”கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
("கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!")
பாண்டிய மன்னன் பெரும்பெயர் வழுதி பற்றி இரும்பிடர்த் தலையார் பாடியது. நூல் : புறநானூறு பாடல் : 3
வைகையின் குமாரன் - 1. குதிரை குளம்பொலி
கதிரவன் தனது விசித்திரமான கைகளை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கே இழுத்துக் கொண்டு இருந்தான். அமாவாசையின் மாலை நேரமாதலால் கருமை வெகு வேகமாக பரவிக்கொண்டிருந்தது. காட்டு மரங்களில் இருந்து சலசலவென் சத்தம் இரைச்சலாய் கேட்டுக் கொண்டிருந்தது. ஆந்தைகளின் உருமலும், கோட்டான்களின் கூவுதலும் பயமுறுத்துவதாக இருந்தது. நரிகள் இரை கிடைத்த மகிழ்விலோ என்னவோ ஊளையிடத் துவங்கி இருந்தன.
அந்த நேரத்து மெளனத்தைக் கிழித்துக் கொண்டு வரும் குதிரைகளின் குளம்படி ஓசைகளைக் கேட்டு பறவைகள் சில சத்தத்துடன் எட்டிப் பார்த்தன. மொத்தம் ஐந்து குதிரைகள். போர்க்களத்தில் எதிரிகளைத் தாக்குவதற்கு கிளம்பியது போல் மிக வேகமாக வந்து கொண்டிருந்தன. முன்னால் சென்ற இரண்டு குதிரைகளில் ஆஜானுபாகான இரண்டு குதிரை வீரர்கள். அதே போல் பின்னால் இரண்டு வீரர்கள். நால்வரின் இடையிலும் உடைவாள் தொங்கிக் கொண்டு இருந்தது.
நடுவில் சென்ற குதிரையில் ஒரு பெண். குதிரையின் வேகத்திலும், மாலை நேர மயங்கிய இருளிலும் அவளது உருவத்தை சரியாக காணவில்லை. ஆனாலும் அவள் குதிரை ஓட்டும் திறனைப் பார்க்கும் போது நல்ல பயிற்சி பெற்றவளுக்கான வேகம் தெரிந்தது. குதிரைகளில் இடப்பக்கத்திலேயே தென் தமிழகத்தின் ஜீவநதி வைகை வளம் குன்றி ஏதோ சோகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.
மாலையின் இருளைக் கிழித்துக் கொண்டு அங்காங்கே தீக்கங்குகளும், புகை மூட்டங்களும் வந்து கொண்டிருந்தன. நதிக் கரையை ஒட்டி இருந்த வயல்களில் எரிந்து மிச்சமாகிப் போய் இருந்த நெற்க்கதிர்களை காண முடிந்தது. வயல்களை ஒட்டி இருந்த குடியானவர்களின் வீடுகள் சின்னா பின்னமாக்கப் பட்டு எரிக்கப்பட்டதும், எரிந்து கொண்டிருந்ததுமாக நெருப்பை கக்கிக் கொண்டு இருந்தன. குதிரைகள் சென்று கொண்டு இருந்த பாதையில், பல இடங்களில் குதிரைகள் செத்து கிடப்பதையும், சில குதிரைகள் தங்களது கடைசி கட்ட மூச்சை விட்டுக் கொண்டு கனைத்துக் கொண்டும் இருந்தன. சில இடங்களில் செத்த பிணங்கள் கூட்டமாக வைத்து எரிக்கப்பட்டதற்கான அடையாளமாக பிணவாடை வந்து கொண்டு இருந்தது.
மிக கோரமாக ஏதோ நிகழ்வு அங்கு நடந்துள்ளது என்பது மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தது. குதிரைகளில் முன்னால் சென்றவர்கள் குதிரை வேகத்தைக் குறைப்பதைக் கண்டவுடன் பின்னால் வந்த குதிரைகளும் தங்களது வேகத்தைக் குறைத்தன. அதற்கு ஏதுவாக முன்னால் சென்ற குதிரையில் இருந்த வீரன் தனது கையை உயர்த்தி நிற்க வேண்டுமென சமிக்ஞை செய்தான். அந்த வீரன் குதிரையை நிறுத்திய உடன் மரத்திற்கு பின்னால் ஒளிந்து இருந்த இரண்டு வீரர்கள் வேகமாக வந்து குதிரை வாங்க அவன் கீழே இறங்கினான். நடுவில் இருந்த குதிரையில் இருந்த பெண்ணிற்கு அருகில் வந்து தலை வணங்கி
”நாம் இறங்க வேண்டிய இடம் வந்தாகி விட்டது. மாமன்னர் இங்கு தான் சற்று தொலைவில் தெரியும் குடிசையில் தங்களை இருக்க பணித்துள்ளார்”
அதற்குள் மற்ற ஒருவன் தீப்பந்தத்தை அருகில் கொண்டு வர அந்த தீயின் வெளிச்சத்தில் பெண்ணின் முகம் தெரிந்தது. அந்த முகத்தில் இயற்கையாக குடி கொண்ட, அன்று வர மறுத்து விட்ட நிலவின் குளிர்ச்சியையும் காண முடிந்தது. அதே நேரம் சற்று முன் மறைந்த ஆதவனின் ஜூவாலையைப் போல் தகிப்பதையும் காண முடிந்தது.
“அரசர் எப்போது வருவார் என்று தெரியுமா” எனக் கேட்டாள்.
இருந்தவர்களில் கொஞ்சம் மூத்தவன் பதிலுறைத்தான்.
“அதைப் பற்றி ஏதும் தகவல் இல்லை நந்தினி பிராட்டியாரே! ஆனால் மிக அருகிலேயே இருப்பதாக செய்தி வந்துள்ளது”.
.............. தொடரும்...