Saturday, June 21, 2008

பொன்னியின் செல்வன் நந்தினி பின்னூட்டமே பதிவாய்...

பொன்னியின் செல்வனில் ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்.
கடந்த மூன்று பதிவுகளாக ( முதல் பதிவு , இரண்டாம் பதிவு, மூன்றாம் பதிவு )நான் எழுதிய பதிவுகள் மற்றும் அதற்கு வந்த பின்னூட்டங்கள் ஆகியவை பொன்னியின் செல்வன் ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல மறு நினைவூட்டலாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மூன்றாவது பதிவில் பின்னூட்டமாக இடவேண்டியது இங்கு பதிவாக இட வேண்டி வருகின்றது. கடந்த சில நாட்களாக இங்கு பார்வையாளர்களாக வந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நான் எந்தவிடயத்தை வழியுறுத்தி கூறுகிறேன் எனபதை தெளிவு படுத்த வேண்டும் என்பதற்கே...... :) சிலருக்கு போரடிப்போது போல் தோன்றினாலும் வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற தாரக மந்திரத்தை கைக்கொண்டு இதைத் தொடர்கிறேன்.....இனி...

நந்தினி வீரபாண்டியனின் தந்தை என்ற வாதத்திற்கு சான்றாக வந்தியதேவன் மற்றும் பெரிய பழுவேட்டரையர் ஆகிய இருவரின் கூற்றுக்களே காட்டப்படுகின்றது. இவர்கள் இருவரும் கேட்டதாக சொல்வது ஒரு இடத்தில் மட்டுமே. அது ஆதித்த கரிகாலன் கொலைக்களம். இவர்கள் இருவரும் பொய் சொல்லி இருக்கு நிறைய வாய்ப்பு உள்ளது என மூன்றாம் பதிவில் கூறியுள்ளேன். அதே போல் அவர்கள் இருந்த இடமும், நந்தினி காதண்டை சொன்ன விதமும் இவர்கள் இருவரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை நிரூபிப்பதாக அமைகின்றது. இதை மேலும் விளக்குகிறேன்.



இந்த 'மாதிரி படத்தை' பார்த்தால் கொஞ்சம் விளங்கலாம். யாழ்களஞ்சியத்தின் கதவுக்கு பின்னால் வந்தியதேவன் உள்ளான். அவனுக்கு பின்னால் பெரிய பழுவேட்டரையர் வருகிறார். வந்திய தேவன் உணராத தூரத்தில் பெரிய பழுவேட்டரையர் இருக்கிறார். நந்தினி ஆதித்த கரிகாலனின் காதருகே வந்து சொல்கிறார். வந்தியதேவனை வீழ்த்தி விட்டு வரும் பெரிய பழுவேட்டரையர் கத்தியை நந்தினியை நோக்கி வீசுகிறார்.
///இதை வீசி எறிந்தவன் நானேதான்! இந்த என்னுடைய வலது கரந்தான்! சோழ சக்கரவர்த்திகளுக்கு முடிசூட்டிய பரம்பரையில் வந்த இந்தக் கரந்தான் கத்தியை எறிந்தது. ஆனால் இளவரசர் கரிகாலர் மீது எறியவில்லை, நந்தினியின் பேரில் எறிந்தேன். என்னை மோகவலையில் ஆழ்த்தித் துரோகப் படுகுழியில் வீழ்த்திய அந்த மாயப் பிசாசைக் கொன்றுவிட எண்ணி எறிந்தேன்; குறி தவறிக் கரிகாலர் மீது விழுந்தது!///

சிறந்த போர் வீரன் தன்னிடம் உள்ள பிச்சுவா கத்தியை எதிரியை நோக்கி வீசி எறிந்து கொல்ல வேண்டுமென்றால் எவ்வளவு தூரம் இருக்க வேண்டுமென்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இவ்வளவு தூரத்தில் இருந்த பெரிய பழுவேட்டரையர், நந்தினி காதருகே சொன்னதை கேட்க முடிந்தது எனபது இயலாத காரியம். கல்கி தனது கருத்தில் மிகத் தெளிவாகவே காட்சிகளை அமைத்ததைக் காண முடிகின்றது.

அடுத்து வீர பாண்டியனின் காதலி என்பதற்கு நான் வைத்த ஆதாரங்களில் எழுந்த சந்தேகங்கள்....
1. பூங்குழலியின் கருத்து...
அதாவது ஆதித்த கரிகாலம் வீர பாண்டியனை கொலை செய்யும் போது நந்தினியின் மன்றாட்டத்தை சரியாக கவனிக்க வில்லை. நந்தினி தந்தையை விட்டுவிடு என்றதை போர், கொலை வெறியில் காதலன் என்று தவறாக எண்ணி விட்டான் என்பது.. சிறந்த வாதம். இதை தவறு என நிரூபிக்க வேண்டியது எனது கடமை....
ஆதித்த கரிகாலன் மூன்று முறை வீரபாண்டியன் சம்பந்தமாக பேசி நந்தினியை சந்தித்துள்ளான்.
அ. வீர பாண்டியன் கொலைக்களம்
ஆ. பழவூர் அரண்மனையில்
இ. கடம்பூர் அரண்மனையில் கொலை செய்யப்படுவதற்கு முன்னால்...

அ. வீரபாண்டியன் கொலைக்களம்

/// நான் தட்டுத் தடுமாறி, 'உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவன் உயிரைக் காப்பாற்றும்படிக் கேட்கிறாய்?' என்றேன்.

'இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்து கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்!' என்றாள் நந்தினி. ///


ஆ. பழவூர் அரண்மனையில்

மேற்கண்டதை ஆதித்தன் நேரடியாக பார்த்திபேந்திரனிடம் கூறுகிறான். இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் வீர பாண்டியன் கொலை நடந்து பல நாட்கள் கழித்தே நந்தினியை ஆதித்தன் சந்திக்கின்றான். அவளிடம் சென்று வீர பாண்டியன் உடனான காதலைப் பற்றிக் கேட்கிறான்.

///என் அன்பை நிராகரித்தது பற்றியும், வீரபாண்டியனைக் காதலித்தது பற்றியும் அவள் மீது நான் குற்றம் சாட்டினேன். கிழவர் பழுவேட்டரையரை மணந்தது பற்றியும் குத்தலாகப் பேசினேன்.///

உண்மையில் அவள் வீர பாண்டியனை தந்தை என்று முதலில் சொல்லி இருந்தால் “ தூத்தேறி நாயே! நான் தந்தை என்று சொன்னது உனக்கு கொலை வெறியில் காதலன் என்றா கேட்டது?” என்று சொல்லி இருப்பாள். ஆனால் நந்தினி சொன்னது

///'இளவரசே! முதலில் தாங்கள் என் காதலைக் கொன்றீர்கள்; பிறகு என்னைக் காதலித்தவனை என் கண் முன்னால் கொன்றீர்கள் /

(கவனிக்க : இந்த இடமும், வீர பாண்டியன் கொலைக்களமும் வேறு) ஆனால் நந்தினி நொந்து போனவளாய் இருந்தாலும் தன் காதலனைக் கொன்றதை தெளிவாகக் கூறுகின்றாள். இந்த பழவூர் அரண்மனைக்கு ஆதித்தன் சென்றது, பேசியது பூங்குழலி மற்ற யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஆதித்தன் சென்ற விதம் அப்படி

///பழுவேட்டரையர் ஊரில் இல்லை. அவருடைய அரண்மனையில் என்னைத் தடுப்பாரும் இல்லை; எனக்கும் நந்தினிக்கும் ஏற்பட்டிருந்த பழைய சிநேகிதத்தைப் பற்றி அங்கே அறிந்தவர்களும் இல்லை. இளவரசுப் பட்டம் கட்டிக் கொண்ட ராஜகுமாரன் பழுவூர் அரண்மனை ராணிமார்களிடம் ஆசி பெறுவதற்காக வருவதாகவே நினைத்தார்கள்.///

2. நந்தினி தனியாக பேசிக் கொள்ளுமிடம்
இந்த இடமும் காதலி என்ற மனோபாவத்திற்கு வருவதற்கு காரணமான இடம். இங்கு நந்தினி தனியே பேசிக் கொள்கிறான். இதில் வீரபாண்டியனை பிரமையில் உணர்ந்து ‘அன்பே' என அழைக்கிறாள் எனக் கூறி இருந்தேன். 'அன்பே' என தந்தையையும் அழைக்கலாம் என்ற கருத்து பின்னூட்டத்தில் வந்துள்ளது. பாண்டிய நாட்டைச் சேர்ந்தவனானதால் இது எனக்கு புதிய கருத்தாக படுகின்றது. மேலும் தமிழைப் படித்து அறியாமல் அனுபமாக அனுபவிப்பவன் என்பதால் எனக்கு இதில் முழு திருப்தி இல்லை. அப்படியே கூறினாலும் எனக்கு கீழ்காணும் வினாக்கள் எழுகின்றன.

அ. அன்பே என்று தந்தையை அழைக்க முடியுமா?

ஆ. உன் அடியாளைத் தவிர வேறு யாருமில்லை! வா! என தந்தையைப் பார்த்து அழைக்க இயலுமா?

இ. சுவர்க்கத்தில் என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள்! அவர்களில் ஒருத்தியை............... என்ன? மாட்டேன் என்கிறாயா? இதில் புள்ளி உள்ள இடங்களை எதைப் போட்டு நிரப்ப இயலும்?

பதிவு மேலும் வளர்ந்து கொண்டே செல்வதால் இங்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

9 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

//சுவர்க்கத்தில் என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள்! அவர்களில் ஒருத்தியை............... என்ன? மாட்டேன் என்கிறாயா?//

கோடிட்ட இடத்தில் இப்படி போடலாம்...

மகளாக ஏற்றுக் கொண்டால்


நானும் அறிவன் ஐயாவை போல் முடிவோடு இருக்கிறேன்.. மகள் என்பதில்...

VIKNESHWARAN ADAKKALAM said...

பதிவு சுவாரசியமாக போகிறது...

வாழ்த்துக்கள்...

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...///
அண்ணே! பொன்னியின் செல்வனை பல தடவைகள் படித்து, அதிலேயே ஊறி ஒரு முடிவு எடுத்தவர்களை அதிலிருந்து மாற்றுவது ஒரு மதமாற்றம் நிகழ்த்துவதற்கு சமம் என்றே நான் கருதுகிறேன். உங்களுடைய முடிவில் தீவிரமாக இருப்பதில் தவறில்லை.

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

//சுவர்க்கத்தில் என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள்! அவர்களில் ஒருத்தியை............... என்ன? மாட்டேன் என்கிறாயா?//

கோடிட்ட இடத்தில் இப்படி போடலாம்...

மகளாக ஏற்றுக் கொண்டால்///
:)))))) அண்ணே! நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மூன்று கேள்விகளுக்கும் இதே பதிலை தந்தால் பின்னர் தமிழிலக்கியங்களெல்லாம் ‘வேறு' வகையான இலக்கியமாகிவிடும்.

Thamiz Priyan said...

மேலதிக தகவலுக்காக....
வீரபாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கு பிறகு அவனது சிதைக்கு தீ மூட்டி அதற்கு அருகில் ரவிதாசன் உள்ளிட்ட பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் இருப்பார்கள். அப்போது அங்கிருப்பவர்கள் எரியும் நெருப்பில் நந்தினி தூக்கி போட்டு விட வேண்டும் என்று கோபத்துடன் பேசிக் கொள்வார்கள். அப்போது நந்தினி வீரபாண்டியனை கொன்றவர்களை பழி வாங்குவதாக சபதம் எடுத்துக் கொள்வாள். என்னுடைய கேள்வி இங்கு : தந்தை இறந்தால் மகளை அதே சிதையில் போட்டு எரிக்கும் பழக்கம் தமிழகத்தில் இருந்ததா? கணவன் இறந்தால் தான் சிதையில் போட்டு எரிக்கும் கொடூர சதி என்னும் பழக்கம் இருந்தது. சுந்தர சோழர் இறந்த பிறகு வானமா தேவி அவர்கள் உடன்கட்டை ஏறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழன்-கறுப்பி... said...

தல கோச்சுக்காதிங்க தெளிவா படிச்சுட்டு வந்து கருத்த சொல்லிக்றேன்,மூணாவது பதிவும் படிக்க இருக்கு...

நன்றி...

புருனோ Bruno said...

இது குறித்து நான் என் பதிவில் தனி இடுகை ஒன்றை
எழுதியுள்ளேன்

ஜி said...

:)) Nallathoru Aaraaichi

புகழன் said...

புதிய templet தோற்றம் நன்றாக உள்ளது.
பதிவைப் படிப்பதற்கு நேரமில்லை.
தவிரவும் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களைப் படித்த பின்புதான் இதுபோன்ற பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியும்.
தொடர்ந்து எழுதுங்கள்.