Wednesday, July 23, 2008

சீறாப்புராணம் - இஸ்லாமிய இலக்கியமா? ஓர் ஆய்வு - 1

தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள இலக்கியங்களின் சுவை அலாதியானது. இவைகளை பொதுவாக இரண்டு வகைகளுக்குள் அடக்கி விடலாம். ஒன்று வாழ்வியல் சம்பந்தமானவை அதாவது வாழ்க்கை வரலாறு, காதல், போர், வீரம், புனைக்கதை வரலாறு இப்படி... இரண்டாவது பக்தி இலக்கியங்கள்.... பல்வேறு வகையான மத, சமயத்தின் கருத்துக்களையும், அதில் புனிதமானவர்களாக கருதப்படுபவர்களின் வரலாறு, கடவுள்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் பெருமைகள், அவர்கள் செய்த அற்புதங்கள் இப்படி பிரித்து விடலாம்.

தழிழில் பொதுவாக பக்தி இலக்கியங்களை இந்து மக்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்கின்றனர். சில இடங்களில் மட்டும் பக்தி சார்ந்தவை வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்படுகின்றது. அவைகளை விதிவிலக்காகக் கருதி விட்டு விடலாம். அதே போல் கிறித்தவ மதத்திலும் இவ்வாறான பக்தி இலக்கியங்கள் தமிழில் இருக்கின்றன. அவர்களின் பிரார்த்தனைகளிலும் அவைகள் பாடப்படுவதைக் காணலாம். இந்த வரிசையில் உலகில் உள்ள மதங்களில் முக்கிய இடத்தை வகிக்கும் இஸ்லாமும் வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு என்று தொழுகை, பிரார்த்தனை, இன்னபிற வணக்கங்களும் இருக்கின்றன.

தமிழில் இஸ்லாமிய பக்தி இலக்கியம் என்ற உடன் பாட நூல்களிலும் இலக்கிய ஆர்வலர்களாலும் சுட்டப்படுவது சீறாப்புராணம் தான். சீறாப்புராணம் ஒரு சிறந்த தமிழ் இலக்கியம் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அதை ஒரு இஸ்லாமிய இலக்கியமாக அல்லது இஸ்லாமிய வரலாற்றுக்கு மூலமாக பார்ப்பது தவறு.

முதலில் இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தி விடலாம். இஸ்லாமிய மார்க்கம் கவிதைகளுக்கு எதிரானது அல்ல. தனது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கவிதைகளை அது அனுமதிக்கவே செய்கின்றது. ஹிஜ்ரத் செய்தவர்கள் தமது சொந்த மண்ணிற்கு திரும்புவது எப்போது எனக் கவலையுடன் கவிதை படித்ததாக ஹதீஸ்களில் வருகின்றது. அதே போல் கவிதையில் இஸ்லாத்தை தூற்றியவர்களுக்கு கவிதையிலேயே ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) பதிலடி கொடுத்த சம்பவங்களும் கிடைக்கின்றன.

இரண்டாவது இஸ்லாம் அதிகப்படியான புகழுரைகளையும், முகஸ்துதிகளையும், உண்மைக்கு புறம்பான விடயங்களையும் கவிதை வடிப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

இஸ்லாத்தின் இருக்கக் கூடிய முக்கிய நம்பிக்கைகளில் முகமது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை வாழ்வில் கடைபிடிப்பதும் ஒன்று. அதன்படியே இஸ்லாமியர்கள் செயல்பட வேண்டும். எனவே இதில் பொய் கலந்து விடக்கூடாது. எனவே தான் ஹதீஸ் கலை வல்லுனர்கள் பலவிதங்களிலும் ஆராய்ந்து ஹதீஸ்களை தொகுக்கின்றனர். சீறாப்புராணம் என்பது இஸ்லாத்தின் கடைசித் தூதர் முகமது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நூலாகவே சொல்லப்படுகின்றது. அழகு தமிழில், மித மிஞ்சிய கற்பனைகளை கலந்து எழுதப்பட்டதே சீறாப்புராணம். இதில் நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் சில தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்து தமிழில் புனையப்பட்டுள்ளது, இதில் இடம்பெறும் தகவல்கள் அனைத்திலும் நம்பகத்தன்மை இல்லை. இதன் மூன்று காண்டங்களிலும் பார்த்தோமேயானால் சிறு செய்தியை மட்டுமே வைத்து அதை விவரிக்கும் நோக்கில் தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டுருப்பதைக் காண இயலுகின்றது. அவைகளை இங்கு விரிவாக காண்பதற்கு பதிவு போதாது என்றாலும் ஒரு சிறு உதாரணத்தை மட்டும் காட்டுகிறேன். நபிகளாரின் மகள் பாத்திமாவின் கணவர் பெயர் அலி (ரலி). இவர்களது திருமணம் நடந்த விதம் சம்பந்தமான வரலாற்று சான்றுகள் குறைவு. ஆனாலும் அதை விவரிக்க விரும்பிய உமறுப்புலவர் பாத்திமா திருமணப்படலத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். பாடலின் மூலத் தொகுப்பு

அந்தத் திருமணச் செய்தி மதீனா நகரெங்கும் முரசறைந்து அறிவிக்கப்படுகிறது! இதைச் செவியுற்ற மதீனா நகரத்து மக்கள் தங்கள் வீடுகளையும், மாடங்களையும் அலங்கரித்தார்கள்! தங்கள் வீடுகளின் சுவர்களில் கோலமிட்டார்கள்! ஒவியம் வரைந்தார்கள். தோரணம் கட்டினார்கள். பந்தல்கள் போட்டார்கள். அந்தப் பந்தல்களில் தொங்கவிடப்படாத பொருட்களே இல்லையாம்! தரை தெரியாத அளவுக்கு மலர்கள் தூவினார்கள். தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் அறுசுவை உணவுகளைச் சமைத்தார்கள். பெண்கள் புத்தாடை அணிந்து குயில் போல் பாடினார்களா! இளைஞர்கள் வீதிதோறும் வாழ்த்துப்பா பாடினார்களாம் முதியவர்கள் தெருத் தெருவாய் குர்ஆனை உரத்த குரலில் ஓதிக்கொண்டு வலம் வந்தனராம்! பின்னர் அலி(ரழி) அவர்கள் குதிரை மீது ஏறி பவனி வந்தார்கள். உலகத்தில் உள்ள எல்லா இசைக்கருவிகளும் வரவழைக்கப்பட்டு விண்ணும் மண்ணும் அதிர இசைக்கப்படுகிறதாம்! அலி(ரழி) அவர்களின் பேரழகை கன்னிப் பெண்கள் தம் கடைக்கண்களால் பருகினார்கள். அடைந்தால் இவரைப் போன்ற அழகரை அடைய வேண்டும்; இல்லாவிட்டால் செத்து மடிய வேண்டும் என்று எண்ணி ஏங்கினார்கள். இவருடைய அழகை பாத்திமா(ரழி) ஒருவர் தானா அடைய வேண்டும் என்று பொறாமைப்பட்டார்கள்.
பாத்திமா அவர்களுக்கு தாலி கட்டப்பட்டது என்றும், இந்த திருமணத்திற்கு வானவர்கள் வந்திருந்தனர் எனவும் சொல்லப்பட்டுள்ளது

இஸ்லாமியத் திருமணம் என்பது மிக எளிமையாக நடத்தப்பட வேண்டிய ஒன்று. அனைவருக்கும் முன்மாதிரியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபியவர்கள் இது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடவில்லை. பல நேரங்களில் வறுமையின் காரணமாக உணவின்றி கஷ்டப்பட்டுள்ளனர். இறக்கும் போது கூட தனது கவச உடையை அடமானத்தில் இருந்து மீட்க இயலாமலேயே மரணித்துள்ளார்கள். நபிகளாரின் வீட்டில் தொடர்ந்தார் போல் மூன்று தினங்களுக்கு அடுப்பு எரிந்தது இல்லை என அவரது துணைவியார் கூறுவதும் ஹதீஸ்களில் வந்துள்ளது. அதே போல் திருமணத்திற்கு தோரணங்கள், அலங்காரங்கள், தாலி போன்றவையும் அவர்களிடம் இருந்ததில்லை. இவைகள் வர்ணணைக்காக இருந்தாலும் முகமது நபி (ஸல்) அவர்களின் மீது பொய்யான விடயங்களை இட்டுக் கட்டி கூறுவதிலேயே அமையும். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
மேலும் நபிகள் கூறும் போது யார் வேண்டுமென்றே என் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி) .

இந்த காட்சி ஒரு உதாரணத்திற்கு மட்டுமே! இது போல் அனைத்து பகுதிகளிலும் உண்மைக்குப் புறம்பான காட்சிகளே காணக் கிடைக்கின்றன.

1. இவை சாதாரண காட்சி வர்ணனைகள், இவைகள் இலக்கியங்களுக்கு அழகு சேர்ப்பவை. கவிதைக்குப் பொய் அழகு. எனவே இதை மறுதலிக்கக் கூடாது?

2. சீறாப்புராணத்தை நபிகளின் புகழ் கூறும் புகழ்மாலையாகத் தான் பார்க்க வேண்டும்

இவ்வாறு கூறுபவர்களின் கூற்று இஸ்லாத்தின் பார்வையில் தவறானது என்பதை அடுத்த பதிவில் காணலாம்.........................
ஆய்வு தொடரும்

9 comments:

Unknown said...

நல்லபதிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்

புகழன் said...

நல்ல பதிவு இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு

ஸயீத் said...

கவிதைக்குப் பொய் அழகு என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இங்கு உமருப்புலவர் அண்டப்புழுகு ஆகாசப்புழுகுல்ல போடுராரு.

VIKNESHWARAN ADAKKALAM said...

சிறப்பான ஆய்வு... வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

எப்படிப்பா இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கறிங்க...!!!!!

தமிழன்-கறுப்பி... said...

நல்ல ஆய்வு பிரியன்...

தமிழன்-கறுப்பி... said...

எழுத்து வரவர மெருகேறிக்கிட்டிருக்கு வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

நல்ல விடயங்களை பதிவாக்குறிங்க!

நன்றி!

மஸ்தூக்கா said...

அண்டப்புளுகர் உமறுப்புலவரை அவ்லியாவாக்கி மூட்டை மூட்டையாக அவர் அவிழ்த்துவிட்ட ஆகாசப்புளுகுகளை வேத வசனங்களைப் போல் வியாக்கியானம் செய்யும் அரைக் கிறுக்கர்களுக்கு இனியாவது மண்டையில் ஏறுமா?