Friday, February 22, 2008

ஐயோ பாவம் - சென்னையில் அவசரத்திற்கு 'ஒதுங்க'



சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். வயது 35. தனியார் நிறுவனத்தில் வேலை. நேற்று இவர் தி.நகர் ரங்கநாதன் தெருவிலுள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடைக்குச் சென்றிருந்தார்.

ஷாப்பிங் முடிந்து, நந்தகுமார் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் சிறுநீர் கழிக்க முயன்றபோது, மாநகராட்சி கண்காணிப்புக் குழுவினரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தும்படி கண்காணிப்புக் குழுவினர் கூறினார்கள். நந்தகுமார் அதற்கு மறுப்புத் தெரிவித்து வாதம் செய்ததால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது .


இப்படி சில செய்திகள் வரும் ஏப்ரலிலிருந்து நியூஸ்பேப்பர்களில் தென்பட்டால், ஆச்சர்யப்பட வேண்டாம். பொதுஇடங்களில் சிறுநீர், மலம் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்துள்ளது. கோயில், பள்ளிக்கூடம், பஸ் ஸ்டாப் என வித்தியாசம் பார்க்காமல் நாசம் பண்ணும் அசுத்தப் பேர்வழிகளைத் திருத்த இது தேவையான நடவடிக்கை தான். ஆனால் கழிப்பிடங்களில் தான் இயற்கையின் உந்துதலைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என அரசு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு சென்னையில் போதுமான பொதுக் கழிப்பிடங்கள் இருக்கிறதா?

2007ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை நகரத்தின் மக்கள்தொகை சுமார் 45 லட்சம். ஆனால் இங்கே 835 பொதுக் கழிப்பிடங்கள்தான் இருக்கின்றன. பத்துப் பேருக்கு ஒரு கழிப்பிடம் தேவை என சில சர்வதேச மருத்துவ இதழ்கள் வலியுறுத்துகின்றன. கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம் அருகிலுள்ள ஒரு பொதுக் கழிப்பிடத்திற்குப் போனோம். நம்பர் 1 என்றால் ஒரு ரூபாய், நம்பர் 2 என்றால் இரண்டு ரூபாய் என வழக்கமான கட்டணம்தான். ஆனால் அவசரத்துக்கு உள்ளே செல்பவர்கள் அடுத்த சில மாதங்களில் மருத்துவ செலவுக்குத் தனியாகப் பணத்தை எடுத்து வைக்கவேண்டியிருக்கும். கழிவுகள் தண்ணீர் ஊற்றி அகற்றப்படவில்லை. கழிப்பறைகளுக்கு கதவுகள் கிடையாது. தொட்டியில் நிரப்பி வைத்திருந்த தண்ணீர் மஞ்சள் நிறத்தில் அலம்பியது. பெண்களுக்கான கழிப்பறை தொடர்ந்து பயன்படுத்தப்படாததால், மூடிக்கிடந்தது. நல்லவேளை, பெண்கள் தப்பிச்சுட்டாங்க!

முகத்தில் அருவருப்பு காட்டியபடி, கழிப்பறையிலிருந்து வெளியேறிய கிருஷ்ணமூர்த்தியிடம் பேச்சுக் கொடுத்தோம். நான் சேல்ஸ்மேனாக வேலை பார்க்கிறேன். தினமும் அமிஞ்சிக் கரையிலிருந்து கோயம்பேடு வரைக்கும் சைக்கிளில் போயாகணும். வழியில் ஒதுங்குறதுக்கு டாய்லட் வசதி இல்லை. மாநகராட்சி அபராதம் விதிச்சா என்னைப் போன்ற ஆட்களுக்குக் கஷ்டம்தான் என்று அவர் அலுப்புடன் சொன்னார். சில புள்ளிவிவரங்களின்படி சென்னை குடிசைப் பகுதிகளில் வாழும் 34 சதவீத குடும்பங்களுக்குக் கழிப்பிடம் இல்லை.


மக்கள் போக்குவரத்தும், வியாபார நடவடிக்கைகளும் மிகுந்த அண்ணாசாலை, பூங்கா நகரம், புரசைவாக்கம், தி.நகர் போன்ற இடங்களில் கழிப்பிடம் என்பது ஆடம்பர சமாச்சாரமாகத்தான் இன்னும் இருக்கிறது. சென்னையிலுள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் இதே அவலம்தான். பளபள டைல்ஸ் தரை, கண்ணைப் பறிக்குற மாதிரி லைட் வெளிச்சம்னு அசத்துற பல கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ்களில் குறைந்தபட்ச கழிப்பிட வசதிகூட இல்லை. டாய்லெட் ரூமை ஏதோ கருவூலம் மாதிரி பூட்டி வச்சுக்குற அடுக்குமாடிக் கட்டடங்கள் நிறைய இருக்குது. இதுபோன்ற இடங்களில் கழிப்பிடங்களைக் கட்டாய மாக்கிட்டு மாநகராட்சி அபராதம் விதிக்குறது நல்லது. பொதுமக்களுக்கும் பொறுப்புணர்வு தேவை. என்று சொல்கிறார் எக்ஸ் னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மல். கழிப்பிடங்களுக்கான விதிமுறைகளின்படி, அங்கே வருபவர்கள் க்யூவில் காத்திருக்கும் நிலை இருக்கக்கூடாதாம்.

சென்னை மக்களுக்கு மாநகராட்சி முழுமையான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தும் முன்னரே, அபராதம் விதிக்க முயலும் அவசரம் ஏன்? மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, அவர் பொறுப்புடன் சொன்ன பதில், மோசமான நிலையில் இருக்கும் 100 கழிப்பிடங்களைத் தற்போது புதுப்பிச்சிட்டிருக்கோம். அண்ணாசாலை, தி.நகர் உட்பட 42 இடங்களில் புதுசாகக் கழிப்பிடம் கட்டப் போகிறோம். டெல்லியிலுள்ள சில நவீனக் கழிப்பிடங்களின் பாணியில், 50 கழிப்பிடங்கள் கட்டும் திட்டமும் இருக்கு. விழிப்புணர்வை ஏற்படுத்தும் எங்கள் நடவடிக்கை நிச்சயம் பொது மக்களுக்குத் தொந்தரவா இருக்காது

மாநகராட்சி தரப்பின் பதிலைக் கேட்டுவிட்டு மாநகராட்சிக் கட்டடத்திலுள்ள கழிப்பறையையும் பார்வையிட்டோம். அங்கே நிலைமை எப்படி? பொதுக்கழிப்பிடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பணியை மாநகராட்சி அங்கிருந்தே ஆரம்பிப்பது நல்லது.

அசுத்தம் என்ன செய்யும்

திறந்த வெளியில் சிறுநீர், மலம் கழிப்பதைப் போல, சுகாதாரமற்ற கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதும் ஆரோக்கியக்கேடுதான். மலக்கழிவுகள் அகற்றப்படாத இடத்தில் அடிக்கடி நடமாடினால், கொக்கிப்புழு உடலுக்குள் ஊடுருவி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும். அடிவயிற்றில் வலி இருக்கும். இந்தத் தொல்லைகள் அதிகமாகி, அமீபியாசிஸ் உண்டாகி, கல்லீரல் பாதிக்கப்படும். சிறுநீரை ரொம்ப நேரம் அடக்கி வைத்தால், சிறுநீரகமும் கர்ப்பப்பையும் பாதிப்புக்குள்ளாகும். என்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சரவணகுமார்.
செய்தி : குமுதம்

5 comments:

Anonymous said...

நம்ம ஊரில் இந்த மாதிரி கிறுக்குத்தனமான சட்டங்களுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். முதலில் தேவையான அளவுக்கு சுகாதாரமான கழிப்பிடங்களை கட்டிக்கொடுத்து அதுவும் இலவசமாக அனுமதித்து அதன் பிறகு இந்த மாதிரி சட்டங்களை போட்டால் ஒரு அர்த்தம் இருக்கும். அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்த சட்டங்களை அமுல்படுத்த முடியாது. முதலில் சுத்தம், சுகாதாரம் என்றால் மக்களுக்கு என்னவென்று புரிய வைக்க வேண்டும்.

வவ்வால் said...

//2007ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை நகரத்தின் மக்கள்தொகை //சுமார் 45 லட்சம். ஆனால் இங்கே 835 பொதுக் கழிப்பிடங்கள்தான் இருக்கின்றன. பத்துப் பேருக்கு ஒரு கழிப்பிடம் தேவை என சில சர்வதேச மருத்துவ இதழ்கள் வலியுறுத்துகின்றன.//

சென்னை மக்கள் தொகை அதை விட அதிகம் இருக்கும், கிட்டத்தட்ட 1 கோடி இருக்கும். மேலும் இங்கே ஃப்ளோட்டிங்க் பாப்புலேஷன் எனப்படும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம், அவர்களுக்கு தான் முக்கியமாக கழிப்பிடங்கள் தேவை.

835 கழிப்பிடங்கள் இருக்கு என்றால் அதில் எத்தனை செயல்ப்படுது? பாதி இடங்களில் மூடிக்கிடக்கும், அல்லது பாராமரிப்பே சுத்தமாக இருக்காது ஆனால் காசு மட்டும் வாங்குவாங்க.

ஒரு உதாரணத்திற்கு சென்னை சைதாப்பேட்டையில் இருந்து சிம்சன் வரைக்கும் அண்ணா சாலையில் எத்தனை கழிப்பிடங்கள் இருக்கும் என நினைக்கிறிங்க,2 அ 3 இடங்களில் மட்டுமே கழிப்பிடங்கள் இருக்கு.

அவசரமாக மூத்திரம் போகணும் என்றால் எத்தனைக்கிலோ மீட்டர் ஓட முடியும்?

இந்த அறிவிப்பு வந்த நாள் முதலாக இந்த முரண்பாடு குறித்து பதிவு போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன், ஆனால் போடவே இல்லை, இது குமுதத்தில் வந்த கட்டுரை என்ற போதிலும் அவசியமான ஒரு பதிவு!

பிரேம்ஜி said...

வணக்கம் தமிழ் ப்ரியன். இதை பல கோணங்களிலிருந்து அலச வேண்டும். 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை (Floating population சேர்த்து) கொண்ட சென்னையில் போது கழிப்பிடங்கள் மிகவும் குறைவு. முக்கியமாக கழிப்பிடங்களுக்கு செல்ல கட்டணம் ஏன்? இயற்கை அழைப்பை பூர்த்தி செய்து கொள்வது மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று. இதற்கு ஏன் கட்டணம். அரசு அதை கவனிக்க வேண்டும். கழிப்பிடங்கள் கட்டிகொடுத்தால் அதை சுத்தமாக வைத்து கொள்ள மக்கள் பழக வேண்டும். இந்த ஒத்துழைப்பு மக்கள் மற்றும் அரசு இரண்டு பக்கங்களிலிருந்தும் வேண்டும்.

http://www.thebathroomdiaries.com/india/index.html

இந்த தளத்தை படியுங்கள்.

துளசி கோபால் said...

தானே சுத்தம் செஞ்சுக்கரது போல் இருக்கும் ஆட்டொமேடிக் கழிப்பறைகள் இங்கே பல இடங்களில் இருக்குங்க. கட்டிடம் அழகாக இருப்பதால் அது கழிப்பறை என்ற அருவருப்பு வர்றதில்லை.

வெளிநாடுகளுக்கு அரசு அலுவலாக டூர் போகும் அமைச்சர்கள் & அரசு அதிகாரிகள் இதையெல்லாம் காப்பி அடிக்கக்கூடாதா?

போதிய வசதிகள் இல்லாத்ததால் பெண்களுக்கு இன்னும் கஷ்டம் கூடுதல்தாங்க.

நல்ல பதிவா இருக்குங்க இது.

Thamiz Priyan said...

அனானி, வவ்வால்,பிரேம்ஜி,துளசி டீச்சர் அனைவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!