Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Friday, September 10, 2010

கன்னி மேடைகள்

இன்னைக்கு மகனுக்கு கன்னி மேடை. அதுக்குள்ள போறதுக்கு முன்னாடி கொஞ்சம் சுய சொறிதல் இருக்கு..

மேடைப் பேச்சு என்பதே ஒரு சுவாரஸ்யம்.. எல்லாருக்கும் அந்த கலை வருவதில்லை. பேசும் டாபிக்கை விடு எங்கெங்கோ சென்று இழையை விட்டுவிடுபவர்களைப் பார்க்கலாம்.. அதெல்லாம் ஒரு பெரிய டாபிக்.. அது வாணாம்.. நாம வழக்கமான மொக்கைக்கு போகலாம்.. நமக்கும் இந்த மேடைகளுக்கும் ஆவறதே இல்லை. பள்ளியில் படிக்கும் போது திங்கள் கிழமை காலை வணக்கத்தில் ஒரு தலைவரைப் பற்றி ஒரு மாணவன் உரையாடனும். எங்கள் வகுப்பு வரும் போது அந்த வாய்ப்பு எனக்குதான் கிடைக்கும்.. அது மாதிரி பாரதியார், காந்தி ,நரசிம்மராவ் (அவ்வ்வ்வ்... அப்ப அவர் தான் பிரதமர்) பற்றி எல்லாம் பேசி இருக்கோம்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது மாவட்ட அளவில் ஒரு பேச்சுப் போட்டி.. குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி. நேரு பற்றி பேசலாம்னு போயாச்சு.. அங்க பார்த்தா எல்லா பசங்களும் பொளந்து கட்டி அடிக்கிறானுக.. அப்ப தான் நாம கிணற்றுத் தவளையா இருந்து இருக்கோம்னு தெரிஞ்சது.. சொந்த பள்ளியில் ராஜா மாதிரி இருந்துட்டு வெளியே போனா கை, கால் எல்லாம் நடுங்கிப் போச்சு.. எப்படி சமாளிச்சிட்டு வந்தாச்சுன்னு வச்சுக்கங்களேன்.

சென்னையில் படித்த போதும் அப்படித்தான்.. படிப்பு முடிந்ததும் கல்லூரி சார்பில் நிகழ்ச்சி..(நீ எப்ப கல்லூரி போனன்னு கேட்கப்படாது..ப்ளோவில் வரும் இதெல்லாம்) கல்லூரி பேராசிரியர்கள், எங்களைப் படிக்க வைத்த துபாய் நிறுவன உயர் அதிகாரிகள் எல்லாம் இருக்காங்க.. கழுத்தில் டை எல்லாம் கட்டி ஸ்டைலா மேடை ஏறி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சார்பா நன்றி சொல்லனும்.. இங்கிலிபீஸில் தான்.. :) கூட படித்த ஒருத்தன் கேமராவோட இருந்தான்.. “டேய்.. நான் மேடையேறி பேசும் போது ஒரு போட்டோ எடு” ந்னு சொல்லிட்டேன்... சித்தார்கோட்டைக்காரன்.. படுபாவி.. நான் பேசப் போறதுக்கு முன்னாடி நல்லா தான் எல்லாரையும் போட்டு எடுத்துக்கிட்டு இருந்தான். நான் மேடை ஏறியதும் கேமராவில் ஏதோ ரிப்பேர்னு நோண்ட ஆரம்பிச்சான்.. இறங்கும் போது தான் சரியாச்சுன்னு சொன்னான்.. சதி வேலை போல இருக்கு.. என்னவோ என் மேடை போட்டோக் கனவு கானல் நீராப் போச்சுன்னு வச்சுக்கங்க... சரி அதை விடுவோம்.

நான் போய் வாக்கப்பட்ட(அல்லது பொண்ணு எடுத்த ஊர்) தமிழகத்தின் தெற்குக் கடைசியில் கன்னியாகுமரிக்கு பக்கத்தில் இருக்கு.. சிறு குக்கிராமம்.. ஒரு பகுதியில் மசூதி.. அதை சுற்றி மூன்று, நான்கு முஸ்லிம் மக்கள் வசிக்கும் தெருக்கள்.. அந்த ஊரில் ஒரு பழக்கம்.. நோன்புப் பெருநாள் அன்று விழா போல் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒட்டப்ப்பந்தயம், கயிறு ஏறுதல், கயிறு இழுத்தல், சிறுவர் சிறுமிகளுக்கு போட்டிகள் எல்லாம் இருக்கும். அந்த ஊரில் இருக்கும் பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் மாலையில் மேடையில் பேச வேண்டும். பேச்சுப் போட்டி என்பது எல்லாம் இல்லை. எல்லாரும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.

ரமழான் மாதம் ஆனதுமே இதுக்காக முஸ்தீபுகளில் சிறுவர், சிறுமியர் இறங்கி விடுவார்கள். எல்லா வீட்டுப்பிள்ளைகளும் கையில் பேப்பர்களை வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்து கொண்டு திரியும்.. போன வருடம் ஊரில் இருந்த போது பார்த்தது இதெல்லாம்... எங்க வீட்டில் ஒரு மைனர் இருக்காரே.. அவருக்கு அப்ப வயசு 3.. எல்லாப் பிள்ளைகளும் மேடை ஏறும் போது நல்ல பிள்ளை மட்டும் மேடை ஏறலைன்னா அசிங்கமா போயிடும்னு அவனையும் மேடை ஏற்ற ஏற்பாடு பண்ணியாச்சு.

பள்ளிவாசல் இமாம் அவனை பரிசோதித்து (?) குரானில் இருந்து 7 வசனங்கள் உள்ள ஒரு சூரா சொல்லட்டும் என்று சொல்லி விட்டார். ஏற்கனவே மனைவி அவனுக்கு இதைக் கற்றுக் கொடுத்து வைத்து இருந்ததால் மனப்பாடமாக சொல்வது பிரச்சினையாக இல்லை. போன வருடப் பெருநாளும் வந்தது. நம்ம ஆளு புல் மேக்கப்போட ரெடி.. பயமெல்லாம் இல்லை.. எங்களுக்கு தான் பயமா இருந்தது. நான் வீடியோ கேமராவோட மகன் மேடையில் சொல்லப் போவதை பதிவு செய்ய ரெடி.. மச்சினன் தனது மருமகன் மேடையில் நிற்பதை போட்டோ எடுக்க கேமராவோட ரெடி.

மகன் பெயர் கூப்பிடப்படுகின்றது. அசால்டா மேடை ஏறினான்.. மைக்கு முன்னாடி தைரியமா வந்து நின்றான்.. நின்றான்.. நின்றான்.. நின்னுக்கிட்டே இருந்தான். ம்ஹூம்.. வாயைத் திறக்கவே இல்லையே.. பின்னாடி... முன்னாடி எல்லாரும் சொல்லுடா சொல்லுடா என்று கத்தியது தான் மிச்சம்.. மேடையில் நின்று எல்லாரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றான்.. அப்புறம் வம்படியா இறக்கி விட்டுட்டாங்க.. முதல் கன்னி மேடைப் பேச்சு பேசப்படாமலே போச்சு.

போட்டோ எடுத்தாச்சு... சொல்லுடா சொல்லுடா என்ற இறைச்சலோடு வீடியோவும் எடுத்தாச்சு.. அப்புறம் மனைவியின் தோழிகள் எல்லாம் நம்மை கிண்டல் செய்தது வேற கதைன்னு வச்சுக்கங்க..

இப்போது வயது 4 . இதோ இந்த ஆண்டும் ரமழான் வந்தது. நேற்றுடன் முடிந்து விட்டது. இன்று பெருநாள் பண்டிகை.. இந்த ஆண்டும்.. போட்டிகள்.. அதே பேச்சுகள்.. மேடை எல்லாம் இருக்கும். நாங்களும் முயற்சியில் சற்று மனம் தளராமல் அவனை மேடை ஏற்ற தயாராகி விட்டோம். ஊரில் இல்லையென்றாலும் என்ன செய்யப் போகின்றானோ என்ற பதைபதைப்பு. இரவு தெரிந்து விடும். இப்போதும் கன்னி மேடையா? அல்லது கன்னிப் பேச்சா என்று..

இரவு அப்டேட் : மகனார் நல்லபடியாக மேடை ஏறி பேசி விட்டாராம். பேசியது இதுதான்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்ஹூவல்லாஹூ அஹத். அல்லாஹூஸ் ஸமத். லம்யலித் வலம் யூலத். வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்.

பொருள் : (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.


அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்








Saturday, November 28, 2009

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.

பதிவு எழுதி கண நாளாகி விட்டது. அவ்வப்போது பதிவு எழுத வற்புறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.. நம்மையும் இந்த உலகம் நம்புதேய்யான்னு இருக்கு.. ;-)))


3 நாட்களுக்கு பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாளுக்கான விடுமுறை. இப்போது தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். தியாகத் திருநாளில் தங்களால் இயன்றதை இறைவனுக்காக அறுத்து, ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் பங்கு செய்து கொடுக்க வேண்டும். தியாகத் திருநாளின் நாட்களில் மெக்காவில் உள்ள இடங்களில் ஹாஜிகள் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற இருப்பார்கள்.

இவை அனைத்தும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகங்களையும், அவர்களது குடும்பத்தினரின் தியாகங்களையும் நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளவை. ஒரு சராசரி மனிதனால் செய்ய இயலாத தியாகங்களை இப்ராஹீம் நபி அவர்கள் செய்தார்கள்.

இறைவனின் கட்டளைப்படி தனது மனைவியையும், மகன் இஸ்மாயிலையும், பாலைவனத்தில் அமைந்துள்ள, எந்த மனித சஞ்சாரமும் இல்லாத இடத்தில், தண்ணீர்,உணவு வசதிகள் இல்லாத இடத்தில் விட்டு விட்டு வந்து விடுகின்றார். இறைவன் அவரது மனைவியும், தனது குழந்தையுடன் அங்கே தங்க சம்மதித்து கணவனை அனுப்பி விடுகின்றார்.

குழந்தை பசியால் துடிதுடிக்க தாய் தண்ணீர் தேடி அந்த குன்றுகளில் ஓடித் தேடுகின்றார். குழந்தை பசியில் கால்களை உதைத்து அழ அங்கு இறைவனின் அருளால் ஊற்று ஒன்று உருவாகின்றது. இதைக் கண்ட அந்த தாய் அந்த ஊற்றை மண்ணால் அரண் கட்டி ஜம், ஜம் (நில், நில்) என்று சொல்ல அதுவே இன்று ஜம்ஜம் கிணறாகி மாறி தண்ணீரை வாரி வழங்கி வருகின்றது. அந்த தாயின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஹாஜிகள் ஜம்ஜம் தண்ணீர் அருந்துகின்றனர். இரு குன்றுகளுக்கு இடையில் ஓடுகின்றனர்.(ஸயீ)

தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி பறவைகள் வர, அவைகளைக் கண்டு பிரயாணிகளும் வர அந்த வனாந்திரம் புதிய நகரமாக உருவாகின்றது. அதுதான் மெக்கா. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்ராஹீம் நபி அவ்விடம் வர அங்கு ஒரு ஊரே இருக்கின்றது. ஆண்டுகள் பல கழிந்தாலும் அவர் வந்ததன் நோக்கம் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற... அது என்ன கட்டளை. மகனை நரபலி கொடுக்க வேண்டும் என்பதே.

தனது தந்தை சொன்னதைக் கேட்ட அந்த வாலிப மகன் இஸ்மாயில் உடனே தயாரிகின்றான். ஏனெனில் கட்டளை அனைவரையும் ரட்சிக்கும் இறைவனின் புறத்தில் இருந்து வந்ததாயிற்றே... பலி கொடுக்கும் நேரம் இஸ்மாயிலின் இடத்தில் ஒரு ஆடு பலி கொடுக்கப் படுகின்றது. இறைவன் இப்ராஹீம் (நபி) தனது கட்டளை நிறைவேற்ற துணிந்த சிறந்தவராக ஏற்றுக் கொள்கின்றான்.

இதனால் தான் தியாகத் திருநாளில் பலிப் பிராணி அறுத்து ஏழைகளுக்கு உணவுக்காக அளிக்கப்படுகின்றது. பலி கொடுக்கும் அனைவரும் நிச்சயமாக மனதில் கொள்ள வேண்டியது இதுதான்.
“அல்லாஹ்வை அதன் மாமிசமோ, இரத்தமோ சென்றடையாது. மாறாக உங்களிடம் உள்ள இறையச்சம்தான் சென்றடையும்”
திருக்குர்ஆன் 22:37 வசனம்


அந்த தியாகங்களின் உள் நோக்கம் முற்றிலும் இறை ஆற்றலுக்கு வழிப்பட்டு நடப்பது. இந்த தியாகத் திருநாளிலும் அத்தகைய ஒரு நோக்கத்தை மனதில் கொண்டு இறைவன் நமக்கு அளித்துள்ள அளப்பரிய கிருபைகளுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக மாற வேண்டும். உலக மக்கள் அனைவரிடமும் நல்ல பண்புடனும், அன்புடன் நடந்து கொள்ளவும் மனிதில் கொள்வோம்.




நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள். தியாகத் திருநாள் மூலம் நல்லவைகளை அடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

...

Sunday, July 26, 2009

வாழ்த்துக்கள் அகிலா!

அச்சில் நம் எழுத்துக்கள் வருவது என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். இந்த வார தினமலர் - வாரமலரில் சுட்டும் விழி என்ற பெயரில் எப்பவாவது (ஹிஹிஹி) எழுதும் சக பதிவர் சகோதரி அகிலா அவர்களின் கவிதை வெளி வந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள்!


சின்ன, சின்ன
தயக்கங்களுடன்
கலைந்து கிடந்த
என் நெற்றிப் பொட்டை
நீ சரி செய்த நாளில்
துவங்கிற்று
உனக்கும், எனக்குமான
பெயரிடப்படாத உறவு!


சரியா, தவறா...
நெறியா, பிழையா
எனும் எல்லா குழப்பங்களையும்
விழுங்கியது
உன் கள்ளமற்ற சிரிப்பு!

நியாமற்றதாய்
தோன்றினும்
நீண்டு கொண்டே
போகிறது

நம் நேசம்
வான் வெளி போல்...
காட்சிப் பிழை இது
கானல் சுகமென
உலகம் மறுப்பினும்
வானும் சுகமே!

உன்னோடு என்
வாழ்வும் சுகமே!


க. அகிலா, சென்னை.

நன்றி : வாரமலர்

Thursday, July 23, 2009

துர்காவுக்கு திருமண வாழ்த்துக்களும், எனக்கு வந்த சில விருதுகளும்...


முதலில் துர்கா விஸ்வநாத்துக்கு இனிமையான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். துர்கா விஸ்வநாத்?? யாருன்னு புரியாம இருப்பவர்களுக்கு ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.. சில ஆண்டுகளுக்கு முன் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஐடியா ஸ்டார் சிங்கர் என்ற பாடகர்களுக்கான போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பாடகர்களில் ஒருவர் தான் துர்கா விஸ்வநாத். போட்டியின் இறுதியில் இவரால் வெற்றி பெற முடியா விட்டாலும் தனது அழகிய கொஞ்சும் குரலில் பல பாடல்களைப் பாடி அசர வைத்தவர்.

அப்போட்டியில் இவர் என்னிஷ்டம் என விருப்பப் பாடலாக பாடிய “தும்பி வா தும்பக் குடத்தின்” பாடல் எனது விருப்பப்பட்டியலில் முதலில் உள்ள பாடல். என் செல்பேசியில் இருக்கும் இப்பாடல் மகிழ்ச்சியான, துக்கமான, எரிச்சலான, குழப்பமான எல்லா கணங்களில் என்னை வருடிச் சென்று இருக்கின்றது. சமீபத்தில் துர்கா விஸ்வநாத்துக்கு திருமணம் முடிந்து இருக்கின்றது. அவரது குரல் போலவே வாழ்வும் இனிமையாக அமைய வாழ்த்துகிறேன்.

தும்பி வா பாடல் யூ டியூபில் இருந்து...





இப்பாடலை செல்பேசியில் கேட்க 3GP பார்மேட்டில் பதிவிறக்க

இவர் பாடியவைகளை யூடியூபில் தேட இங்கு செல்லலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்து விருதுகள் நமக்கு வழங்கி கெளரவித்தவர்களுக்கு நன்றி நவிலல். இந்த பட்டாம்பூச்சி விருது சில மாதங்களுக்கு முன்னால் வலையுலகில் பிரபலமா இருந்தது. நிறைய பேர் தங்கள் பதிவிலும் ஓரங்களில் போட்டுக் கொண்டார்கள்.. ஆனா நமக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கல.. ஏன் கரப்பான் பூச்சி விருது கூட கிடைக்கல.. அதனால் சீச்சீ இந்த பழம் புளிக்கும்ன்னு விட்டாச்சு.. ஆனா இப்ப எங்க ஸ்வீடன் சுசி அக்கா அந்த விருதை நமக்கு கொடுத்து கெளரவிச்சு இருக்காங்க... நன்றி சுசி அக்கா!

அதே போல் இப்ப வலம் வரும் சுவாரஸ்யமான பதிவர் விருதை சகோதரி ஃபாயிஷா கொடுத்து இருக்காங்க.. நன்றி ஃபாயிஷா! இப்ப இந்த விருதை நாமலும் ஐந்து பேருக்கு தந்துடலாமுன்னு இருக்கேன். காசு, பண முடிப்பெல்லாம் தர முடியாது.. ஒன்லி பாசம் மட்டுமே விருது.



1. தேனியார் என்ற விஜயராஜா.. எங்க மாவட்டத்துக்காரர். அருமையா எழுதுவார். இப்ப ஆப்பிரிக்கா காட்டுக்குள் எங்கேயோ இருக்கார்ன்னு நினைக்கிறேன். இணைய தொடர்பு இல்லாததால் எழுதாம இருக்கார் போல... நல்ல சுவாரஸ்யமான எழுத்தாளர். அவருக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்கின்றேன்.

2. தமிழ் மகன்.. இணையத்தில் எழுதி வரும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான தமிழ் மகனுக்கு இவ்விருதை அளிக்கின்றேன். அழகான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுவதில் சிறந்தவர். கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவுக்கு சொந்தக்காரர்.

3. விக்னேஷ்வரன் - மலேசியாவில் இருந்து வலை பதியும் சகோதரர் விக்கி.. நல்ல தேர்ச்சியடைந்துள்ளார். ஒரு பதிவுக்கு அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை ஆச்சர்யப்பட வைக்கின்றது.

4. ஆயில்யன்... நம்ம சாதிசனம்.. கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் தொடர்ந்து செயலாற்றி வருகின்றார். இவரை வெறும் ஆயில்யன் என்பதை விட கவிஞர் ஆயில்யன் என்று அழைக்கலாமா என்று எங்கள் சங்கம் ஆய்வு செய்து வருகின்றது. ஏன்னு கேள்வி கேட்கக் கூடாது.. அப்படிக் கேட்டா எங்க மச்சான் கிரிதரன் சாப்பிடும் ஸ்ரீமதி சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம். (தங்கச்சியைக் கொடுத்து இருக்கோம்ல.. எங்க கலாய்த்தலை கேட்டுத் தான் ஆகோனும்.. ;-) )

5. தமிழன் கறுப்பி வழக்கம் போல் தம்பிக்கு ஒரு விருது கொடுத்தாச்சு... அசட்டையாக எழுதுவார். ஒரு இரவு முழுவதும் கடற்கரையில் நாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கனும் என்பது என் கனவு. அம்புட்டு சுவாரஸ்யமான ஆளு.. ஆனா முடியுமான்னு தெரியல.

இந்த பட்டியலில் மகளிருக்கு இடம் இல்லாமப் போனது வருத்தமே.. சுவாரஸ்யமான பலர் இருந்தாலும், அவர்களுக்கு ஏற்கனவே இதை யாராவது கொடுத்து இருக்காங்க.. அதனால் யாருக்கும் கொடுக்காமப் போக முடியாது என்பதால் பதிவுலகை விட்டுக் காணாமல் போன கோகிலவாணி, மற்றும் வித்யா கலைவாணி ஆகிய இரு சுவாரஸ்யமான பதிவர்களுக்கும் இவ்விருதை கொடுக்கின்றேன்.

Wednesday, May 13, 2009

பரிசல், ராமலக்ஷ்மி இன்னும் பலருக்கும் வாழ்த்துக்கள்!

இன்று வலையுலக நண்பரும் எழுத்தாளருமான அண்ணன் பரிசலாருக்கு பிறந்தநாள். அவருக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வால் பையன் சொன்னது போல் இந்த வயசிலும் இளமையுடன் சுறுசுறுப்பாக இருக்கும் யூத் ஐகான் பரிசலார் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வுடன் திகழ வாழ்த்துக்கின்றோம்... ;-))

*******************************************************

பரிசலாரின் சிறுகதை இந்தவார ஆனந்தவிகடனில் வருகின்றதாம். அதற்கும் ஒரு சிறப்பான வாழ்த்துக்கள்.

*******************************************************


பெங்களூரூவைச் சேர்ந்த கவிஞர் ராமலக்ஷ்மி அக்காவின் முதல் சிறுகதை அச்சு இதழான கலைமகள் மாத இதழில் வெளி வந்துள்ளது. இதுவரை அவரது அழகான கவிதைகள் மட்டுமே அச்சு இதழ்களில் வந்த நிலையில் முதன் முதலாக அவரது சிறுகதை கலைமகள் இதழில் வந்ததில் நாம் அனைவரும் பெருமை அடைகின்றோம். அச் சிறுகதையைப் படிக்கவும் ,வாழ்த்தவும் இங்கே செல்லவும்.
http://tamilamudam.blogspot.com/2009/05/50.html

அவரது முத்துச்சரம் இணையதளம் 50 பதிவுகளை தொட்டுள்ளது. தேர்ந்தடுத்த பதிவுகளால் முத்துக்கள் போல் கோர்க்கப்பட்ட சரமாக இருக்கும் முத்துச்சரம் மேலும் இது போல் பல படைப்புகளைக் காண வாழ்த்துகின்றோம்.

*******************************************************

சக பதிவர்கள் நர்சிம், மற்றும் அதிஷா ஆகியோரின் படைப்புகள் சென்ற வார ஆனந்த விகடனில் வெளி வந்துள்ளது. அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

*******************************************************

பதிவர்களின் கூட்டங்கள் பொதுவாக இணையம் தொடர்பானதாகவே இருக்கும். முதன் முறையாக ‘நல்ல தொடல்! கெட்ட தொடல்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் பாலியல் மற்றும் மனோத்துவ ரீதியான பாதிப்புகளைப் பற்றி அலசி ஆராந்து, கலந்துரையாடிய ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நடைபெற்றது.

ஆரோக்கியமான இந்நிகழ்ச்சிக்கு வித்திட்ட, ஒருங்கிணைத்த, நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றிகளும், வாழ்த்துக்களும்... :)

*******************************************************
மேற்க்குறிப்பிட்டவை அனைத்தையும் ஏனோ நாங்களே செய்தது போன்ற பூரிப்பையும், பெருமையையும் தந்தது. கொஞ்சம் இறுமாப்பு என்று கூட சொல்லலாம்... எங்களை எல்லாம் ஒரே நல்ல நேர்கோட்டின் கீழ் இணைய உதவிய இணைய உலகிற்கும், தமிழ் மணத்திற்கும் சிறப்பு நன்றிகள்.

*****************************************************

சரி.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. இன்னைக்கு நம்ம ஊர்ல தேர்தல்.ஓட்டுப்ப் போட்டாச்சா? நமக்கு இருக்கும் ஒரே ஜனநாயகக் கடமை அதுதான்.. எல்லாம் போய் எந்த சால்சாப்பும் சொல்லாம ஓட்டுப் போட்டுட்டு வாங்க... நல்லதே நடக்கும். ஓட்டுப் போட்டு விட்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!