Tuesday, December 9, 2008

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே! By பாட்டி

இன்று இந்தியாவில் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நேற்றே இங்கு (வளைகுடா) பக்ரீத் கொண்டாடப்பட்டு விட்டது. ஊரில் இருந்தால் பிரியாணி இருக்கும். இங்கு கேண்டினில் கிடைத்த சாப்பாடு தான். படம் போட்டுள்ளேன் பார்த்துக்கலாம். நிறைய ஐட்டங்களை சாப்பிட இயலாது என்பதால் எடுக்கவில்லை.



எங்கள் ஊரில் முன்பெல்லாம் சமையல் செய்ய விறகு அடுப்பு தான் உபயோகத்தில் இருந்தது. சமையல் எரிவாயு இருந்தால் அது வசதியானவர்கள் வீடு. அவர்களும் சமையலுக்கு மட்டும் தான் அதைப் பயன்படுத்துவார்கள். வெந்நீர் போடுவது போன்ற பிற உபயோகங்களுக்கு விறகு தான். எங்கள் வீட்டில் விறகு அடுப்பு மற்றும் மரத்தூள் அடுப்பு இரண்டும் இருக்கும்.

மரத்தூள் அடுப்பு வித்தியாசமானது. மர அறுவை மில்களில் மரங்களை அறுக்கும் போது தூள் கொட்டும். அதை மூட்டைகளில் வாங்கி வருவோம். மரத்தூள் அடுப்பு தனியாக இருக்கும்.உருளையாக மேலே மட்டும் திறந்து இருக்கும். வட்டத்தின் ஒரு பக்கத்தில் சுமார் 4 இஞ்ச் அளாவில் ஒரு ஓட்டையும் இருக்கும்.

இந்த ஓட்டையை துணியால் சிறிது தூரம் அடைத்து, உருளைக்குள் ஒரு குச்சியை வைத்து அதை சுற்றி மரத்தூளை இறுக்கமாக அடைப்பார்கள். இப்போது துணி, மற்றும் குச்சியை எடுத்து விட்டால் மரத்தூள் அடுப்பு தயார்.

மேலே பாத்திரத்தை வைத்து விட்டு கீழே உள்ள ஓட்டை வழியாக தீ எரிப்பார்கள். எரிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் வேகமாக தள்ளினால் மரத்தூள் அமைப்பு கீழே விழுந்து விடும். இதில் சோறு பொங்க மட்டும் செய்வோம்.

சரி இதை விடுவோம். இது தவிர விறகு அடுப்பும் இருக்கும். விறகு விலைக்கு வாங்கி கட்டுபடியாகாது என்பதால் இன்னும் சில எரி பொருட்களும் பயன்படுத்தப்படும். குறிப்பாக தேங்காய் மட்டை, கரும்பு அடித்தட்டை போன்றவை. தேங்காய் மட்டை தெரியும். அதென்ன கரும்புத்தட்டை? இன்னைக்கு பதிவே அதுதான்.

எங்கள் பகுதியில் கரும்பு நிறைய விளைவிக்கப்படும். வெல்லத்திற்கு நல்ல மார்க்கெட்டிங் இருந்ததால் கரும்புத் தோட்டத்திலேயே வெல்லம் காய்ச்சும் வசதியும் செய்து இருப்பார்கள். இதுதவிர வைகைஅணைக்கு அருகில் ஒரு சர்க்கரை ஆலையும் இருக்கிறது.

கரும்பை வெட்டும் போது அடியில் மண்ணுக்குள் இருக்கும் பகுதியை விட்டுவிட்டு மண்ணில் இருந்து சில இஞ்ச் விட்டுவிடுவார்கள். இந்த மண்ணில் இருக்கும் மீதம் இன்னொரு தடவை கரும்பாக வளரும். இரண்டாம் முறையும் அதே போல் வெட்டி விட்டு, நிலத்தை நன்றாக உழுது போட்டு விடுவார்கள். டிராக்டர் கொண்டு உழும் போது அடியில் இருக்கும் கரும்பின் வேர்ப்பகுதி வெளியே வந்து விடும்.

இந்த நிலத்தை சில நாட்கள் அப்படியே காயப்போட்டு விடுவார்கள். இந்த காலத்தில் மண்ணில் இருந்து வெளியே கிடக்கும் வேர்ப்பகுதி காயத் துவங்கி விடும். இந்த வேர்ப்பகுதி சுமார் அரை அடியில் இருந்து ஒரு அடி வரை இருக்கும். இதைத் தான் நாங்கள் கரும்புத் தட்டை என்று சொல்வோம். இதை எடுத்துக் கொண்டு வந்து விறகு போல் பயன்படுத்தலாம். நன்றாக நின்று எரியும்.

விறகு விலை கட்டுபடி ஆகலைன்னு தான் கரும்புதட்டை. அதையும் விலைக்கு வாங்க முடியுமா? அதைக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு நம்மோடது. எங்க தாத்தா, பாட்டி விறகுக்கு போவாங்க..... இந்த கரும்புதட்டையும் பொறுக்கி கொண்டு வந்து விப்பாங்க. அப்ப நானு, எங்க பெரியப்பா மகன்கள், அத்தை மகன் எல்லாம் போவோம்.

விடிகாலைல கிளம்புவோம். ஒரு அரிவாள்,ஒரு யூரியா சாக்கு, ஒரு பழைய துணி, கொஞ்சம் சரடு, ஒரு தூக்கு வாளி அதில் நேற்று மிச்சமான பழைய சோறு. இது தான் நம்ம தொழில் கருவிகள். அதோட ஒவ்வொரு டிரிப்புக்கும் நமக்கு கமிஷன் 50 பைசா கிடைக்கும்.

போகும் வழியில் ஒரு பெட்டிக் கடையில் 10 பைசாவுக்கு கண் மார்க் பட்டை ஊறுகாய் வாங்கிக்குவோம். ஒரு காய்ந்த இலையில் ஊறுகாயை மடித்து வைத்திருப்பார்கள். உசிலம்பட்டியில் இருந்து வருவது கண் மார்க் ஊறுகாய். உசிலம்பட்டி சிசுப் படுகொலை, வெட்டு,குத்துக்கு அப்புறம் இந்த ஊறுகாயால் பெயர் பெற்றது. (தமிழ் பிரியனின் அம்மாவோட ஊரு வேற..)

சுமார் 3 முதல் 5 கி.மீ தூரம் நடக்கனும். வெயில் வருவதற்கு முன்னாடி கரும்புத் தோட்டத்துக்கு போய்டுவோம். அப்புறம் சோத்து வாளியை எங்காவது வச்சுட்டு கரும்புத் தட்டைப் பொறுக்கனும். அதில் நிறைய டெக்னிக் இருக்கு. நல்லா காய்ஞ்சதா எடுக்கனும். அதே நேரம் இத்துப் போயும் இருக்கக் கூடாது. கரும்புத் தட்டையில் இருந்து மண்ணை நல்லா தட்டனும். அதுக்கு அங்கவே ஏதாவது ஒரு கல்லைப் பொறுக்கிக்குவோம். அரிவாளை வச்சும் தட்டிக்குவோம். Safety முக்கியம். மண்ணைக் கிளரும் போது எப்ப வாணாலும் பாம்பு வரலாம். நிறைய பாம்பு அடிச்சு (வெட்டி)இருக்கேன்.

ஒவ்வொருவரும் ஒரு பகுதியைப் பிரிச்சிக்குவோம். கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து எல்லாத்தையும் ஒரு இடத்தில் ஒண்ணா சேர்க்கனும். கடைசியில் நீளமான ஏதாவது குச்சி வைச்சு சேர்த்ததை அடிக்கனும். மிச்ச மீதி இருக்கும் மண்ணும் உதிர்ந்து விடும். இனி இதை எல்லாம் மொத்தமாக சாக்கில் இறுக்கமாக திணிக்க வேண்டும்.

எல்லாரும் சாக்கு கட்டி முடிந்ததும் அருகில் இருக்கும் கிணற்றடிக்கு போவோம். கிணறுகளில் பம்ப் செட் மூலமே தண்ணீர் இறைப்பார்கள். அந்த தண்ணீர் விழ ஒரு தொட்டியும் கட்டி வைத்திருப்பார்கள். அதற்கருகில் சென்று எல்லாரும் கூட்டாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.

பழைய சோறு..+ ஊறுகாய் தொட்டுக்க.. சில நேரங்களில் புளியம்பழம் பிடுங்கி வச்சுக்குவோம். செம காம்பினேசன்... அந்த சுவை உலகில் வேற எல்லா டிஷ்ஷிலும் வரவில்லை...:( பழைய சோற்றில் தண்ணீரை ஊற்றி சாப்பிடும் போது அந்த ஈரக் கையால் ஊறுகாயைத் தொட்டு சாப்பிடும் போது... இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே. இன்பத்தில் ஆடுது என் மனமே என்று பாட்டு கிளம்பும்.

காலை வேலை என்பதால் பெரும்பாலும் பம்ப் செட் ஓடும். அதில் இருந்து தண்ணீர் மொண்டு குடித்துக் கொள்வோம். பம்ப் செட் ஓடவில்லையெனில் தொட்டியில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் குடிப்போம். தொட்டி பாசியாலும், செத்தை, சருகுகளாலும் கிடக்கும். அவைகளை விலக்கிவிட்டு தண்ணீர் மொண்டுகுடிக்க வேண்டும். அப்போது தண்ணீரைப் பற்றி ஏதும் குறைவாக சொன்னால் பாட்டி திட்டும். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே! என்று

பம்ப் செட் ஓடினால் ஒரு குளியலும் உண்டு.. அதுவும் செம ஜாலியா இருக்கும். இதெல்லாம் முடிந்தததும் சாக்கு மூட்டையை தலைக்கு ஏற்றி விடும் வைபவம். எங்க தாத்தா தான் எல்லாருக்கும் ஏற்றி வைப்பார்கள். பழைய துணியை வாகாக சுற்றி தலையில் வைக்க வேண்டும். கரும்புத் தட்டை இடக்கு முடக்காக இருக்கும் என்பதால் தலையில் நல்லாவே குத்தும். கடைசியில் தாத்தா தனது சுமையை தானே எடுத்துத் தனது தலையில் வைத்துக் கொள்வார்கள். (Greatest Man)

பாதை எல்லாருக்கும் தெரியும் என்பதால் ஒவ்வொருவராக கிளம்பி விடுவோம். தாத்தா பாட்டி கடைசியில் வருவார்கள். பொறுக்கிய கரும்புத் தட்டை ஈரமாகவோ, மண்ணுடனோ இருந்தால் அதோ கதி தான். வெயிட் அதிகமாகி கழுத்து அமுங்கி விடும். அதே போல் சாக்கு இறுக்கமாக திணிக்கப்படவில்லை என்றால் நடுவில் பள்ளம் விழுந்து முன்னும் பின்னும் மூட்டை இரண்டு பகுதியாகி விடும். சில நேரம் வெயிட் தாங்க முடியாம இடையில் மூட்டையை போட்டுடுவேன். அழுகை அழுகையா வரும்.

வரும் போது இடையில் எந்த ஸ்டாப்பும் கிடையாது. போகும் போது பாரம் இருக்கும் என்பதால் இரண்டு மூன்று ஸ்டாப்பிங் இருக்கும். முன்னால் போகின்றவர்கள் அந்தந்த ஸ்டாப்பிங்கில் சுமையை கீழே வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பார்கள். அனைவரும் வந்து சேர்ந்ததும் சிறிது நேரம் அரட்டை. புளியம்பழம் பறிப்பு நடக்கும். அது முடிந்ததும் மீண்டும் பயணம்.

ஸ்டப்பிங்களில் ஒன்று சுக்குமல்லி காப்பிக் கடை. காட்டுக்கு போய் வருபவர்களுக்காக அந்த கடை. சுக்கு மல்லி காப்பி செம டேஸ்ட்டாக இருக்கும். உடம்புக்கும் நல்லது. ஒரு காப்பி 25 பைசா. அதோடு பத்து பைசாவுக்கு ஒரு வருக்கி. (சென்னை மொழியில் பொறை). காப்பியை வாங்கி வருக்கியை முக்கி சாப்பிடும் போது அட அட அடடா என்னமா இருக்கும் தெரியுமா? சூப்பரோ சூப்பர்.

சமீபத்தில் சுக்கு மல்லி காப்பி ஆசையில் காட்டுப் பக்கம் போனேன். வடை, போண்டா தான் இருக்கிறது. வருக்கி இல்லை. பாலில் டீ டிகாசன் கலந்து போடுகிறார்கள். சுக்கு மல்லி காப்பி கேட்டால் அதெல்லாம் அந்த காலம் என்கிறார்கள்... எவ்வளவு மாற்றங்கள்.

சுமையை வீட்டுக்குள் கொண்டு வர மாட்டோம். அப்படியே வெளியே வீட்டுக்கு முன் கொட்டி விடுவோம். ஈரமாக இருப்பது எல்லாம் காயும். மண்ணும் உதிரும். இப்ப எல்லாம் தெருவில் இதெல்லாம் காண முடிவதில்லை. எங்கள் வீடுகளில் விறகு அடுப்பே இல்லை. ஒன்லி கேஸ் பயன்பாடு தான்.

என்ன கதை நல்லா கேட்டீங்களா? கதை முடிஞ்சு போச்சு. இனி வேகமா கிளம்பி ஸ்கூலுக்கு போகனும். ஏற்கனவே ஒம்போது மணி ஆகிப் போச்சு. லேட்டா போன டீச்சர் திட்டுவாங்கல்ல... இல்லைன்னா எங்க தாத்தாவை துணைக்கு கூப்பிட்டுக் கொண்டு போய் சமாளிக்கனும்.... சரி சரி நீங்க போறதுக்கு முன்னாடி கமெண்டும், தமிழ் மணத்தில் ஓட்டும் போட்டுட்டு போங்க...:)))


கேண்டீனில் இருந்து சில படங்கள்!




39 comments:

கிரி said...

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்

Thamiz Priyan said...

பதிவு ரொம்ப நீளமா போச்சோ... சாரி மக்கா!

ஆயில்யன் said...

நல்லா இருக்குப்பா!

எங்க பாட்டியும் இது மாதிரி தண்ணீர் சாதம் போன்ற விசயங்களுக்கு சொல்லியிருக்காங்க பட் அப்ப அலட்சியமா இருந்து இங்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பட்ட கஷ்டங்களில்,பாட்டியின் சொன்ன வரிகளின் உண்மை வாழ்க்கையில் வாய்த்தது!

கிரி said...

//மரத்தூள் அடுப்பு தனியாக இருக்கும்.உருளையாக மேலே மட்டும் திறந்து இருக்கும். வட்டத்தின் ஒரு பக்கத்தில் சுமார் 4 இஞ்ச் அளாவில் ஒரு ஓட்டையும் இருக்கும்//

அப்படியா! இப்போது தான் கேள்விபடுகிறேன்

//பழைய சோறு..+ ஊறுகாய் தொட்டுக்க.. சில நேரங்களில் புளியம்பழம் பிடுங்கி வச்சுக்குவோம். செம காம்பினேசன்... //

இதையெல்லாம் நினைவுபடுத்தி மனுசனை டென்ஷன் பண்ணுறீங்க :-((

//தமிழ் மணத்தில் ஓட்டும் போட்டுட்டு போங்க...:)))//

போட்டாச்சு போட்டாச்சு

Unknown said...

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா :)))

//தமிழ் பிரியன் said...
பதிவு ரொம்ப நீளமா போச்சோ... சாரி மக்கா!//

என்னா ஒரு வில்லத்தனம்... ;))

Unknown said...

எங்க பாட்டி கூட சாதம் வேஸ்ட் பண்ணா திருவள்ளுவர் கதை சொல்லுவாங்க.. அவர் சாப்பிடும் பொது பக்கத்துலையே ஒரு ஊசி வெச்சிருப்பாராம் பருக்கை ஏதாவது கீழ விழுந்தா அத ஊசில குத்தி தண்ணில கழுவி மறுபடி சாப்பிடுவாராம்.. அது சொல்லும் போதெல்லாம் நான் சாதத்தோட அருமை உணரல.. அம்மா தான் சொல்லுவாங்க நீ கஷ்டப்படும் போது புரிஞ்சிப்பன்னு.. ஆனா எனக்கு கல்லூரி வரைக்கும் நல்ல வீட்டு சாப்பாடு அப்பறமும் படிச்சிட்டு இருக்கும் போதே வேலை கிடைச்சடுனால எனக்கு, நாம சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவோம்ன்னு தோனல... ஆனா நான் அத முதல் முதல்ல உணர்ந்தது என் ஹைதை ட்ரைனிங் பீரியட்ல தான்.. அங்க எங்க திரும்பினாலும் அசைவமா.. நமக்கு அது ஆகாதா.. ஒவ்வொரு நாளும் இரவு பட்டினி தான்.. பகல் சாப்பாட்ட ஆபீஸ்ல பார்த்துப்பேன்.. :((((((

நிஜமா நல்லவன் said...

/போகும் வழியில் ஒரு பெட்டிக் கடையில் 10 பைசாவுக்கு கண் மார்க் பட்டை ஊறுகாய் வாங்கிக்குவோம்./

அண்ணே அப்பவே பட்டை_________ எல்லாம் உண்டா???இதெல்லாம் ரொம்பவே ஓவர்...:)

cheena (சீனா) said...

ஆகா - அருமை அருமை - எல்லோருமே கொசுவத்தி சுத்த வைக்கிறீங்க - தூக்குச்சட்டிலே பழையது - ஊறுகா - நீராகாரம் - கடுமையான உழைப்பு - 10 பைசா 25 பைசா - காசின் அருமை - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - பாட்டி - தாத்தா - ம்ம்ம்ம்

அக்காலம் வேண்டின் வருமோ ?

நல்லாருக்கு தமிழ் பிரியன்

ஆமா தியாகத்திருந்நாள் இல்லையா பக்ரீத்னா ? ஈகைத்திருநாள் ரம்சான் இல்லையா - நான் கொளம்பி இருக்கேன்

திருநாள் நல்வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

காலை வேலை என்பதால் பெரும்பாலும் பம்ப் செட் ஓடும். அதில் இருந்து தண்ணீர் மொண்டு குடித்துக் கொள்வோம். பம்ப் செட் ஓடவில்லையெனில் தொட்டியில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் குடிப்போம். தொட்டி பாசியாலும், செத்தை, சருகுகளாலும் கிடக்கும். அவைகளை விலக்கிவிட்டு தண்ணீர் மொண்டுகுடிக்க வேண்டும். அப்போது தண்ணீரைப் பாட்டி ஏதும் குறைவாக சொன்னால் பாட்டி திட்டும். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே! என்று

நினைவுகளின் தொகுப்பு அருமை

Anonymous said...

"மரத்தூள் அடுப்பு" சின்ன வயசுல இதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். என்ன ஒரு டெக்னிக்! மரத்தூள் இடிக்கிறது எனக்கு பிடித்த வேலை. கோலி சோடா பாட்டில் ஒன்னு நடுவுல வைத்து அதை சுற்றி இருக்காம மரத்தூளை அடிப்போம். ஒரே ஒரு மொத்தமான சவுக்கு கட்டை வைத்துவிட்டால் நின்னு நிதானமா எரியும். ஆவில வேகவைக்கிற எல்லா ஐட்டம் இதில் சமைக்கலாம் (இட்லி, கொழுக்கட்டை). மழை நாளில் விறகு காயாமல் ஈராமாக இருக்கும் அப்போ இதுதான் தீர்வு. கூடவே ஒரு சிம்னி விளக்கு (கிரேப் வாட்டர் பாட்டில் மூடில ஓட்டை போட்டு திரிவைத்து மண்ணெண்ணெய் ஊற்றி ஏற்றணும்) வைத்துக்கொண்டு பாட்டி சமைக்கும் கட்சி ஒரு திகிலுடன் பார்க்க நல்லா இருக்கும். பதிவு போட்டு நல்லா கொசுவத்தி போட வச்சிடீங்க அண்ணா. மலரும் நினைவுகள். லேசான புகைச்சல் வாசனையுடன் அன்று சாப்பிட ஒரு சாதரண உணவின் ருசி இன்று ஸ்டார் ஹோட்டல் ல கூட கிடைப்பது இல்லை.

Anonymous said...

பம்ப் செட் குளியல், பழைய சோறு ஊறுகாய், பச்சை வெங்காயம், எல்லாம் மறக்க முடியலை அண்ணா.

Anonymous said...

//விடிகாலைல கிளம்புவோம். ஒரு அரிவாள்,ஒரு யூரியா சாக்கு, ஒரு பழைய துணி, கொஞ்சம் சரடு, ஒரு தூக்கு வாளி அதில் நேற்று மிச்சமான பழைய சோறு. இது தான் நம்ம தொழில் கருவிகள். அதோட ஒவ்வொரு டிரிப்புக்கும் நமக்கு கமிஷன் 50 பைசா கிடைக்கும்.//

"தொழில் கருவிகள்" நலல பதம் அண்ணா.

துளசி கோபால் said...

நல்ல பதிவு. பழைய கால நினைவுகள் ஒவ்வொன்னும் ஒரு சுவை.

ரசித்தேன்.

ஈகைத் திருநாள் வாழ்த்து(க்)கள்.

//தண்ணீரைப் பாட்டி ஏதும் குறைவாக சொன்னால் பாட்டி திட்டும். //

தண்ணீரைப் பற்றி ஏதும்......

இப்படி இருக்கணும்.

சந்தனமுல்லை said...

ம்ம்..சுவாரசியம். செம கொசுவத்தி போல! அப்புறம் எங்க பாட்டி சொன்னது சாப்பாடு வீணாக்காதே, அப்புறம் சாப்பாட்டுக்கு கஷ்டப்ப்டுவே-ன்ன்னு! ஆ, அப்ப்டில்லாம் ஆகாதுன்னு ரொம்ப இறுமாப்பா இருந்தா, ஹாஸ்டல் போனப்பதான் தெரிஞ்சுது..சாப்பாட்டுக்கு கஷ்ட்டப் பட்டது. சாப்பாடு இருக்கும், ஆனா சாப்பிடத்தான் முடியாது! :-)

சந்தனமுல்லை said...

//ஆமா தியாகத்திருந்நாள் இல்லையா பக்ரீத்னா ? ஈகைத்திருநாள் ரம்சான் இல்லையா - நான் கொளம்பி இருக்கேன்//

இன்னைக்கு எல்லாருக்கும் ஈந்து வாழணும், அதாவது நாலு பேருக்கு நாம் கொடுக்கணும்-கறதுதான் ஈகைபெருநாளா தமிழ் பிரியன்?
எங்க வீட்டுக்கு நிறைய பேக்டு மீட் வரும்..கொஞ்ச நாள் கழிச்சு எல்லார் மாடி, பால்கணியில உப்புகண்டம் தொங்கும்!!

Anonymous said...

//Safety முக்கியம்//

:)

ராஜ நடராஜன் said...

//மரத்தூள் அடுப்பு தனியாக இருக்கும்.உருளையாக மேலே மட்டும் திறந்து இருக்கும். வட்டத்தின் ஒரு பக்கத்தில் சுமார் 4 இஞ்ச் அளாவில் ஒரு ஓட்டையும் இருக்கும்//

கிரி கூட சேர்ந்து நானும் ஒரு அறியாமை போட்டுக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

பக்ரீத் வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.

ராஜ நடராஜன் said...

காஞ்ச வாழை மட்டை ஊறுகாய் எங்கிருந்து வ்ருதுன்னு யாரு பார்க்கிறா?கஞ்சி ஒரு மொடக்கு,ஊறுகாய ஒரு நக்கு அவ்வளவுதான் நம்ம கவனமே.இப்ப யோசிக்கும் போது கண்ணதாசன் கவிதை காற்று வந்ததால் கொடி அசைந்ததாங்கிற மாதிரி ஊறுகாயத் தாளிச்சு வைக்கிறதால அந்த மணமா அல்லது வாழை மட்டைக்குள்ள முடங்கிக் கிடக்கிறதால அந்த ருசியா?

கானா பிரபா said...

புனித ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் தல

பதிவு கலக்கலான விருந்து

நட்புடன் ஜமால் said...

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

\\Blogger சந்தனமுல்லை said...

//ஆமா தியாகத்திருந்நாள் இல்லையா பக்ரீத்னா ? ஈகைத்திருநாள் ரம்சான் இல்லையா - நான் கொளம்பி இருக்கேன்//\\

இது தியாகத்திருநாள் தான் சந்தனமுல்லை.

வால்பையன் said...

வாழ்த்துக்கள் அண்ணே!
இங்க இருந்தாலாவது பிரியாணி கேக்கலாம், கடல் தாண்டி இருக்கிகிகலே!
இந்தியா வரும் போது எல்லோத்துக்கும் சேர்த்து வசூல் பண்ணிடலாம்

வால்பையன் said...

தாயையும் பழிக்க வேணாம்.
தண்ணியையும் பழிக்க வேணாம்.

Anonymous said...

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள். படிக்க ரொம்ப நல்லா இருந்தது.

Joe said...

பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.
உங்களது அனுபவங்கள் படிப்பதற்கு சுவையாக இருந்தன.

ராமலக்ஷ்மி said...

உங்கள் மலரும் நினைவுகளை அப்படியே எங்கள் மனத்திரையில் மலர வைத்து விட்டீர்கள். வெகு அருமை.

சுக்கமல்லிக் காப்பி இப்பவும் திருநெல்வேலியில் சில இடங்களில் கிடைக்கிறது. வீட்டிலேயே செய்தும் கொள்ளலாம். ஆனா கடையில் அவர்கள் போடுவதன் சுவையே தனிதான்.ம்ம்ம்.

விருந்து பலம்தான் போலிருக்கிறது. பிரியாணிக்கு க்ரேவி இருக்கிறதா உங்களுக்கு என முதலில் கவனித்தேன். இருந்தது:)))!

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் பண்டிகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

நானானி said...

ஈத் மொபாரக்!!தமிழ்பிரியன்!!
நல்ல..நல்ல நினைவுகள்!!
மரத்தூள் அடுப்பு!!அம்மா காலத்தில் இருந்தது.தூக்குச்சட்டிய தூக்கிக்கிட்டு..அதில் பழைய சோத்த அடச்சிக்கிட்டு...ஊறுகாய தொட்டுக்கிட்டு...அந்த ருசி நானும் அறிவேன்.பம்ப் செட் தண்ணி அதனருகே சாப்பாடு, முடிந்தால் குளியல்!!நினைவுகள் எங்கெங்கோ போவுதே!!எங்க மாமா கருசக்காட்டு
வயலுக்கு எங்க எல்லாரையும் அவரது ஜீப்பில் அள்ளீப் போட்டுக் கொண்டு போவார். அங்கு வெள்ளரிக்கா பறிச்சு தின்னது பம்ப் செட்டில் குளித்தது என்று தலைக்கு மேலே வளையம் சுத்துது, தமிழ்!
பண்டிகை விருந்துக்கு பிரியாணியோடு தொட்டுக்க என்ன சைட் டிஷ் கிடைத்தது? அதை சொல்லவேயில்லையே?
வாழ்த்துக்களோடு ஆசிகளும்
நானானி

நானானி said...

சுக்குமல்லி காபி! இன்றும் நான் ஊருக்குப் போனால் சரியாக ஏழு மணிக்கு மதனி எனக்காக வாங்கி வைத்துவிடுவார்கள்! அம்புட்டு ருசியாயிருக்கும்..காரமும் இனிப்பும் அளவாக...பன்னீர் மாதிரி!!
வீட்டிலும் செய்வேன். ஆனால் அந்த சுவை இருக்காது!!

கபீஷ் said...

பக்ரீத் வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.

அன்புடன் அருணா said...

விடியலில் எழுந்து 5 கி.மீ தூரம் நடந்து கரும்புத் தட்டை பொறுக்கி,புளியம்பழம் பொறுக்கி,சாப்பிட்டு,குளித்து,ரெண்டு மூணு ஸ்டாப் இளைப்பாறி ......ம்ம்ம்ம் ஸ்கூலுக்கும் போயி....ரொம்பக் கடுமையான் உழைப்புத்தான்...
அன்புடன் அருணா

சின்னப் பையன் said...

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்...

Anonymous said...

நல்ல கொசுவர்த்தி சுத்தவச்சுட்டீங்க தமிழ். நாங்க தப்புக்கடல பொறுக்குவோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க வீட்டுல நான் பிறந்தப்ப உமி அடுப்பெல்லாம் இருந்ததாம்.. கேஸ் வந்தப்பறம் கூட வெந்நீருக்கு சரட்டை எல்லாம் வச்சு எரிப்பாங்க..

பழய நினைவுகள் நன்றாக சுவாரசியமா இருக்கு.. இதற்குத்தானா அந்த இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ஸ்டேட்டஸ்..:)

Sumathi. said...

ஹாய் ஜின்னா,

//ஒரு வருக்கி. (சென்னை மொழியில் பொறை..//

ஆமாம், நான் கூட பாத்துருக்கேன், சின்ன வயசுல,, ஆனா சாப்பிடத் தான் 144.

Sumathi. said...

ஹாய்,

//மரத்தூள் அடுப்பு வித்தியாசமானது. //

ஆமம், எங்க வீட்டுல கூட நாங்க சின்ன பசங்களா இருந்தப்போ எங்க அம்மா குளிக்க சுடு தண்ணிக்கு உபயோகிச்சுருக்காங்க, நான் பாத்து இருக்கேன். ராத்தியிலேயே தூளை அடைச்சு வைப்பாங்க ஞாபகம் இருக்கு.

Thamira said...

அருமையான நினைவலைகள், ரசித்தேன்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான நினைவலைகள், வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

வலைச்சரம் மூலமா கண்டேன் இப்பதிவை. சுவாரசியம். இந்த மாதிரிலாம் கஷ்டப்பட்டதில்லை. என்றாலும், பம்புசெட், விறகடுப்பு, பழைய சோறு-ஊறுகாய் அனுபவங்கள் கண்டவள் என்பதால் அதன் அருமையை உணர்கிறேன்.

இப்பவும், அமீரகத்தில், வெயில் காலங்களில் பழைய சோறு + ஊறுகாய் சாப்பிடுவதுண்டு.

போல, ஊரில் அம்மா இப்பவும் விட்டிலிருக்கும் விறகடுப்பில் ஆக்கினால்தான் சோறு ருசியா இருக்கும்னு எப்பவாவது செய்வதுண்டு. ஆனா, நாங்கல்லாம் வீட்டை புகைமூட்டமா ஆக்கிடுரியேன்னு சத்தம் போடுவோம்.. ஹி.. ஹி..