Monday, October 20, 2014

பதின்மம்

    "திவ்யா.. உனக்கு என்னாச்சு.. ஏன் இப்படி மார்க் குறைவா வாங்கி இருக்குற..நல்லபடிக்கிற பொண்ணு இவ்ளோ மோசமா மார்க் வாங்கலாமா?” 10 ம் வகுப்பில் ஆசிரியர் திட்டி முடித்த போது வகுப்பில் அனைத்து மாணவ-மாணவிகளும் திவ்யாவையே பார்த்துக் கொண்டு இருந்தனர். வழக்கமாக நல்ல மதிப்பெண்களை வாங்கும் திவ்யா இந்த பருவத் தேர்வில் இந்த முறை பார்டர் மார்க்கில் பாஸாகி இருக்கின்றாள். 

  . “ கண்டிப்பா.. நாளைக்கு உங்க பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் இங்க வந்து என்னையும், பிரின்ஸிபாலையும் பார்க்கனும்” .  எல்லாரும் தம்மைப் பார்ப்பது தெரிந்ததும் அவமானத்துக்கு இடையில் அமைதியாக தனது இருக்கையில் உட்கார்ந்தாள்..

வீட்டில்..
“ஏண்டி.. உனக்கு என்னடி குறை.. எல்லா வசதியும் செஞ்சு கொடுத்து இருக்கம்ல.. எவ்ளோவோ பிரச்சினைகளுக்கு இடையிலயும் இந்த ஆளோட குப்பை கொட்ரேன்னா அதுக்கு நீதானடி காரணம்.. உனக்காகத் தாண்டி நான் வாழ்றேன்” பொருமலுடன் கரைந்த அம்மாவைப் பார்க்கும் போது கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது திவ்யாவுக்கு..

“என்னடி வாய் ரொம்ப நீளுது... நானும் திவ்யாவுக்காகத் தான் உன்னையெல்லாம் சகிச்சிகிட்டு இருக்கேன்.. இல்லைன்னா என்றைக்கோ உன்னை தலை முழுகி இருப்பேன்” வழக்கம் போல் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கும் அப்பா...

“ஆமாமா ... கல்யாணத்தப்போ நீங்க இருந்த லட்சணம் தெரிஞ்சது தானே..வேலை வெட்டி இல்லாம இருந்த ஆளை கல்யாணம் கட்டி உங்கம்மா பொய் சொல்லி என் தலையில கட்டினாங்களே.. எல்லாம் என் தலையெழுத்து”

“அடி திமிர் பிடிச்சவளே.. எல்லாம் தெரிஞ்சு தானடி உங்கப்பன் என் தலையில மொளகா அரைச்சான்.”

அதற்கு மேல் கேட்கப் பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்ட திவ்யாவுக்கு கண்ணீரை கட்டிப்ப்படுத்த இயலவில்லை...வீட்டில் தினமும் நடக்கும் சண்டை. பெற்றோர்களுக்கு இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை.. தினமும் யாராவது யாரையாவது திட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

 பள்ளியில் - பிரின்ஸ்பால் அறையில்
“சார்.. உங்க பொண்ணு நல்லாபடிக்கிற பொண்ணு சார்.. இப்ப கொஞ்ச நாளா படிப்புல கொஞ்சம் கூட கவனமே இல்லை... நான் சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. திவ்யாவோட பிரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சேன்... அவங்க சொல்றதைப் பார்த்தா  உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கும் சண்டை,சச்சரவுகள் தான் அவளோட மனசை பாதிச்சு இருக்கும்னு தோணுது”

”சார்.. இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை சார்.. அவளுக்கு எல்லா வ்சதியும் செஞ்சு கொடுத்து இருக்கோம் சார். தனி ரூம் கொடுத்து எல்லா வசதியும் செஞ்சு இருக்கோம் சார்”

“அதெல்லாம் வாஸ்தவம் தான் சார்.. ஆனா உங்க பொண்ணு இப்ப டீனேஜில் இருக்கிற பொண்ணு.. நல்லது கெட்டது புரியுற வயசு.. உங்களுக்கு இடையில் இருக்கும் சண்டையைப் பார்க்கும் போது அவளுக்கு குடும்பம், படிப்பு இது மேலே எல்லாம் வெறுப்பு வர ஆரம்பிச்சுடும். நீங்க ரெண்டு பேருமே அவ மேல பாசம் வச்சு இருக்கீங்க.. அது வீணாகிப் போய்டக் கூடாது..என்னோட பிரண்ட் ஒருத்தர் சைக்யாசைக்யாரிஸ்ட். அவர்கிட்ட சொல்றேன்.. ஒரு ஃபிரி கன்சல்டிங்க்கு ஏற்பாடு பண்றேன்.. நீங்க ரெண்டு பேரும் சண்டையில்லாம சந்தோசமா இருந்தா தான் உங்க பொண்ணோட எதிர்காலம் சந்தோசமா இருக்கும்.. இப்ப படிப்பில கோட்டை விடற பொண்ணு வேற தவறான வழிகளில் போயிடக் கூடாது.. இந்த இண்டர்நெட் யுகத்துல நாம தான் கவனமா இருக்கனும். பொண்ணுகளைப் பாதுகாக்கனும்”


வகுப்பறையில்
“சார்..ரொம்ப நன்றி சார்.. எங்க அப்பா-அம்மா சண்டையில்லாம சந்தோசமா வாழனும்னு நினைக்கிற எனக்கு  எக்ஜாமில் மார்க் குறைச்சு போட்டு அவங்க மனசை மாத்த உதவி செஞ்சு இருக்கீங்க சார்.. ரொம்ப நன்றி சார்”
“என்னம்மா திவ்யா.. இதுக்கு போய்ட்டு... இந்த வயசில அப்பா-அம்மா போடுற சண்டையில் மனரீதியா எந்த பாதிப்புக்கும் உள்ளாகாம தெளிவா முடிவு எடுத்து இந்த ஐடியாவும் கொடுத்து இருக்கியேமே.. நீ தான் ரொம்ப கிரேட்.. சீக்கிரமா உங்கப்பா-அம்மா மாறிடுவாங்கம்மா.. உன்னோட உழைப்பு வீண் போகாதும்மா... “
நம்பிக்கையுடன் வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள் திவ்யா.