களுக்கு நன்றி நண்பரே!
///ச்சின்னப் பையன் said...
அருமையான பதிவு...///
நன்றி ச்சின்னப் பையன்!
///குடுகுடுப்பை said...
இதெல்லாம் தேவையே இல்லண்ணே, நாங்கெல்லாம் சுடுகாட்டுக்கு போயி பேயி,பிசாசு,அவட்டை கிட்ட பேசப்போறப்ப இருட்டுலதான் போவோம். நீங்களும் அப்படி பழகிக்கங்க.இருட்டுதான் வாழ்க்கையின் அர்த்தமே.///
அண்ணே! அமெரிக்காவில் உட்கார்ந்து என்ன வேணா சொல்லலாம்... இங்க வந்தா தான் தெரியுது... :))
நல்லா இருக்கு. I read an another Tamil article on Solar Power Plant is possible in Tamil nadu?. It was good and the website address is below
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0809/26/1080926033_1.htm
- Sure
Post a Comment