Showing posts with label தேர்தல் 2009. Show all posts
Showing posts with label தேர்தல் 2009. Show all posts

Friday, June 5, 2009

ஓட்டுப் போட விமான சீட்டும், பணமும், விடுமுறையும், லெபனான் தேர்தலும்

நம்ம ஊர்களில் இடைத்தேர்தல்களில் ஓட்டுப் போட பணத்தை அள்ளி விடுவது வழக்கம்.. அது மெல்ல மெல்ல மறுவி எல்லா தேர்தல்களிலும் பணம் தண்ணீராக செலவிடப்படுகின்றது. அதிகபட்சமாக ஓட்டுக்கு 5000 வரை தரும் அளவுக்கு ஜ(ப)ணநாயகம் வளர்ந்து உள்ளது.. அதே போல் ஊரை விட்டு வெளியூரில் இருப்பவர்களை ஓட்டுப் போடுவதற்காக அழைத்து வருவதும் நடக்கின்றது.

இப்போது நான் குறிப்பிடுவது வேறு வகையானது. தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக விமான டிக்கெட், சம்பளத்துடன் விடுமுறை, அலவுன்ஸ் எல்லாம் வழங்கப்படுகின்றது இங்கு.. நான் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் மறைந்த லெபனான் நாட்டின் பிரதமர் ரஃபீக் ஹரீரி அவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் சிரிய ஆதரவு ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பின் அவரது மகனும் எங்கள் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான சாத் ஹரிரி (Saad Hariri) அரசியலைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் ஜூன் 7 ந்தேதி லெபனானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் சாத் ஹரிரியின் கட்சியும் போட்டியிடுகின்றது. அத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சவுதி அரேபியா முழுவதும் எங்கள் நிறுவனத்தில் பணி புரியும் லெபனானிகள் லெபனான் செல்கின்றனர். ஒரு வார காலம் விடுமுறை, விமான சீட்டு, Out Station allowance அனைத்தும் வழங்கப்படுகின்றது. அத்தோடு இந்த ஒரு வார காலம் பணியில் இருந்து வேலை நிமித்தம் சென்றதாகவே கணக்கிலும் எடுத்துக் கொள்ளப்படுமாம்.

இத் தேர்தலில் March 14 Movement என்ற பெயரில் (Future Movement கூட்டணி) மேற்கத்திய ஆதரவு அணியில் சாத் ஹரிரியும், March 8 Movement என்ற பெயரில் சிரிய, ஈரானிய ஆதரவு அணியும் போட்டியிடுகின்றன. சிரியாவின் இராணுவ ஆதிக்கத்தில் முற்றிலும் சிதைந்து போய் இருக்கும் அழகான தேசமான லெபனானை மீண்டும் தன் ஆதிக்க்கத்தில் வைக்க சிரியா March 8 அணியை வெற்றி பெற வைக்க சிரியா முயற்சிக்கின்றது.




ஹிஸ்புல்லாஹ் ஆதரவு அர்ஸ்லான் தலால்

March 14 Movement அணி வெற்றி பெற்றால் தான் ஜனநாயகம் தழைக்கும் என்றும், மேலும் லெபனனை மறு புணர் நிர்மானம் செய்ய உலக நாடுகள் உதவியும் செய்யும் என்றும் அமெரிக்கா சூசகமாக அறிவித்துள்ளது.



ரஃபீக் ஹரிரியும், சாத் ஹரிரியும்

Saad Hariri தலைமையிலான March 14 Movement வெற்றி பெறுவது எங்க நிறுவனத்திற்கு நல்ல சாதகாமான நிலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Wednesday, May 13, 2009

பரிசல், ராமலக்ஷ்மி இன்னும் பலருக்கும் வாழ்த்துக்கள்!

இன்று வலையுலக நண்பரும் எழுத்தாளருமான அண்ணன் பரிசலாருக்கு பிறந்தநாள். அவருக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வால் பையன் சொன்னது போல் இந்த வயசிலும் இளமையுடன் சுறுசுறுப்பாக இருக்கும் யூத் ஐகான் பரிசலார் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வுடன் திகழ வாழ்த்துக்கின்றோம்... ;-))

*******************************************************

பரிசலாரின் சிறுகதை இந்தவார ஆனந்தவிகடனில் வருகின்றதாம். அதற்கும் ஒரு சிறப்பான வாழ்த்துக்கள்.

*******************************************************


பெங்களூரூவைச் சேர்ந்த கவிஞர் ராமலக்ஷ்மி அக்காவின் முதல் சிறுகதை அச்சு இதழான கலைமகள் மாத இதழில் வெளி வந்துள்ளது. இதுவரை அவரது அழகான கவிதைகள் மட்டுமே அச்சு இதழ்களில் வந்த நிலையில் முதன் முதலாக அவரது சிறுகதை கலைமகள் இதழில் வந்ததில் நாம் அனைவரும் பெருமை அடைகின்றோம். அச் சிறுகதையைப் படிக்கவும் ,வாழ்த்தவும் இங்கே செல்லவும்.
http://tamilamudam.blogspot.com/2009/05/50.html

அவரது முத்துச்சரம் இணையதளம் 50 பதிவுகளை தொட்டுள்ளது. தேர்ந்தடுத்த பதிவுகளால் முத்துக்கள் போல் கோர்க்கப்பட்ட சரமாக இருக்கும் முத்துச்சரம் மேலும் இது போல் பல படைப்புகளைக் காண வாழ்த்துகின்றோம்.

*******************************************************

சக பதிவர்கள் நர்சிம், மற்றும் அதிஷா ஆகியோரின் படைப்புகள் சென்ற வார ஆனந்த விகடனில் வெளி வந்துள்ளது. அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

*******************************************************

பதிவர்களின் கூட்டங்கள் பொதுவாக இணையம் தொடர்பானதாகவே இருக்கும். முதன் முறையாக ‘நல்ல தொடல்! கெட்ட தொடல்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் பாலியல் மற்றும் மனோத்துவ ரீதியான பாதிப்புகளைப் பற்றி அலசி ஆராந்து, கலந்துரையாடிய ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நடைபெற்றது.

ஆரோக்கியமான இந்நிகழ்ச்சிக்கு வித்திட்ட, ஒருங்கிணைத்த, நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றிகளும், வாழ்த்துக்களும்... :)

*******************************************************
மேற்க்குறிப்பிட்டவை அனைத்தையும் ஏனோ நாங்களே செய்தது போன்ற பூரிப்பையும், பெருமையையும் தந்தது. கொஞ்சம் இறுமாப்பு என்று கூட சொல்லலாம்... எங்களை எல்லாம் ஒரே நல்ல நேர்கோட்டின் கீழ் இணைய உதவிய இணைய உலகிற்கும், தமிழ் மணத்திற்கும் சிறப்பு நன்றிகள்.

*****************************************************

சரி.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. இன்னைக்கு நம்ம ஊர்ல தேர்தல்.ஓட்டுப்ப் போட்டாச்சா? நமக்கு இருக்கும் ஒரே ஜனநாயகக் கடமை அதுதான்.. எல்லாம் போய் எந்த சால்சாப்பும் சொல்லாம ஓட்டுப் போட்டுட்டு வாங்க... நல்லதே நடக்கும். ஓட்டுப் போட்டு விட்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Friday, May 8, 2009

எங்கள் ஓட்டு ‘ஈழத் தாரகை’ அம்மா(ஜெ.)விற்கே!... வாசகர் கடிதம்.

கடந்த சில வாரங்களாக பதிவு ஏதும் எழுதவில்லை. ஏன் பதிவு எழுதவில்லையென்று கேட்டு, விசாரித்து இதுவரை 18 மொழிகளில் 14,28,332 கடிதங்கள் வந்த கடிதங்களைப் பற்றி இங்கு பேச வேண்டிய அவசியம் இல்லா விட்டாலும் 14,28,333 வது கடிதமாக கூட்டுத் தொகை 9 ஆக வந்த ஒரு கடிதத்தை உங்களுக்கு அப்படியே அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

திமுக அடிவருடி தமிழ் பிரியன் அவர்களுக்கு,


வருகின்ற 2009 மே 13 ந்தேதி இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள சூழலில் உங்களது பொன்னான வாக்குகளை தமிழக மக்களின் ஒரே இறுதி நம்பிக்கை ஜெ.விற்கு அதிமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடும்படிகேட்டுக் கொள்கின்றோம்.

அம்மா... இந்த பெயரைச் சொன்னதும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் அம்மா ஜெ. அவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். அன்றும், இன்றும், என்றும் ஈழ மக்களின் மேல் அக்கறை கொண்டுள்ள அம்மா அவர்கள் தற்போதைய தேர்தலுக்குப் பின் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

அதன்படி தேர்தல் முடிந்ததும் அம்மாவிடம் இருக்கப் போகும் 40 எம்.பி சீட்டுக்களை வைத்து அம்மா இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பார். அம்மாவின் பாசத்திற்குரிய ஒருவர் மட்டுமே இனி இந்தியாவில் பிரதமராக முடியும் என்ற தலையெழுத்து அமையும்.



புதிய இந்தியத் தலைமை அம்மாவின் காலடியில் அமைந்ததும், உடனே இந்திய ராணுவம் இலங்கையை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் களம் இறக்கப்படும். முழு இலங்கையும் இந்தியாவிம் காலடியில், அம்மாவின் ஆணைக்காக காத்திருக்கும். அம்மா ஆணையிட்டால் முச்சந்ந்தி முனுசாமி கூட பிரதமர் நாற்காலியில் அமர முடியும்.

அவ்வாறு அம்மாவின் காலடியின் கீழ் மத்திய அரசு அமைந்ததும், அம்மாவின் முதல் செயல்பாடே இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்புவது தான். இலங்கையில் சரிவை சந்தித்து வரும் விடுதலை போராட்ட வீரர்களுடன் இந்திய ராணுவம் இணைந்து முழு இலங்கையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அம்மா ஏற்பாடு செய்வார்கள். ராஜபக்‌ஷே சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அம்மாவால் அடைக்கப்படுவார்கள்.

இலங்கையில் ஜனாதிபதியாக மிஸ்டர் கிளீன் ஓ.பன்னீர்செல்வத்தை அம்மா நியமிக்கப்பார். அம்மாவால் தேசிய தலைவர், இலங்கையின் இராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவார். இளைய தளபதி கருணாவை, ஐரோப்பா கண்டத்திற்கான இலங்கைத் தூதராக நியமித்து எங்கிருந்து அடிவாங்கிக் கொண்டு வந்தாரோ அங்கேயே சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்க அம்மா வழி செய்வார்கள்.

இலங்கையில் கிழக்கு மண்டலத்திற்கு ரவுப் ஹக்கீமையும், வடக்கு மண்டலத்திற்கு பிள்ளையானையும் முதல் மந்திரியாக நியமித்து அம்மா அழகு பார்ப்பார்கள். அம்மாவின் ஆசியால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வெறும் 50 ரூபாயில் இரயில் பயணம் செய்ய சட்டம் இயற்றப்படும். A9 பாதை வழியாக செல்லும் தமிழர்களுக்கு எந்த சோதனையும் செய்யாமல் அம்மா பார்த்துக் கொள்வார்கள்.மலையக மக்களின் வசதிக்காக அனைத்து போகுவ்ரத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். அங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு முழு வரி விலக்கும், மானியமும் வழங்கப்படும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அம்மா ஏற்படுத்திய ஒற்றுமையைக் குலைக்க அம்மாவின் எதிரி அரசான மைனாடிரிட்டி திமுக அரசு முயற்சி செய்த காரணத்தால் அவ்வாட்சி கலைக்கப்படும். ஏழைகளின் உற்ற தோழி அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும். ஈழம் மற்றும் தமிழக மக்களிடையே உள்ள உறவை பிரிக்கவே சேது சமுத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை அம்மா அவர்கள் உணர்ந்துள்ளார்கள். எனவே மைனாரிட்டி கருணாந்தி அரசால் ஆழம் செய்யப்பட்ட சேது சமுத்திரம் முழுவதும் மணலால் நிரப்பட்டு இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே பஸ், இரயில் போக்குவரத்து அம்மாவால் விடப்படும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 90 களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கப்படும். அவர்களின் பழைய உடைமையான அவர்களின் வீடு, நிலம், வியாபாரம் அனைத்தும் அம்மாவின் பொற்கரங்களால் மீண்டும் வழங்கப்படும் . ஈழத்தில் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச உரம் போன்றவை அம்மாவின் கட்டளையின் கீழ் வழங்கப்படும். கரும்புக்கு டன்னுக்கு 10,000 ரூபாயும், நெல்லுக்கு கிலோவுக்கு 50 ரூபாயும் அம்மாவின் ஒப்புதலின் கீழ் வழங்கப்படும்.

புலம் பெயர்ந்து வறுமையில் வாடும் ஈழத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விரும்பினால் இலவசமாக வீடும், 5 ஏக்கர் நிலமும், 10 லட்சம் ரூபாயும் அம்மாவின் கருணையால் வழங்கப்படும்.

இலங்கைக்கான ஐ.நா. தூதராக வைகோவும், இந்தியத் தூதராக ராமதாஸூம் அம்மாவால் நியமிக்கப்படுவார்.

மேற்கண்ட நன்மைகளை செய்ய அம்மா முடிவு செய்து இருப்பதால் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுக்களை அதிமுகவின் கூட்டணிக்கு தரும் படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் ஈழத்தில் நீதியை நிலை நாட்டி தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கித் தந்து, ஈழ மக்களின் மனதிலும், சரித்திர புத்தகங்களிலும் நீங்கா இடம் பிடிக்கப் போகும் அம்மாவின் சீரிய பணியைப் பாராட்டி பெரியார் புத்தகங்களின் காவலர், கல்வி நிறுவனங்களின் தளபதி தமிழினத்தின் இளைய தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் அம்மாவுக்கு ஈழத் தாரகை என்ற பட்டத்தை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

வாழ்க அம்மா! வளர்க அதிமுக! ஓங்குக எம்.ஜி.ஆர் புகழ்!

இவண்
தலையைச் சொறிய எரியும் கொள்ளியைப் பயன்படுத்துவோர் சங்கம்.
Pirates of graveyard Nager AIADMK கிளை
Somalia.

டிஸ்கி 1 : கடிதத்தை படித்து விட்டு இது மண்டபத்தில் எழுதியது என்று பின்னூட்டம் போட்டால், அவர்கள் வைகோ விடம் தேம்பி தேம்பி முந்தானையில் மறைந்து அழுவது எப்படி என பயிற்சி அளிக்க அனுப்பப்படுவார்கள்.

டிஸ்கி 2 : மண்டபம் என்றால் என்ன? இராமேஸ்வரம் பக்கத்தில் இருக்கும் ஊரா? என்று கேட்பவர்கள் சில வினாடிகளில் நிறம் மாறுவது எப்படி என்று பயிற்சி எடுக்க மருத்துவர் ஐயாவிடம் அனுப்பப்படுவார்கள்.

படம் நன்றி : கீற்று இணைய தளம்

Monday, March 30, 2009

ஏது இந்த மனித நேய மக்கள் கட்சி - வரலாற்று அலசல்

மனித நேய மக்கள் கட்சி! இன்று செய்திகளில் அடிபட்டுக் கொண்டு இருக்கும் ஒரு கட்சி. திமுக கூட்டணியில் ஒரு மக்களைவை தொகுதி கொடுக்கப்பட்டும் கண்டிப்பாக 2 மக்களவை, ஒரு மாநிலங்களவை வேண்டும் என்று பேச்சு வார்த்தையில் இருக்கின்றது என்ற செய்திகளைப் பார்க்க முடிகின்றது. இந்த பெயரையே பலரும் கேள்விப்படாத நிலையில் இவர்களுக்கு எப்படி 2 சீட் ஒதுக்கித் தர முடியும்..அதுவும் திமுக கூட்ட்ணியில் என்ற கேள்விகள் பரவலாக எழுகின்றன. மனித நேய மக்கள் கட்சி பற்றிய ஒரு அறிமுகமே இப்பதிவு.

இதற்கு முதலில் கொஞ்சமா ப்ளாஸ்பேக்களைப் பார்த்தால் புரியும். சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் லீக் தான் முஸ்லிம்களின் ஏகபோக பிரதிநிதிகளாக இருந்தனர். காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு நாற்காலிக்காக அடித்துக் கொண்ட சண்டையில் முஸ்லிம் லீக் சிதறுண்டு போனது. அப்துல் சமது, அப்துல் லத்தீப் என பிற கழகங்களில் மறைவில் பதவி சுகம் அனுபவித்தனர். அவர்களுக்குப் பிறகு இன்னும் பல பிரிவுகளாக பிரிந்து சென்று விட்டனர். இது முஸ்லிம் லீக்கின் கதை.

1990 வரை முஸ்லிம்களிடன் அரசியல் விழிப்புணர்வு என்பதே சுத்தமாக இல்லை எனலாம். 1992 பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்ந்து கிடந்தது. தமிழகத்திலும் இதன் தாக்கம் இருந்தது. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்னும் அளவுக்கு நிலைமை முற்றியது. நிறைய பேர் தீவிரவாத குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டனர். இச்சூழலில் முஸ்லிம் லீக் சமுதாய மக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்கள் நாற்காலிகளைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும் விழிப்புடன் இருந்தன. இதனால் மக்கள் முழுமையாக முஸ்லிம் லீக்கள் மீது விரக்தி அடைந்தனர்.

இந்த நேரத்தில் தான் சில இஸ்லாமிய தலைவர்கள் முஸ்லிம் அமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம் (இந்து முண்ணனி போல) என்ற அமைப்பை நிறுவ முயற்சித்தனர். அதில் இன்றைய PJ வும் இருந்தார். முஸ்லிம்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு அதற்கு சிதம்பரத்தைச் சேர்ந்த ஒருவரையும் தலைவராக தேர்தெடுத்தனர். அப்போதைய போலிஸ் கெடுபிடியில் பயந்து போய் அத்தலைவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து PJ உள்ளிட்டோர் தொடர்ந்து இந்த அமைப்பை நடத்தி வந்தனர்.

அதன் பின்னர் மீண்டும் 1995 ல் புதிய அணி ஒன்று உருவானது. குணங்குடி ஹனிபா, பி.ஜெயினுலாபுதீன்,அலாவுதீன்,உள்ளிட்ட தலைவர்கள் கூடி புதிய அமைப்பு நிறுவ வேண்டும் என்று தீர்மானித்தனர். ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ் போண்றோரும் இதில் அப்போது இணைந்தனர். குணங்குடி ஹனிபாவை நிறைய பேருக்கு தெரியாது. தமிழ்க்குடி தாங்கி அய்யா டாக்டர் ராமதாஸ் அரசியல் கத்துக்குட்டியாக இருந்த போது உடன் இருந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருந்தவர் என்றால் பார்த்துக் கொள்ளவும். ( மருத்துவர் அய்யா குணங்குடி ஹனிபா, பழனி பாபா எல்லாரையும் மறந்து ஏப்பம் விட்டது கிளைக் கதை). ஜவாஹிருல்லாஹ் சிமி அமைப்பில் மும்முரமாக இருந்தவர். அந்நேரத்தில் பாக்கர் சிறையில் இருந்தார்.

அவ்வமைப்பிற்கு என்ன பெயர் சூட்டுவது என்று ஆலோசித்த போது குணங்குடி ஹனிபா தாம் பதிவு செய்து வீணாக இருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரைக் கொடுத்து உதவினார். 1995 ஆகஸ்ட்டில் த.மு.மு.க உருவானது. அதை அடுத்து மக்களிடையே தமுமுகவை எடுத்துச் செல்லும் முயற்சி தீவிரமாக அரங்கேறியது. ஏற்கனவே தவ்ஹீத் இஸ்லாமிய பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் பிரபலமாக இருந்த PJ தமுமுகவின் அமைப்பாளராகவும் இருந்தார். அவர் தமுமுக பிரச்சாரப் பணிக்கு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டார். தமிழகம் முழுவதும் ஏற்கனவே இருந்த தவ்ஹீத் அமைப்பினர் தமுமுகவில் முழு மூச்சாக இறங்கினர்.

1997 ல்கோவையில் கலவரம் ஏற்ப்பட்டது. அதில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களின் சொத்துக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் முஸ்லிம்களிடம் அரசியல் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்தது. 1999 ல் சென்னை மெரினா கடற்கரையில் வாழ்வுரிமை மாநாடு என்ற ஒரு மாநாடு தமுமுக வால் நடத்தப்பட்டது. இதில் செல்வி.ஜெயலலிதா அவர்களும் கலந்து கொண்டது மக்களை தமுமுகவினை திரும்பிப் பார்க்க வைத்தது.

2003 ல் தஞ்சையில் முஸ்லிம்களில் பெரும் பேரணி தமுமுகவால் நடத்தப்பட்டது. பெருந்திரளான முஸ்லிம்கள் இதில் பங்கெடுத்தனர். இந்நிலையில் PJ தனது தவ்ஹீத் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வந்ததால் புரோகித அடிப்படையிலான முஸ்லிம்கள் தமுமுகவை ஒரு சார்பான அமைப்பாக பார்க்கும் நிலை இருந்தது. இது தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோருக்கு உறுத்தலாக இருந்தது.

இதனை அடுத்து சிலபல டிராமாக்களுக்கு (பெருங்கதை அது..) PJ விலகிச் செல்ல தமுமுகவில் சில சுணக்கம் நிலவியது. 2006 தேர்தலில் ஒரு புதிய சூழல் நிலவியது. அதாவது முஸ்லிம்களிடம் தனி இட ஒதுக்கீடு என்ற கோஷம் வலுவாக இருந்தது. இது குறித்து தமுமுக, TNTJ உள்ளிட்டவை மக்களை பிரச்சாரங்கள் மூலம் தெளிவாக்கி வைத்து இருந்தனர். TNTJ அம்மா ஏற்படுத்திய இட ஒதுக்கீடு ஆராயும் ஆணையத்திற்காக அம்மாவிடம் தஞ்சம் புகுந்தது.

தமுமுகவிற்கு ஜெயலலிதா மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் 1999 வாழ்வுரிமை மாநாட்டில் அவர் “இனி BJP உடன் எப்போதும் கூட்டு வைக்க மாட்டேன்” என்று மெரினாவில் வைத்து கூறி இருந்தார். ஆனால் மீண்டும் BJP யுடன் கூட்டு சேர்ந்து விட்டிருந்தார். எனவே தமுமுக திமுக அணியுடன் சேர்ந்தது. அதன் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவிற்கு கிடைக்க பாடுபட்டனர்.

இத் தேர்தலிலேயே தமுமுக போட்டியிட முயற்சி செய்தது. வாணியம்பாடி, மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் போட்டியிட எத்தனித்தது. ஆனால் கடைசி நேரக் குளறுபடியில் வாணியம்பாடி கைவிட்டுப் போனது. பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் துபாயைச் சேர்ந்த பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட (உண்மை இறைவனுக்குத் தெரியும்) ஒருவரை நிறுத்த முயற்சி செய்தனர். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தில் கோபமடைந்த கலைஞர் திமுகவைச் சேர்ந்த மைதீன்கானை வேட்பாளராக அறிவித்தார். அவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

MLA ஐப் பறித்துக் கொண்டாலும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை தமுமுகவிற்கு கலைஞர் வழங்கினார். தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அப்பதவிக்கு வந்தார். இந்து அறநிலையைத் துறையைப் போல் வக்ஃப் வாரியமும் பல கோடி சொத்துக்களை பராமரிக்கக் கூடியது என்பதால் தமுமுகவின் வளர்ச்சிக்கு தடை ஏதுமில்லாமல் போனது. மசூதிகளின் நிர்வாகிகளையே கண்காணிக்கும் அதிகாரம் உள்ள அமைப்பு என்பதால் சுலபமாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு உள்ளும் தமுமுக நுழைந்தது.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்ததும் தமுமுகவின் இடைவிடாத முயற்சிகளுக்கு கிடைத்த பலன் என்று சொல்லலாம்.

சமீபத்தில் பிப்ரவரி 2009 ல் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடும் வகையில் மனித நேய மக்கள் கட்சி என்ற புதிய அமைப்பை தமுமுக நிறுவியது. தாம்பரத்தில் திமுகவின் ஆசியுடன் நடந்த பொதுக் கூட்டத்தில் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கபட்ட வேகத்திலேயே குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் பேச்சு வார்த்தை உள்ளது.

கொசுறு செய்தி : ஏன் மனித நேய மக்கள் கட்சி??? தமுமுக என்ற பெயரே பரவலாக மக்களிடம் அறிமுகமானது தானே என்ற கேள்வி உள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை பதிந்து வைத்திருந்த குணங்குடி ஹனிபா கடந்த 12 ஆண்டுகளாக தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். என்றாக இருந்தாலும் தமுமுக என்ற பெயருக்கு ஆபத்து உள்ளது. எனவே இச்சிக்கலைப் போக்க மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர்.



கடைசிச் செய்தி : திமுக ஒன்றுக்கு மேல் எல்லாம் தர முடியாது என்று திட்டவட்டமாக இருப்பதாகவும், மனித நேய மக்கள் கட்சி இரண்டு கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களை என்று டீல் முடிய வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. அம்மாவிடம் சரணடையுமா என தீர்மானமாகத் தெரியவில்லை.

டிஸ்கி : மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டால் அதன் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் செய்ய வேண்டியவை, வேண்டாதவை குறித்தும் விளக்கமாக பதிவு எழுதலாம்..

அப்படியே &&&&&&&&&&&&&& கிளிக் பண்ணிப் பாருங்க.