
எங்களைப் பற்றி ஒரு அவதூறு தமிழ் இணையத்தில் பரப்பப்பட்டு உள்ளது.. அது குறித்தே இப்பதிவு.. தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமம்(தோ.த.இ.ப.எ.வ.ச.கு) இப்பதிவு பல ஆண்டுகளாக தோஹாவில் இயங்கி வருவது உலகம் பூராவும் இருக்கும் ப்ளாக்கர்களுக்கு எல்லாம் தெரியும்.. ஆனா சமீபத்திய குளறுபடிகளில் நமது சங்கத்தின் பெயரும் அடிபடுவது வருத்தத்தை அளித்துள்ளது.
தோ.த.இ.ப.எ.வ.ச.கு. பல அற்புதமான வேலைகளை தோஹாவில் செய்து வருகின்றது.. அரேபியத் தீபகற்பத்தில் தோஹா இருப்பதால் வெயிலின் கொடுமைக்கு ஆளாக நேர்கின்றதை என்பதைக் கருத்தில் கொண்டு கத்தார் நாட்டை அண்டார்ட்டிக்காவிற்கு அருகில் பெயர்த்து வைக்க உலக அளவில் விடப்பட்ட டெண்டர்களை பரிசீலிக்கும் வேலையை
தோ.த.இ.ப.எ.வ.ச.கு. ஏற்றுள்ளது எங்களது சேவைகளின் மைல் கல்களில் ஒன்று.
தோஹாவில் இருக்கும் கத்தாரிகளைக் கூட தமிழில் ப்ளாக் எழுதச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளையும் விரைவாக செய்து வருகின்றோம்.
தோஹாவில் இருக்கும் தமிழர்களை எல்லாம் இணைத்து தோஹாவிற்குள் தனி நாடு கோரிக்கையையும் கேட்க முடிவு செய்துள்ளோம்.
பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு போண்டாவும், டீயும் வாங்கித் தரும் வழக்கத்தை மாற்றி மினி இட்லியும், பொடி தோசையும், கெட்டிச் சட்னியும் வாங்கித் தரும் ஒரே சங்கக் குழுமம் உலக அளவில் தோ.த.இ.ப.எ.வ.ச.கு. மட்டுமே.
எங்கள் சங்கத்தின் முக்கிய அங்கத்தினர்களான மேதகு திரு மதிப்புமிக்க ஆயில்யன், மற்றும் ஹிஸ் ஹைனஸ் தமிழ் பிரியன் இடையே பகைத் தீயை எரிய வைக்கும் முயற்சியில் துபாயில் இருந்து இயங்கும் சில தீவிரவாதக் குழுக்கள் இறங்கி உள்ளன... தலைவர் பதவிக்கு ஏதோ சண்டை நடப்பது போன்ற மாயத் தோற்றத்தை அவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாதவைகள் இந்தப் பனங்காட்டு நரிகள்... தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தின் நேற்றைய, இன்றைய, நாளையத் தலைவர் ஆயில்யன் தான் என்பதை இங்கு அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
தோஹாவில் இருந்து ஆயில்யன் சென்று விட்டால் அவர் இருந்த அந்த சீட்டை துடைத்து வைத்து, அதில் அவர் பெயரை எழுதி தலைவர் என்று எழுதி வைப்போம்... எங்கள் தலைவரைத் தவிர புதிதாக எவரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுக்கும் அஞ்சா நெஞ்சன் இருக்கும் ஊர்க்காரர்கள் நாங்கள்...
குறிப்பாக பதிவுலகிற்கான வளைகுடா அத்தாரிட்டியாக நாங்கள் நினைக்கும் துபாயில் இருந்து இந்த வதந்தி கிளம்பி இருப்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல கிளைகளாக ஒற்றுமையின்றி பிரிந்து கிடத்தும் துபாய் சங்கத்தவர்கள், ஒற்றுமையுடன் செயல்படும் தோ.த.இ.ப.எ.வ.ச.கு. த்தின் வளர்ச்சியின் மீது ஏற்பட்ட பொறைமையின் விளைவே இந்த வதந்தி என்பதைச் சிந்தனையாளவர்கள் அறிவர்..
ஆகவே மக்களே தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தின் மீது பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையும் உங்கள் அனைவருக்கும் அன்போடு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.