Sunday, April 5, 2009

சங்கீதா என்ற ஆயிஷா

1998 ல் கோவை குண்டு வெடிப்புக்குப் பிறகு மிகவும் பரபரப்பாக பேசப் பட்ட பெயர் சங்கீதா என்ற ஆயிஷா! கோவை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு தமிழகம் முழுவதும் தேடப்பட்டவர். உடம்பு முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு சுற்றி வருகின்றார் என்று புலனாய்வு பத்திரிக்கைகள் சுடச்சுட செய்தி பரப்பின.

சமீபத்தில் இவரது பேட்டி ஒரு தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.

சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்ட அப்பெண் தனக்கு ஏற்ப்பட்ட துன்பங்களைக் கூறிக் கேட்ட போது கண்களின் நீர் கோர்த்து விட்டது. எந்த தவறும் செய்யாமல் பிறந்த குழந்தையை விட்டு விட்டு சிறையில் தவித்த நாட்களை விவரித்து இருந்தார். தனது கணவர் எழுதும் சாதாரணக் கடிதததைக் கூட காட்டாமல் அலைக்கழித்ததையும், நீதி மன்ற வாசலில் கணவருடன் பேச அனுமதி கிடைத்தும், போலிசார் சுற்றி நின்று கொண்டு பேச விடாமல் செய்த கொடுமைகளையும் விவரித்தார். ஆனந்த விகடனில் வந்த அவரது பேட்டி .


''ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம்னு 10 வருஷமா ஓடிக்கிட்டேதான் இருந்தேன்!'' - அத்தனை அலுப்புடன் ஆரம்பிக்கிறார் ஆயிஷா. கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து 'பர்தா பயங்கரவாதப் பெண்' என்று வர்ணிக்கப்பட்ட அதே பிரபல ஆயிஷா என்கிற சங்கீதா! 4 வருட சிறைத் தண்டனையின் இடையே பெயிலில் வெளிவந்திருக்கும் ஆயிஷாவை சென்னை பிராட்வேயின் நெருக்கடியான குடியிருப்பு ஒன்றில் சந்தித்தேன். சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர், சமீபத்தில்தான் இரண்டாவது ஆண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்.

''பேட்டி எடுத்துக்கலாம். ஆனா, முகம் தெரியுற மாதிரி போட்டோ மட்டும் வேண்டாம் சார். பக்கத்து வீட்டுக்காரவுகளுக்குக்கூட நான்தான் 'அந்த பர்தா பொண்ணு!'ன்னு தெரியாது. ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பழகிட்டு இருக்குறவங்க, அப்புறம் மெரண்டுருவாங்க!'' - வார்த்தைகளைக் காட்டிலும் ஆயிஷாவின் கண்கள் உணர்த்தும் வேதனை இன்னும் கூர்மையானது.

''ராஜபாளையம் பக்கத்து மம்சாபுரம்தான் என் சொந்த ஊரு. டிப்ளமோ படிக்கும்போது இஸ்லாம் மதம் மீது திடீர்னு ஈர்ப்பு. இஸ்லாம் பற்றின விஷயங்களை ஆர்வமா தேடித் தேடிப் படிச்சேன். 'சங்கீதா'வா இருந்த நான் 'ஆயிஷா' ஆனேன். வீட்ல பயங்கர வசவுகள், சண்டை. அந்தச் சமயம் த.மு.மு.க. விருதுநகர் மாவட்டச் செயலாளரா அறிமுகமான இப்ராஹிம் எனக்கான ஆறுதலை தன்னிடம் வெச்சிருந்தார். காதல், திருமணம்னு அடுத்தடுத்து யோசிக்க ஆரம்பிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் எதிர்பார்த்த எதிர்ப்பு. விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துட்டு அவரோட சென்னைக்கு வந்துட்டேன். 'எப்படியும் பொழச்சுக்கலாம்'னு நம்பிக்கை. அவரோட உறவினர் ரஃபீக் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர் 'அல்உம்மா' அமைப்பில் இருக்கார்னு அப்ப எங்களுக்குத் தெரியாது. ரஃபீக்கால் எங்களுக்கு வேலை எதுவும் ஏற்பாடு செய்ய முடியலை. அவரோட நண்பர் உசேன் மூலமா முயற்சி செய்தோம். கோடம்பாக்கத்துல ஒரு வீடு பார்த்துத் தங்கவைக்க முடிஞ்சதே தவிர, அவராலும் எங்களுக்கு வேலை வாங்கித் தர முடியலை. இதுக்கிடையில் குண்டு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டு ரஃபீக் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரியாது. அப்பதான் 1998-ல் கோவை குண்டுவெடிப்பு.

கோவை உக்கடம் தொடங்கி டெல்லி வரைக்கும் பரபரப்பாகிருச்சு. திடீர்னு குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆட்கள் நாங்க தங்கியிருந்த வீட்டுக்கு வந்து போக ஆரம்பிச்சாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. ரஃபீக்கையும் காணோம், வேலையும் கிடைக்கலைங்கிற ஒருவித நிர்க்கதியான சூழல். திரும்பத் திரும்ப உசேனை நச்சரிக்கவும், அரும்பாக்கத்தில் வேற வீட்டில் தங்கவெச்சார். அதுவரை கோவை குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகளைப் பத்திரிகைகளில் படிச்சுத் தெரிஞ்சுக்கிற பார்வையாளராத்தான் இருந்தோம். ஆனா, அந்தச் சம்பவத்தில் நாங்களும் பங்கேற்பாளர் ஆகிற மாதிரி சூழல் கூடிய சீக்கிரமே உருவாச்சு. நாங்க செஞ்ச ஒரே தப்பு, அரும்பாக்கத்துக்கு வீடு மாறும்போது கோடம்பாக்கத்து வீட்டிலேயே என் டைரியை விட்டுட்டு வந்ததுதான். அந்த டைரியில் நாங்க காதலிச்சது, கல்யாணம் செய்துக்கிட்டது, ரஃபீக் அடைக்கலம் கொடுத்ததுன்னு எல்லா விவரங்களும் இருந்தது. என் போட்டோவும் அதில் இருந்தது. போலீஸ் கைக்கு அந்த டைரி கிடைக்கவும் வாழ்க்கையே போச்சு.

'ஆயிஷா என்கிற சங்கீதா - முஸ்லிம் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பர்தா பெண்', '100 கிலோ வெடிகுண்டுகளோடு தமிழகத்தில் தலைமறைவாக நடமாடுகிறார்'னு அன்னிக்கு ஆரம்பிச்சது பரபரப்புச் செய்திகள்! சின்னக் கோடு போட்டாங்க போலீஸ். அதுல ரோடே போட்டு புல்டோசர் ஓட்டிட்டுச்சு பிரஸ். அவங்களைப் பொறுத்தவரை அது அன்றைக்கான நியூஸ். ஆனா, எங்களுக்கோ அது உயிர்ப் போராட்டம்!'' - மௌனங்கள் படர்ந்த சில விநாடிகளுக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறார் ஆயிஷா.

'' 'இப்ப சூழ்நிலை சரி இல்லாததால், உடனே போலீஸ்ல சரண்டராக வேண்டாம். கொஞ்சம் பரபரப்பு அடங்கட்டும்'னு சொன்னார் உசேன். ஆனா, நிலைமை இன்னும் தீவிரமடையவும் ஆந்திரா கூட்டிட்டுப் போனார். டி.வி, பத்திரிகைகள் எல்லாத்திலும் பரபரப்பு அடங்கவே இல்லை.

ஆந்திராவில் இருக்கப் பிடிக்காம இந்திய எல்லை ஓரம் இருக்கிற நேபாள குக்கிராமத்துக்குப் போனோம். அங்கே ஒரு நர்சரி ஸ்கூலில் டீச்சர் வேலை பார்த்தேன். அவருக்கு பலசரக்குக் கடையில் வேலை. கொஞ்சம் நிம்மதியா மூச்சுவிட்ட சமயம், தமிழகத்தில் உசேன் கைதானாரு. தகவல் நேபாளம் வரை எட்டி என் ஸ்கூல் வேலை போயிருச்சு. இன்னொரு ஸ்கூல்ல சேர்ந்து வேலை பார்த்தேன். தமிழகப் பரபரப்புகள் அடங்கி அவருக்கும் ஓரளவு வருமானம் வர ஆரம்பிச்ச நேரம் எங்களுக்கு முதல் மகன் பிறந்தான். 3 வருஷம் ஓடிருச்சு. 'இவ்வளவு நாளுக்குப் பிறகு பிரச்னை இருக்காதே'ன்னு இவர் அவங்க வீட்டுக்குப் போன் பண்ணிப் பேசியிருக்காரு. மோப்பம் பிடிச்சுட்டாங்க போலீஸ்காரங்க.

பீகார் போலீஸ் மூலமா எங்களை ட்ரேஸ் செஞ்சு கைது செய்து தமிழ்நாட்டுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. அவங்களே தயாரிச்ச ஒரு வாக்குமூலத்தில் எங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க. அதில் 'நாங்கதான் ரஃபீக்குக்கும் அவரோட நண்பர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போனதா'ப் பதிவாகியிருந்தது வேதனையான வேடிக்கை.

முழுசா 3 வருடங்கள். நானும் அவரும் தனித்தனி செல்லில் இருந்தோம். மகன் சிவகாசியில் வளர்ந்தான். எங்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் போலீஸிடம் இல்லைங்கவும் பெயில் கிடைச்சது.

இப்போ எனக்கு டீச்சர் வேலை. அவருக்குச் சின்னச் சின்னதாப் பல வேலைகள். ஆகஸ்ட் 15, டிசம்பர் 6, ஜனவரி 26 தேதிகளை நாங்க மறந்தாலும், வீட்டுக்கதவைத் தட்டும் போலீஸ் அதை ஞாபகப்படுத்திருவாங்க. தங்கி இருக்கிற இடத்துல நான்தான் ஆயிஷான்னு தெரிஞ்சதும் ரெண்டு பேருக்கும் வேலை போயிடும். வீட்டைக் காலி பண்ணச் சொல்லிருவாங்க. இதுவரை 4 வீடு காலி பண்ணிட்டோம். இப்ப குடியிருக்கிற வீட்டோட ஓனர், வேலை பார்க்கிற கடை முதலாளி யாருக்கும் நான்தான் ஆயிஷான்னு தெரியாது. இந்த 10 வருஷங்களைத் திரும்பிப் பார்த்தா, கண்ணீரும் ஓட்டமும்தான் மிஞ்சியிருக்கு. இனிமேதான் வாழ்க்கையை ஆரம்பிக்கணும். இன்னும் ஒரு வருஷத் தண்டனை பாக்கி இருக்கு. அப்பீல் பண்ணியிருக்கோம். விடுதலை கிடைக்கும்னு நம்புறோம். நீதியையும் இறைவனையும் நம்புறோம்!'' - கைகோத்திருக்கும் 5 மாத மகனின் விரல்களைப் பிரித்து நீவும் ஆயிஷாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்க எனக்கும் தயக்கமாகத்தான் இருந்தது.

''இன்றைய சூழ்நிலையில் நீங்க இஸ்லாம் மதத்துக்கு மாறியதால்தான் இத்தனை பிரச்னைகளும் என்ற நினைப்பு ஏற்பட்டது உண்டா?''

ஆயிஷாவின் கண்கள் அவசரமாக மறுத்தன. ''எப்பவுமே இல்லை. நானாகத்தான் இஸ்லாத்தை விரும்பித் தேர்ந்தெடுத்தேன். 'போர்க்காலங்களில்கூட குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது'ங்கிறதுதான் குர்-ஆன் வாசகம். குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக் கொல்லப்படுவதை மட்டும் குர்-ஆன் அனுமதிக்குமா என்ன? 'வாழ்க்கையைத் திட்டமிடாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியா?'ங்கிற கேள்வி மட்டும்தான் என்னை உறுத்திக்கிட்டே இருக்கு, அதுதான் எங்க எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். எந்த மதத்தவரா இருந்தாலும் தீவிரவாதி என்பவன் தீவிரவாதிதான். அவனுக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை!''

விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா, ''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''

நன்றி: ஆனந்த விகடன் தேதி: 07-01-2009

34 comments:

அ.மு.செய்யது said...

//
விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா, ''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!'' ..
//


படிக்க படிக்க மனம் கனக்கிறது !!!!

அ.மு.செய்யது said...

//'போர்க்காலங்களில்கூட குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது'ங்கிறதுதான் குர்-ஆன் வாசகம். //

எத்த‌னை முறை இதை உர‌க்க‌ கூவினாலும் கேட்ப‌வ‌ர்க‌ள் செவிடாக‌வே ந‌டிப்ப‌தால் சொல்வதில் பயனில்லை.

தமிழன்-கறுப்பி... said...

:(

ஆயில்யன் said...

//''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''
//

:(

தாய் தன் பிள்ளைகள் பற்றி காணும் கனவு பலிக்கட்டும்!

நிம்மதியான வாழ்க்கையோடு இருக்கட்டும் இனி வருங்காலத்தில்...!

அபி அப்பா said...

படித்ததும் கண்ணீரை அடக்க முடியவில்லை தமிழ் பிரியா! என்ன செய்வது என்ன செய்வது ஆனாலும் அந்த சூழ்நிலையிலும் தம் பிள்ளை கலெக்டர் ஆக வேண்டி சொன்ன அப்பன் காலில் நான் விழுகிறேன். அந்த ஆயிஷாவுக்கு என் நன்றிகள்! நிச்சயம் அவள் நல்ல படியா வளர்ப்பா அந்த நம் குழந்தையை:-((

சதுக்க பூதம் said...

பிரச்சனை இருந்த போது பரபரப்பு மற்றும் விற்பனைக்காக பத்திரிக்கைகள் இது போன்ற வதந்தி செய்திகளை பெரிதாக்குகின்றனர். தற்போது அவர் பற்றிய நியாயமான செய்திகளை பெரிதாக பிரசூரிக்காத பத்திரிக்கைகளின் செயல் கண்டனத்திற்கு உரியது. அதே போல் மக்களும் அது பற்றி நினைத்து பார்ப்பதில்லை

சதுக்க பூதம் said...

//ஆனந்த விகடனில் வந்த அவரது பேட்டி .
//

மன்னிக்கவும். பேட்டியை மட்டும் முதலில் படித்தேன். ஆனந்த விகடனின் இந்த செயல் பாராட்டுக்குரியது

கிரி said...

//அவங்களைப் பொறுத்தவரை அது அன்றைக்கான நியூஸ். ஆனா, எங்களுக்கோ அது உயிர்ப் போராட்டம்//

இதை போல ஊடக செய்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் :-(

உடன் தீர விசாரிக்காத அரசு நிறுவனங்கள்

ஜியா said...

:-( இன்னும் எத்தன பேரு இது மாதிரி பாதிக்கப்பட்டு இருக்குறாங்களோ?

ராமலக்ஷ்மி said...

துரத்துகின்ற சமூகம். அத்தனையும் தாங்கிக் கொண்டு வாழ்வது குழந்தைகளுக்காக என்பதை அந்தக் கடைசி வரிகள் உணர்த்துகின்றன. குழந்தைகளைப் பற்றிய அவரது கனவுகள் பலிக்கப் பிரார்த்திப்போம்.

சென்ஷி said...

கலங்க வைக்கும் நிகழ்வுகள் தமிழ்ப்ப்பிரியன். விகடனுக்கு நன்றிகளும்.. அந்தப்பெண்ணின் வாழ்வு நலம் பெற இறைவனிடம் துஆக்களும்...

நட்புடன் ஜமால் said...

\விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா, ''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''\\

இன்ஷா அல்லாஹ்!

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

//'போர்க்காலங்களில்கூட குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது'ங்கிறதுதான் குர்-ஆன் வாசகம். //

எத்த‌னை முறை இதை உர‌க்க‌ கூவினாலும் கேட்ப‌வ‌ர்க‌ள் செவிடாக‌வே ந‌டிப்ப‌தால் சொல்வதில் பயனில்லை.\\


அன்போடு சொல்வது மட்டுமே கடமை. பயன் எதிர் நோக்க வேண்டாம். அது நம் கையில் இல்லை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:( பத்திரிக்கைக்காரங்க இல்லாததை இருப்பது போல பரபரப்பு செய்வதால் சிலர் இப்படி பாதிப்படைந்தாலும் அவங்க கதை எழுதறத மட்டும் நிறுத்தறதில்ல.. இப்பவும் இது ஒரு கதைக்காகத்தான் பத்திரிக்கையில் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்..

அவங்க ஆசை நிறைவேறட்டும்.. வாழ்வு இனிமையாகட்டும்..

Naresh Kumar said...

மீடியா, போலீஸின் அலட்சியத்தை குறை சொல்லுவதா அல்லது இது போன்ற செய்திகளை விரும்பி படிக்கும் மக்களை குறை சொல்லுவதா என்று புரிய வில்லை!!!

பலத்த அதிர்வுகளை ஏற்படுத்துகிறது பதிவு...

நரேஷ்
www.nareshin.wordpress.com

சந்தனமுல்லை said...

:(( கடவுள் நிறைவேத்தட்டும் அவரின் ஆசைதனை!

சந்தனமுல்லை said...

//அவங்களைப் பொறுத்தவரை அது அன்றைக்கான நியூஸ். ஆனா, எங்களுக்கோ அது உயிர்ப் போராட்டம்! //

முகத்தில் அறைகிறது இந்த வார்த்தைகள்!

Unknown said...

:(((

Unknown said...

காசுக்காக கண்டதை எழுதி மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் சில கயவர்களுக்கு இது இன்னுமொரு துன்பியல் கதை.

அந்த சகோதரி இனியாவது தம் குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழ துஆ செய்வோம்.

malar said...

//எந்த மதத்தவரா இருந்தாலும் தீவிரவாதி என்பவன் தீவிரவாதிதான். அவனுக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை!''////

அருமையான சொல் .

வல்லிசிம்ஹன் said...

கண்டதையும் காணாதைதையும் எழுதி ஒரு பெண்ணின் வாழ்வை மோசம் செய்த பத்திரிகை நபர்களுக்கு எப்போதாவது தோன்றுமா. தன்னை அந்த நிலையில் வைத்துப் பார்ப்பதற்கு.
மிக மிக நன்றி தமிழ்பிரியன். ஆயிஷா நல் வாழ்வு பெற வேண்டும்.

S.A. நவாஸுதீன் said...

மனம் கனக்கிறது. இனியாவது அவரின் வாழ்க்கையும், அவர்கள் குடும்பத்தாரின் வாழ்க்கையும் சிறப்பாக அமைய வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். அவருடைய எண்ணப்படி, அவர் பிள்ளைகளின் வாழ்க்கை அமையட்டும். இன்ஷா அல்லாஹ்.

Unknown said...

விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா, ''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''\\

இன்ஷா அல்லாஹ்!

if same things happened for any journilist sister whether they write same word in the news paper....

One day it will come then see what happen to these kinds of journilist in front of public...

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு நன்கு அறிமுகமான எந்தத் தவறும் செய்யாத ஒருவருக்கும் இதே நிலமை ஏற்பட்டது.

இறைவன் போதுமானவன். வேறென்னத்தச் சொல்ல :((

அமுதா said...

/*'என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... */
அவரது எண்ணம் ஈடேறட்டும். ம்... யாரோ செய்யும் தவறுகளுக்கு யாரோ துன்பம் அடைகிறார்கள்

gayathri said...

அந்த சகோதரி இனியாவது தம் குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழ துஆ செய்வோம்.

சின்னப் பையன் said...

:-((

ராஜ நடராஜன் said...

//சமீபத்தில் இவரது பேட்டி ஒரு தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.//

தொலைக்காட்சி காண நேர்ந்தது.துயரத்துக்குரிய நிகழ்வுதான்.

? said...

சகோதரி ஆயிஷாவின் துயரைக் கண்டதும்,

ஆய்ந்தாய்த்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

என்ற திருக்குறள்தான் நினைவிற்கு வந்தது. அந்த அபலை பெண்ணின் ஒரே தவறு கூடாநட்பு, இதற்கு அவர் கொடுத்த விலை அதிகம்

Sasirekha Ramachandran said...

//''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''
//


இதைப் படித்ததும் கண்கள் வியர்க்கிறது!!

ஜோசப் பால்ராஜ் said...

நானும் இந்தப் பேட்டிய ஆனந்த விகடன்ல படிச்சேன் அண்ணே.
ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு.
ஊடகங்கள் எல்லாம் வியாபார நோக்கில் மட்டும் தான் செயல்படுறாங்களே ஒழிய அந்த செய்தி விளைவிக்கும் பயன் என்னென்னானு யோசிக்கிறதேயில்ல.
அந்த பதிப்பு ஒழுங்கா விக்கனும், பரப்பரப்பா பேசப்படனும், இதான் அவங்களுக்கு தேவை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் கண் கலங்க வைத்த பதிவு.

ஆயிஷாவின் நம்பிக்கைக்கு இறைவன் செவி சாய்க்கட்டும்.

சமூகமே!!! அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டு.

dharshini said...

ஆயிஷா அவர்களின் கனவு நிறைவேறட்டும்....

பீர் | Peer said...

//உடம்பு முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு சுற்றி வருகின்றார் என்று புலனாய்வு பத்திரிக்கைகள் சுடச்சுட செய்தி பரப்பின.//
பதிவோடு சம்பந்தப்பட்ட மற்றுமோர் தகவல்; மதுரையில் எனது பெரியப்பா மகன், இந்த செய்திகளை பத்திரிக்கைகளில் படித்து, (தலைப்பில் இருக்கும் பெண் யாரென தெரியா விட்டாலும்) தினம் மலம் கக்கும் ஒரு பத்திரிக்கைக்கு," எந்த மாதிரியான ஆதாரங்களை வைத்துக்கொண்டு இது போல செய்திகளை வெளிடுகின்றீர்கள், ஆதாரம் இல்லாமல் செய்திகளை வெளிடவேண்டாம்" போன்ற சாராம்சம் கொண்ட கடிதம் எழுதினான். இரண்டே நாளில் போலிஸ் அவனையும் தூக்கிக்கொண்டு போனது. பிறகு அவனது எதிர்காலம் அடியோடு மாறிப்போனது.
ஆறு மாதம் சிறை, படிப்பை தொடர முடியவில்லை, தந்தை நடாத்திய கடையை கவனிக்க ஆள் இல்லாமல் கடை மூடப்பட்டது, தந்தை மன உளைச்சலில் காலமானார், இப்படி பல...