இந்த கடிதத்தை எழுத வேண்டாம் என்று நினைத்து போனிலும், சாட்டிலும், மெயில் மூலமும், நண்பர்கள் மூலமும் இது விடயமாகஅண்ணன் நிஜமா நல்லவனுக்கு ஞாபகமூட்டியும், அவர் அதை அசட்டை செய்த காரணத்தால் இதை மக்கள் மத்தியில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இந்த பகிரங்க கடிதத்தை எழுதுவதற்காக ரூம் போட்டு யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய எங்கள் ‘தல' கவிஞர் நிஜமா நல்லவன் பாரதிக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பின் நிஜமா நல்லவனுக்கு,
நலம். நலமறிய ஆவல்....
இக்கடிதத்தை பொதுவில் வைப்பதற்கு மன்னிக்கவும். இத்தகைய இக்கட்டான நிலைக்கு என்னைத் தள்ளியது தாங்கள் தான் என்பதை இங்கு ஞாபகமூட்டிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என் மனவெளியில் இருக்கும் அனைத்து உள்ளார்ந்த பின்நவீன எண்ணங்களையும் கழட்டி வைத்து விட்டே இதை எழுதுகிறேன். ஏனெனில் நான் சாதாரணமாக எழுதும் கடிதங்கள் கூட தங்களுக்கு விளங்கவில்லை என்பது போன்ற தோற்ற மாறுபாடு என்னுள் எழுந்துள்ளது.
நிற்க... தங்களது வலைப் பூவை தாங்கள் மொக்கையாக எழுத ஆரம்பிக்கும் போது நான் அறிந்தவன் என்பதை தாங்கள் அறிவீர்கள். சில தொழில் நுட்ப உதவிகள் செய்ததையும் நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை என எனது உள்மனது சொல்கின்றது. ஆனால் தற்போது நீங்கள் செய்து வரும் காரியங்கள் எனக்கு மன உளைச்சலை அதிகமாகி விட்டது என நீங்கள் அறிந்தால் வருத்தப்படுவீர்கள் என்றே நினைக்கிறேன்.
சமீபத்தில் சில நாட்களுக்கு தங்களது அன்பான வாசகர்கள் அடங்கிய நிஜமா நல்லவனைக் கலாய்ப்பவர்கள் சங்கம் (நி.ந.க.ச) தங்களது பேராதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதை ஆரம்பிக்க தங்களது உறுதுணையும் இருந்தது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். இந்நிலையில் நி.ந.க.சங்கத்தில் சேரும் அனைவருக்கும் ஐந்து பவுனில் தங்கச் சங்கிலி வாங்கித் தரப்படும் என்று தாங்கள் உறுதி அளித்ததை இங்கு நினைவூட்டுகிறேன். தலைவராக என்னைத் தேர்ந்தெடுக்கும் போது இதை நீங்கள் சொன்னதை நீங்கள் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை.
அணி அணியாக தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரித்தீஷூக்கு ரசிகர் சேர்ந்தது போல் நி.ந.க.சங்கத்திற்கு ரசிகர்கள் சேர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்கச் சங்கிலிக்கு ஆசைப்பட்டு சேரவில்லை என்றாலும், தானைத் தலைவர் அஞ்சா நெஞ்சன் வலையுலக சூப்பர் ஸ்டார் தல நிஜமா நல்லவன் அறிவித்த அறிவிப்பு எக்காலத்திலும் பொய்யாகி விடக் கூடாது என்ற உறுதியான கொள்கையின் அடிப்படையில் ஐந்து பவுன் தங்கச் சங்கிலிக்கு ஆசைப்படுகின்றனர்.
இங்கு இரண்டு முக்கிய விடயங்களை உங்களுக்கு நினைவூட்ட ஆசைப்படுகிறேன்.
1. தமிழர்களின் தொண்டு தொட்டு வரும் மரபுக்கு ஏற்ப தங்களது ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தர தயாராக இருக்கும் எங்களுக்கு அந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஒரு பொருட்டல்ல
2. தங்கத்தின் விலை சரிந்துள்ள இந்த நாட்களில் தங்கச் சங்கிலி கொடுக்கத் தொடங்கினால் நிறைய ரசிகர்களை சேர்க்க இயலும் .
அதே போல் கடந்த மாதம் நடந்த நி.ந.க.சங்க மாநில மாநாட்டிற்கு வந்த லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு வழங்கிய பிரியாணி பொட்டலத்திற்கும் இன்னும் பணம் செட்டில் பண்ணவில்லை என்பதை தாழ்மையுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
இவைகளை எனது சொந்த நலன் கருதி இங்கு சொல்லவில்லை. நி.ந.க.சங்கத்திற்கு ஆட்களை அலைகடலென திரட்டும் நோக்கிலும், தலயின் புகழ் எட்டு திக்கும் பரவ வேண்டும் என்ற நல்ல நோக்கிலுமே இதை எழுதுகிறேன்.
தங்களின் மேலான பதிலுக்காக தமிழ் மணத்தின் பல சீனியர் உறுப்பினர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
'தல'யின் புகழ் பாடும் அணியின் தலைவர்
தமிழ் பிரியன் சவுதி அரேபியக் கிளை
வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.