Saturday, July 11, 2009

இலையில் சோறு போட்டு...



"ஏண்டி.. மெல்லமா நடந்து வரத் தெரியாதா?”
மாலதியின் பேச்சைக் கேட்கக் கூடியவள் இல்லை சின்னு. நடந்து வராமல் தாவித் தாவிக் குதித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். கூடவே அவளது குட்டி நாயான டைகரும். டைகர் அவர்களது குப்பத்தில் இருந்த ஒரு நாய் போட்ட குட்டி... குட்டியிலேயே எடுத்து வந்து பாலூட்டி வளர்த்து இப்போது கறி தின்னும் அளவுக்கு வளர்ந்து விட்டது. சின்னு எங்கே சென்றாலும் கூடவே அதுவும் திரியும்.

இன்று சின்னுவின் மகிழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் செல்லுமிடம். மாலதி, சின்னுவின் அம்மா அந்த பகுதி கவுன்சிலர் வீட்டில் வேலை செய்கின்றார். இன்று கவுன்சிலரின் ஒரே மகனுக்கு பிறந்தநாள். அதனால் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். சின்னுவின் அம்மா அங்கேயே வேலைக்கு இருப்பதால் அவளது பிள்ளைகளையும் கவுன்சிலர் மனைவி சாப்பிட வரச் சொல்லி இருந்தாள்.

சின்னு அம்மா எப்போதுமே மிச்சம் மீதிகளை கட்டிக் கொண்டு வந்து தனது பிள்ளைகளுக்கு சாப்பிடத் தருவாள். இன்று அங்கேயே சுடான சாப்பாடு கிடைக்கும் என்பதால் சின்னுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சின்னு மூன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டியான மாணவி. மாலதி ஆறாம் வகுப்பு படிப்பவர். இப்போது தான் கொஞ்சம் கொஞ்மாக அவளிடம் வெட்கம் குடி கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது.

வானம் மேக மூட்டமாக இருந்தது. கவுன்சிலரின் வீடு கலகலப்பாக இருந்தது. மாலதியும், சின்னுவுன் வீட்டுக்கு வெளியே இருந்த முற்றத்தில் அமர்ந்து இருந்தனர். இவர்களைப் போலவே இன்னும் சில சிறுவர், சிறுமிகளும், வயதானவர்களும் அங்கே இருந்தனர். விருந்தினர்கள் எல்லாம் வீட்டிற்கும் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தனர். சின்னுவின் அம்மா அவ்வப்போது வீட்டினுள் இருந்து மகள்களை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சின்னு நைசாக வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது பிரியாணி அங்கே பரிமாறப்பட்டுக் கொண்டு இருப்பது தெரிந்ததால் சின்னு அவ்வப்போது மூச்சை இழுத்து வாசம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.

இப்போது முற்றம் பரபரப்பாக இருந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். மாலதியும், சின்னுவின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். டைகரை அங்கிருந்த குரோட்டன்ஸ் செடி மறைவில் ஒளிந்து இருக்கச் செய்து இருந்தாள் சின்னு. மாலதிக்கு சின்னுவின் மீது கோபம்.. நாயைக் கூட்டி வந்தது கவுன்சிலர் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று.. சின்னுவிற்கு அதைப் பற்றிய கவலை இல்லை.. தனக்கு கிடைக்கும் சாப்பாட்டில் கொஞ்சம் டைகருக்கு தரப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

வரிசையாக உட்கார்ந்து இருந்தவர்களுக்கு முன் இலை போடப் பட்டு இருந்தது. இலை போட வந்தவரிடம் நைச்சியமாக பேசி ஒரு கிழிந்த இலையை டைகருக்காக சின்னு வாங்கி வைத்து இருந்தாள். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்தது. அம்மா டைகரைப் பார்த்தால் கூட அடி பின்னி விடுவாள் என்று.. ஆனாலும் டைகர் ஒளிந்து இருக்கும் தைரியத்தில் இருந்தாள். எல்லாருக்கும் முன் இலை போடப்பட்டு இருந்தது.

அப்போது தான் பரபரப்பு நிகழ்ந்தது. அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழாவுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி அது. கவுன்சிலரின் கைத் தடிகள் முற்றத்தில் இலை போட்டு அமர்ந்து இருந்தவர்களை விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அனைவரும் எழுந்து ஓரமாக நின்று கொண்டிருந்தனர். சின்னு தனது இரண்டு இலையையும் எடுத்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டு இருந்தாள். அவள் கவனம் முழுவதும் டைகரின் மீதே இருந்தது. டைகர் அமைதியாக செடி மறைவிற்குள்ளேயே இருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இடத்தைக் காலி செய்ய மீண்டும் முற்றத்தில் அவரவர் இடத்தைப் பிடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்தனர். அனைவரும் முன்னும் இலை இருந்தது. ஆனால் சாப்பாடு போட யாரையும் காணவில்லை. கவுன்சிலரின் மகனே வந்து தனது கையால் சாப்பாடு போட வேண்டுமாம்... இதனை வீடியோவாக எடுக்க கேமரா மேன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார்..

சின்னுவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கேமராமேன் வேறு ஏதோ ஒயரில் பிரச்சினை என்று இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தான். அவனது கேமரா தயாரானால் தான் சாப்பாடு போட ஆரம்பமாகுமாம். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கேமரா தயாராகி இருந்தது. கவுன்சிலரின் மகன் தனது சின்னக் கரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாணியை இலையில் வைத்துக் கொண்டிருந்தான். மாலதி, சின்னு இருந்த மூலைக்கு எதிர் மூலையில் இருந்து சாப்பாடு போடும் படலம் ஆரம்பமாகி இருந்தது. சின்னு அவ்வப்போது டைகரை தனது கைகளை வைத்து குரோட்டன்ஸ் செடிக்குள் தள்ளிக் கொண்டு இருந்தாள். டைகருக்கும் பிரியாணி வாசம் வந்து விட்டது போல் இருந்தது.

மாலதிக்கு ஏனோ அங்கே இருப்பது வெட்கமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. இடையில் எழ முடியாது. கவுன்சிலர் மனைவி பார்த்தால் அவ்வளவு தான் பத்ரகாளியாகி விடுவாள். சின்னுவின் இலைக்கு சாப்பாடு வருவதற்கும் நகரவே நகராத 15 நிமிடங்கள் கடந்து இருந்தது. சின்னுவோடு வரிசை முடிந்ததால் கேமராமேன் அதோடு நிறுத்திக் கொண்டு திரும்ப கேமராவோடு மக்கள் கூட்டமும் திரும்பி இருந்தது.

சின்னு வேகமாக செடிக்கு அருகில் கிழிந்த இலையைப் போட்டு தனது இலையில் இருந்த பிரியாணியில் பாதியை- டைகருக்காக வைத்து இருந்தாள். டைகர் அதை முகரத் துவங்கி இருந்தது. சின்னு தனது இலையில் இருந்து ஒரு கவளம் தான் எடுத்து வாயில் வைத்து இருப்பாள். திடீரென இடித்த இடி அவளை அதிர்ச்சிக்குள் ஆக்கியது. அதோடு சடசடவென மழை கொட்ட ஆரம்பித்து இருந்தது. மழையில் தனது டைகரைக் காக்க அதை இழுத்துக் கொண்டு வீட்டு ஓரம் இருந்த சன்சேடுக்கு கீழே ஓடிக் கொண்டு இருந்தாள் சின்னு. சில வினாடிகளில் பிரியாணியும், கறியும், இலையும் மழை நீரில் மிதந்து கொண்டு சின்னுவின் காலடியில் வந்து கொண்டு இருந்தன.

டிஸ்கி : மேலே இருக்கும் படத்தில் இருப்பவர்களின் முகங்களில் தெரியும் அதீதமான உணர்வின் பாதிப்பில் எழுதியது.. :(

15 comments:

Anonymous said...

நல்லா இருக்குங்க கதை.

நிஜமா நல்லவன் said...

Nice!

நட்புடன் ஜமால் said...

சில வினாடிகளில் பிரியாணியும், கறியும், இலையும் மழை நீரில் மிதந்து கொண்டு சின்னுவின் காலடியில் வந்து கொண்டு இருந்தன.\\

மிக நெகிழ்வாய் உணர்ந்தேன் ...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல கதை.. நாம் கவனிக்காததை எழுதியுள்ளீர்.. வாழ்த்துகள்

நாணல் said...

nalla kadhai na..

அன்புடன் அருணா said...

அருமை தமிழ் பிரியன்...பூங்கொத்து...

பீர் | Peer said...

நல்ல கதை,

இலையில் சோறு போட்டு,
நாயை தூர ஓட்டு.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்! கதை மிகவும் அருமை. உரையாடல் போட்டிக்கு அனுப்பியிருந்திருக்கலாம் இதை.

தமிழன்-கறுப்பி... said...
This comment has been removed by the author.
தமிழன்-கறுப்பி... said...

அண்ணே படத்துல முகங்களை காணலையே..

நல்ல கதை.

மங்களூர் சிவா said...

:((((((
பாவம் டைகர் வருத்தமாயிடிச்சி

பாச மலர் / Paasa Malar said...

நெகிழ்ச்சி ..நெகிழ்ச்சி..

சுசி said...

ஆஹா நம்ம தமிழ் பிரியனா இத எழுதினதுன்னு மலைச்சு போய்ட்டேன். டைகர்தான் யாரையோ கடிச்சு வைக்கப் போகுதுன்னு நான் திகிலோட படிக்க சூப்பரு திருப்பம் சூப்பரு. படிச்சு முடிச்சதும் நெஜமாவே வருத்தமா இருக்குங்க.

Thamira said...

நெகிழ்வான கதை.!

ராமலக்ஷ்மி said...

வலைச்சரத்தில் இப்பதிவுக்கு இணைப்பும், ஒரு அழைப்பும், ஒரு கருத்தும்[கோபப்படக்கூடாது:)!]