
கதையைச் சுருக்கமாக பார்த்தால் மாதவன் மற்றும் குடும்பத்தினர் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் ப்ளாட்டை வாங்கி குடி வருகின்றனர். அந்த வீட்டில் வரும் கேபிள் கனெக்ஷனில் மதியம் 1 மணிக்கு மட்டும் ஒரு வித்தியாசமான சீரியல் வருகின்றது. அது மாதவனின் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை முன்னதாகவே காட்டுகின்றது. அண்ணனுக்கு ப்ரமோசன், தங்கை 12 அரியர்யஸை ஒரே நேரத்தில் பாஸாகுதல், மனைவி கர்ப்பம், கர்ப்பச் சிதைவு... இப்படி இன்னும் பல
ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ளவர் கொலை செய்யப்படுவதைப் போல காட்சி வருகின்றது. வழக்கமாக நடப்பது போல் சீரியலில் வருவது போல் கொலை செய்யப்பட்டார்களா? கொலையாளி யார்? என்பதை திகிலுடன் சஸ்பென்ஸாக சொல்லும் கதை தான் யாவரும் நலம்.
சரி இதில் லாஜிக் ஓட்டைகளைப் பார்த்தால் டிவி சீரியல் இவர்கள் வீட்டில் மட்டுமே வருகின்றது. அதில் நடப்பது அனைத்தும் உண்மையில் நடக்கின்றது. இறுதியில் இறந்த பெண்ணே கரண்ட் இல்லாத வீட்டின் டிவியில் வந்து கொலையாளியுடன் உரையாடுகின்றாள்.
நமது மக்களில் இது போன்ற திகில், பேய், மர்மப் படங்கள் பற்றிய பொது புத்தியை இரண்டு விடயங்களில் அடக்கி விடலாம். முதலாவது உண்மையில் பேய்ப் படம். பேய் இருப்பதாக நம்ப வைத்து படக்கதையை எடுத்துச் செல்வது... இரண்டாவது பேய், ஆவி இருப்பது போன்று காட்சியமைப்புகளைக் கொண்டு சென்று இறுதியில் அது உண்மையில் இல்லை... மனிதர்களின் செயல்கள் தான் அவை என முடிப்பது.
முதலாவது வகையில் படம் ஆரம்பத்தில் இருந்தே பேயையும், அதை அழிக்கப் போகும் so and so கடவுள் அல்லது ஆசி பெற்றவர்களையும் காட்டி விடுவார்கள். அதற்குத் தகுந்தாற் போல் உடைகள், ஆட்டங்கள், கிராபிக்ஸ்கள் எல்லாம் களை கட்டி விடும். இரண்டாவது வகையில் நாம் எதிர்பார்க்க மாதிரி எல்லாவற்றையும் சஸ்பென்ஸாக காட்டி விட்டு இறுதியில் உண்மையை உடைப்பார்கள்.
யாவரும் நலம் இந்த இரண்டிலும் இல்லை. இரண்டாம் வகைப் படம் போல் காட்டப்பட்டாலும் இறுதியில் முடிவு வித்தியாசமாக இருக்கின்றது. விஜய், அஜித் போன்ற புனித பிம்பங்களின் நம்ப முடிய இயலாத சாகசங்களை கண்டு களிக்கும் நம்மால் இந்த புதிய முறையை ஜீரணிக்க இயலவில்லை. உண்மையில் நன்றாகக் கவனித்தால் அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர்களின் ஆவிகள் இருக்கின்றன. அவைகள் பழிக்குப் பழி வாங்க மாதவனைத் தேர்ந்தெடுக்கின்றன. இறுதியில் அதில் வெற்றியும் பெறுகின்றன.
இக்கதையைப் புதிய கோணத்தில் காட்டியுள்ளதில் தான் இயக்குநர் வெற்றி அடைகின்றார். அதே போல் பிசி ஸ்ரீராமின் கேமராவும், பின்னணி இசையும் அடவு கட்டி அடிக்கின்றது. படத்தை ரசிக்க வைத்ததில் இருவருக்கும் நல்ல பங்கு உள்ளது.
இன்னொரு விடயம்.. அந்த சீரியலில் நடந்தது முன்னால் நடந்தவைகளாக இல்லாமலும் இருக்கலாம். இனி நடக்கப் போகின்றவைகளை தெரிந்து கொள்ளும் ஆவிகள் அதை சீரியல் போல் டிவி மூலம் காட்டுகின்றன. மாதவனால் மட்டும் இதை சுலபமாக புரிந்து கொள்ள இயல்கின்றது. ஏனெனில் அவன் தான் ஆவிகள் சார்பில் பலி வாங்க வேண்டியவன். மற்றவர்கள் அதை சாதாரண சீரியலாகவே எடுத்துக் கொள்கின்றனர்.
மேலும் உண்மையான நிகழ்வு 1977 ல் நடப்பதாக உள்ளது. அதில் அண்ணன் தனக்கு ப்ரமோசன் கிடைத்துள்ளதாகவும், 10000 ரூபாய்கள் இன்கிரிமெண்ட் கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றார். 1977 ல் 10000 ரூபாய்கள் இன்கிரிமெண்ட் என்பதெல்லாம் நடந்திருக்கக் கூடியதே இல்லை.. அதே போல் 12 பாடங்களில் அரியர்ஸ் வைத்து இருக்கும் தங்கை ஒரே தடவையில் அனைத்துப் பாடங்களையும் பாஸ் செய்வது நடக்கக் கூடியதாக இல்லை.. அதுவும் 69.73 சதவீத மதிப்பெண்கள் பெற்று... மாதவன் நடப்பதை நம்ப வேண்டு மென்பதற்காக இதையெல்லாம் ஆவிகளின் வேலையாக உள்ளதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
டிஸ்கி 1 : எனக்கு இறந்தவர்கள் மீண்டும் ஆவியாக வருவார்கள் என்பதில் நம்பிக்கை சுத்தமாக இல்லை. மனிதன் தான் சாத்தானின் குணங்களுடன் நம்முடன் இருக்கிறான் என்று நம்புகின்றேன்.
டிஸ்கி 2 : படத்தில் சண்டைக் காட்சி இல்லை.. இரண்டு பாட்டு மட்டும் இருந்தது. வழக்கம் போல் பாடல்களை Skip செய்து விட்டேன். அப்புறம் அந்த சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் தந்தூரி சூப்பர் மேட்டருங்கோ... விவ(கா)ரமான டைரக்டருங்கோ