இதற்கு முதலில் கொஞ்சமா ப்ளாஸ்பேக்களைப் பார்த்தால் புரியும். சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் லீக் தான் முஸ்லிம்களின் ஏகபோக பிரதிநிதிகளாக இருந்தனர். காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு நாற்காலிக்காக அடித்துக் கொண்ட சண்டையில் முஸ்லிம் லீக் சிதறுண்டு போனது. அப்துல் சமது, அப்துல் லத்தீப் என பிற கழகங்களில் மறைவில் பதவி சுகம் அனுபவித்தனர். அவர்களுக்குப் பிறகு இன்னும் பல பிரிவுகளாக பிரிந்து சென்று விட்டனர். இது முஸ்லிம் லீக்கின் கதை.
1990 வரை முஸ்லிம்களிடன் அரசியல் விழிப்புணர்வு என்பதே சுத்தமாக இல்லை எனலாம். 1992 பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்ந்து கிடந்தது. தமிழகத்திலும் இதன் தாக்கம் இருந்தது. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்னும் அளவுக்கு நிலைமை முற்றியது. நிறைய பேர் தீவிரவாத குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டனர். இச்சூழலில் முஸ்லிம் லீக் சமுதாய மக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்கள் நாற்காலிகளைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும் விழிப்புடன் இருந்தன. இதனால் மக்கள் முழுமையாக முஸ்லிம் லீக்கள் மீது விரக்தி அடைந்தனர்.
இந்த நேரத்தில் தான் சில இஸ்லாமிய தலைவர்கள் முஸ்லிம் அமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம் (இந்து முண்ணனி போல) என்ற அமைப்பை நிறுவ முயற்சித்தனர். அதில் இன்றைய PJ வும் இருந்தார். முஸ்லிம்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு அதற்கு சிதம்பரத்தைச் சேர்ந்த ஒருவரையும் தலைவராக தேர்தெடுத்தனர். அப்போதைய போலிஸ் கெடுபிடியில் பயந்து போய் அத்தலைவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து PJ உள்ளிட்டோர் தொடர்ந்து இந்த அமைப்பை நடத்தி வந்தனர்.
அதன் பின்னர் மீண்டும் 1995 ல் புதிய அணி ஒன்று உருவானது. குணங்குடி ஹனிபா, பி.ஜெயினுலாபுதீன்,அலாவுதீன்,உள்ளிட்ட தலைவர்கள் கூடி புதிய அமைப்பு நிறுவ வேண்டும் என்று தீர்மானித்தனர். ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ் போண்றோரும் இதில் அப்போது இணைந்தனர். குணங்குடி ஹனிபாவை நிறைய பேருக்கு தெரியாது. தமிழ்க்குடி தாங்கி அய்யா டாக்டர் ராமதாஸ் அரசியல் கத்துக்குட்டியாக இருந்த போது உடன் இருந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருந்தவர் என்றால் பார்த்துக் கொள்ளவும். ( மருத்துவர் அய்யா குணங்குடி ஹனிபா, பழனி பாபா எல்லாரையும் மறந்து ஏப்பம் விட்டது கிளைக் கதை). ஜவாஹிருல்லாஹ் சிமி அமைப்பில் மும்முரமாக இருந்தவர். அந்நேரத்தில் பாக்கர் சிறையில் இருந்தார்.
அவ்வமைப்பிற்கு என்ன பெயர் சூட்டுவது என்று ஆலோசித்த போது குணங்குடி ஹனிபா தாம் பதிவு செய்து வீணாக இருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரைக் கொடுத்து உதவினார். 1995 ஆகஸ்ட்டில் த.மு.மு.க உருவானது. அதை அடுத்து மக்களிடையே தமுமுகவை எடுத்துச் செல்லும் முயற்சி தீவிரமாக அரங்கேறியது. ஏற்கனவே தவ்ஹீத் இஸ்லாமிய பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் பிரபலமாக இருந்த PJ தமுமுகவின் அமைப்பாளராகவும் இருந்தார். அவர் தமுமுக பிரச்சாரப் பணிக்கு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டார். தமிழகம் முழுவதும் ஏற்கனவே இருந்த தவ்ஹீத் அமைப்பினர் தமுமுகவில் முழு மூச்சாக இறங்கினர்.
1997 ல்கோவையில் கலவரம் ஏற்ப்பட்டது. அதில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களின் சொத்துக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் முஸ்லிம்களிடம் அரசியல் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்தது. 1999 ல் சென்னை மெரினா கடற்கரையில் வாழ்வுரிமை மாநாடு என்ற ஒரு மாநாடு தமுமுக வால் நடத்தப்பட்டது. இதில் செல்வி.ஜெயலலிதா அவர்களும் கலந்து கொண்டது மக்களை தமுமுகவினை திரும்பிப் பார்க்க வைத்தது.
2003 ல் தஞ்சையில் முஸ்லிம்களில் பெரும் பேரணி தமுமுகவால் நடத்தப்பட்டது. பெருந்திரளான முஸ்லிம்கள் இதில் பங்கெடுத்தனர். இந்நிலையில் PJ தனது தவ்ஹீத் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வந்ததால் புரோகித அடிப்படையிலான முஸ்லிம்கள் தமுமுகவை ஒரு சார்பான அமைப்பாக பார்க்கும் நிலை இருந்தது. இது தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோருக்கு உறுத்தலாக இருந்தது.
இதனை அடுத்து சிலபல டிராமாக்களுக்கு (பெருங்கதை அது..) PJ விலகிச் செல்ல தமுமுகவில் சில சுணக்கம் நிலவியது. 2006 தேர்தலில் ஒரு புதிய சூழல் நிலவியது. அதாவது முஸ்லிம்களிடம் தனி இட ஒதுக்கீடு என்ற கோஷம் வலுவாக இருந்தது. இது குறித்து தமுமுக, TNTJ உள்ளிட்டவை மக்களை பிரச்சாரங்கள் மூலம் தெளிவாக்கி வைத்து இருந்தனர். TNTJ அம்மா ஏற்படுத்திய இட ஒதுக்கீடு ஆராயும் ஆணையத்திற்காக அம்மாவிடம் தஞ்சம் புகுந்தது.
தமுமுகவிற்கு ஜெயலலிதா மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் 1999 வாழ்வுரிமை மாநாட்டில் அவர் “இனி BJP உடன் எப்போதும் கூட்டு வைக்க மாட்டேன்” என்று மெரினாவில் வைத்து கூறி இருந்தார். ஆனால் மீண்டும் BJP யுடன் கூட்டு சேர்ந்து விட்டிருந்தார். எனவே தமுமுக திமுக அணியுடன் சேர்ந்தது. அதன் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவிற்கு கிடைக்க பாடுபட்டனர்.
இத் தேர்தலிலேயே தமுமுக போட்டியிட முயற்சி செய்தது. வாணியம்பாடி, மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் போட்டியிட எத்தனித்தது. ஆனால் கடைசி நேரக் குளறுபடியில் வாணியம்பாடி கைவிட்டுப் போனது. பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் துபாயைச் சேர்ந்த பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட (உண்மை இறைவனுக்குத் தெரியும்) ஒருவரை நிறுத்த முயற்சி செய்தனர். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தில் கோபமடைந்த கலைஞர் திமுகவைச் சேர்ந்த மைதீன்கானை வேட்பாளராக அறிவித்தார். அவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
MLA ஐப் பறித்துக் கொண்டாலும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை தமுமுகவிற்கு கலைஞர் வழங்கினார். தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அப்பதவிக்கு வந்தார். இந்து அறநிலையைத் துறையைப் போல் வக்ஃப் வாரியமும் பல கோடி சொத்துக்களை பராமரிக்கக் கூடியது என்பதால் தமுமுகவின் வளர்ச்சிக்கு தடை ஏதுமில்லாமல் போனது. மசூதிகளின் நிர்வாகிகளையே கண்காணிக்கும் அதிகாரம் உள்ள அமைப்பு என்பதால் சுலபமாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு உள்ளும் தமுமுக நுழைந்தது.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்ததும் தமுமுகவின் இடைவிடாத முயற்சிகளுக்கு கிடைத்த பலன் என்று சொல்லலாம்.
சமீபத்தில் பிப்ரவரி 2009 ல் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடும் வகையில் மனித நேய மக்கள் கட்சி என்ற புதிய அமைப்பை தமுமுக நிறுவியது. தாம்பரத்தில் திமுகவின் ஆசியுடன் நடந்த பொதுக் கூட்டத்தில் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கபட்ட வேகத்திலேயே குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் பேச்சு வார்த்தை உள்ளது.
கொசுறு செய்தி : ஏன் மனித நேய மக்கள் கட்சி??? தமுமுக என்ற பெயரே பரவலாக மக்களிடம் அறிமுகமானது தானே என்ற கேள்வி உள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை பதிந்து வைத்திருந்த குணங்குடி ஹனிபா கடந்த 12 ஆண்டுகளாக தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். என்றாக இருந்தாலும் தமுமுக என்ற பெயருக்கு ஆபத்து உள்ளது. எனவே இச்சிக்கலைப் போக்க மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர். |
கடைசிச் செய்தி : திமுக ஒன்றுக்கு மேல் எல்லாம் தர முடியாது என்று திட்டவட்டமாக இருப்பதாகவும், மனித நேய மக்கள் கட்சி இரண்டு கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களை என்று டீல் முடிய வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. அம்மாவிடம் சரணடையுமா என தீர்மானமாகத் தெரியவில்லை.
டிஸ்கி : மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டால் அதன் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் செய்ய வேண்டியவை, வேண்டாதவை குறித்தும் விளக்கமாக பதிவு எழுதலாம்..
அப்படியே &&&&&&&&&&&&&& கிளிக் பண்ணிப் பாருங்க.