Monday, March 1, 2010

சுஜாதாவுடன் புதைந்த மர்மம்

சமீபத்தில் சென்னையில் ட்விட்டர்களும், ப்ளாக்கர்களும் இணைந்து சுஜாதாவின் நினைவலைகளில் மூழ்கியதைப் படித்த போது கொஞ்சம் பொறாமையாக இருந்தது. நமக்கு மிகவும் பிடித்தவர்களைப் பற்றி பேசி சிலாகிப்பதைக் கேட்பதில் இருக்கும் சுகமே அலாதி தான்...

90 களில் நாங்கள் முதன் முதலாக புத்தகங்களை வாசிக்கத் துவங்கியது சிறுவர் மலர், அம்புலிமாமாவில் இருந்து தான்... அதனைஅடுத்து எங்கள் வீடுகளில் வாங்கப்படும் ராணி வாராந்திரியையும் புரட்டும் வாய்ப்பு கிடைக்கும். அதில் வரும் தொடர்கதைகளை எனது அம்மா வாசிக்க அக்கம் பக்கம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்வார்கள்... டிவி பொட்டியின் அடிமைத் தனத்திற்குள் நுழைய அன்றைய எங்கள் தெருவின் சீரியல் அவ்வகை தொடர்கள் தான்.

இதற்கு அடுத்து கொஞ்சம் பெரிதாகியதும், ராஜேஸ்குமாரின் பாக்கெட் நாவல்கள் அந்த இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தன. பரபரப்பான துப்பறியும் நாவல்களின் மீதும், குற்றம் செய்யும் முறைகளின் மீதும், அதைக் கண்டுபிடிக்கும் முறையின் மீது ஏனோ ஒருவித உந்துதலை ஏற்ப்படுத்துவதாய் அமைந்தது அம்மாதிரியான நாவல்கள்... இந்த வரிசையில் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றவர்களும் அடங்குவர். இந்த தொடரில் சில நேரங்களில் மாலைமதி, ராணிமுத்து போன்றவையும் கிடைக்கும்.. இதில் குடும்பநாவல்கள் படிக்கக் கிடைத்தது.

இந்தவரிசையில் மேலும் செல்லும் போது தான் சுஜாதா என்ற கம்பீரமான விருட்சம் தென்பட்டது. ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர்கள் வாயிலாகவே எனக்கு அவர் அறிமுகமானார். பின்னர் நூலகங்களில் இருந்தா அவரது புத்தகங்களை படிக்கக் கிடைத்தது. பொதுவாக ஆலமரம் என்று சிறந்த ஆளுமைகளைச் சொல்வார்கள். ஆனால் சுஜாதாவை ஆலமரம் என்று சொல்ல இயலாது. ஏனெனில் ஆலமரத்தின் கீழ் எதும் வளராது. ஆனால் சுஜாதா என்ற விருட்சத்தின் கீழ் இன்று எழுதக் கூடியவர்களில் 95 சதவீதம் பேர் அடங்குவர் என்பது எனது கருத்து.சுஜாதா தொடாத துறை இல்லை எனலாம். இலக்கியம் தொட்டு, விண்வெளி ஆராய்ச்சி வரை.... எனக்கு தமிழகத்தில் இருக்கும் குறிப்பாக இந்து மதம் பற்றிய விளக்கங்களை தெளிவாக தெரிந்து கொள்ள உதவியவர். சுஜாதா அறிபுனைக் கதைக்களை மக்களிடையே பிரபலப்படுத்தியவர் சுஜாதா. பத்தி எழுத்துக்கள் நிறைய எழுதியவர். ஹைக்கூக்கள் அறிமுகபடுத்தினார், பாராக்களில், வார்த்தைகளில் கதைஎழுதச் சொல்லிக் கொடுத்தார்.

உண்மை அறிவியலை சுலபமாக சொல்லிக் கொடுத்தார். நாம் சாதாரணமாக எழுதும் ஒரு பாராவை ஒரு வரியில் எல்லாவற்றையும் அடக்கத் தெரிந்தவர். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக படிக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர். சில கதைகளைப் படிக்கும் போது வர்ணனைகளை ஸ்கிப் செய்து விடுவேன்.. ஆனால் சுஜாதாவின் கதைகளில் இது முடியவே முடியாத விஷயம்.

பெரிய கதைகளை படிக்கும் போது கிட்டத்தட்ட கதைக்குள் நாமே நுழைந்து விடுவோம். அடுத்த வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பது போல.. அல்லது அந்த கதாநாயகனாக, வில்லனாக, நாமையே உருவகப்படுத்திக் கொள்வோம். இதன் தாக்கம் பல நாட்களுக்கு இருக்கும். ஆ நாவல் சிறந்த உதாரணம். படித்த பல நாட்களுக்கு காதுகளில் குரல் ஒலித்துக் கொண்டு இருந்தது. என் இனிய இயந்திரா படித்த போது தெருக்களில் எல்லாம் கேமரா வைத்து இருந்தது போல் ஒரு பிரமையை உணர முடிந்தது.

ஸ்ரீரங்கம் என்ற ஊரை எனக்கு அறிமுகப்படுத்தியவர். திருச்சி செல்லும் போதெல்லாம் ஸ்ரீரங்கத்து வீதிகளில் சென்று உலாவ வேண்டும் என்று வேட்கையை ஏற்படுத்தியவர்..ஆனால் சுஜாதா என் மனதில் கட்டியமைத்து இருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு மாற்றான ஒன்றைக் கண்டால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தெரியாததால்.. அதைச் செய்யவில்லை... (இதே நிலை தான் தஞ்சைக்கும், தாராசுரத்திற்கும், கங்கை கொண்ட சோழபுரத்திற்கும்.)

சுஜாதா விட்டு விட்டுப் போன ஒரு மர்மம்.. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்... கணேஷ், வசந்த் நாம் அனைவருக்கும் தெரியும்.. சுஜாதாவின் துப்பறியும் நாவல்களின் கதை மாந்தர்கள். அவர்கள் வாயிலாக அவர் சொல்ல வந்தது அல்லது இல்லாத ஒன்று... அவர் இறக்கும் வரை அது தெரியாமலேயே போய் விட்டது.. இனி மேலும் தெரியாமலேயே தான் இருக்கும்..

சில இடங்களில் அது குறித்து இருக்கும் ஒரு ‘பலான’ ஜோக்.. அது சுஜாதா அவர்களின் எழுதியதில்லை.. யாரோ அடித்த விட்ட புருடா... அது மர்மமாகவே இருப்பது தான் அந்த ஜோக்கின் தனித்தன்மை.. இன்னும் அது குறித்து பல ஜோக்குகள் வரலாம்.. எது வந்தாலும் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் என்ற ஒன்று சஸ்பென்ஸூடன் குறுகுறுப்பாக நினைவில் இருக்கும்.

சுஜாதா என்னுடைய ஆதர்ச எழுத்தாளன் என்று சொல்ல மனது வரவில்லை.. எழுத்து,படிப்பு,இலக்கியம்,அறிவியல் எல்லாவற்றையும் எனக்கு சொல்லிக் கொடுத்த எனது மதிப்பிற்குரிய ஆசான் என்றால் மிகையில்லை.

தமிழ் இருக்கும் வரை சுஜாதா என்ற முழுமையடைந்த ஆளுமை உயிரோடு இருக்கும்.
.
.

21 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான இடுகை.

//தமிழ் இருக்கும் வரை சுஜாதா என்ற முழுமையடைந்த ஆளுமை உயிரோடு இருக்கும்.//

சத்தியமான உண்மை.

நட்புடன் ஜமால் said...

தமிழும் இருக்கும் ...

தமிழ் பிரியன் said...

\\\ராமலக்ஷ்மி said...

அருமையான இடுகை.

//தமிழ் இருக்கும் வரை சுஜாதா என்ற முழுமையடைந்த ஆளுமை உயிரோடு இருக்கும்.//

சத்தியமான உண்மை.\\\\

நிதர்சனம்... நன்றி அக்கா!

☀நான் ஆதவன்☀ said...

"சுஜாதாவுடன் புதைந்த மர்மம்" - என்னமோ ஏதோன்னு நினைச்சு வந்தேன். என்ன மர்மம்னு தெரிஞ்ச பின்னால சிரிக்காம இருக்கமுடியல :)

தமிழ் பிரியன் said...

\\\ நட்புடன் ஜமால் said...

தமிழும் இருக்கும் ...\\\\

நிச்சயமாக ஜமால் அண்ணே! தமிழ் காலத்தால் அழிக்க இயலாதது என்பதால் தான் சுஜாதாவின் ஆளுமைக்கு அதை ஒப்பாகச் சொன்னேன். நன்றி!

தமிழ் பிரியன் said...

\\\☀நான் ஆதவன்☀ said...

"சுஜாதாவுடன் புதைந்த மர்மம்" - என்னமோ ஏதோன்னு நினைச்சு வந்தேன். என்ன மர்மம்னு தெரிஞ்ச பின்னால சிரிக்காம இருக்கமுடியல :)\\\

ஆனாலும் உங்களுக்கு குசும்பு பாஸ்... ;-)))

கண்மணி/kanmani said...

//சுஜாதா விட்டு விட்டுப் போன ஒரு மர்மம்.. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்... கணேஷ், வசந்த் நாம் அனைவருக்கும் தெரியும்//

நமக்கு எங்கே தெரிந்தது.கணேஷ் வசந்துக்கே வெளிச்சம்.

இந்த துப்பறியும் இரட்டைக் கதா பாத்திரப் படைப்பு அவர் உருவாக்கிய பிறகுதான் ப.பிரபாகர் எல்லாம் உருவாக்கினார்கள்.
அறிவியலோடு புனைவுகள் தந்த அருமையான படைப்பாளி.

வசந்தாக விவேக் ஒரு படத்தில் வந்தது கொடுமை.கணேஷ் யாருன்னு ஞாபகமில்லை.சரிதானே?

வல்லிசிம்ஹன் said...

அருமையான நினைவுகள். இதே போல அவரை என்றும் மறவாமல் இருக்க வேண்டும்.

சின்ன அம்மிணி said...

//சுஜாதா தொடாத துறை இல்லை எனலாம்.//

எளிய வார்த்தைகளில் அறிவியல் எழுதியது ஒரு சாதனை. என்னை மாதிரி சைன்ஸ் பிடிக்காதவங்களுக்கு கூட ஒரு ஆர்வம் வரவைத்தது உண்மை.

ஆயில்யன் said...

//ஸ்ரீரங்கத்து வீதிகளில் சென்று உலாவ வேண்டும் என்று வேட்கையை ஏற்படுத்தியவர்//


எனக்கும் ஸேம் ஃபிலிங்க் பாஸ்

சென்ற விடுமுறையில் ஸ்ரீரங்கம் சென்றிந்தப்போது பெரும் மதில் சுவர்களை ஒட்டிய நடைபாதையில் செல்கையில் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து கதைகள்தான் நிழலாடின!

பத்மநாபன் said...

சுஜாதாவை படித்தவர்களால் அவரை பற்றி எழுதாமல் இருக்க முடியாது ... அவ்வளவு ஆளுமை ... நவீனம் ...
ரசித்தவர்களுக்கே உரித்தான எதார்த்தமான பதிவு .. வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அந்த ஜோக்கை மறைந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யிடம் சொன்னதையும், அவர் கண்ணீர் நீர்வரும் அளவுக்கு விழுந்து, விழுந்து சிரித்ததையும் எழுதி கூடவே அந்த ஜோக்கையும் வெளிப்படையாக எழுதிவிட்டார் நமது வாத்தியார்..!

அநேகமாக அது "கற்றதும் பெற்றதும்" நூலில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்..!

ஹுஸைனம்மா said...

எழுத்தாளர்கள் என்றாலே (கவிஞர்கள் போன்று) ஒரு மோன நிலையில் இருப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்ததிலும் முக்கிய பங்குண்டு சுஜாதாவுக்கு.

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

unmai tamilian is right.., i know that joke,

அமிர்தவர்ஷினி அம்மா said...

கம்ப்யூட்டரில் தொடங்கி நிறைய விஷயங்களில் சுஜாதா தீர்க்கதரிசி!

இப்போது நடப்பில் இருக்கும் சில/பல விஷயங்கள் பற்றி நினைக்கும்போது சுஜாதாவை சட்டென்று ஞாபகப்படுத்திக்கொள்ளத்தோன்றும்.

அழகான நினைவுகூறல்.

KarthigaVasudevan said...

சுஜாதா இறந்துட்டத நினைச்சா என்னிக்குமே வருத்தமா தான் இருக்கு,இது அவரோட வெற்றி.ஜோக் தெரிஞ்சவங்க தணிக்கைக்கு உட்பட்டதுன்னா அதையும் பின்னூட்டத்துல சொல்லிடலாமே,எதுக்கு இன்னும் மர்மம் நீடிக்கனும்!!!

யாஹூராம்ஜி said...
This comment has been removed by a blog administrator.
தமிழன்-கறுப்பி... said...

நான் அவரைப்பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இவரை முதலில் வாசித்ததிலிருந்து அந்த நேரத்து நண்பர்களிடம் இவரைப்பற்றி பேசி வியந்திருக்கிறேன்.

சுயாதாவை தேடி தேடி வாசித்து பள்ளிக்கூட புத்தகங்களோடு கொண்டு திரிந்த காலம் இப்பொழுதும் நினைவிலிருக்கிறது.

எம்.எம்.அப்துல்லா said...

நான் எழுத நினைத்த பின்னூட்டத்தை ஹூசைனம்மா எழுதிவிட்டார்.

Bhuvanesh said...

தலைவர் பத்தி படிக்கறது கூட சதோஷம் தான் !!

LinkWithin

Related Posts with Thumbnails