Tuesday, July 28, 2009
Tribute to Mohammed Rafi
நான் அப்ப துபாயில் வேலை செய்ய சென்றிருந்த நேரம். நான் தங்கி இருந்த கட்டிடத்தின் இரவுக் காவலாளி ஒரு பங்களாதேஷி. ஒருநாள் என்னிடம் வந்து நான் வைத்திருந்த டேப் ரிக்காடர்ரைக் கடனாகக் கேட்டார். ஏன் என்று கேட்டதற்கு அன்று இரவு லோக்கல் எஃப்.எம்மில் வரும் சில பாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்.
அப்போது துபாயில் ஒரே ஹிந்தி FM ரேடியோ தான். 106.2 HUM FM. ஷோபியா கான், சிக்கந்தர் போன்ற சிறந்த காம்பியர்களை உள்ளடக்கியது. வாகனத்தில் செல்லும் போது FM கேட்டுக் கொண்டே செல்வது எங்களது பொழுது போக்கு. மாலையில் 5:20 க்கு மட்டும் நம்ம ஆசிப் அண்ணாச்சி ஏஷியாநெட்டில் ரேடியோவில் வருவார்கள். ... பதிவை விட்டு ரொம்ப வெளியே போயாச்சு. திரும்ப விட்ட இடத்துக்கு வரலாம்.
அந்த பங்களாதேஷி பதிவு செய்தவை முகமது ரஃபியின் பாடல்கள். அன்று ரஃபியின் நினைவு நாள் என்பதால் சிறப்பு ஒளிபரப்பாக, இசையமைப்பாளர் நெளசாத், ரஃபி குறித்த நினைவுகளை பேசினார்கள். மறுநாள் அந்த கேசட்டைக் கேட்ட போது மெய்மறந்து விட்டேன்.
முகமது ரஃபி! இந்திய சினிமா பாடல்களை அறிந்தவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர். 1950 களில் ஆரம்பித்து 70 கள் வரை இந்திய சினிமாவை தனது காந்தக் குரலில் கட்டிப் போட்டவர். இசையமைப்பாளர் நெளசாத் அவர்களால் ஹிந்தி திரைவுலகில் அறிமுகம் செய்யப்பட்ட ரஃபி சுமார் 25 வருடங்கள் வரை கொடி கட்டிப் பறந்தார் என்றால் அது மிகையாகாது.
அன்னாருடைய 29 வது நினைவு தினம் வருகிற ஜூலை 31ந் தேதி வருகிறது (மறைந்த ஆண்டு 1980). அவரின் நினைவுகளை அசை போடவே இந்த பதிவு.
ரஃபி பற்றி தனித் தகவல்களை சக பதிவர் ஒருவர் பதிவாக எழுதியுள்ளார். அன்று நெளசாத் அவர்கள் பேட்டி அளித்ததில் இருந்து என் நினைவில் இருப்பவைகளை எழுதுகின்றேன்.
நெளசாத் அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்துடம் முதன் முதலில் வந்தார் ரஃபி. அதைக் குறித்து நெளசாத் கூறிய வரிகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.
* एक दिन एक नौजवान गायक मुझे आया नज़र !
जिसने रौशन कर दिए संगीत के शामो सहर !
जिक्र किसका कर रहा हूँ रफ़ी था उसका नाम !
ஒருநாள் ஒரு இளைய பாடகன் என் பார்வைக்கு வந்தான்
இசை உலகை பிரகாசிக்க வைத்தான் அவன்
நான் குறிப்பிடும் அந்த நபரின் பெயர் ரஃபி.
* ரஃபி காலத்திற்கு வருவதில் மிகவும் கவனம் செலுத்தக் கூடியவர்.
* ஒரு முறை ஒரு பாடல் பதிவு நடைபெற்றது. பகலில் பாடல் பதிவு முடிந்த திருப்தியில் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். நெளசாத் அவர்களின் வீட்டிற்கு இரவு ரஃபி வந்துள்ளார்கள்.
ரஃபி : இன்று பாடிய பாடலை மீண்டும் பாடிப் பதிவு செய்ய வேண்டும்.
நெளசாத் : ஏன்? நன்றாகத் தானே இருந்தது. இதைச் சொல்லவா இரவில் கிளம்பி வந்தீர்கள்?
ரஃபி : ஆம்.. எனக்கு பாடியதில் திருப்தி வரவில்லை. உங்களுக்குத் தேவையான உணர்வை என்னால் அப்பாடலில் தர இயலவில்லை.(जस्बात ला न सका !)எனவே மீண்டும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.
பிறகு திரும்பவும் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாம்.
* ஒரு கர்நாட்டிக் இசையுடன் கூடிய கொஞ்சம் கடினமாக பாடல் ஒன்று இருந்தது. (Madhuban Me Radhika )அதை வேறு ஒரு பாடகரை வைத்துப் பாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஃபி விடாப்பிடியாக அதை கேட்டு வாங்கிப் பாடினாராம்.
அவரது பாடல்கள் என்றும் இந்திய இசையில் நீங்கா இடத்தைப் பெற்று என்றும் வாழும்.
அவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள்.. உங்களுக்காக.
இதில் கிடைக்காமல் போனது.... பீதே தினோம் கி யாத் சதாதி ஹை ஆஜ் பீ .. ஓ தின் பிர் கபி வாபஸ் ந ஆயேகி.. தமாம் உம்ர யோகி ரோயே ஜாயெங்கே.. என்ற பாடல். கிடைத்தால் எனக்கு லிங்க் தாருங்கள்.
...
...
Sunday, July 26, 2009
வாழ்த்துக்கள் அகிலா!
கலைந்து கிடந்த
என் நெற்றிப் பொட்டை
நீ சரி செய்த நாளில்
துவங்கிற்று
உனக்கும், எனக்குமான
பெயரிடப்படாத உறவு!
சரியா, தவறா...
நெறியா, பிழையா
எனும் எல்லா குழப்பங்களையும்
விழுங்கியது
உன் கள்ளமற்ற சிரிப்பு!
நியாமற்றதாய்
தோன்றினும்
நீண்டு கொண்டே
போகிறது
நம் நேசம்
வான் வெளி போல்...
காட்சிப் பிழை இது
கானல் சுகமென
உலகம் மறுப்பினும்
வானும் சுகமே!
உன்னோடு என்
வாழ்வும் சுகமே!
க. அகிலா, சென்னை.
நன்றி : வாரமலர்
Saturday, July 25, 2009
பார்த்தது, கேட்டது,படித்தது.
கேட்டது:
நண்பர் ஒருவர் ஒரு கதை சொன்னார்.. ஒரு இளைஞன் கண் தெரியாத ஒரு இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டான். அவள் மீது அளவில்லாத அன்பு செலுத்தினான். கண் தெரியாதவள் என்றாலும் அழகானவள். காதலன் அவளிடம் திருமணம் பற்றிப் பேசிய போது அவள் தனக்கு கண் தெரிந்தால் தான் அவனை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி விடுகின்றாள்.
காதலன் யோசித்து, பல சிரமங்களுக்கு இடையில் அவளுக்கு கண் கிடைக்க ஏற்பாடு செய்கின்றான். கண் பார்வை கிடைத்தவுடன் முதன் முதலாக காதலனைக் காண அவள் விரும்புகின்றாள். அவனைப் பார்த்த அவளுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அவன் குருடாக இருக்கின்றான். அவனைக் திருமணம் செய்ய மறுத்து விடுகின்றாள். காதலன் சோகத்துடன் ஏதும் பேசாமல் திரும்பிச் செல்கின்றான். அப்போது அவன் நினைத்துக் கொண்டதைக் கடைசியில் சொல்கின்றேன்.
பார்த்தது:
ஒரு விளம்பரம்.. எங்க முன்னாள் பேவரைட் சோப்பான லைப்பாய்க்கு ஒரு விளம்பரம். இரண்டு பில்டிங்கில் இருக்கும் குழந்தைகளின் சோப்பை மாற்றியதால், சுகாதாரமானதாக இருந்ததாக வரும். ஒரு பில்டிங்கில் இருக்கும் குடும்பம் பழைய சோப்பை தொடர்ந்ததாகவும், அடுத்த பில்டிங் முழுவதும் லைப்பாய்க்கு மாறியதாகவும் சொல்லி விட்டு, இறுதி முடிவில் லைப்பாய் பயன்படுத்திய பில்டிங்கில் இருக்கும் குழந்தைகள் 40 சதவீதம் அதிகமாக பள்ளிக்கு சென்றதாக சொல்கிறார்கள்.
சுத்தமான லாஜிக் ஓட்டைகள், நடைமுறைக்கு முரணாக இருக்கின்றது என்றாலும், லைப்பாய் பயன்படுத்தியதை சொல்லும் போது தினமும் ஐந்து முறை லைப்பாய் பயன்படுத்தியதாக கீழே குறிப்பு வருகின்றது. அடப்பாவிகளா? லைப்பாய் சோப்பு போட்டு வாரத்துல இரண்டு தடவை குளிப்பதே கஷ்டம்.. இதுல டெய்லி 5 முறையாம்.. ஓவரா இல்லியா?
படித்தது:
திரு. நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய தென் இந்திய வரலாறு என்று நூல் சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. கொஞ்சமா புரட்டியதில் சில சேதிகள். சங்ககாலத்தில் தொடங்கி, கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை உள்ள வரலாறுகளைத் தொகுக்க பல சிரமங்களை 1950 களில் முயன்று உள்ளார். தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் பொதுவான அகத்திய முனிவர் பற்றிய சில மரபுக் கதைகள் சுவாரஸ்யமா இருக்கு.
ஒரு சந்தர்ப்பத்தில் அகத்திய முனிவர் செல்வத்தின் தேவை காரணமாக மணிமதி என்ற நாட்டை ஆண்ட தைத்திரிய மன்னனாகிய இல்வலனிடன் சென்றார்.இல்வலன் பிராமணர்களிடம் விரோதம் கொண்டவன். அவனுக்கு ஒரு தம்பியும் இருந்தான். அவன் பெயர் வாதாபி. இல்வலன் வாதாபியை ஆட்டுக் கிடாயாக மாற்றி, அறுத்து சமையல் செய்து பிராமணர்களுக்கு உணவளிப்பான். பிராமணர்கள் உண்டதும் இல்வலன் தனது தம்பியை பெயர் கூறி அழைப்பான். உடனே வாதாபி பிராமணர்களின் வயிற்றைக் கிளித்து வெளியேறி அவனது பழைய உடலை அடைந்து விடுவான். இது மாதிரி பல பிராமணர்களை வில்வலன் கொன்றான்.
அகத்தியர் அவனிடம் வந்ததும் அவனும் அதே போல் தம்பியை சமைத்துக் கொடுத்தான். அகத்தியர் உணவருந்தியதும் தம்பியை அழைக்க தம்பி வரவில்லை. அகத்தியரின் வயிற்றில் செரிமானமாகி விட்டான். வேறு வழி இல்லாமல் பெரும் செல்வத்தைக் கொடுத்து, தனது தம்பியை அகத்தியரிடம் இருந்து மீட்டதாக கதை செல்கின்றது.. நல்லா இருக்குல்ல.. கதை!
அடுத்து இன்னொரு வித்தியாசமான விஷயம்.. தமிழர்களின் வரலாறு. சங்க காலத்துக்கு முன்னால் இருந்த தமிழக வரலாறு பற்றி ஏதும் தெரியவில்லை என நீலகண்ட சாஸ்திரிகள் கூறுகின்றார்கள். மேலும் சில நூற்றாண்டுகள் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை என்றும் கூறுகின்றார். (நான் பள்ளி படிக்கும் காலங்களில் ஆ.வி .. ஹாய் மதன் இது பற்றி சொல்லி ஏதோ சர்ச்சையில் சிக்கிக் கொண்டது நினைவுக்கு வருகின்றது)
கன்னியாகுமரி வரையிலான தமிழகம் உருவான பரசுராமன் கதையைச் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் அதை விட்டு விடுகின்றேன்.
எங்க பாண்டிய நாடு பற்றிய ஒரு சுவையான செய்தி. கிறிஸ்து பிறப்பதற்கு முன் ஹெர்குலிஸ் மன்னர்களின் காலத்தில் தென்னிந்தியப் பகுதிகள் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக மெகஸ்தனீஸ் கூறுகின்றார். கிமு 3 ஆம் நூற்றாண்டுக்காலம். ஹெர்குலிஸின் மகளான ‘பாண்டையா’ என்பவருக்கு தமிழகத்தின் பகுதிகளை ஆட்சி செய்யக் கொடுத்ததாகவும், அதனால் பாண்டியர்கள் என்ற மரபு வந்ததாகவும் குறிப்பாகச் சொல்கின்றார். ரோம்பப்பேரரசரின் கடற்படைகள் தென்னிந்தியக் கடல் பகுதியில் வந்து கைப்பற்றியதாகவும் சொல்கின்றார்.
நேரம் கிடைக்கும் போது அதில் இருக்கும் இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
கேட்டதின் விடை:
உனக்கு கண் தெரிய வேண்டும் என்பதற்காக என் இரு கண்களையும் தானம் செய்தேன் என்பதை உனக்கு சொல்ல விரும்பவில்லை.
Thursday, July 23, 2009
துர்காவுக்கு திருமண வாழ்த்துக்களும், எனக்கு வந்த சில விருதுகளும்...
முதலில் துர்கா விஸ்வநாத்துக்கு இனிமையான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். துர்கா விஸ்வநாத்?? யாருன்னு புரியாம இருப்பவர்களுக்கு ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.. சில ஆண்டுகளுக்கு முன் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஐடியா ஸ்டார் சிங்கர் என்ற பாடகர்களுக்கான போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பாடகர்களில் ஒருவர் தான் துர்கா விஸ்வநாத். போட்டியின் இறுதியில் இவரால் வெற்றி பெற முடியா விட்டாலும் தனது அழகிய கொஞ்சும் குரலில் பல பாடல்களைப் பாடி அசர வைத்தவர்.
அப்போட்டியில் இவர் என்னிஷ்டம் என விருப்பப் பாடலாக பாடிய “தும்பி வா தும்பக் குடத்தின்” பாடல் எனது விருப்பப்பட்டியலில் முதலில் உள்ள பாடல். என் செல்பேசியில் இருக்கும் இப்பாடல் மகிழ்ச்சியான, துக்கமான, எரிச்சலான, குழப்பமான எல்லா கணங்களில் என்னை வருடிச் சென்று இருக்கின்றது. சமீபத்தில் துர்கா விஸ்வநாத்துக்கு திருமணம் முடிந்து இருக்கின்றது. அவரது குரல் போலவே வாழ்வும் இனிமையாக அமைய வாழ்த்துகிறேன்.
தும்பி வா பாடல் யூ டியூபில் இருந்து...
இப்பாடலை செல்பேசியில் கேட்க 3GP பார்மேட்டில் பதிவிறக்க
இவர் பாடியவைகளை யூடியூபில் தேட இங்கு செல்லலாம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடுத்து விருதுகள் நமக்கு வழங்கி கெளரவித்தவர்களுக்கு நன்றி நவிலல். இந்த பட்டாம்பூச்சி விருது சில மாதங்களுக்கு முன்னால் வலையுலகில் பிரபலமா இருந்தது. நிறைய பேர் தங்கள் பதிவிலும் ஓரங்களில் போட்டுக் கொண்டார்கள்.. ஆனா நமக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கல.. ஏன் கரப்பான் பூச்சி விருது கூட கிடைக்கல.. அதனால் சீச்சீ இந்த பழம் புளிக்கும்ன்னு விட்டாச்சு.. ஆனா இப்ப எங்க ஸ்வீடன் சுசி அக்கா அந்த விருதை நமக்கு கொடுத்து கெளரவிச்சு இருக்காங்க... நன்றி சுசி அக்கா!
அதே போல் இப்ப வலம் வரும் சுவாரஸ்யமான பதிவர் விருதை சகோதரி ஃபாயிஷா கொடுத்து இருக்காங்க.. நன்றி ஃபாயிஷா! இப்ப இந்த விருதை நாமலும் ஐந்து பேருக்கு தந்துடலாமுன்னு இருக்கேன். காசு, பண முடிப்பெல்லாம் தர முடியாது.. ஒன்லி பாசம் மட்டுமே விருது.
1. தேனியார் என்ற விஜயராஜா.. எங்க மாவட்டத்துக்காரர். அருமையா எழுதுவார். இப்ப ஆப்பிரிக்கா காட்டுக்குள் எங்கேயோ இருக்கார்ன்னு நினைக்கிறேன். இணைய தொடர்பு இல்லாததால் எழுதாம இருக்கார் போல... நல்ல சுவாரஸ்யமான எழுத்தாளர். அவருக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்கின்றேன்.
2. தமிழ் மகன்.. இணையத்தில் எழுதி வரும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான தமிழ் மகனுக்கு இவ்விருதை அளிக்கின்றேன். அழகான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுவதில் சிறந்தவர். கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவுக்கு சொந்தக்காரர்.
3. விக்னேஷ்வரன் - மலேசியாவில் இருந்து வலை பதியும் சகோதரர் விக்கி.. நல்ல தேர்ச்சியடைந்துள்ளார். ஒரு பதிவுக்கு அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை ஆச்சர்யப்பட வைக்கின்றது.
4. ஆயில்யன்... நம்ம சாதிசனம்.. கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் தொடர்ந்து செயலாற்றி வருகின்றார். இவரை வெறும் ஆயில்யன் என்பதை விட கவிஞர் ஆயில்யன் என்று அழைக்கலாமா என்று எங்கள் சங்கம் ஆய்வு செய்து வருகின்றது. ஏன்னு கேள்வி கேட்கக் கூடாது.. அப்படிக் கேட்டா எங்க மச்சான் கிரிதரன் சாப்பிடும் ஸ்ரீமதி சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம். (தங்கச்சியைக் கொடுத்து இருக்கோம்ல.. எங்க கலாய்த்தலை கேட்டுத் தான் ஆகோனும்.. ;-) )
5. தமிழன் கறுப்பி வழக்கம் போல் தம்பிக்கு ஒரு விருது கொடுத்தாச்சு... அசட்டையாக எழுதுவார். ஒரு இரவு முழுவதும் கடற்கரையில் நாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கனும் என்பது என் கனவு. அம்புட்டு சுவாரஸ்யமான ஆளு.. ஆனா முடியுமான்னு தெரியல.
இந்த பட்டியலில் மகளிருக்கு இடம் இல்லாமப் போனது வருத்தமே.. சுவாரஸ்யமான பலர் இருந்தாலும், அவர்களுக்கு ஏற்கனவே இதை யாராவது கொடுத்து இருக்காங்க.. அதனால் யாருக்கும் கொடுக்காமப் போக முடியாது என்பதால் பதிவுலகை விட்டுக் காணாமல் போன கோகிலவாணி, மற்றும் வித்யா கலைவாணி ஆகிய இரு சுவாரஸ்யமான பதிவர்களுக்கும் இவ்விருதை கொடுக்கின்றேன்.
Monday, July 20, 2009
பணம் இனிது! பொருள் இனிது! என்றோம் மழலைச் சொல் கேளாமல்...
மகனுக்கு வயசு 3 ஆக இன்னும் சில மாதங்கள் இருக்கு.. சேட்டையும் பேச்சும் அதிகமா இருக்காம்... :) இன்னும் ஸ்கூலுக்கு அனுப்பலை. இப்ப அவங்க அம்மாவோட நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் இருக்கான். கொஞ்ச நாள் கழிச்சு பிரிகேஜி மாதிரி அனுப்பலாமா? இல்ல மொத்தமா வரும் 2010 ஜூனில் எல்கேஜியில் சேர்க்கலான்னு யோசனையில் இருக்கோம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அங்க வீட்டுக்கு பக்கத்தில் மசூதி இருக்கு.. காலையும், மாலையும் அங்கே அரபிப் பாடம்(மதரஸா) நடக்கும். தினமும் சும்மாவாச்சியும் போய்ட்டு வருகிறான். சில நேரங்களில் போக அடம் பிடிக்கின்றான்.. அப்படித் தான் ஒரு மதரஸாவுக்கு போகாத நாளில் மதரஸாவில் பாடம் சொல்லித் தருபவர் (ஹஜரத்) தெருவில் இவனைப் பார்த்து “ஏன், காலையில் மதரஸாவுக்கு வரல.. நாளைக்கு வரல அடி பிச்சிடுவேன்” என்று சொல்லி இருக்கிறார்.. இவன் முழிச்சு இருக்கான். “நாளைக்கு ஒழுங்கா வரனும் என்ன?” என்று அவர் சொல்ல இவன் “ எங்க மாமாகிட்ட சொல்லி, உங்க தோலை உரிச்சு, ஜன்னலில் கட்டி தொங்கப் போட்ருவேன்” என்று சொல்லி இருக்கான்... :( ஹஜரத் வீட்டில் வந்து (ஜாலியாக) கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கார். மற்றவர்கள் சொல்வதை புரிந்து அதே பாணியில் பதில் சொல்லும் பழக்கம் அதிகமாகி விட்டது.. கொஞ்சம் பெரிதானால் புரியும் என்று நினைக்கிறேன்.
*******************************************************************
ஒருநாள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து மழைத் தண்ணீர் விழும் பைப்பில் இருந்து தண்ணீர் கொட்டி இருக்கு.... மேலே போய் பார்த்தால், மேல்நிலைத் தொட்டியின் மூடியைத் திறந்து அதனுள் ஒரு PVC ஹோசைப் போட்டு, தண்ணீரை உறிஞ்சி மொட்டை மாடிக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டு இருந்தானாம்... இதே போல் ஒருநாள் வீட்டில் நின்ற பைக்கில் பெட்ரோல் டேங்கைத் திறந்து அதிலும் ஹோசை நுழைக்க முயலும் போது கையும் களவுமாக பிடிபட்டு இருக்கிறான்.
**********************************************************************
பாட்டி(அவனது அம்மம்மா) தண்ணீர் அள்ளிக் (எங்க ஊரில் மெத்தி) கொடுக்கச் சொன்னால் நீங்களே போய் தண்ணி அள்ளிக்கங்க என்று சொல்கிறானாம்.
“ஒரு உதவி கூட செய்ய மாட்டியா” என்று கேட்டால் “என்னை செரப் படுத்தாதீங்க” என்று சொல்கின்றானாம். (செரப்படுத்ததல் என்றால் தங்கமணி ஊரில் கஷ்டப்படுத்துதல்) இதே போல் சாப்பாடு ஊட்டும் போது அவரை கஷ்டப்படுத்தக் கூடாதாம்.
இவையெல்லாம் அவ்வப்போது வரும் புகார்களின் தொகுப்பு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அங்கு ஆடு வளர்க்கிறார்கள்.. மதிய வேளைகளில் ஆடுகள் தண்ணீர் குடிக்க வீட்டுக்கு வரும். வழக்கமாக வரும் வளவு(எங்க ஊரில்கொல்லைப் புறம்)க்கான பாதை மூடி இருக்கும் என்பதால் வீட்டுக்கு வெளியே நின்று கத்தும்.. உடனே இவன் வெளியே போய் “கத்தக் கூடாது .. அப்பா இப்ப வந்துடுவாங்க.. வந்து உங்களுக்கு கஞ்சி வைப்பாங்க” என்று ஆடுகளுடன் பேசிக் கொண்டு இருப்பானாம். (அப்பா என்பது தாத்தா)
**************************************************************
சமீபத்தில் தங்கமணிக்கும் மகனுக்கும் நடந்த உரையாடல்
மகன் : அம்மா, வயிறு ஏன் பெரிசா இருக்கு?
தங்கமணி : வயித்துக்குள்ள நம்ம குட்டி பாப்பா இருக்கு.
மகன் : குட்டிப்பாப்பா எப்பமா வெளியே வரும்?
தங்கமணி : இப்பதானே வளருது.. சீக்கிரமா வந்து உன்னோட விளையாடும்
மகன்: நான் வேணா வயித்துக்குள்ள போய் பாப்பா எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரவா?
**********************************************************************
மொழி வழக்கும் அவனுக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.. தங்கமணியின் பேச்சு வழக்கம் நெல்லை, நாஞ்சில் வழக்குகளின் கலவை. நாங்க வழக்கம் போல தேனி, மருத ஸ்லாங்கு.. பாண்டிய மண்ணின் மைந்தர்கள். கரிசல்காட்டுக்கு சொந்தக்காரர்கள்... ;-))
இதனால் தங்கமணியிடம் அடிக்கடி திட்டு வாங்க வைக்கும் ஒரு விடயம்.. எனது சித்தப்பா, அத்தை, அக்கா, அண்ணனை எல்லாம் ஒருமையில் கூப்பிடும் பழக்கம்.. மாற்ற முடியல.. :( அவர்களது ஊரில் இது ரொம்ப வித்தியாசமா பார்க்கப்படுகிறது.
Friday, July 17, 2009
இளமைக் காலங்கள் தொடர்கின்றன....
மக்களே நல்லா இருக்கீங்களா? நேரம் இல்லாம திணறிக்கிட்டு இருக்கேன்..நைட்டு லேட்டா வேலையில் இருந்து வந்து கொஞ்சமா யார்கிட்டயாவது மொக்கையைப் போட்டுட்டு தூங்கப் போயிடுறேன்... நேத்து மட்டும் சீக்கிரம் வந்து ஒரு ப்டம் பார்த்தாச்சு.. அதைப் பற்றி எழுதியாச்சு..ஆனாலும் நம்ம சுசி அக்கா ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு விட்டுட்டாங்க.. அக்கா சொல்லைத் தட்டக் கூடாதுன்னு காலையில் எழுந்து பதிவு எழுதி போட்டாச்சு..:)
இனி விடயத்திற்குப் போகலாம்... நாம படிச்சது ஒரு அரசு நடுநிலைப்பள்ளி.. அப்ப எங்க ஏரியாவுக்குள் எல்கேஜி, யூகேஜி எல்லாம் தெரியாது.. முதலில் அரைக் கிளாஸ் தான்.. முதல் வகுப்பில் முதல் வகுப்புப் பசங்களுடன் அடுத்த ஆண்டுக்கான பசங்க உட்கார்ந்து இருப்பாங்க... முதன் முதலில் போன அந்த நாள் நினைவில் இருக்கு.
எங்க சித்தப்பா தான் என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றது.. ஒரே அடம் பிடிச்சு அழுகை.. என்னோட முதல் வகுப்பு ஆசிரியை திருமதி.ஞானம்மாள் டீச்சர். அழுகையை நிப்பாட்ட கையில் சாக்பீஸ் கொடுத்து உட்கார வச்சாங்க.. அங்கயே அரை கிளாஸ், ஒண்ணாப்பு படிச்சாச்சு... ஒரு ஆசிரியையிடன் இரண்டு ஆண்டுகள் படிச்சது அவங்க ஒருவரிடம் தான்...:) யார் கேட்டாலும் ஒண்ணாப்பு D செக்சன் என்று சொல்வேன்.
என்னோட சதீஸ், அப்பாஸ்,கமல், கோபால், வீரர் எல்லாம் படிச்சாங்க... முதல் வகுப்பில் 500 க்கு 500 மார்க் வாங்கியது இன்னும் நினைவில் இருக்கு..:))
இரண்டாவதுக்கு திருமதி.மும்தாஜ் டீச்சர்.. அது மட்டும் தான் நினைவில் இருக்கு. மத்தபடி இந்த முறை கூட ஊரில் இருக்கும் போது அவர்களை பார்த்தேன்.
மூன்றாம் வகுப்புக்கு திரு.கோபாலகிருஷ்ணன் சார்... ஆட்டோகிராபில் ஒரு வாத்தியார் வருவாரே அது மாதிரி ஆனா.. ரொம்ப நல்ல டைப்.. கோபம் வந்தா அடி பிச்சுடுவார்..:) என்னோட பிரண்டு காமராஜ் (அவனுக்கு பட்டப் பெயர் கொல்லைப்பீ) கொண்டு வந்த புளியங்காய்களைப் பிடுங்கி கிளாஸூக்கு வெளியே விட்டு எறிந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நினைவில் இருக்கு.
நாலாப்புக்கு திருமதி.சந்திரா டீச்சர்... நல்ல டீச்சர்.. நாலாப்பு படிக்கும் போது நல்ல மழையில் மரம் சாய்ந்து கிளாஸின் மீது விழுந்து சுவர் எல்லாம் இடிந்து கிளாஸ் எல்லாம் ஒரே மழைத் தண்ணீர்..
ஐந்தாம் வகுப்புக்கு த கிரேட் திரு.தனுஷ்கோடி. தனுஷ்கோடி ஆசிரியரைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. இங்கு அதீத திறமைசாலியான ஆசிரியர்.
இந்த ஆண்டைப் பற்றி நிறைய நினைவில் இருக்கு... எங்க அப்பா அப்பொழுது திண்டுக்கல் - கம்பம் பஸ்ஸில் நடத்துனர்.. (பாத்திமா ரோடு வேஸ்). இந்த இரண்டு ஊருக்கும் இடையில் எங்க ஊர்.. நைட் 7:30 மணிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பஸ் ஸ்டாண்டில் எங்க தாத்தாவோட போவோம். அங்கேயே பஸ் வரும் வரை விளையாடிக்கிட்டு இருப்பது இன்னும் நினைவில் இருக்கு.
அப்புறம் ஒரு முக்கியமான, யாருக்கும் சொல்லாத அழியாமல் உறுத்திக் கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வும் இருக்கு... சொல்லிடவா? ம்ம் சொல்லிடலாம். அஞ்சாப்பு படிக்கும் போது எங்கள் ஆசிரியர் போட்டி எல்லாம் வைத்து பரிசளிப்பார். குறிப்பா கட்டுரைப் போட்டியில் எழுத்து அழகா இருக்கனும்.. நமக்கு தான் எழுத்து செம டேமேஜா இருக்குமே.. அதனால் பிரைஸ் கிடைக்காது.. ஆனாலும் தேர்வுகளில் நல்ல ரேங்க் வாங்கிடுவேன்..
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மட்டும் நான்கு, ஐந்து மாதங்கள் டியூசன் படிச்சேன்.. அதுக்கே வீட்டில் செம சண்டை போட்டாச்சு.. மாதம் 5 ரூபாய் என்று நினைக்கிறேன்.. அதற்குப் பிறகு படிச்சி கிழிச்சது போதும்ன்னு நிப்பாட்டியாச்சு.
அப்படித் தான் காலாண்டுத் தேர்வில் இரண்டாம் ரேங்க் வாங்கியாச்சு.. ஒரு அழகான வெள்ளைக் கலர் பேனா பரிசாவும் கிடைச்சது.. அதை வாங்கிக் கொண்டு நான் டியூசன் படிக்கும் ஆசிரியையிடம் காட்டி பாராட்டும் வாங்கியாச்சு.. அவங்க பேர் திருமதி.ஆனி இளங்கோ. அவங்க வேற “உன் எழுத்து மட்டும் அழகா இருந்தா நீதான் முதல் ரேங்க் வாங்குவ” என்று சூட்டேத்தி விட்டுட்டாங்க..
ஆங்கிலத்துக்கு நான்கு கோடு போட்ட நோட்டும், தமிழுக்கும் இரண்டு கோடு போட்ட நோட்டும் வாங்கிக் கொண்டு வரும்படி கூறி விட்டார்கள்.. இரண்டும் வாங்கக் குறைந்தது 5 ரூபாயவது வேணும்.. வீட்டில் வழக்கம் போல பணம் தான் hurdle..
அன்றைக்கு ஆயுத பூஜை நாள்... வழக்கம் போல் ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு பேக்கரி(PNC) அருகில் 10 ரூபாய் நோட்டு ரோட்டில் கிடக்கு.. நைசா எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்து விட்டேன்.. அப்புறமென்ன வீட்டில் பஞ்சாயத்து பேசி 5 ரூபாய்க்கு இரண்டு நோட்டும்.. மீதி 5 ரூபாய்க்கு ஆயுத பூஜையைக் கொண்டாட பொரி, கடலை எல்லாம் வாங்கிக் கொண்டாடினோம்..
இப்ப நினைச்சாலும் கண்ணில் நீர் துளிர்க்கும்.. இப்ப பர்ஸ் நிறைய பணம் இருக்கு... ஆனா வாங்கத் தேவையான பொருள் ஏதும் இந்த உலகில் இல்லை.
அப்புறம் எங்க ஆனந்தி அக்கா பற்றியும் சொன்னால் நிறைய சொல்லலாம். இங்கேயே அவங்களைப் பற்றி சொல்லி இருக்கேன். இப்ப கெங்குவார்பட்டியில் வேலை செய்கிறார்கள்.
சரி இனி மேட்டருக்கு வரலாம்.. இது தொடர் பதிவு என்பதால் இன்னும் மூணு பேரை அழைக்கனுமாம்..:)
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தாங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்
இனி நான் அழைப்பது
கயல்விழி முத்துலட்சுமி அக்கா : எங்களோட பாசக்கார குடும்பத்து அக்கா... நல்லா சுவாரஸ்யமா எழுதுவாங்க.. ஜூனியர் துளசி டீச்சர்.. :)
சென்ஷி : அண்ணனைப் பற்றி சொல்ல வேண்டியதில்ல... புனைவு நிறைய எழுதுவார்ன்னு நினைக்கிறேன். உண்மையைச் சொன்னா இவரோட எழுத்துக்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் அறிவு வளரலை..:)
காதல் கறுப்பி : தம்பி சுவாரஸ்யங்களுக்குச் சொந்தக்காரர்.. ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..:) பேய் மாதிரியான தேவதைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பவர்.
வாங்க மக்களே. எழுதுங்க... :)
Thursday, July 16, 2009
கையொப்பு - நம்மை நாமாக அறிய
அவர்கள்
கடைசி உணவைப் பரிமாறுகிறார்கள்
இரவு முடியும்போது
கொலைக்கத்தியின் கூர்மையில்
சூரியக்கதிர்கள் வெளிப்படுகையில்
துடித்துச் சாக நாமிருக்கக் கூடாது
எனது காதலே!
நாமிந்த இரவின் மறைவில்
பரஸ்பரம் கொம்புகளால்
குத்திக்கொண்டு சாகலாம் "
மொழி பெயர்ப்பு : ஆசிப் மீரான்
கையொப்பு.. ஒரு அழகான கவிதையை படமாக்கி இருக்கிறார்கள். வழி நெடுக உயிரோட்டமான காட்சி அமைப்பு.. என்ன சொல்ல.. படம் பார்த்தேன். முடிவின் மிரட்சியில் சில நிமிடங்கள் செயலற்று போக மட்டுமே முடிந்தது.
அறிமுகம் செய்த ஆசிப் மீரான் அண்ணாச்சிக்கு நன்னிகள். அவரது படம் பற்றிய கருத்து இங்கு
எனக்காக வாழ வேண்டும் என்ற ஆசையையும், பரிதவிப்பையும் இன்னும் அதிகமாக்கி விட்டது என்று மட்டும் சொல்ல முடிகின்றது.
நாளைக்கு ப்ளஸ்ஸி(Blessy)யின் இயக்கத்தில் மோகன்லால் நடித்த bhramaram படம் பார்க்கப் போகின்றேன். இவர்களது கூட்டணியில் வந்த தன்மாத்ரா என்னுடைய ஆல் டைம் பேவரைட்... நாளைக்கு எப்படி மூடு இருக்கும் என்பது தெரியாததால் உடனடிப் பதிவு இது.
கையொப்பு டிவிடி பிரிண்ட்டில் பார்த்தேன்.. இங்கிருந்து 1.36 GB அளவு.
Saturday, July 11, 2009
இலையில் சோறு போட்டு...
"ஏண்டி.. மெல்லமா நடந்து வரத் தெரியாதா?”
மாலதியின் பேச்சைக் கேட்கக் கூடியவள் இல்லை சின்னு. நடந்து வராமல் தாவித் தாவிக் குதித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். கூடவே அவளது குட்டி நாயான டைகரும். டைகர் அவர்களது குப்பத்தில் இருந்த ஒரு நாய் போட்ட குட்டி... குட்டியிலேயே எடுத்து வந்து பாலூட்டி வளர்த்து இப்போது கறி தின்னும் அளவுக்கு வளர்ந்து விட்டது. சின்னு எங்கே சென்றாலும் கூடவே அதுவும் திரியும்.
இன்று சின்னுவின் மகிழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் செல்லுமிடம். மாலதி, சின்னுவின் அம்மா அந்த பகுதி கவுன்சிலர் வீட்டில் வேலை செய்கின்றார். இன்று கவுன்சிலரின் ஒரே மகனுக்கு பிறந்தநாள். அதனால் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். சின்னுவின் அம்மா அங்கேயே வேலைக்கு இருப்பதால் அவளது பிள்ளைகளையும் கவுன்சிலர் மனைவி சாப்பிட வரச் சொல்லி இருந்தாள்.
சின்னு அம்மா எப்போதுமே மிச்சம் மீதிகளை கட்டிக் கொண்டு வந்து தனது பிள்ளைகளுக்கு சாப்பிடத் தருவாள். இன்று அங்கேயே சுடான சாப்பாடு கிடைக்கும் என்பதால் சின்னுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சின்னு மூன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டியான மாணவி. மாலதி ஆறாம் வகுப்பு படிப்பவர். இப்போது தான் கொஞ்சம் கொஞ்மாக அவளிடம் வெட்கம் குடி கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது.
வானம் மேக மூட்டமாக இருந்தது. கவுன்சிலரின் வீடு கலகலப்பாக இருந்தது. மாலதியும், சின்னுவுன் வீட்டுக்கு வெளியே இருந்த முற்றத்தில் அமர்ந்து இருந்தனர். இவர்களைப் போலவே இன்னும் சில சிறுவர், சிறுமிகளும், வயதானவர்களும் அங்கே இருந்தனர். விருந்தினர்கள் எல்லாம் வீட்டிற்கும் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தனர். சின்னுவின் அம்மா அவ்வப்போது வீட்டினுள் இருந்து மகள்களை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சின்னு நைசாக வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது பிரியாணி அங்கே பரிமாறப்பட்டுக் கொண்டு இருப்பது தெரிந்ததால் சின்னு அவ்வப்போது மூச்சை இழுத்து வாசம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.
இப்போது முற்றம் பரபரப்பாக இருந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். மாலதியும், சின்னுவின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். டைகரை அங்கிருந்த குரோட்டன்ஸ் செடி மறைவில் ஒளிந்து இருக்கச் செய்து இருந்தாள் சின்னு. மாலதிக்கு சின்னுவின் மீது கோபம்.. நாயைக் கூட்டி வந்தது கவுன்சிலர் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று.. சின்னுவிற்கு அதைப் பற்றிய கவலை இல்லை.. தனக்கு கிடைக்கும் சாப்பாட்டில் கொஞ்சம் டைகருக்கு தரப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
வரிசையாக உட்கார்ந்து இருந்தவர்களுக்கு முன் இலை போடப் பட்டு இருந்தது. இலை போட வந்தவரிடம் நைச்சியமாக பேசி ஒரு கிழிந்த இலையை டைகருக்காக சின்னு வாங்கி வைத்து இருந்தாள். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்தது. அம்மா டைகரைப் பார்த்தால் கூட அடி பின்னி விடுவாள் என்று.. ஆனாலும் டைகர் ஒளிந்து இருக்கும் தைரியத்தில் இருந்தாள். எல்லாருக்கும் முன் இலை போடப்பட்டு இருந்தது.
அப்போது தான் பரபரப்பு நிகழ்ந்தது. அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழாவுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி அது. கவுன்சிலரின் கைத் தடிகள் முற்றத்தில் இலை போட்டு அமர்ந்து இருந்தவர்களை விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அனைவரும் எழுந்து ஓரமாக நின்று கொண்டிருந்தனர். சின்னு தனது இரண்டு இலையையும் எடுத்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டு இருந்தாள். அவள் கவனம் முழுவதும் டைகரின் மீதே இருந்தது. டைகர் அமைதியாக செடி மறைவிற்குள்ளேயே இருந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இடத்தைக் காலி செய்ய மீண்டும் முற்றத்தில் அவரவர் இடத்தைப் பிடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்தனர். அனைவரும் முன்னும் இலை இருந்தது. ஆனால் சாப்பாடு போட யாரையும் காணவில்லை. கவுன்சிலரின் மகனே வந்து தனது கையால் சாப்பாடு போட வேண்டுமாம்... இதனை வீடியோவாக எடுக்க கேமரா மேன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார்..
சின்னுவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கேமராமேன் வேறு ஏதோ ஒயரில் பிரச்சினை என்று இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தான். அவனது கேமரா தயாரானால் தான் சாப்பாடு போட ஆரம்பமாகுமாம். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கேமரா தயாராகி இருந்தது. கவுன்சிலரின் மகன் தனது சின்னக் கரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாணியை இலையில் வைத்துக் கொண்டிருந்தான். மாலதி, சின்னு இருந்த மூலைக்கு எதிர் மூலையில் இருந்து சாப்பாடு போடும் படலம் ஆரம்பமாகி இருந்தது. சின்னு அவ்வப்போது டைகரை தனது கைகளை வைத்து குரோட்டன்ஸ் செடிக்குள் தள்ளிக் கொண்டு இருந்தாள். டைகருக்கும் பிரியாணி வாசம் வந்து விட்டது போல் இருந்தது.
மாலதிக்கு ஏனோ அங்கே இருப்பது வெட்கமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. இடையில் எழ முடியாது. கவுன்சிலர் மனைவி பார்த்தால் அவ்வளவு தான் பத்ரகாளியாகி விடுவாள். சின்னுவின் இலைக்கு சாப்பாடு வருவதற்கும் நகரவே நகராத 15 நிமிடங்கள் கடந்து இருந்தது. சின்னுவோடு வரிசை முடிந்ததால் கேமராமேன் அதோடு நிறுத்திக் கொண்டு திரும்ப கேமராவோடு மக்கள் கூட்டமும் திரும்பி இருந்தது.
சின்னு வேகமாக செடிக்கு அருகில் கிழிந்த இலையைப் போட்டு தனது இலையில் இருந்த பிரியாணியில் பாதியை- டைகருக்காக வைத்து இருந்தாள். டைகர் அதை முகரத் துவங்கி இருந்தது. சின்னு தனது இலையில் இருந்து ஒரு கவளம் தான் எடுத்து வாயில் வைத்து இருப்பாள். திடீரென இடித்த இடி அவளை அதிர்ச்சிக்குள் ஆக்கியது. அதோடு சடசடவென மழை கொட்ட ஆரம்பித்து இருந்தது. மழையில் தனது டைகரைக் காக்க அதை இழுத்துக் கொண்டு வீட்டு ஓரம் இருந்த சன்சேடுக்கு கீழே ஓடிக் கொண்டு இருந்தாள் சின்னு. சில வினாடிகளில் பிரியாணியும், கறியும், இலையும் மழை நீரில் மிதந்து கொண்டு சின்னுவின் காலடியில் வந்து கொண்டு இருந்தன.
டிஸ்கி : மேலே இருக்கும் படத்தில் இருப்பவர்களின் முகங்களில் தெரியும் அதீதமான உணர்வின் பாதிப்பில் எழுதியது.. :(
Wednesday, July 8, 2009
நாடோடிகளும், காதல் ஓடிகளும்
சமீபத்தில் பார்த்த படம் ‘நாடோடிகள்’. பலரும் பல கோணங்களில் யோசித்து இருக்கலாம். கதையின் முக்கிய அம்சங்களில் ஒன்று காதலுக்காக நண்பர்கள் செய்யும் தியாகம். பலத்த இழப்புகளுக்குப் பிறகு நண்பனின் காதலை ஒன்று சேர்த்து வைக்கிறார்கள் நண்பர்கள். பார்க்க அழகாகத் தான் இருக்கிறது.
காதல் என்பது அற்புதமான உணர்வு. காதல் என்ற வார்த்தைக்கு இன்றைக்கு சமூகம் கொடுத்துள்ள வியாக்கியானத்தில் நமக்கு உடன்பாடில்லை.
அது கல்யாணத்தில் முடிந்தால் தான் வெற்றி என்பதில் அர்த்தமில்லை. காதல் என்பதை வரையறுத்துக் கட்டமைக்கும் வேலையை தமிழ் சினிமாவிற்கு நாம் கொடுத்து பல காலமாகி விட்டது. அது தனது தேவைக்குத் தகுந்தாற் போல் மாற்றி மாற்றித் தருவதை நாமும் பே என்று ஏற்றுக் கொண்டு வருகின்றோம்.
உண்மையான நண்பனின் கடமை இதுவா? காதல் என்ற வியாதி வந்ததும் பெற்றோர், உடன் பிறந்தோர், உறவுகள் யாரும் தேவையில்லையா? நண்பர்கள் உதவியதும் கூட்டிக் கொண்டு ஓடுவது தான் உண்மையான காதலா? உயிரைக் கொடுத்தாவது உங்களை சேர்த்து வைப்பேன் என்று குருட்டாம் போக்கா உண்மையான நண்பன் எவனும் சொல்ல மாட்டான்.
காதல் என்பது இன்றைய சினிமாக்களில் டீன் ஏஜ் பருவத்தில் ஏதோ சிறுநீர் கழிப்பது போல் கட்டாயமாகிப் போய் விட்டது. பள்ளி மாணவன் முதல் கொண்டு தனது ஆள் என்று யாரையாவது அடையாளம் காட்ட வேண்டியது இன்றைய கெளரவப் பிரச்சினைகளில் ஒன்றாகிப் போய் விட்டது. இந்த சூழலில் நாடோடிகள் போன்ற படங்கள் ஓடிப் போகும் கலாச்சாரத்தை வழியுறுத்துகின்றது போன்ற பார்வையை ஏற்படுத்துகின்றது.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. காதலர்களுக்கு மூளையும் இருப்பதில்லை. ஆம் காதலிக்கும் போது காதலன்/லி யின் பலவீனங்கள் எதுவும் கண்களுக்குத் தெரிவதில்லை. தெரிவதெல்லாம் நல்லவை மட்டுமே.. திருமணத்திற்குப் பின் வாழ்வின் அத்தியாசவசிய தேவைகளில் சிக்குண்டு திணறும் போதுதான் பலவீனங்கள் வெளிப்பட்டு காதல் என்ற நீர்க்குமிழி உடையும் போது வாழ்வும் சீர்கெடுகின்றது.
உண்மையான நண்பன் காதலர்களின் சமூக, பொருளாதார, மனோரீதியிலான விடயங்களை ஆராய்ந்து அவர்களால் மேற்கொண்டு எழும் சவால்களை எதிர்கொள்ள இயலுமா என்று சிந்திக்க வேண்டும். எந்த சவாலையும் சந்திக்க திறமில்லாதவர்களை உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்பை புண்ணாக்குவதை விட நண்பனின் இந்த காதல் என்னும் இனக்கவர்ச்சியை விட்டு அவர்களை விலக்க முயற்சி செய்வதே சாலச் சிறந்தது.
பொதுவாக தமிழ் சினிமாக்களில் வாழ்வின் ஒரு பகுதி தான் வழக்கமாகக் காட்டப்படும். காதல் படம் என்றால் காதலர்கள் இணைவது வரை மட்டுமே.. அதற்கு மேல் காட்ட இயலாது. அப்படியே காட்டுவதானாலும் அது ஹீரோயிச படமாகவோ, வி.சேகர், விசு வகை படங்களாகவோ தான் இருக்கும்.. இன்றைய வயதான ஹீரோக்கள் கூட அப்பா கேரக்டர்களில் நடிக்க விரும்புவதில்லை..
எனவே தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் மாயை ஒரு கானல் நீர் போலத் தான். உண்மையில் காதல் என்னும் அற்புதம் நமது வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் காதலியுங்கள். அதில் தான் சுகமே உள்ளது. அப்படியே டீன் ஏஜில் காதல் வர வேண்டும் என்றால் உங்கள் மதத்தில், உங்கள் ஜாதியில், உங்கள் வசதிக்குத் தகுந்தாற் போல் காதலியுங்கள்.
ஆங்ங்ங்.. படத்தைப் பற்றி சொல்லலியே.. படம் எடுக்கப்பட்ட விதம் மிக அருமை.. ஒவ்வொரு கட்டமும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. காதல், பாசம், அன்பு, பெற்றோர் என அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
காதல் செய்ய நினைப்பவர்களும், காதலிப்பவர்களும், காதல் செய்யும் வயதில் அல்லது அந்த வயதுக்கு வரப் போகும் குழந்தைகள் வைத்திருப்பவர்களும் பார்க்க வேண்டிய படம்.
Monday, July 6, 2009
காதல் கறுப்பட்டியும், கறுப்பியும்.. சந்தித்த வேளையில்
ஒரு உருவம் தூரத்தே யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த தெருவில் நடந்து வருவது தெரிகின்றது.. அருகே வர வர அதன் உருவம் நமக்கு விளங்குகின்றது. அடர் நீல நிறத்தில் ஜிப்பா பைஜாமாவுடன் கையில் பிரெஸ்லெட்டுல் மின்னுகின்றது. தங்கத்தின் மின்னலை ஜிப்பாவின் மின்னல் வெட்டுவது நம் கண்ணைக் கூச வைக்கின்றது... கண்களில் பச்சை நிறத்தில் கண்ணாடி அழகைக் கூட்டிக் காட்டுகின்றது. முகம் முழுவதும் முதல்வன் அர்ஜூன் போல பவுடர் கொட்டிக் கிடக்கின்றது. ஒரு கையில் ஒரு சூட்கேஸ், மற்றொரு கையில் ஒரு அட்டைப் பெட்டி.
அந்த உருவம் தெருவை ரசித்துக் கொண்டே வருவது நமக்கு மிக அருகே தெரிகின்றது. பேக் கிரெளண்டில் ஆட்டோகிராபில் வரும் “ஞாபகம் வருதே”க்கு முன்னால் வரும் தீம் மியூசிக் கேக்கின்றது. கேமரா குளோசப்பில் நெருங்கி வருகின்றது.. பார்த்தால் வருவது நம்ம தம்பி காதல் கறுப்பி . (இனி தம்பி என்று வரும்). அதற்கு மேல் குளோசப்பில் காட்டினால் மக்கள் நம்மை அடிக்க வருவார்கள் என்பதால் கேமராவின் கோணம் தம்பியின் பார்வையில் இருந்து விரிகின்றது.
தெரு ரொம்ப பிஸியாக இல்லாமல் அங்கொருவரும் இங்கொருவருமாக நடந்து செல்கின்றனர். தெரிவில் இருக்கும் நாய்கள் எல்லாம் தம்பியைப் பரிதாபமாக பார்க்கின்றனர். தூரத்தே வரும் ஒரு தாத்தா தம்பியின் சட்டையின் ஒளி வெள்ளத்தில் ஆளை சரியாகக் கணிக்க இயலாமல் திணறி நெற்றில் தனது கைகளை வைத்து கண்களைச் சுருக்கி “யாரு?” என்றும் கேட்கிறார்.
முன்னாடி பார்த்தால் சிவப்பு கலர் சுடிதாரில் ஒரு பெண் நடந்து வருகின்றார்.. கொஞ்சம் சுமாரான கலர் தான்.. (இங்கிதம் கருதி வர்ணனை தடை செய்யப்படுகின்றது.) அவர்தான் தம்பியின் கனவுக் காதலி கறுப்பி.
இதுவரை இருந்த தீம் மியூஸிக் மாறி “தந்தன தந்தன தாளம்” தீம் மியூஸிக் இசைக்கின்றது. மீண்டும் தம்பி்யின் முகம் கேமரா கோணத்தில்.. மீண்டும் மியூஸிக்கில் மாற்றம்.. பார்த்த விழி பார்த்தபடி பார்த்திருக்க... (குணா)
பிளந்த வாயை மூடாமல் விழித்துக் கொண்டிருக்கின்றார் தம்பி. கறுப்பியின் செல் பேசி இசைக்கின்றது.
“ஹலோ! யார் கதைக்கிறீயள்”
“ஹலோ அண்ணி! நான் சவுதி அரேபியாவில் இருந்து தமிழ் பிரியன் பேசுறேன்”
“என்னது அண்ணியா? உங்களை எனக்குத் தெரியாதே?”
“உங்களுக்கு என்னைத் தெரியாது.. ஆனா எனக்கு உங்களைத் தெரியும்”
“காதல் கறுப்பி தம்பி ரொம்ப நல்லவருங்க.. அவரு உங்களுக்கு கிடைக்க கொடுத்து வச்சு இருக்கனும்”
“என்னங்க ஒன்னுமே புரியல.. யாருங்க அந்த காதல் கறுப்பி?”
“உங்க முன்னாடியே நிக்கிறாரு பாருங்க.. அவர் தான் காதல் கறுப்பி.. ப்ளீஸ் அவரை லவ் பண்ணுங்க”
“எனக்கு முன்னாடி யாருமில்லயே”
“தலையைக் குனிஞ்சு தரையில் பாருங்க.. ஒரு மூணு அடியில் ஒருத்தர் இருக்காரு பாருங்க அவர் தான்”
போனைக் கட் செய்து விட்டு கீழே குனிந்து பார்க்கிறார்.. சட்டை ஒளியில் கண்கள் கூச உற்றுக் கவனிக்கிறார்.. அதிர்ச்சியடைகிறார் கறுப்பி.
“அடப்பாவி நீயா? மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு கொடியில் காயப்போட்ட தாவணியைத் திருடி மூணாவது தெரு மல்லிகாகிட்ட மூணு ரூபாய்க்கு வித்துட்டு, துபாய்க்கு ஓடிப் போனவன் தானே நீ?”
தம்பி தனது பழைய காதலியை வெகுநாட்கள் கழித்து சந்தித்த அதிர்ச்சியில் வாயடத்தைக் நிற்க்கிறார். மீண்டும் செல் பேசி இசைக்கின்றது. எண் +0061 ல் தொடங்குகின்றது.
“நான் ஆஸ்திரேலியாவில் இருந்து கானா பிரபா பேசுகிறேன்”
“உங்க முன்னாடி இருக்குற தம்பி ரொம்ப நல்லவரு.. வல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு.. மலைகளை எல்லாம் நல்லா தெரிஞ்சவரு அந்த நாலு பேரை மலைக்கு கூட்டிக் கொண்டு போன மாதிரி உங்களையும் கூட்டிக் கொண்டு போவார்”
கறுப்பி போனை கட் செய்து விட்டு கோபமா பார்க்கிறார்.
“அடப்பாவி தமிழா.. நீ இப்படியெல்லாமா செஞ்சு இருக்கா?”
தம்பி ஒன்றும் புரியாமல் விழிக்கிறார்.. மீண்டும் செல் அழைக்கிறது.. “ஹலோ நான் சிங்கையில் இருந்து நிஜமா நல்லவன் பேசுறேன்” என ஆரம்பிக்கிறது.. அதை அடுத்து சம்போ சிவசம்போ தீம்(நாடோடிகள் பட சேஸிங்) தீம் மியூஸிக் பிண்ணணியில் கறுப்பி பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசிக் கொண்டே இருக்கிறார். இடையில் லண்டன், பெர்லின், KL, பாரிஸ், சென்னை, டெல்லி, பெங்களூர் என்று வரிசையாக செல் பேசி அலறுகின்றது.
கறுப்பியை தம்பி காதலுடன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கறுப்பியோ டென்சனில் உச்சத்தில் குமுறிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறார்.. இப்போது செல் பேசியை அணைத்து விட்டு, “ஏண்டா படுவா? இப்படி உளறுவாயா இருந்து இருக்கியே.. என் தாவணியை திருடியத்தை தவிர உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. என்னப் பற்றி என்ன என்னவோ எழுதி வச்சு இருக்க நீ.. உன்னை.. ” கோபத்தில் பல்லை நறநறவென கடிக்கும் நேரம் மீண்டும் செல் பேசி அழைக்கிறது.. எண் +974 என்று ஆரம்பிக்கிறது.
“நான் ஆயில்யன் பேசுகிறேனுங்க...”
“ஆயில்யனா?...” கறுப்பியை பேச விடாமல் ஆயில்ஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே செல்கிறார். கறுப்பி பேசுவதற்கு மைக்ரோ வினாடி நேரம் கூட தராமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.. களைத்துப் போன கறுப்பி மயங்கி சரிகின்றார்.. தனது உயிர்க்காதலி மயங்குவதைக் கண்ட தம்பி அவரை தனது கரங்களில் சிறு குழந்தையைப் போல வாங்கிகின்றார்... அய்யகோ... கறுப்பியின் கனம் தாளாமல் தம்பி கீழே சரிகிறார். தம்பியின் மேலே கறுப்பி மயங்கி விழுகிறார்.. ஆயிரத்தில் ஒருவன் ஜெயலலிதா மாதிரி தம்பி கீழே கிடக்க .. அவருக்கு மேலே கறுப்பி கிடக்கிறார்.. கறுப்பியை தள்ளி எழ இயலாமல் தம்பி விழி பிதுங்கி கிடக்கிறார்.. பழைய தூர்தசனின் இரவு நேர ரீங்ரீங் மியூசிக் இசைக்கிறது.. கேமரா மெல்ல எழும்பி தூரமாகி கொண்டே செல்கின்றது... தம்பியும் கறுப்பியும் புள்ளியாகத் தெரிகிறார்கள்..
ஸ்கிரீன் ஸ்லைட் வருகிறது.. “ நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த காதல் ஜோடிகள் தங்கள் பழைய கதைகளைப் பேசி மகிழட்டும்.. வாருங்கள் நாங்கள் கிளம்பலாம்.. அன்புடன் தமிழ் பிரியன்”
டிஸ்கி 1 : இது காதல் கறுப்பியைக் கலாய்ப்பவர்கள் சங்கத்திற்கான பதிவு.. (கா.க.க.ச)
டிஸ்கி 2 : தம்பியின் புகைப்படத்தை இணைக்க முடிவு செய்த போது, அதைப் பார்க்கும் ரசிகைகள் தம்பியை தொல்லை செய்வார்கள் என்பதால் முகத்தை மட்டும் கொஞ்சம் அழகு குறைந்த கமலின் முகத்தை மாற்றி வைத்துள்ளோம். இதை செய்து கொடுத்த ஆயில்யனுக்கு நன்றிகள்.