Wednesday, March 25, 2009

யூத் விக்டனின் வந்த சிறுகதை - அப்பாவின் கடன்


காலை வெயில் மெலிதான உஷ்ணத்தை முகத்தின் மீது அடித்துக் கொண்டிருந்தது. சென்னையில் இருந்து இரவு முழுவதும் பிரயாணித்து இருந்தாலும் ஊர் நெருங்க நெருங்க ஏனோ மனம் நிலை இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு இருந்ததால் தூக்கம் காணாமல் போய் இருந்தது. கைகளும், கால்களும் இயந்திர கதியில் இயங்கி காரை செலுத்திக் கொண்டு இருந்தன.
பெரியகுளத்தைக் கார் கடந்து இருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் ஊரை அடைந்து விடலாம். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அப்பாவை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்காக ஊருக்கு வந்தது. இடையில் அப்பா மட்டுமே விசேஷங்களுக்கு சென்று வந்து கொண்டு இருந்தார்... இப்போது மீண்டும்.. அப்பா என்றதுமே கண்கள் பனிக்கின்றன. எப்படிப்பட்ட மனிதன்...!!!

அதோ அந்த மலையின் மீது தானே அந்த பெண்கள் கல்லூரி இருந்தது. மனம் சோகமாக இருந்தாலும் இனம் புரியாத குறுகுறுப்பு எட்டிப் பார்ததது. காரை கல்லூரி பஸ் ஸ்டாப் முன் இருந்த டீக்கடை முன் நிறுத்தினேன். பல தடவைகள் நின்றும், அமர்ந்தும் வெட்டியாய் பொழுதைக் கழித்த டீக்கடை. கடையில் ஏதும் தெரிந்த முகம் இல்லை. காலை வேலையாதலால் சில பெருசுகள் மட்டும் பேசிக் கொண்டு இருந்தன.

எனக்குப் பிடித்த டீயும், வடையும் சொல்லி விட்டு எட்டி நடந்தேன். நண்பர்களுடன் அமர்ந்து கொட்டமடித்த அந்த பேன்ஸி ஸ்டோர் தென்பட்டது.. பெயர் மாறி இருந்தது. வாழ்க்கையின் ஓட்டத்தில் என்னன்னவோ மாறி இருக்கின்றன.

டீ, வடையை முடித்து விட்டு மீண்டும் காரை செலுத்த, SDA பள்ளி அருகில் ஒருவர் தனது மகனை வைத்துக் கொண்டு சைக்கிளில் ஓரமாக வந்து கொண்டு இருந்தார். மீண்டும் அப்பாவின் நினைவு ஆக்கிரமித்தது. ஊரில் இருந்து பெரியகுளத்திற்கும், தேனிக்கும் அப்பாவுடன் பலமுறை இது போல் சைக்கிளிலேயே சென்று இருக்கிறேன்.

அப்பாவுக்கு என் மீது கொள்ளைப் பிரியம். மூத்த மகன்கள் மூவரும், இரண்டு மகள்களும் இருந்தாலும் என் மீதே அவருக்கு விருப்பம் அதிகம். ஏனென்று மட்டும் தெரியவில்லை. கடைசி காலத்தில் கடைக் குட்டியாய் பிறந்ததால் இருக்கலாம்.. சில மாதங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

“என்னால உனக்கு ஒன்னுமே பிரயோசனமில்லைடா”

”என்னப்பா இதெல்லாம்... நீங்க ரொம்ப நல்லவரா வாழ்ந்து இருக்கீங்க... யாரையும் ஏமாத்தலை... துரோகம் பண்ணலை. எங்களை எல்லாம் நல்லவர்களா வளர்த்து இருக்கீங்க..இப்பவும் நிம்மதியா எங்க கூடவே இருக்கீங்க..வேற என்னப்பா வேணும்?”

“இல்லைடா..என்னால் உன்னை நல்லா படிக்க வைக்க முடியலையே... மத்தவனெல்லாம் சரியா படிக்காத போது நீ மட்டும் தான் நல்லா படிச்ச.. உன் ஒருத்தனை மட்டும் கூட என்னால நல்லா படிக்க வைக்க முடியலடா... எனக்கு இதை எப்ப நினைச்சாலும் தாங்க முடியாத மன அழுத்தமா இருக்குடா”

“அப்பா... அதையெல்லாம் நினைக்காதீங்க.. இப்ப நாம எல்லாம் நல்லாதானே இருக்கோம். நல்ல வசதி இருக்கு.. கார்,வீடுன்னு நல்லா இருக்கோம். கவலைப்படாதீங்கப்பா”

ஆனாலும் அப்பாவின் முகத்தில் ஒரு திருப்தியின்மையின் ரேகைகளே தெரிந்தன.

சில நாட்களுக்கு முன் அப்பாவுக்கு உடல் நலமில்லை என்றாகியதும் தனக்குத் தானே புலம்ப ஆரம்பித்து இருந்தார். சுய பச்சாதாபமும், என் மீதான பாசமும் அவரை ஏனோ உருக்கிக் கொண்டு இருந்தது. தனது உயிர் தமது கிராமத்தில் தான் பிரிய வேண்டும் என்று சதா சொல்லிக் கொண்டே இருந்ததால் சொந்த வீட்டுக்கு அனுப்பி இருந்தேன்.

அப்பாவை விட்டு பிரியாமலேயே இருந்து விட்டு, திடீரென பிரிந்த என் நிலையும் நிலை கொள்ளாமலேயே தவித்தது. அப்பாவின் உடல் நிலை மோசம் என்றதும் உடனே கிளம்பிவிட்டேன். பள்ளி இறுதித் தேர்வுகள் நடக்கின்றன என்பதால் மனைவியும், மகளும் சென்னையில்

கார் லெட்சுமிபுரம் தாண்டி கிராமத்துக்கான ஒற்றையடிச் சாலையில் பிரயாணித்துக் கொண்டிருந்தது. நல்ல நீர் வளத்துடன் இருந்த நிலங்கள் காய்ந்து போய் இருந்தது மனதை பிசைந்தது. கார் ஊருக்குள் நுழையும் போது ஊரில் செழிப்பு தெரிந்தது. நிறைய வீடுகள். அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருக்கும் மாணவ, மாணவிகள்.ஊருக்குள் கார் வந்தாலே காரின் பின்னால் ஓடும் நாட்கள் நினைவுக்கு வந்தது. இன்று பல வீடுகளின் முன்னும் மாருதிகளும், டாட்டா வகைக் கார்களும் அமைதியாக நின்று கொண்டு இருந்தன.

வீட்டின் நுழைவாயிலேயே அத்தை தெரிந்தார். கண்டதும் கண்ணில் டக்கென்று கண்ணீர் கட்டுவது தெரிந்தது. வரவேற்று விட்டு

“அப்பாவின் நிலை மோசமா இருக்கு.. மூணு நாளா ஒன்னும் சரியா சாப்பிடலை. அப்பப்ப பால் மட்டும் தான்..டாக்டரும் வயசாயிடுச்சு..ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டார்” என்று தனது கவலையை வெளிப்படுத்தினாள்.

அப்பாவை கட்டிலில் பார்க்கும் போதே நெஞ்சை பிசைந்து கொண்டு வந்தது. கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து நலம் விசாரித்தேன். மருமகள், பேத்தியை தேடும் ஏக்கம் தெரிந்தது.

மாலையில் கொஞ்சம் நன்றாக இருந்தார். என் கையாலேயே பால் அருந்தினார். இருவரும் பழைய கதைகளை பேசினோம். நடுங்கும் குரலில் மெதுவாகப் பேசிக் கொண்டு இருந்தார். பேச்சினூடே எனது புதிய திட்டத்தை தெரிவித்தேன். நமது கிராமத்தில் இருக்கும் மேற்கொண்டு படிக்க இயலாத ஏழை மாணாக்கர்களுக்கு அவர்களது மேற்படிப்பை ஊர்ஜிதம் செய்யும் வண்ணம் அமையப் போகும் டிரஸ்ட் குறித்தும், அதன் வருவாய் ஆதாரங்கள் குறித்தும் விளக்கினேன். இனி நம் கிராமத்தில் யாரும் வசதி குறைவால் மேற்கொண்டு படிக்க இயலாமல் போக விட மாட்டேன் என்ற போது அவரது கண்களில் புதிய ஒளி தெரிந்தது. பேச்சில் தெம்பும், முகத்தில் ஒரு புது வித பெருமிதமும் பார்க்க முடிந்தது. அதே மகிழ்ச்சியில் உறங்கச் சென்றோம்.

காலையில் அத்தையின் அழுகுரலே எழுப்பியது... அப்பா நம்மை விட்டு சென்று விட்டார் என்று சொன்னதும் திடுக்கிட்டு சில வினாடிகளில் சகஜ நிலைக்கு வந்தேன். எழுந்து வேகமாக அப்பாவின் படுக்கைக்கு சென்று பார்த்த போது முகத்தில் இரவு கண்ட அதே பூரிப்புடன் இறந்து இருப்பதைக் கண்டதும் ஏனோ அழுகை மட்டும் வரவில்லை.

பின் குறிப்பு : யூத் விகடனில் வெளியிட்டு, விகடன் இணைய தளத்தின் முகப்பிலும் சில தினங்கள் வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு நன்றி!

23 comments:

Raju said...

அருமையான கதை ஜின்னா அண்ணே....
கலக்குங்க போங்க!

அ.மு.செய்யது said...

//நீ மட்டும் தான் நல்லா படிச்ச.. உன் ஒருத்தனை மட்டும் கூட என்னால நல்லா படிக்க வைக்க முடியலடா... எனக்கு இதை எப்ப நினைச்சாலும் தாங்க முடியாத மன அழுத்தமா இருக்குடா”
//

என் தந்தையும் இதே தான் சொல்வார்.

அலுவ‌லக‌ ஆணி கார‌ணமாக த‌வ‌ணை முறையில் ப‌டித்து கொண்டிருக்கிறேன்.

அ.மு.செய்யது said...

//இனி நம் கிராமத்தில் யாரும் வசதி குறைவால் மேற்கொண்டு படிக்க இயலாமல் போக விட மாட்டேன் என்ற போது அவரது கண்களில் புதிய ஒளி தெரிந்தது. //

அந்த ஒளி பழைய திருப்தியின்மை ரேகைகளையும் அழித்திருக்கும்.

அ.மு.செய்யது said...

தரமான எழுத்து ஜின்னா அவர்களே !!!

நாஞ்சில் நாடன் "ஐந்தில் நான்கு" சிறுகதை படித்திருக்கிறீர்களா ??

உங்கள் சிறுகதையின் ஆரம்ப வரிகள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் அடையாளங்களை கொண்டிருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

அருமையான நடை. அற்புதமான கதை.

//இனி நம் கிராமத்தில் யாரும் வசதி குறைவால் மேற்கொண்டு படிக்க இயலாமல் போக விட மாட்டேன் என்ற போது அவரது கண்களில் புதிய ஒளி தெரிந்தது.//

அப்பாவுக்கு இதை விட வேறு எந்த விதத்திலும் மன நிறைவைத் தந்திருக்க முடியாது அந்த மகன்.

விகடன் தளத்தில் நான் சொன்னதேதான்:)!

வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்!

தொடர்ந்து இது போன்ற படைப்புகளை உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்த்து...

புதியவன் said...

மிகவும் நெகிழ்வான கதை...யூத் விகடனில் வெளியிடப் பட்டதற்கு வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்...

ஷண்முகப்ரியன் said...

வாழ்த்துகள்,தமிழ்ப்ரியன்.மேலும் மேலும் வளர்க.

நட்புடன் ஜமால் said...

முதலில் வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

\என்னப்பா இதெல்லாம்... நீங்க ரொம்ப நல்லவரா வாழ்ந்து இருக்கீங்க... யாரையும் ஏமாத்தலை... துரோகம் பண்ணலை. எங்களை எல்லாம் நல்லவர்களா வளர்த்து இருக்கீங்க..இப்பவும் நிம்மதியா எங்க கூடவே இருக்கீங்க..வேற என்னப்பா வேணும்?”\\

நெகிழ்ந்தேன் சகோதரா!

மோனி said...

எல்லோருக்கும்
அவரவரின்
தந்தையை
நிச்சயம் நினைவுக்கு வரும் ...
இதுவே கதையின் வெற்றி ...

அருமை .
தொடருங்கள் ...

நாணல் said...

வாழ்த்துக்கள் அண்ணா..
என்ன சொல்றதுன்னே தெரியலை... அப்பா மகனுக்கான உறவை அழகா சொல்லி இருக்கீங்க..

இப்னு ஹம்துன் said...

சிறுகதைக்குரிய இலக்கணத்துடன் சிறப்பாக இருக்கிறது தமிழ்.

வாழ்த்துகள்.
தொடர்ந்து எழுதுங்க தல.

வெண்பூ said...

அருமையான கதை, நல்ல முடிவு தமிழ் பிரியன்...

Unknown said...

Migavum arumaiyaana kathai.. mudivu than niramba pidichuthu....

சுரேஷ்குமார் said...

Great. When someone read this story,they will definately get their Dad and Moms Memory.

Best Wishes,

Suresh

அன்புடன் அருணா said...

மனம் நெகிழ்ந்தது படித்தவுடன்....
அன்புடன் அருணா

சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் தமிழ்பிரியன் யூத் விகடனில் வந்த கதை போன்று மேலும் பல கதைகள் தாத்தா விகடனிலும் வர வாழ்த்துக்கள் :)

Unknown said...

அருமை அண்ணா :))

Unknown said...

அண்ணன் இந்த கதை மிகவும் அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் இன்னும் நிறைய புகழ் கிடைக்க வாழ்த்துக்கள்

Unknown said...

அண்ணன் இந்த கதை மிகவும் அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் இன்னும் நிறைய புகழ் கிடைக்க வாழ்த்துக்கள்

Hisham Mohamed - هشام said...

ஒரு தந்தையின் உணர்வுகளையும் ஏக்கங்களையும் எழுத்துக்களால் என்றுமே சுமக்க முடியாது. உணர்வுபூர்வமான பதிவு

Hisham Mohamed - هشام said...

ஒரு தந்தையின் உணர்வுகளையும் ஏக்கங்களையும் எழுத்துக்களால் என்றுமே சுமக்க முடியாது. உணர்வுபூர்வமான பதிவு