Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Friday, March 27, 2009

கலவையான சிந்தனைகள் - 27-03-2009

பதிவுகளில் கதையாகவோ, கட்டுரையாகவோ எழுதுவதைக் காட்டிலும் கலந்து கட்டி அடிப்பதில் தான் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது. நண்பர்களுடன் பகிந்து கொள்வதைப் போன்ற உணர்வைப் பெற முடிகின்றது... ரொம்ப நாளாய் விட்டுப் போன கலவையான சிந்தனைகள் மீண்டும்...

************************************************************

ஊரில் இருந்து வந்ததில் இருந்து இப்ப தான் பதிவுகளை எழுதும் மனநிலைக்கு வந்து இருக்கேன். அதே சூட்டோடு ஒரு பதிவு எழுதினேன். சுவாரஸ்யமான பதிவுகளை எழுதுவது எப்படி? இதுதான் தலைப்பு. ஆனா அதைப் படித்த நம்ம பதிவுலக அண்ணன் ஒருத்தர் இந்த மாதிரி பதிவைப் போட்ட உன் பக்கமே வர மாட்டேன்னு சொல்லிட்டார். ஒரு பேரிளங் காதலர் கூட தல... ஏனிந்த கொல வெறி பதிவை எடிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டார். எனவே டிராப்ட்டில் போட்டாச்சு... கொஞ்ச நாள் கழிச்சு அது சாதாரணப் பதிவா தெரியும் போது வெளியிடலாம்.

**************************************************************

இரண்டு சிறுகதைகள் யூத் விகடனில் வந்தது மகிழ்ச்சியளிக்கின்றது. விகடன் தனது முகப்பில் அதற்கான சிறு இடத்தையும் கொடுத்து வைத்திருந்தது ஒரு உற்சாகத்தை அளித்தது. நல்லா இருக்கோ இல்லியோ நமக்கே ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது எனும் போது மகிழ்ச்சி தானே.எனவே தொடர்ந்து எழுதி இம்சிப்போம்.

**************************************************************

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக IPL போட்டிக்கு பாதுகாப்பு தர இயலாத காரணத்தால் போட்டிகள் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு பத்திரிக்கையில் வந்த கார்ட்டூன் துணுக்கை சக பதிவர் ஸ்டேடஸில் போட்டு இருந்தார்..
பொது ஜனம் 1 : IPL போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றி விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து இரண்டு நாளார் சரியான தூக்கம், சாப்பாடு கூட இல்ல

பொது ஜனம் 2: நாடாளுமன்ற தேர்தல் வருவதால் சரியா பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பதால் தான் மாத்தி இருக்காங்க

பொது ஜனம் 3 : தேர்தல்ன்னா அரசுக்கு செலவு. IPLன்னா வருமானம் தானே.பேசாம தேர்தலை தென் ஆப்பிரிக்காவுக்கு மாத்திட்டு IPL கிரிக்கெட்டை இந்தியாவில் நடத்தி இருக்கலாம்.

மூலம் : தினமணி

**************************************************************
சமீபத்தில் இங்கு தாயிஃப் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பில் தமிழ்,சிங்கள மக்களின் கலாச்சார ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்து, புத்த, கிறித்தவ, முஸ்லிம் தமிழ் மற்றும் சிங்களம் பேசக் கூடியவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இஸ்லாம் குறித்த ஒரு அறிமுக உரைக்குப் பின் பலவிதமான போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசளிப்பும் நடைபெற்றது. முகமது லாபிர் உள்ளிட்ட இலங்கையின் தூதரக உயரதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கல்ந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

கயிறு இழுக்கும் போட்டி, உறி அடித்தல், வாலி பால், சாக்கு ஓட்டம், இப்படி பல போட்டிகள் நடந்தன.... திருமணமானவர்கள் Vs திருமணமாகதவர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் திருமணமானவர்களே வெற்றி பெற்றோம். வீடியோ இணைத்துள்ளேன். நான் எங்க இருக்கோம்ன்னு கண்டுபிடிங்க..



http://www.youtube.com/watch?v=4z5oj5B8aFk



**************************************************************
வீட்டில் சினிமா, பாடல்கள், சீரியல் இவைகளுக்கு அனுமதி இல்லை. பாடலைக் கேட்டு டான்ஸ் ஆடினால் மகனுக்கு அடி தான் விழும். அருகில் இருக்கும் அக்கா மகள்கள், எதிர், பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடுவான். மண்ணிலும் தண்ணீரிலும் விளையாடுவது பிடித்தமானது... சில நேரங்களில் ஒரு பாடலை முணுமுணுப்பான்..ரொம்ப நாளாய் புரியவில்லை.. அப்புறம் தான் விளங்கியது.

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ளே
தவளை ரெண்டும் பொந்துக்குள்ளே
ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி
கொட்டிக் கிடக்குது ஜாங்கிரி
கொல்லைப் பக்கம் போகாதே
ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி

மகன் பிற குழந்தைகளுடன் விளையாடும் ring a ring a roses.. வீடியோ
http://ibnujinnah.blogspot.com/2009/03/ring-ring-roses.html

Wednesday, March 25, 2009

யூத் விக்டனின் வந்த சிறுகதை - அப்பாவின் கடன்


காலை வெயில் மெலிதான உஷ்ணத்தை முகத்தின் மீது அடித்துக் கொண்டிருந்தது. சென்னையில் இருந்து இரவு முழுவதும் பிரயாணித்து இருந்தாலும் ஊர் நெருங்க நெருங்க ஏனோ மனம் நிலை இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு இருந்ததால் தூக்கம் காணாமல் போய் இருந்தது. கைகளும், கால்களும் இயந்திர கதியில் இயங்கி காரை செலுத்திக் கொண்டு இருந்தன.
பெரியகுளத்தைக் கார் கடந்து இருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் ஊரை அடைந்து விடலாம். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அப்பாவை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்காக ஊருக்கு வந்தது. இடையில் அப்பா மட்டுமே விசேஷங்களுக்கு சென்று வந்து கொண்டு இருந்தார்... இப்போது மீண்டும்.. அப்பா என்றதுமே கண்கள் பனிக்கின்றன. எப்படிப்பட்ட மனிதன்...!!!

அதோ அந்த மலையின் மீது தானே அந்த பெண்கள் கல்லூரி இருந்தது. மனம் சோகமாக இருந்தாலும் இனம் புரியாத குறுகுறுப்பு எட்டிப் பார்ததது. காரை கல்லூரி பஸ் ஸ்டாப் முன் இருந்த டீக்கடை முன் நிறுத்தினேன். பல தடவைகள் நின்றும், அமர்ந்தும் வெட்டியாய் பொழுதைக் கழித்த டீக்கடை. கடையில் ஏதும் தெரிந்த முகம் இல்லை. காலை வேலையாதலால் சில பெருசுகள் மட்டும் பேசிக் கொண்டு இருந்தன.

எனக்குப் பிடித்த டீயும், வடையும் சொல்லி விட்டு எட்டி நடந்தேன். நண்பர்களுடன் அமர்ந்து கொட்டமடித்த அந்த பேன்ஸி ஸ்டோர் தென்பட்டது.. பெயர் மாறி இருந்தது. வாழ்க்கையின் ஓட்டத்தில் என்னன்னவோ மாறி இருக்கின்றன.

டீ, வடையை முடித்து விட்டு மீண்டும் காரை செலுத்த, SDA பள்ளி அருகில் ஒருவர் தனது மகனை வைத்துக் கொண்டு சைக்கிளில் ஓரமாக வந்து கொண்டு இருந்தார். மீண்டும் அப்பாவின் நினைவு ஆக்கிரமித்தது. ஊரில் இருந்து பெரியகுளத்திற்கும், தேனிக்கும் அப்பாவுடன் பலமுறை இது போல் சைக்கிளிலேயே சென்று இருக்கிறேன்.

அப்பாவுக்கு என் மீது கொள்ளைப் பிரியம். மூத்த மகன்கள் மூவரும், இரண்டு மகள்களும் இருந்தாலும் என் மீதே அவருக்கு விருப்பம் அதிகம். ஏனென்று மட்டும் தெரியவில்லை. கடைசி காலத்தில் கடைக் குட்டியாய் பிறந்ததால் இருக்கலாம்.. சில மாதங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

“என்னால உனக்கு ஒன்னுமே பிரயோசனமில்லைடா”

”என்னப்பா இதெல்லாம்... நீங்க ரொம்ப நல்லவரா வாழ்ந்து இருக்கீங்க... யாரையும் ஏமாத்தலை... துரோகம் பண்ணலை. எங்களை எல்லாம் நல்லவர்களா வளர்த்து இருக்கீங்க..இப்பவும் நிம்மதியா எங்க கூடவே இருக்கீங்க..வேற என்னப்பா வேணும்?”

“இல்லைடா..என்னால் உன்னை நல்லா படிக்க வைக்க முடியலையே... மத்தவனெல்லாம் சரியா படிக்காத போது நீ மட்டும் தான் நல்லா படிச்ச.. உன் ஒருத்தனை மட்டும் கூட என்னால நல்லா படிக்க வைக்க முடியலடா... எனக்கு இதை எப்ப நினைச்சாலும் தாங்க முடியாத மன அழுத்தமா இருக்குடா”

“அப்பா... அதையெல்லாம் நினைக்காதீங்க.. இப்ப நாம எல்லாம் நல்லாதானே இருக்கோம். நல்ல வசதி இருக்கு.. கார்,வீடுன்னு நல்லா இருக்கோம். கவலைப்படாதீங்கப்பா”

ஆனாலும் அப்பாவின் முகத்தில் ஒரு திருப்தியின்மையின் ரேகைகளே தெரிந்தன.

சில நாட்களுக்கு முன் அப்பாவுக்கு உடல் நலமில்லை என்றாகியதும் தனக்குத் தானே புலம்ப ஆரம்பித்து இருந்தார். சுய பச்சாதாபமும், என் மீதான பாசமும் அவரை ஏனோ உருக்கிக் கொண்டு இருந்தது. தனது உயிர் தமது கிராமத்தில் தான் பிரிய வேண்டும் என்று சதா சொல்லிக் கொண்டே இருந்ததால் சொந்த வீட்டுக்கு அனுப்பி இருந்தேன்.

அப்பாவை விட்டு பிரியாமலேயே இருந்து விட்டு, திடீரென பிரிந்த என் நிலையும் நிலை கொள்ளாமலேயே தவித்தது. அப்பாவின் உடல் நிலை மோசம் என்றதும் உடனே கிளம்பிவிட்டேன். பள்ளி இறுதித் தேர்வுகள் நடக்கின்றன என்பதால் மனைவியும், மகளும் சென்னையில்

கார் லெட்சுமிபுரம் தாண்டி கிராமத்துக்கான ஒற்றையடிச் சாலையில் பிரயாணித்துக் கொண்டிருந்தது. நல்ல நீர் வளத்துடன் இருந்த நிலங்கள் காய்ந்து போய் இருந்தது மனதை பிசைந்தது. கார் ஊருக்குள் நுழையும் போது ஊரில் செழிப்பு தெரிந்தது. நிறைய வீடுகள். அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருக்கும் மாணவ, மாணவிகள்.ஊருக்குள் கார் வந்தாலே காரின் பின்னால் ஓடும் நாட்கள் நினைவுக்கு வந்தது. இன்று பல வீடுகளின் முன்னும் மாருதிகளும், டாட்டா வகைக் கார்களும் அமைதியாக நின்று கொண்டு இருந்தன.

வீட்டின் நுழைவாயிலேயே அத்தை தெரிந்தார். கண்டதும் கண்ணில் டக்கென்று கண்ணீர் கட்டுவது தெரிந்தது. வரவேற்று விட்டு

“அப்பாவின் நிலை மோசமா இருக்கு.. மூணு நாளா ஒன்னும் சரியா சாப்பிடலை. அப்பப்ப பால் மட்டும் தான்..டாக்டரும் வயசாயிடுச்சு..ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டார்” என்று தனது கவலையை வெளிப்படுத்தினாள்.

அப்பாவை கட்டிலில் பார்க்கும் போதே நெஞ்சை பிசைந்து கொண்டு வந்தது. கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து நலம் விசாரித்தேன். மருமகள், பேத்தியை தேடும் ஏக்கம் தெரிந்தது.

மாலையில் கொஞ்சம் நன்றாக இருந்தார். என் கையாலேயே பால் அருந்தினார். இருவரும் பழைய கதைகளை பேசினோம். நடுங்கும் குரலில் மெதுவாகப் பேசிக் கொண்டு இருந்தார். பேச்சினூடே எனது புதிய திட்டத்தை தெரிவித்தேன். நமது கிராமத்தில் இருக்கும் மேற்கொண்டு படிக்க இயலாத ஏழை மாணாக்கர்களுக்கு அவர்களது மேற்படிப்பை ஊர்ஜிதம் செய்யும் வண்ணம் அமையப் போகும் டிரஸ்ட் குறித்தும், அதன் வருவாய் ஆதாரங்கள் குறித்தும் விளக்கினேன். இனி நம் கிராமத்தில் யாரும் வசதி குறைவால் மேற்கொண்டு படிக்க இயலாமல் போக விட மாட்டேன் என்ற போது அவரது கண்களில் புதிய ஒளி தெரிந்தது. பேச்சில் தெம்பும், முகத்தில் ஒரு புது வித பெருமிதமும் பார்க்க முடிந்தது. அதே மகிழ்ச்சியில் உறங்கச் சென்றோம்.

காலையில் அத்தையின் அழுகுரலே எழுப்பியது... அப்பா நம்மை விட்டு சென்று விட்டார் என்று சொன்னதும் திடுக்கிட்டு சில வினாடிகளில் சகஜ நிலைக்கு வந்தேன். எழுந்து வேகமாக அப்பாவின் படுக்கைக்கு சென்று பார்த்த போது முகத்தில் இரவு கண்ட அதே பூரிப்புடன் இறந்து இருப்பதைக் கண்டதும் ஏனோ அழுகை மட்டும் வரவில்லை.

பின் குறிப்பு : யூத் விகடனில் வெளியிட்டு, விகடன் இணைய தளத்தின் முகப்பிலும் சில தினங்கள் வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு நன்றி!