இன்று இந்தியாவில் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
நேற்றே இங்கு (வளைகுடா) பக்ரீத் கொண்டாடப்பட்டு விட்டது. ஊரில் இருந்தால் பிரியாணி இருக்கும். இங்கு கேண்டினில் கிடைத்த சாப்பாடு தான். படம் போட்டுள்ளேன் பார்த்துக்கலாம். நிறைய ஐட்டங்களை சாப்பிட இயலாது என்பதால் எடுக்கவில்லை.

எங்கள் ஊரில் முன்பெல்லாம் சமையல் செய்ய விறகு அடுப்பு தான் உபயோகத்தில் இருந்தது. சமையல் எரிவாயு இருந்தால் அது வசதியானவர்கள் வீடு. அவர்களும் சமையலுக்கு மட்டும் தான் அதைப் பயன்படுத்துவார்கள். வெந்நீர் போடுவது போன்ற பிற உபயோகங்களுக்கு விறகு தான். எங்கள் வீட்டில் விறகு அடுப்பு மற்றும் மரத்தூள் அடுப்பு இரண்டும் இருக்கும்.
மரத்தூள் அடுப்பு வித்தியாசமானது. மர அறுவை மில்களில் மரங்களை அறுக்கும் போது தூள் கொட்டும். அதை மூட்டைகளில் வாங்கி வருவோம். மரத்தூள் அடுப்பு தனியாக இருக்கும்.உருளையாக மேலே மட்டும் திறந்து இருக்கும். வட்டத்தின் ஒரு பக்கத்தில் சுமார் 4 இஞ்ச் அளாவில் ஒரு ஓட்டையும் இருக்கும்.
இந்த ஓட்டையை துணியால் சிறிது தூரம் அடைத்து, உருளைக்குள் ஒரு குச்சியை வைத்து அதை சுற்றி மரத்தூளை இறுக்கமாக அடைப்பார்கள். இப்போது துணி, மற்றும் குச்சியை எடுத்து விட்டால் மரத்தூள் அடுப்பு தயார்.
மேலே பாத்திரத்தை வைத்து விட்டு கீழே உள்ள ஓட்டை வழியாக தீ எரிப்பார்கள். எரிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் வேகமாக தள்ளினால் மரத்தூள் அமைப்பு கீழே விழுந்து விடும். இதில் சோறு பொங்க மட்டும் செய்வோம்.
சரி இதை விடுவோம். இது தவிர விறகு அடுப்பும் இருக்கும். விறகு விலைக்கு வாங்கி கட்டுபடியாகாது என்பதால் இன்னும் சில எரி பொருட்களும் பயன்படுத்தப்படும். குறிப்பாக தேங்காய் மட்டை, கரும்பு அடித்தட்டை போன்றவை. தேங்காய் மட்டை தெரியும். அதென்ன கரும்புத்தட்டை? இன்னைக்கு பதிவே அதுதான்.
எங்கள் பகுதியில் கரும்பு நிறைய விளைவிக்கப்படும். வெல்லத்திற்கு நல்ல மார்க்கெட்டிங் இருந்ததால் கரும்புத் தோட்டத்திலேயே வெல்லம் காய்ச்சும் வசதியும் செய்து இருப்பார்கள். இதுதவிர வைகைஅணைக்கு அருகில் ஒரு சர்க்கரை ஆலையும் இருக்கிறது.
கரும்பை வெட்டும் போது அடியில் மண்ணுக்குள் இருக்கும் பகுதியை விட்டுவிட்டு மண்ணில் இருந்து சில இஞ்ச் விட்டுவிடுவார்கள். இந்த மண்ணில் இருக்கும் மீதம் இன்னொரு தடவை கரும்பாக வளரும். இரண்டாம் முறையும் அதே போல் வெட்டி விட்டு, நிலத்தை நன்றாக உழுது போட்டு விடுவார்கள். டிராக்டர் கொண்டு உழும் போது அடியில் இருக்கும் கரும்பின் வேர்ப்பகுதி வெளியே வந்து விடும்.
இந்த நிலத்தை சில நாட்கள் அப்படியே காயப்போட்டு விடுவார்கள். இந்த காலத்தில் மண்ணில் இருந்து வெளியே கிடக்கும் வேர்ப்பகுதி காயத் துவங்கி விடும். இந்த வேர்ப்பகுதி சுமார் அரை அடியில் இருந்து ஒரு அடி வரை இருக்கும். இதைத் தான் நாங்கள் கரும்புத் தட்டை என்று சொல்வோம். இதை எடுத்துக் கொண்டு வந்து விறகு போல் பயன்படுத்தலாம். நன்றாக நின்று எரியும்.
விறகு விலை கட்டுபடி ஆகலைன்னு தான் கரும்புதட்டை. அதையும் விலைக்கு வாங்க முடியுமா? அதைக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு நம்மோடது. எங்க தாத்தா, பாட்டி விறகுக்கு போவாங்க..... இந்த கரும்புதட்டையும் பொறுக்கி கொண்டு வந்து விப்பாங்க. அப்ப நானு, எங்க பெரியப்பா மகன்கள், அத்தை மகன் எல்லாம் போவோம்.
விடிகாலைல கிளம்புவோம். ஒரு அரிவாள்,ஒரு யூரியா சாக்கு, ஒரு பழைய துணி, கொஞ்சம் சரடு, ஒரு தூக்கு வாளி அதில் நேற்று மிச்சமான பழைய சோறு. இது தான் நம்ம தொழில் கருவிகள். அதோட ஒவ்வொரு டிரிப்புக்கும் நமக்கு கமிஷன் 50 பைசா கிடைக்கும்.
போகும் வழியில் ஒரு பெட்டிக் கடையில் 10 பைசாவுக்கு கண் மார்க் பட்டை ஊறுகாய் வாங்கிக்குவோம். ஒரு காய்ந்த இலையில் ஊறுகாயை மடித்து வைத்திருப்பார்கள். உசிலம்பட்டியில் இருந்து வருவது கண் மார்க் ஊறுகாய். உசிலம்பட்டி சிசுப் படுகொலை, வெட்டு,குத்துக்கு அப்புறம் இந்த ஊறுகாயால் பெயர் பெற்றது. (தமிழ் பிரியனின் அம்மாவோட ஊரு வேற..)
சுமார் 3 முதல் 5 கி.மீ தூரம் நடக்கனும். வெயில் வருவதற்கு முன்னாடி கரும்புத் தோட்டத்துக்கு போய்டுவோம். அப்புறம் சோத்து வாளியை எங்காவது வச்சுட்டு கரும்புத் தட்டைப் பொறுக்கனும். அதில் நிறைய டெக்னிக் இருக்கு. நல்லா காய்ஞ்சதா எடுக்கனும். அதே நேரம் இத்துப் போயும் இருக்கக் கூடாது. கரும்புத் தட்டையில் இருந்து மண்ணை நல்லா தட்டனும். அதுக்கு அங்கவே ஏதாவது ஒரு கல்லைப் பொறுக்கிக்குவோம். அரிவாளை வச்சும் தட்டிக்குவோம். Safety முக்கியம். மண்ணைக் கிளரும் போது எப்ப வாணாலும் பாம்பு வரலாம். நிறைய பாம்பு அடிச்சு (வெட்டி)இருக்கேன்.
ஒவ்வொருவரும் ஒரு பகுதியைப் பிரிச்சிக்குவோம். கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து எல்லாத்தையும் ஒரு இடத்தில் ஒண்ணா சேர்க்கனும். கடைசியில் நீளமான ஏதாவது குச்சி வைச்சு சேர்த்ததை அடிக்கனும். மிச்ச மீதி இருக்கும் மண்ணும் உதிர்ந்து விடும். இனி இதை எல்லாம் மொத்தமாக சாக்கில் இறுக்கமாக திணிக்க வேண்டும்.
எல்லாரும் சாக்கு கட்டி முடிந்ததும் அருகில் இருக்கும் கிணற்றடிக்கு போவோம். கிணறுகளில் பம்ப் செட் மூலமே தண்ணீர் இறைப்பார்கள். அந்த தண்ணீர் விழ ஒரு தொட்டியும் கட்டி வைத்திருப்பார்கள். அதற்கருகில் சென்று எல்லாரும் கூட்டாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.
பழைய சோறு..+ ஊறுகாய் தொட்டுக்க.. சில நேரங்களில் புளியம்பழம் பிடுங்கி வச்சுக்குவோம். செம காம்பினேசன்... அந்த சுவை உலகில் வேற எல்லா டிஷ்ஷிலும் வரவில்லை...:( பழைய சோற்றில் தண்ணீரை ஊற்றி சாப்பிடும் போது அந்த ஈரக் கையால் ஊறுகாயைத் தொட்டு சாப்பிடும் போது... இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே. இன்பத்தில் ஆடுது என் மனமே என்று பாட்டு கிளம்பும்.
காலை வேலை என்பதால் பெரும்பாலும் பம்ப் செட் ஓடும். அதில் இருந்து தண்ணீர் மொண்டு குடித்துக் கொள்வோம். பம்ப் செட் ஓடவில்லையெனில் தொட்டியில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் குடிப்போம். தொட்டி பாசியாலும், செத்தை, சருகுகளாலும் கிடக்கும். அவைகளை விலக்கிவிட்டு தண்ணீர் மொண்டுகுடிக்க வேண்டும். அப்போது தண்ணீரைப் பற்றி ஏதும் குறைவாக சொன்னால் பாட்டி திட்டும்.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே! என்று
பம்ப் செட் ஓடினால் ஒரு குளியலும் உண்டு.. அதுவும் செம ஜாலியா இருக்கும். இதெல்லாம் முடிந்தததும் சாக்கு மூட்டையை தலைக்கு ஏற்றி விடும் வைபவம். எங்க தாத்தா தான் எல்லாருக்கும் ஏற்றி வைப்பார்கள். பழைய துணியை வாகாக சுற்றி தலையில் வைக்க வேண்டும். கரும்புத் தட்டை இடக்கு முடக்காக இருக்கும் என்பதால் தலையில் நல்லாவே குத்தும். கடைசியில் தாத்தா தனது சுமையை தானே எடுத்துத் தனது தலையில் வைத்துக் கொள்வார்கள். (Greatest Man)
பாதை எல்லாருக்கும் தெரியும் என்பதால் ஒவ்வொருவராக கிளம்பி விடுவோம். தாத்தா பாட்டி கடைசியில் வருவார்கள். பொறுக்கிய கரும்புத் தட்டை ஈரமாகவோ, மண்ணுடனோ இருந்தால் அதோ கதி தான். வெயிட் அதிகமாகி கழுத்து அமுங்கி விடும். அதே போல் சாக்கு இறுக்கமாக திணிக்கப்படவில்லை என்றால் நடுவில் பள்ளம் விழுந்து முன்னும் பின்னும் மூட்டை இரண்டு பகுதியாகி விடும். சில நேரம் வெயிட் தாங்க முடியாம இடையில் மூட்டையை போட்டுடுவேன். அழுகை அழுகையா வரும்.
வரும் போது இடையில் எந்த ஸ்டாப்பும் கிடையாது. போகும் போது பாரம் இருக்கும் என்பதால் இரண்டு மூன்று ஸ்டாப்பிங் இருக்கும். முன்னால் போகின்றவர்கள் அந்தந்த ஸ்டாப்பிங்கில் சுமையை கீழே வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பார்கள். அனைவரும் வந்து சேர்ந்ததும் சிறிது நேரம் அரட்டை. புளியம்பழம் பறிப்பு நடக்கும். அது முடிந்ததும் மீண்டும் பயணம்.
ஸ்டப்பிங்களில் ஒன்று சுக்குமல்லி காப்பிக் கடை. காட்டுக்கு போய் வருபவர்களுக்காக அந்த கடை. சுக்கு மல்லி காப்பி செம டேஸ்ட்டாக இருக்கும். உடம்புக்கும் நல்லது. ஒரு காப்பி 25 பைசா. அதோடு பத்து பைசாவுக்கு ஒரு வருக்கி. (சென்னை மொழியில் பொறை). காப்பியை வாங்கி வருக்கியை முக்கி சாப்பிடும் போது அட அட அடடா என்னமா இருக்கும் தெரியுமா? சூப்பரோ சூப்பர்.
சமீபத்தில் சுக்கு மல்லி காப்பி ஆசையில் காட்டுப் பக்கம் போனேன். வடை, போண்டா தான் இருக்கிறது. வருக்கி இல்லை. பாலில் டீ டிகாசன் கலந்து போடுகிறார்கள். சுக்கு மல்லி காப்பி கேட்டால் அதெல்லாம் அந்த காலம் என்கிறார்கள்... எவ்வளவு மாற்றங்கள்.
சுமையை வீட்டுக்குள் கொண்டு வர மாட்டோம். அப்படியே வெளியே வீட்டுக்கு முன் கொட்டி விடுவோம். ஈரமாக இருப்பது எல்லாம் காயும். மண்ணும் உதிரும். இப்ப எல்லாம் தெருவில் இதெல்லாம் காண முடிவதில்லை. எங்கள் வீடுகளில் விறகு அடுப்பே இல்லை. ஒன்லி கேஸ் பயன்பாடு தான்.
என்ன கதை நல்லா கேட்டீங்களா? கதை முடிஞ்சு போச்சு. இனி வேகமா கிளம்பி ஸ்கூலுக்கு போகனும். ஏற்கனவே ஒம்போது மணி ஆகிப் போச்சு. லேட்டா போன டீச்சர் திட்டுவாங்கல்ல... இல்லைன்னா எங்க தாத்தாவை துணைக்கு கூப்பிட்டுக் கொண்டு போய் சமாளிக்கனும்.... சரி சரி நீங்க போறதுக்கு முன்னாடி கமெண்டும், தமிழ் மணத்தில் ஓட்டும் போட்டுட்டு போங்க...:)))
கேண்டீனில் இருந்து சில படங்கள்!


