Sunday, June 22, 2008

நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? சர்ச்சை 3 பொன்னியின் செல்வன்

முதல் பதிவு : நந்தினி - வீரபாண்டியன் உறவு சர்ச்சை
இரண்டாம் பதிவு : நந்தினி வீர பாண்டியனின் காதலியா? சர்ச்சை 2
சென்ற இரண்டு பதிவுகளாக நந்தினி, வீரபாண்டியனுக்கு மகளா, காதலியா என்பதற்கான சாத்தியக் கூறுகளைப் பார்த்தோம். இதில் இரண்டாவது பகுதியில் ஆதித்தன், நந்தினி, ரவிதாசன் ஆகியோரின் கூற்றை வைத்து வீரபாண்டியனின் காதலி தான் நந்தினி என்பதை நிரூபிக்க முயற்சித்தோம். இந்த பகுதியில் முதல் பகுதியில் வந்த நந்தினி வீரபாண்டியனின் மகள் எனக் கூறும் பெரிய பழுவேட்டரையர், மற்றும் வந்தியதேவனின் கூற்றுக்களை ஆராய்வோம்.
முதன் முதலில் நந்தினி வீரபாண்டியனின் மகள் என வரும் இடம் பெரிய பழுவேட்டரையர் விசாரணை மண்டபத்தில் கூறுமிடம். அதைத் தொடர்ந்தே வந்தியதேவன் மற்ற இடங்களில் அதைக் கூறுகிறான். இனி அந்த இரண்டு விஷயத்தையும் பார்க்கலாம்.
1. பெரிய பழுவேட்டரையர் விசாரணையில் கூறியது.

////மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எந்தப் பெண்ணின் முகலாவண்யத்தைக் கண்டு மயங்கி மோக வலையில் வீழ்ந்து அவளை என் அரண்மனையில் சர்வாதிகாரியாக்கி வைத்திருந்தேனோ, அவள் வீரபாண்டியனுடைய மகள்! அவள் வாயினால் இதை ஆதித்த கரிகாலரிடம் சொல்லியதை நான் என் காதினால் கேட்டேன். வீரபாண்டியனை ஆதித்த கரிகாலர் கொன்றதற்குப் பழிக்குப்பழி வாங்கவே பழுவூர் அரண்மனைக்கு அவள் வந்திருந்தாள். அதற்குத்தான் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள்.///
ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய விசாரணையில் தானாக முன் வந்து ஆதித்தனைக் கொலை செய்ததாக பெரிய பழுவேட்டரையர் கூறிவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்கின்றார். இந்த சூழ்நிலையில் தான் அவர் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் எனக் கூறுகின்றார். இந்த கூழலை ஆராய்ந்தால் பெரிய பழுவேட்டரையர் விசாரணைக்கு வரும் போது அவரது மனநிலை கீழ்க்கண்டவற்றால் கலங்கிப் போய் இருந்தது.
அ. சோழர்களை அழிக்க நினைத்த நந்தினியை மணந்தது
ஆ. நந்தினியை தஞ்சை அரண்மனைக்குள்ளேயே விட்டது
இ. பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் தனது அரண்மனைக்குள் வந்து சென்றது.
ஈ. அரண்மனை பொக்கிஷத்தில் இருந்து அவர்களுக்கு உதவி செய்தது
உ. சோழ வம்சத்திற்கு துரோகம் செய்து சோழன் அல்லாத மதுராந்தகனுக்கு பட்டம் சூட்ட நினைத்தது.
ஊ. மதுராந்தகனுக்கு பட்டம் சூட்டுவதாக கூறினாலும் உள்மனதில் மன்னனாகும் ஆசையை தெரிந்தோ தெரியாமலோ வளர்த்துக் கொண்டது.
எ. நந்தினியின் மீதும், அவளைத் தேடி வருபவர்கள் மீதும் சின்ன பழுவேட்டரையர் சந்தேகத்தை எழுப்பியும் அதை நம்பாமல் நிராகரித்தது.
ஏ. தனது செயல்களால் சோழ சக்கரவர்த்தியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியது,
ஐ. சோழ நாட்டின் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தனக்கு முன்னால் கொலை செய்யப்பட்டதை தடுக்க இயலாதது.
ஒ. ஈழத்தில் இருந்த சோழப்படைகளுக்கு உணவு, ஆயுதங்கள் அனுப்புவதிலு சுணக்கம் காட்டியது...........
இப்படி தனது குலமும், தாமும் செய்திருந்த சபதங்களுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டு மனம் வெறுத்து போய் இருந்தார். அதற்கு தண்டனையாக தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற மனநிலையிலேயே அங்கே வந்திருந்தார். தான் செய்த பாவமான காரியங்களுக்கு பரிகாரமாக வந்தியதேவன் மீது இருந்த ஆதித்த கரிகாலன் கொலைப் பழியை தன் மீது பொய்யாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தார். ஏனெனில் வந்திய தேவனை சோழ இளவரசி குந்தவை காதலித்து வந்தாள். தாம் தற்கொலை செய்வதற்கு முன் வந்தியதேவனை விடுவித்து இதற்கெல்லாம் பரிகாரம் தேடவே நினைத்திருந்தார்.
பொய் சொல்ல வேண்டுமென்று முன்னரே தீர்மானம் செய்து வந்த சூழலில் தான் பெரிய பழுவேட்டரையர் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் என்று சொல்கிறார். ஏற்கனவே பொய்களைச் சொன்னவர் இதையும் பொய்யாக சொல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு கீழ்கண்ட காரணங்களையும் கூறலாம்.
I) நந்தினி அவருடைய மனைவி. அவள் மீது அவர் மிகுந்த அன்பை வைத்திருந்தார், அவள் வீரபாண்டியனின் மனைவி என்று சொல்லி வந்த நிலையில், அவன் இறந்த பிறகு அந்த கருத்தை மாற்ற நினைத்திருக்கலாம்.
II) நந்தினியின் தந்தை யார்? என்று வேறு யாருடைய பெயராவது வருவதன் மூலம் தற்போதைய சோழ இராஜ்ஜிய பிராச்சினைகளில் குழப்பங்கள் வரலாம்.
III) நந்தினி பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்பட்டது வெட்ட வெளிச்சமாகி, அவர்களுடனே அவள் சென்றுவிட்டதாக செய்தி வரவிய நிலையில், அவள் வீரபாண்டியனின் மகள், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுக்கு அரசி என்று சொல்வதன் மூலம் அவளது நடத்தைக்கு மக்கள் மத்தியில் ஏற்ப்பட்டுள்ள களங்கத்தை போக்கவும் நினைத்திருக்கலாம்.

2. வந்தியதேவன் குந்தவையிடம் கூறியது

///குந்தவை : "நந்தினி வீர பாண்டியனின் மகள் என்பது உண்மையாயிருக்குமா?"

வந்தியத்தேவன் : "நந்தினி அவ்வாறு ஆதித்த கரிகாலரிடம் கூறியதை என் காதினால் நானே கேட்டேன். பெரிய பழுவேட்டரையரும் கேட்டார்.///
வந்தியதேவனிடம் குந்தவை கேட்கும் போதி இதைக் கூறுகிறான். வந்தியதேவன் இயற்கையாகவே கொஞ்சம் புனைந்து கூறுவதில் வல்லவன். பெரிய பழுவேட்டரையர் விசாரணையில் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் எனறு சொல்லும் வரை வந்தியதேவன் யாரிடமும் இதை சொல்லவில்லை. இதற்கு பிறகே ஆமாம் போட துவங்கியுள்ளான். அருள்மொழியிடம் கூட கூறவில்லை. வந்தியதேவைப் பொறுத்தவரை எப்படியாவது சிறையில் இருந்து தப்பி ஈழத்திற்காவது ஓடி விட வேண்டுமென்ற நிலை தான் இருந்தது. கொலை குற்றத்தை சட்டபூர்வாமாகவோ, நேர்மையாகவோ சந்திக்க அவன் விரும்பவில்லை. எனவே தான் பாதாளச் சிறையில் இருந்து தப்புகிறான். எனவே பெரிய பழுவேட்டரையர் சொன்னதை வழிமொழியும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். உண்மையில் நந்தினி வேறு பெயரைக் கூறி இருந்து, பழுவேட்டரையர் சொன்னது பொய் என்று இவன் கூறினால் அவர் அடுத்து சொன்ன வந்தியதேவன் குற்றவாளி இல்லை எனக் கூறியதும் பொய்யாக ஆகி விட வாய்ப்பு ஏற்ப்பட்டு விடும். பெரிய பழுவேட்டரையர் தற்கொலைக்கு முயன்று விட்ட நிலையில் இதை அப்படியே தொடர்ந்தால் பிரச்சினைகள் ஏதும் இருக்காது என நினைத்து இருக்கலாம்.

வந்தியதேவன், பெரிய பழுவேட்டரையர் இருவரின் நிலை

இருக்கலாம். கொலை நடந்த களத்தையும் கொஞ்சம் பார்த்தால் இவர்கள் இருவரும் சொலவது பொய் என்று மிகத் தெளிவாக விளங்கும். சம்பூவரின் அரண்மனையில் நந்தினி இருந்த அறையில் ஆதித்தனும், நந்தினியும் கடும் வாக்குவாதத்தில் இருக்கின்றனர். அப்போது வந்தியதேவன் நெற்களஞ்சியத்திற்குள் ஒளிந்து கொண்டுள்ளான். எனவே அவர்களுக்கும் வந்தியதேவனுக்கும் இடையே தடுப்பு உள்ளது. மேலும் பெரிய பழுவேட்டரையர் வந்தியதேவனுக்கு பின்னால் உள்ளார். மிக அருகில் என்றால் வந்தியதேவனுக்கு தெரிந்து போய் இருக்கும். அவர் வருவதை உணராதவனாகத் தான் வந்தியதேவன் இருந்துள்ளான். எனவே அவர் கொஞ்சம் தூரத்திலேயே இருந்துள்ளார். இந்த சூழலில் தான் நந்தினி ஆதித்தனிடம் தனது தந்தை யார் எனக் கூறுகிறாள்.

///நந்தினி ஆதித்த காரிகாலரை மிக நெருங்கி அவர் காதண்டை மிக மெல்லிய நடுங்கிய குரலில் "என்னைப் பெற்ற தந்தை... தான்!" என்று கூறினாள். கூறிவிட்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.///
வந்தியதேவனும், பெரிய பழுவேட்டரையரும் இருக்கும் தூரத்தைக் கணக்கில் கொள்ளும் போது நந்தினி காதருகே சென்று மெல்லிய குரலில் சொன்னது அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்ப்பே இல்லை. அவ்வாறு கேட்டிருந்தாலும் அதை அவர்கள் தவறாக புரிந்திருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே தான் வந்தியதேவன் குந்தவையிடம் அதைக் கூறும் போது கூட சான்றுக்கு பெரிய பழுவேட்டரையரையும் துணைக்கு அழைக்கிறான்.

///குந்தவை : "நந்தினி வீர பாண்டியனின் மகள் என்பது உண்மையாயிருக்குமா?"

வந்தியத்தேவன் : "நந்தினி அவ்வாறு ஆதித்த கரிகாலரிடம் கூறியதை என் காதினால் நானே கேட்டேன். பெரிய பழுவேட்டரையரும் கேட்டார்.///
அழைக்கிறான். எனவே பெரிய பழுவேட்டரையரும், வந்தியதேவனும் கூறியது பொய், நந்தினியின் தந்தை வீரபாண்டியன் அல்ல. இரண்டாவது பதிவில் கூறியபடி வீரபாண்டியன் நந்தினி காதலன் தான் என்பது தெளிவாகின்றது.

அப்படியானால் நந்தினியின் தந்தை யார் என்ற கேள்வி இன்னும் உள்ளது? பொதுவாக வாசகர்கள் மத்தியில் வரும் சந்தேகத்தின் படி மூவர் இந்த இடத்தில் உள்ளனர்.
1. வீரபாண்டியன்
2. சுந்தர சோழன்
3. பைத்தியக்காரன் என அழைக்கப்படும் கருத்திருமன்
வீரபாண்டியனும், சுந்தர சோழரும் தந்தை இல்லை என முடிவானதால் அவர்களை விட்டு விட்டு கருத்திருமன் தான் தான் தந்தை என ஆழ்வார்க்கடியானிடம் கூறீயதாக வருவதை அடுத்த பதிவில் ஆராயலாம்.

டிஸ்கி : இது முழுக்க முழுக்க பொன்னியின் செல்வனின் ரசிகர்களுக்காக எழுதப்படுவது. எனவே மற்றவர்கள் ஏமாற்றமாக உணராதீர்கள். நீங்களும் பொன்னியின் செல்வன் படித்து விட்டு வந்து இந்த ஜோதியில் கலந்து கொள்ளுங்கள். பொன்னியின் செல்வன், தமிழறிந்தவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய சரித்திர நாவல்.
இணையத்தில் நண்பர் பொன்வண்டின் கூகுள் பக்கத்தில் சுலபமாக படிக்கலாம்.
http://yogeshmsc.googlepages.com/kalkinovels.html

23 comments:

ஜி said...

:)))

அருமையா உரையாடல்களை கோர்த்து விளக்கியுள்ளீர்கள். அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்....

அறிவன் அவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டால் இன்னும் நிறைய கருத்துக்களும் பார்வைகளும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். :))

VIKNESHWARAN ADAKKALAM said...

ஷப்பாபாபா.... என்னய்யா இது பதிவு ரொம்ப பெருசா ஆய்கிட்டே போகுது... படிச்சிட்டு வந்து சொன்றேன் இருங்க...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நண்பரே,
கல்கி எழுதிய புதினத்தில் இத்தனை ஆராய்ச்சி புன்னகையை வரவழைக்கிறது.

இந்த விதயத்தை நான் இரு விதத்தில் பார்க்கிறேன்;

நந்தினியின் தந்தை விதயத்தை உறுதியாக நேரடியாக அறிந்தவர் ஆதித்தன் இறப்பிற்குப் பின் வாழ்பவர்களில் மிகச்சிலரே.எனவே அவர்கள் வாயிலாக இந்த செய்தி உறுதி செய்யப் பட்டாலே அது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியதாக இருக்க முடியும்.


அவர்கள் வருமாறு:

நந்தினி:இவள் கதையில் மறைந்து விட்டாள்,எனவே முன்னர் கூறியவற்றிலிருந்துதான் ஊகிக்க வேண்டியிருக்கிறது.

பழுவேட்டரையர்:பழுவேட்டரையர் சோழ அரசின் மிகப் பெரும் அதிகாரிகளில் ஒருவர்.இவர் தெளிவாக இரண்டு இடங்களில் கூறிவிட்டே இறக்கிறார்.

கருத்திருமன்:இவன் ஆழ்வானிடம் உணமை கூறுகிறான்.
மேலும் சிறையில் வந்தியத்தேவனிடம் தன் கதையைக் கூறும் போதும் பொய்யான உத்தம சோழனுக்குப் பட்டம் கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன என்ற செய்தியைக் கேட்டவுடன் 'இது நடந்தால் உலகம் தலைகீழாகிவிடும்,இதைத் தடுக்க தான் வெளியேறுவது அவசியம் என்று கூறி காரணங்களைக் கூறும் போது இரு குழந்தைகளும் தன் எஜமானரின் குழந்தைகள் என்ற பொருளில் பேசுகிறான்.
எல்லா இடத்திலும் கோர்வையாக ஒரே செய்தியே வருகிறது.

மற்றபடி நீங்கள் சுட்டும் அனைத்து இடங்களும் படர்க்கை வாயிலாக இந்த விதயத்தை அறிந்தவர்கள்.எனவே நேரடிக் கூற்றுகளுக்கே அதிக உண்மை மதிப்பு இருக்க முடியும்.

மேலும் காலக்கணக்கில் பார்த்தாலும் நந்தினி பாண்டியனின் மகளாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்,


இரண்டாவது இந்த மொத்த நிகழ்வே கல்கி எழுதிய ஒரு புதினம்,எனவே இதில் கல்கி பாத்திரங்கள் வாயிலாகக் கூறியதையே நாம் ஏற்க வேண்டுமே தவிர நம்முடைய ஊகங்களுக்கும் inference களுக்கும் இதில் இடம் இல்லை.

எனவே...

நான் தீர்மானமாகவே இருக்கிறேன்!

VIKNESHWARAN ADAKKALAM said...

ம்ம்ம்... நந்தினிக்கு மட்டும் தான் அவர் தந்தையா... மதுராந்தகனுக்கும் அவர் தானே தந்தை... ஒரு லாஜிக்குகு இப்படி இருக்கலாம்...

கரிகாலன் வீரபாண்டியனை கொலை செய்ய வரும் போது.. எங்கே அப்பா என கூறினால் தன்னையும் செர்த்துக் கொண்றுவிடுவானோ என நினைத்து காதலன் என கூறினாலோ...

இப்படி இருக்குமா?? நீங்க என்ன நினைக்கிறீங்க... இன்னும் ஒரு நாலு அஞ்சு தடவ படிச்சாதான் சரிபடும் போல...

Thamiz Priyan said...

///ஜி said...

:)))

அருமையா உரையாடல்களை கோர்த்து விளக்கியுள்ளீர்கள். அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்....

அறிவன் அவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டால் இன்னும் நிறைய கருத்துக்களும் பார்வைகளும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். :))//
வாங்க ஜி! அறிவன் ஐயாவும் களத்திற்கு வந்துள்ளார். அனைவரும் இணைந்து கலந்தாய்வு செய்யலாம். வாருங்கள்.

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

ஷப்பாபாபா.... என்னய்யா இது பதிவு ரொம்ப பெருசா ஆய்கிட்டே போகுது... படிச்சிட்டு வந்து சொன்றேன் இருங்க...////
ஆகா நீங்களே இப்படி சொன்ன எப்படிங்கண்ணா! இன்னும் நிறைய இருக்கு சொல்ல... :)))

Thamiz Priyan said...

///அறிவன்#11802717200764379909 said...

நண்பரே,
கல்கி எழுதிய புதினத்தில் இத்தனை ஆராய்ச்சி புன்னகையை வரவழைக்கிறது. ///
வாருங்கள் அறிவன் ஐயா! வருகைக்கு நன்றி! இது ஒரு வித கலந்திரையாடல் தானே? அனைவரும் தங்களது கருத்துக்கு கல்கியின் பொன்னியின் செல்வனில் இருந்து மேற்கோள் காட்டுவோம். இறுதி முடிவு எடுக்க இயலா விட்டாலும் மாறுபட்ட கருத்துகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமே?.... :)

புருனோ Bruno said...

என் கல்லூரி பருவத்தில் பொன்னியின் செல்வனை முதல் முறை படித்ததும், மாடியில் அமர்ந்து தோழர்களுடன் பல மணி நேரங்கள் விவாதித்ததும் மறக்க முடியாதது.

--

இங்கு கூறிய பல சாத்தியக்கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்தோம்.

முதல் கேள்வி

ஆதித்த கரிகாலன் தன் கத்தியால் தன் வயிற்றில் சொருக வாய்ப்புள்ளதா ??

--

எனது அடுத்த கேள்வி

தனது தந்தை யாரென்று நந்தினிக்கு எப்பொழுது தெரியும். வீரபாண்டியனின் மரணத்தின் பின்னாலா, அல்லது நந்தினி வீரபாண்டியனை முதலில் சந்திக்கும் முன்னரேவா ??


இதற்கு பதில் தெரிந்தால், அதன் பிறகு மிகவும் சங்கடமான கேள்வி ஒன்று உள்ளது.

அது சங்கடம் என்பதால் தான் கல்கி நேரடியாக கூறாமல் விட்டு விட்டார் என்பது என் கருத்து :) :)

Thamiz Priyan said...

///அறிவன்#11802717200764379909 said...
நந்தினி:இவள் கதையில் மறைந்து விட்டாள்,எனவே முன்னர் கூறியவற்றிலிருந்துதான் ஊகிக்க வேண்டியிருக்கிறது.///
நந்தினி முன்னர் கூறியவைகளை வைத்து வீரபாண்டியன் காதலன் என நிரூபிப்பவை
1. ஆதித்தனிடம் தனது காதலைக் கொன்றதாக கூறுமிடம்
2. தனக்குத் தானே புலம்பும் இடம்
3. சிறுவனிடம் பேசுமிடம்
இவைகளை கல்கி நேரடிக் காட்சிகளாகத் தான் கூறுகிறார். யாரும் எடுத்துக் கூறுவதாக வரவில்லை. எனவே இவைகளை முதலில் தகுந்த காரணங்களால் மறுக்க வேண்டும். அதே போல் பாண்டியர்களின் ஆபத்துதவிகளின் தலைவன் ரவிதாசன் தெளிவாக நந்தினி வீரபாண்டியனின் காதலி தான் எனத் தெளிவாக கூறுகிறான். ஆதித்த கரிகாலன் மட்டுமே வந்தியதேவனிடமும், பார்த்திபேந்திரனிடமும் எடுத்துக் கூறுவதாக வருகின்றது. அதிலும் தெளிவாக காதலன் என்றே வருகின்றது. தாங்கள் மீண்டும் இரண்டாம் பதிவைப் பார்த்து அவைகளில் எனது கருத்து ஏதுமில்லை என்பதை காணலாம்.

Thamiz Priyan said...

///அறிவன்#11802717200764379909 said...
பழுவேட்டரையர்:பழுவேட்டரையர் சோழ அரசின் மிகப் பெரும் அதிகாரிகளில் ஒருவர்.இவர் தெளிவாக இரண்டு இடங்களில் கூறிவிட்டே இறக்கிறார்.///
பழுவேட்டரையர் மிகத் தெளிவாக நந்தினி வீரபாண்டியனின் தந்தை என்று சொன்னதாக கூறி விட்டே சாகிறார். இதுதான் படர்க்கையாக உள்ளது. ஏற்கனவே நொந்து போய் வந்திருக்கும் பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலன் கொலை விடயத்தில் பொய் சொல்கிறார். அவ்வளவு பெரிய அவப்பெயரை தன் மீது சுமத்திக் கொள்ளூம் பழுவேட்டரையர் ஏன் தனது மனைவியின் கற்பு நெறியை காக்க முயன்றிருக்கக் கூடாது? இதில் தான் எனது கருத்தைக் கூறியுள்ளேன். இதற்கு வாய்ப்புகளும் அதிகம் என்பதை நீங்கள் உணரலாம்.

Thamiz Priyan said...

///அறிவன்#11802717200764379909 said...
கருத்திருமன்:இவன் ஆழ்வானிடம் உணமை கூறுகிறான்.
மேலும் சிறையில் வந்தியத்தேவனிடம் தன் கதையைக் கூறும் போதும் பொய்யான உத்தம சோழனுக்குப் பட்டம் கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன என்ற செய்தியைக் கேட்டவுடன் 'இது நடந்தால் உலகம் தலைகீழாகிவிடும்,இதைத் தடுக்க தான் வெளியேறுவது அவசியம் என்று கூறி காரணங்களைக் கூறும் போது இரு குழந்தைகளும் தன் எஜமானரின் குழந்தைகள் என்ற பொருளில் பேசுகிறான்.
எல்லா இடத்திலும் கோர்வையாக ஒரே செய்தியே வருகிறது.///
கருத்திருமன் ஆழ்வானிடம் என்ன உண்மையை எங்கு கூறினான் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஆழ்வானிடம் மெல்லிய குரலில் நந்தினியின் தந்தையின் பெயரைக் கூறினான் என்று தான் வருகின்றது. அது யார் என்று கண்டிப்பாக அந்த இடத்தில் இல்லை. மேலும் இதைப் பற்றி வந்தியதேவனும், குந்தவையும் பேசும்போது கருத்திருமன் தானே நந்தினி, மதுராந்தகர் இருவரின் தந்தை எனக் கூறியதாக ஆழ்வான் கூறியதாக வரும். எனவே தங்களது வாதம் இங்கு நிற்கவில்லை ஐயா!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

///கரிகாலன் வீரபாண்டியனை கொலை செய்ய வரும் போது.. எங்கே அப்பா என கூறினால் தன்னையும் செர்த்துக் கொண்றுவிடுவானோ என நினைத்து காதலன் என கூறினாலோ...
///

இதற்கு விளக்கம் ஆழ்வான் மற்றும் பூங்குழலியின் விவாதத்தில் ஒரு இடத்தில் வருகிறது.

இதே கேள்வியை ஒருவர் கேட்க மறுமொழியாக வருவது:

ஆதித்தன் பாண்டியனைத் தேடிய அக்கால கட்டத்தில் போர் வெறி பிடித்து அலைந்து பாண்டியனைக் கண்ட நேரத்தில் வெறி மிகுந்து நோயாளி என்றும் பாராமல் வெட்டிக் கொல்கிறான்;அந்த நேரத்தில் நந்தினி என்ன சொன்னளோ,ஆதித்தன் என்ன புரிந்து கொண்டாரோ,யாருக்குத் தெரியும்?

காயமடைந்திருக்கும் பாண்டியன் நந்தினியை முதலில் காணும் போது அவளை மந்தாகினியாகக் கருத இடமிருக்கிறது.
ஆயினும் அவன் நந்தினியை அவனுடன் அழைத்துச் செல்லும் போது,அவளுடன் உரையாடும் போது அவனின் ஐயம் தீர்ந்து அவள்-நந்தினி-தன் மகளே என்று உறுதி பெற்றிருக்க வேண்டும்;பிறகு அவள் அவன் காதலியா என்ற கேள்வி எழ வாய்ப்பே இல்லை.

Thamiz Priyan said...

அறிவன் ஐயா!
கருத்திருமன் கூறும் சோழப் பேரரசில் வேறு ஒருவன் பட்டமேறுவது என்பது கூட இங்கு கவனிக்கத்தக்கது தான். கருத்திருமன் இயற்கையாகவே பாண்டிய நாட்டின் மீது பற்று கொண்டவன். மதுராந்தகர், பாண்டிய மன்னனின் (கவனிக்க: வீரபாண்டியனின் மகன் எனச் சொல்லவில்லை) மகன் அல்லது தனது மகன் என்பதாலேயே அவனை சோழ சிம்மாசனத்தில் அமரக் கூடாது என கவலை கொள்கிறான். மதுராந்தகர் விடயத்திற்கு நாம் இன்னும் வரவில்லை.

Thamiz Priyan said...

///அறிவன்#11802717200764379909 said...
காயமடைந்திருக்கும் பாண்டியன் நந்தினியை முதலில் காணும் போது அவளை மந்தாகினியாகக் கருத இடமிருக்கிறது.
ஆயினும் அவன் நந்தினியை அவனுடன் அழைத்துச் செல்லும் போது,அவளுடன் உரையாடும் போது அவனின் ஐயம் தீர்ந்து அவள்-நந்தினி-தன் மகளே என்று உறுதி பெற்றிருக்க வேண்டும்;பிறகு அவள் அவன் காதலியா என்ற கேள்வி எழ வாய்ப்பே இல்லை.///
அறிவன் ஐயா! குறைந்த பட்சம் 40 வயது பெண்ணிற்கும், 18 வயது இளம்பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்கும். ஆனாலும் தங்களது வாதப்படி எடுத்துக் கொண்டாலும் வீரபாண்டியனின் மறைவுக்குப் பிறகு அவள் தெரிந்து கொண்டாள் என்று உள்ளது. ஆனால் மரணித்து சற்று முன்னால் கூட தனது காதலனை ஆதித்தன் கொன்று விட்டதாகவும், வீர பாணிடியனை அன்பெ என்று விழித்தும், சொர்க்கத்திற்கு அவனோடு இருக்க வருவதாகவும் கூறுகிறாள். இவைகள் அவள் மரணிக்கும் வரை வீரபாண்டியனின் காதலியாகத்தான் மரணமடைந்தாள் என்பதைக் காட்டுகின்றது.

Yogi said...

ரொம்ப சுவாரஸ்யமாகப் போகிறது தங்கள் பதிவும் அதன் பின்னூட்டங்களும்.. நானெல்லாம் பொன்னியின் செல்வன் படித்ததோடு சரி .. உண்மையிலேயே நல்ல ஆராய்ச்சிப் பதிவு.. வாழ்த்துக்கள் தொடரவும்.. :)

என் தளத்திற்கு இணைப்புக் கொடுத்ததற்கும் நன்றி :)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//நந்தினி முன்னர் கூறியவைகளை வைத்து வீரபாண்டியன் காதலன் என நிரூபிப்பவை
1. ஆதித்தனிடம் தனது காதலைக் கொன்றதாக கூறுமிடம்//
இந்த இடம் நேரடியாகக் கதையில் விவரிக்கப் படுவதில்லை.
ஆதித்தன் பார்த்திபேந்திரனிடம் விவரிக்கும் இடத்தில் தான் இந்த விவரணை ஆதித்தன் வார்த்தைகளில் வருகிறது.
அவள் ஏன் அப்படிக் காதலன் என்று கூறியதாக ஆதித்தன் கருதினான் என்பதற்குத்தான் பின்னொரு இடத்தில் அவன் அந்த நேர யுத்த வெறியில் நந்தினி சொன்னதைத் தவறாகப் புரிந்திருக்கலாம் என்ற விளக்கம் ஆழ்வான்/பூங்குழலிக்கிடையில் நிகழ்கிறது.
இரண்டாவது நந்தினி பாண்டியனை நேரடியாக சந்திக்கும் காட்சி கதையில் எங்கும் காட்சியாகக் கூட வருவதில்லை,இரண்டே இடங்களைத் தவிர.
ஒன்று ரவிதாசன் அவளை நிந்திக்கும் போது,பாண்டியன் உடல் எரியூட்டப் படுவதை நினைவூட்டி அவளின் சபதத்தை நினைவூட்டுவான்.
இரண்டு மேற்கண்ட ஆதித்தன் - நந்தினி சந்திப்பு வேளையை ஆதித்தன் வாயிலாகவே சொல்வது.

ஆதித்தன் மனநிலை பற்றிய கேள்விகள் வேறொரு பாத்திரம் மூலம் எழுப்பப்படும் போது அவள் காதலியாக உறுதியாக சித்தரிக்கும் வாய்ப்புகள் குறைகின்றன.

\\2. தனக்குத் தானே புலம்பும் இடம்\\

நந்தினி அன்பே என்றுதான் புலம்புகிறாளே யொழிய மணாளா,காதலா என்று புலம்புவதில்லை !
தந்தையைக் கூட அவ்வாறு விளிக்கும் வாய்ப்புகள் உண்டு.


//3. சிறுவனிடம் பேசுமிடம்
இவைகளை கல்கி நேரடிக் காட்சிகளாகத் தான் கூறுகிறார். //

இந்த இடத்தில் நந்தினி பின்னர்தான் வருகிறாள்.
அச்சிறுவன் அவளை அம்மா என அழைப்பதால் அவன் பாண்டியனுக்கு மனைவி என்று அர்த்தமல்ல.

அநிருத்தப் பிரம்மராயர் இந்த சந்திப்பு பற்றி அறியவரும் இடத்தில் யாரோ ஒரு தயாதி பாண்டிய சிறுவனை மகுடம் சூட்டி அரசுரிமைக்கு ஆள் தயார் செய்கிறாள் நந்தினி என்ற போக்கிலேயே கதை செல்கிறது.இந்த சிறுவன் கதாபாத்திரம் மூலம் நந்தினி/பாண்டியன் உறவு எந்த வகையிலும் உறுதிசெய்யப் படும் வண்ணம் கதைக் காட்சி இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக மந்தாகினியையும் பாண்டியனையும் ஒரே படகில் ஏற்றிச் சென்று பூதத்தீவில் விடும் காலத்திற்கு 25 ஆண்டுகள் பின்னர்தான் கருத்திருமன் சிறையிலிருந்து தப்பும் நிகழ்வு நடக்கிறது.அவன் பழைய மதுராந்தகன்,வந்தியத்தேவன்,ஆழ்வான் ஆகிய மூவரிடமும் கூறும் 'கருத்திருமன் கதை' சுமார் 5 அல்லது 6 அத்தியாயத்திற்குள் வந்து விடுகிறது.மூன்று பேரிடமும் அவன் சொல்லும் கதை பழைய மதுராந்தகனும்,நந்தினியும் பாண்டியனுக்கும்,மந்தாகினிக்கும் பிறந்தவர்கள் என்பதை தெளிவாக்குகிறது.

ஆதித்தன் 13 வயதில் சேவூர்ப் போர்க்களத்தில் நுழைந்த செய்தியும் கதையில் இருக்கிறது.எனவே ஆதித்தன் பாண்டியனைக் கொல்லும் போது நந்தினியும் ஆதித்தனும் ஒத்த வயதினராக இருக்கவும்,பாண்டியன் வயதானவனாக இருக்கவுமான் வாய்ப்புகள்தான் சரியானவையும் கதைப் போக்குக்கு சரியானதும்,கதையைப் படிக்கும் எவரும் வரக்கூடும் சரியான முடிவாகவும் இருக்கும்.
இம்முடிவு அவள் மகளாக இருக்கக் கூடிய வாய்ப்புகளையே தரும்.

இவை அனைத்தையும் மீறி,'இல்லை அவள் அவன் காதலிதான் என்ற காதலி மனோபாவத்துக்கு எவரும் விடைதர முடியாது.

சுமார் 100 முறைக்கும் மேலாக நான் படித்த பொ.செ. கதை இவ்வித முடிவையே எனக்குத் தருகிறது.

உங்களுக்கான மாற்றுப் பார்வையை அது தந்தால்,ஒரு நடை கல்கியைப் பார்த்து கேட்டு விடுங்கள் !

Thamiz Priyan said...

அறிவன் ஐயா!
தங்களைப் போல் நூறு முறை பொன்னியின் செல்வனைப் படிக்கும் பேறு எனக்கு கிடைக்கவில்லை. நூறு முறை படித்த தங்களிடம் விவாதிக்கும் தமிழ் திறமையும் இல்லை. நிச்சயமாக காதலி தான் என்ற மனோபாவத்தில் தான் நான் இருக்கிறேன். மகள் தான் என்ற மனோபாவத்தில் தாங்கள் உள்ளீர்கள். நிற்க.
பார்வையாளர்களுக்காக என்னுடைய கருத்தை சாராம்சமாக பதிவாக தர விழைகின்றேன்.

புருனோ Bruno said...

சாமி, என் கேள்விகளை கண்டுகொள்ளுங்கள் :) :) :)

Thamiz Priyan said...

///புருனோ Bruno said...

சாமி, என் கேள்விகளை கண்டுகொள்ளுங்கள் :) :) :) ///
டாக்ட்ட்ட்டடடடடடடடடடடடடர்ர்ர்/....
முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும்.
///ஆதித்த கரிகாலன் தன் கத்தியால் தன் வயிற்றில் சொருக வாய்ப்புள்ளதா ??///
இதற்கு நீண்ட ஒரு பதிவு தான் போடனும். ஆனால் சக பதிவர்களுடன் தொடச்சியாக கருத்து வேறுபாடுகளை எடுத்துக் கொண்டு வாதிட நேரமில்லை. கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் ஆதித்தனின் மரணத்தை கொலை என்றோ, தற்கொலை என்றோ கூறாமல் சென்று விட்டார். அவனது மரணத்திற்குப் பின்னால் இருந்ததாக உத்தம சோழன் மீது பழி இருந்தது. இதைப் பற்றியும் யாமறியோம். மேலும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து ரவிதாசன் மற்றும் அவனது சகோதரன் உள்ளிட்ட கூட்டாளிகளை இராஜராஜன் ஆட்சியில் இது சம்பந்தமாக நாடு கடத்தியதாக வருகின்றது. வரலாற்றில் ஆதித்தனின் மரணம் தெளிவாக விளக்கப்படவில்லை. அவனது மரணம் குறித்த திருவாலங்காட்டுச் செப்பேடும் இவ்வாறே சொல்கிறது. "வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான். உலகில் கலி என்னும் காரிருள் சூழ்ந்தது!"

Thamiz Priyan said...

///தனது தந்தை யாரென்று நந்தினிக்கு எப்பொழுது தெரியும். வீரபாண்டியனின் மரணத்தின் பின்னாலா, அல்லது நந்தினி வீரபாண்டியனை முதலில் சந்திக்கும் முன்னரேவா ?? *///
நான் பொன்னியின் செல்வனில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு நந்தினி வீரபாண்டியனின் காதலி தான் என்பதில் தெளிவாக இருப்பதால் அதை ஒட்டியே எனது பதிலைத் தருகிறேன். நந்தினி எப்போது தனது தந்தையை அறிந்து கொண்டாள் என்பது தெளிவாக இல்லை. அது வீரபாண்டியனின் மரணத்திற்கு முன்னோ, பின்னோ எதுவாக இருந்தாலும் அதனால் பிரச்சினையில்லை. ஏனெனில் நந்தினியின் தாய் பற்றி அறிந்திருந்த கருத்திருமன் பாதாளச்சிறையில் இருந்ததால் அவள் தனது பிறப்பு ரகசியத்தை தனது உருவத்தை வைத்தே அறிந்திருக்க இயலும். நீங்கள் குறிப்பிட்டதைப் போல் இருக்க இயலாது. ஏனெனில் வீரபாண்டியன் மந்தாகினிக்கும் கணவனாக இருந்திருந்தால் நந்தினி தன் மையம் கொள்வதை தடுத்து தான் தான் தந்தை என்பதை சொல்லி இருப்பான். அம்மா, மகள் உருவ ஒற்றுமை ஒரே மாதிரி தான் இருந்தது. சுந்தர சோழரைக் கூட அப்படிதான் நந்தினி பயமுறுத்துவாள். எனவே இதற்கு வாய்ப்பே இல்லை.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

///இங்கு கூறிய பல சாத்தியக்கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்தோம்.

முதல் கேள்வி

ஆதித்த கரிகாலன் தன் கத்தியால் தன் வயிற்றில் சொருக வாய்ப்புள்ளதா ??//

கல்கி கதையின் போக்குப் படி பழுவேட்டரையர் எறிந்த கத்தியினால் ஆதித்தன் இறந்தான் என்ற யூகத்தையே முன் வைக்கிறார்.

இரண்டு காரணங்கள்:
1.வந்தியத்தேவன் காளாமுக வடிவத்தில் இருக்கும் அவரைப் பார்க்கையில் அவரின் கையில் 'திருகு மடல்' கத்தி இருக்கிறது;பின்னர் எரிந்து கொண்டிருக்கும் அறையில் ஆதித்தனின் இறந்த உடலையும் ரத்தம் தோய்ந்த 'திருகு மடல்' கத்தியையும் வ.தே. பார்க்கிறான்;இரண்டையும் எடுத்துக் கொண்டு வெளியேறுகிறான்.

2.மலையடிவாரத்தில் நந்தினியிடம் பழுவேட்டரையர் கேட்பது,'அடி பாதகி,நான் கத்தியை எறிந்திருக்காவிட்டால் என்ன செய்ய உத்தேசித்திருந்தாய்,சொல் எனக் கேட்பது;நந்தினியும் ‘வேளை கூடி வந்த நேரத்தில் அவள் கைகளில் வலுவற்றுப் போனது,ஆனால் என்னைக் கரம் பிடித்த நீங்கள் என் உதவிக்கு வரும் படி விதி செய்தது' எனக் கூறுவது.

இதற்கு மறுதளிப்பாகவும் ஒரு கட்டம் வருகிறது,பின்னர் அரசவையில் தற்கொலை செய்து இறக்கும் தறுவாயில்,ஆழ்வானிடம்,'வ.தே.க் காக்கவே குற்றத்தைத் தன் பேரில் போட்டுக் கொண்டேன்'என பழுவேட்டரையர் எதைச் சுட்டுகிறார் என்பதில் சிறு குழப்பம்.
ஆனால் அரசவையில் பேசும் போதும் தானே தான் நந்தினியை நோக்கி எறிந்த கத்தி குறி தவறியதாக அவரே சொல்கிறார்...



//தனது தந்தை யாரென்று நந்தினிக்கு எப்பொழுது தெரியும். வீரபாண்டியனின் மரணத்தின் பின்னாலா, அல்லது நந்தினி வீரபாண்டியனை முதலில் சந்திக்கும் முன்னரேவா ??///

கதைப் போக்கின் படி பார்த்தால்,பழுவேட்டரையரைத் திருமணம் செய்து தஞ்சை அரன்மனைக்கு வந்தபின்பே அவளுக்குத் தெரியவர வாய்ப்புகள் இருக்கின்றன...


//இதற்கு பதில் தெரிந்தால், அதன் பிறகு மிகவும் சங்கடமான கேள்வி ஒன்று உள்ளது.//

என்ன சங்கடம் மருத்துவர் ஐயா???????

சாம் தாத்தா said...

முடிவே காண முடியாத விஷயத்தைக் கையில் எடுத்துள்ளீர்கள்.

ஏனெனில் இது சம்பந்தமாக எந்த ஒரு முடிவுக்கு வந்தாலும் அதற்கு ஒவ்வாத மற்றொரு சம்பவத்தை, கூற்றை கல்கி முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறார்.

கல்கியே நேரில் வந்து விளக்கினால்தான் உண்டு.

கல்கியின் எழுத்தாற்றல் வல்லமையின் முழு வீச்சையும் இந்த ஒரு விஷயத்திலேயே நாம் விளங்கிக் கொள்ளலாம்.

(என் குரங்கு வால் மீது சத்தியமாய், ங்கொப்புரானே சொல்றேன். உங்களால இதுக்கு தீர்வு காண முடியாது.)

மீண்டுமொரு முறை என் கல்கியின் "பொன்னியின் செல்வனை"
நினைவு கூற வைத்தமைக்காக நன்றியோ நன்றிகள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மந்தாகினி தேவி வீரபாண்டியனுக்கு குழந்தைகள் பெற்றிருந்தால் எதற்காக சுந்தர் சோழரை பார்த்து முதல் மரியாதை ராதா ரேன்ஞ்சுக்கு ரொமான்ஸ் கொடுக்க வேண்டும். பழுவேட்டரையர் தனது மனைவியின் கற்பு நெறியை காக்க சொன்ன விஷயமாகவே இது தோன்றுகிற்து