Wednesday, June 25, 2008

வைகையின் புதல்வன் - சரித்திர தொடர் 1 - குதிரையின் குளம்பொலி

.


”கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
("கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!")

பாண்டிய மன்னன் பெரும்பெயர் வழுதி பற்றி இரும்பிடர்த் தலையார் பாடியது. நூல் : புறநானூறு பாடல் : 3


வைகையின் குமாரன் - 1. குதிரை குளம்பொலி

கதிரவன் தனது விசித்திரமான கைகளை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கே இழுத்துக் கொண்டு இருந்தான். அமாவாசையின் மாலை நேரமாதலால் கருமை வெகு வேகமாக பரவிக்கொண்டிருந்தது. காட்டு மரங்களில் இருந்து சலசலவென் சத்தம் இரைச்சலாய் கேட்டுக் கொண்டிருந்தது. ஆந்தைகளின் உருமலும், கோட்டான்களின் கூவுதலும் பயமுறுத்துவதாக இருந்தது. நரிகள் இரை கிடைத்த மகிழ்விலோ என்னவோ ஊளையிடத் துவங்கி இருந்தன.

அந்த நேரத்து மெளனத்தைக் கிழித்துக் கொண்டு வரும் குதிரைகளின் குளம்படி ஓசைகளைக் கேட்டு பறவைகள் சில சத்தத்துடன் எட்டிப் பார்த்தன. மொத்தம் ஐந்து குதிரைகள். போர்க்களத்தில் எதிரிகளைத் தாக்குவதற்கு கிளம்பியது போல் மிக வேகமாக வந்து கொண்டிருந்தன. முன்னால் சென்ற இரண்டு குதிரைகளில் ஆஜானுபாகான இரண்டு குதிரை வீரர்கள். அதே போல் பின்னால் இரண்டு வீரர்கள். நால்வரின் இடையிலும் உடைவாள் தொங்கிக் கொண்டு இருந்தது.
நடுவில் சென்ற குதிரையில் ஒரு பெண். குதிரையின் வேகத்திலும், மாலை நேர மயங்கிய இருளிலும் அவளது உருவத்தை சரியாக காணவில்லை. ஆனாலும் அவள் குதிரை ஓட்டும் திறனைப் பார்க்கும் போது நல்ல பயிற்சி பெற்றவளுக்கான வேகம் தெரிந்தது. குதிரைகளில் இடப்பக்கத்திலேயே தென் தமிழகத்தின் ஜீவநதி வைகை வளம் குன்றி ஏதோ சோகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.

மாலையின் இருளைக் கிழித்துக் கொண்டு அங்காங்கே தீக்கங்குகளும், புகை மூட்டங்களும் வந்து கொண்டிருந்தன. நதிக் கரையை ஒட்டி இருந்த வயல்களில் எரிந்து மிச்சமாகிப் போய் இருந்த நெற்க்கதிர்களை காண முடிந்தது. வயல்களை ஒட்டி இருந்த குடியானவர்களின் வீடுகள் சின்னா பின்னமாக்கப் பட்டு எரிக்கப்பட்டதும், எரிந்து கொண்டிருந்ததுமாக நெருப்பை கக்கிக் கொண்டு இருந்தன. குதிரைகள் சென்று கொண்டு இருந்த பாதையில், பல இடங்களில் குதிரைகள் செத்து கிடப்பதையும், சில குதிரைகள் தங்களது கடைசி கட்ட மூச்சை விட்டுக் கொண்டு கனைத்துக் கொண்டும் இருந்தன. சில இடங்களில் செத்த பிணங்கள் கூட்டமாக வைத்து எரிக்கப்பட்டதற்கான அடையாளமாக பிணவாடை வந்து கொண்டு இருந்தது.

மிக கோரமாக ஏதோ நிகழ்வு அங்கு நடந்துள்ளது என்பது மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தது. குதிரைகளில் முன்னால் சென்றவர்கள் குதிரை வேகத்தைக் குறைப்பதைக் கண்டவுடன் பின்னால் வந்த குதிரைகளும் தங்களது வேகத்தைக் குறைத்தன. அதற்கு ஏதுவாக முன்னால் சென்ற குதிரையில் இருந்த வீரன் தனது கையை உயர்த்தி நிற்க வேண்டுமென சமிக்ஞை செய்தான். அந்த வீரன் குதிரையை நிறுத்திய உடன் மரத்திற்கு பின்னால் ஒளிந்து இருந்த இரண்டு வீரர்கள் வேகமாக வந்து குதிரை வாங்க அவன் கீழே இறங்கினான். நடுவில் இருந்த குதிரையில் இருந்த பெண்ணிற்கு அருகில் வந்து தலை வணங்கி
”நாம் இறங்க வேண்டிய இடம் வந்தாகி விட்டது. மாமன்னர் இங்கு தான் சற்று தொலைவில் தெரியும் குடிசையில் தங்களை இருக்க பணித்துள்ளார்”
அதற்குள் மற்ற ஒருவன் தீப்பந்தத்தை அருகில் கொண்டு வர அந்த தீயின் வெளிச்சத்தில் பெண்ணின் முகம் தெரிந்தது. அந்த முகத்தில் இயற்கையாக குடி கொண்ட, அன்று வர மறுத்து விட்ட நிலவின் குளிர்ச்சியையும் காண முடிந்தது. அதே நேரம் சற்று முன் மறைந்த ஆதவனின் ஜூவாலையைப் போல் தகிப்பதையும் காண முடிந்தது.
“அரசர் எப்போது வருவார் என்று தெரியுமா” எனக் கேட்டாள்.

இருந்தவர்களில் கொஞ்சம் மூத்தவன் பதிலுறைத்தான்.
“அதைப் பற்றி ஏதும் தகவல் இல்லை நந்தினி பிராட்டியாரே! ஆனால் மிக அருகிலேயே இருப்பதாக செய்தி வந்துள்ளது”.
.............. தொடரும்...

13 comments:

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே நான் தானே பர்ஸ்ட்டு..

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆரம்பத்தில் நான் யூகித்த ஒன்றுதான்... கண்டிப்பாக நந்தினியை பற்றி எழுத போகிறீர்கள் என... வியப்பூட்டும் முயற்சி... சுவாரசியமான எழுத்து நடை... வழ்த்துக்கள் நண்பரே.. அடுத்தத் தொடரை ஆவளுடன் எதிர்பார்க்கிறேன்...

Anonymous said...

வைகையின் புதல்வன் -
சரித்திர தொடர்

போற்றுதலுக்குரிய முயற்சி. அருமையான நாவல் தரப்போகும் உங்களுக்கு "சரித்திர நாவல் ரசிகர் மன்றத்தின்" சார்பாக என் வாழ்த்துக்கள்.

நந்தினி நந்தினி என்று புலம்பல் ஓவரா இருக்கும் போதே யோசித்திருக்க வேண்டும் இப்படி ஒரு பதிவு வரும் என்று. நந்தினியை வைத்து நீங்கள் பின்னபோகும் சம்பவங்களை அதனோடு கூட சரித்திர தகவல்களையும் தெரிந்து கொள்ள இப்போதே ஆர்வம் கூடுகிறது. நிச்சயம் பாண்டிய மண்ணின் பெருமை சொல்லும் நாவல் தானே ? ! ? !

Yogi said...

அட .. கலக்குங்கள்.. தமிழ்!! தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் !! :)

உங்கள் பதிவின் Feed Settings - FULL என்று மாற்றமுடியுமா? கூகுள் ரீடரில் முழுவதும் வரவில்லை...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ் பிரியன்...

தங்கள் புதிய தொடர்கதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஒரு சிறு விண்ணப்பம்.

தங்களது எண்ணப் பீறிடலை பதிவுகளாக இங்கே கொட்டி வைக்கிறீர்கள். ஒரு முறை எழுதிய பின், தயவித்து, தயவு செய்து படித்துப் பார்க்கவும். என்னாலேயே சில பிழைகள் கண்டுபிடிக்க முடிந்தது எனில், பேராசிரியர் நன்னன் போன்றோர் பார்க்க நேரின் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட வாய்ப்புகள் மிக.

சில உதா-ரணங்கள் :

இறைச்சலாய்

உருமலும்

குடியானவர்களில் வீடுகள்

பதிலுறைத்தான்.

இதற்கு முந்தைய பதிவில்,

நந்தினி வீரபாண்டியனின் தந்தை என்பதற்கு உள்ள ஆதாரமானவர்கள் வந்தியதேவன் மற்றும் பெரிய பழுவேட்டரையர் ஆகிய இருவர்.

படித்தவுடன் திக்கென்றானது.

'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே' என்பது சரிதான். Presentation-ம் மிக முக்கியம் அல்லவா?

நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

புனைவுகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்,ஆனால் gross missings இருக்கக் கூடாது.

காட்டாக,நந்தினி என்ற பாத்திரமே கற்பனை என கல்கி சொல்லிவிட்டார்,எனவே அவள் பாண்டியனுக்கு,மனைவியாக இருந்தாலோ,மகளாக இருந்தாலோ ஒன்றும் தவறில்லை.
ஆனாள் அவள் ராஜராஜனுக்கு மனைவியாக இருந்தாள் என்பது போல வரக் கூடாது என்பதுதான் விதயம்.
:)

மற்றபடி,நிறைய எழுத்துப் பிழைகள்.
பிழைகள் பிழைக்கக்கூடாது,கொன்றுவிடுங்கள் !

Thamiz Priyan said...

///தமிழன்... said...

அண்ணே நான் தானே பர்ஸ்ட்டு..///
அண்ணே நீங்க தான் முதலில் வந்திருக்கீங்க...... ;))

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

ஆரம்பத்தில் நான் யூகித்த ஒன்றுதான்... கண்டிப்பாக நந்தினியை பற்றி எழுத போகிறீர்கள் என... வியப்பூட்டும் முயற்சி... சுவாரசியமான எழுத்து நடை... வழ்த்துக்கள் நண்பரே.. அடுத்தத் தொடரை ஆவளுடன் எதிர்பார்க்கிறேன்.///
நன்றி விக்னேஷ்! வசந்த குமார் ஐயா சொன்னது போல் எண்ணப் பீறிடலே தான். வாழ்த்துக்களுக்கு நன்றி! :)

Thamiz Priyan said...

///மது... said...

வைகையின் புதல்வன் -
சரித்திர தொடர்

போற்றுதலுக்குரிய முயற்சி. அருமையான நாவல் தரப்போகும் உங்களுக்கு "சரித்திர நாவல் ரசிகர் மன்றத்தின்" சார்பாக என் வாழ்த்துக்கள்.

நந்தினி நந்தினி என்று புலம்பல் ஓவரா இருக்கும் போதே யோசித்திருக்க வேண்டும் இப்படி ஒரு பதிவு வரும் என்று. நந்தினியை வைத்து நீங்கள் பின்னபோகும் சம்பவங்களை அதனோடு கூட சரித்திர தகவல்களையும் தெரிந்து கொள்ள இப்போதே ஆர்வம் கூடுகிறது. நிச்சயம் பாண்டிய மண்ணின் பெருமை சொல்லும் நாவல் தானே ? ! ? !///
வாருங்கள் மது! பாராட்டுக்கு நன்றி! பாண்டிய மண்ணில் பிறந்தவன் என்பதால் அந்த பாசம் இருக்கத் தானே செய்யும்? சரித்திர தொடர் என்று போட்டாலும் இது சரித்திரத்தை ஒட்டியதாக அமையும் கற்பனையே!

Thamiz Priyan said...

///இரா. வசந்த குமார். said...
அறிவன்#11802717200764379909 said...///
ஐயா தங்கள் இருவரின் அறிவுரைகளும் மிக்க பயனுள்ளவை. எனது எழுத்துப் பிழைகள் என்னை வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. பள்ளிப் படிப்பறிவு குறைவு என்பதால் காட்டுக்குதிரை போல் தறிகெட்டு எழுதிய எழுத்துக்களை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் உள்ளேன். இனி முரண்கள் இன்றி எழுத முயற்சிக்கிறேன். பதிவையும் ஓரிரு முறை வாசித்தும், இடுகையை நண்பர்களிடம் காட்டியும் சரி செய்தே வெளியிடுகிறேன்.

Thamiz Priyan said...

///அறிவன்#11802717200764379909 said...

புனைவுகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்,ஆனால் gross missings இருக்கக் கூடாது.///
அப்படி ஏதும் வராமல் இருக்க முயற்சி செய்கிறேன். தவறு இருந்தால் எனது தலையில் இரண்டு கொட்டு கொட்டிச் சொல்லுங்கள்.

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!

ஜி said...

vaazththukkal....

kalakkunga :))