Tuesday, January 19, 2010

ஆயிரத்தில் ஒருவனும், ஒரு சிறுகதையும்.

எனக்கு நேரே நிற்க வைக்கப்பட்டிருந்த அந்த பத்துப் பேரையும் பார்க்கும் போது பாவமாக இருந்தது. காட்டுவாசிகள் போல் உடை அணிந்து இருந்தனர். அதில் நடுமையமாக நின்றிருந்த அந்த அழகான பெண்ணைப் பார்க்கும் போது ஏனோ மனம் அவள் பேரில் மயங்குவது போல் இருந்தது. என் கையில் இருந்த வாள் சூரிய வெளிச்சத்தில் பட்டு மின்னிக் கொண்டு இருந்தது. எனக்கு அருகில் இருந்த கேப்டன் கையைக் காட்ட என் வாள் மின்னல் வேகத்தில் சுழன்றது. சில வினாடிகளில் அங்கிருந்த பத்து பேரின் தலையும் வெட்டப்பட்டு கீழே கிடந்தது. எனது முகம், ஆடை முழுவதும் சூடான இரத்தம் பட்டு ஒழுகிக் கொண்டு இருந்தது. அந்த பெண்ணின் தலை தரையில் உருண்டு காலுக்கு கீழ் வரும் போது கலகலவென சிரிக்க ஆரம்பித்து இருந்தது.

சட்டென்று கண்ணைத் திறந்து பார்த்த போது படுக்கையில் இருந்தேன்... ஓ..கனவு.. உடல் முழுவதும் வியர்த்து ஒழுகிக் கொண்டு இருந்தது. என்ன குரூரமான கனவு... அந்த காட்டுவாசிகளை என் கையால் வெட்டிக் கொள்வது எவ்வளவு கொடுரம்...

அறையை விட்டு வெளியே வந்த போது, கப்பல் மிதமான வேகத்துடன் சென்று கொண்டு இருந்தது. மெதுவாக கப்பலின் மேல் தளத்திற்கு வந்த போது அங்கே குழுத் தலைவர் சான்சஸ் நின்று கொண்டு இருந்தார்... ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினார்

“ஹாய்! தமிழ்! என்ன இப்படி வேர்த்து விறுவிறுத்துப்போய் வந்து கொண்டு இருக்கிறாய்?”
“ஒரு கெட்ட கனவு சீப்... அதான்”
“ஓ... நான் கூட முதல் தடவை நீ கப்பலில் வந்த போது, வாந்தி எடுத்து அமர்க்களம் செய்தது நினைவுக்கு வந்து விட்டது”
கலகலவென சிரிக்கத் தொடங்கி இருந்தார். நம் நிலைமை நமக்கு தானே புரியும்? எதுவும் பேசாமல் கப்பலின் முனைக்கு சென்று நின்று கொண்டேன். தூரத்தில் வங்காள விரிகுடாவின் எல்லை முடிவே இல்லாமல் விரிந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. இடையிடையே சிறு சிறு தீவுக்கூட்டங்கள் தெரிந்தன.

என்னை உங்களுக்கு அறிமுகம் செய்யவில்லையே? நான் தமிழ் பிரியன்... இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பணியாளர்களில் ஒருவன். பொறியியல் முதுகலைப் பட்டம் படித்து, பின்னர் சில ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு விட்டு இந்த பணியில் இணைந்துள்ளேன். இப்போது நாங்கள் கப்பலில் ஒரு தீவுக்கு சென்று கொண்டு இருக்கின்றோம்.

இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் உலகில் உள்ள அவசரத் தேவையான மின்சாரத்தை புதிய முறையில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதில் ஒரு முக்கியமானவர்களில் நானும் ஒருவன். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Indionium (இண்டியோனியம்) என்ற தனிமத்தை செறிவூட்டி சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றலைக் கொண்டு அதிக அளவில் மின்சாரம் கண்டுபிடிக்க இயலும் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். யூரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்றவற்றை செறிவூட்டி, மின்சாரம் எடுக்கும் முறை மனித குலத்தின் அழிவுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் அதை இந்தியா முற்றிலுமாக கைவிட்டு இதில் இறங்கி உள்ளது.

இண்டியோனியத்தை சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றல் சில மணி நேரங்களில் குன்றி விடும். இதனால் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது என்றும் கண்டுபிடித்துள்ளோம். ஓரு தீவை இண்டியோனியம் குண்டு வைத்து தகர்க்கப் போய்க் கொண்டு இருக்கிறோம்.

வங்காள விரிகுடாக் கடலில் அந்தமான் தீவுகளுக்குக் கீழே கேர்க்கஸ் என்ற தீவுக்கு செல்கிறோம். அந்த தீவைத்தான் குண்டு வைத்து தகர்க்கப் போகின்றோம். சுமார் 6 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் உள்ள அந்த தீவு முழுவதும் கடுமையான பாறைகளைக் கொண்ட மலையினால் ஆனது. சுமார் 1000 மீட்டர் உயரம் உள்ள அந்த மலையின் மேல் இருந்து சுமார் 2000 மீட்டர் ஆழத்திற்க்கு துளை உருவாக்கப் பட்டுள்ளது. இண்டோனியம் செறிவூட்டப்படும் போது அந்த தீவு முற்றிலுமாக வெடித்து சிதறி விடும். அதன் மூலம்உலை வெடித்தால் இருக்கும் சேதாரங்களையும், கதிர்வீச்சின் வீரியத்தையும் கணக்கிட உத்தேசித்துள்ளோம்.

கப்பல் கோக்கஸ் தீவுக்கு அருகில் இருப்பது தெரிந்தது... மேற்கு திசையில் கதிரவன் தனது கைகளை சுருக்கிக் கொண்டு மறைந்து கொண்டு இருந்தான். கப்பல்தீவில் இருக்கும் அந்த நெடியாக மலை சோகமாக பார்ப்பது போல் இருந்தது. நங்கூரம் பாய்ச்சி நீர்மட்டம் அதிகமாக இருக்கும் இடத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டது.

இரவு மணி 11.00 .... கடலின் மேல் தளத்தில் நின்று, கடலை ரசிப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். கடல் அலைகள் தீவின் பாறைகளில் மோதும் ஓசை காதுகளில் வந்து அறைந்து கொண்டு இருந்தது. அப்போது தீவில் இருந்து அந்த மெல்லிய ஒலி கிளம்பத் தொடங்கி இருந்தது..... டம்டம் என்று ஆரம்பித்த ஓசை சிறிது சிறிதாக அதிகமாகி திடீரென்று நின்று போய் இருந்தது

சான்ஸன் கப்பல் மேல் தளத்திற்கு வருவது தெரிந்தது.

“ஹாய் தமிழ்! கடல் என்ன சொல்லது? ஏதாவது கவிதை சொல்லுங்களேன்”
“இல்லை சீப்! இந்த தீவில் மக்கள் வசிக்கிறார்கள் போல தெரிகிறது.. சிறிது முன் அங்கே ஏதோ இசைக்கும் சத்தம் கேட்டது”
“ஹா! ஹா! ஹா! அதெல்லாம் அலைகளின் ஓசையாக இருக்கும்... இங்கு நான் பல மாதமாக ஆராய்ச்சி செய்து இருக்கிறேன்.இந்த தீவில் சில சிறு விலங்குகளைத் தவிர வேறு யாருமே இல்லை. இன்ப்ரா ரெட் கதிர்களை அனைத்து பகுதியிலும் செலுத்தி உறுதி செய்து விட்டோம். மனிதர்கள் யாருமில்லை.. மலையைக் குடைந்து நமது உலையை ஏற்படுத்தி விட்டோம். அனைத்து உபகரணங்களையும் பொருத்தியாகி விட்டது. அப்படி யாராவது இருந்தால் இதற்குள் தெரிந்திருக்கும்”
“இல்லை சீப்! என் மனதுக்கு உறுத்தலாக உள்ளது... இங்கு யாரோ வாழ்கிறார்கள்”
“தமிழ்! உனக்கு இதே வேலையாய் போய் வீட்டது. இரவு நன்றாக தூங்கி எழு! எல்லாம் சரியாகி விடும். காலையில் சீக்கிரம் தீவுக்கு செல்ல வேண்டும். பை.. குட் நைட்”

சான்சஸ் கீழே சென்று விட மீண்டும் தீவில் இருந்து அந்த இசை கேட்க ஆரம்பித்து இருந்தது....

காலை சூரியன் தனது செங்கிரண கைக்களை விரித்துக் கொண்டு வேகமாக உதித்துக் கொண்டு இருந்தான். கப்பலில் ஆட்கள் வேலைக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. இரவில் கேட்ட சத்தங்களின் திகைப்பில் இருந்து மனம் இன்னும் மீண்டு இருக்கவில்லை.

மேலே வந்து பார்த்த போது தீவுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அதில் தேவையான தொழில் நுட்பக் கருவிகளும், உணவுப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இன்றைய எனது பணி கொஞ்சம் கடினமானதாக இருக்கும் என்றே தோன்றியது. எங்கள் குழுவில் முக்கிய குழு ஹெலிகாப்டர் வழியாக மலையின் உச்சியில் இருக்கும் முக்கிய ஆராய்ச்சி நிலையத்தை அடையும். அங்கிருக்கு ஆரம்பமாகும் ஆழ்துளையில் வெடிப்புப்பைத் தொடங்க வேலை நடக்கும். மற்ற சில குழுக்கள் தீவின் ஓரங்களில் உள்ள சிறு குன்றுகளில் ஏற்கனவே பொருத்தப்பட்ட டிரான்ஸ்மீட்டர்களை சரி பார்க்க வேண்டும்.

ஆழ்துளையில் வெடிப்பு நிகழும் போது தீவு முழுவதும் வெடித்துச் சிதறும் என்பதால் அதன் சக்திகளை அளவிட இந்த டிரான்ஸ்மீட்டர்கள் உதவும். இதை பல கிலோ மீட்டர் தூரத்தில் நிற்கப் போகும் எங்கள் கப்பல், தூத்துக்குடி, அந்தமான், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் இருக்கும் கட்டுப்பாடு அறைகள் கண்காணிக்கும்.

காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. எனக்கு தேவையான பொருட்களை முதுகில் சுமந்து கொண்டு தீவில் ஒரு புறத்தில் இறங்கி இருந்தேன். எங்களை இறக்கி விட்டு விட்டு ஹெலிகாப்டர் பராமரிப்புப் பணிக்காக கப்பலுக்கு வேகமாக நகர்ந்திருந்தது. என்னுடன் வந்திருந்தவர்கள் அனைவரும் தத்தமது உடைமைகளை எடுத்துக் கொண்டு தயாராக இருந்தனர். பல தடவை வந்த பழக்கமாக இடம் என்றாலும், இரண்டு நாட்களாக கண்ட கனவுகளாலும், அமானுஷ்யமான உணர்வுகளாலும் ஏனோ ஒரு கலவரமான உணர்வில் இருந்தேன்.

மா
லை ஆகிக் கொண்டு இருந்தது. வழி மாறிச் சென்றுவிட்டதால் உடன் வந்தவர்களை தவற விட்டு இருந்தேன். வழியில் இருந்த பல இடர்களால் நேரம் தாமதமாகி இருந்தது. ஒரு பாம்பு வேறு இடைமறித்து, அதை சுட்டுத் தள்ள வேண்டி இருந்தது. வேகமாக இருள் சூழ ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. ஹெலிகாப்டர் திரும்பி வந்து காத்துக் கொண்டிருக்கும். கையில் இருக்கும் வாக்கி - டாக்கியும் சார்ஜ் இல்லாமல் செத்துப் போய் இருந்தது.

திடீரென்று அந்த ஏகாந்தமான பாடல் பாடும் ஓசை கேட்க ஆரம்பித்து இருந்தது. அதோடு சுகந்தமாக மல்லிகைப் பூவின் வாசமும் வர ஆரம்பித்து இருந்தது. நேற்று கனவில் கேட்டது வாத்தியங்களின் ஒலியாக மட்டுமே இருந்தது. இன்று கேட்பது ஒரு பெண்ணின் குரல். இனிமையான குரல்... இதுவரை கேட்டிராத முறையில் கொஞ்சம் கடினமாக தமிழில் பாடிக் கொண்டு இருந்தாள். குரல் வந்த திசையை நோக்கி கால்கள் நகரத் துவங்கின.... சிறு குன்றுகளுக்கு இடையே இருந்த குறுகிய பள்ளத்தாக்கில் இருந்து தான் அந்த குரல் வந்து கொண்டு இருந்தது.

அங்கே மல்லிகைப் பூக்களின் செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன. அதில் இருந்து ஒரு பெண் பூக்களைப் பறித்து தன்னிடம் இருக்கும் பூக்கூடையில் போட்டுக் கொண்டு இருந்தாள். வித்தியாசமான பூக்களாலும், பருத்தியாலும் ஆனது போன்ற ஆடை அணிந்து இருந்தது ஒரு பழைய நாகரீக பெண் போல தெரிந்தாள்.

மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டு அந்த பெண்ணுக்கு அருகில் செல்லத் துவங்கினேன். அழகான குரலில் பாடிக் கொண்டே இருந்தாள். மெதுவாக இடுப்பில் இருந்த பிஸ்டலைக் கையில் பிடித்தவனாக அவளுக்கு அருகில் நெருங்கி இருந்தேன்.

“அங்கேயே நில்! யார் நீ”

கையில் இருந்த பூக்கூடையை கீழே தவற விட்டவளாக அதிர்ந்து போய் திரும்பினாள். என்னைக் கண்டதும், ஏதோ இதுவரைப் பார்க்காத ஒன்றைப் பார்தது போல் விதிர்விதிர்த்து நின்று கொண்டிருந்தாள்....

வீடியோ கான்பரன்ஸில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மேலதிகாரிகளுக்கும் முன் அமர்ந்து இருந்தேன். என் அருகில் கேப்டன் சான்சஸ் இருந்தார். சான்சஸின் முகம் வியர்வையில் குளித்து இருந்தாலும், அவருக்குள் இருக்கும் பதற்றத்தை அவரால் தவிர்க்க இயலாதது தெரிந்தது. அதிகாரிகள் கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்தனர்.

“தமிழ்! நீங்க சொல்வது உண்மையாயா?”

“கண்டிப்பாக... அந்த பெண்ணைப் பார்த்ததும், அவளை துப்பாக்கி முனையில் நிறுத்தினேன். அவளுக்கு துப்பாக்கியைப் பற்றி தெரியவில்லை. துப்பாக்கியைக் கண்டு கொள்ளாமலே இருந்தாள். அவளை மிரட்டும் தொனியில் பேசியதும் பயந்து போனாள். அவளது மொழியும் எங்களது தமிழ் மொழியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தது. அதனால் அவள் என்னுடன் பேசத் தொடங்கினாள்”

“நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தையே அதிகமாக்குகிறது தமிழ்! மேல சொல்லுங்க”

“யார் அவள் என்று விசாரித்ததில் அவள் அந்த தீவிலேயே அவர்களது குழுவுடன் வசிப்பதாகக் கூறினாள். அவர்களின் வீடுகள் மலைகளைக் குடைந்து படைக்கப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து யாரும் வெளியே வரக் கூடாது எனவும் கூறினாள். மேலும் மலைக்குள் சூரிய ஒளி வரும் அமைப்பு உள்ளதாகவும், தண்ணீர் அருவிகளும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகில் இருப்பதாகவும் கூறினாள்.”

“உணவுப் பொருட்களை விளைவிக்கும் பள்ளத்தாக்குகளுக்கு மட்டும் இரகசிய வழி வழியாக சென்று திரும்புவது வழக்கமாம். அந்த பெண்ணுக்கு மல்லிகைப் பூவின் மீது உள்ள ஆசையின் காரணமாக அவர்களது வீட்டை விட்டு அவளுக்கு மட்டுமே தெரிந்த பாறை இடுக்கு வழியே வெளியே வந்திருக்கிறாள்”

“தமிழ்! நீங்கள் சொல்வதை எல்லாம் நம்பவே முடியவில்லை. ஏதோ பழைய காலங்களில் சொல்லப்படும் கதை போல் உள்ளது”

“இல்லை கேப்டன்! நான் சொல்வதெல்லாம் உண்மை தான்.. அவள் சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அவளுடன் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். பாறைக்குப் பின் இருந்த ஒரு சிறு வழியாக என்னை அழைத்துச் சென்றாள். என்ன ஆச்சர்யம். ஒரு அழகான சிறு கிராமம் போல் இருந்தது. வீடுகள் அனைத்தும் அழகான மரங்களால் ஆன கதவுகளாலும் செய்யப்பட்டிருக்கிறது. நான் அந்த வீடுகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவள் ஓடிப் போய் விட்டாள். நான் அதிகப்படியான அதிர்ச்சியில் தட்டுத்தடுமாறி ஹெலிகாப்டரை அடைந்தேன்.”

“நீங்க சொல்வது உண்மை என்றாலும் கடந்த நான்கு நாட்களாக உங்களின் வழிகாட்டுதலில் அந்த தீவையே சல்லடை போட்டு தேடியாகி விட்டது. அல்ட்ரா சோனிக் முறையிலும் தேடி விட்டோம். நீங்கள் குறிப்பிடுவது போல் யாருமே அங்கு இல்லை. நீங்கள் சென்ற பாறை வழிப்பாதையையும் உங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இனியும் நீங்கள் சொல்லும் கதைகளை நம்ப இயலாது தமிழ்!”

“இது கதை இல்லை சார், இன்னும் சில நாட்கள் நம் சோதனையை தள்ளி வைத்து தேடலாம். நான் சென்ற நேரம் இருட்டி இருந்ததால் என்னால் அந்த பாதையைக் கண்டுபிடிக்க இயலவில்லை.”

“மன்னிக்கவும் தமிழ்! நமது இந்த ஆராய்ச்சியின் முடிவுக்காக உலகமே நம்மை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கின்றது. உங்களுடைய இந்த பேத்தல்களுக்காக எல்லாம் நம் சோதனையை தள்ளி வைக்க இயலாது. உங்களை இந்த சோதனை முடியும் வரை தீவுக்கு செல்ல தடை விதிக்கின்றோம். ஆனாலும் கப்பலில் இருந்து ஆராய்ச்சி பணிக்கு உதவுங்கள். Best of Luck!"

தற்கு அடுத்த வந்த சில நாட்கள் என் வாழ்வில் மறக்க இயலாதவை. இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு அந்த தீவையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனோ தூங்க முயற்சி செய்தால் அந்த அப்பாவிப் பெண்ணின் முகமே நினைவுக்கு வந்தது.

இன்று ஆய்வின் கடைசி நாள். மதியம் 1 மணிக்கு உலையை வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வெடித்தும் இருந்தது. பாதுகாப்பிற்காக கப்பல் தீவில் இருந்து பல நாட்டிக்கல் தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. சில மணிகளில் இந்தியாவில் இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களின் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து, எந்த கதிர்வீச்சும் இல்லை என அறிவிக்கப்பட்டது. எனவே தீவை நோக்கி மேல் தகவல்களுக்காக கப்பல் சென்று கொண்டிருக்கின்றது. தீவு இருந்த இடமே தெரியாமல் இருந்தது.

கப்பல் முன்னேறிக் கொண்டு இருந்தது. கப்பலின் முகப்பில் நின்று கொண்டு இருந்தேன். என் அருகில் சான்சஸூல் எதையோ பறிகொடுத்தவர் போல் தீவு இருந்த இடத்தை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். கடலில் ஏதோ மிதந்து வருவது போல் இருந்தது. அருகே வர வர அது என்னவென்று புரிந்தது...

“அது.. அதே தான்.. இது அந்த பெண் வைத்திருந்த பூக்கூடை”
எனது கத்தலில் அனைவரும் கப்பலின் முகப்பிற்கு வந்திருந்தனர். பூக்கடையை வீரர்கள் கப்பலுக்கு எடுத்து இருந்தனர். கப்பல் நகர நகர மரக்கதவுகளும், மரச் சாமான்களும் மிதந்து வந்து கொண்டு இருந்தன. இன்னும் தீவை நெருங்கும் போது மரங்களில் சிக்கிய வண்ணம் பிணங்கள் தெரிய ஆரம்பித்து இருந்தது. ஆதிவாசிகள் மாதிரியான ஆடைகளுடன்...

டிஸ்கி : இச்சிறுகதையை 2008 அக்டோபரில் எழுதி எனது வலைதளத்தில் பிரசுரித்து இருந்தேன். இங்கு மீண்டும் மீள்பதிவாக..

http://majinnah.blogspot.com/2008/10/blog-post_31.html

இக்கதையின் மூலம் கல்கி எழுதிய ஒரு சிறுகதையே.

14 comments:

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழன்-கறுப்பி... said...

தல ஏதோ சொல்லணும் போல இருக்கு.

:)

தமிழன்-கறுப்பி... said...

ஏற்கனவே படிச்சுட்டமேஏஏஏ...

:)

நட்புடன் ஜமால் said...

நான் இப்பதான் படிக்கிறேன்

இந்த கதையை செல்-வா-ரா-கவனும் படிச்சிருப்பாரோ ...

-------------

செமையாயிருக்கு ’தல’

Raju said...

வாவ்..!
சின்ன சின்ன விஷயங்களைக் கூட கவனித்து மெனக்கெட்டு எழுதியிருக்கீங்க..! நல்லா இருக்கு ஜின்னா அண்ணே.

Unknown said...

கதையும், அதுக்கு நான் போட்ட பின்னூட்டமும் இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது :)))))))))))

enrenrum16 said...

ச்சே...முதலில் இது உங்கள் சொந்த அனுபவம் என்று நினைத்தேன்...ஹ்ம்ம்..பரவாயில்லை...ஏதோ ஆராய்ச்சிப்பணியில் எல்லாம் இருப்பவர்...இவரோட வலைப்பூவில் நிறைய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்று ஆவலோடு வாசித்தேன்...வாசிக்கும்போதே ஏதோ தோணுச்சு...முடிவுல கதைன்னு தெளிவாயிடுச்சு...
(நாங்கல்லாம் ட்யுப்லைட்டுல்ல...அதுவும் 200 W...;-))
எனிஹவ், கதை நல்லாருந்தது.

ஹுஸைனம்மா said...

செல்வராகவன் மேலே கேஸ் போடப்போறீங்களா?

நாஸியா said...

நாந்தான் 100வது ஃபாலவர் :)))))

ஷாகுல் said...

சூப்பர் கதைங்க

நிஜமா நல்லவன் said...

//நிஜமா நல்லவன் on November 1, 2008 3:28 PM said...

நல்ல கதை. கல்கியின் சில கதைகளை நினைவுப் படுத்திட்டீங்க பொடிப்பசங்கண்ணே!..

அதென்னய்யா கொடுமை புனைவுன்னாலே எல்லாரையும் சாகடிச்சிடுறீங்க... இதை மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்
//

நிஜமா நல்லவன் said...

//நிஜமா நல்லவன் on November 1, 2008 3:28 PM said...

கதை நல்லா இருந்தது.. பட் அந்த பொண்ணு இறந்தது கொஞ்சம் ம்ஹும் நிறைய கஷ்டமா இருக்கு..:(( இது கதைதாங்கறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு...:)
//

நிஜமா நல்லவன் said...

/ஸ்ரீமதி on October 31, 2008 9:56 AM said...

தமிழ் பிரியன் அண்ணா சைண்டிஸ்ட்டா?????? சொல்லவே இல்ல..!! ;))))))))
/


ரிப்பீட்டு:)

நட்புடன் ஜமால் said...

நிஜமா நல்லவன் - நீங்க 2008லேயே இப்படி கமெண்ட் போட்டு இருக்கீங்களே

நீங்க நிஜமவா நல்லவர் மட்டுமில்லீங்கோ
வல்லவரும் கூட ...