Tuesday, March 2, 2010

Professional Killers - இஸ்ரேலில் இருந்து துபாய்க்கு

சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஹிந்தி படம் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயர் த கில்லர் (The Killer). துபாயில் எடுக்கப்பட்டப் படம். கதை ரொம்ப சிம்பிள்.. மாலையில் துபாய் வரும் ஒருவர் மறுநாள் காலையில் இந்தியா திரும்பி விடுவார். அந்த இரவு மட்டும் அவருக்கு வாகனம் ஓட்ட ஒரு டாக்ஸி டிரைவர் தேவை. டிரைவரை தேர்ந்தெடுத்து பேரம் பேசி கிளம்புகின்றார். அந்த நபர் வந்தது, அந்த இரவில் துபாயில் இருக்கும் 4 பேரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக.. கிட்டத்தட்ட ஒரு மிஷன் போல... தனியாளாக தொழில் முறை கொலையாளி. படம் எடுக்கப்பட்ட விதம் அழகாக இருக்கும்.. பரபரப்பைக் கூட்டிக் கொண்டே செல்வார்கள். ஒரே இரவில் படம் முடியும்.

கதாநாயகனாக இம்ரான் ஹாஸிமியும், கொலையாளியாக இர்ஃபான் கான்... மூவரைக் கொன்ற நிலையில் நான்காவதாக கொல்ல இருப்பது டிரைவரின் காதலியை... காதலி? ஜேஜே படத்தில் வரும் அமோகா தான்... இறுதியாக காதலியைக் காப்பாற்ற கதாநாயகனின் போராட்டம் வென்றதா? கொலை செய்து தனது கடமை(?)யைச் செய்ய கண்ணும் கருத்துமாக இருக்கும் கொலையாளி வென்றானா? என்பது தான் கதை.

இப்போது நாம் இந்த படத்தைப் பற்றி பேச வரவில்லை... இப்படத்தில் நடந்தது போன்ற இன்றைய கிரைம் உலகில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். மத்தியகிழக்கு நாடுகளில் பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை ஓயாதது. இஸ்ரேலின் ஆயுத பலத்தின் முன்னாலும், அமெரிக்கா செல்லப்பிள்ளை என்ற குசும்பாலும் இது நீண்டு கொண்டே தான் செல்லும். ஆயுதங்களின் முன்னிலையிலேயே வாழும் பாலஸ்தீனர்களும் ஆயுதங்களை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படியான ஒரு சூழலில் உருவாகி வளர்ந்தது தான் ஹமாஸ் அமைப்பு.

பாலஸ்தீனில் ஹமாஸ் மற்றும் பத்தாஹ் அமைப்புகள் பெரியவை. இதில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களுடன் இருக்கும் தனி படையணியை உருவாக்கி வைத்துள்ளது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தான் மஹமூத் அல் மாபூஹ். பல ஆண்டுகள் சிரியாவில் இருந்த இவர் ஹமாஸ் அமைப்புக்காக ஆயுதங்களை சேகரிப்பதில் முக்கியமான நபர். சமீபத்தில் துபாய் வந்த போது அவர் இருந்த அறையில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்த விசாரணைத் தகவல்கள் தான் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பவை. இவரைக் கொலை செய்ய சுமார் 20 க்கும் மேற்ப்பட்ட நபர்கள் துபாய் வந்து இருக்கின்றனர். அனைவரும் போலியான ஐரோப்பிய நாடுகள் , ஆஸ்திரேலியாவின் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி உள்ளனர். மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்ட ஹாலிவுட் படங்களை ஒத்த இந்த கொலையில் ஈடுபட்டதில் 6 பெண்களும் அடக்கம்.

ஜனவரி 18 ந்தேதி ஐரோப்பாவின் பல பாகங்களிலும் இருந்து துபாய் வந்து இருக்கின்றனர். மாபூஹின் நடவடிக்கைகள் அனைத்தும் நோட்டம் விடப்பட்டு இருக்கின்றது. ஜனவரி 19 ந்தேதி மாபூஹ் இருந்த ஹோட்டல் அறையில் வைத்து அவரை கொலை செய்துள்ளனர். பின்னர் அன்றும், மறுநாளும் இவர்கள் அனைவரும் விமானங்கள் மூலம் பல நாடுகளுக்கும் பிரிந்து சென்றுள்ளனர். இவர்கள் அனைவரின் போலி பாஸ்போர்ட் காப்பிகளையும் துபாய் போலிஸ் வெளியிட்டுள்ளது. மேலும் இவர்கள் எங்கிருந்து வந்தனர்? எங்கே திரும்பிச் சென்றனர்? அவர்கள் ஹோட்டலில் நடமாடிய CCTV மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் துபாய் போலிஸ் வெளியிட்டுள்ளது.

நல்ல பலசாலியான மாபூஹ் முதலில் ஒரு மயக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். இரவு 8:24 க்கு மாபூஸ் தனது அறைக்கு திரும்பும் வீடியோவும், 8:46 க்கு கொலையாளிகள் லிப்ட் மூலம் சாதாரணமாக பேசிக் கொண்டே இறங்கிச் செல்லும் வீடியோவும், கொலை நடக்கும் நேரத்தில் ஹோட்டல் வளாகத்தைக் கண்காணிக்கும் கொலைக் கூட்டாளி(ஒரு பெண் உள்பட)களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.துபாய் போலீஸ் இது நிச்சயமாக இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாத்தின் வேலை தான் என்று கூறியுள்ளது. வந்தவர்கள் அனைவரும் மிகவும் திறமையாக உருவாக்கப்பட்ட போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய வங்கியின் கடனட்டைகளைப் பயன்படுத்தி அறை எடுத்து இருக்கின்றனர். துபாயை விட்டு வெளியேறிய அவர்கள் அமெரிக்கா, மற்றும் இஸ்ரேலை சென்றடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இங்கிலாந்து,அயர்லாந்து , ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பாஸ்போர்ட்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த நாடுகள் உறைந்து போய் உள்ளன. குற்றவாளிகள் அனைவரும் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட்டதால் யார் எங்குள்ளனர் என்றும் புரியாமல் திணறி வருகின்றன. இண்டர்போல் அதிகாரிகள் இது குறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர்.

வழக்கம் போல் இஸ்ரேல் திருட்டு முழி முழிக்க, அமெரிக்காவோ கள்ள முழி முழிக்கின்றது... இந்த களேபரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது துபாய் தான்... துபாய் சர்வதேச குற்றவாளிகளுக்கான உறைவிடம் என்று சொல்லப்பட்டாலும், அந்த மண்ணில் எந்த குற்றமும் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்வது அந்த குற்றவாளிகளின் வழக்கம்... இதையே தான் துபாயும் விரும்புகின்றது. எனவே தாம் மாபூஹ் போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிழல் உலக நபர் கூட சாதாரணமாக உலாவ முடிந்தது.

இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மொசாத் துபாய்க்குள் நுழைந்து தனது காரியத்தை சாதித்துள்ளது. துபாய்க்கு மாபூஹ் வருவதையும் இங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்ததாகவும் சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.. எது எப்படியோ கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் துபாய்க்கு இது ஒரு மறைமுகமான சவாலாகவும், துபாயில் இயங்கும் சர்வதேச அமைப்புகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு நன்றி : www.gulfnews.com

14 comments:

நட்புடன் ஜமால் said...

துபாய் சர்வதேச குற்றவாளிகளுக்கான உறைவிடம் என்று சொல்லப்பட்டாலும், அந்த மண்ணில் எந்த குற்றமும் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்வது அந்த குற்றவாளிகளின் வழக்கம்... இதையே தான் துபாயும் விரும்புகின்றது. எனவே தாம் மாபூஹ் போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிழல் உலக நபர் கூட சாதாரணமாக உலாவ முடிந்தது.]]

தெளிவு

ஆயில்யன் said...

வீடியோ ரிலிசான போது பார்த்தது - செம திரிலிங் & டிடெடிக்டிவ் விசயங்கள் பிரம்மிக்கவைத்தன!

ஹுஸைனம்மா said...

CCTV கேமராக்களின் பங்கு அதிகம் இவ்வழக்கில்.

ஹமாஸ் தலைவர் டிக்கட் & ஹோட்டல் புக் செய்ய இணையத்தையும், தங்கும் விவரங்களை குடும்பத்தினரிடம் தெரிவிக்க கைப்பேசியையும் உபயோகித்ததால் அவரின் மூவ்களை டிரேஸ் செய்வது எதிர்களுக்கு எளிதாக இருந்ததாம். (கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்)

அவர் வருவதை முறைப்படி காவல்துறைக்குத் தெரிவிக்கத் தவறியதால் பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை.

இஸ்ரேலைச் சிக்க வைக்கக் கிடைத்த துருப்புச் சீட்டான இதை அமீரகம் லேசில் விடுவதாக இல்லை.

இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கடுமையான விஸா விதிகளை விதித்துள்ள அரப் நாடுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாட்டவர்களுக்கு "on arrival visa" என்ற சலுகையைக் கொடுத்திருப்பதும் இவ்வகைக் குற்றங்கள் நடக்க வழிவகுக்கிறது.

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

///சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஹிந்தி படம் வாய்ப்பு கிடைத்தது///

படத்துல நடிக்கத்தான் வாய்ப்பு கிடைச்சதுன்னு நெனைசேன்...!

அபுஅஃப்ஸர் said...

நிச்சய்மா இது திட்டமிட்ட கொலை, உலகில் இதுவே முதலாவதாகவும் கருதப்படுகிறது (அடுத்தநாட்டில்வைத்து கொலை). துபாய்க்கு இது பெரும் சவால்தான், இனியாவது உஷாரானால் சரிதான்

அருமையான பகிர்வு

வடுவூர் குமார் said...

நான் அந்த‌ 27 நிமிட‌ வீடியோவை (க‌ல்ப் நியூஸில்) பார்த்தேன்.ப‌ல‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ கேமிரா மூல‌ம் ஓர‌ள‌வு அடையாள‌ம் காண‌ முடியும்,அப்ப‌டி பார்த்து என்ன‌ ப‌ண்ணுவ‌து?போன‌ ஆள் போன‌து தான்.
வ‌ருமுன் காப்ப‌துக்கான‌ வ‌ழி இருக்கா?

Madurai Saravanan said...

ஆச்சரியமாக இருக்கிறது. செய்தி அருமையாம தொய்வில்லாமல் அழகாக கூறியுள்ளீர்கள்.

ஷாகுல் said...

வழக்கம் போல இதுவும் அமுக்கப்படும் அமெரிக்காவால்.

ஷாகுல் said...

இஸ்ரேலியர்கள் மற்ற நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருந்தால் அவர்களை அரபு நாடுகளுக்கு அனுமதித்தார்கள். இப்போது அவர்கள் எந்த நாட்டு பாஸ்போர்ட் வைதிருந்தாலும் அனுமதிப்பதில்லை என துபாய் அரசு முடிவெடித்திருப்பதாக செய்திகளில் படித்தேன்.

KarthigaVasudevan said...

:(

புதுகை.அப்துல்லா said...

நம்மளும்கூட "Professional Killers தான்.

நம்மள்லாம் பதிவு எழுதுறது என்னாவாம்??

:))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா அப்படியா விசயம் . பகிர்வுக்கு நன்றி 1

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

அன்புடன் மலிக்கா said...

மிக அருமையான விளக்கத்துடன் சொல்லியிருக்கீங்க.

LinkWithin

Related Posts with Thumbnails