Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, October 20, 2014

பதின்மம்

    "திவ்யா.. உனக்கு என்னாச்சு.. ஏன் இப்படி மார்க் குறைவா வாங்கி இருக்குற..நல்லபடிக்கிற பொண்ணு இவ்ளோ மோசமா மார்க் வாங்கலாமா?” 10 ம் வகுப்பில் ஆசிரியர் திட்டி முடித்த போது வகுப்பில் அனைத்து மாணவ-மாணவிகளும் திவ்யாவையே பார்த்துக் கொண்டு இருந்தனர். வழக்கமாக நல்ல மதிப்பெண்களை வாங்கும் திவ்யா இந்த பருவத் தேர்வில் இந்த முறை பார்டர் மார்க்கில் பாஸாகி இருக்கின்றாள். 

  . “ கண்டிப்பா.. நாளைக்கு உங்க பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் இங்க வந்து என்னையும், பிரின்ஸிபாலையும் பார்க்கனும்” .  எல்லாரும் தம்மைப் பார்ப்பது தெரிந்ததும் அவமானத்துக்கு இடையில் அமைதியாக தனது இருக்கையில் உட்கார்ந்தாள்..

வீட்டில்..
“ஏண்டி.. உனக்கு என்னடி குறை.. எல்லா வசதியும் செஞ்சு கொடுத்து இருக்கம்ல.. எவ்ளோவோ பிரச்சினைகளுக்கு இடையிலயும் இந்த ஆளோட குப்பை கொட்ரேன்னா அதுக்கு நீதானடி காரணம்.. உனக்காகத் தாண்டி நான் வாழ்றேன்” பொருமலுடன் கரைந்த அம்மாவைப் பார்க்கும் போது கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது திவ்யாவுக்கு..

“என்னடி வாய் ரொம்ப நீளுது... நானும் திவ்யாவுக்காகத் தான் உன்னையெல்லாம் சகிச்சிகிட்டு இருக்கேன்.. இல்லைன்னா என்றைக்கோ உன்னை தலை முழுகி இருப்பேன்” வழக்கம் போல் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கும் அப்பா...

“ஆமாமா ... கல்யாணத்தப்போ நீங்க இருந்த லட்சணம் தெரிஞ்சது தானே..வேலை வெட்டி இல்லாம இருந்த ஆளை கல்யாணம் கட்டி உங்கம்மா பொய் சொல்லி என் தலையில கட்டினாங்களே.. எல்லாம் என் தலையெழுத்து”

“அடி திமிர் பிடிச்சவளே.. எல்லாம் தெரிஞ்சு தானடி உங்கப்பன் என் தலையில மொளகா அரைச்சான்.”

அதற்கு மேல் கேட்கப் பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்ட திவ்யாவுக்கு கண்ணீரை கட்டிப்ப்படுத்த இயலவில்லை...வீட்டில் தினமும் நடக்கும் சண்டை. பெற்றோர்களுக்கு இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை.. தினமும் யாராவது யாரையாவது திட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

 பள்ளியில் - பிரின்ஸ்பால் அறையில்
“சார்.. உங்க பொண்ணு நல்லாபடிக்கிற பொண்ணு சார்.. இப்ப கொஞ்ச நாளா படிப்புல கொஞ்சம் கூட கவனமே இல்லை... நான் சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. திவ்யாவோட பிரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சேன்... அவங்க சொல்றதைப் பார்த்தா  உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கும் சண்டை,சச்சரவுகள் தான் அவளோட மனசை பாதிச்சு இருக்கும்னு தோணுது”

”சார்.. இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை சார்.. அவளுக்கு எல்லா வ்சதியும் செஞ்சு கொடுத்து இருக்கோம் சார். தனி ரூம் கொடுத்து எல்லா வசதியும் செஞ்சு இருக்கோம் சார்”

“அதெல்லாம் வாஸ்தவம் தான் சார்.. ஆனா உங்க பொண்ணு இப்ப டீனேஜில் இருக்கிற பொண்ணு.. நல்லது கெட்டது புரியுற வயசு.. உங்களுக்கு இடையில் இருக்கும் சண்டையைப் பார்க்கும் போது அவளுக்கு குடும்பம், படிப்பு இது மேலே எல்லாம் வெறுப்பு வர ஆரம்பிச்சுடும். நீங்க ரெண்டு பேருமே அவ மேல பாசம் வச்சு இருக்கீங்க.. அது வீணாகிப் போய்டக் கூடாது..என்னோட பிரண்ட் ஒருத்தர் சைக்யாசைக்யாரிஸ்ட். அவர்கிட்ட சொல்றேன்.. ஒரு ஃபிரி கன்சல்டிங்க்கு ஏற்பாடு பண்றேன்.. நீங்க ரெண்டு பேரும் சண்டையில்லாம சந்தோசமா இருந்தா தான் உங்க பொண்ணோட எதிர்காலம் சந்தோசமா இருக்கும்.. இப்ப படிப்பில கோட்டை விடற பொண்ணு வேற தவறான வழிகளில் போயிடக் கூடாது.. இந்த இண்டர்நெட் யுகத்துல நாம தான் கவனமா இருக்கனும். பொண்ணுகளைப் பாதுகாக்கனும்”


வகுப்பறையில்
“சார்..ரொம்ப நன்றி சார்.. எங்க அப்பா-அம்மா சண்டையில்லாம சந்தோசமா வாழனும்னு நினைக்கிற எனக்கு  எக்ஜாமில் மார்க் குறைச்சு போட்டு அவங்க மனசை மாத்த உதவி செஞ்சு இருக்கீங்க சார்.. ரொம்ப நன்றி சார்”
“என்னம்மா திவ்யா.. இதுக்கு போய்ட்டு... இந்த வயசில அப்பா-அம்மா போடுற சண்டையில் மனரீதியா எந்த பாதிப்புக்கும் உள்ளாகாம தெளிவா முடிவு எடுத்து இந்த ஐடியாவும் கொடுத்து இருக்கியேமே.. நீ தான் ரொம்ப கிரேட்.. சீக்கிரமா உங்கப்பா-அம்மா மாறிடுவாங்கம்மா.. உன்னோட உழைப்பு வீண் போகாதும்மா... “
நம்பிக்கையுடன் வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள் திவ்யா.

Thursday, November 29, 2012

சுழல் மோகினி

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் என் நெஞ்சை நோக்கி இறங்கிக் கொண்டு இருந்த அந்த பளபளப்பான கத்தியைத் தடுக்க இயலாமல் கத்த மட்டுமே எனக்கு முடிந்தது. அவள் கோரமான சிரிப்போடு எனது இடது பக்கத்து நெஞ்சில் கத்தியை இறக்கினாள்..
ஏதோ தொண்டையில் அடைப்பது போல் இருந்தது. நெஞ்சில் இரத்தம் தனது பீரிடும் அளவைக் காட்டிக் கொண்டு இருந்தது.
 “டேய் எவ்ளோ நேரம்டா.. தூங்குவா எந்திரிடா..”
அவள் தனது கர்ண கொடூரமான குரலில் கத்திக் கொண்டு இருப்பது காதில் கேட்டது. சட்டென்று முழிப்பு வந்தது..
 “சே.. கனவு”
இளம் குளிரான நவம்பர் மாதத்து குளிரிலும் உடல் வேர்த்து இருப்பதை உணர முடிந்தது. கண்களில் எரிச்சலும், தொண்டையில் ஒரு கரகரப்பும் சேர்ந்து இருந்தது. இடது பக்க நெஞ்சில் ஏதோ கூர்மையானதை வைத்து அழுத்திய தடம் இருந்தது.. ஆனால் இரத்தக் கறை ஏதும் இல்லை..

காலையிலேயே கொடூரமான கனவு என்னை உலுக்கி இருந்தது
“டேய்.. உன் பிரண்ட்ஸ் எல்லாம் வெளியே வெயிட் பண்றானுகடா.. எங்கேயோ அருவிக்கு போகனும்னு சொன்னீயே.. ஞாயிற்றுக் கிழமை சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க.. மதியம் சோறாக்கி வைக்கிறேன்.. இங்க சாப்பிட வந்துடுங்க” அம்மா மீண்டும்
அம்மாவுக்குத் தெரியும்.. கூட வந்து இருப்பவர்கள் இந்த ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடுவார்கள் என்று.. வேகமாக கிளம்பி கொண்டு வெளியே வந்தேன். நண்பர்கள் மூவரும் காரில் தயாராக இருந்தனர்.
“ஏண்டா தூங்குமூஞ்சி நாங்க தான் நேத்தே சொன்னம்ல.. இங்க வந்து உன்னை எழுப்ப வேண்டியதாப் போச்சு”
 “சாரிடா.. நைட் தூங்க லேட்டாகிடுச்சு.. காலையில் ரொம்ப டயர்டு வேற.. கெட்ட கனவு வந்து தூக்கத்தை கொடுத்துடுச்சு.”
கண் எரிச்சலுடன், கத்தி இறங்கிய இடத்தைத் தொட்டுப் பார்த்தேன்.. லேசாக வலிப்பது போல் இருந்தது. வண்டி வேகமாக சென்று கொண்டு இருந்தது.. அப்போது தான் திறந்து இருந்த டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கிக் கொண்டார்கள் கூடவே தீவனங்களும்...
எங்கள் ஊரில் இருந்து 20 கி.மீ தூரத்தில் மலையடிவாரத்தில் அந்த அருவி இருக்கின்றது. அவ்வளவாக ஆட்கள் வர மாட்டார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அருவியிலும், அதை ஒட்டி இருந்த தண்ணீர் கிடங்குகளிலும் குளியல் ஆரம்பமாகி இருந்தது. அதைத் தொடர்ந்து அனைவரும் மது அருந்த ஆரம்பித்து இருந்தனர்.. எனக்கு மது பழக்கம் இல்லாததால் தீவனங்களை தின்று கொண்டு இருந்தேன். கூத்தும் கும்மாளமுமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.. விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக் கொண்டு வந்தது. நல்ல மழை பெய்வதற்கான அறிகுறி இருந்தது.
நல்ல போதையில்  இருந்த நண்பர்கள் மூவரையும் தள்ளிக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றுவதற்குள் போதும் போதுமென்றாகி இருந்தது. வண்டியில் ஏறியதும் மூவரில் சரிந்து விட்டிருந்தனர். ப்ளாட்.. வழக்கமாக நடப்பது தான் என்பதால் காரை ஓட்டிக் கொண்டு வந்தேன்.
வண்டி கிளம்பியதும் மழை சடசடவென அடிக்க ஆரம்பித்து இருந்தது. மலையை விட்டு சிறிது தூரம் இறங்கி சமதளத்திற்கு வந்ததும் மழை இன்னும் வெளுக்க ஆரம்பித்து இருந்தது. திடீரென்று படார் என்ற சத்தத்துடன் பின்பக்க டயர் வெடித்திருந்தது. மழையில் நனைந்து கொண்டே இறங்கிப் பார்த்தேன். டயர் பணாலாகி இருந்தது.
சட்டையை தலைவழியே கழட்டிவாறே வைத்துக் கொண்டு டிக்கியைத் திறந்தால் ஸ்டெப்னி மட்டுமே இருந்தது. ஜாக்கி உள்ளிட்டவைகளைக் காணவில்லை. கடன்கார நண்பன்.. எவனுக்காவது அவசரத்துக்கு கொடுத்து இருப்பான்.
மழை இன்னும் வலுத்து இருந்தது. போன் சிக்னல் அனைத்தும் கட்டாகி இருந்தது. நவம்பர் மாதக் குளிரில் அருவிக்கு ஆட்கள் வருவது அபூர்வம்.. அதுவும் இப்போது திடீரென்று மழை வேறு கொட்டுகின்றது. கவ்விய இருட்டில் மின்னல் வெட்டிச் சென்றது. எங்கோ தென்னை மரத்தில் விழுந்து இருக்க வேண்டும் அருகிலேயே.. அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த தோட்டத்திற்குள் வீடும், வீட்டின் முன் காரும் தெரிந்தது.

நேரத்தை வீணாக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டே தட்டுத் தடுமாறி அந்த வீட்டை நோக்கிச் சென்றேன். மழையினால் பாதை முழுவதும் சகதிக்காடாகி இருந்தது. வீட்டில் இருந்த காலிங்பெல்லை அழுத்தினாலும் உள்ளே பெல் அடிக்கும் ஓசை ஏதும் கேட்கவில்லை. கரெண்ட் கட்டாகி இருக்கலாம் என்ற எண்ணியவாறே கதவைத் தட்டினேன்.

உடனே திறந்த கதவின் வழியே அந்த அபூர்வ தேவதையைக் கண்டேன். மன்மதனின் காதலியாக இருக்கும் சகல லட்சனங்களையும் பொருந்திய காந்தர்வி பார்த்த பார்த்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.. “ஹலோ.. என்னங்க.. யார் நீங்க. என்ன வேணும்?..இவ்ளோ மழையில் இங்க வந்து இருக்கீங்க”
அந்த பைங்கிளி தனது இதழ் திறந்து பேசியது.. இல்லை இல்லை நாதம் இசைத்தது..
 “டயரோட கார் வெடிச்சிருச்சு.. இல்லையில்லை.. ஸ்டெப்னியோட டயர் வெடிச்சிடுச்சி”
உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தேன். ஒரு பெண்ணின் அழகு இப்படி மயக்கும் என்று இன்று தான் கண்டுகொண்டேன்..
“என்னதாங்க வேணும்.. சொல்லுங்க” அந்த குயில் கிணிகிணியென ஓசை எழுப்பியது... இப்போது நிதானத்திற்கு வந்து இருந்தேன்
 “அருவிக்கு வந்தோம்ங்க.. வழியில் கார் டயர் வெடிச்சிடுச்சு.. ஸ்டெப்னி மாத்த ஜாக்கி இல்லை வண்டில.. இங்க உங்க வீட்டைப் பார்த்தேன். முன்னாடி காரும்.. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்ன்னு”
”ஓ அப்படியா.. சரி சரி உள்ளே வாங்க.. நல்லா நனைஞ்சு போய் இருக்கீங்க” அவள் வழி விட நான் உள்ளே சென்றேன். நல்ல விசாலமான ஹாலாக இருந்தது. அவள் மாம்பழ நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த சேலை அணிந்து இருந்தாள்.. வயது 25 க்குள் இருக்கும் போல் தோணியது..
அழகாக வாறிய தலை முடி. திருத்தமாக இருந்த புருவம். அழகான சிறிய பொட்டு. சோபாவில் இருந்த துண்டை எடுத்து நீட்டினாள். அதை வாங்கும் போது அவளது விரலில் என் விரல் உரச ஒரு மின்னல் அடித்தது போல் இருந்தது.
 “முதல்ல தலையை துவட்டுங்க.. ஒரு டீ போட்டுத் தர்ரேன்.. குடிங்க.. அதுக்குள் ஜாக்கி எடுத்து தர்ரேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். தலையை துவட்டிக் கொண்டே சோபாவில் அமர்ந்தேன்..
நல்ல பெரிய வீடு தான்.. வெளியே இருந்து பார்க்கும் போது பழையதாக இருந்தாலும் உள்ளே மார்டனாக இருந்தது. சிறிது நேரத்தில் அவள் டீ கோப்பையுடன் வந்தாள். டீயை வாங்கும் போது தான் கவனித்தேன். அவளது முந்தானையின் அகலம் குறைந்து போய் இருந்தது. அதோடு இடுப்புப் பகுதி இப்போது நன்றாக தெரிவது போல் மாற்றிக் கட்டியும் இருந்தாள். உள் மனதில் ஒரு சலனம் ஓடியது.
“இங்க வேறு யாரும் இல்லீங்களா?”
“என்னோட கணவர் வேலை விஷயமா மதுரை வரை போய் இருக்காங்க.. ஒரு 5 வயது மகன் இருக்கான்.. இன்னைக்கு லீவுங்கறதால அவங்க பாட்டி வீட்டுக்கு போய் இருக்கான்.. நைட் அவர் வரும் போது கூட கூட்டிட்டு வந்துடுவார்” ஒரு மோகனப் புன்னகையுடன் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள். நானும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
“டீயை முதல்ல சாப்பிடுங்க. அப்புறமா... ” என்று இழுத்தாள்..
 “கண்ணா லட்டு திங்க ஆசையா” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டே டீயை உறிஞ்சினேன். சட்டென்று கண்களைக் கொண்டு செருகியது.. கொஞ்ச நேரத்திற்கு நினைவே இல்லை. கண் எரிச்சலுடன் கண்ணைத் திறந்த போது தலை விரிகோலமாக அவள் என் மீது அமர்ந்து இருந்தாள்.

  இக்கதையில் தொடர்ச்சியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

Thursday, February 16, 2012

அஸ்மாவுக்கு நிக்காஹ்

”ஒழுங்கா சொல்றதைக் கேட்கனும்.. இல்லைன்னா பிச்சுப்போடுவேன்..இன்னும் ஒரு மாசத்தில் நிக்காஹ்.. நீ சம்மதிச்சே ஆகனும்” அஸ்மாவின் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது. வாப்பாவின் கோபமான கர்ஜனையையும், அடியையும் பொறுக்காத அஸ்மா ஆடிப் போய் விட்டாள்...கண்களில் தாரைதாரையாக தண்ணீர் கொட்டியது. எப்போதும் அதிர்ந்து பேசாத வாப்பாவா இப்படி என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அஸ்மாவின் அம்மா ஜூபைதாவின் அதிர்ச்சியோ அதை விட அதிகமாக இருந்தது. கணவன் இதுவரை குழந்தைகளை அடித்ததே இல்லை... ஜூபைதா அடித்தால் கூட குழந்தைகளை அடிக்கக் கூடாது என்று கண்டிப்பவர்.. இன்று இப்படி நடந்ததும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டாள்..


“தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை இப்படி கை நீட்டி விட்டீர்களே?” என்று கண்களின் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ரசூல் பாயைப் பார்த்து கொஞ்சம் கோபமாகவே கேட்டு விட்டாள்... ரசூல் பாய் ஒரு வெறுமையான சூடான பார்வையை ஜூபைதா மீது வீசி விட்டு, வேகமாக செருப்பை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

ரசூல் பாய் என்றால் மயிலம்பட்டி கிராமத்தில் மட்டுமின்றி அதைச் சுற்றி உள்ள பல ஊர்களுக்கும் தெரியும். பலசரக்கு மொத்த வியாபாரம்... நாணயமான மனுசன், வியாபார நெளிவு சுழிவு தெரிந்தவர்... வரவு செலவில் தாமதம் என்றால் கூட மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து தவணை தரக் கூடியவர். சொன்ன நேரத்தில் சரியாக சரக்கு கிடைக்கும், பணமும் கிடைக்கும் என்பதால் இவரிடம் வியாபாரம் செய்பவர்களுக்கும், இவர் வியாபாரம் செய்பவர்களுக்கும் ரசூல் பாயை ரொம்ப பிடிக்கும்.

இவ்வளவு அமைதியான ரசூல் பாய் தான் இன்று கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ரசூல் பாய்க்கு அஸ்மா ஒரு மகள்.. இரண்டு மகன்கள்.. மூவரையும் 20 கி.மீ தூரம் தள்ளி இருக்கும் கல்லூரி அனுப்பி படிக்க வைத்தவர். மஹல்லாவில் முதல் பட்டதாரி பெண்ணாக அஸ்மா இருந்தாள். இரண்டு மகனில் ஒருவன் பைசல் சென்னையின் ஒரு பன்னாட்டுக் குழுமத்தில் உயர்பதவியில் இருக்க... இன்னொருவன் அய்யூப் வாப்பாவுடன் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்கின்றான்.

அஸ்மா கடைக்குட்டி என்பதால் வீட்டில் எல்லோருக்கும் செல்லம்.. வாப்பாவிடம் செல்லமும், அன்பும் அதிகம்.. அதே போல் உம்மாவும், அண்ணன்மார்களும் அஸ்மாவை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். 20 கி.மீ தூரம் தள்ளி தினசரி சென்று வரும்வகையில் கல்லூரி என்றபோது உம்மா ரொம்பவே தயங்கினாள். ஆனால் ரசூல் பாய் மஹல்லாவாசிகளின் முதுகுக்கு பின்னான பேச்சுக்களையும் மீறி அவளைக் கல்லூரி அனுப்பி இளங்கலை பட்டம் வாங்க வைத்தார்.

மகன்களுக்கு திருமணம் முடிப்பதற்கு முன்னே மகளுக்கு மணம் முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்ற சராசரி தகப்பனின் மனம் தான் ரசூல் பாயை பல இடங்களில் அலைந்து மணமகன்களைத் தேட வைத்தது. ஆரம்பம் முதலே அஸ்மாவிற்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு வரனுக்கு ஒரு காரணம் கூறி தட்டிக் கழித்தாள்.. சென்னையில் இருந்த அண்ணன்காரனும், ஊரில் இருந்த அண்ணன்காரனும் கூட சில நல்ல வரன்களைக் கொண்டு வந்தனர்... வரதட்சணை தரும்/வாங்கும் பழக்கம் இல்லாததால் அப்படியான குடும்பங்களில் இருந்தே அனைத்து வரன்களும் இருந்தன... எல்லாரின் உழைப்பும் அஸ்மாவினால் ஒரு நிமிடத்தில் கலைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

கல்லூரி சென்ற பெண்ணாயிற்றே ஏதும் காதல், கீதல் என்று அகப்பட்டு விட்டாளோ என்று கூட ஜூபைதாவிற்கு சந்தேகம் வந்திருந்தது... ஆனால் அப்படி ஏதுமில்லை என்று அஸ்மா அழுத்தம் திருத்தமாக இருந்தாள்... அஸ்மாவின் தோழிகளிடம் கேட்ட போதும் இதையே தான் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அஸ்மா அல்லாஹ்வின் மீதே சத்தியமிட்டும் கூறி விட்டாள். இதை எல்லாம் ஜூபைதா தன் கணவரிடம் சொல்லி விட்டிருந்தாள்... எந்த குறையும் இல்லாத வரன்களை தட்டிக் கழிப்பதைப் பார்க்க பொறுக்கமாட்டாத ரசூல் பாய் இன்று ஒரு முடிவு தெரிய வேண்டும் என்று தான் காலை டிபனை முடித்தவுடன் பிரச்சினையை ஆரம்பித்தார்.

வாப்பாவை எதிர்த்துப் பேசி பழக்கமே இல்லாத அஸ்மாவே “நிக்காஹ்வும் வேணா... ஒரு மண்ணும் வேணா “ என்றதும் கோபம் எல்லை மீறி சென்று விட்டது ரசூல் பாய்க்கு... அருமை மகளை அடித்து விட்டு கடைக்கு சென்று விட்டார். சின்ன அண்ணன் அய்யூபும் உம்மாவிடம் “ஏதா இருந்தாலும் இன்னைக்கு கேட்டு வைங்க உம்மா... வாப்பா இப்படிக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை” என்று சொல்லி விட்டு கடைக்கு சென்றான்... அழுது கொண்டு இருந்த அஸ்மாவிற்கும் இது நன்றாகவே கேட்டது.

ஜூபைதாவால் மகள் அழுவதைக் கண்டு சும்மா இருக்க இயலவில்லை.. அழுதவளை தேறுதல் சொல்ல அருகில் சென்றது தான் தாமதம்.. அஸ்மா உடைந்து கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.. உம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு ரொம்ப நேரம் அழுதாள்... ஜூபைதாவும் மகளின் அதிர்ச்சி குறையட்டும் என்று சிறிது நேரம் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

சிறிது ஆசுவாசம் அடைந்த அஸ்மா மெல்ல
“உம்மா, எனக்கு பயமா இருக்கும்மா”
“அடி.. பயப்படாதே.. என்றைக்கா இருந்தாலும் பொண்ணுன்னா நிக்காஹ் பண்ணித் தான் ஆகனும்”

“அது நிக்காஹ் பண்ணினா மாப்பிள்ளையோட இருக்க வேண்டி இருக்குமே?”

“அதுவா உன் பிரச்சினை... உங்க வாப்பாவை நிக்காஹ் முடிக்கும் போது 16 வயசு தான்... நானெல்லாம் நல்லா தானே இருக்கேன்.. இப்பமே உனக்கு 22 ஆச்சு.. ஒண்ணும் ஆகாதும்மா... நிக்காஹ் ஆகி கொஞ்ச நாள் ஆச்சுன்னா எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடும்மா”


“அதில்லை உம்மா... எனக்கு கொஞ்ச நாளாவே மாரில் ஒரு மாதிரி வலி இருக்கு.. அதோட சின்னதா கட்டிக இருக்க மாதிரி இருக்கு... என்னோட பிரண்ட்ஸ்க கிட்ட கேட்டா இதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு சொல்றாளுக... அங்க அழுத்தினா லேசா வலி இருக்கு”

“யா அல்லாஹ்.. ” என்று அதிர்ச்சியுடன் மடியில் இருந்து மகளை இறக்கு விட்ட ஜூபைதா... “இதெல்லாம் நீ முன்னமே சொல்றது இல்லியா... இந்த மாதிரி பிரச்சினைகள் வந்தா உடனே உம்மாகிட்ட சொல்லிடனும்ல... இது மாதிரி தான் இருந்த எங்க உம்மாவோட பெரிய லாத்தா அதை அப்படியே விட்டுட்டாங்க... அப்புறம் அதுனாலயே வபாத்தாயிட்டாங்கன்னு எங்க உம்மா சொல்லி இருக்காங்க.. நாளைக்கே டாக்டரைப் போய் பார்க்கலாம்”

அடுத்த சில நாட்களில் எல்லாம் வேகமாக நடந்தது. சென்னையில் இருந்த பைசல் தனது டாக்டர் நண்பனை அணுகி இது குறித்து விசாரிக்க.. உடனே எல்லாரும் சென்னை விரைந்தனர். அனைத்து சோதனைகளுக்கும் பிறகு இது புற்று நோயின் ஆரம்ப அறிகுறி எனத் தெரிய வந்தது. தேவையான சிகிச்சைகளுக்குப் பிறகு அடுத்த சில மாதங்களில் அஸ்மா முழுவதுமாக குணமாகி இருந்தாள்.. பைசலின் டாக்டர் நண்பனே அஸ்மாவை நிகாஹ் முடித்துக் கொள்வதாக ரசூல் பாயிலிடம் கூற, நிக்காஹ்வும் சிறப்பாக நடைபெற்றது..

அதோ கையில் சாப்பாட்டு பாத்திரத்துடன் ”ஓடாதே.. ஒழுங்கா சொல்றதைக் கேட்கனும்.. இல்லைன்னா பிச்சிப் போடுவேன்” என்று கத்திக் கொண்டு தன் 3 வயது மகனை விரட்டிக் கொண்டு இருக்கிறாளே அவள் தான் அஸ்மா என்பது தெரிகின்றதா? நிக்காஹ்குக்குப் பிறகு சந்தோசத்தில் ஒரு சுற்று பெருத்து விட்ட அஸ்மாவை நமக்கு அடையாளம் தெரியாமல் போனதில் தவறேதுமில்லை.

நேசம் - யுடான்ஸ் புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிக்காக எழுதப்பட்டது. கால அவகாசம் முடிந்து விட்ட பிறகு வெளியிடப்படுகின்றது.

அன்புடன்
தமிழ் பிரியன்






Friday, August 6, 2010

சண்முகசுந்தரம் அண்ணனும் ஸ்டெல்லா அக்காவும்

சண்முக சுந்தரம் அண்ணனை எனக்கு எப்படித் தெரியும்னு யோசிச்சா கொஞ்சம் சிரிப்பாக் கூட இருக்கும். அண்ணனுக்கு எங்க தெரு தான்.. அண்ணனை எல்லாருக்கும் நல்லா தெரியும். நாங்க சின்ன வயசுல டவுசர் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருக்கும் போது அண்ணன் கல்யாண வயசில் இருந்துச்சு.. அண்ணன் எப்பவுமே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் தான் இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியின் ஏதோ பொறுப்பு வேற.. ஒரு சைக்கிள். பழைய ஹெர்குலிஸ் மாடல். அதில் அண்ணன் பெயர் போட்டு இருக்கும். சைக்கிள் பின்னாடி மர்க்காடில் அவங்க கட்சி சின்னம் கூட இருக்கும்.

இந்த தடவை ஊருக்கு போய் இருக்கும் போது அண்ணனோட பன்னிரண்டாவது நினைவு நாளாம். அவங்க கட்சிக்குன்னு ஒரு சிறு படிப்பகம் இருக்கும். தீக்கதிரோ, தினக்குரலோ ஏதோ ஒரு பத்திரிக்கை மட்டும் வரும். சின்ன வயசில் அண்ணன் கூப்பிட்டுப் போகும் போது படிச்சி இருக்கேன். அந்த படிப்பகத்திற்கு வெளியே தான் அண்ணனோட படத்துக்கு மாலை எல்லாம் போட்டு மைக் செட் வச்சு பாட்டு எல்லாம் ஓடுச்சு. நைட் அந்த மைக் செட்காரன் டப்பாக்குத்து பாட்டு எல்லாம் போட்டது தனி மேட்டர். காலையில் தான் அஞ்சலி. தெருவில் இருக்கும் பசங்கள் எல்லாம் அங்க தான் இருந்தானுக

சண்முகசுந்தரம் அண்ணன் நான் ஏழாப்பு படிக்கும் போது தான் செத்துப் போச்சு... எங்க ஊர் இரயில்வே தண்டவாளத்தில் ஆள் அடையாளம் காண முடியாதபடி அண்ணனோட பிணம் கிடந்தது. முகம், உடல் எல்லாம் சிதைந்து கிடந்தது. போட்டு இருந்த சட்டை, வேட்டி வச்சுத் தான் அண்ணன்னு கண்டுபிடிச்சாங்க.. . அண்ணனோட கட்சி உறுப்பினர் கார்டும் கூட இருந்ததாம்.

அண்ணனுக்கு கொஞ்சம் நல்ல பேர் தான் ஏரியாவில்.... ரேசன் கார்டு பிரச்சினை, சாதிச் சான்றிதழ் பிரச்சினை, பசங்களை ஸ்கூலில் சேர்க்கும் போது பிரச்சினை இப்படின்னு எல்லா பிரச்சினைகளிலும் அண்ணன் எல்லாருக்கும் உதவும். பாரம் ஃபில் பண்றதெல்லாம் அண்ணனுக்கு தண்ணி பட்டபாடு. அரசாங்க ஆபிஸ்களில் அண்ணனுக்கு நிறைய பேரைத் தெரியும்.

அண்ணன் ஏன், எப்படி இறந்தார்ன்னு நிறைய பேருக்கு சந்தேகம். கொஞ்சம் பேர் போலீஸ் கஸ்டடியில் செத்துப் போனதால் அவரைப் போலீஸே கொண்டு வந்து தண்டவாளத்தில் போட்டு விட்டதாக இன்றும் பேசிக் கொள்வார்கள். அப்போது ஏற்ப்பட்ட ஒரு சாதி தகராறில் ஒரு போலிஸ்காரரை உயிரோடு கொளுத்தியதாக அண்ணன் மீது குற்றச்சாட்டு. அண்ணனுக்கு சாதி எல்லாம் பிடிக்காது என்றாலும் எப்படியோ இந்த கேஸில் மாட்டி விட்டு இருக்காங்க.. அதனால் தான் போலிஸ் பிடிச்சு கொன்னுட்டதா பேச்சு. அப்பவெல்லாம் என்கவுண்ட்டர் கலாச்சாரம் இல்லையே?.



கொஞ்சம் அந்தரங்கமாக சண்முகசுந்தரம் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூடப் பேசிக் கொள்வார்கள். அண்ணனுக்கு ஒரு லவ் இருந்தது. அந்த பொண்ணு பேரு ஸ்டெல்லா. அந்த பொண்ணும் எங்க தெரு தான். தையல் கிளாஸ் போகும் போது படிப்பகத்தைத் தாண்டி தான் போகும். அப்ப அண்ணன் சரியா படிப்பக வாசலில் நிக்கும். ரெண்டு பேரும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். புன்னகையும் பிறக்கும். இதைப் பார்க்க எங்களுக்கு ஜாலியா இருக்கும். அண்ணன் சில நேரம் எங்களை விரட்டி விடும். ஸ்டெல்லா அக்கா வேறு மதம் என்பதால் ரெண்டு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு.

கடைசியில் ஸ்டெல்லா அக்காவுக்கு சிவகாசியில் இருந்து ஒருவனுக்கு கல்யாணம் முடிச்சி கொடுத்துட்டாங்க... அண்ணன் தாடி மீசையோட கொஞ்ச நாள் அலைந்தது. ஸ்டெல்லா அக்காவும் கொஞ்ச நாள் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்களாம். அப்புறம் கொஞ்ச நாள் லூசு மாதிரி இருந்தாங்களாம். அப்புறம் எங்கியோ காணாமப் போய்ட்டாங்களாம். அதனால் ஏற்பட்ட துக்கத்தில் தான் அண்ணன் செத்துப் போனதாவும் பேச்சு.

நானும் போய் நினைவஞ்சலியில் கலந்து கொண்டேன். இப்ப புதுசா இருக்கும் ஒன்றியத்தலைவர் அண்ணனின் வீரதீரபிரதாபங்களை எல்லாம் விளக்கிச் சொல்லிக்கிட்டு இருந்தார். அண்ணனை போலிஸ் அராஜகம் கொன்று விட்டதாகக் கூறி போலிஸையும் தாக்கிக்கிட்டு இருந்தார். சூட்டோட தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் உண்டியலும் குலுக்கப்பட்டது. என்னிடம் வந்த போது ’வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கீங்க.. தாராளமாப் போடுங்க’ன்னு மைக்கிலேயே சவுண்ட் வேற.. வேற வழி இல்லாம 50 ரூபாயைப் போட வேண்டி வந்துச்சு. எல்லாத்தையும் கேட்டுவிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்த போது உம்மாவும், பக்கத்து வீட்டு அக்காவும் அண்ணன் குறித்து பெருமையாகப் பேசிக்கிட்டு இருந்தாங்க... அவங்களுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி சென்னையில் நடந்ததைச் சொல்லலாம்னு நினைச்சுட்டு பின்ன விட்டுட்டேன். அதை உங்களுக்கு மட்டும் சொல்லி விடுகிறேன். சென்னையில் படிக்கும் போது ஞாயிறுகளில் தி.நகரில் சுற்றுவது வழக்கம். அப்படி ஒருநாளில் தான் அண்ணனையும், ஸ்டெல்லா அக்காவையும் அங்க பார்த்துட்டேன்.

வேகமா போய் அண்ணன் கையைப் பிடிச்சிக்கிட்டு விசாரிச்சேன்ன். ஸ்டெல்லா அக்காவுக்கு முகமெல்லாம் வேர்த்துப் போச்சு.. கூடவே ஒரு அஞ்சாறு வயசில் ஒரு பையன் வேறு. அண்ணனால் அக்காவை மறக்க முடியலையாம். அதோட போலிஸ் கேஸ் வேற.. அதனால் ரெயில்வே ஸ்டேசன் ஓரம் செத்துக்கிடந்த ஒரு பிச்சைக்காரனுக்கு அவரோட டிரஸ் எல்லாம் போட்டு, முகத்தைச் சிதைத்து இரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மாதிரி போட்டுட்டு ஸ்டெல்லா அக்காவோட பெங்களூருக்கு ஓடிப் போய்ட்டாராம். ரெண்டு வருஷம் கழிச்சு சென்னைக்கு வந்து செட்டில் ஆயிட்டாராம். யார்கிட்டயும் சொல்லிடாதன்னு கேட்டுக்கிச்சு.. ஸ்டெல்லா அக்காவும் ஒரு அழுகையோட இப்பதான் சந்தோசமா இருக்கேன். யார்கிட்டயும் காட்டிக் கொடுக்காதன்னுச்சு. சரின்னு விட்டுட்டேன். நீங்களும் இதை மறந்துடுங்க என்ன..

Thursday, February 25, 2010

இயற்கையான அழகி.. என் வீட்டிற்கு எதிரே

அவளை எப்ப முதன் முதலா பார்த்தேன்னு நினைவில் இல்லை.. ஆனா பார்த்த நாள் முதலாய் மனசுக்குள் நெருப்பு பத்திக்கிச்சு.. எப்ப பார்த்தாலும் மனசுக்குள் மத்தாப்பு தான்.. அழகா இருப்பான்னு சொன்னால் அது தப்பா போய்டும்... ஏன்னா எழுத்தாளர்கள் எல்லாம் அழகான என்ற அர்த்தத்தில் சொன்ன மொக்கை பிகர்களோடு இவளையும் சேர்த்து ஒப்பீடு செய்ய வேண்டி வந்து விடும்.. இவ அதுக்கு எல்லாம் மேலே..

அதுக்காக எண் கணிதத்தின் துணையோடு பெருமிதமா அங்கங்களை வர்ணிக்கவும் முடியாது.. நார்மல் தான்.. ஆனா அழகு... கொஞ்சம் மாநிறத்தில், சிரித்துக் கொண்டே இருக்கும் ஒரு அழகி.. எவன் பார்த்தாலும் கொத்திக் கொண்டு போய் விடுவான் என்று சொல்லவும் முடியாத அழகு... மத்தவர்களுக்கு எப்படியோ எனக்கு அவள் அழகியாத் தெரிந்தாள்.

எப்படி அவளை அறிந்தேன்... என்ன பெரிய அறிதல், புரிதல் எல்லாம்.. முன் வீட்டில் புதிதாக குடி வந்து இருந்தாள். அவங்க அப்பாவுக்கு இங்க இருக்கும் ஏதோ ஒரு பன்னாட்டு பண்ணாடைக் கம்பெனியில் வேலையாம்.. மாற்றலாகி இங்க வந்து இருக்காங்க போல.. ஒரு குட்டி தம்பியும் இருக்கான் அவளுக்கு.. கதாநாயகின்னா ஒரு குட்டி தம்பியும், தங்கையும் இருக்கனும் என்பது எழுதப்படாத விதி போல..

அரசல் புரசலாக அவளை பல முறை பார்த்து இருந்தாலும் வீட்டிற்கு முன்னாடி கோலம் போடும் போது தான் அவளைப் பார்த்தேன்.. எங்க தெருவில் இருக்கும் எந்த பொண்ணும் இப்பவெல்லாம் கோலம் போடுவதே இல்லை... நான் சின்ன வயசில் இருக்கும் போது, எனது சீனியர்கள் எல்லாம் கோலம் போடும் நேரங்களில் சைக்கிளில் வலம் வருவார்கள்.... இதனால் சில நேரங்களில் பொண்ணுகளின் கடைக்கண் பார்வையும், பல நேரங்களில் நைட்டி ஆன்ட்டிகளின் திட்டுக்களையும் மானாவாரியாக அள்ளிச் செல்வார்கள்.

இப்ப இருக்கும் பொண்ணுகள் எல்லாம் பாவம் போல.. எல்லாம் காலையில் வேகவேகமா பஸ் பிடிச்சி காலேஜ், ஸ்கூல் எல்லாம் போய்ட்டு நைட் தான் வீட்டுக்கு திரும்புதுங்க.. இதில் வீட்டை பெருக்குவதாவது.. கோலமாவது...ஆங் எங்க விட்டேன்.. கோலம் போடும் போது... அப்ப தான் வீட்டு வாசலில் பேப்பர்க்காரன் விட்டு விட்டுப் போன தி ஹிந்து பேப்பரை எடுக்க வெளியே போனேன் என்று எழுதத் தான் ஆசை... ஆனா என்ன செய்ய வீட்டில் இருக்கும் பசு மாட்டை அருகில் இருக்கும் தோட்டத்திற்குள் இரை மேய பத்திக் கொண்டு போகும் போது தான் அவளைப் பார்த்தேன்.

அவளை ஏற்கனவே முன்னாடியே வர்ணிச்சாச்சு.. அதனால் நேரா மேட்டருக்கு போகலாம்... என்னன்னா அவளுக்கு என் மீது எப்படி காதல் வந்துச்சு என்பது தான்... நானே எருமை மாட்டுக்கு கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருப்பேன்.. அவளுக்கு என் மீது எப்படிக் காதல் வந்தது? ஏன் எங்க ஊரு பாட்டுக்காரனில் ராமராஜனைப் பார்த்து அந்த ஒல்லியா சிகுசிகுன்னு வளர்ந்து இருக்குமே அந்த அம்மாவுக்கு காதல் வரலையா? அது மாதிரின்னு நினைச்சுக்கங்க...



அவளோட தம்பி தான் எங்க காதலுக்கு தூதவனோ என்று நினைச்சுக்காதீங்க.. அந்த படுபாவி தான் வில்லன்... இவ சிரிச்சாலே அவன் என்னை முறைப்பான்... அவகிட்ட நான் வாங்கிய முத்தத்தையோ, அவளுக்கு நான் கொடுத்த ஆங்கிலப் பட கிஸ்ஸையோ பார்த்து இருந்தான் அம்புட்டுத் தேன்... ஊரில் எனக்கு பெரிய ஆப்பா சீவி வச்சு இருப்பான்.. நல்லவேளை மாட்டலை..

அவளை நான் லவ் பண்ண ஆரம்பிச்சதில் இருந்தே ஊர்க்காரப் பயலுவலுக்கு ஒரே பொறாமை.. எல்லாம் காதிலும் புகை... எப்படித் தான் இந்த மேட்டர் ஊர்க்குள்ள பரவுதோ.. எல்லா திருவாத்தானுகளும் இதே வேலையா அலையுதானுக... கடைசியா ரெண்டு வீட்டுலயும் தெரிஞ்சு போச்சு... அவங்கப்பன் குய்யோ முறையோன்னு வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறான்.. பின்னே பக்கத்து டவுன் டாஸ்மாக் பாரில் அவன் வாங்கின குவாட்டரில் ஓசியில் முக்கால்வாசியை குடித்தவன் தான் மாப்பிள்ளைன்னா எந்த அப்பன் தான் ஒத்துக்குவான்.. ஆனா நம்ம ஆளு படு ஸ்ட்ராங்.. காதல் பட கதாநாயகி மாதிரி எல்லாம் ஓவரா போகலை,,, நீ வேணா செத்துப் போ.. நான் அவனைத் தான் கல்யாணம் கட்டுக்குவேன்னு சொல்லிடுச்சு...

அவங்கப்பனுக்கு விக்கினதுமில்லை, விரைச்சதுமில்லை.. ஸ்ட்ரக்கப் ஆயிட்டான்.. அப்புறம் என்ன வேற வழி இல்லாம எனக்கே கல்யாணம் முடிச்சுத் தருகிறேன்னு எங்க வீட்டு வாசப்படி ஏறி வந்துட்டான்.. அடுத்த வாரமே கல்யாணம்...

இதுவரை எழுத வேண்டிய சிறுகதையை எழுதி வைத்து விட்டு படித்துக் கொண்டு இருந்தேன்.. பின்னாடி இருந்து கழனித் தண்ணி மீதியை தலையில் விசிறி அடித்து விட்டு அப்பத்தா கத்தத் தொடங்கினார்.. “ஏண்டா? சல்லவாரி நாயே.. அப்ப இருந்து பசு மாடு கத்துது அதைக் கொண்டு போய் தோட்டத்துல கட்டுன்னு நாயா பேயா கத்திக்கிட்டு இருக்கே... பேப்பரிலே ஏதோ ஜில்லா கலெக்டர் பரிட்சைக்கு போறவன் மாதிரி உட்கார்ந்து கிறுக்கிகிட்டு இருக்க... ஒன்னு ஏதாவது பொஸ்தகத்தை எடுத்து படிச்சிட்டு லூசு மாதிரி மோட்டு வளையைப் பார்க்குறான்.. இல்லைன்னா எதையாவது எழுதுறான்.. என்னைக்கு தான் திருந்த போறானோ என்று புலம்பிக் கொண்டே போனாள்.

மாட்டை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்த போது, என் காதலி குடி இருக்கும்\இருந்த வீட்டில் பல ஆண்டுகளாக குடி இருக்கும் வள்ளிக் கிழவி வீட்டின் முன் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

Tuesday, January 19, 2010

ஆயிரத்தில் ஒருவனும், ஒரு சிறுகதையும்.

எனக்கு நேரே நிற்க வைக்கப்பட்டிருந்த அந்த பத்துப் பேரையும் பார்க்கும் போது பாவமாக இருந்தது. காட்டுவாசிகள் போல் உடை அணிந்து இருந்தனர். அதில் நடுமையமாக நின்றிருந்த அந்த அழகான பெண்ணைப் பார்க்கும் போது ஏனோ மனம் அவள் பேரில் மயங்குவது போல் இருந்தது. என் கையில் இருந்த வாள் சூரிய வெளிச்சத்தில் பட்டு மின்னிக் கொண்டு இருந்தது. எனக்கு அருகில் இருந்த கேப்டன் கையைக் காட்ட என் வாள் மின்னல் வேகத்தில் சுழன்றது. சில வினாடிகளில் அங்கிருந்த பத்து பேரின் தலையும் வெட்டப்பட்டு கீழே கிடந்தது. எனது முகம், ஆடை முழுவதும் சூடான இரத்தம் பட்டு ஒழுகிக் கொண்டு இருந்தது. அந்த பெண்ணின் தலை தரையில் உருண்டு காலுக்கு கீழ் வரும் போது கலகலவென சிரிக்க ஆரம்பித்து இருந்தது.

சட்டென்று கண்ணைத் திறந்து பார்த்த போது படுக்கையில் இருந்தேன்... ஓ..கனவு.. உடல் முழுவதும் வியர்த்து ஒழுகிக் கொண்டு இருந்தது. என்ன குரூரமான கனவு... அந்த காட்டுவாசிகளை என் கையால் வெட்டிக் கொள்வது எவ்வளவு கொடுரம்...

அறையை விட்டு வெளியே வந்த போது, கப்பல் மிதமான வேகத்துடன் சென்று கொண்டு இருந்தது. மெதுவாக கப்பலின் மேல் தளத்திற்கு வந்த போது அங்கே குழுத் தலைவர் சான்சஸ் நின்று கொண்டு இருந்தார்... ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினார்

“ஹாய்! தமிழ்! என்ன இப்படி வேர்த்து விறுவிறுத்துப்போய் வந்து கொண்டு இருக்கிறாய்?”
“ஒரு கெட்ட கனவு சீப்... அதான்”
“ஓ... நான் கூட முதல் தடவை நீ கப்பலில் வந்த போது, வாந்தி எடுத்து அமர்க்களம் செய்தது நினைவுக்கு வந்து விட்டது”
கலகலவென சிரிக்கத் தொடங்கி இருந்தார். நம் நிலைமை நமக்கு தானே புரியும்? எதுவும் பேசாமல் கப்பலின் முனைக்கு சென்று நின்று கொண்டேன். தூரத்தில் வங்காள விரிகுடாவின் எல்லை முடிவே இல்லாமல் விரிந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. இடையிடையே சிறு சிறு தீவுக்கூட்டங்கள் தெரிந்தன.

என்னை உங்களுக்கு அறிமுகம் செய்யவில்லையே? நான் தமிழ் பிரியன்... இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பணியாளர்களில் ஒருவன். பொறியியல் முதுகலைப் பட்டம் படித்து, பின்னர் சில ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு விட்டு இந்த பணியில் இணைந்துள்ளேன். இப்போது நாங்கள் கப்பலில் ஒரு தீவுக்கு சென்று கொண்டு இருக்கின்றோம்.

இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் உலகில் உள்ள அவசரத் தேவையான மின்சாரத்தை புதிய முறையில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதில் ஒரு முக்கியமானவர்களில் நானும் ஒருவன். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Indionium (இண்டியோனியம்) என்ற தனிமத்தை செறிவூட்டி சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றலைக் கொண்டு அதிக அளவில் மின்சாரம் கண்டுபிடிக்க இயலும் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். யூரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்றவற்றை செறிவூட்டி, மின்சாரம் எடுக்கும் முறை மனித குலத்தின் அழிவுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் அதை இந்தியா முற்றிலுமாக கைவிட்டு இதில் இறங்கி உள்ளது.

இண்டியோனியத்தை சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றல் சில மணி நேரங்களில் குன்றி விடும். இதனால் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது என்றும் கண்டுபிடித்துள்ளோம். ஓரு தீவை இண்டியோனியம் குண்டு வைத்து தகர்க்கப் போய்க் கொண்டு இருக்கிறோம்.

வங்காள விரிகுடாக் கடலில் அந்தமான் தீவுகளுக்குக் கீழே கேர்க்கஸ் என்ற தீவுக்கு செல்கிறோம். அந்த தீவைத்தான் குண்டு வைத்து தகர்க்கப் போகின்றோம். சுமார் 6 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் உள்ள அந்த தீவு முழுவதும் கடுமையான பாறைகளைக் கொண்ட மலையினால் ஆனது. சுமார் 1000 மீட்டர் உயரம் உள்ள அந்த மலையின் மேல் இருந்து சுமார் 2000 மீட்டர் ஆழத்திற்க்கு துளை உருவாக்கப் பட்டுள்ளது. இண்டோனியம் செறிவூட்டப்படும் போது அந்த தீவு முற்றிலுமாக வெடித்து சிதறி விடும். அதன் மூலம்உலை வெடித்தால் இருக்கும் சேதாரங்களையும், கதிர்வீச்சின் வீரியத்தையும் கணக்கிட உத்தேசித்துள்ளோம்.

கப்பல் கோக்கஸ் தீவுக்கு அருகில் இருப்பது தெரிந்தது... மேற்கு திசையில் கதிரவன் தனது கைகளை சுருக்கிக் கொண்டு மறைந்து கொண்டு இருந்தான். கப்பல்தீவில் இருக்கும் அந்த நெடியாக மலை சோகமாக பார்ப்பது போல் இருந்தது. நங்கூரம் பாய்ச்சி நீர்மட்டம் அதிகமாக இருக்கும் இடத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டது.

இரவு மணி 11.00 .... கடலின் மேல் தளத்தில் நின்று, கடலை ரசிப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். கடல் அலைகள் தீவின் பாறைகளில் மோதும் ஓசை காதுகளில் வந்து அறைந்து கொண்டு இருந்தது. அப்போது தீவில் இருந்து அந்த மெல்லிய ஒலி கிளம்பத் தொடங்கி இருந்தது..... டம்டம் என்று ஆரம்பித்த ஓசை சிறிது சிறிதாக அதிகமாகி திடீரென்று நின்று போய் இருந்தது

சான்ஸன் கப்பல் மேல் தளத்திற்கு வருவது தெரிந்தது.

“ஹாய் தமிழ்! கடல் என்ன சொல்லது? ஏதாவது கவிதை சொல்லுங்களேன்”
“இல்லை சீப்! இந்த தீவில் மக்கள் வசிக்கிறார்கள் போல தெரிகிறது.. சிறிது முன் அங்கே ஏதோ இசைக்கும் சத்தம் கேட்டது”
“ஹா! ஹா! ஹா! அதெல்லாம் அலைகளின் ஓசையாக இருக்கும்... இங்கு நான் பல மாதமாக ஆராய்ச்சி செய்து இருக்கிறேன்.இந்த தீவில் சில சிறு விலங்குகளைத் தவிர வேறு யாருமே இல்லை. இன்ப்ரா ரெட் கதிர்களை அனைத்து பகுதியிலும் செலுத்தி உறுதி செய்து விட்டோம். மனிதர்கள் யாருமில்லை.. மலையைக் குடைந்து நமது உலையை ஏற்படுத்தி விட்டோம். அனைத்து உபகரணங்களையும் பொருத்தியாகி விட்டது. அப்படி யாராவது இருந்தால் இதற்குள் தெரிந்திருக்கும்”
“இல்லை சீப்! என் மனதுக்கு உறுத்தலாக உள்ளது... இங்கு யாரோ வாழ்கிறார்கள்”
“தமிழ்! உனக்கு இதே வேலையாய் போய் வீட்டது. இரவு நன்றாக தூங்கி எழு! எல்லாம் சரியாகி விடும். காலையில் சீக்கிரம் தீவுக்கு செல்ல வேண்டும். பை.. குட் நைட்”

சான்சஸ் கீழே சென்று விட மீண்டும் தீவில் இருந்து அந்த இசை கேட்க ஆரம்பித்து இருந்தது....

காலை சூரியன் தனது செங்கிரண கைக்களை விரித்துக் கொண்டு வேகமாக உதித்துக் கொண்டு இருந்தான். கப்பலில் ஆட்கள் வேலைக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. இரவில் கேட்ட சத்தங்களின் திகைப்பில் இருந்து மனம் இன்னும் மீண்டு இருக்கவில்லை.

மேலே வந்து பார்த்த போது தீவுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அதில் தேவையான தொழில் நுட்பக் கருவிகளும், உணவுப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இன்றைய எனது பணி கொஞ்சம் கடினமானதாக இருக்கும் என்றே தோன்றியது. எங்கள் குழுவில் முக்கிய குழு ஹெலிகாப்டர் வழியாக மலையின் உச்சியில் இருக்கும் முக்கிய ஆராய்ச்சி நிலையத்தை அடையும். அங்கிருக்கு ஆரம்பமாகும் ஆழ்துளையில் வெடிப்புப்பைத் தொடங்க வேலை நடக்கும். மற்ற சில குழுக்கள் தீவின் ஓரங்களில் உள்ள சிறு குன்றுகளில் ஏற்கனவே பொருத்தப்பட்ட டிரான்ஸ்மீட்டர்களை சரி பார்க்க வேண்டும்.

ஆழ்துளையில் வெடிப்பு நிகழும் போது தீவு முழுவதும் வெடித்துச் சிதறும் என்பதால் அதன் சக்திகளை அளவிட இந்த டிரான்ஸ்மீட்டர்கள் உதவும். இதை பல கிலோ மீட்டர் தூரத்தில் நிற்கப் போகும் எங்கள் கப்பல், தூத்துக்குடி, அந்தமான், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் இருக்கும் கட்டுப்பாடு அறைகள் கண்காணிக்கும்.

காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. எனக்கு தேவையான பொருட்களை முதுகில் சுமந்து கொண்டு தீவில் ஒரு புறத்தில் இறங்கி இருந்தேன். எங்களை இறக்கி விட்டு விட்டு ஹெலிகாப்டர் பராமரிப்புப் பணிக்காக கப்பலுக்கு வேகமாக நகர்ந்திருந்தது. என்னுடன் வந்திருந்தவர்கள் அனைவரும் தத்தமது உடைமைகளை எடுத்துக் கொண்டு தயாராக இருந்தனர். பல தடவை வந்த பழக்கமாக இடம் என்றாலும், இரண்டு நாட்களாக கண்ட கனவுகளாலும், அமானுஷ்யமான உணர்வுகளாலும் ஏனோ ஒரு கலவரமான உணர்வில் இருந்தேன்.

மா
லை ஆகிக் கொண்டு இருந்தது. வழி மாறிச் சென்றுவிட்டதால் உடன் வந்தவர்களை தவற விட்டு இருந்தேன். வழியில் இருந்த பல இடர்களால் நேரம் தாமதமாகி இருந்தது. ஒரு பாம்பு வேறு இடைமறித்து, அதை சுட்டுத் தள்ள வேண்டி இருந்தது. வேகமாக இருள் சூழ ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. ஹெலிகாப்டர் திரும்பி வந்து காத்துக் கொண்டிருக்கும். கையில் இருக்கும் வாக்கி - டாக்கியும் சார்ஜ் இல்லாமல் செத்துப் போய் இருந்தது.

திடீரென்று அந்த ஏகாந்தமான பாடல் பாடும் ஓசை கேட்க ஆரம்பித்து இருந்தது. அதோடு சுகந்தமாக மல்லிகைப் பூவின் வாசமும் வர ஆரம்பித்து இருந்தது. நேற்று கனவில் கேட்டது வாத்தியங்களின் ஒலியாக மட்டுமே இருந்தது. இன்று கேட்பது ஒரு பெண்ணின் குரல். இனிமையான குரல்... இதுவரை கேட்டிராத முறையில் கொஞ்சம் கடினமாக தமிழில் பாடிக் கொண்டு இருந்தாள். குரல் வந்த திசையை நோக்கி கால்கள் நகரத் துவங்கின.... சிறு குன்றுகளுக்கு இடையே இருந்த குறுகிய பள்ளத்தாக்கில் இருந்து தான் அந்த குரல் வந்து கொண்டு இருந்தது.

அங்கே மல்லிகைப் பூக்களின் செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன. அதில் இருந்து ஒரு பெண் பூக்களைப் பறித்து தன்னிடம் இருக்கும் பூக்கூடையில் போட்டுக் கொண்டு இருந்தாள். வித்தியாசமான பூக்களாலும், பருத்தியாலும் ஆனது போன்ற ஆடை அணிந்து இருந்தது ஒரு பழைய நாகரீக பெண் போல தெரிந்தாள்.

மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டு அந்த பெண்ணுக்கு அருகில் செல்லத் துவங்கினேன். அழகான குரலில் பாடிக் கொண்டே இருந்தாள். மெதுவாக இடுப்பில் இருந்த பிஸ்டலைக் கையில் பிடித்தவனாக அவளுக்கு அருகில் நெருங்கி இருந்தேன்.

“அங்கேயே நில்! யார் நீ”

கையில் இருந்த பூக்கூடையை கீழே தவற விட்டவளாக அதிர்ந்து போய் திரும்பினாள். என்னைக் கண்டதும், ஏதோ இதுவரைப் பார்க்காத ஒன்றைப் பார்தது போல் விதிர்விதிர்த்து நின்று கொண்டிருந்தாள்....

வீடியோ கான்பரன்ஸில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மேலதிகாரிகளுக்கும் முன் அமர்ந்து இருந்தேன். என் அருகில் கேப்டன் சான்சஸ் இருந்தார். சான்சஸின் முகம் வியர்வையில் குளித்து இருந்தாலும், அவருக்குள் இருக்கும் பதற்றத்தை அவரால் தவிர்க்க இயலாதது தெரிந்தது. அதிகாரிகள் கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்தனர்.

“தமிழ்! நீங்க சொல்வது உண்மையாயா?”

“கண்டிப்பாக... அந்த பெண்ணைப் பார்த்ததும், அவளை துப்பாக்கி முனையில் நிறுத்தினேன். அவளுக்கு துப்பாக்கியைப் பற்றி தெரியவில்லை. துப்பாக்கியைக் கண்டு கொள்ளாமலே இருந்தாள். அவளை மிரட்டும் தொனியில் பேசியதும் பயந்து போனாள். அவளது மொழியும் எங்களது தமிழ் மொழியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தது. அதனால் அவள் என்னுடன் பேசத் தொடங்கினாள்”

“நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தையே அதிகமாக்குகிறது தமிழ்! மேல சொல்லுங்க”

“யார் அவள் என்று விசாரித்ததில் அவள் அந்த தீவிலேயே அவர்களது குழுவுடன் வசிப்பதாகக் கூறினாள். அவர்களின் வீடுகள் மலைகளைக் குடைந்து படைக்கப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து யாரும் வெளியே வரக் கூடாது எனவும் கூறினாள். மேலும் மலைக்குள் சூரிய ஒளி வரும் அமைப்பு உள்ளதாகவும், தண்ணீர் அருவிகளும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகில் இருப்பதாகவும் கூறினாள்.”

“உணவுப் பொருட்களை விளைவிக்கும் பள்ளத்தாக்குகளுக்கு மட்டும் இரகசிய வழி வழியாக சென்று திரும்புவது வழக்கமாம். அந்த பெண்ணுக்கு மல்லிகைப் பூவின் மீது உள்ள ஆசையின் காரணமாக அவர்களது வீட்டை விட்டு அவளுக்கு மட்டுமே தெரிந்த பாறை இடுக்கு வழியே வெளியே வந்திருக்கிறாள்”

“தமிழ்! நீங்கள் சொல்வதை எல்லாம் நம்பவே முடியவில்லை. ஏதோ பழைய காலங்களில் சொல்லப்படும் கதை போல் உள்ளது”

“இல்லை கேப்டன்! நான் சொல்வதெல்லாம் உண்மை தான்.. அவள் சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அவளுடன் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். பாறைக்குப் பின் இருந்த ஒரு சிறு வழியாக என்னை அழைத்துச் சென்றாள். என்ன ஆச்சர்யம். ஒரு அழகான சிறு கிராமம் போல் இருந்தது. வீடுகள் அனைத்தும் அழகான மரங்களால் ஆன கதவுகளாலும் செய்யப்பட்டிருக்கிறது. நான் அந்த வீடுகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவள் ஓடிப் போய் விட்டாள். நான் அதிகப்படியான அதிர்ச்சியில் தட்டுத்தடுமாறி ஹெலிகாப்டரை அடைந்தேன்.”

“நீங்க சொல்வது உண்மை என்றாலும் கடந்த நான்கு நாட்களாக உங்களின் வழிகாட்டுதலில் அந்த தீவையே சல்லடை போட்டு தேடியாகி விட்டது. அல்ட்ரா சோனிக் முறையிலும் தேடி விட்டோம். நீங்கள் குறிப்பிடுவது போல் யாருமே அங்கு இல்லை. நீங்கள் சென்ற பாறை வழிப்பாதையையும் உங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இனியும் நீங்கள் சொல்லும் கதைகளை நம்ப இயலாது தமிழ்!”

“இது கதை இல்லை சார், இன்னும் சில நாட்கள் நம் சோதனையை தள்ளி வைத்து தேடலாம். நான் சென்ற நேரம் இருட்டி இருந்ததால் என்னால் அந்த பாதையைக் கண்டுபிடிக்க இயலவில்லை.”

“மன்னிக்கவும் தமிழ்! நமது இந்த ஆராய்ச்சியின் முடிவுக்காக உலகமே நம்மை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கின்றது. உங்களுடைய இந்த பேத்தல்களுக்காக எல்லாம் நம் சோதனையை தள்ளி வைக்க இயலாது. உங்களை இந்த சோதனை முடியும் வரை தீவுக்கு செல்ல தடை விதிக்கின்றோம். ஆனாலும் கப்பலில் இருந்து ஆராய்ச்சி பணிக்கு உதவுங்கள். Best of Luck!"

தற்கு அடுத்த வந்த சில நாட்கள் என் வாழ்வில் மறக்க இயலாதவை. இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு அந்த தீவையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனோ தூங்க முயற்சி செய்தால் அந்த அப்பாவிப் பெண்ணின் முகமே நினைவுக்கு வந்தது.

இன்று ஆய்வின் கடைசி நாள். மதியம் 1 மணிக்கு உலையை வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வெடித்தும் இருந்தது. பாதுகாப்பிற்காக கப்பல் தீவில் இருந்து பல நாட்டிக்கல் தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. சில மணிகளில் இந்தியாவில் இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களின் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து, எந்த கதிர்வீச்சும் இல்லை என அறிவிக்கப்பட்டது. எனவே தீவை நோக்கி மேல் தகவல்களுக்காக கப்பல் சென்று கொண்டிருக்கின்றது. தீவு இருந்த இடமே தெரியாமல் இருந்தது.

கப்பல் முன்னேறிக் கொண்டு இருந்தது. கப்பலின் முகப்பில் நின்று கொண்டு இருந்தேன். என் அருகில் சான்சஸூல் எதையோ பறிகொடுத்தவர் போல் தீவு இருந்த இடத்தை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். கடலில் ஏதோ மிதந்து வருவது போல் இருந்தது. அருகே வர வர அது என்னவென்று புரிந்தது...

“அது.. அதே தான்.. இது அந்த பெண் வைத்திருந்த பூக்கூடை”
எனது கத்தலில் அனைவரும் கப்பலின் முகப்பிற்கு வந்திருந்தனர். பூக்கடையை வீரர்கள் கப்பலுக்கு எடுத்து இருந்தனர். கப்பல் நகர நகர மரக்கதவுகளும், மரச் சாமான்களும் மிதந்து வந்து கொண்டு இருந்தன. இன்னும் தீவை நெருங்கும் போது மரங்களில் சிக்கிய வண்ணம் பிணங்கள் தெரிய ஆரம்பித்து இருந்தது. ஆதிவாசிகள் மாதிரியான ஆடைகளுடன்...

டிஸ்கி : இச்சிறுகதையை 2008 அக்டோபரில் எழுதி எனது வலைதளத்தில் பிரசுரித்து இருந்தேன். இங்கு மீண்டும் மீள்பதிவாக..

http://majinnah.blogspot.com/2008/10/blog-post_31.html

இக்கதையின் மூலம் கல்கி எழுதிய ஒரு சிறுகதையே.

Sunday, August 9, 2009

அரைக் கிறுக்கன் - உயிரோடைக்காக எழுத நினைத்தது.

இச்சிறுகதை உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுத வேண்டியது. ஏதோ ஒரு இங்கிதத் தடை(?) அல்லது கூச்ச அச்சம் இதை வெளியிட தடை செய்தது. போட்டிக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில் சில வெட்டுக்களுக்குப் பிறகு இதை வெளியிட முடிவு செய்து விட்டேன். கவிதையோடு முழுதாக ஒத்துப் போகாததும் ஒரு காரணம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ப்பொழுதெல்லாம் என்னைக் கண்டதும் அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. மார்க்கெட் போய் வரும் வழியில் தான் அவன் வேலை செய்யும் மளிகைக் கடை இருக்கின்றது. மூட்டைகளை அடுக்கி வைப்பது, அட்டைப் பெட்டிகளை கட்டி வைப்பது, கடைக்கு முன்னால் பெருக்குவது என்று ஏதாவது செய்து கொண்டு இருப்பான். நல்ல ஆடைகளும் உடுத்தி இருக்கின்றான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் சில நேரங்களில் பரிதாபமும், இன்னும் சில நேரங்களில் பெருமிதமும் ஏற்படுகின்றது.


தூரத்தில் வரும் போது என்னைப் பார்க்கும் அவன் அருகில் வந்ததும் எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, ஏதாவது வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றான். இன்று வரை அவனுக்கு என்ன பெயர் என்பது தெரியவில்லை. எல்லோரும் அவனை அரைக் கிறுக்கு என்றே கூப்பிடுகின்றனர்.

அவனை முதன் முதலில் சந்தித்த அந்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. இப்பொழுது இருப்பது போல் இல்லை அன்று அவன். கிழிந்த சட்டையும், பின்பக்கம் கிழிந்திருந்த டவுசருமாக உடல் முழுவதும் அழுக்காக, பரட்டைத் தலையுடன் வீட்டு கேட்டருகே நின்று கொண்டிருந்தான். சில சிறுவர்கள் கல்லை எடுத்துக் கொண்டு அவனைத் துரத்தில் என் வீட்டுக் காம்பவுண்டிற்குள் நுழைந்து இருக்கின்றான். பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தான்.

கொஞ்சம் இருங்கள்…. தெருவைக் கடப்பதற்கு முன் இந்த பகுதியைப் பற்றி சொல்லி விட்டு அவனைப் பற்றி பார்க்கலாம். இந்த தெருவில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்களாம். எதிர் வீட்டில் இருக்கும் ஒரு பத்தினி ஒருநாள் என் வீட்டு முன் நின்று கத்திக் கொண்டு இருந்த போது கூறியது இது. நான் தெருவில் செல்லும் போது ஜொள்ளு வடிப்பது ஆண்களுக்கும், பொறாமையில் முகத்தை தோள்ப்பட்டையில் இடித்துக் கொள்வது பெண்களுக்கும் வழக்கமான ஒன்றாகி விட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது என் நிலைமையாகி விட்டது.

நான்… என்னைப் பற்றி என்ன சொல்ல?… பாலியல் தொழிலாளி என்று சொல்லவா? அல்லது தெருவில் பேசுவது போல் அசிங்கமான வார்த்தைகளில் சொல்லவா? ஒரு காஸ்ட்லியான விபச்சாரி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். இடமும், சுற்றுப்புறமும் மட்டும் தான் வேறு மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.

கோபம், தாபம், காமம், குரோதம், அகங்காரம், சோகம், விருப்பம், வெறுப்பு, தவிப்பு என பல மனநிலையில் வருபவர்களை இங்கு காணலாம். மனிதர்களில் பல வகை. சிலருக்கு அவசரத்திற்கு, சிலருக்கு கோபத்தைக் காட்ட, சிலருக்கு வெறுப்பை வெளிப்படுத்த, இன்னும் சிலருக்கு தங்களை பரீட்சார்த்த முயற்சிகளை சோதித்துப் பார்க்க… சரி போதும் அவனைப் பற்றிப் பார்க்கலாம்.

சிறுவர்களை விரட்டி விட்டு அவனைப் பார்த்தேன். ஓடி வந்ததால் மூச்சிரைத்துக் கொண்டு இருந்தான். சிறுவர்கள் அரைக் கிறுக்கன் என்று கத்திக் கொண்டு சென்றதில் தவறில்லையோ என்று தோன்றும் உருவம். தண்ணீர் என்று மெதுவாக முனங்குவது கேட்டது. வீட்டில் இருந்து சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். இங்கு வருபவர்களை இவன் நல்லவனாகத் தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

தண்ணீரை நெஞ்சில் சிந்த சிந்தக் குடித்தான். கொஞ்ச நேரம் இருந்து விட்டு சென்று விட்டான். அடுத்த இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. மூன்றாம் நாள் வந்து விட்டான். அதே கோலத்தில்.. இப்போது பசிக்குது பசிக்குது என்றான். சாப்பாடு போட்டேன். அன்று முதல் என் வீட்டின் முன் அமர்ந்து விட்டான். என் வீட்டிற்கு இரவில் வந்து செல்பவர்களை மலங்க மலங்கப் பார்த்தபடி அமர்ந்து இருப்பான்.சில நேரங்களில் மீதமான உணவைப் போடுவேன். எவனோ வந்து விட்டுவிட்டுப் போன வேட்டி சட்டையையும் கொடுத்தேன். சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு வேட்டியை அவன் உட்காரும் இடத்தில் விரித்து வைத்துக் கொண்டான்.

என்னிடம் வந்து விட்டு செல்லும் சிலர் அவனுக்கு 10, 20 என்று கொடுப்பார்கள். இங்கு வந்து செல்பவர்கள் தர்ம பிரபுக்களாக மாறி விடுகின்றனர். அவனைப் பற்றி கூறும் போது அச்சுதனைப் பற்றி கூறியே ஆக வேண்டும். அச்சுதனுக்கு 50,55 வயது இருக்கும். ஆலந்தூர் பக்கம் இரும்புக் கடை வைத்திருக்கிறார். கேரளாவின் ஒரு மூலையில் குடும்பம் இருக்கின்றது. எப்போது சென்று வருவார் என்று தெரியாது. ஆனால் என் வீட்டிற்கு வாரத்திற்கு இரண்டு முறையாவது இரவுகளில் வருவார்.

வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மனித ஜந்துக்களில் ஒருவர். அச்சுதன் வரும் போதெல்லாம் அவனுடம் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவன் ஏதும் பதில் சொல்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பான். மற்றவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கும் அவன் அச்சுதன் கொடுப்பதை மட்டும் வாங்கவே மாட்டான்.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவர் பதற்றமடைவதைக் காண முடியும். சில நேரங்களில் வரும் போது பிரியாணி பொட்டலம் வாங்கி வந்து அவனுக்கு தருவார். அவர் திரும்பும் போது எதிரில் இருக்கும் குப்பைத் தொட்டியில் பிரிக்கப்படாத பிரியாணி பொட்டலம் கிடைக்கும். அச்சுதனை அவன் மிகவும் அழுத்தமாகப் பாதித்து இருந்தான். எப்படியாவது அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பது அச்சுதனுடைய ஆசை.

அன்று அச்சுதன் என்னிடம் உன்னுடன் அவனைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னதைக் கேட்டதும் என்னால் அதிர்ச்சி தாங்க இயலவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வந்து தினசரி அமைதியாக அமர்ந்து கொண்டு இதையே சொல்லிக் கொண்டு இருந்தார். முதலில் கோபமாக இருந்தாலும், சில நாட்களில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

அன்று அச்சுதன் வரும் போதே அவனை வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தார். அச்சுதன் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள் வரை வந்தது ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த பல நிமிடங்கள் நிறைய காரியங்களை செய்ய வேண்டி இருந்தது. அவன் வீட்டிற்குள் வந்த 55 வது நிமிடம் என் மீது சீராக இயங்கிக் கொண்டு இருந்தான். அச்சுதன் சிறிது தூரத்தில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் உச்சத்தை அடைந்து இருந்தேன். அவனது இயக்கம் வேகமாகி இருந்தது. அச்சுதனை பார்த்த போது கைகால்கள் நடுங்க உட்கார்ந்து இருந்தார். முகம் முழுவதும் வெளிறிப் போய் இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டி இருந்தது. சிறிது நேரத்தில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து இருந்தார். இதை எதையும் கவனிக்காமல் அவன் தனது எல்லையை அடைந்து இருந்தார்.

சில வினாடிகள் கண்களை மூடி இருந்த அவன் வேகமாக என்னை விட்டு எழுந்து வெளியேறினான். ஜன்னல் வழியே பார்த்த போது வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு அவன் வெளியேறுவது தெரிந்தது. அச்சுதனும் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அன்றைக்குப் பிறகு அவர்கள் இருவருமே என் வீட்டிற்கு வருவதே இல்லை. எங்காவது என்னைக் காண நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்..... ஒரு வித நடுக்கத்துடன்.

Saturday, July 11, 2009

இலையில் சோறு போட்டு...



"ஏண்டி.. மெல்லமா நடந்து வரத் தெரியாதா?”
மாலதியின் பேச்சைக் கேட்கக் கூடியவள் இல்லை சின்னு. நடந்து வராமல் தாவித் தாவிக் குதித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். கூடவே அவளது குட்டி நாயான டைகரும். டைகர் அவர்களது குப்பத்தில் இருந்த ஒரு நாய் போட்ட குட்டி... குட்டியிலேயே எடுத்து வந்து பாலூட்டி வளர்த்து இப்போது கறி தின்னும் அளவுக்கு வளர்ந்து விட்டது. சின்னு எங்கே சென்றாலும் கூடவே அதுவும் திரியும்.

இன்று சின்னுவின் மகிழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் செல்லுமிடம். மாலதி, சின்னுவின் அம்மா அந்த பகுதி கவுன்சிலர் வீட்டில் வேலை செய்கின்றார். இன்று கவுன்சிலரின் ஒரே மகனுக்கு பிறந்தநாள். அதனால் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். சின்னுவின் அம்மா அங்கேயே வேலைக்கு இருப்பதால் அவளது பிள்ளைகளையும் கவுன்சிலர் மனைவி சாப்பிட வரச் சொல்லி இருந்தாள்.

சின்னு அம்மா எப்போதுமே மிச்சம் மீதிகளை கட்டிக் கொண்டு வந்து தனது பிள்ளைகளுக்கு சாப்பிடத் தருவாள். இன்று அங்கேயே சுடான சாப்பாடு கிடைக்கும் என்பதால் சின்னுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சின்னு மூன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டியான மாணவி. மாலதி ஆறாம் வகுப்பு படிப்பவர். இப்போது தான் கொஞ்சம் கொஞ்மாக அவளிடம் வெட்கம் குடி கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது.

வானம் மேக மூட்டமாக இருந்தது. கவுன்சிலரின் வீடு கலகலப்பாக இருந்தது. மாலதியும், சின்னுவுன் வீட்டுக்கு வெளியே இருந்த முற்றத்தில் அமர்ந்து இருந்தனர். இவர்களைப் போலவே இன்னும் சில சிறுவர், சிறுமிகளும், வயதானவர்களும் அங்கே இருந்தனர். விருந்தினர்கள் எல்லாம் வீட்டிற்கும் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தனர். சின்னுவின் அம்மா அவ்வப்போது வீட்டினுள் இருந்து மகள்களை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சின்னு நைசாக வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது பிரியாணி அங்கே பரிமாறப்பட்டுக் கொண்டு இருப்பது தெரிந்ததால் சின்னு அவ்வப்போது மூச்சை இழுத்து வாசம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.

இப்போது முற்றம் பரபரப்பாக இருந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். மாலதியும், சின்னுவின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். டைகரை அங்கிருந்த குரோட்டன்ஸ் செடி மறைவில் ஒளிந்து இருக்கச் செய்து இருந்தாள் சின்னு. மாலதிக்கு சின்னுவின் மீது கோபம்.. நாயைக் கூட்டி வந்தது கவுன்சிலர் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று.. சின்னுவிற்கு அதைப் பற்றிய கவலை இல்லை.. தனக்கு கிடைக்கும் சாப்பாட்டில் கொஞ்சம் டைகருக்கு தரப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

வரிசையாக உட்கார்ந்து இருந்தவர்களுக்கு முன் இலை போடப் பட்டு இருந்தது. இலை போட வந்தவரிடம் நைச்சியமாக பேசி ஒரு கிழிந்த இலையை டைகருக்காக சின்னு வாங்கி வைத்து இருந்தாள். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்தது. அம்மா டைகரைப் பார்த்தால் கூட அடி பின்னி விடுவாள் என்று.. ஆனாலும் டைகர் ஒளிந்து இருக்கும் தைரியத்தில் இருந்தாள். எல்லாருக்கும் முன் இலை போடப்பட்டு இருந்தது.

அப்போது தான் பரபரப்பு நிகழ்ந்தது. அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழாவுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி அது. கவுன்சிலரின் கைத் தடிகள் முற்றத்தில் இலை போட்டு அமர்ந்து இருந்தவர்களை விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அனைவரும் எழுந்து ஓரமாக நின்று கொண்டிருந்தனர். சின்னு தனது இரண்டு இலையையும் எடுத்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டு இருந்தாள். அவள் கவனம் முழுவதும் டைகரின் மீதே இருந்தது. டைகர் அமைதியாக செடி மறைவிற்குள்ளேயே இருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இடத்தைக் காலி செய்ய மீண்டும் முற்றத்தில் அவரவர் இடத்தைப் பிடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்தனர். அனைவரும் முன்னும் இலை இருந்தது. ஆனால் சாப்பாடு போட யாரையும் காணவில்லை. கவுன்சிலரின் மகனே வந்து தனது கையால் சாப்பாடு போட வேண்டுமாம்... இதனை வீடியோவாக எடுக்க கேமரா மேன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார்..

சின்னுவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கேமராமேன் வேறு ஏதோ ஒயரில் பிரச்சினை என்று இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தான். அவனது கேமரா தயாரானால் தான் சாப்பாடு போட ஆரம்பமாகுமாம். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கேமரா தயாராகி இருந்தது. கவுன்சிலரின் மகன் தனது சின்னக் கரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாணியை இலையில் வைத்துக் கொண்டிருந்தான். மாலதி, சின்னு இருந்த மூலைக்கு எதிர் மூலையில் இருந்து சாப்பாடு போடும் படலம் ஆரம்பமாகி இருந்தது. சின்னு அவ்வப்போது டைகரை தனது கைகளை வைத்து குரோட்டன்ஸ் செடிக்குள் தள்ளிக் கொண்டு இருந்தாள். டைகருக்கும் பிரியாணி வாசம் வந்து விட்டது போல் இருந்தது.

மாலதிக்கு ஏனோ அங்கே இருப்பது வெட்கமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. இடையில் எழ முடியாது. கவுன்சிலர் மனைவி பார்த்தால் அவ்வளவு தான் பத்ரகாளியாகி விடுவாள். சின்னுவின் இலைக்கு சாப்பாடு வருவதற்கும் நகரவே நகராத 15 நிமிடங்கள் கடந்து இருந்தது. சின்னுவோடு வரிசை முடிந்ததால் கேமராமேன் அதோடு நிறுத்திக் கொண்டு திரும்ப கேமராவோடு மக்கள் கூட்டமும் திரும்பி இருந்தது.

சின்னு வேகமாக செடிக்கு அருகில் கிழிந்த இலையைப் போட்டு தனது இலையில் இருந்த பிரியாணியில் பாதியை- டைகருக்காக வைத்து இருந்தாள். டைகர் அதை முகரத் துவங்கி இருந்தது. சின்னு தனது இலையில் இருந்து ஒரு கவளம் தான் எடுத்து வாயில் வைத்து இருப்பாள். திடீரென இடித்த இடி அவளை அதிர்ச்சிக்குள் ஆக்கியது. அதோடு சடசடவென மழை கொட்ட ஆரம்பித்து இருந்தது. மழையில் தனது டைகரைக் காக்க அதை இழுத்துக் கொண்டு வீட்டு ஓரம் இருந்த சன்சேடுக்கு கீழே ஓடிக் கொண்டு இருந்தாள் சின்னு. சில வினாடிகளில் பிரியாணியும், கறியும், இலையும் மழை நீரில் மிதந்து கொண்டு சின்னுவின் காலடியில் வந்து கொண்டு இருந்தன.

டிஸ்கி : மேலே இருக்கும் படத்தில் இருப்பவர்களின் முகங்களில் தெரியும் அதீதமான உணர்வின் பாதிப்பில் எழுதியது.. :(

Tuesday, June 16, 2009

திருடி நம்பர் ஒன்

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். ஓரளவு இருக்கைகள் நிறைந்து இருந்தன. அரை மணி நேரப் பயணம் தான். மதுரையில் இருந்து வரும் வண்டியில் தான் இருக்கை கிடைக்கும் என்பதால் அந்த தனியார் வண்டியில் ஏறி இருந்தோம். இருவர் அமரும் சீட்டில் மகளை வைத்துக் கொண்டு மனைவி ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்க நான் உள்பகுதியில் அமர்ந்து இருந்தேன். மனைவி, குழந்தையுடன் செல்லும் போது எப்போதுமே கொஞ்சம் கவனமாக இருப்பது வழக்கம்.

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தை விட்டு வண்டி கிளம்பத் தயாராக இருந்த போது தான் முன் பகுதியில் அந்த பெண்மணி ஏறினாள். வண்டி முழுவதும் இருக்கைகள் நிறைந்து இருந்தன. நேராக என்னிடம் வந்த அவள் பின்னால் இருக்கும் மூவர் இருக்கையில் இருக்கும் ஒரு காலி இடத்தைக் கை காட்டி அங்கே போய் அமரச் சொன்னார். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு பெண் அமர்வது போன்ற இருக்கை ஏதும் காலி இல்லை. அந்த மூவர் இருக்கையில் ஏற்கனவே தடியான இரு ஆண்கள் அமர்ந்து இருந்தனர். வேறு வழி இல்லை.. மனைவியிடம் சொல்லி விட்டு மூவர் இருக்கைக்கு சென்றேன். அங்கிருந்த இருவருக்கும் இடையிலேயே எனக்கு இருக்கை கிடைத்தது.

இப்போது தான் அந்த பெண்மணியை நன்றாக பார்த்தேன். வயது 35 க்குள் இருக்கும். அவளது பார்வையே சரியில்லை. ஏனோ ஒரு திருட்டு முழி இருந்தது. என் மனைவியின் அருகே அமர்ந்தவள் என் மனைவியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். தெரியாவதவர்களிடம் என் மனைவி பேச மாட்டாள். அந்த பெண்மணி வம்படியாக பேச்சுக் கொடுப்பதாகவே எனக்குப் பட்டது.

அடிமனதில் பய ஓட்டம் ஆரம்பித்து இருந்தது. சென்ற வாரம் மனைவியின் ஊரில் இதே போல் பேருந்தில் அருகே அமர்ந்த பெண்ணிடம் திருடி விட்டு கம்பி நீட்டிய பத்திரிக்கை செய்தி ஏனோ நினைவுக்கு வந்தது. கழுத்தில், காதில் நகை போட்டிருக்கின்றாள். இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக மாற்றப்பட்ட வளையல்களை வேறு போட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் இன்னும் டென்சன் அதிகமாக ஆரம்பித்து இருந்தது. நகையின் எடையில் எந்த மாற்றமும் இல்லாமல், மாற்றிக் கொண்டு வந்ததன் மூலம் பல ஆயிரம் ரூபாய்களை விழுங்கி இருந்தவை அந்த வளையல்கள். என் அம்மாவிடம் திட்டு வாங்க முடியாது என்பதால் நெக்லஸை வேறு போட்டுக் கொண்டு வந்து இருக்கிறாள்.

அந்த பெண்ணுடன் என் மனைவி பேச ஆரம்பித்து இருப்பது தெரிந்தது. என்ன இவள்? பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் யாரென்றே தெரியாத பெண்ணுடன் எப்படி பேசிக் கொண்டு இருக்கிறாள். எரிச்சலாக வந்தது. பேருந்து நிலையத்தை விட்டு பேருந்து வெளியேறும் நேரம் 20 பேருக்கு மேல் நின்று கொண்டு வந்தனர். அவர்கள் வேறு பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு இருந்தனர்.

இடையில் கிடைத்த கேப்பில் பார்த்த போது, இப்போது அந்த பெண்மணியின் மடியில் என் மகள். பஸ்ஸில் அமர்ந்ததும் தூங்கி விடுவாள். எப்படி கொடுத்தாள் இவள்? கோபம் முட்டிக் கொண்டு வந்தது. மகள் கழுத்தில் செயினும், காலில் தங்க கொழுசும் உள்ளது.

வண்டி தேவதானபட்டியைக் கடந்து இருந்தது. ஆட்கள் இன்னும் ஏறி வண்டி நிறைந்து இருந்தது. கொஞ்சம் எழுந்தே பார்க்க முடிந்தது. நான் பார்ப்பதைக் கூட கவனியாமல் இருவரும் முழு அரட்டையில் இருந்தனர். பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்ன நடக்குமோ என்று .. எதுவாக இருந்தாலும் அந்த பெண் இறங்கும் போது மனைவியிடம் சென்று நகைகளை சரிபார்க்க சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு முன் உள்ள நிறுத்தத்திலேயே அந்த பெண் இறங்க நாங்கள் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். வேகமாக அந்த பெண் என்னை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இறங்கிச் செல்ல என்னை அடுத்த இருந்த ஆளை முட்டித் தள்ளி மனைவியின் இருக்கையை அடைவதற்குள் அந்த பெண் இறங்கி, வண்டியும் கிளம்பி இருந்தது.

காதுக்கு அருகில் சென்று திட்ட ஆரம்பித்து இருந்தேன்.. மனைவியின் முகத்தில் ஒரே சிரிப்பு.. ”என்னங்க நீங்க... அவங்க உங்க அப்பாவோட பிரண்டு பிரான்ஸிஸ் அங்கிள் மகள்.. நம்ம கல்யாணத்து கூட வந்து இருந்தாங்களே? ”

“அப்படியா? நான் கவனிக்கலியே” என்றேன் பரிதாபத்துடன்.. “ ஆமா.. கல்யாணத்து அன்றைக்கு யாரைத் தான் பார்த்தீங்க.. பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க..” மனைவி சொல்ல உண்மையில் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு இருந்தேன்.

Friday, June 12, 2009

அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க ( உரையாடல் போட்டிக்கான கதை)

"வாய்யா ! வா! என்ன திடீர்னு இந்த பக்கம்.. எப்பவுமே கூட இருக்கிற ஆளு தானே.. ஸ்பெஷலா வெளியே இருந்து வந்து உட்கார்ந்து இருக்க”

“ஒரு அழைப்பு கொடுக்க வந்தேன் ... நீங்க ரொம்ப முக்கியமான ஆளாச்சே.. அதான் ஸ்பெஷலா கூப்பிடலாமுன்னு”

“அதுவும் சரி தான்... சொல்லு.. என்ன விஷயம்?”

“எனக்கு அடுத்த வாரம் சஷ்டியப்த பூர்த்தி விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க... எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லைன்னாலும் என்னோட பசங்க, பேரக் குழந்தைகளுக்காக இதையெல்லாம் ஒத்துக்க வேண்டி இருக்கே.... என்னோட கனவு வாழ்க்கையில் அடுத்த மாதத்தோடு 60 வயசு முடியுது..கண்டிப்பா வரனும்”

“என்னோட நெற்றியில் ஏதாவது இருக்கா பாருங்க..”

“நெற்றியில்.....ம்ம்ம் ஒன்றுமில்லை.. புருவத்திற்கு மேல் ஒரு சிறு தழும்பு மட்டும் உள்ளது”

“அதில்லை... நெற்றியில் இளிச்சவாயன், ஏமாளி இப்படி ஏதாவது எழுதி இருக்கா?

“என்ன இப்படி சொல்றீங்க?”

“ஆமா.. நீ பிறந்தது முதல் 30 வருடமா என்னிடமே இருக்குற மனசாட்சி நீ.. என்னிடமே அறுபதாம் கல்யாணம் என்கிறாயே?”


“ம்ம்ம் அதுவும் உண்மை தான். உங்களுக்கு தெரியாதது இல்ல..”

“இருந்தாலும் நீயே சொல்லு என்ன விஷயம்ன்னு”

“எல்லாமே ஒரு கனவு வாழ்க்கையா இருக்கு.. இன்றைக்கும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கு. அவளை சந்தித்த அந்த முதல் கணங்கள்.. இந்தி தேர்வுகள் பிப், ஆகஸ்ட் இரண்டாம் சனி, ஞாயிறில் தான் நடக்கும்.. அப்படியான ஒரு 1991 ஆகஸ்ட் 11 ந்தேதி.. ஞாயிற்றுக் கிழமை தான் அவளைப் பார்த்தேன். என்னோட பிரவேசிகா தேர்வுக்கான நேரம். நான் தேர்வு எழுதும் இடத்தில் தான் அவளும் தேர்வு எழுதினாள். முதலில் பார்த்ததுமே ஏனோ ஒரு பிடிப்பு ஏற்ப்பட்டு விட்டு இருந்தது.”

“ம்”

“முதலில் கூப்பிட்டதே ‘அண்ணா’ என்று தான்.. இப்போதும் பேசும் போது சொல்லி கிண்டல் செய்வாள். Viva தேர்வுக்கு எனக்கு அடுத்து அவளது பெயர். சீக்கிரம் போக வேண்டுமென்பதற்காக என்னிடம் வந்து அவள் முதலில் போக அனுமதி கேட்டாள்.. விடலையே நானு.. ஆண் வர்க்க திமிர் அப்பமே..”

“தெரிந்தது தானே.. மேலே சொல்”

“1979 ல் பிறந்த எனக்கு அப்ப என்ன வயசு இருக்கும்ன்னு நீங்களே பார்த்துக்கங்க.. அடுத்த விசாரத் வகுப்பு போகும் போது பார்த்தால் அவளும் எங்க வகுப்பிலேயே சேர்ந்து இருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி... அப்போது ஆரம்பித்தது அந்த பிணைப்பு. கண்களால் கவிதைகளைப் பகிர்ந்து கொண்ட நேரம். அடுத்த இரண்டு ஆண்டுகள் இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறந்து கொண்டு இருந்த காலம். அவளது சிரிப்பும், முகமும் என்னை அவளை நோக்கி மேலும் மேலும் இழுத்துச் சென்றது. சொல்லாமலேயே இருமனங்கள் இணைந்தன. வாழ்க்கையின் ஏதோ புரியாத எல்லைகளை அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டேன்.. அவள் பிரிந்து செல்லும் வரை.”

“நல்லவேளை... அந்த பொண்ணு தப்பிச்சிட்டா”

“ஆமா.. பிரவீன் முடிந்ததும் அவள் பறந்து விட்டாள். 1993 ஆகஸ்ட்டுக்குப் பிறகு இன்று வரை அவளைக் காணும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. எங்கோ மாயமாகி விட்டாள். அவளது சதை, இரத்தம், எலும்பாலான உடல் மட்டுமே என்னை விட்டுப் பிரிந்து இருந்தது. ஆனால் அவளுடனான எனது கனவு வாழ்வுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. ஒரு மானசீக உறவாக, நல்ல நிலத்தில் இடப்பட்ட விதையாக, அந்த நினைவுகள் ஒரு விருட்சமாக மாறி இருந்தன. அவ்விருட்சம் நிலத்தில் ஆழப் புதையப் போகும் ஒரு பரந்து விரிந்த ஆலமரமாக ஊன்றப் போவதை அறியாமலேயே இருந்தேன்.”

“ம்ம்ம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கு.. மேல சொல்லு”

“அவளுடைய கண்களோடு பேசிக் கொண்டு இருந்த அந்த நாட்களை நினைவில் வைத்துக் கொண்டே எனது வாழ்வு கழிந்தது. ரம்மியமான வாழ்க்கை. அவளுடனான எனது பிணைப்பை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பல மொழிகளிலும் அதற்கான வார்த்தையைத் தேடி களைத்துப் போய் விட்டேன். காதல், பாசம், நேசம் போன்ற வார்த்தைகள் எல்லாம் ஏதோ குறைவுடையவையாகவே எனக்கு தோன்றுகின்றது.”

“அந்த உறவு விருட்சம் மெல்ல மெல்ல வளர்ந்து செடியாகி, மரமாகி, பூத்துக் குலுங்க ஆரம்பித்து இருந்தது. இலையுதிர்காலமும், வசந்தகாலமும் மாறி மாறி வரத் துவங்கி இருந்தன. எப்போது எப்படி எங்கு துவங்கியது என்று சொல்லத் தெரியவில்லை. அவளை நினைக்காத கணங்கள் கடினமானதாக இருந்தன. அவளது நினைவுகள் என்னை விட்டு அகலாமல் இருக்க எனது கணிணியில் கடவுச்சொல்லாகவே அவளது பெயர் மாறி இருந்தது.”

“என்ன இழவோ.. இலக்கியம் மாதிரி என்னவோ பின்னாத்தற.. நேரா மேட்டருக்கு வா”

“வேலை நிமித்தம் 1998 ல் துபாயில் போய் இறங்கினேன் என் கனவு வாழ்க்கையையும் மனதில் நிறைத்தபடி.. பெற்றோர்களின் தீவிர எதிர்ப்பை முறியடித்து.. அவர்கள் முழு சம்மதத்துடன் திருமணம், பின்னர் குழந்தைகள் என கண ஜோராக வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்ந்தது. என்னவளின் விருப்பத்திற்குத் தகுந்தாற் போல் இழைத்து இழைத்து கட்டப்பட்ட வீடு.. வீட்டின் முன் தோட்டம், மொட்டை மாடி ஊஞ்சல்கள் என நினைவுகளில் மறக்காதவை.”

“நான் வேலையில் இருந்து களைத்துப் போய் வரும் போது வியர்வையை அவள் துடைத்து விடும் தருணங்கள், மழையில் வேண்டுமென்றே நனைந்து கொண்டு வந்து அவளது முந்தானையில் துடைத்துக் கொள்வதற்காக ஒளிந்து கொள்ளும் தருணங்கள், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் அவளிடம் செல்லமான திட்டு வாங்கிக் கொண்டே எழ வேண்டுமென்பதற்காக போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கணங்கள் என பெட்ரோலும், ஆயில் வாசனையுமான எனது கணங்கள் அவளது நினைவில் மல்லிகை, ரோஜாவின் நறுமணங்களுடன் கனவில் நகர்ந்தன.”

“வெயிட்..வெயிட்... இதெல்லாம் என்னது? கற்பனையிலேயே இம்புட்டு வாழ்க்கையா வாழ்ந்த?”

“ஆமாம்.. தனிமையாக இருக்கும் நேரங்களில் எல்லாம் நான் தனிமையை சிறிது கூட உணரவில்லை. இருவரும் இணைந்து சுற்றிய ஊர்கள், ஜாலியாக சுற்றிய வெளிநாடுகள் என அசை போட வைக்கும் நினைவுகள். அவளது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு தொலைகாட்சி பார்க்கும் அந்த கணங்களும், அவளது கை விரல்களின் கோதுதல்களில் லயித்து உறங்கி விடும் பொழுதுகளும், அவ்வாறு தூங்கிப் போய் எழும் போது அவள் காட்டும் பொய்க் கோபமும், மொட்டை மாடி மழைத் தூறல் நனைதல்களும், அதீத உணர்ச்சிகளுடனான மதிய நேர கூடல்களும் நெஞ்சை நிறைத்து இருக்கின்றன.”

“எனக்கே ஒரு மாதிரி இருக்குய்யா... மேல சொல்லு”

“இரண்டு குழந்தைகள்.. ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக.. குழலினிது யாழ் இனிது என்பர் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவர் என்பது நம் மூத்தோர் சொன்னது. முற்றிலும் உண்மை. நான் குழந்தைகளை கண்டிக்கும் போது அவளும், அவள் குழந்தைகளைக் கண்டிக்கும் போது நானும் குழந்தைகளுக்காக பரிந்து பேசுவதும், பின்னர் ரகசியமாக சமிக்ஞை செய்து கொள்வதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சில உணர்வுகள்.”

“ம்”

“உடல் ரீதியான எந்த தேவைகளும், நினைவுகளும் அற்றதாகவே அந்த வாழ்க்கை இருந்தது. அவளுக்கு பிடிக்காதவைகளை நான் செய்வதில்லை. எனக்குப் பிடிக்காதவைகளை அவள் செய்வதில்லை. புகை, மது, சூது,பிற மாது போன்றவை அவளுக்கு முற்றிலும் விருப்பமில்லாதவை. அவளுக்கு பிடிக்காது என்பதற்காக இவைகளை விட்டும் முற்றிலும் விலகி இருந்தேன். எனது கனவு வாழ்வில் மட்டும் இன்றி நிஜத்திலும் அவளுக்காக இவைகளை விட்டும் தள்ளியே இருந்தேன். ஒரு அறிஞன் கூறுவான் “ ஒருவன் தவறு செய்யவில்லை என்று கூறினால், அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பொருள்”. ஆனால் மேற்சொன்னவைகளுக்கு வாய்ப்புகள் தானாகவே வந்த போதும் எந்த சிறு குழப்பமும் இல்லாமல் அவைகளை உதறித் தள்ளினேன்.. எல்லாம் எனது கண்ணம்மாவிற்காக.. ஆங்.. சொல்ல மறந்து விட்டேன்.. என்னவளை செல்லமாக கண்ணம்மா என்று தான் கூப்பிடுவேன். எனக்கும், அவளுக்கும் பாரதியை மிகவும் பிடிக்கும்.”

“பாரதியின் அடிமையா நீ.. அதான் இப்படி கற்பனையில மிதக்குற”

“ஆம்.. இருவருக்கும் இடையே அவ்வப்போது நடக்கும் ஊடல்களுடன் சண்டை நடக்கும். எனக்கு அவளுக்கு பிடித்த மாதிரி வாங்கித் தரும் சட்டைகளும், அவளுக்கு பிடிக்காத கலரில் எனக்கு பிடித்த மாதிரி வாங்கித் தரும் நீல நிற சேலைகளும் சண்டைகளை வளர்க்கும்.. ஒரு விதமான இன்ப அனுபவங்களோடு.. எனக்காக அவள் வாங்கி வந்த கல்கி, அசோகமித்திரன், JK, சுந்தர ராமசாமி, முதல் கொண்டு சுஜாதா, வைரமுத்து வரையிலானவைகளும், அவளுக்காக நான் வாங்கிய Mills & Boon, Ayn Rand, Jeffery Archer, Sidney Sheldon, J._K.Rowling போன்றவை எங்களது வீட்டை நிறைத்து வைத்திருக்கும்.”

“வாவ்... ரசனையான தம்பதிகளா இருந்து இருக்கீங்களே..”

“இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தி திருமணமும் செய்து கொடுத்தாகி விட்டது. இருவரின் மூலமும் எங்களுக்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். வாழ்க்கை இன்பகரமாக சென்று கொண்டு இருந்தது.. 2005 வரை..”

“ஏன்? என்னாச்சு?”

“அப்போது தான் நிகழ்காலம் உறைக்க ஆரம்பித்தது. உலக வாழ்க்கையும், கனவு வாழ்க்கையும் இணையாதாமே... வீட்டில் எனக்கு பெண் பார்க்கத் துவங்கி இருந்தனர். அவர்களிடம் சொல்லவா முடியும்.. எனது கனவு வாழ்க்கையில் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று.. இந்த ஜென்மத்தில் அவளை மறக்க முடியும் என்று தோன்றவில்லை.. அவள் எங்கிருக்கின்றாள் என்று தெரிந்திருந்தாலும் பார்க்க வேண்டுமென்றோ, பேச வேண்டுமென்றோ தோன்றாத அளவில் அவள் என்னுள் தொடச்சியான கணங்களில் நிறைந்து இருக்கின்றாள்”

“திருமணமும் நடந்தது. நிஜ வாழ்க்கைத் திருமணம் என்னை ஏமாற்றிடவில்லை. அன்பான கணவனாக மனைவிக்கும், பாசமுள்ள தந்தையாக மகனுக்கும் வாழ்கின்றேன்.”

“அடப்பாவி.. நல்லவேளை அப்பவாவது நிகழ்காலத்திற்கு வந்தியே”

“அதே நேரத்தில் கனவு வாழ்க்கை எந்த குறையும் இலலாமல் இன்று சஷ்டியப்த பூர்த்தி வரை வந்து விட்டது. கண்டிப்பாக அதற்கு வந்து விடுங்கள்”

“நான் இல்லாமலா.. கண்டிப்பா உன் கூடவே எப்போதும் போல் இருப்பேன்.. ஜமாய்!.. வாழ்த்துக்கள்.. உன்னிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது”

“சொல்லுங்களேன்”

“நகுலனின் டைரியில் இருந்து..
27-12-73
வரிகள்

எப்பொழுதும் உன் நினைவு - நீ எங்கேயோ இருக்கிறாய் - நான் எங்கேயோ இருக்கிறேன் - நீ மணமானவள் - நான் மணமாகாதவன் - நான் உன்னைக் காதலித்தேன் என்பதில் தவறில்லை.. (இப்போதும் காதலிக்கிறேன் - என்று சொல்வதில் பொய்யில்லை) -அதைப் போலவே நீ என்னைக் காதலிக்கவில்லை, என்னிடம் அன்பு காட்டவில்லை, அலக்ஷியம் செய்கிறாய் என்று சொல்வதும் தவறு. நம்மிடையே உள்ள உறவு தான் என்ன?...
என்றோ ஒருநாள் உன்னை நான் பார்த்தேன். அன்று என் கதை முடிந்தது.”

முற்றும்.

(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

Wednesday, May 27, 2009

என்னத்தங்க எழுத..

கொஞ்சநாளா பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம் கருத்தை திணிக்க நினைக்கும் ஒன்றாக பதிவு எழுதுகின்றோமோ என்ற யோசனை வருகின்றது. அவரவர் மன திருப்திக்காக எழுதினாலும், பதிவு போட வேண்டும் என்பதற்காக எழுதுவதற்கும், நம் எழுத்தை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவும் பதிவு எழுதுவதற்கும் பல மடங்கு வித்தியாசம் இருப்பதாகவே உணர்கின்றேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Fireproof என்று ஒரு படம் பார்க்க நேரிட்டது. ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினைகள் அவர்களை விவாகரத்து வரை இட்டுச் செல்கின்றது. தீயணைப்பு பணியில் இருக்கும் அந்த அவனது தந்தை மகனையும், மருமகளையும் ஒன்றிணைக்க ஒரு 40 நாள் திட்டத்தை சொல்கின்றார்.. அதன் இறுதியில் என்ன ஆனது என்பது தான் அந்த ரம்மியமான கதை. எந்த சினிமாத்தனமும் இல்லாத படம்.

இதைப் பற்றி எழுதலாம் என்று எண்ணி இருந்த நேரத்தில் நம்ம நண்பர் குசும்பன் IMDB பார்த்து கதை எழுதுவது எப்படி என்று பதிவு வேறு போட்டு விட்டதால் அதை அப்படியே விட்டு விடுகின்றேன்... ;-)))


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





பல நாட்களாக பதிவு எழுதாமல் விட்டுள்ளதால் ஹிட்ஸ் கவுண்டர் காற்று வாங்குகின்றது. தினசரி 50 ஹிட்ஸ் வருகின்றது. எல்லாம் பொதுவாக கூகுள் தேடல் மூலம் வருபவர்களே அதிகமாக இருக்கின்றனர். தேடு பொறியின் குறிச் சொற்களைப் பார்த்தால் நமக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. நடிகையின் பெயர்களை குறிச் சொல்லாக இட்டு தேடப் பட்டு வருபவையே அதிகமாக இருக்கின்றன.


சில காலத்திற்கு முன் பதிவுலகில் மும்முரமாக இருந்த நேரம் பொன்னியின் செல்வன் பற்றி சில விஷயங்கள் எழுதி இருந்தேன். நந்தினிக்கும், வீர பாண்டியனின் இடையே உள்ள உறவு குறித்து.. இந்த பதிவுக்கும் கூகுள் தேடல் மூலம் ஹிட்ஸ் வருவது அதிகமாக இருக்கின்றது. நம்மளை மாதிரி பொன்னியின் செல்வன் பித்தர்கள் அதிகமாக இருப்பார்கள் போல உள்ளது.. ;-))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நமக்கு நுனிப்புல் மேய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். அது இலக்கியமா இருந்தாலும் சரி, அரசியலா இருந்தாலும் சரி. எனக்கு இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கு. பதிவைப் படிக்கும் போது முன்னால் உள்ள ஒரு பாராவைப் படித்துவிட்டு கீழே சென்று கமெண்ட்களைப் பார்த்து அதற்குத் தகுந்தாற் போல் கமெண்ட் போட்டு விட்டு சென்று விடுவேன்... நான் மட்டும் தான் இப்படியா? நம் மக்களும் இபப்டியான்னு சந்தேகம் வரும். அவ்வப்போது மக்களை டெஸ்ட் பண்ணி இதைக் கன்பர்ம் பண்ணிக்குவேன்.

முன்பு வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய ஒரு கவிதையைப் போட்டு கீழே இது பிரபல பதிவர் எழுதியது என்று எழுதி வைத்து இருந்தேன்.. எல்லாரும் அது என் கவிதை என்று நினைத்து பாராட்டி விட்டு சென்றனர். ஒரு சிறுகதை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதினேன்.... என்னை மாதிரியே எல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டுட்டு போய்ட்டாங்க... ;-))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கு ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன். தீம் ரெடி... கதை எப்ப எழுத முடியும்ன்னு தெரியல... பார்ப்போம்..

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html

படம் இணைப்பு : பிக்காசாவில் கிடைத்த படம்... அழகான இடத்தில் எல்லோரும் நினைவு கூறும் சைக்கிள் பழகும் படம். அழகா இருந்தது.

Wednesday, May 13, 2009

பரிசல், ராமலக்ஷ்மி இன்னும் பலருக்கும் வாழ்த்துக்கள்!

இன்று வலையுலக நண்பரும் எழுத்தாளருமான அண்ணன் பரிசலாருக்கு பிறந்தநாள். அவருக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வால் பையன் சொன்னது போல் இந்த வயசிலும் இளமையுடன் சுறுசுறுப்பாக இருக்கும் யூத் ஐகான் பரிசலார் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வுடன் திகழ வாழ்த்துக்கின்றோம்... ;-))

*******************************************************

பரிசலாரின் சிறுகதை இந்தவார ஆனந்தவிகடனில் வருகின்றதாம். அதற்கும் ஒரு சிறப்பான வாழ்த்துக்கள்.

*******************************************************


பெங்களூரூவைச் சேர்ந்த கவிஞர் ராமலக்ஷ்மி அக்காவின் முதல் சிறுகதை அச்சு இதழான கலைமகள் மாத இதழில் வெளி வந்துள்ளது. இதுவரை அவரது அழகான கவிதைகள் மட்டுமே அச்சு இதழ்களில் வந்த நிலையில் முதன் முதலாக அவரது சிறுகதை கலைமகள் இதழில் வந்ததில் நாம் அனைவரும் பெருமை அடைகின்றோம். அச் சிறுகதையைப் படிக்கவும் ,வாழ்த்தவும் இங்கே செல்லவும்.
http://tamilamudam.blogspot.com/2009/05/50.html

அவரது முத்துச்சரம் இணையதளம் 50 பதிவுகளை தொட்டுள்ளது. தேர்ந்தடுத்த பதிவுகளால் முத்துக்கள் போல் கோர்க்கப்பட்ட சரமாக இருக்கும் முத்துச்சரம் மேலும் இது போல் பல படைப்புகளைக் காண வாழ்த்துகின்றோம்.

*******************************************************

சக பதிவர்கள் நர்சிம், மற்றும் அதிஷா ஆகியோரின் படைப்புகள் சென்ற வார ஆனந்த விகடனில் வெளி வந்துள்ளது. அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

*******************************************************

பதிவர்களின் கூட்டங்கள் பொதுவாக இணையம் தொடர்பானதாகவே இருக்கும். முதன் முறையாக ‘நல்ல தொடல்! கெட்ட தொடல்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் பாலியல் மற்றும் மனோத்துவ ரீதியான பாதிப்புகளைப் பற்றி அலசி ஆராந்து, கலந்துரையாடிய ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நடைபெற்றது.

ஆரோக்கியமான இந்நிகழ்ச்சிக்கு வித்திட்ட, ஒருங்கிணைத்த, நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றிகளும், வாழ்த்துக்களும்... :)

*******************************************************
மேற்க்குறிப்பிட்டவை அனைத்தையும் ஏனோ நாங்களே செய்தது போன்ற பூரிப்பையும், பெருமையையும் தந்தது. கொஞ்சம் இறுமாப்பு என்று கூட சொல்லலாம்... எங்களை எல்லாம் ஒரே நல்ல நேர்கோட்டின் கீழ் இணைய உதவிய இணைய உலகிற்கும், தமிழ் மணத்திற்கும் சிறப்பு நன்றிகள்.

*****************************************************

சரி.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. இன்னைக்கு நம்ம ஊர்ல தேர்தல்.ஓட்டுப்ப் போட்டாச்சா? நமக்கு இருக்கும் ஒரே ஜனநாயகக் கடமை அதுதான்.. எல்லாம் போய் எந்த சால்சாப்பும் சொல்லாம ஓட்டுப் போட்டுட்டு வாங்க... நல்லதே நடக்கும். ஓட்டுப் போட்டு விட்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Monday, May 11, 2009

”இப்ப நான் எங்க இருக்கேன்?” “where is my shopping bags?"

(வாசிப்பதற்கு முன்..
நீல நிறத்தில் இருப்பது ஆங்கிலத்திலும், கறுப்பு நிறத்தில் இருப்பது தமிழிலும் இருப்பதாக நினைத்துக் கொண்டு வாசிக்கத் துவங்குங்கள்.. இது ஒருவகையான Anti-Post modernism வகையிலான முயற்சி. புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ;-)) அன்புடன் தமிழ் பிரியன்.)

ஜானுக்கு என்றைக்கும் இல்லாத ஒரு பரபரப்பு இன்னைக்கு இருந்தது. மதிய வேளைஅலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வேகமாக விரைந்து கொண்டு இருந்தார். வேகமாக நடந்ததால் கொஞ்சம் மூச்சிரைக்க ஆரம்பித்து இருந்தது. குளிரால் அனைவரும் நடுங்கிக் கொண்டே நடந்து கொண்டு இருந்தனர். வயசும் 55 ஐ தாண்டிக் கொண்டு இருக்கிறதே..... khyber pass road போக்குவரத்து வர வர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவே அவருக்குப் பட்டது. “ஆக்லாந்தின் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது” என முணுமுணுத்துக் கொண்டார். New Market பகுதியில் இருந்த ஒரு கடையில் பேரன் பேத்திகளுக்காக சில விளையாட்டுப் பொருட்களையும், திண்பண்டங்களையும் வாங்கிக் கொண்டார்.

மாயக்காளைக்கு அந்த அதிகாலை வேலையிலும் வேர்த்து ஒழுக ஆரம்பித்து இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் நேரம் என்பதால் தனது மாட்டு வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு இருந்தார். காலை நேரம் சீக்கிரமே புலர்ந்து கொண்டு இருந்தது. வெயில் வருவதற்குள் உசிலம்பட்டியை அடைந்து விட்டால் கீரைக்கட்டுகளை வேகமாக விற்று விடலாம் என்பது அவரது எண்ணம். கீரை கட்டுகளும், காய்கறிகளும், இரண்டு ஆட்டுக் குட்டிகளும் அவரது மாட்டு வண்டியை நிறைத்திருந்தது. இந்த இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் விற்று விட்டு, மகளுக்கு சீர் செய்து சமாளிக்க வேண்டும் என்பது மாயக்காளையின் எண்ணம்.


ஜானின் நடை Boston road Railway station ஐ நோக்கி விரைவாக இருந்தது... அவருக்கு Avondale அருகில் உள்ள வீட்டிற்கு ரெயிலில் செல்ல வேண்டிய அவசரம். கைகளில் இருந்த Shopping bag களின் கனம் வேறு அவரது நடைக்கு தடையாக இருந்தது. இருந்தாலும் அமெரிக்காவில் வசிக்கும் மகள் பேரன் பேத்திகளுடன் வருகிறாள் என்ற மகிழ்ச்சி அவரது நடையில் ஒரு மிடுக்கையே கூட்டி இருந்தது. சில நாட்களாக பராமரிப்பு வேலைகளால் பொழிவிழந்து இருந்த ரெயில் நிலையம் இப்போது கொஞ்சம் களையாக தெரிந்தது. அதே காரணத்திற்காக ரெயில் நிறுத்தப்பட்டிருந்த போது போது காரில் வந்து, பார்க்கிங்கிற்காக karangahape road க்கு ஓடிய நாட்களை நினைத்துக் கொண்டார்.

மாயக்காளையால் மோசமான ரோட்டால் மாடுகளை வேகமாக செலுத்த இயலவில்லை. வண்டி கன்னாபட்டி, செக்காபட்டியைக் கடந்து போய்க் கொண்டு இருந்தது. ரோடு போட்டால் ஒரே வருடத்தில் பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றது. எல்லாம் அரசியல்வாதிகளின் கமிஷன் செய்யும் வேலை என நினைத்துக் கொண்ட போது ஆத்திரமே வந்தது. தேர்தல் நேரத்தில் அவர்கள் செய்யும் கூத்தும் அவரின் கோபத்திற்குக் காரணம்.

ஜான் ரெயில் நிலையத்திற்கு அருகில் நெருங்கிக் கொண்டு இருந்த போதுதான் அது நிகழ்ந்ததது.. டமார் என்ற பலத்த சத்தம்.. எங்கிருந்தோ வேகமாக வந்த வண்டி அவரின் மீது மோதி அவரை வீழ்த்தியது.... Oh! My god என்ற அலறல் மட்டும் கேட்டது.




செங்க மங்கலாக காலைப் பொழுது புலர்ந்து கொண்டு இருந்தது. உசிலம்பட்டி ரெயில்வே கேட்டை மாயக்காளையின் மாட்டு வண்டி நெருங்கி இருந்தது. பின்னே கேட்ட ஹார்ன் சத்தத்தால் மீது சென்று கொண்டு இருந்த மாயக்காளை திரும்பிப் பார்த்த போது மிக வேகமாக ஒரு லாரி அவரது வண்டியை நோக்கி வந்து கொண்டு இருந்தது... லாரியின் பிரேக் பெயிலியர் என்பதை புரிந்து கொள்ள சில வினாடிகளே தேவைப்பட்டது. வேகமாக மாடுகளை முடுக்கி விட்டார்.. ஆனாலும் லாரி அதி வேகத்தில் மாட்டு வண்டியின் மீது மோதி வண்டியை தூக்கி விசிறி அடித்தது.. ஐயோ.. அம்மா என்ற அலறலுடன் மாயக்காளை தூக்கி விசிறியடிக்கப்பட்டிருந்தார்.

அவர் அரை மயக்கத்தில் விழித்துப் பார்த்த போது ரெயில்வே கேட்டுக்கு அருகில் கிடந்தார். அவருக்கு அருகில் கீரைக்கட்டுகளும், காய்கறிகளும் சிதறிக் கிடக்க ஆடு ஒன்று காயத்துடன் கதறிக் கொண்டு இருந்தது. அவர் வாழ்க்கையில் கண்டிராத வெயில் அவரைத் தாக்கிக் கொண்டு இருந்தது. வாய் இம்சையில் முணுமுணுத்தது "where am i" “where is my shopping bags?"

குளிரால் அவரது உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது... அவர் இதுவரை கண்டிராத ஒரு இடத்தில் காயங்களுடன் கிடக்க, ஆம்புலன்ஸின் சத்தம் அசரீரியாக கேட்டுக் கொண்டு இருந்தது.. அவரைச் சுற்றி சில பொம்மைகளும், சாக்லெட்களுடம் கிடக்க ஈணஸ்வரத்தில் முனங்கினார்.. “என்னோட மாட்டு வண்டி, ஆடு, மாடு எல்லாம் எங்க போச்சு?.. இப்ப நான் எங்க இருக்கேன்?”.

படங்கள் நன்றி : ப்ளீக்கர் இணையம்.

Friday, April 10, 2009

என் காதல் தோத்துப் போச்சுங்க

நான் ரொம்ப கவலையில் இருக்கேங்க... என்னோட காதல் தோற்றுப் போய் விட்டதுங்க. என்னைத் தெரியும் தானே உங்களுக்கு.. இப்ப Mcfame Robotics Company யில் அக்கவுண்ட்ஸில் வேலை செய்றேங்க... நேத்து தாங்க என்னோட தெய்வீகக் காதல் தோல்வியில் முடிஞ்சு போச்சு. அதுவும் அந்த சுந்தர் பய என் முன்னாடியே என் காதலியை..வேணாங்க..என்னால ... முடியல.... ... யோசிச்சுப் பாருங்க. அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு.. இப்பக் கூட என் சிஸ்டத்துல என் காதலே என் காதலே என்னை செய்யப் போகிறாய்? பாடல் தான் ஒலித்துக் கொண்டு இருக்கு.

நான் முழுக்கதையையும் முதலில் இருந்து சொல்கிறென்.. கேளுங்க.. நான் இங்க வந்து முழுசா 3 வருடமாகப் போகுதுங்க.. ஆபிஸில் சுமார் 50 பேர் வேலை செய்கின்றோம். பேக்டரில் 600 பேருக்கு மேல் இருக்காங்க. எனக்கு அக்கவுண்ட் என்பதால் ஆபிஸில் தான் முழு நேரமும் செலவாகும். இங்க 12 லேடீஸ் வேலை செய்றாங்க.. ஆனாலும் யாரையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை. ஏன்னா நான் என்னோட கனவு தேவதைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.

மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அந்த கனவு தேவதையை பார்த்தேன். அதுவும் எங்க ஆபிஸிலேயே புதுசா வேலைக்கு வந்து இருக்கா.. பேரு ரேவதி. நான் அழகா ரேச்சின்னு செல்லமா பேர் வச்சு இருக்கேன்.. ரேச்சி எனக்கு நீ மச்சி! நல்லா இருக்குல்ல....நல்லா அழகா இருப்பா.. (சென்சார் செய்யப்பட்ட பகுதியை இங்க நிரப்ப முடியாது... ஆர்) மொத்தத்துல நம்ம அசின், நயன் தாரா, பழைய ஐஸ்வர்யா ராய் எல்லோரையும் சேர்த்து செஞ்ச செப்புச் சிலைன்னு வச்சுக்கங்க

எங்க நிறுவனத்தின் டிசைனிங் செக்சனில் வேலைக்கு சேர்ந்தா.. எங்களுக்கும் டிசைனிங்குக்கும் எந்த டச்சும் இல்லைன்னாலும் இரண்டும் அடுத்ததடுத்த பகுதி என்பதால் அவளை அடிக்கடி பார்க்க முடியும். அவள் வந்த முதல் நாளிலேயே எனக்கு காதல் ஜூரம் ஆரம்பமாகி விட்டது.



ஆனா அவள் என்னை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. எப்போதாவது வழியில் சந்தித்தால் ஒரு ஸ்மைல் மட்டும் கிடைக்கும். நானும் பல தில்லாலங்கடி வேலை பார்த்தும் திரும்பிக் கூட பார்க்கலை. இதுல என்ன கொடுமைன்னா என்னோட அழகுக்கு முன்னாடி நிக்க கூட முடியாத இன்னும் சிலர் ஜொள்ளு வடித்தது தான்.. சேல்ஸ் செக்சனில் இருக்கும் அந்த பேக்கு இருக்கானே.. கேசவன்.. அவன் எப்ப பார்த்தாலும் என் ஆளிடம் போய் இளிக்கிறதே வேலையே இருக்கான்.

அவனாவது பரவாயில்லை... அக்கவுண்ட் செக்சன் ஹெட் இருக்காரே அந்த பாலா.. காலேஜ் படிக்கிற பசங்க இருக்காங்க அவருக்கு..அந்த ஆளும் என் ரேச்சிகிட்ட எப்பப் பார்த்தாலும் ஏதாவது டவுட்டுன்னு போய் நிக்கிறார். இது அவருக்கே ஓவரா இல்லியா? வயசானாலும் இங்கிதம் தெரியலையே?

இது எல்லாத்தையும் விடக் கொடுமை... அட்மின் செக்சனில் இருக்கும் லாரன்ஸ் பண்ணுவது தான்.. பேசுவது மாதிரி பக்கத்தில் போய் உரசுவது, நடந்து வரும் போது இடிச்சிட்டு சாரி சொல்வது..இப்படி டெய்லி தொடருது. அவள் இதை எல்லாம் சாதாரணமா எடுத்துட்டு போய்டுறாரா..ஆனா என்னால் இங்க சும்மா உட்கார முடியல...மூலம் வந்தவன் மாதிரி கேபினில் இருந்து எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு.

எப்படியாவது என் காதலை அவள்கிட்ட சொல்லனும்னு வெயிலில் போட்ட புழு மாதிரி துடிச்சேன். வேலையில் கவனம் செலுத்த முடியல..சாப்பாடு சரியா இறங்கல.. சரி.. நல்லபிள்ளையா அவளோட வீட்ல போய் பொண்ணு கேக்கலாம்ன்னு வேவு வேலையில் இறங்கினேன். அப்ப ஒரு முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. அவள் எங்க கம்பெனி MD யின் ஸ்பெஷல் காரில் தான் சென்று வருகிறாளாம். டிரைவரை பிடித்து விசாரித்த போது அதைவிட அதிர்ச்சியைக் கொடுத்தான். தினமும் காலையில் பிக்அப் செய்வது மற்றும் டிராப் செய்வது எல்லாம் பேக்டரியை ஒட்டி இருக்கும் கம்பெனி MD யின் கெஸ்ட் அவுஸில் தானாம்.

அவள் முகத்தில் தெரியும் ஒரு வித இறுக்கம் அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எனக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்திக் கொண்டு இருந்தது. அப்பதான் அந்த இறுதி முடிவை எடுத்தேன். என் ரேச்சிக்கு இந்த நரக வாழ்வில் இருந்து அவளுக்கு விடுதலை தருவது தான் அந்த முடிவு.

கம்பெனியின் இண்டர்னல் மெயில் சிஸ்டம் மூலம் அவளுக்கு என் காதலை முழுமையாகச் சொல்லி, விருப்பப்பட்டால் இந்த இயந்திர வாழ்க்கையை விட்டு எங்கள் கிராமத்திற்கு சென்று விடலாம் என்பதை சொல்லி இருந்தேன். மறக்காமல் எங்களது பூர்வீக சொத்தான 50 ஏக்கரில் விவசாயம் செய்து சந்தோசமாக வாழலாம் என்பதையும் சேர்த்து இருந்தேன்.

அன்று ஏனோ அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. ஆனால் மறுநாள் கம்பெனி MD என்னைத் தனது தனியறைக்கு அழைத்தார். சதிகாரி.. வசந்த சேனை..வத்தி வைத்து விட்டாள் என்பது மட்டும் புரிந்தது. MD யின் அறைக்கு சென்றால் அங்கே டிசைனிங் செக்சனின் சுந்தரும், மேலும் என் ரேச்சியும் இருந்தனர். இப்பவும் அவளது பார்வையில் எந்த கலங்கமும் இல்லை.

MD தான் விசாரணையைத் துவக்கினார். தயக்கமில்லாமல் எனது காதலை என் ரேச்சியிடம் சொன்னதை ஒத்துக் கொண்டேன். இது பார்வையில் ஆரம்பித்து இதயத்தில் முடியும் காதல் என்பதை விளக்கினேன். சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் சுந்தரைப் பார்க்க சுந்தர் எழுந்து வந்து என் ரேச்சியிடம் “கொஞ்சம் உன் சுடிதார் டாப்பை உயர்த்து” என்றான். டக்கென்று என் ரேச்சி டாப்பைத் தூக்க என் காதலியின் வயிற்றுப் பகுதியில் கையை செலுத்திய சுந்தர் அங்கிருந்த சிறு பின்னைப் பிடித்து இழுக்க டக்கென்று வயிற்றுப் பகுதி திறந்து கொண்டது.

நான் எட்டிப் பார்க்க உள்ளே அனைத்தும் எலெக்ட்ரானிக் போர்டுகளும் ஒயர்களுமாக இருந்தது. உள்ளே இருந்த சிறு ஸ்விட்சை அழுத்த கையைத் தூக்கியது போலவே ரேவதி நின்று கொண்டு இருந்தாள். சுத்தமான சிலிகான் மற்றும் பல வேதிப் பொருட்களின் கலவை தான் உங்கள் ரேச்சி...இவள் ஒரு ரோபாட் என்று சொன்ன சுந்தர் மீண்டும் ஸ்விட்சை அழுத்த ரேவதி கண் சிமிட்ட ஆரம்பித்து இருந்தாள். MD பெருந்தன்மையுடன் எனது தவறை மன்னிப்பதாகவும், இனி ஒழுங்காக இருக்கும் படி வார்ன் பண்னியும் அனுப்பினார். அந்த புதிய வகை ரோபாட் பெண்ணை எங்கள் கம்பெனியிலேயே டெஸ்டிங்குக்காக வைத்திருப்பதாகவும் கூறி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

தளர்ந்து போய் இருக்கையில் அமரப் போனேன். ஏதோ உந்துதலில் எட்டிப் பார்க்க அங்கே அட்மின் லாரன்ஸ் வேண்டுமென்றே உரசிக் கொண்டு செல்வது தெரிந்தது. எப்போதுமே வயிறு எரிபவன் இன்று வாய்விட்டு சிரித்தேன்.

Wednesday, March 25, 2009

யூத் விக்டனின் வந்த சிறுகதை - அப்பாவின் கடன்


காலை வெயில் மெலிதான உஷ்ணத்தை முகத்தின் மீது அடித்துக் கொண்டிருந்தது. சென்னையில் இருந்து இரவு முழுவதும் பிரயாணித்து இருந்தாலும் ஊர் நெருங்க நெருங்க ஏனோ மனம் நிலை இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு இருந்ததால் தூக்கம் காணாமல் போய் இருந்தது. கைகளும், கால்களும் இயந்திர கதியில் இயங்கி காரை செலுத்திக் கொண்டு இருந்தன.
பெரியகுளத்தைக் கார் கடந்து இருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் ஊரை அடைந்து விடலாம். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அப்பாவை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்காக ஊருக்கு வந்தது. இடையில் அப்பா மட்டுமே விசேஷங்களுக்கு சென்று வந்து கொண்டு இருந்தார்... இப்போது மீண்டும்.. அப்பா என்றதுமே கண்கள் பனிக்கின்றன. எப்படிப்பட்ட மனிதன்...!!!

அதோ அந்த மலையின் மீது தானே அந்த பெண்கள் கல்லூரி இருந்தது. மனம் சோகமாக இருந்தாலும் இனம் புரியாத குறுகுறுப்பு எட்டிப் பார்ததது. காரை கல்லூரி பஸ் ஸ்டாப் முன் இருந்த டீக்கடை முன் நிறுத்தினேன். பல தடவைகள் நின்றும், அமர்ந்தும் வெட்டியாய் பொழுதைக் கழித்த டீக்கடை. கடையில் ஏதும் தெரிந்த முகம் இல்லை. காலை வேலையாதலால் சில பெருசுகள் மட்டும் பேசிக் கொண்டு இருந்தன.

எனக்குப் பிடித்த டீயும், வடையும் சொல்லி விட்டு எட்டி நடந்தேன். நண்பர்களுடன் அமர்ந்து கொட்டமடித்த அந்த பேன்ஸி ஸ்டோர் தென்பட்டது.. பெயர் மாறி இருந்தது. வாழ்க்கையின் ஓட்டத்தில் என்னன்னவோ மாறி இருக்கின்றன.

டீ, வடையை முடித்து விட்டு மீண்டும் காரை செலுத்த, SDA பள்ளி அருகில் ஒருவர் தனது மகனை வைத்துக் கொண்டு சைக்கிளில் ஓரமாக வந்து கொண்டு இருந்தார். மீண்டும் அப்பாவின் நினைவு ஆக்கிரமித்தது. ஊரில் இருந்து பெரியகுளத்திற்கும், தேனிக்கும் அப்பாவுடன் பலமுறை இது போல் சைக்கிளிலேயே சென்று இருக்கிறேன்.

அப்பாவுக்கு என் மீது கொள்ளைப் பிரியம். மூத்த மகன்கள் மூவரும், இரண்டு மகள்களும் இருந்தாலும் என் மீதே அவருக்கு விருப்பம் அதிகம். ஏனென்று மட்டும் தெரியவில்லை. கடைசி காலத்தில் கடைக் குட்டியாய் பிறந்ததால் இருக்கலாம்.. சில மாதங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

“என்னால உனக்கு ஒன்னுமே பிரயோசனமில்லைடா”

”என்னப்பா இதெல்லாம்... நீங்க ரொம்ப நல்லவரா வாழ்ந்து இருக்கீங்க... யாரையும் ஏமாத்தலை... துரோகம் பண்ணலை. எங்களை எல்லாம் நல்லவர்களா வளர்த்து இருக்கீங்க..இப்பவும் நிம்மதியா எங்க கூடவே இருக்கீங்க..வேற என்னப்பா வேணும்?”

“இல்லைடா..என்னால் உன்னை நல்லா படிக்க வைக்க முடியலையே... மத்தவனெல்லாம் சரியா படிக்காத போது நீ மட்டும் தான் நல்லா படிச்ச.. உன் ஒருத்தனை மட்டும் கூட என்னால நல்லா படிக்க வைக்க முடியலடா... எனக்கு இதை எப்ப நினைச்சாலும் தாங்க முடியாத மன அழுத்தமா இருக்குடா”

“அப்பா... அதையெல்லாம் நினைக்காதீங்க.. இப்ப நாம எல்லாம் நல்லாதானே இருக்கோம். நல்ல வசதி இருக்கு.. கார்,வீடுன்னு நல்லா இருக்கோம். கவலைப்படாதீங்கப்பா”

ஆனாலும் அப்பாவின் முகத்தில் ஒரு திருப்தியின்மையின் ரேகைகளே தெரிந்தன.

சில நாட்களுக்கு முன் அப்பாவுக்கு உடல் நலமில்லை என்றாகியதும் தனக்குத் தானே புலம்ப ஆரம்பித்து இருந்தார். சுய பச்சாதாபமும், என் மீதான பாசமும் அவரை ஏனோ உருக்கிக் கொண்டு இருந்தது. தனது உயிர் தமது கிராமத்தில் தான் பிரிய வேண்டும் என்று சதா சொல்லிக் கொண்டே இருந்ததால் சொந்த வீட்டுக்கு அனுப்பி இருந்தேன்.

அப்பாவை விட்டு பிரியாமலேயே இருந்து விட்டு, திடீரென பிரிந்த என் நிலையும் நிலை கொள்ளாமலேயே தவித்தது. அப்பாவின் உடல் நிலை மோசம் என்றதும் உடனே கிளம்பிவிட்டேன். பள்ளி இறுதித் தேர்வுகள் நடக்கின்றன என்பதால் மனைவியும், மகளும் சென்னையில்

கார் லெட்சுமிபுரம் தாண்டி கிராமத்துக்கான ஒற்றையடிச் சாலையில் பிரயாணித்துக் கொண்டிருந்தது. நல்ல நீர் வளத்துடன் இருந்த நிலங்கள் காய்ந்து போய் இருந்தது மனதை பிசைந்தது. கார் ஊருக்குள் நுழையும் போது ஊரில் செழிப்பு தெரிந்தது. நிறைய வீடுகள். அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருக்கும் மாணவ, மாணவிகள்.ஊருக்குள் கார் வந்தாலே காரின் பின்னால் ஓடும் நாட்கள் நினைவுக்கு வந்தது. இன்று பல வீடுகளின் முன்னும் மாருதிகளும், டாட்டா வகைக் கார்களும் அமைதியாக நின்று கொண்டு இருந்தன.

வீட்டின் நுழைவாயிலேயே அத்தை தெரிந்தார். கண்டதும் கண்ணில் டக்கென்று கண்ணீர் கட்டுவது தெரிந்தது. வரவேற்று விட்டு

“அப்பாவின் நிலை மோசமா இருக்கு.. மூணு நாளா ஒன்னும் சரியா சாப்பிடலை. அப்பப்ப பால் மட்டும் தான்..டாக்டரும் வயசாயிடுச்சு..ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டார்” என்று தனது கவலையை வெளிப்படுத்தினாள்.

அப்பாவை கட்டிலில் பார்க்கும் போதே நெஞ்சை பிசைந்து கொண்டு வந்தது. கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து நலம் விசாரித்தேன். மருமகள், பேத்தியை தேடும் ஏக்கம் தெரிந்தது.

மாலையில் கொஞ்சம் நன்றாக இருந்தார். என் கையாலேயே பால் அருந்தினார். இருவரும் பழைய கதைகளை பேசினோம். நடுங்கும் குரலில் மெதுவாகப் பேசிக் கொண்டு இருந்தார். பேச்சினூடே எனது புதிய திட்டத்தை தெரிவித்தேன். நமது கிராமத்தில் இருக்கும் மேற்கொண்டு படிக்க இயலாத ஏழை மாணாக்கர்களுக்கு அவர்களது மேற்படிப்பை ஊர்ஜிதம் செய்யும் வண்ணம் அமையப் போகும் டிரஸ்ட் குறித்தும், அதன் வருவாய் ஆதாரங்கள் குறித்தும் விளக்கினேன். இனி நம் கிராமத்தில் யாரும் வசதி குறைவால் மேற்கொண்டு படிக்க இயலாமல் போக விட மாட்டேன் என்ற போது அவரது கண்களில் புதிய ஒளி தெரிந்தது. பேச்சில் தெம்பும், முகத்தில் ஒரு புது வித பெருமிதமும் பார்க்க முடிந்தது. அதே மகிழ்ச்சியில் உறங்கச் சென்றோம்.

காலையில் அத்தையின் அழுகுரலே எழுப்பியது... அப்பா நம்மை விட்டு சென்று விட்டார் என்று சொன்னதும் திடுக்கிட்டு சில வினாடிகளில் சகஜ நிலைக்கு வந்தேன். எழுந்து வேகமாக அப்பாவின் படுக்கைக்கு சென்று பார்த்த போது முகத்தில் இரவு கண்ட அதே பூரிப்புடன் இறந்து இருப்பதைக் கண்டதும் ஏனோ அழுகை மட்டும் வரவில்லை.

பின் குறிப்பு : யூத் விகடனில் வெளியிட்டு, விகடன் இணைய தளத்தின் முகப்பிலும் சில தினங்கள் வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு நன்றி!