Monday, November 10, 2008

எழுமையும் ஏமாப்புடைக்கும் குறளின் கதை


மாடியில் இருந்து வேகமாக இறங்கிக் கொண்டு இருந்தார் தொழிலதிபர் முகில்வேந்தன். நேர்த்தியான ஆடையுடன் மிடுக்காக இருந்தார். வயது 60 என்பதை சொன்னால் நம்ப இயலாத அளவு தோற்றம்.

தலைமுடி ஆங்காங்கே இப்போதுதான் வெள்ளை முடி எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கும் அளவு, இளமையாக இருந்தார். தமிழகத்தின் சிறந்த, பெரிய தொழில் நிறுவனங்களின் உரிமையாளர். மாடியில் இருந்து இறங்கி ஹாலில் வந்தவுடன் அங்கே அவரது காரியதரிசி தேன்மொழி நின்று கொண்டு இருந்தார்.

அந்த ஆலமரம் பரந்து விரிந்து இருந்தது. அதன் விழுதுகளில் முடிச்சுக்கள் போடப்பட்டு சிறுவர்களும், சிறுமிகளும் ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருந்தனர். வழிப்போக்கில் இருப்பதால் பிரயாணிகள் அதன் கீழே இளைப்பாறிக் கொண்டு இருந்தனர்.

பிரயாணிகளின் குழந்தைகளுக்காக ஆலமரத்தின் கிளைகளில் கட்டப்பட்ட தொட்டில்களில் குழந்தைகள் உறங்கிக் கொண்டு இருந்தன. சில அழும் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தாலாட்டி தூங்க வைத்துக் கொண்டு இருந்தனர்.

“காலை வணக்கம் சார்”

“தேன்மொழி! காலை வணக்கம்! சொல்லும்மா! இன்னைக்கு என்ன என்ன வேலை இருக்கும்மா?”

“காலை 10 மணிக்கு நமது அலுவலகத்தில் சீனாவில் இருந்து வந்து இருக்கும் பிரதிநிதிகளோட நம்ம பங்கு விற்பனை தொடர்பா பேசனும். 11 மணிக்கு இந்தியாவில் இருக்கும் நம் நிறுவன மேலாளர்களுடன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தருவதைப் பற்றி விவரிக்கனும். 12 மணிக்கு நம்ம ஆசிரமக் குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். 1 மணிக்கு..”

“போதும்மா! போதும்.. மிச்சத்தை அப்புறமா போற வழியில் பேசிக்கலாம்”

“நல்லது சார்! ஆனா இப்ப நாம டாக்டர் சாரங்கனைப் பார்க்கப் போறோம். அதுதான் ஒன்பதில் இருந்து பத்து மணி வரையிலான அட்டவணையில் இருக்கு”

“ஆமாம்மா! அது ரொம்ப முக்கியம். சரி நீ சாப்பிட்டியாம்மா?”

”வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுதான் வந்தேன் சார்”

“அப்ப சரி கிளம்பலாம்”

கடலின் அடி ஆழம். ... அழகான பாசி படர்ந்த பாறைகளின் அவன் அமர்ந்திருந்தான். அந்த ஆண் கடல் குதிரை கடல் நீரில் இங்கும் அங்கும் அலைந்தவனாக அமரவும் இயலாமல், மிதக்கவும் இயலாமல், முகத்தில் சொல்ல இயலாத தவிப்புகளால் தவிப்பது தெரிந்தது. பார்வையில் யாரையோ எதிர் பார்த்துக் கொண்டு இருப்பது தெரிகின்றது.


ஓ.. கண்களில் பிரகாசம்..... தனது இணையை கண்டு விட்ட மகிழ்ச்சி..


“ஏன் பெண்ணே! இவ்வளவு நேரம்?”


“கிளம்புவதில் நேரமாகி விட்டது. அதனால் தான்.. இப்போது உங்களுக்கு எப்படி உள்ளது?”


“சுமை அதிகமாக தெரிகின்றது பெண்ணே!. இன்று இரவு பிரசவம் நிகழும் என்று தெரிகின்றது. எப்படியாவது இன்றைய பொழுதைக் கழித்து விட வேண்டும்”


“எனக்கும் மிகவும் கடினமாக இருக்கிறது. என்னுள்ளும் முட்டை உருவாகி விட்டது. நாளை என் புது கணவனுக்கு அந்த முட்டையைத் தர ஆவலாக இருக்கின்றேன்”


“ஓ.. அப்படியா மிக்க மகிழ்ச்சி..”


“நாளைக் காலையும் என்னை சந்திக்க வா என் இனிய பெண் கடல் குதிரையே! அதற்குள் நம் குட்டிகளை ஈன்று இருப்பேன்”


“நல்லது சென்று வருகின்றேன். என் புது கணவர் தேடுவார். வருகிறேன்”


“வருகைக்கு மிக்க நன்றி”

“சொல்லுங்க டாக்டர்! இது முடியுமா? எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு! ”

டாக்டர் சாரங்கனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் தொழிலதிபர் முகில்வேந்தன்.

“நீங்க கவலைப்பட இதில் ஏதுமில்லை. நாங்க நல்லா பரிசோதனை செய்து வெற்றி கண்ட விடயம் தான் இது. ஒரு மணி நேரம் போதும். அனைத்து விபரங்களும் கிடைக்கும்”

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஏதோ ஒரு ஆர்வம்.. அதான் இதெல்லாம்”

“தவறு ஏதுமில்லை”

ஒலிக்க ஆரம்பித்தது .. அதிகாரம் - அடக்கமுடைமை
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

“என்ன டாக்டர் இது.. கடிகாரம் திருக்குறள் சொல்லுது?”
“இது குறள் கடிகாரம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு குறள் சொல்லும். நமது வாழ்க்கையை செவ்வனே நடத்திச் செல்ல அவ்வப்போது குறளைக் கேட்டுக் கொண்டு இருப்பது உதவுமே”

“மிக நல்ல விடயம் டாக்டர்! எனது அலுவலக அறைக்கும் இது போல் ஒரு குறள் கடிகாரம் வாங்க வேண்டும்”

“சரி முகில் வேந்தன். இந்த படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். இனி நாம் வேலையைக் கவனிக்கலாம்”

“ராணி! ராணி! ஆபத்து! ஆபத்து”

கூக்குரலுடன் அந்த வேலையாள் அறுங்கோணங்களில் அமைந்து இருந்த அறைகளை வேகமாக கடந்து வந்து கொண்டிருந்தாள்.

“என்ன ஆகி விட்டது? ஏன் இவ்வளவு வேகமாக வருகிறாய்?” கேட்டது அந்த தேன் கூட்டை நிர்வகிக்கும் இராணித் தேனீ.

“ராணி! நம் கூட்டை கலைத்து, நாம் சேகரித்து வைத்து இருக்கும் தேனை எடுத்துச் செல்ல மனிதர்கள் நெருப்புடன் வந்து கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக அவர்களைத் தாக்கி நம் கூட்டை காக்க வேண்டும்”

“இல்லை பணிப்பெண்ணே! அவர்கள் மனிதர்கள் நெருப்பினால் நம்மைக் கொல்லக் கூட தயங்க மாட்டார்கள். நாம் சேமித்து வைத்த தேன் தான் அவர்களின் உணவு. இந்த ஆண்டு இங்கு மழை சரிவர பெய்யவில்லை. எனவே விளைச்சலும் குறைவு. அதனால் தான் நமக்கே உண்ண மகரந்தம் கிடைக்கவில்லை. மலைகளில் சென்று உண்டு வந்து, அதன் எச்சத்தை சேமித்து வைத்துள்ளோம். அவர்கள் நெருக்கி வந்தால் நாம் அனைவரும் இங்கிருந்து சென்று விடலாம். நமது மக்கள் அனைவரையும் விரைவில் ஒன்று திரட்டு. வேறு இடத்தில் சென்று வீடு கட்ட வேண்டும்”

“உத்தரவு ராணி! அப்படியே செய்யலாம்”


“ இப்போது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றீர்கள்”

“ஆம்” ஈனஸ்வரத்தில் முகில் வேந்தன் பதிலளித்தார்.

“உங்கள் பெயர் என்னவென்பதை மறந்து விடுங்கள். உங்கள் கண்களை மூடி வைத்துள்ளீர்கள்... இனி உங்கள் மனதை திறக்கிறீர்கள்”

”சொல்லுங்கள் உங்களுக்கு என்னவெல்லாம் தெரிகின்றது?”

“நண்பா! என்ன நடந்தது ஏனிந்த சோகம்! நாம் தேவலோகத்தில் இருக்கின்றோம். நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?”

“எனக்கு பூலோகத்திற்கு செல்ல சாபமிடப்பட்டுள்ளது. அங்கு சென்று சில பிறவிகள் எடுக்க வேண்டுமாம்”

“அப்படி என்ன தவறு செய்தீர்கள்?”

“என்னை ஒரு மனிதனைக் கண்காணிக்கப் பணித்திருந்தார்கள். அவன் தவறு செய்ய நினைத்த போது அவனது பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை. அவன் தவறு செய்ய சென்ற போது பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை. அவன் தவறு செய்த போதும் பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை”

“ஏன்?”
“தவறை நினைத்து மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்பான் என்று நினைத்தேன். அவனது பாவ மன்னிப்பு மூலம் அவனுக்கு நல்லதை நாட நினைத்தேன். ஆனால் அவன் கடைசி வரை தனது தவறை நினைத்து வருந்தாததால் ஒரு தீமையை மட்டும் எழுதினேன்”
“ரொம்ப நல்லவனாக இருந்திருக்கின்றாய். வேறு என்ன செய்தாய்?”
“அதே மனிதன் நல்லதை செய்ய நினைத்த உடன் அவனுக்கு ஒரு நன்மையை எழுதிக் கொண்டேன். நல்லது செய்ய கிளம்பிய போது இன்னொரு நன்மையை எழுதிக் கொண்டேன். நல்லது செய்ததும் மூன்றாவதாக மற்றோரு நன்மையையும் எழுதிக் கொண்டேன்.”

“நண்பா! இது நல்ல விடயம் தான்.... தேவ லோகத்தில் உனது இந்த சிறந்த குணத்தை பாராட்டி, மேலும் நல்ல அந்தஸ்துகளை வழங்கத்தான் உனக்கு பூலோகத்தில் சில காலம் இருக்க பணிக்கப்பட்டுள்ளது. இது சாபமல்ல. உனக்கு கிடைத்த பரிசு என்று கொள். பூலோகம் சென்று நல்ல முறையில் திரும்ப வாழ்த்துக்கள்!”

“நான் அந்தரத்தில் பறக்கின்றேன். தேவ லோகத்தில் என் நண்பனுடன் பேசிக் கொண்டு இருக்கின்றேன்”

“வேறு என்ன தெரிகின்றது?”

“இப்போது ஒரு ராணித் தேனீயாக தேன் கூட்டுக்குள் எனது பணிப்பெண்ணுடன் பேசிக் கொண்டு இருக்கின்றேன்”

“வேறு?”

“கடலின் அடி ஆழத்தில் இருக்கின்றேன்.. பாசிகளாகவும், பாறைகளாகவும் தெரிகின்றது. என்னை நோக்கி ஒரு கடல் குதிரை வருகின்றது. ஓ.. என் உடலும் அதனைப் பார்ததும் நிறம் மாறுகின்றது... நானும் ஒரு கடல் குதிரையாகத்தான் உள்ளேன்”

“ம்.. வேறு என்ன தெரிகின்றது?”

“இப்போது எனக்கு அருகில் ஒரு கன்றுக்குட்டி நின்று கொண்டு இருக்கின்றது”

“அம்மா! எனக்கு பசிக்குதும்மா”

“கொஞ்சம் பொறு கண்ணே! நம் முதலாளி இப்ப வந்திடுவாங்க.. அவங்க பால் எடுத்ததும் உனக்கு பால் தருகின்றேன்”

“பால் எனக்காகத் தானே சுரக்கிறது? ஏன் அவர்களுக்குத் தர வேண்டும்?”

“பால் உனக்கான தேவையை விட அதிகமாகவே சுரக்கிறது தான்... ஆனால் நமது முதலாளி நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்கின்றார். நமக்கு நல்ல உணவு தருகின்றார். குளிப்பாட்டுகின்றார். அவர்கள் வீட்டில் உன்னைப் போல் சிறு குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்களுக்கும் பால் தேவைப்படுகின்றது. எனவே தான் என்னிடம் கொஞ்சம் பாலை எடுத்து விட்டு, மீதியை உனக்குத் தருகின்றனர்.”

“தேன் மொழி கிளம்புவோமா?”

“ஓகே சார்! இப்போதே 10:10 ஆகி விட்டது. சீனப் பிரதிநிதிகள் நமக்காக அலுவலகத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றனராம்”

“சென்று விடலாம் தேன் மொழி. இப்போது ஒரு முக்கியமான மருத்துவ பரிசோதனை செய்து விட்டு வருகின்றேன். அதை உன்னிடம் சொல்ல ஆசைப்படுகின்றேனம்மா”

“விருப்பமிருந்தால் சொல்லுங்கள் சார்”

“முற்பிறவிகளில் நான் யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். டாக்டர் சாரங்கன் இரகசியமாக அதைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வந்தார். இன்று என்னை ஆழ் உறக்கத்திற்கு உட்படுத்தி என் முற்பிறவிகளைக் கண்டுபிடித்தார். நான் முன்பு ஒரு ஆலமரமாக, ஒரு தேவலோக மனிதனாக, ஒரு கடல் குதிரையாக, ஒரு பசுவாக, ஒரு ராணித் தேனீயாக பிறந்து இருக்கின்றேன்”

“சோதனைகள் முடிந்து பேசிக் கொண்டு இருக்கும் போது அங்குள்ள குறள் கடிகாரம் ஒலித்து, ஒரு குறளைச் சொன்னது... ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து ... டாக்டர் சாரங்கன் கூறினார்... “இந்த குறளுக்கு ஏற்றவராக ஏதோ ஒரு பிறவியில் இருந்துள்ளீர்கள். அதனால் தான் உங்களுடைய அனைத்து பிறவிகளிலும் சிறப்பான தூய வாழ்க்கை வாழ்ந்துள்ளீர்கள்” என்று”

“உண்மை தான் சார்! உங்களுடைய அடக்கமுடைமையே உங்களுக்கு இந்த பிறவியில் பல சிறப்புகளையும், மதிப்புகளையும் அளித்துள்ளது. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து என்ற குறளுக்கு ஏற்ப உங்களது வாழ்வை சிறந்த கல்வியைக் கொண்டு நிறைத்து இருப்பதால், உங்களது மற்ற பிறவிகளிலும் அதே சிறப்போடும், அடக்கத்தோடும் தான் இருந்து இருப்பீர்கள்!”

25 comments:

ராமலக்ஷ்மி said...

அற்புதம்.

மிக மிக நல்ல குணம் படைத்தோருக்கு அடுத்த பிறவியே இல்லாது முக்தி பெறுவர் என்றும் ஒரு சொல் உண்டு. ஆனால் இக்கதை மிக மிக நல்ல குணம் படைத்தோர் மறுபடி மறுபடி உயிர்தெழுவதால்தான் உலகம் அழியாமல் இருப்பதாக உணர்த்துகிறது.

முந்தைய பிறவிகளில் ஆலமரமாய் அடைக்கலம் தரும் இயல்புடன், கடற்குதிரையாய் பரந்த மனத்துடன், தேனிக்களின் ராணியாய் விட்டுக் கொடுத்து விலகிச் செல்லும் வியக்கத்தகு செயலுடன், தேவலோகத்துச் சித்ரகுப்தன் வேலையில் எல்லோருக்கும் நன்மை தவிர வேறு நினைக்கத் தெரியாத நல்லிதயத்துடன், கோமாதாவாய் பாலைத் தன் கன்றுக்கு மட்டுமின்றி மானிடருக்கும் மனமுவந்து பகிர்ந்தளிக்கும் கருணையுடன் எனப்படிப் படியாகப் பல பிறவி எடுத்துப் பின் மனிதனாய்... மனிதருள் மாணிக்கமாய் முகில்வேந்தன் பிறவியெடுத்ததாய் கதை அமைத்திருக்கும் உத்திக்குப் பாராட்டுக்கள்.

வ்ள்ளுவரின் குறளுக்கேற்ப வாழ்ந்து காட்டிய பிறவி.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி said...

குறள் கடிகாரத்துக்கு patent வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் தமிழ் பிரியன்.

துளசி கோபால் said...

டாக்டர் சாரங்கன் முகவரி, ப்ளீஸ்....

Tech Shankar said...

நல்ல காரியத்தைத் துவங்கி இருக்கிறீர்கள். நன்றி.. வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி பின்னூடங்கள் ரெண்டுக்கும் பெரிய ரிப்பீட்டே...:)
அற்புதம் அற்புதம்

எட்வின் said...

நல்ல கருத்துக்களை குறளுடன் அற்புதமாக சொல்லிருக்கிறீர்கள்...
நன்றி,பாராட்டுக்கள்

ambi said...

ஒரு வித்யாசமான கதை முயற்சி. ரசித்தேன்.

@டீச்சர், அந்த அட்ரஸ் வந்தவுடன் மெயிலை இங்கு பார்வேர்ட் செய்யவும். :))

VIKNESHWARAN ADAKKALAM said...

அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

நாமக்கல் சிபி said...

கதையை அருமையா சொல்லி இருக்கீங்க தமிழ் பிரியன்! ஹேட்ஸ் ஆஃப்!

நாமக்கல் சிபி said...

//ஹேட்ஸ் ஆஃப்!//

மன்னிக்கவும்!
தொப்பியைக் கழற்றி விடுகிறேன்!

Anonymous said...

மிகவும் சிறப்பாக இருக்கிறது தமிழ்.

தொடருங்கள்.

வெண்பூ said...

தமிழ்.. அந்த குறள்களின் விளக்கம் கொடுங்களேன்.. எனக்கு அவை புரியாததால் கதையுடன் ஒன்ற முடியவில்லை. :(

தமிழ் அமுதன் said...

என்ன ஒரு கற்பனை?
சிலிர்ப்பு!

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் வாழ்க...

தமிழன்-கறுப்பி... said...

கலக்குறிங்க தல...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆமா குறள் எல்லாம் மனப்பாடமா அல்லது...
நினைவில் நிற்கிற குறள்களை மட்டும்தான் எடுத்தீர்களா..

தமிழன்-கறுப்பி... said...

நல்லா கதை சொல்றிங்க தல...

தமிழன்-கறுப்பி... said...

துளசி கோபால் said...
\
டாக்டர் சாரங்கன் முகவரி, ப்ளீஸ்....
\\


ரிப்பீட்டு...:)

Unknown said...

வாவ் சூப்பர் கதை அண்ணா.. :))))))

சின்னப் பையன் said...

அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

நசரேயன் said...

அருமை.. அருமை
நல்ல நடை
வாழ்த்துக்கள்

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப நல்லாயிருந்தது...

rapp said...

ரொம்ப ரொம்ப நல்லா இருந்ததுங்க:):):)

rapp said...

//பிரயாணிகள் அதன் கீழே இளைப்பாறிக் கொண்டு இருந்தனர்.

பிரயாணிகளின் குழந்தைகளுக்காக ஆலமரத்தின் கிளைகளில் கட்டப்பட்ட தொட்டில்களில் குழந்தைகள் உறங்கிக் கொண்டு இருந்தன//

ஆனா இதப் படிச்சிட்டுத்தான் ரொம்பக் குழம்பிட்டேன். என்னடாது, பிரியாணி ஏன் இளைப்பாறுது? அதுக்கு ஏது குழந்தைங்க? ஒருவேளை கோழியோடக் குழந்தயாவோ இல்ல ஆட்டோடக் குட்டியாவோ இருக்குமோன்னு சந்தேகம் வந்துடிச்சி:):):) அப்புறம் பார்த்தா பாசஞ்சர்சை இப்டி கொச்சையா சொல்லிருக்கீங்க:):):) என்னை மாதிரி தமிழ்ல பதிவெழுதுங்கன்னா கேட்டாத்தான:):):)

rapp said...

me the 25TH:):):)