Showing posts with label நண்பனின் கதை. Show all posts
Showing posts with label நண்பனின் கதை. Show all posts

Friday, March 6, 2009

போங்கடா..... ஆன்ட்டிப் பண்டாரங்களா - செத்துப் போனவனின் கதை.

கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது. அப்போது நாங்கள் சென்னையில் புறநகரில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தோம். அந்த கல்லூரியில் சிறப்பாக சொல்ல நிறைய விடயங்கள் இருந்தாலும் மிக முக்கியமான விஷயமாக எங்களுக்குப் பட்டது அது ஒரு கோ-எட் காலேஜ். கல்லூரியைச் சுற்றி பரபரப்பான ஏரியா.

கல்லூரிக்கு எதிரே விடுதி. விடுதியைச் சுற்றி வதவதவென வீடுகள். எங்கள் விடுதி இரண்டு மாடி. விடுதியை ஒட்டியே வரிசையாக ஒரே மாதிரியான வீடுகள் இருக்கும். அவற்றிற்கு ஒரே மாடி. நீளமாக இருக்கும். பலவற்றின் வீடுகளின் படிகள் வெளியே இருக்கும் என்பதால் அதன் வழியாக வந்து, விடுதியின் மேலே வந்து விடலாம். இரவு பத்து மணிக்கு மேல் விடுதி மூடப்படுமாதலால் அது தான் வழி. இரண்டாம் ஆட்டம் சினிமா போகிறவர்களுக்கு அதுதான் தினசரி வழி. அந்த லைன் வீட்டின் ஓனர் ஒரு பிரபல வக்கீல். கீழ்த் தளங்களை வாடகைக்கு விட்டுவிட்டு மேலே பாதி மாடியில் விடு கட்டி குடி இருக்கிறார். சில நேரங்களில் அவர் மாடியில் அமர்ந்து கட்சிக்காரர்களுடன் இரவு பேசிக் கொண்டு இருப்பார். அப்ப மட்டும் நம்ம பசங்க அந்த பக்கம் இறங்க மாட்டானுக., நாம அந்த வழியை எல்லாம் சோதித்து பார்த்ததில்லை... ஏன்னா நாங்க ரொம்ப நல்லவங்க

சரி நேரடியா மேட்டருக்குப் போகலாம். விடுதிக்கு அடுத்த தெருவில் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. அந்த ஆண்டு அங்கு சிறப்பான திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். லக்ஷ்மன்-ஸ்ருதியின் மெல்லிசைக் கச்சேரி, பட்டிமன்றம் என்று இரவு களை கட்டி இருந்தது. நம்ம மூன்றாவது வீட்டு வக்கீல் தான் திருவிழாவிற்குத் தலைமை. கல்லூரியில் அன்று மட்டும் விடுதியில் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இருந்தது.

பசங்க எல்லாம் இரவு உணவுக்குப் பின் ரெடியாகிக்கிட்டு இருந்தோம். ஏன்னா அந்த ஏரியா பிகர்களெல்லாம் அப்ப தானே மொத்தமா ஒரே இடத்தில் பார்க்கலாம். .. ;) எல்லாரும் கிளம்பின நேரம் பரணி மட்டும் படுத்துக் கிடந்தான். என்னடான்னா அவனுக்கு தலைவலியாம்... ஊருல இருக்குற எல்லா ஸ்கூல் பொண்ணுகளையும் காலையில் வீடு to ஸ்கூல், வீடு To பஸ் ஸ்டாப் வழி அனுப்புவது தான் அவன் முதல் வேலை. அதே போல் மாலையில் vice versa. அவன் வரலைன்னா நிறைய பொண்ணுங்க வருத்தப்படுமே என்று நாங்கள் வருத்தப்பட்டுக் கொண்டே சென்று விட்டோம்.

இரவுப் பொழுது இனிமையாகக் கழிந்தது. சுமார் ஒரு மணிப் போல் சில பசங்க தூக்கம் வந்து விடுதிக்கு திரும்ப வந்துக்கிட்டு இருக்கும் போது வழியில் வக்கீல் வீட்டில் இருந்து ‘திருடன்’ ‘திருடன்’ என்று சத்தம். நம்ம பசங்க வேகமா வக்கீல் வீட்டு மாடிக்கு ஏறிப் போய் இருக்காங்க... கச்சேரியில் இருந்து ஏனோ இடையில் வக்கீல், வீட்டுக்கு வரும் போது ஹால் ஜன்னல் வழியே வெளியே மாடியில் யாரோ ஓடியது போல் இருந்திருக்கின்றது. நம்ம பசங்க மாடி பூராவும் தேடிப் பார்த்துட்டு யாரையும் காணலைன்னு சொல்லிட்டு வந்துட்டாங்க... இதில் என்ன மேட்டர் இருக்குன்னா... இதில ஒரு ஆன்ட்டி சென்டிமெண்ட் இருக்கு.. அதைக் கடைசியில் சொல்றேன். அதுக்கு முன்னாடி நம்ம பரணியைப் பற்றி தெரிஞ்சுக்குங்க...

நானும் பரணியும் ஊரிலேயே ஒண்ணா படிச்சவர்கள். தமிழ் மீடியம். ஊரிலேயே அவனுக்கு பொண்ணுக பின்னாடி சுற்றுவது தான் முழு நேர வேலையே.. ஆனால் படிப்பில் கெட்டி. +1 படிக்கும் போது எனக்கு காதல் மலர்ந்து இருந்தது. அது என்னோடு இந்தி படிக்கும் பொண்ணு. அந்த பொண்ணு பேரு.. வேண்டாமே... அதே இந்தி கிளாஸில் எனக்கு ஜூனியர் பெண்ணை பரணி லவ்ஸ் விட ஆரம்பிச்சு இருந்தான். அந்த பெண் பெயர் சுதா. இந்த இரண்டு பெண்களும் ஒரே மெட்ரிக்குலேசன் ஸ்கூலில் படிப்பதால் பிரண்ட்ஸ். வசதியான வீட்டுப் பெண்கள்.

பரணி தைரியமா சுதாகிட்ட போய் லவ்ஸை சொல்லிட்டான். அவன் துபாய் போய் வேலை செய்யப் போவதாகவும், அவனை கல்யாணம் முடித்தால் அவளுக்கும் துபாய் போகும் வாய்ப்பு கிடைக்கும் என்று சாமர்த்தியமாக பேசி இருக்கிறார். ஆனா சுதா விவரமான ஆளு... ‘எங்களுக்கு வெளிநாட்டுக்கு போற எல்லாம் வேணாம். உள்ளூர் ஆள் போதும்.. வேலையைப் பார்த்துட்டு போ’ன்னு சொல்லிடுச்சு.. பரணி வெக்ஸ் ஆகிப் போகிட்டான். ஆனா என்கிட்ட சொல்லை.

சுதா என் ஆள்கிட்ட சொல்ல அவள் வந்து என்னிடம் உளறிட்டாள்.. கொஞ்சம் லொட லொட கேஸ்.. ;))) .. அதுக்கு அப்புறம் சுதாவை நீங்க எல்லாம் பெரிய இடம்.. துபாய் போய் செட்டில் ஆகப் போறீங்க என்று கலாய்த்த கதை எல்லாம் இங்கே வாணாம்.. இதில் பாதிக்கப்பட்டது நான் தான்.. இந்த ஐடியாவை வச்சு இருந்தது நான் தான்... என் ஆள்கிட்ட இப்படிச் சொல்லி புரோபஸ் பண்ணலாம்ன்னு நினைத்து இருந்தேன். பரணி முந்திக்கிட்டு சொதப்பிட்டான்... அப்புறம் கடைசி வரை எப்படி சொல்றதுன்னு நினைச்சிக்கிட்டே கடைசி வரை சொல்லாம விட்டுட்டேன்னு வச்சுக்கங்க.. அந்த பொண்ணு இப்ப 11000 கி.மீ தள்ளி காணாமப் போய்டுச்சு..

சரி பழையக் கதைக்கு வரலாம். நம்ம பசங்க திருடனைத் தேடி மாடி பூரா சுத்தி இருக்காங்க.. ஒரு தண்ணீர் தொட்டிக்கு பின்னாடி யாரோ பதுங்கி இருப்பதைப் பார்த்ததும் எல்லாம் உசாரா அங்க போனா.. அந்த ஆள் டக்கென்று இவர்கள் காலில் விழுந்து விட்டான். பார்த்தால் நம்ம பரணி. வக்கீல் வீட்டில் இல்லாததால் வக்கீல் வீட்டுக்கு வந்தேன். திடீரென்று வக்கீல் வந்துட்டார். எஸ்கேப்பாகும் போது ஜன்னல் வழியா பார்த்துட்டார். காட்டிக் கொடுக்காதீங்கடான்னு ஒரே அழுகை. பசங்க நல்லா ஒளிஞ்சுங்க அப்புறம் தப்பி ஓடிப் போன்னு மன்னிச்சு யாரும் இல்லாத மாதிரி காட்டிக்கிட்டு வந்துட்டாங்க... மறுநாள் முதல் அவன் இறந்த 2003 மார்ச் வரை இதை வைத்து அவனைக் கலாய்த்த லூட்டி எல்லாம் காலத்தால் அழியாதது.

டிஸ்கி : கதையில் வரும் பெயர்கள் மட்டும் கற்பனையானவை.

Wednesday, August 6, 2008

நாங்கள் TCS ல் வேலை செய்த காலமெல்லாம்...... காதல் கதை

.
நா
னும், பரணியும் அப்போது அம்பத்தூர் டாடா கன்சல்டன்சி சர்வீஸில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம். அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றால் வந்துவிடும். என்னுடனேயே தங்கி இருக்கும் பரணியும், நானும் ஒன்றாகவே வேலைக்கு சென்று திரும்புவோம்.

பரணி என்னை மாதிரி இல்லை. எப்பவும் ஆள் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவான். “நம்மை எப்பவும் நான்கு பெண்கள் திரும்பி பார்க்க வேண்டும்” என்ற கொள்கையில் பிடிவாதமாக இருப்பான். நெல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு ஊர்க்காரன். ஆள் கொஞ்சம் ஃபீலிங் பார்ட்டி வேறு. எதற்கெடுத்தாலும் எமோசனல் ஆகி விடுவான். அவனது ரசனைகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும்.

இருந்தாலும் “என்னைப் பொறுத்த வரை TCS ல் வேலைக்கு வரும் பெண்கள் என்றால் அது உயரிய கல்ச்சர். அதுக்கும் நமக்கும் தொடர்பு கிடையாது” என்று சொல்லிக் கொள்வான். மாலை 6 மணிக்கு வேலை முடிந்ததும் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் யாரிடமாவது கடலை போடுவான். மாலை நேரத்தில் அவனுக்கு தோதுவாக நிறைய பேர் கார்மெண்ட்சில் வேலை முடிந்து வருவார்கள். அதனால் இரவு 8 வரை அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் ‘ஜே' 'ஜே' என்று இருக்கும்.

வேலை முடிந்ததும் அறைக்கு வர முடியும் என்றாலும் நான் நண்பனுக்காக காத்திருப்பேன். கடைசியில் கிடக்கும் பஸ்சில் அமர்ந்து கொள்வேன். அந்த பஸ் கிளம்பினால் இறங்கி அடுத்த பஸ். அப்போது தான் அவனிடம் அந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்தது.

TCS ல் புதிதாக ஸ்ரீதேவி என்று ஒரு பெண் வேலைக்கு சேர்ந்திருந்தார். அந்த பெண்ணைப் பார்த்ததும் பரணிக்கு ஃபீலிங் அதிகமாகி விட்டது. ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருப்பது போல் பிதற்ற ஆரம்பித்தான். அந்த பெண்ணும் சுருட்டை முடியுடன், குதிரை வால் கொண்டை போட்டு அழகாவே இருந்தார் என்றே நினைக்கிறென். அதுவுமில்லாம் வட இந்தியர்களுக்கே உரித்தான கோதுமை நிறத்தில் இருப்பார். அப்போது இதை எல்லாம் ஆராய்ச்சி செய்யும் அறிவு இருந்ததில்லை. அதுவுமில்லாமல் நண்பன் சைட் அடிக்கும் பெண்ணை நாம் பார்க்கக் கூடாது என்ற பொது புத்தியும் இருந்தது.

நாங்கள் வேலை செய்தது இரண்டாவது மாடியில். ஸ்ரீதேவிக்கு வேலை முதல் மாடியில். இதனால் பரணிக்கு அந்த பெண்ணைப் பார்க்கும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கீழ்த் தளத்தில் இருந்த கேண்டீன் தான். ஸ்ரீதேவி வரும் நேரத்தை சரியாக அறிந்து அவனும் அந்த நேரத்தில் கேண்டீனுக்கு வந்து விடுவான். துணைக்கு என்னையும் இழுத்துக் கொண்டு வருவான்.

அந்த பெண்ணும் தனது சோடா புட்டி தோழியுடன் தான் வரும். பரணி நம்மிடம் அந்த சோடா புட்டியை சைட் அடிக்க வலியுறுத்தியும் கண்ணாடி போட்ட பெண் தேவையில்லை என ஒதுங்கி இருந்ததை இங்கு சொல்லிக் கொள்கிறென். ஸ்ரீதேவிக்கு குலோப் ஜாமுன் மிகவும் பிடிக்கும் என்பதால் பரணிக்கும் குலோப் ஜாமுன் பிடித்துப் போனது. ஓசியில் கிடைத்ததால் நமக்கும் குலோப் ஜாமுன் பிடித்துப் போனது.

சில தினங்களில் வேலை முடிந்து திரும்பும் போது அந்த பெண்னை பின்தொடர்வது வாடிக்கை ஆகி இருந்தது. அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து ஆவடிக்கு வர வேண்டிய நாங்கள் அந்த பெண்ணிற்காக அம்பத்தூர் - ஆவடி மெயின் ரோடை விட்டுவிட்டு கழுத்தை சுற்றி மூக்கைத் தொடுவது போல் HVF டாங்க் பேக்டரி இருக்கும் வழியாக 20 நிமிடம் விரயம் செய்து வர ஆரம்பித்தோம். HVF ல் தான் ஸ்ரீதேவியின் அப்பா வேலை பார்ப்பதாக பரணி கூறிக் கொண்டான்.

அது காதலுக்கு மரியாதை படம் வந்திருந்த நேரம். பரணி அந்த படத்தை பத்து தடவைகளுக்கும் மேல் பார்த்து ஃபீலிங்கோபோபியா வியாதி பிடித்து அலைய ஆரம்பித்திருந்தான். நானும் “ நண்பா! உன்னுடைய காதல் தெய்வீகமானது. அவள் அப்பா போலீஸாக இருந்தால் என்ன, மிலிட்டரியாக இருந்தால் என்ன? உன் காதலுக்கு முன் அவையெல்லாம் இந்த மிலிட்டரி டேங்க் எல்லாம் தடையே கிடையாது. பரித்தமாக காதல் நிச்சயம் ஜெயிக்கும்டா” என்று சொல்லி வைத்தேன். அவன் கண்கள் கலங்க “தேங்க்ஸ்டா நண்பா” என்றான். ஆனால் அந்த பெண் இவனை பார்த்ததையோ, இவனிடம் பேசினதையோ ஒருநாள் கூட நான் பார்த்ததில்லை.

அப்போதுதான் அந்த செய்தி இடி போல் வந்தது. எங்கள் இருவரையும் சோழிங்க நல்லூர் (குமரன் நகர்) TCS கிளைக்கு மாற்றி விட்டதாக. அப்போது தான் துளிர்க்கத் தொடங்கிய நண்பனின் காதல் முளையிலேயே அழிந்து விடுமோ என்று எனக்கும் கவலையாகி விட்டது. பரணியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஃபீலிங் ஆப் மகாத்மாவாகவே ஆகி விட்டான்.

வேறு வழி இன்றி காலையில் சீக்கிரமே எழுந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் இருந்த இடமும், சோழிங்கநல்லூரும் சென்னை இரு வேறு துருவங்கள். வேலைக்கு சென்று திரும்புவதற்குள் தாவு தீர்ந்து விடும். அந்த பெண்ணைப் பார்க்காமல் பரணியின் ஃபீலிங் வேறு அதிகமாகி இருந்தது. இரவில் தூக்கத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி என்று புலம்ப வேறு ஆரம்பித்திருந்தான்.

திடீரென்று மாலை நான்கு மணிக்கே வேலைக்கு கட் அடித்து விட்டு ஸ்ரீதேவியைப் பார்க்கப் போவதாக கூறினான். நானும் “காதலுக்காக இதெல்லாம் தியாகத்தின் ஒரு சதம் தான். சென்று வா” என ஆசி கூறி அனுப்பி வைத்தேன். மீண்டும் வீடு வரை விட்டு விட்டு வரும் படலம் ஆரம்பமானது.
சில நாட்களில் தனது தெய்வீகக் காதலை அந்த பெண்ணிடம் சொல்லப் போவதாக கூறிக் கொண்டு ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டான். காதலில் வெற்றி என்றால் குல தெய்வத்துக்கு மொட்டை அடிப்பதாக வேறு வேண்டிக் கொண்டான். நான் அன்று எப்போதும் போல் வேலைக்கு போய் விட்டு இரவு 8:30 மணிக்கு அறைக்கு திரும்பினேன். அதுவரை பரணி அறைக்கு திரும்பவில்லை. இரவு 11 மணிக்கு மேல் தான் வந்தான். சட்டை கிழிந்து, உதடு, கன்னம், கைகளில் காயங்களுடன், ஆங்காங்கே பேண்டேஜ்களுடன் பஞ்சராகி வந்திருந்தான்.
“என்னடா ஆச்சு” என்று கேட்ட போது ஏதும் சொல்ல மறுத்து விட்டான்.

சில நாட்கள் கழித்து என்னிடம் வந்து “ தமிழ்! ஸ்ரீதேவியிடம் ஒன்றும் அழகோ அறிவோ இருப்பது போல் தெரியலைடா! நம்மோடு சைதாப் பேட்டையில் இருந்து பஸ்ஸில் வருதே பிரியா, அந்த பொண்ணுதான் எனக்கு சரியான ஜோடி மாதிரி தெரியுதுடா! அந்த பொண்ணைப் பார்த்ததும் எனக்கு உண்மையான காதல் ஃபீலிங் வருவது போல் இருக்குடா” என்று சொன்னான். நானும் “ ஆமாம்டா! அந்த ஸ்ரீதேவி வடக்கத்தி பொண்ணூடா! நமக்கு தோது வராதுடா. இதை முதலிலேயே சொல்லனும்னு நினைச்சேன். நம்ம தமிழ் கலாச்சாரத்தில் உள்ள பிரியா தான்டா உனக்கு சரியான ஜோடி. கொஞ்ச நாள் நல்ல மாதிரி நடந்துகிட்டு உன் காதலைச் சொல்லுடா... உன் காதல் பரிசுத்தமாக தெய்வீகக் காதல். கண்டிப்பா ஜெயிப்படா. எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சொன்னேன்.
என் நண்பன் பரணி கண்கள் கலங்கியவனாக “தேங்க்ஸ்டா நண்பா” என்று கை கொடுத்தான்