டீன் ஏஜ் டைரிக் குறிப்பு எழுதலாம்ன்னு உட்கார்ந்தாச்சு.... ஆரம்பமே இடக்காத் தான் போச்சு... டீன் ஏஜ் என்பது எந்த வயதில் இருந்து எந்த வயது வரை என்பது சந்தேகமா போச்சு.. வழக்கம் போல் ஸ்டேடஸில் கேள்வியைப் போட்டால் பல பதில்கள் வந்தன. அதில் முத்துலக்ஷ்மி அக்காவிடம் கேட்டால் Thirteen முதல் Nineteen வரையாம்... காரணம். .. இவைகளுக்கு இடையில் மட்டும் தான் Teen வருதாம்... லாஜிக்.. சினிமாவைத் தவிர எல்லாத்துக்கும் லாஜிக் பார்ப்பவர்கள் தானே நாம்... :)
கூகுளாண்டவரிடம் கேட்ட போதும் அப்படியே சொன்னதால் அப்படியே எடுத்துக்கலாம். எனவே 13 முதல் 19 வரை... அந்த காலம் (இன்றும் கூட.. ) எனக்கு ஏனோ ஒரு தாழ்வு மனப்பான்மையிலும், சோகத்திலுமே கழிந்த காலம் எனலாம். டீன் ஏஜ் டைரி என்றே தலைப்பை வைத்ததால் என் டீன் ஏஜ் டைரி ஒன்றைப் பற்றி சொல்லனும். வெளிநாட்டுக்கு வரும் போது எனது டீன் ஏஜ் நினைவுகளாக பல பொருட்கள் ஒரு டிரங்க் பெட்டியில் போட்டு வைத்து விட்டு வந்தேன். எங்கள் வீட்டைப் புதுப்பித்து கட்டும் போது எல்லாவற்றையும் எங்க ஊர் ஆற்றில் விட்டு விட்டார்களாம். அதில் இருந்த பிக்ஃபன் டைரியும், அதில் இருந்த என் வசந்த கால நினைவுகளும் தண்ணீரில் போய் விட்டது. இன்று வரை அது குறித்து ஃபீலிங் இருக்கின்றது... அதற்குப் பிறகு டைரி எழுதும் வழக்கம் இல்லை. இப்போது ப்ளாக் தான் டைரியாகிப் போனது.

1994 - 10 ஆம் வகுப்பு படிக்கும் போது
என் டீன் ஏஜ் ஆரம்பமே அலப்பறையா தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆரம்பம் மட்டும் தான்... டவுசரில் இருந்து அப்ப தான் மாமா, அண்ணன்களின்பேண்ட்டுக்கு மாறிய காலம். செருப்பு போடாமல் போய் என் நண்பன் ரிச்சர்ட் வசம் திட்டு வாங்கும் நாட்கள்.. (இருந்தா போட மாட்டமா?)
என் டீன் ஏஜ் டைரி ரெண்டு பாகமா இருக்கு.. ஒன்று உணர்வு பூர்வமானது.. இன்னொரு பொருளாதார ரீதியில்.. ரெண்டாவதை கடைசியில் சுருக்கமா சொல்லிக்கலாம். முதலாவது மட்டும் இப்ப... என்ஜாய் செய்தேன் என்று சொல்லலாம்.
வீட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் ஸ்கூல்... நடந்தே போக வேண்டும். சைக்கிள் பத்தாம் வகுப்பில் கடைசியில் தான் வாங்கிக் கிடைத்தது. அதுவரை நடராஜா தான்.. அதுவும் ஒரு இன்பம்.. சைக்கிள் வந்த பிறகு அழிச்சாட்டியங்கள் அதிகமாயின. இரு சைக்கிள் நினைவு
பதிவுகள் 1,
2 . இன்னும் நினைவில் இருக்கும் சில விஷயங்கள். 9 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு மருத்துவரின் மகனான சக வகுப்பு தோழனுக்கு குழந்தை பிறப்பு பற்றி எடுத்த பாடங்கள் நினைவில் இருக்கு... ஹிஹிஹி... உடலுறவு, கருமுட்டை, கரு வளர்ச்சி, இதையெல்லாம் அப்பமே தெரிஞ்சு வச்சு இருந்து இருக்கோம்ல... ;-) ஆனா அந்த பழம் இதையெல்லாம் நம்பாதது பெரிய கூத்து.. அப்புறமா நம்பி இருக்கனும்.. ஏன்னா கல்யாணம் ஆகி அவனுக்கு குழந்தை இருக்கு.. முக்கியமா அவனை மாதிரியே பழமா... ;-))
சகட்டுமேனிக்கு பலரையும் சைட் அடித்துப் பழகவில்லை. பெண்கள் என்றாலே இன்று வரை ஒரு மரியாதை, ஒழுங்கு வைத்து இருக்கின்றேன். அதே போல் கலாய்க்கும் பழக்கமும் வரவில்லை. நிறைய நாட்கள் நூலகங்களில் கிடையாய் கிடப்பேன். தூண்டப்படாத தீபம்.
+1, +2 படிக்கும் போதே மாலையில்
பொரிகடலை கடையில் சென்று வியாபாரம் செய்ய.. ப்ராக்டீஸாம்... சைட் அடித்து கடலை போட வேண்டிய வயதில் கடலைக் கடையில் வேலை... விருப்பம் இல்லாமல் செய்ய துவங்கியதால் என்னவோ இன்று வரை பணம் சம்பாதிக்கும் விஷயத்தின் மீது ஒரு வெறுப்பு வர ஆரம்பித்தது. ஆனால் காலத்தில் கட்டாயம் பணம் இல்லையேல் உலகம் இல்லை என்பது போல் மக்களின் தன்மை மாறி விட்டது.
* பள்ளியைக் கட் அடித்து விட்டு சினிமாக்களுக்கு சென்றது
* பள்ளியைக் கட் அடித்து விட்டு அருவி, ஆறுகளில் குளிக்க சென்றது.
* வடுகபட்டிக்கு சைக்கிளில் சினிமாவுக்கு போய் சைக்கிள் ரிம் உடைந்து சைக்கிளை மூன்று பேர் சேர்ந்து தூக்கி வந்தது.
* தேனியில் போய் முதல் ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹைன் கெளன் பார்த்தது
* எதிர் வீட்டுப் பெண்ணின் காதலுக்கு தூது போனது
காதல்.. டீன் ஏஜியில் வரும் முக்கியமான வியாதி.. எனவே ஒன்பதாம் வகுப்பிலேயே காதல்(?) வந்து விட்டது. சொர்க்கத்தில் சேர இயலாத சொல்லாத காதல் அது. சகட்டுமேனிக்கு பலரையும் சைட் அடித்துப் பழகவில்லை. பெண்கள் என்றாலே இன்று வரை ஒரு மரியாதை, ஒழுங்கு வைத்து இருக்கின்றேன். காதல் என்றால் அவளிடம் மட்டும்... கடைசியாக +2 முடிவுகள் வந்த போது அவளைப் பார்த்தது. தான் கோவைக்கு அருகில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேரப் போவதாக சொன்னாள். என்னைப் பற்றிக் கேட்ட போது சஸ்பென்ஸ் என்று சொல்லி வைத்தேன். படிப்பை மூட்டை கட்டி விட்டு கடையில் வேலைக்கு போகப் போறேன் என்ற சொல்ல தன்மானம் தடுத்தது. அதுதான் அவளை இறுதியாக சந்தித்தது.
அந்த டீன் ஏஜ் நினைவில் தாக்கம் இன்று வரை விடவில்லை. சமீபத்தில் சென்ற வருட ஆரம்பத்தில் அவளின் கணவனுக்கும், அவளு(ர் விகுதி போட கை மறுக்கின்றது)க்கும் இடையே வந்த உளவியல் ரீதியான ஒரு சிறு மனமுறிவைப் பற்றி அறிந்த போது அன்றைய இரவு தூக்கம் குறைவாகி இருந்தது. ஆனாலும் அந்த பிரச்சினையின் உள்ளர்த்தம் அவள் மீதான அவளது கணவனின் அன்பின் மிகுதியே என (possessiveness) உணர்ந்த போது கொஞ்சம் திருப்தியாகவே இருந்தது.
+2 முடித்த பிறகு கடை... 17 வயது. ரெடிமேட் ஆடைகளுக்கான மூட்டையுடன் ஈரோட்டிலும், செருப்பு மூட்டைகளுடன் மதுரை நேதாஜி ரோட்டிலும் வலம் வந்த நாட்கள்... மகிழ்வைக் கொடுக்கவில்லையெனிலும் அதிகப்படியான அனுபவத்தையும், பொறுமையையும் கற்றுக் கொடுத்தது. அதற்கு அடுத்த வருடம்... சென்னை... TCS (Tata consultancy services)ல் வேலை... வெயிட்... வெயிட் பயப்பட வேண்டாம்.... தமிழ் ஹீரோவாக எல்லாம் மாறவில்லை. TCS அம்பத்தூரில் கட்டிட புதுப்பிப்பு பணியிலும், TCS சோழிங்கநல்லூரில் கட்டிட நிர்மாணப் பணியிலும் வேலை. வீட்டில் என் மீது இருக்கும் சோம்பேறி அல்லது உதவாக்கரை என்ற கருத்தாக்கம் உண்மையில்லை என்பதை நான் மட்டும் உணர்ந்து கொண்ட காலம்.
சென்னையில் தங்கி இருந்த காலங்களும் வசந்த காலங்கள் தான்... ஒரே அறையில் பத்து பேர் தங்கி இருந்தோம். ஒரே லூட்டி தான்.. வாரம் ஒரு சினிமா... அடிக்கடி மெரினா பீச்... ஹாஸ்டலில் யாருக்கும் தெரியாமல் நடந்த ஒரு நிகழ்ச்சி.. (எழுத இயலாதது).. அப்புறம் முக்கியமா ‘அந்த’ மாதிரி படம் பார்க்கனும்னு நண்பனின் வீட்டுக்கு போனால் அந்த பகுதியில் அன்று முழுவதும் கரண்ட் கட்... டென்சனின் போய் ஜெனரேட்டர் கொண்டாங்கடா என்று கத்தி கூப்பாடு போட்ட நண்பனை வலுக்காட்டயாமாக பஸ்ஸில் ஏற்றியது.
அத்தோடு என் டீன் ஏஜ் முடியவில்லை. அடுத்து 19 வது வயதில் ஸ்ஸ்ஸ்ஸ் பிளைட் பிடித்து துபாயில் இறங்கியாச்சு... துபாயில் வேலை எப்படி இருக்கும் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். எனக்கு மேலதிகாரி ஒரு மலையாளி... ஆரம்ப நாட்களில் வேலை சக்கையைப் பிழிந்து வாங்கி விடுவார். வடிவேலு சொல்வது போல் அதுக்கு அப்புறம் வலிக்கவே இல்லை என்பது போல், எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் புலம்பிக் கொண்டே முடிக்கும் வழக்கம் வந்து விட்டது.
நண்பர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லையென்றாலும் அதில் ரிச்சர்ட் (சென்னையில் IAS க்கு கடைசிகட்ட முயற்சியில் இருக்கிறான்), கோவிந்தராஜன் (கோவை கல்லூரியில் விரிவுரையாளர்), நாகூர் மீரான் (சென்னை - பூந்தமல்லி) முக்கியமானவர்கள். கொஞ்சமேனும் எனது உணர்வுகளை புரிந்து கொள்ளத்தக்கவர்கள்.
பொதுவான இடத்தில் பல சுவாரஸ்யமான சம்பங்களை சொல்ல இயல்வதில்லை. எல்லாவற்றையும் விரிவாக ஒவ்வொரு பதிவாக எழுதலாம்.. அம்பூட்டு மேட்டர் இருக்கு.
இதைத் தொடர சில நண்பர்களை அழைத்து இருக்கின்றேன். எழுதுங்க மக்களே.
.
.
.