முதல் பதிவு :
நந்தினி - வீரபாண்டியன் உறவு சர்ச்சை
இரண்டாம் பதிவு :
நந்தினி வீர பாண்டியனின் காதலியா? சர்ச்சை 2 சென்ற இரண்டு பதிவுகளாக நந்தினி, வீரபாண்டியனுக்கு மகளா, காதலியா என்பதற்கான சாத்தியக் கூறுகளைப் பார்த்தோம். இதில் இரண்டாவது பகுதியில் ஆதித்தன், நந்தினி, ரவிதாசன் ஆகியோரின் கூற்றை வைத்து வீரபாண்டியனின் காதலி தான் நந்தினி என்பதை நிரூபிக்க முயற்சித்தோம். இந்த பகுதியில் முதல் பகுதியில் வந்த நந்தினி வீரபாண்டியனின் மகள் எனக் கூறும் பெரிய பழுவேட்டரையர், மற்றும் வந்தியதேவனின் கூற்றுக்களை ஆராய்வோம்.
முதன் முதலில் நந்தினி வீரபாண்டியனின் மகள் என வரும் இடம் பெரிய பழுவேட்டரையர் விசாரணை மண்டபத்தில் கூறுமிடம். அதைத் தொடர்ந்தே வந்தியதேவன் மற்ற இடங்களில் அதைக் கூறுகிறான். இனி அந்த இரண்டு விஷயத்தையும் பார்க்கலாம்.
1. பெரிய பழுவேட்டரையர் விசாரணையில் கூறியது.
////மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எந்தப் பெண்ணின் முகலாவண்யத்தைக் கண்டு மயங்கி மோக வலையில் வீழ்ந்து அவளை என் அரண்மனையில் சர்வாதிகாரியாக்கி வைத்திருந்தேனோ, அவள் வீரபாண்டியனுடைய மகள்! அவள் வாயினால் இதை ஆதித்த கரிகாலரிடம் சொல்லியதை நான் என் காதினால் கேட்டேன். வீரபாண்டியனை ஆதித்த கரிகாலர் கொன்றதற்குப் பழிக்குப்பழி வாங்கவே பழுவூர் அரண்மனைக்கு அவள் வந்திருந்தாள். அதற்குத்தான் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள்.///
ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய விசாரணையில் தானாக முன் வந்து ஆதித்தனைக் கொலை செய்ததாக பெரிய பழுவேட்டரையர் கூறிவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்கின்றார். இந்த சூழ்நிலையில் தான் அவர் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் எனக் கூறுகின்றார். இந்த கூழலை ஆராய்ந்தால் பெரிய பழுவேட்டரையர் விசாரணைக்கு வரும் போது அவரது மனநிலை கீழ்க்கண்டவற்றால் கலங்கிப் போய் இருந்தது.
அ. சோழர்களை அழிக்க நினைத்த நந்தினியை மணந்தது
ஆ. நந்தினியை தஞ்சை அரண்மனைக்குள்ளேயே விட்டது
இ. பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் தனது அரண்மனைக்குள் வந்து சென்றது.
ஈ. அரண்மனை பொக்கிஷத்தில் இருந்து அவர்களுக்கு உதவி செய்தது
உ. சோழ வம்சத்திற்கு துரோகம் செய்து சோழன் அல்லாத மதுராந்தகனுக்கு பட்டம் சூட்ட நினைத்தது.
ஊ. மதுராந்தகனுக்கு பட்டம் சூட்டுவதாக கூறினாலும் உள்மனதில் மன்னனாகும் ஆசையை தெரிந்தோ தெரியாமலோ வளர்த்துக் கொண்டது.
எ. நந்தினியின் மீதும், அவளைத் தேடி வருபவர்கள் மீதும் சின்ன பழுவேட்டரையர் சந்தேகத்தை எழுப்பியும் அதை நம்பாமல் நிராகரித்தது.
ஏ. தனது செயல்களால் சோழ சக்கரவர்த்தியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியது,
ஐ. சோழ நாட்டின் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தனக்கு முன்னால் கொலை செய்யப்பட்டதை தடுக்க இயலாதது.
ஒ. ஈழத்தில் இருந்த சோழப்படைகளுக்கு உணவு, ஆயுதங்கள் அனுப்புவதிலு சுணக்கம் காட்டியது...........
இப்படி தனது குலமும், தாமும் செய்திருந்த சபதங்களுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டு மனம் வெறுத்து போய் இருந்தார். அதற்கு தண்டனையாக தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற மனநிலையிலேயே அங்கே வந்திருந்தார். தான் செய்த பாவமான காரியங்களுக்கு பரிகாரமாக வந்தியதேவன் மீது இருந்த ஆதித்த கரிகாலன் கொலைப் பழியை தன் மீது பொய்யாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தார். ஏனெனில் வந்திய தேவனை சோழ இளவரசி குந்தவை காதலித்து வந்தாள். தாம் தற்கொலை செய்வதற்கு முன் வந்தியதேவனை விடுவித்து இதற்கெல்லாம் பரிகாரம் தேடவே நினைத்திருந்தார்.
பொய் சொல்ல வேண்டுமென்று முன்னரே தீர்மானம் செய்து வந்த சூழலில் தான் பெரிய பழுவேட்டரையர் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் என்று சொல்கிறார். ஏற்கனவே பொய்களைச் சொன்னவர் இதையும் பொய்யாக சொல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு கீழ்கண்ட காரணங்களையும் கூறலாம்.
I) நந்தினி அவருடைய மனைவி. அவள் மீது அவர் மிகுந்த அன்பை வைத்திருந்தார், அவள் வீரபாண்டியனின் மனைவி என்று சொல்லி வந்த நிலையில், அவன் இறந்த பிறகு அந்த கருத்தை மாற்ற நினைத்திருக்கலாம்.
II) நந்தினியின் தந்தை யார்? என்று வேறு யாருடைய பெயராவது வருவதன் மூலம் தற்போதைய சோழ இராஜ்ஜிய பிராச்சினைகளில் குழப்பங்கள் வரலாம்.
III) நந்தினி பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்பட்டது வெட்ட வெளிச்சமாகி, அவர்களுடனே அவள் சென்றுவிட்டதாக செய்தி வரவிய நிலையில், அவள் வீரபாண்டியனின் மகள், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுக்கு அரசி என்று சொல்வதன் மூலம் அவளது நடத்தைக்கு மக்கள் மத்தியில் ஏற்ப்பட்டுள்ள களங்கத்தை போக்கவும் நினைத்திருக்கலாம்.
2. வந்தியதேவன் குந்தவையிடம் கூறியது
///குந்தவை : "நந்தினி வீர பாண்டியனின் மகள் என்பது உண்மையாயிருக்குமா?" வந்தியத்தேவன் : "நந்தினி அவ்வாறு ஆதித்த கரிகாலரிடம் கூறியதை என் காதினால் நானே கேட்டேன். பெரிய பழுவேட்டரையரும் கேட்டார்.///வந்தியதேவனிடம் குந்தவை கேட்கும் போதி இதைக் கூறுகிறான். வந்தியதேவன் இயற்கையாகவே கொஞ்சம் புனைந்து கூறுவதில் வல்லவன். பெரிய பழுவேட்டரையர் விசாரணையில் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் எனறு சொல்லும் வரை வந்தியதேவன் யாரிடமும் இதை சொல்லவில்லை. இதற்கு பிறகே ஆமாம் போட துவங்கியுள்ளான். அருள்மொழியிடம் கூட கூறவில்லை. வந்தியதேவைப் பொறுத்தவரை எப்படியாவது சிறையில் இருந்து தப்பி ஈழத்திற்காவது ஓடி விட வேண்டுமென்ற நிலை தான் இருந்தது. கொலை குற்றத்தை சட்டபூர்வாமாகவோ, நேர்மையாகவோ சந்திக்க அவன் விரும்பவில்லை. எனவே தான் பாதாளச் சிறையில் இருந்து தப்புகிறான். எனவே பெரிய பழுவேட்டரையர் சொன்னதை வழிமொழியும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். உண்மையில் நந்தினி வேறு பெயரைக் கூறி இருந்து, பழுவேட்டரையர் சொன்னது பொய் என்று இவன் கூறினால் அவர் அடுத்து சொன்ன வந்தியதேவன் குற்றவாளி இல்லை எனக் கூறியதும் பொய்யாக ஆகி விட வாய்ப்பு ஏற்ப்பட்டு விடும். பெரிய பழுவேட்டரையர் தற்கொலைக்கு முயன்று விட்ட நிலையில் இதை அப்படியே தொடர்ந்தால் பிரச்சினைகள் ஏதும் இருக்காது என நினைத்து இருக்கலாம்.
வந்தியதேவன், பெரிய பழுவேட்டரையர் இருவரின் நிலைஇருக்கலாம். கொலை நடந்த களத்தையும் கொஞ்சம் பார்த்தால் இவர்கள் இருவரும் சொலவது பொய் என்று மிகத் தெளிவாக விளங்கும். சம்பூவரின் அரண்மனையில் நந்தினி இருந்த அறையில் ஆதித்தனும், நந்தினியும் கடும் வாக்குவாதத்தில் இருக்கின்றனர். அப்போது வந்தியதேவன் நெற்களஞ்சியத்திற்குள் ஒளிந்து கொண்டுள்ளான். எனவே அவர்களுக்கும் வந்தியதேவனுக்கும் இடையே தடுப்பு உள்ளது. மேலும் பெரிய பழுவேட்டரையர் வந்தியதேவனுக்கு பின்னால் உள்ளார். மிக அருகில் என்றால் வந்தியதேவனுக்கு தெரிந்து போய் இருக்கும். அவர் வருவதை உணராதவனாகத் தான் வந்தியதேவன் இருந்துள்ளான். எனவே அவர் கொஞ்சம் தூரத்திலேயே இருந்துள்ளார். இந்த சூழலில் தான் நந்தினி ஆதித்தனிடம் தனது தந்தை யார் எனக் கூறுகிறாள்.
///நந்தினி ஆதித்த காரிகாலரை மிக நெருங்கி அவர் காதண்டை மிக மெல்லிய நடுங்கிய குரலில் "என்னைப் பெற்ற தந்தை... தான்!" என்று கூறினாள். கூறிவிட்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.///
வந்தியதேவனும், பெரிய பழுவேட்டரையரும் இருக்கும் தூரத்தைக் கணக்கில் கொள்ளும் போது நந்தினி காதருகே சென்று மெல்லிய குரலில் சொன்னது அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்ப்பே இல்லை. அவ்வாறு கேட்டிருந்தாலும் அதை அவர்கள் தவறாக புரிந்திருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே தான் வந்தியதேவன் குந்தவையிடம் அதைக் கூறும் போது கூட சான்றுக்கு பெரிய பழுவேட்டரையரையும் துணைக்கு அழைக்கிறான்.
///குந்தவை : "நந்தினி வீர பாண்டியனின் மகள் என்பது உண்மையாயிருக்குமா?" வந்தியத்தேவன் : "நந்தினி அவ்வாறு ஆதித்த கரிகாலரிடம் கூறியதை என் காதினால் நானே கேட்டேன். பெரிய பழுவேட்டரையரும் கேட்டார்.///
அழைக்கிறான். எனவே பெரிய பழுவேட்டரையரும், வந்தியதேவனும் கூறியது பொய், நந்தினியின் தந்தை வீரபாண்டியன் அல்ல. இரண்டாவது பதிவில் கூறியபடி வீரபாண்டியன் நந்தினி காதலன் தான் என்பது தெளிவாகின்றது.
அப்படியானால் நந்தினியின் தந்தை யார் என்ற கேள்வி இன்னும் உள்ளது? பொதுவாக வாசகர்கள் மத்தியில் வரும் சந்தேகத்தின் படி மூவர் இந்த இடத்தில் உள்ளனர்.
1. வீரபாண்டியன்
2. சுந்தர சோழன்
3. பைத்தியக்காரன் என அழைக்கப்படும் கருத்திருமன்
வீரபாண்டியனும், சுந்தர சோழரும் தந்தை இல்லை என முடிவானதால் அவர்களை விட்டு விட்டு கருத்திருமன் தான் தான் தந்தை என ஆழ்வார்க்கடியானிடம் கூறீயதாக வருவதை அடுத்த பதிவில் ஆராயலாம்.
டிஸ்கி : இது முழுக்க முழுக்க பொன்னியின் செல்வனின் ரசிகர்களுக்காக எழுதப்படுவது. எனவே மற்றவர்கள் ஏமாற்றமாக உணராதீர்கள். நீங்களும் பொன்னியின் செல்வன் படித்து விட்டு வந்து இந்த ஜோதியில் கலந்து கொள்ளுங்கள். பொன்னியின் செல்வன், தமிழறிந்தவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய சரித்திர நாவல்.
இணையத்தில் நண்பர் பொன்வண்டின் கூகுள் பக்கத்தில் சுலபமாக படிக்கலாம்.
http://yogeshmsc.googlepages.com/kalkinovels.html