தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா இறந்து ஒரு வருடம் ஓடிப் போய் விட்டது. சமீபத்தில் அவர் வாரந்தரி ஒன்றுக்கு அளித்து வந்த கேள்வி - பதில் தொடரின் பகுதியைப் படிக்க நேரிட்டது. அதிலிருந்து சில சுவாரஸ்யமானவற்றை இங்கு தருகின்றேன். முதல் கேள்வி - பதில் பரிசல்காரருக்கு சமர்ப்பணமாகுக,... ;-)
இரா. கல்யாணசுந்தரம், மதுரை-9.
மதுரையில் ஒரு கருத்தரங்கில் மெர்வின் (தன்னம்பிக்கை நூல் வெளியிடுபவர்) பேசுகையில் 'மதுரைக்காரரா கொக்கான்னேன்' என்று பல தடவை கூறினார். 'கொக்குக்கு என்ன சிறப்பு?'
கொக்கு உறுமீன் வரும் வரையில் வாடியிருப்பது போல், மதுரைக்காரர்கள் தகுந்த சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்பார்கள் என்று சொல்லியிருப்பார். எனக்குத் தெரிந்து நிஜமாகவே மதுரைக்காரர்கள் பொறுமையாகக் காத்திருந்து, வேளை வந்ததும் 'லபக்' என்று கொத்திக் கொண்டு பறந்திருக்கிறார்கள். 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்று தனிப்பாடல் ஒன்று உண்டு. ஆகாத கொக்கை சித்தர் ஒருத்தர் வெறும் கண்ணாலேயே பார்த்து எரித்தாராம். அது போல் பத்தினி ஒருத்தியைக் கோபம்கொண்டு அவர் பார்த்தபோது, 'அப்படியெல்லாம் என்னை பஸ்மம் பண்ணிவிட முடியாது. நானா கொக்கான்னேன்‘ என்று அந்த சித்தரைப் பார்த்து பத்தினி டபாய்த்ததாகக் கேள்வி.
அ. சுஹைல் ரஹ்மான், திருச்சிராப்பள்ளி-21.
இதுவரை ஏற்பட்ட 'கடல் சூறாவளி'களிலேயே மிகப் பெரியது எது? அதன் விளைவுகள் என்ன? 'ட்ஸூனமி' என்று டி.வி-யில் சொன்னார்களே...?
'ட்ஸூனமி' என்பது ஜப்பானியச் சொல். மிகப்பெரிய அலை என்று அர்த்தம். ஒரு ஏரியில் கல் போட்டால் அலை எழுகிற தல்லவா.. அதே போல கடலில் ஏற்படும் அலைத்தொடர். கல் வெளியிலிருந்து வருவதல்ல.. கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பத்தின் விளைவு. இதனால் எழும் அலையின் வேகம் 200 மைலுக்கு மேல். ஜூலை 1958-ல் அலாஸ்காவில் எழுந்த (ட்)ஸூனமி அலை உயரம் 1720 அடி. இதுதான் ரிக்கார்டாம். இந்த ராட்சத குலுக்கல் அலையிலிருந்து தப்பிக்க ஊரை
ஒட்டி பிரமாண்ட அளவில் சுவர் எழுப்பி வைத்து... தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிற ஜனங்களும் உண்டு. பூகோள ரீதியாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும்தான் இது திரும்பத் திரும்ப வருகிறது.
ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை.
பெரும்பாலான தமிழ் இணைய பக்கங்களை யுனிகோடுக்கு மாற்றுவதாகச்
சொல்கிறீர்களே.. கொஞ்சம் விளக்குங்களேன்.. ப்ளீஸ்..!
யுனிகோடு என்பது உலகின் அத்தனை மொழிகளையும் கணிப்பொறியில் டிஜிட்டலாக சேர்த்து வைக்க ஏற்பட்ட குறியீடு. ஒவ்வொரு மொழிக்கும் 16 பிட் நீளமுள்ள தகவல் புலத்தை ஒதுக்கிச் சீரமைத்துள்ளது யுனிகோடு கன்ஸார்ட்டியம் என்னும் சர்வதேச அமைப்பு. இதில் இந்திய மொழிகளுக்கான ஒதுக்கீட்டை கேட்கும்போது தமிழுக்கு தரப்பட்ட இடங்களில் சில விரயமாகத் தரப்பட்டிருக்கின்றன. உதாரணமாக நாலு 'க' நமக்குத் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கு நாலு வகை இருக்கும். வேறு இந்திய மொழிகளை மனதில்கொண்டு இப்படிப் பண்ணியிருக்கிறார்கள் போல. ஆனால், தமிழுக்கு இது தேவையில்லை. மிச்ச மூன்று இடத்தை வேறு எழுத்துகளுக்குப் பயன்படுத்தலாம் என்பதுதான் நம் வாதம். இதில் கருத்து வேறுபாடுகளும் உண்டு.
எம். சம்பத், வேலாயுதம்பாளையம்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, 'புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும்' - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..?
அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் (மற்றோரு கேள்விக்கு பதில் சொன்னபடி) மதநம்பிக்கையைக் காரணம் காட்டி
பணம் பகிர்ந்துகொள்ளும் உத்தியே! கோயிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லரை புரளும்!
சு. இளையவன், பிரமநாயகபுரம்.
திருக்குறளில் காமத்துப்பால் பகுதியைப் பத்தாம் வகுப்புக்கு மேலாவது பாடத் திட்டத்தில் சேர்க்கலாமே... புறக்கணிப்பது ஏன்?
சேர்க்கலாம்தான்.
'விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு'
போன்ற குறள்களைச் சொல்லிக் கொடுக்க டீச்சர் என்ன செய்வார்? 'விளக்கை அணைத்து இருளுக்கு காத்திருப்பதுபோல், கணவனின் அணைப்புக்கு காத்திருக்கிறது பசலை' என்றால் வகுப்பு சற்று டென்ஷனாகிவிடாதா?
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளில் சிறுவர்-சிறுமியர் களுக்கான தந்திரக் கதைகளுக்கும் காமிக்ஸ் கதைகளுக்கும் உள்ள வரவேற்பு இந்தியாவில் இல்லாததற்குக் காரணம் என்ன?
இவ்வாறான தந்திரக் கதைகளுக்கு மேல்நாடுகளில் உள்ள வரவேற்பு இந்தியாவிலும் உள்ளது. ஆனால் இந்த வரவேற்பு ஆங்கிலத்தில் படிக்கும் மேல்தட்டுக் குழந்தைகளுக்கு மத்தியில்தான்! அண்மையில் வெளியான 'ஹாரி பாட்டர்' கதை இந்தியாவிலேயே ஒரு லட்சம் பிரதி விற்பனை ஆயிற்றாம். தமிழ் போன்ற மற்ற மொழிகளிலும் அவ்வாறான கதைகளும் படக் கதைகளும் கிடைத்தால் நிச்சயம் ஆர்வத்துடன் படிப்பார்கள். எழுதத்தான் ஆளில்லை.
கி. முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.
இமயமலையின் உச்சி பகுதியில் 'கடல் வாழ் தாவரங்கள்' - உள்ளதாகப் படித்தேன் - இது பற்றி...
இருபத்திரண்டரைக் கோடி வருஷங்களுக்கு முன் ஆஸ்திரேலியா பக்கத்தில் ஒரு பெரிய தீவாக இந்தியா இருந்தது. மெல்ல அது வடமேற்காக நகர்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒன்பது மீட்டர். ஒரு காலகட்டத்தில், தற்போதைய ஆசியாவிலிருந்து 6400 கிலோமீட்டர் தெற்கில் இருந்தோம். ஆசிய ஐரோப்பிய கண்டத்துடன் நாளடைவில் முட்டி மோதி ஒட்டிக்கொண்டபோது, அந்த மோதலில் எழுந்ததுதான் இமயமலை. அதனால்தான் இமயத்தின் உச்சியில் கடல் வாழ் தாவரங்களின் ஃபாசில்கள் கிடைத்தன. இன்றைய கணக்கின்படி எவரெஸ்ட் சிகரம் வருஷத்துக்கு 3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. 27 மில்லி மீட்டர் வடகிழக்காக நகர்கிறது. கொஞ்சம் காத்திருந்து பாருங்கள் தெரியும்.
கே. அபிஷேக், மேலகபிஸ்தலம்.
ஒரு உயிர்கூட சேதமில்லாமல் நடந்த உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி எது சார்?
உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி... இரண்டாம் உலகப் போரில் டன்கர்க்
சம்பவம்தான். ஜூன் 1940-ல் பிரெஞ்சு தேசத்து கடற்கரையில்
மாட்டிக்கொண்டு பின்வாங்கிய மூன்று லட்சம் பிரிட்டிஷ், அமெரிக்க, பெல்ஜிய
துருப்புக்களைப் பத்திரமாக கொண்டு சேர்த்தது இங்கிலாந்து டீம். உயிர்ச்சேதம்
இல்லை என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. அத்தனை பிரமாண்டமான
மீட்புக்கு மிகக் குறைவான உயிர்ச்சேதம்தான்.
நீடூர் நவாஸ், பாங்காக்.
பாங்காக்கிலிருந்து 550 கிலோ மீட்டர் தூரத்தில் பர்மா எல்லையில் 'மேஸோட்' என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட ஓர் இடத்தில் Magic Hill என்ற போர்டு வைத்து ரோட்டில் மார்க் செய்திருக்கிறார்கள். அந்த இடத்தில் காரை
நிறுத்திவிட்டு, நியூட்ரலில் போட்டு இன்ஜினை ஆஃப் செய்துவிட்டாலும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 150 அடி தூரத்துக்குச் செல்கிறது. இத்தனைக்கும் மேடான பாதை அது. அதேபோல் திரும்பி வரும்போது அந்த கோட்டுக்கு
அருகில் காரை நிறுத்தினால், கார் அப்படியே பின்னோக்கி மேட்டில் தானாகவே ஏறுகிறது. அந்த 150 அடி தூரத்தில் அப்படி என்ன புவிஈர்ப்பு மாற்றம் நிகழ்கிறது? புரியலையே சார்!
இதே போல் கலிஃபோர்னியாவில் ஒரு சுற்றுலா இடம் இருக்கிறது. சரிவோ, ஏறுமுகமோ பக்கத்தில் இருக்கும் கட்டடம் அல்லது மலை அதை ஒப்பிடும்போது, சரிவு மேடு மாதிரித் தோன்றும். இதை Perspective Dodge என்பர். எக்காரணம் கொண்டும் புவிஈர்ப்பை நம்மால் மீற முடியாது. அடுத்த முறை அங்குபோகும் போது ஒரு ஸ்பிரிட் லெவலை (கட்டடப் பணியில் பயன்படுத்தப்படும் ரசமட்டக் கோல்) எடுத்துப் போய் அந்த இடத்தில் வைத்துப் பாருங்கள்.
29 comments:
super!
நல்லாருக்கு தல..
சுஜாதா; சுஜாதா தான்..!
//உதாரணமாக நாலு 'க' நமக்குத் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கு நாலு வகை இருக்கும்.//
உண்மை தானே.
ஆனால் nhm பரவாயில்லை.
சரியானபடி மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
சுஜாதாவே ஒப்பு கொண்ட உண்மை விஞ்ஞானம் எல்லையற்றது.
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சுஜாதா...அவருடைய கேள்வி - பதில் தொடரின் பகுதியைப் தொகுத்து அளித்ததற்கு நன்றி தமிழ் பிரியன் ...
இதைத் தொடராக வந்த போதும் படித்திருக்கிறேன். புத்தகமும் இருக்கிறது. பல அரிய தகவல்கள் உண்டு இதில். அவ்வப்போது சிறந்த தகவல்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்குங்கள்.
பகிர்வுக்கு நன்றி
சுஜாதான்னா சுவாரஸ்யத்துக்கு கொறச்சலா இருக்குமா என்ன
kalakkal boss, thanks
நல்ல பகிர்தல்கள்.நன்றி தமிழ்ப்ரியன்.
அஞ்ஞானமாய் நாம் கேட்கும் கேள்விகளுக்கு விஞ்ஞானரீதியாக பதிலளிக்கும் சுஜாதா..சுஜாதாதான்!!!!
அருமையானப் பதிவு, தமிழ். தேனிக்கு வந்ததை முதலிலே சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தேனடையின் ஒரு துளி.
நல்ல பதிவு:))
நல்ல தகவலை அளித்தமைக்கு நன்றி..
இது பயப்படாத மனதுக்காரருக்கும் பொருந்துதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
/// said...
super!///
நன்றி! King...!
///தமிழன்-கறுப்பி... said...
நல்லாருக்கு தல..
சுஜாதா; சுஜாதா தான்..!///
நன்றி தல!
///வால்பையன் said...
//உதாரணமாக நாலு 'க' நமக்குத் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கு நாலு வகை இருக்கும்.//
உண்மை தானே.
ஆனால் nhm பரவாயில்லை.
சரியானபடி மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
சுஜாதாவே ஒப்பு கொண்ட உண்மை விஞ்ஞானம் எல்லையற்றது.///
தமிழ் யூனிகோட் தட்டச்ச NHM தான் சிறந்த மென்பொருள் என்பது என் கருத்து. சுஜாதா ஒரு தீர்க்கதரிசி!
///புதியவன் said...
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சுஜாதா...அவருடைய கேள்வி - பதில் தொடரின் பகுதியைப் தொகுத்து அளித்ததற்கு நன்றி தமிழ் பிரியன் ...///
எனக்கும் பேவரைட் சுஜாதா தான்! வருகைக்கு நன்றி புதியவன்!
/// ராமலக்ஷ்மி said...
இதைத் தொடராக வந்த போதும் படித்திருக்கிறேன். புத்தகமும் இருக்கிறது. பல அரிய தகவல்கள் உண்டு இதில். அவ்வப்போது சிறந்த தகவல்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்குங்கள்.///
ஆமாம் அக்கா! எழுதும் திறமை நீர்த்துப் போய் விட்டதாக உணர்கின்றென்... :( (இதுக்கு முன்னாடி எப்ப நல்லா எழுதினாய்? என்று கேட்கப்படாது..)
அதனால் தான் இந்த காப்பி பேஸ்ட் வேலை நடந்தது.
///அமிர்தவர்ஷினி அம்மா said...
பகிர்வுக்கு நன்றி
சுஜாதான்னா சுவாரஸ்யத்துக்கு கொறச்சலா இருக்குமா என்ன///
அதே! அதே!
///கானா பிரபா said...
kalakkal boss, thanks///
நன்றி பாஸ்! (ஆமா, நீங்க மொட்டை போட்டா தமிழ் சினிமாவில் வில்லனாகலாம். மொட்டை போடாம நடிச்சா எல்லா கதாநாயகனையும் ஓரங்கட்டலாம்.. :-) )
//ஷண்முகப்ரியன் said...
நல்ல பகிர்தல்கள்.நன்றி தமிழ்ப்ரியன்.///
வருகைக்கு நன்றி அண்ணே!
///நானானி said...
அஞ்ஞானமாய் நாம் கேட்கும் கேள்விகளுக்கு விஞ்ஞானரீதியாக பதிலளிக்கும் சுஜாதா..சுஜாதாதான்!!!!///
நிச்சயமாக அம்மா! சுஜாதா ஒரு ஜீனியஸ்!
///தேனியார் said...
அருமையானப் பதிவு, தமிழ். தேனிக்கு வந்ததை முதலிலே சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.///
பதிவு கூட போட்டேனே தேனியாரே! இப்ப உங்க ஊரு பாராளுமன்ற தொகுதியாகிடுச்சாமே.. வாழ்த்துக்கள்!
///தாமிரா said...
தேனடையின் ஒரு துளி.///
நல்ல உவமானம்! வருகைக்கு நன்றி அண்ணே!
///Poornima Saravana kumar said...
நல்ல பதிவு:))
நல்ல தகவலை அளித்தமைக்கு நன்றி..///
வருகைக்கு நன்றி பூர்ணிமாக்கா!
///பாலராஜன்கீதா said...
இது பயப்படாத மனதுக்காரருக்கும் பொருந்துதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.///
அதான்.. இவ்வளவு நாள் பொறுத்து இருந்து இப்ப தென்னகத்தையே ஆள்கின்றோமே.. ;-) :-) வேறு என்ன வேணும்?..
நல்ல தகவல்களுக்கு நன்றி!
///மகேஷ் said...
நல்ல தகவல்களுக்கு நன்றி!///
நன்றி மகேஷ்!
nice.
Post a Comment