Sunday, November 9, 2008

பொரிகடலை கடையும், காதல்களும், சில புத்தக அனுபவங்களும்

புத்தக அனுபவங்களைப் பற்றி ஒரு தொடர் பதிவு எழுத அத்திரி அழைப்பு விடுத்தார். புத்தகம் இருந்தால் சோறு தண்ணி கூட வேண்டாம் என்று திட்டு வாங்கிக் கொண்டே இருக்கும் பழக்கம் இருந்தது. புத்தகப் புழு என்று திட்டு வாங்குவதிலும் ஒரு ஆனந்தம் இருக்கின்றது.

பாடப் புத்தகங்களை இந்த பதிவில் கவனமாக தவிர்த்து விடலாம். நான் முதலில் படிக்க ஆரம்பித்தது ராணி தான். அப்போது நான்காவது, ஐந்தாவது படித்துக் கொண்டிருப்பேன். எங்களது சந்தில் இருக்கும் வீட்டுப் பெண்கள் கூட்டாக ராணி வாங்குவார்கள். மதிய அல்லது மாலை நேரங்களில் எங்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து எனது அம்மா வாசிக்க மற்றவர்கள் கவனமாக கேட்பார்கள். ராணியின் அனைத்து பகுதிகளும் வாசிக்கப்பட்டு அலசப்படும். அப்போது அருகில் அமர்ந்து நானும் கேட்பேன். பின்னர் கொஞ்சம் நானும் வாசிக்கப் பழகினேன்.

பின்னர் 7,8 வகுப்புகளில் சிறுவர்மலர் கவர்ந்தது. அதில் வரும் படக்கதைகள் ரொம்ப பிடித்தவை. பலகுரல் மன்னன் ஜோ நம்ம பேவரைட் பகுதி. ஸ்ரீராம் பெட்ஸ் சார்பில் சிறுவலர்மலருடன் வழங்கிய லேபிளுக்காக முதன்முதலில் தினமலர் வாங்கிய வெள்ளி மறக்க இயலாதது. அதைத் தொடர்ந்து எனக்கு ராணி காமிக்ஸ், அம்புலிமாமா போன்றவற்றை எனது நண்பன் அப்துல் அஹது பழக்கினான். அவர்கள் வீட்டில் இருந்து படிக்க எடுத்து வந்து தருவான். (அஹது குடும்ப சூழலினால் 8 ம் வகுப்பு வரை மட்டுமே படித்தான்... பின்னர் வேலை தேடி திருப்பூருக்கு சென்று அங்கு இப்போதும் கூலி வேலை செய்து வருகின்றான்.)
கபீஷ் எனக்கு பிடித்த பகுதி. வால் நீட்டி அது செய்யும் சேட்டைகளை சிலாகிப்போம்.

9ம் வகுப்பு சேர்ந்ததும் பெரிய மாற்றங்கள். நூலகங்களுக்கு செல்ல ஆரம்பித்த காலமது. எங்கள் ஊரில் உள்ள நூலகத்தில் உறுப்பினராகவும் சேர்ந்திருந்தேன். தினத்தந்தி, தினமலர் என்று தினசரிகளைப் படிப்பேன். நூல்களாக துப்பறியும் நாவல்களே அதிகம் கவர்ந்தன. சங்கர்லால் துப்பறிகிறார் அனைத்தும் தேடித் தேடிப் படித்தேன். துப்பறியும் நாவல்கள் கிடைக்காத போது வேறு நாவல்களையும் படிக்க ஆரம்பித்தேன். நில மங்கை இன்னும் நினைவில் இருந்து விலகாத ஒன்று. இராஜேஷ்குமாரின் நாவல்களை வெறியுடன் படித்த காலமிது. இதே கால கட்டத்தில் தான் மறைத்து விற்கப்படும் (?) சில புத்தகங்களையும் படித்தேன்.


இது என்னுடைய புத்தக அலமாரி இல்லை

11 ம்வகுப்பு படிக்கும் போது மாற்றம் வித்தியாசமாக வந்தது. மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து வீடும். டியூசன் எல்லாம் வீட்டில் அனுப்பவில்லை. எனவே மாலையில் ஊர் சுற்றுவதைத் தடுக்க வீட்டுக்கு சிறிது தள்ளி மெயின் ரோட்டில் பொரிகடலை கடை வைத்து கொடுத்து விட்டார்கள். மாலை 5 முதல் 9 வரை வியாபாரம் பார்க்க வேண்டும். பொரிகடலை(உடைச்ச கடலை), பொரி, பட்டாணி, உப்புக்கடலை(சுண்டல்), அவல் எல்லாம் மொத்தமாக படி கணக்கில் வாங்கி சில்லரையில் விற்க வேண்டும். ( +2 படிக்கும் வயதில் 50 காசு, 1 ரூபாய்க்கு பட்டாணிக்கடலை விற்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்க இயலுமா என்று தெரியவில்லை... :( )

கடலை மடித்துக் கொடுக்க பேப்பர் வேண்டும் என்பதால் பழைய பேப்பர்களையும் விலைக்கு வாங்குவோம். பலதரப்பட்ட பாடப்புத்தகங்கள், நாவல்கள், வாராந்திரிகள், தினசரிகள் எல்லாம் கடைக்கு எடைக்கு வரும். வியாபாரம் இல்லாத நேரங்களில் அவைகளைப் படித்துக் கொண்டு இருப்பேன். வரும் புத்தகங்களுக்கு இடையில் இருக்கும் துண்டுக்காகிதங்கள், கிறுக்கியவை மூலம் தெருவில் பலரின் காதல் கதைகளை அறிந்து கொள்ள முடிந்தது சுவாரஸ்யமான அனுபவம். இந்த காலகட்டத்தில் நூலகங்களுக்கு செல்லும் வாய்ப்பும் குறைந்தது. உறுப்பினர் அட்டையும் காலாவதியாகி விட்ட காலமிது.

+2 முடியும் வரை (1996) வரை பொரிகடலைக் கடை வியாபாரம் மாலைகளில் தொடர்ந்தது. +2 முடிந்ததும் அடுத்த படிக்க முடியாததால் வேறு கடைக்கு மாற்றம் நிகழ்ந்தது. இங்கு கடை முழு நேரம் என்பதால் நூலகம் செல்வதும் குறையத் தொடங்கியது. டீக்கடையில் தினத்தந்தியுடன் அமைதியடைய வேண்டி இருந்தது. நேரம் கிடைக்கும் போது அவசர அவசரமாக நூலகங்களுக்கு சென்று திரும்புவேன்.

ஒரு வருடம் இதே கதைதான்... 1997 ல் காலச்சக்கரம் வேறு திசையில் சுழன்று அடித்து சென்னையில் வந்து போட்டது. துபாய் கம்பெனி செலவில் படித்துக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தேன். தங்கி இருந்த இடத்திற்கு அருகிலேயே 50 மீட்டர் அருகில் நூலகம். ஆனாலும் காலையில் சென்று மாலையில் திரும்புவதால் நூலகம் செல்ல வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இதில் இன்னொரு வேடிக்கை எங்களுக்கு வெள்ளி விடுமுறை, நூலகத்திற்கும் வெள்ளி விடுமுறை.... என்ன கொடும பாருங்க..

துபாய் வந்த பிறகு(1998) வெகுநாட்கள் புத்தகங்களுக்கும் நமக்கும் இடையே தொடர்பு அறுந்து போய் இருந்தது. அதிக பட்சமாக ஆனந்த விகடனும், தமிழ் கம்ப்யூட்டர் என்ற இதழுமே துணையாக இருந்தது. ஷார்ஜா UAE Exchange பின்புறம் இருக்கும் மலையாளி கடை தான் அப்போதைய வடிகால்.

நான் வேலை செய்த நிறுவனத்தில் ஒரு நண்பர் வேலை செய்தார். எனக்கு வேலையில் ஜூனியர். ஆனால் நிறைய கவிதை, கதைப் புத்தகங்களை ஊரில் இருந்து வாங்கி வந்து படிப்பார். பொழுது போகாத நேரங்களில் அவரிடம் வாங்கி படிப்பேன். வைரமுத்து கவிதைகள், நாவல்கள், பிற மொழி கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் (கலில் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்..) வாசிக்கக் கிடைத்தது. அங்கு தான் கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம் போன்றவை படித்தேன்.

துபாயில் இருந்த போது வாசிப்பு வேறு மார்க்கத்திலும் இருந்தது. அது ஆங்கில தினசரிகளின் வாசிப்பு. ஆங்கில தினசரி காசு கொடுத்து வாங்கும் நிலையில் இல்லை. எங்களுடன் வேலை செய்யும் ஒரு நண்பருக்கு ஈரான் வங்கியில் பணி. மாலை வேலை முடிந்து வரும் போது Gulf News, Khaleej Times ஆகிய இரு தினசரிகளையும் எடுத்து வருவார். இரவு உணவுக்கு பிறகு ஒரு மணி நேரம் பார்ப்பேன். மறுநாள் காலை அதை மீண்டும் வங்கியில் சென்று வைத்து விடுவார். அப்போது தான் நிறைய அரசியல் சம்பந்தமான கட்டுரைகள் படிக்க நேர்ந்தது. (நன்றி அரவிந்த் அண்ணே)

2006 ல் ஊருக்கு வந்த பிறகு படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது (கல்யாணம் ஆயிடுச்சுங்க.. :)) ). தங்கமணிக்கும் குமுதம், ராணி படிக்கும் ஆர்வமெல்லாம் இல்லாததால், நமக்கு ஆதரவு கிடைக்கலை.

2007 சவுதி வந்த பிறகு இணையம் கிடைத்தது. நிறைய வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்கியின் நாவல்கள் அனைத்தையும் இணையத்தில் தான் வாசித்தேன். பொன்னியின் செல்வனின் மூழ்கி விட்டேன். நிறைய சிறுகதைகள் படிக்கக் கிடைக்கின்றன. ஆனந்த விகடன், குமுதம் போன்றவை வாங்குவதே இல்லை. அதில் வருவதை விட சிறந்த படைப்புகள் இணையத்தில் வருவதாக எனது கருத்து.

PKP யின் பக்கங்களில் ஒவ்வொரு பதிவிலும் ஒரு மென் புத்தகம் கொடுப்பார். அனைத்தும் சிறந்த படைப்புகளாக இருக்கும்.

இறுதியாக இரண்டு விஷயங்கள் சொல்ல இருக்கின்றது.

1. எனது வாசிப்புகளில் எழுத்தாளர்களில் கல்கியும், அதற்கு அடுத்து சுஜாதாவும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். கவிதை படிப்பதில் ஆர்வமில்லை என்றாலும் வைரமுத்துவின் கதைக் கவிதைகள் பிடிக்கும்

2. இதுவரையிலான என் வாழ்வில் தனிப் புத்தகமாக எந்த கட்டுரை நூலையோ, நாவலையோ காசு கொடுத்து வாங்கியதே இல்லை. ஆனந்த விகடன், குமுதம் என்ற நிலையில் தான் இருந்திருக்கின்றேன். பெரிய பெரிய எழுத்தாளர்களைப் படித்ததையெல்லாம் மற்றவர்கள் கூறும் போது பிரமிப்பாக இருக்கும்.

இறைவன் நாடினால் ஊருக்கு வரும் போது நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

பணம் இல்லாமல் தவித்த அந்த காலங்களில் புத்தகங்களுக்காக ஏங்கினேன். பர்ஸ் முழுவதும் பணம் இருக்கும் இந்த காலத்தில் புத்தகம் வாங்க வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றேன்.

இந்த தொடர் விளையாட்டுக்கு இரண்டு பேரை நான் அழைக்க விரும்புகின்றேன்.

1. ஆயில்யன்... அமைதியாக இருக்கிறாரே என்று பார்க்காதீர்கள். உள்ளே ஏதாவது புயல் கிடைக்கலாம்.

2. ராமலக்ஷ்மி அக்கா... நான் டவுசர் போட்டுக் கொண்டு ஒன்னாப்பு சென்ற காலங்களிலேயே எழுத தொடங்கியவர்கள். அவர்களது வாசிப்பும் நெடியதாக இருக்கும் என்று நம்புகின்றேன். அவர்களுக்கு நேரம் இல்லை என்று சொல்வார்கள் என்றாலும் ஆறு மாதம் கழித்தாவது அவர்களது வாசிப்பனுபங்களைப் பற்றி எழுத அழைக்கின்றேன்.

35 comments:

பாபு said...

//2006 ல் ஊருக்கு வந்த பிறகு படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது (கல்யாணம் ஆயிடுச்சுங்க.. :)) )//

அது எப்படிங்க எல்லோருக்கும் ஒரே மாதிரி நடக்குது

//பணம் இல்லாமல் தவித்த அந்த காலங்களில் புத்தகங்களுக்காக ஏங்கினேன். பர்ஸ் முழுவதும் பணம் இருக்கும் இந்த காலத்தில் புத்தகம் வாங்க வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றேன்//

வாழ்க்கை சுவாரஸ்யமே அதுதான்

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

ராமலக்ஷ்மி said...
புத்தக அனுபவங்களை அழகாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீகள். கேள்வி பதிலாக இன்றி, கட்டுரையாக...நானும் அப்படியே எழுதலாம்தானே, [ஆஹா, ஆறு மாத அவகாசம் தந்திருப்பதற்கு ரொம்ப நன்றி:)]. இப்போதே என் புத்தக அனுபவம் பற்றித் தெரிய வேண்டுமானால், அது எப்போதும் எல்லோருக்கும் காணக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது எனது profile-லில்:)!

ஆம், வைரமுத்துவின் கதை கவிதைகள் ரொம்ப அருமையாக இருக்கும்.

//கபீஷ் எனக்கு பிடித்த பகுதி. வால் நீட்டி அது செய்யும் சேட்டைகளை சிலாகிப்போம்//

நானும் படித்து ரசித்திருக்கிறேன்:)!

VIKNESHWARAN ADAKKALAM said...

:))) அருமையாக இருக்கிறது...

Anonymous said...

Me the fourth. படிச்சிட்டி கமெண்டறேன்

ஆயில்யன் said...

நல்ல பொறுமையா நிதானிச்சு யோசிச்சு எழுதியிருக்கீங்க


நல்லா இருக்கு !

//2006 ல் ஊருக்கு வந்த பிறகு படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது (கல்யாணம் ஆயிடுச்சுங்க.. :)) ).//

எம்புட்டு சந்தோசம் பாருங்களேன்!!!!

:))

ஆயில்யன் said...

//ஆயில்யன்... அமைதியாக இருக்கிறாரே என்று பார்க்காதீர்கள். உள்ளே ஏதாவது புயல் கிடைக்கலாம்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஒரு புயலும் கிடைக்காது :)

ஆனா கண்டிப்பா எழுதிடுவேனாக்கும்!

Anonymous said...

//( +2 படிக்கும் வயதில் 50 காசு, 1 ரூபாய்க்கு பட்டாணிக்கடலை விற்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்க இயலுமா என்று தெரியவில்லை... //

wow உண்மையிலேயே கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறி இருக்கீங்க

துளசி கோபால் said...

அருமையா இருக்குப்பா.

ஆனாலும் டீச்சரா இருந்துக்கிட்டு ஒன்னும் சொல்லாம இருக்க முடியுமா?

கீழ்க்கண்ட வரிகளில் விட்டுப்போன சொல் என்ன?


//வீட்டுக்கு சிறிது தள்ளி மெயின் ரோட்டில் பொரிகடலை வைத்து கொடுத்து விட்டார்கள்.//

அ. வடை
ஆ. இடை
இ: கடை



//ஆனந்த விகடன், குமுதம் போன்றவை வாங்குவதே இல்லை. அதில் வருவதை விட சிறந்த படைப்புகள் இணையத்தில் வருவதாக எனது கருத்து.//

ஆமாமாம். எனக்கும் இதே கருத்து. ஒரு ரிப்பீட்டேய் போட்டுக்கவா? ;-))))

Anonymous said...

//2006 ல் ஊருக்கு வந்த பிறகு படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது (கல்யாணம் ஆயிடுச்சுங்க.. :)) ). தங்கமணிக்கும் குமுதம், ராணி படிக்கும் ஆர்வமெல்லாம் இல்லாததால், நமக்கு ஆதரவு கிடைக்கலை.//

வாங்கி குடுங்க ஒரு வேளை படிப்பாங்களோ என்னவோ

Anonymous said...

//2006 ல் ஊருக்கு வந்த பிறகு படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது (கல்யாணம் ஆயிடுச்சுங்க.. :)) ). தங்கமணிக்கும் குமுதம், ராணி படிக்கும் ஆர்வமெல்லாம் இல்லாததால், நமக்கு ஆதரவு கிடைக்கலை.//

ஊருக்குப்போகும் நண்பர்கள் கிட்ட புத்தகங்கள் லிஸ்ட் குடுத்து sea mail பண்ண சொல்லுங்க உங்க விலாசத்துக்கு. ரெண்டு இல்லீனா மூணு மாசத்துல வந்துரும். கொஞ்சம் காஸ்ட் எபெக்டிவாவும் இருக்கும்.

அத்திரி said...

2006 ல் ஊருக்கு வந்த பிறகு படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது (கல்யாணம் ஆயிடுச்சுங்க.. :)) ).//

வீட்டுக்கு வீடு வாசப்படி

கடலை வியாபாரம் ஓகே. கடலை போட்டீங்களா/???????

Expatguru said...

//பணம் இல்லாமல் தவித்த அந்த காலங்களில் புத்தகங்களுக்காக ஏங்கினேன். பர்ஸ் முழுவதும் பணம் இருக்கும் இந்த காலத்தில் புத்தகம் வாங்க வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றேன்.
//

செளதியில் இருக்கும் பலருக்கும் நேரும் அனுபவம் தான். குமுதம் விகடன் போன்ற குப்பைகளை தவிர்த்துவிட்டு வலையில் கிடைக்கும் நல்ல ஆங்கில நூல்களை படியுங்கள். உங்கள் சுய முன்னேற்றத்துக்கு இது போன்ற நூல்கள் உதவும்.

நல்ல கட்டுரையை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Thamira said...

அண்ணே, இந்த தொடரை ஆரம்பித்தை என் பெயரை எங்குமே குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன். நான் ஆசைப்பட்டமாதிரியே தொடர் நமக்கு பிடித்தவர்களை சுற்றி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Thamira said...

1996ல் +2..? ஆ.. பெருசுன்னுதானே நினைச்சுக்கிட்டிருந்தேன்.. வட போச்சே.. நா 1993லேயே முடிச்சுட்டேனே.. அப்பிடின்னா என்னை விட 3 வயசுதான் பெரியவரா நீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

Thamira said...

புக்கு படிச்ச அனுபவத்தை சொல்லுங்கன்னா.. வாழ்க்கை வரலாறையே சுருக்கமாக எழுதிவிட்டீர்களே.. நல்லாருந்தது அனுபவம். ரசித்தேன்..

ராமலக்ஷ்மி said...

////ஆனந்த விகடன், குமுதம் போன்றவை வாங்குவதே இல்லை.//

வாராவாரம் வாங்காமல் இருந்ததே இல்லை:).

//அதில் வருவதை விட சிறந்த படைப்புகள் இணையத்தில் வருவதாக எனது கருத்து.//

உடன் படுகிறேன். இந்தப் பத்திரிகைகள் முன் போல இல்லை என்றாலும் பழகி விட்ட படியாலும், தமிழ் நாட்டு ந்யூஸ்காகவும் தொடருகிறேன்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்கும் என்ற கூற்றுக்குத் தகுந்த பதிவு.....

கண்டதைப்படித்து பண்டிதர் ஆகியிருக்கிறீர்....

ரிஷி (கடைசி பக்கம்) said...

//பணம் இல்லாமல் தவித்த அந்த காலங்களில் புத்தகங்களுக்காக ஏங்கினேன். பர்ஸ் முழுவதும் பணம் இருக்கும் இந்த காலத்தில் புத்தகம் வாங்க வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றேன்.
//

:-))

Anonymous said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிக அழகாக தொகுத்துள்ளீர்கள் உங்கள் வாசிப்பனுபவத்தை.

வாசிப்புதான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துகிறது.

தமிழன்-கறுப்பி... said...

அட்டென்டன்ஸ்...!

சின்னப் பையன் said...

அருமை.

Anonymous said...

//மிக அழகாக தொகுத்துள்ளீர்கள் உங்கள் வாசிப்பனுபவத்தை.

வாசிப்புதான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துகிறது.//

என் கருத்தும் இதேதான் தமிழ்.

ச.பிரேம்குமார் said...

//கபீஷ் எனக்கு பிடித்த பகுதி. வால் நீட்டி அது செய்யும் சேட்டைகளை சிலாகிப்போம்//

எனக்கும் கபீஷ்னா ரொம்ப பிடிக்கும் :)

கபீஷ் said...

பிரேம்குமார் said...
//கபீஷ் எனக்கு பிடித்த பகுதி. வால் நீட்டி அது செய்யும் சேட்டைகளை சிலாகிப்போம்//

எனக்கும் கபீஷ்னா ரொம்ப பிடிக்கும் :)
//

நன்றி பிரேம் நீங்க என்னைய பத்தி தானே சொன்னீங்க :-)

கபீஷ் said...

நான் ட்ரெஸ் எடுக்க குடுக்குற காசில புத்தகம் வாங்குவேன்

தமிழன்-கறுப்பி... said...

அன்னைக்கு நேரம் கிடைக்காததால பதிவைப்படிக்கல இப்ப படிக்க ஆரம்பிச்சதும் நிறுத்தாம படிச்சேன்...

தமிழன்-கறுப்பி... said...

கோர்வையா வந்திருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

வைரமுத்துவின் கதைகள் அதுவம் கவிதை நடையில் அமைந்த கதைகள்...ரசனையோடு படிக்கிறவைகள்..பெரிய பாடல்கள் போலத்தான் இருக்கும் அவை...

தமிழன்-கறுப்பி... said...

என்ன இருந்தாலும் புத்தகங்களை கணினியில் வாசிக்கிறது முழுமையான அனுபவமாக இருப்பதில்லை கண் பழுதாகியதுதான் மிச்சம்...:(

தமிழன்-கறுப்பி... said...

\\
இறைவன் நாடினால் ஊருக்கு வரும் போது நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
\\

நானும் ஒரு பெரிய லிஸ்ட் வச்சிருக்கிறேன்...:)
கொடுக்கட்டுமா...?

மஸ்தூக்கா said...

உங்க எழுத்து நடையைப் பார்த்தப்பவே நினைச்சேன் நீங்க சுஜாதா ரசிகரா இருப்பீங்களோன்னு
நானும் தான் பள்ளி கல்லூரி நாட்களில் சுஜாதா ரசிகன்

லிங்காபுரம் சிவா said...

அருமையாக இருக்கிறது அனுபவ கட்டுரை,,,

rapp said...

//பாடப் புத்தகங்களை இந்த பதிவில் கவனமாக தவிர்த்து விடலாம்//

நல்லா உஷாராத்தான் இருக்கீங்க:):):)